நேற்றிரவு முழுக்க விடாமல் மழைபெய்து கொண்டேயிருந்தது. தூக்கம்வராத அந்த மழை இரவில் நினைவுகள், எழுத்தாளர் பிரபஞ்சனையே நிலை கொள்ளாமல் சுழன்று கொண்டிருந்தது. அவருக்கு சென்னை பீட்டர்ஸ் காலனியில் ஒதுக்கப்பட்ட வீடொன்று உண்டு. மூன்றாவது மாடி. இப்படியான மழைநாளில் முழுவீடும் ஒழுகும்.தன் வாழ்நாளெல்லாம் தேடித்தேடி சேகரித்த பல அரிய புத்தகங்கள் மழையில் நனையும். ஒழுகாத இடம் தேடி படுக்கவும் இடமின்றி ஒரு தமிழ் எழுத்தாளனின் பல ஆண்டு கால அலைச்சல் யாராலும் கண்டு கொள்ளப்படாமலேயே போகிறது. போகட்டும். இதனாலெல்லாம் துவண்டுபோகாத படைப்பு மனம் வாய்க்கப் பெற்ற படைப்பாளியாகத்தான் நான் பிரபஞ்சனைப் பார்க்கிறேன்
.
இருபதாண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியில் எழுத்தாளர் கி.ரா.வுக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை, கையில் புகையும் ஒரு முழு சிகெரெட்டோடு நான் முதன் முதலில் பிரபஞ்சனைப் பார்த்தேன். கொண்டாட்டங்களுக்காக பிறந்த கலைஞன் என நான் அவரை எனக்குள் பதித்துக் கொண்டேன். ஆனால் பெரும் துக்கங்களை உள்ளடக்கிக் கொண்டு அப்படி வாழ ஆசைப்படும் எழுத்தாளன் என்பது அவரை ஆழ்ந்து படிப்பவர்களும், அவரின் நட்புக் கண்ணியில் ஏதோ ஒரு துளியில் ஒட்டிக் கொள்பவர்களுக்கும் கூட புரியும்.
ஆறேழு மாதங்களுக்கு முன் அவர் ஒரு இலக்கிய நிகழ்வுக்காக கனடா சென்றிருந்த போது அவர் மனைவி இறந்துவிட்டார். பதறி அடித்து பாண்டிச்சேரிக்கு போனால், அதே தூய்மையான வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமாக எங்களை எதிர் கொள்கிறார். அப்பிரிவின் துயரை அவர் அன்று ஆற்றிக் கொண்ட விதம் வேறெந்த மரணத்திலும் நான் காணாதது. அதீத துக்கமும், சந்தோஷமும் மனப்பிறழ்வை சமீபிக்குமோ என பயத்தில் உறைந்த தருணமது.
ப.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ் என்று தமிழின் முக்கிய ஆளுமைகள் பலர் அம்மரணத்திற்கு வந்து கொண்டேயிருக்கிறார்கள். பிரபஞ்சன் ஒரு நண்பரின் கைப்பிடித்து சொல்கிறார்.
“ராணிக்கு ஒரு நல்ல கணவன் வாய்த்திருந்தால் அவள் நன்றாக வாழ்ந்திருப்பாள். அவள் வாழ்நாளெல்லாம் இக்குடும்பத்தை காத்துக் கொள்ள ஓடிக் கொண்டேயிருந்தாள். நான் ஒரு போதும் அவளுக்கு ஒரு நல்ல கணவனாக இருந்ததில்லை......”
என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை. இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது. மூன்றாந்தர மனிதர்களின் வெற்றி பெருமிதத்திற்கு முன் ஒரு படைப்பாளி ஒடுங்கிப் போவது இந்த புள்ளியில்தான். ஆனால் பிரபஞ்சன் தன் உன்னதமான உயரிய படைப்பின் மூலம் இத்தாக்குதலை தன் காலில் போட்டு நசுக்குகிறார். லெளகீக வாழ்வின் தோல்வியை, மானுட வாழ்விற்கான தன் ஆக சிறந்த படைப்புகளின் மூலம் இட்டுநிரப்பி விஸ்வரூபமெடுக்கிறார்.
எழுத்துக்கும் பொருளுக்குமான இச்சூதாட்டத்தில் ஒரு உண்மையான கலைஞன் பொருளின் பக்கம் சாய்வது மாதிரி ஒரு மாயத்தோற்றம் தெரியும். ஆனால் அவன் மிகுந்த பசியோடு தன் படைப்பின் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பான்.
ஒரு பிரபல வாரப்பத்திரிகையில் ஒரு தொடர்கதை எழுத ஒப்புக்கொண்டு ஏழெட்டு வாரங்கள் எழுதி முடிக்கிறார். அச்சு இயந்திரத்தின் அகோரபசிக்கு இவரால் தீனி போட முடியவில்லை. அது அவரையே கேட்கிறது. படைப்புக்கும், அச்சேற்றத்திற்குமான இடைவெளியை ஒரு எழுத்தாளன் நிதானமாகத்தான் கடக்க வேண்டியுள்ளது. இட்டு நிரப்புவது அல்ல எழுத்து. இந்த பெரும் மனப்போராட்டத்துடனேயே, அவர் அக்கதையில் நாயகி சுமதியை அண்ணாசாலையில் நிறுத்திவைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு பஸ் ஏறி வந்துவிட்டார்.எத்தனையோ அற்புதமான இரவுகளைப்போல அவர்தன் கதாநாயகியை அம்போவென விட்டுவிட்டு வந்து எங்களோடு கொண்டாடிய அந்த இரவும் மறக்க முடியாதது. சலிப்படையாத உரையாடல் அவருடையது. சங்க இலக்கிய வாசிப்பும், கற்றுத் தேர்ந்த அம்மரபை தொடர்ந்து மீறுவதும், நவீன வாசிப்பை தன் மூச்சுக் காற்றைப் போல தனக்குள்ளேயே வைத்திருப்பதும் அவரை ஒரு காட்டாற்று வெள்ளமாகவே வைத்திருக்கிறது.
திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று ஒரு இலக்கிய வட்டம் தேவையென கருதினார்கள். குற்ற உணர்வுகள் மேலோங்கி வரும்போதெல்லாம் மனிதர்கள் அன்னதானமிடுவார்கள், கிரிவலம் போவார்கள், தேவாலயங்களில் முட்டித் தேய்ப்பார்கள், இப்படி இலக்கியக் கழகங்களும் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் அன்று அரசு ஊழியர் இலக்கிய வட்டத் துவக்கவிழா காந்தி சிலை மூலையில் பொது மேடையில் துவங்கியது.
சில அரசு ஊழிய நண்பர்களோடு நானும் போய், நெய்வேலியில் ஒரு இலக்கியக்கூட்டம் முடிந்து பிரபஞ்சனை காரில் அழைத்து வந்தோம். வழியெங்கும் இலக்கியம், கலை, படைப்பாளிகள் என சொற்களின் விளையாட்டுகளினூடே ஊர் வந்து சேர்ந்தோம். அதுவரை அவர் அந்த இலக்கிய அமைப்புப் பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை. அடுத்தநாள் மாலை அந்த இலக்கிய வட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் துவங்கின நிமிடமே கூட்டத்திலிருந்த எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறிப் போனது. யாருக்காகவோ வெட்டப்படுகிறது என நினைத்த குழிகளில் அவர்களே ஒவ்வொருவராக இறக்கிவிடப்பட்டுக் கொண்டிருந்தார்கள் நிதானிப்பதற்கு கூட அவகாசம் தராமல் அவர்களை தன் பேச்சால் நடுத்தெருவில் நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தார்.
என் அப்பா பெயர் என்ன? அவர் என்றைக்கு செத்தார் என்பதற்கு நான் இவர்களுக்கு நூறு ரூபாய் தரவேண்டி உள்ளது என்பதில் துவங்கி, ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் எப்படி லஞ்சத்தால் மூழ்கப்பட்டுள்ளது என்பதை விலாவரியாக விளக்கி ஒவ்வொரு அலுவலருக்கான ரேட் என்ன? அதை அவர்கள் எங்ஙனம் பெறுவார்கள் என்பதுவரை அவர்களை வைத்துக் கொண்டே பேசித்தீர்த்தார். கூட்டம் முடிந்து நீடித்த மௌனம், ஒரு அகால மரணத்தை எதிர் கொள்வது மாதிரியிருந்தது எனக்கு. அதுதான் அரசு ஊழியர்களின் இலக்கிய வட்ட துவக்க விழாவும்,நிறைவு விழாவும். இப்படியாக அரசு ஊழியர்கள் ஆற்ற இருந்த ஒரு பெரிய இலக்கியப்பணியை முடிவுக்குக் கொண்டுவந்தார். ஒரு படைப்பாளியின் உன்னதத்தருணம் இது. இதைக் கடப்பதற்கு மிகப் பெரிய ஆன்ம பலம் தேவை. பிரபஞ்சன் பல நேரங்களில் இதை சுலபமாகக் கடந்து விடுகிறார்.
அவர்தான் ‘ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ என்ற தன் கதை மூலம், மனிதர்களின் பொருளற்ற கணங்களில், வறுமைப்பிடுங்கும் தருணங்களில் அவன் அருவருக்கத்தக்க வெறோரு ஜந்துவாக மாறினாலும் கூட சாதரண காலங்களில் மனதில் அத்தனை ஈரத்தோடு வாழும் ஓர் உன்னதப் பிறவிதான் என எனக்கு மனிதனின் மேன்மையை சொன்னவர்.
இந்நிலப்பரப்பெங்கும், அன்பைத்தேடி, விரசமற்ற விரல் ஸ்பரிசம் பற்றி தோழமைத் தோள்களில் சாய்ந்து கொள்ள வேண்டி உள்ளும், புறமும் சதா அலைந்து கொண்டிருக்கும் பெண் மனதின் ஒரு சின்ன வெளிப்பாடுதான்‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’. புதரிலும் காட்டு முள்ளிலும் சிக்கி, சிதறுண்டு கடைசியில் ஒரு மேய்ப்பனின் மடியில் ஆறுதலோடு படுத்துறங்கும் அந்த ஆட்டுகுட்டியைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மரி ஞாபகத்துக்கு வருகிறாள்.
கடைசிப் பேருந்தையும் தவற விட்டுவிட்டு வெளிச்சம் படாத ஏதோ ஒரு நகர பேருந்து நிலையத்தின் இருட்டில் தன்னை மறைத்துக் கொள்ள முயற்சிக்கும் மரியே! ஒரு படைப்பாளி தன் அன்பின் கரங்களை அகல விரித்து உனக்காக காத்திருக்கிறான் என சொல்ல தோன்றும் அவரின் ஆண், பெண் நட்பை உறவைச் சொல்லும் கதைகள்.
எத்தனையோ முறை எங்கள் வீட்டில், நிலத்தில், பள்ளி மைதானத்தில், விடுதி அறையில், பஸ் பயணத்தில், கார் பின்னிருக்கையில் அவருடன் பேசித் தீர்த்த வார்த்தைகள் செலவழியாதவைகள். தினம் தினம் தன்னையே புதுப்பித்துக் கொள்பவைகள். பின்விளைவுகள் எதுபற்றியும் அவர் கவலைப்பட்டதில்லை. அதன் பொருட்டு தான் இழப்பதற்கு தன்னிடம் எதுவுமில்லை பவா என்று சொல்லிச் செல்வார்.இழக்கப் போவது எதுமில்லை என்பது போலவே அவர் எதிர்பார்ப்புகளும் மிக எளிமையானவைகள் தான்.
தன் குடும்ப சிதைவை “மகாநதி” என்கிற உயிருள்ள ஒரு நாவல் மூலம் தன் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டார். கள்ளுக்கடைகள் இழந்து, சாக்னா ஸ்டால்கள் இழந்து, வீடு இழந்து, அந்த ஆலமரம் வேரோடு சரியும் போதும் அதன் கம்பீரம் குலையாமல், தன் வேரில் கோடாறியோடு மல்லுக்கட்டுபவன் மீதும் விழும் ஆலமர நிழல் மாதிரியானது பிரபஞ்சனின் வாழ்வும் படைப்பும்.
எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய இந்த பதிவு மனதை மிகவும் கனக்க செய்தது .
ReplyDeleteநான் மிகவும் நேசிக்கிற எழுத்துக்களில் பிரபஞ்சன் அவர்கள் எழுதுகிற கட்டுரைகள். எனக்கு இலக்கியம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுதியவரே எழுத்தாளர் பிரபஞ்சன் எனலாம். எழுத்தாளர்களுக்கு இந்த சமூகத்தில் உரிய அங்கிகாரமும் நிறைவான வாழ்க்கையோ கிடைக்கவேண்டும். அப்போது தான் மக்களைப் பற்றி இன்னும் அதிகமாக சிந்திக்கமுடியும்.
ReplyDeleteபதிவுலகில் கூத்தாடும் குறை குடங்கள் அவசியம் படிக்க வேண்டியது.
ReplyDeleteபதிவுலகில் கூத்தாடும் குறை குடங்கள் அவசியம் படிக்க வேண்டியது.
ReplyDeleteகனக்கும் உண்மைகள்
ReplyDeleteகண்ணில் என்னையும் அறியாமல் ஈரம்..
//இப்பூமி பரப்பெங்கும் உண்மையான கலைஞர்களின் குரல்கள், லெளகீக வாழ்வின் முன் இப்படித்தான் உள்ளடங்கிபோய்விடுகிறது.//
ReplyDeleteஎத்தனை சத்தியமான வார்த்தை. பவா உங்களின் எழுத்து அதன் சக்திகொண்டு சம்பவத்தின் தன்மையை அப்படியே மனதில் கனமாக ஓட்டவைத்திடுகிறது.
அன்புள்ள பவா அண்ணனுக்கு,
ReplyDeleteபெரும்பாலும் ஒரு ஆளுமையைப் பற்றிய கட்டுரைகள் புகழ் பாடுவதாகவும், வசை பாடுவதாகவும், வாழ்க்கைக் குறிப்புகளாகவும், துனுக்குகளாகவும், இல்லை ஆய்வென்ற பெயரில் ஒரு சூத்திரத்திற்குள் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையாக இருக்கும். இவ்வகையான எழுத்துகள் ஒருவரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவைப் போண்றது. ஒரு முறை மட்டுமே வாசிக்க முடியும். அதுவே சலிப்பானதாக இருக்கும். ஆனால் ஒரு நல்ல எழுத்தை வாசிக்கும் போது ஒவ்வொரு முறையும் அது புதியதாக வாசிப்பதைப் போலவே உணர வைக்கும். நீங்கள் எழுதும் ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகள் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அந்த கட்டுரையின் அடுத்த கட்ட பரிணாமத்தை எனக்குள் விரிக்கிறது. அதிலும் பிரபஞ்சனின் கட்டுரை நான் வாசித்த ஒவ்வொருமுறையும் அது பரிணாமம் அடைந்து கொண்டே இருக்கிறது. ஆமாம் இந்த கட்டுரையை கோடையில் வானத்திலிருந்து விழும் முதல் மழைத்துளி மண்ணில் விழுவதற்கு முன் என்னில் ஏந்தி நனைத்துக் கொண்டதைப்போல் அச்சுக்கு வருமுன்பே படித்தவன் நான். ஒரு கலைஞன் தனது ஆன்மாவை தனது படைப்புகளின் வழியாகவே பிறருக்கு தெரியப்படுத்துகிறான் அதை உணரும் வாசகர்கள் மிகக் குறைவு. விமர்சகர்களால் இவரின் படைப்புக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்றுதான் சொல்ல முடியும் கண்டிப்பாக அவர்களால் இந்தப் படைப்பில் இந்தக் கலைஞனின் ஆன்மா துடிக்கிறது என்று சொல்லமுடியாது. அது அந்தக் கலைஞனை நன்கு அறிந்த சக கலைஞனால் மட்டுமே முடியும். பிரபஞ்சன் தெரிந்தும் தெரியாமலும் மறைத்து வைத்திருந்த அவரின் ஆன்மாவை எல்லோருக்கும் தெரியும் படியாக போட்டோ எடுத்து எல்லோருக்கும் காட்டிவிட்டீர்கள். நான் இந்தக் கட்டுரையில் பிரபஞ்சனுக்கு பதிலாக இன்னும் சில எழுத்தாளர்களின் பெயர்களை எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சத்தியத்திற்கு அருகில் இருக்கும் எல்லா தமிழ் எழுத்தாளர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருகிறார்களோ?
அன்புடன்
பாலாஜி
பிரபஞ்சனின் கனடா விஜயம் மற்றும் மனைவியின் மரணம் ‘காலம்’ செல்வம் பகிர்ந்தது http://www.facebook.com/#!/note.php?note_id=199757903390557
ReplyDeleteஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மரி என்றொரு ஆட்டுக்குட்டி, எனக்கும் தெரியும், குமாரசாமியின் பகற்பொழுது, மக்களின் கதை அல்லது லாராவின் கதை.....ஒன்றா இரண்டா
ReplyDelete