இப்படி தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பு பயிரிடப்படாமல் கிடக்கும்போது கிராமத்து மனிதர்கள் டீக்கடைகளிலும் தெரு முனைகளிலும் கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருப்பது தனக்கு சம்மதமில்லை என தன் உரத்தக் குரலால் அவ்விவாதத்தை ஆரம்பித்துவிட்டு என்னை ஏறெடுத்தார்.
சோம்பேறிகளல்ல எம் மக்கள் எனவும்,அப்படி வைத்திருக்க அரசே அவர்களைத் தொடர்ந்து நிர்பந்திக்கிறது எனவும், எங்கள் நிலத்தடி நீர் தோண்டத்தோண்ட கிண்டல்பண்ணி கீழே போய்க்கொண்டிருக்கும் இதற்கான காரணங்களை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “இல்லை, இல்லை என்னால் உங்களோடு உடன்பட முடியாது’’ என வார்த்தையை இடைமறிக்கிறார்.
“நீங்கள் உடன்படவேண்டாம். ஆனால் இது என் கருத்து, இதைச் சொல்ல என்னை அனுமதியுங்கள்” என நான் அவரைப் பார்த்தபோது அவர் சிரித்துக் கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
நான் இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியிடம் இவ்வுரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தேன் என்பதெல்லாம் மறைந்து, இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள இரண்டு பேரின் ஆத்மார்த்தமான உரையாடல் அதுவென எங்கள் இருவருக்குமே புரிந்திருந்தது. அதற்கான எளிய பரிசளிப்பே இக்கைப்புதைவு. அதன்பிறகு எங்கள் சந்திப்புகளுக்கும், உரையாடல்களுக்கும் வழிவிட்டு எங்கள் மனக்கதவுகள் திறந்தே கிடந்தன.
ஒரு படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலையில் முப்பது நாற்பது நாட்கள் தங்கியிருந்தபோது,பெரும்பாலான கார் பயணங்களில் நான் அவருடனிருந்தேன். கார் ஓட்டிக்கொண்டே, இலக்கியம்,கலை, ஓவியம், உலகசினிமா, விவசாயம், அரசியல், மார்க்சிஸ்ட் அரசு, பஷீர், தகழி, எம்.டி.வி என அவர் நிகழ்த்திய உரையாடல்கள் பெரும்பாலும் எதிர்வினைகளால் எதிர்கொள்ளப் பட்டு உரத்து, தடித்து, மெளனமாகி எங்காவது கார் நிறுத்தப்பட்டு, என் பிடிவாதமான கருத்துக்களுக்காக நடுத்தெருவில் நான் இறக்கி விடப்பட்டுவிடுவேனோ என பயந்தேன்.ஆனால் அப்படி நிகழாதது மட்டுமல்ல, மம்முட்டி என்ற அக்கலைஞன் என்மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதை ஒவ்வொரு வாரமும் அவர் எனக்காக தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த மீன் குழம்பின் புது ருசி எனக்கு தந்தது.
நான் அப்போது வாசித்துக் கொண்டிருந்தவைகளை அவரிடம் தினம் தினம் பகிர்ந்து கொள்வதென்பது போய், அவரிடம் சொல்வதற்காகவே படிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் கேட்பது மாதிரி, இலக்கியம் கேட்கும் எந்தவொரு வாசகனின் அலாதி மௌனமும், சொல்லிக் கொண்டிருக்கும் ஆத்மாவின் அடியாழத்தில் துழாவி, இன்னும் ஏதாவது மிச்சமிருக்கிறதா எனத் தேடும்.அப்படித்தான் தேடியது அவரின் வேட்கை.
இப்படியான நட்புகள் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் பெரும்பாலும் முடிந்து போகும். காரில் ஏறி அவர்கள் காட்டும் கை அசைவு மறையும் வரை பொய்க் கண்ணீரோடு நின்றுக் கொண்டிருக்கும் ஒரு ரசிகனுக்கும், நடிகனுக்குமானதல்ல எங்கள் நட்பு என்பதை, சென்னைக்குப் போன இரு மாதங்களுக்குள் என்னை தன் வீட்டிற்கு அழைத்ததிலிருந்து புரிந்தது.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் அவ்வீட்டை வீடென்றா சொல்வது? அவ்வீட்டு முற்றத்தில் கால் வைத்த மறு நிமிடமே, இது வீட்டைத்தாண்டிய ஏதோ ஒரு சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது என உணர்ந்தேன். கேரளாவின் பாரம்பரிய முறையில் சீமை ஓடுகளுக்குள் புதைந்திருந்த அவ்வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் ஒரு கருநாகத்தின் நெளியும் உடலை ஒத்திருந்தது.
கோடை மழையில் நனைந்த ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு ஒவ்வொரு அறையாய் என்னை அழைத்துப் போய் காண்பித்தார். அழகான நூலக அறையும், ஹோம் தியேட்டரும் அது வரையிலும் நான் வேறெங்கும் பார்க்காதவைகள். கேரளாவிலிருந்து ஏலத்தில் எடுத்து வரப்பட்டு, மரத்தாலேயே இழைக்கப்பட்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அழகுப் படுத்தப்பட்டிருந்ததை நான் கண்களால் குடித்துக் கொண்டிருந்ததை, அவர் ஒரு நொடியில் உணர்ந்து கொண்டு, “வீடுன்றது வெறும் சாப்பிட்டு தூங்குற இடம் மட்டும் இல்ல பவா, அதற்கும் மேலே... நான் சினிமாவை ஒரு வேலைக்கு போவது மாதிரியேதான் வைத்திருக்கிறேன். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ஒரு அரசு ஊழியனைப் போலவே தான் நானும். பார்ட்டி, டிரிங்ஸ், டேன்ஸ் இப்படியெல்லாம் எதுவுமில்லை. வாசிப்புக்கப்புறம் கார் டிரைவிங். எவ்வளவு தூரமானாலும் நானே கார் ஓட்ட வேண்டும். வேகத்தின் மீது அப்படி ஒரு அலாதியான ப்ரியம் உண்டெனக்கு...’’
அந்த வேகத்திற்கு அவர் ஒரு முறை கொடுத்த அல்லது வாங்கிய விலை எனக்கு நினைவுக்கு வந்தது. நள்ளிரவு கோழிக்கோட்டிலிருந்து மஞ்சேரி நோக்கிய தேசிய நெடுஞ் சாலையில் கார் 100 ஐத்தாண்டி பறக்கிறது. அவர்தான் ஓட்டுகிறார். சாலையின் இருபக்கங்களிலும் ஒளிரும் விளக்குகள் சில மின்மினிப்பூச்சிகளைப் போல் கடக்கிறது. வாகனத்தின் வேகம் மட்டுமல்ல வாழ்வின் வேகமும் ஓரிடத்தில் நின்று தான் விடுகிறது அல்லது விபத்துக்குள்ளாகிறது. அவரே எதிர்பாராமல் ஒரு வயதான கிழவன் சாலையின் குறுக்கே வந்து இவர் வண்டியின் முன் விழுந்து விடுகிறார். பதறிப் போய் பிரேக் அடித்து, இறங்கிப் போய் தூக்கினால் அடி எதுவுமின்றி மெல்ல எழுந்து சாலையின் ஓரத்தை பார்க்கிறது பெரியவரின் கண்கள். ஒரு பழந்துணிமூட்டை மாதிரி ஒரு பெண் படுத்து கிடப்பதும், அவள் வலியில் முனகுவதும் அந்த அகாலத்தில் துல்லியமாய் கேட்கிறது.
சூழலை ஒரு நொடியில் கணிக்கிறது அக்கலைஞனின் மனம். அப்பெண்ணை தன் காரின் பின்னிருக்கையில் ஏற்றிக் கொள்கிறார். அவள் தலை சாய்ந்து கொள்ள அப்பெரியவரின் மடி.
மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரி சில மைல் தூரத்திலேயே சமீபிக்கிறது. நுழைவாயிலை வியாபித்திருக்கிற ஒரு வேப்பமரத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டு அப்பெரியவரோடு சேர்ந்து அப்பெண்ணை சுமந்து அவசர சிகிச்சை பகுதியை அடைகிறார். அரசு ஆஸ்பத்திரியின் அந்த மங்கிய வெளிச்சம் மம்முட்டியின் பிரபலத்தை மறைத்து விட்டது. யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
ஒரு சின்ன திருப்தி முகத்தில் மின்ன அப்பெரியவர் வெளியே வருகிறார். அப்போதுதான் அவரை மனதால் நெருங்குகிறார். அழுக்கடைந்த வேட்டியைத் துழாவி எதையோ எடுக்கிறார். சட்டென இவர் கைப்பிடித்து கசங்கிய இரண்டு ரூபாய் நோட்டைக் கையில் திணிக்கிறார் பெரியவர்.
“உன் பேரு என்னப்பா?”
'மம்முட்டி'.
“அப்படியா, சரி இத வச்சுக்கோ.”
பெயரைக் கேட்டபிறகும் தன்னை அடையாளம் தெரியாத அந்த முதியவர் தந்த பணத்தை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளாராம். ஆனால் அது தன் வேகத்துக்கு கிடைத்த விலையா? அல்லது அப்பெண்ணைச் சுமந்து வந்ததற்கான கூலியா என்பது மட்டும்தான் புரியவில்லை என்கிறார். எளிய மனிதர்களின் பேரன்பு என்றைக்கு நமக்கெல்லாம் புரிந்திருக்கிறது!
பெரும்பாலும் பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை என்கிற அவர் முடிவை நட்பின் அடர்த்தி தளர்த்தும். அப்படி ஒரு முறை இயக்குனர் தங்கர்பச்சானின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். நானும் அவ்விழாவில் ஏதோ ஒரு மூலையில் இருந்ததை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஹைக்கூ கவிதை மாதிரியான சிறு உறையாற்றினார். “நான் நண்பர்களற்றவன். சினிமா, வாசிப்பு, வீடு இது தவிர வேறெதிலும் மனம் குவிய மறுக்கிறது. தமிழ்நாட்டில் என் மனதுக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் எனக்குண்டு. அவர் இங்கில்லை. அவரும் இவரைப்போல திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு எழுத்தாளர்தான். பெயர் பவா செல்லதுரை....”
நான் கண்கள் பனிக்க அம்மனிதனின் நட்பு கரங்களை பற்றிக் கொள்ள தூரத்திலிருந்தே முயற்சித்தேன்.
எப்போதும் போல் திருவண்ணாமலையில் இரண்டு நாள் இலக்கிய கருத்தரங்கம். முருகபூபதியின் நவீன நாடகமும். ஒரு படப்பிடிப்பிற்காக இங்கு வந்து தங்கியிருந்த மம்முட்டி என்னை அவர் அறைக்கு அழைத்து, தான் இன்று மாலை நிகழ இருக்கும் இலக்கிய கருத்தரங்கிற்கும், தொடர்ந்து நடக்கவிருக்கும் நாடகத்திற்கும் பார்வையாளனாகப் பங்கெடுக்க விரும்புவதாகவும், ஒரே ஒரு நிபந்தனை, என்னை பேச சொல்லக் கூடாது, அப்பதான் நான் வருவேன் என்றும் சொல்கிறார்.
நான் எந்த பதட்டமுமின்றி “நீங்களே விரும்பினாலும் பேச முடியாது சார்'' என்றேன்.
அதிர்வின் உச்சத்திற்குப் போன அந்த மெகா ஸ்டார் ஆச்சரியத்துக்குள்ளாகிறார்.
“ஏன்.. ஏன்... ஏன்...?”
“குறைந்தபட்சம் நான் எங்க செயற்குழுவில் அனுமதி வாங்கணும் சார், அதுக்கு இப்ப நேரமில்லை...”
மிகுந்த சந்தோஷத்தோடு என்னோடு புறப்பட்டு நிகழ்ச்சி நடந்த நகராட்சிப் பெண்கள் பள்ளிக்கு வந்தார். அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென மம்முட்டியைப் பார்த்த வாசகர்கள் சலசலப்படைந்தததும் ராமகிருஷ்ணன் தன் உரையை நிறுத்தி விட்டு ''இவரின் இருப்பு என் உரையை சிதைக்கிறது. திருவண்ணாமலை இலக்கிய வாசகர்கள் பார்ப்பவர்கள் அல்ல, கேட்பவர்கள் என்பதால்தான் இத்தனை தூரம் பயணித்து நானும் கோணங்கியும் வந்திருக்கிறோம். நீங்கள் பார்ப்பவர்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பேச முடியாது” என்று சொல்லி பார்வையாளர்களில் ஒருவராய்ப் போய் உட்கார்ந்துவிட்டார்.
மௌனம் மரணத்தை மாதிரி அந்த அரங்கை வியாபித்துக் கொண்டது. அதன் பிறகு ஒரு மணி நேரம் ராமகிருஷ்ணன் தன் அறுபட்ட உரையைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து நிகழ்ந்த முருகபூபதியின் ‘சரித்திரத்தின் அதீத மீயுசியம்’ நாடகம் பார்க்க உட்கார்ந்தோம். இடையில் ஒரு சிகெரெட் அணைய அடர்த்தியான மர இருட்டு மம்முட்டிக்குத் தேவைப்பட்டது.நாடகம் பிரமிப்பைத் தந்தாலும், அதன் இறுகிய மொழி அவரை அந்நியப்படுத்தியது.
“இக்குழுவோடு நான் தனியே உரையாட வேண்டும் பவா”
அப்பள்ளியின் ஓர் வகுப்பறையின் 60 வாட்ஸ் மஞ்சள் பல்ப் அவ்வுரையாடலுக்கு போதுமானதாய் இருந்தது.
''இந்த நாடகத்தை ரொம்ப வித்தியாசமானதாய் உணர்கிறேன். இந்த கோரியாகிராப்பி நான் எங்கேயும் காணாதது. ஆனால் உங்கள் மொழி ரொம்ப கடினமானதாய் இருக்கிறது. அது எனக்கே புரியலை'' மிதமாக ஆனால் அழுத்தமாக தன் உரையாடலை துவக்குகிறார்.
“உங்களுக்கேன்னா? நீங்க என்ன அவ்ளோ பெரியா ஆளா சார்?”
ஒரு இளம் நடிகன் துவக்கக்கால அறிவுஜீவி திமிரோடு வார்த்தைகளால் முந்துகிறான்.
அவருக்கு முகம் சிவக்கிறது.
“கண்டிப்பா, கண்டிப்பா உன்னைவிட நான் பெரிய ஆள்தான் தம்பி, இன்னைக்கு தியேட்டர்ல உலகத்தின் எந்த நாட்டுல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். எத்தனை வேலைக்கு நடுவுலேயும் தினம் தினம் படிக்கிறேன். தியேட்டர்ல, சினிமாவுல, ஆர்க்கிடெக்டில என்ன நடக்குதுன்னு ஒவ்வொரு நாளும் கவனிக்கிறேன். நடிகன்னா, கேமரா முன்னாடி வெறும் வசனம் பேசிட்டு போற பொம்மை நானில்லை தம்பி”
அக்குரலின் உக்கிரம் அக்குழுவை உறையவைக்கிறது. புழுக்கம் நிரம்பிய அந்த அறையில் மிகுந்த தோழமையோடும் வாஞ்சையோடும் தன் கல்லூரி கால நாடக அனுபவங்களை, ஒரு ஆவணிமாத ஈர நிலத்தில் விதைக்கப்படும் விவசாயின் விதைநெல் மாதிரி விதைத்தார்.
தொடர்ந்து மழை பொழிவில் நனைந்த கடந்த வருட டிசம்பரில், 'காழ்ச்சப்பாடு' என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த புகழ்பெற்றிருந்த மம்முட்டியின் வாழ்வனுபவங்களை என் மனைவி ஷைலஜா தமிழாக்கி, முதல் வாசகனாக கையெழுத்துப் பிரதியில் படித்த பாக்கியம் எனக்கு வாய்ந்தது. நான் அதனோடு வாழ்ந்து திரிந்தேன். அச்சுமுடிந்து கையில் கிடைத்த முதல் பிரதியோடு அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். என் உற்சாகத்திற்கு சற்றும் குறைவின்றி அவரும் குதூகலித்தார். இந்திய சினிமாவே தன் கிரீடத்தில் வைத்துக் கொண்டாடும் மம்முட்டி என்ற அத்திரைக்கலைஞனின் மனம் தன் எழுத்தின் பொருட்டு பட்ட பெருமிதமும் குதூகலமும் அது.
“நான் இப்போ பாண்டிச்சேரியில ஒரு ஷீட்டீங்ல இருக்கேன் பவா, நேற்றிரவு உன் ஊர் வழியாத்தான் வந்தேன். காரை நிறுத்தி உன்னைக் கூப்பிட நெனைச்சி டைம்பாத்தா நைட் இரண்டு மணி வேண்டான்னு வந்துட்டேன். இன்னிக்கு சாயந்தரம் பொறப்பட்டு வரமுடியுமா பவா?”
“கண்டிப்பா வர்றேன் சார்”.
அன்று மாலையே கையில் 'மூன்றாம் பிறை' யோடு படிப்பிடிப்பு நடந்த வளாகத்தை அடைந்தேன் சில நண்பர்களுடன்.
அப்புத்தகத்தின் மீது பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த அவர் கண்களை தரிசித்தோம். கையில் வாங்கி ஒவ்வொரு பக்கமாக புரட்டிவிட்டு,
“ஐ ஆம் இல்லட்ரேட்” என்று புத்தகத்தை என்னிடமே தந்து, “தமிழ் பேசத்தெரியும், படிக்கத் தெரியாது” என்றார்.
படப்பிடிப்பு நின்று மொத்தக் குழுவும் எங்களை சூழ்ந்து கொண்டது. அப்படத்தின் இயக்குனர் என்னை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார். எந்த பதட்டமும் இன்றி...
“பவா இதில சில பாகங்களை நீயே எனக்காக படிக்க முடியுமா” என்றார்.
நான் வாசிக்க வாசிக்க அக்குழு அப்பிரதியின் உண்மையிலும் உக்கிரத்திலும் கரைகிறது. அவர் தன்னால் எழுதப்பட்ட தன் எழுத்தின் வேறோரு மொழியின் பொருட்டே மிகுந்த கர்வமடைகிறார்.
மூன்று முழு பகுதிகளின் வாசிப்பிற்குப் பிறகு என்னைப் பார்த்து கேட்கிறார்,
“இப்புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் நான் தானே பவா வில்லன், அழுக்கானவன், இரக்கமற்றவன், கர்வம்பிடித்தவன், அற்பன் எல்லாமும்...”
“ஆமாம் சார்”
“ஆனால் சினிமாவில் மட்டும் நான் உன்னதமானவன், உயர்ந்தவன், மேன்மையானவன்,... எத்தனை முரண்பாடுகள் கவனித்தீர்களா?”
தன் வாழ்வை உண்மைக்கு மிக அருகில் கொண்டுபோக முயலும் ஒரு கலைஞனுக்கு, வெகு தொலைவில் நான் நிற்பதாக நினைத்த கணமது.
உங்கள் எழுத்து நடையும், சொல்ல வந்த விசயங்களின் சூட்சமமும் எனக்கான தேடலை அததிகப்படுத்தியது.
ReplyDeleteநன்றி.