Sunday, August 3, 2025

கடல் கடந்து விடக்கூடியதல்ல

 

 




நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து இருபது நாட்கள் கடந்துவிட்டது. இந்த தடவையேனும் பயணக் கட்டுரை எழுதிவிட வேண்டும். என்ற உந்துதலும் தள்ளி, தள்ளிப் போய்விட்டது. இம்முறையேனும் தவறவிடக் கூடாது.

நண்பர்களுக்காக வாங்கி வந்த சில பொருட்கள், குழந்தைகள் உள்ள வீடுகளுக்கென கொஞ்சம் விமான நிலையங்களிலும், கொஞ்சம் உள்ளூரிலும் வாங்கப்பட்ட அமெரிக்கசாக்லேட்டுகள் என நம்ப படுபவைகள், மச்சான்களுக்கு தருவதற்கான வாங்கப்பட்ட விஸ்கியில் இன்னும் மிச்சமிருக்கும் பாட்டில்கள். பார்க்கிற ஒவ்வொருவரிடமும் சொல்வதற்கென கொஞ்சம் வெளிநாட்டுக் கதைகள் என இந்த அனுபவங்களும் எழுத முடியாமல் இப்போதும் கரைய ஆரம்பிக்கிறது.

எங்கள் விமானம் நியூயார்க் விமானநிலையத்தில் காலை 8.50 க்கு தரையிரங்கியது என்று ஒரு போதும் ஒரு பயணக்கட்டுரையை ஆரம்பித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

பரந்துவிரிந்த அமெரிக்க நிலப்பரப்பும்,  அங்கு நான் சந்தித்த மனிதர்கள், உண்ட பலநாட்டு உணவுகள், தங்கிய வீடுகள், கலந்து கொண்ட நிகழ்வுகள், ஏற்படுத்திக் கொண்ட சந்திப்புகள், அடைந்த கொஞ்சமே கொஞ்சமான கசப்புகள் என எல்லாவற்றையும் திரட்டுவேன்.

அதற்குள், உள்ளூர் இலக்கிய நிகழ்வுகளுக்கான அழைப்புகள், மல்லாட்டை செடிகளுக்கு களை எடுக்க வேண்டும், ஒரு புதிய திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அழைப்பு, ஒரு இலக்கிய நண்பனின் மரணம், எழுதி முடித்த இன்னொரு சிறுகதை என அந்த மன திரட்டலே கலைந்து போகும். இந்த இரண்டுக்குமிடையே இருபது நாட்களை நகர்த்தி விட்டேன்.

இதை எங்கிருந்தாவது துவங்கியாக வேண்டும். இது அமெரிக்காவுக்கான என் இரண்டாவதுப் பயணம்.

முதல் பயணம், அவர்கள் மொழியில் ‘பே ஏரியா’ எனச் சொல்லப்படும் சாக்ரமெண்டோவில் துவங்கியது. எனினும் சியாட்டல், ராலே, நார்த் கரோலினா, ப்ளோரிடா, டேலஸ், ஹூஸ்டன், நியூஜெர்சி எனப் பயணித்து நியூயார்க்கில் JFk  என அவர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஜான் பிராங்களின் ஏர்ட்போர்டில் விமானம் ஏறி ஊர்த் திரும்பின நினைவுகள் இன்னமும் அப்படியே இருக்கிறது.




இம்முறை அதே ஏர்ப்போர்ட்டில் இறங்கி, இருபது நாட்கள் அதைச் சுற்றியே அலைந்து, திரிந்து மறுபடி விமானம் ஏறி ஊரடைந்தேன்.

இரண்டுப் பயணங்களுக்கும் ஒரு பெரிய வித்தியாசமிருக்கிறது.

சென்ற முறை பயணம் நிகழ்ந்தது அனைத்துமே உள்ளூர் விமானங்களில் மட்டுமே. அநேகமாக நிலத்தில் நீண்டதூரக் கார் பயணம் வாய்க்கவே இல்லை. ஆனால் அவைகளை அத்தனைக் கச்சிதமாக என்னை அப்பாவென வாய்நிறைய அழைக்கும் மகன்பிரகாஷ் ஒருங்கிணைத்திருந்தான்.

இம்முறை எட்டாயிரம் கிலோ மீட்டர்களை அமெரிக்க நிலப்பரப்பில் நான்  தரை வழியாக குறுக்கும். நெடுக்குமாக கடந்திருக்கிறேன். இப்படி நாம் இதுவரை அறிந்திராத ஒரு நிலத்தில், உணர்ந்திராத ஒரு சீதோஷ்ணத்தில், பயணிப்பது என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், தேசம் எல்லாவற்றையும் ஒரு சிறு புள்ளியாசு மாற்றிவிடக்கூடிய வல்லமை பெற்றதாகிறது.

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மீண்டும் வீடடைந்த அந்த நாளின் அதிகாலையில் என் வாழ்வில் எதையோ, இழந்துவிட்ட வெறுமையையும், ஒரு பூமிப் பந்து என் கை நழுவிப் போய் சமுத்திரத்தில் விழுந்து விட்டது போலவும், நான் என் நிலப்பரப்பில் அனாதை மாதிரி இறக்கிவிடப்பட்டதாகவும் உணர்ந்தேன்.

முதன் முறைப் அமெரிக்கப் பயணத்தில் சாக்ரமெண்டோவில் நாங்கள் தங்கப்போகும் அந்த  பெரிய விடுதிக்கு முன் காரிலிருந்து இறங்கியவுடன் நான் பார்த்த முதல் அமெரிக்கக்காட்சி இது.

ஒரு ஆப்பிரிக்கஅமெரிக்க இளைஞனை, நான்கு அமெரிக்க போலீஸ்காரர்கள் பின்பக்கமாக கைகளைப் பிணைத்து விலங்கிட்டுக் கொண்டிருந்த காட்சி. அவன் தளர்ந்த கண்களால் அவர்களை ஏறெடுத்துப் பார்த்ததும்கூட.




நான்காண்டுகளை கடந்த பின்னும்கூட, என் உடல் அதன் அதிர்வுகளை இன்னமும் மிச்சம் வைத்திருக்கிறது.

திரும்பி விடலாமா? என சட்டென ஒரு மனநிலை எழுந்தடங்கிய தருணமது.

ஆப்பிரிக்கஅமெரிக்க கறுப்பு மனிதர்களை இன்னும் வெள்ளைக்காரர்கள் குற்றவாளிகளாகவே பாவிக்கிறார்கள், வளர்க்கிறார்கள், நடத்துகிறார்கள். அப்படி ஒரு குற்றச்சூழலில் வாழவே அவர்களை தொடர்ந்து நிர்பந்திக்கிறார்கள். 

அவர்களில் பத்தில் ஒருவர் குற்றவாளியாக மாறிவிடுவார் என என் நண்பர் சொன்னபோது சொர்க அமெரிக்காவின் இப்படியான இருட்டு பிரதேசங்கள் நமக்கெல்லாம் காட்டப்படாமலேயே போய்விடுகிறதே என நினைத்தேன்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பதினேழாவது மாடியிலிருந்து ஒவ்வொரு முறையும் சிகெரெட் புகைக்க கீழிறங்கி வரும்போது யாராது ஒரு கறுப்பு மனிதனை இந்த வெள்ளைக்கார போலீஸ்காரர்கள் கைது செய்யும் காட்சி மீண்டும் கண்ணில்படுமோ?  என என் பார்வையின் நீள அகலத்தின் சுருக்கிக் கொள்வேன்.

அந்நகரில் நான் பார்த்து வியந்த மாளிகைகளுக்கு முன், பாலித்தின் பை விரித்து, ப்ளக்ஸ்பேனர் கட்டி, பலநாட்கள் அழுக்கேறிய உடையணிந்து கிழிந்து போன ஷூக்கள் போட்டு, I Want one dollor என்ற வாசகம் ஒட்டிய அட்டைப்பிடித்து அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்களை பார்த்தேன்.

அவர்களை பிச்சைக்காரர்கள் என சொல்லக்கூடாது. அவர்கள் (Homeless) வீடற்றவர்கள் என நண்பர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள். என் மனதளவில் நான் எனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

“அமெரிக்காவின் பணக்காரப் பிச்சைக்காரர்கள்”

‘பெட்னாதிருவிழாவில் நானும் இருந்தேன். அது ஒரு பெரும் திருவிழா. அதில் கொஞ்சம் தீவிர இலக்கியத்திற்கும், நவீன கதையாடல்களுக்கும் இடமுண்டு அவ்வளவுதான். ஆனால் பல விதமான மனிதர்களின் சங்கமம் அது. கிடைத்த சிறு, சிறு அவகாசங்களில் நாங்கள் தமிழ் நவீன இலக்கிய உரையாடல்களை எங்களுக்குள் அமைத்துக்கொண்டோம்.



அங்குதான் எனக்கு மஞ்சுநாதன் அவர் மனைவி மருத்துவர் ராஜி, அண்ணாதுரை என பல நல்ல வாசிப்பாளர்கள் நண்பர்களாகக் கிடைத்தார்கள்.

‘பெட்னாமுடிந்து நானும் ஷைலஜாவும் சியாட்டலுக்கு பறந்தோம்.

என்னையும், ஷைலஜாவையும் அப்பா அம்மாக்களாக ஸ்வீகரித்த மகள் மைதிலியும், மருமகன் மனோவும் விமான நிலையத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டு ஒரு சிறுமலைமீது கட்டப்பட்டிருக்கும் அவர்கள் வீடடைந்தார்கள். அவர்கள் வீட்டில் இந்திய உணவை வெகுநேரம் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இன்னமும் நினைவில் சுவைக்கிறது.

மைதிலியும், மனோவும் எங்களுக்காக மட்டுமே ஒரு தனி ஹெலிகாப்படரை வாடகைக்கு எடுத்து, சியாட்டல் நகரை இரண்டு மணி நேரம் சுற்றி காட்டினார்கள்.

ஒரு பிரிட்டிஷ்காரன்தான் அந்த ஹெலிகேப்டரின் ஓட்டுநர். அத்தனை இலகுவான ஆங்கிலத்தில் அவன் ஜோக்கடித்துக் கொண்டே அந்த ஹெலிகாப்டரை செலுத்தியது அத்தனை அழகு. கீழே நதிகளும், கட்டிடங்களும், மரங்களும், பாதைகளுமாய் சியாட்டல் நகரம் தன் அழகுக் காட்டி மிளிர்ந்துகொண்டிருந்தது.

மேலிருந்து கீழே விரிந்திருக்கும் ஒரு பெரிய நீர்ப்பரப்பிற்கருகில் தன் சுட்டுவிரல் காட்டி,

“இது தான் பவாப்பாநான் வேலைப் பார்க்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்என மனோ கைகாட்டிய மையத்தை கொஞ்சம் எட்டிப்பார்த்தேன். மேலிருந்து அதன் பிரமாண்டம் எதையும் உணர முடியவில்லை.

கீழே இறங்கி வரும்போது, ‘பில்கேட்சை எப்படியாவது சந்தித்து அவரோடு ஒரு “டீ க்குடித்துவிட வேண்டும் மனோஎன்ற என் செல்ல அடம் கேட்டு மனோ சிரித்து, இந்த சிறு பர்கர் கடை வரிசையில் அவரும் எப்போதாவது நிற்பார். அப்போது அவரை சுலபமாக சந்திக்கலாமென என்னை ஆச்சர்யப்படுத்தினார்.

என் கோரிக்கையை மனோ உதாசீனப்படுத்தாமல் அடுத்தநாள் ‘மைக்ரோ சாப்ட் நிறுவன கட்டிட சுற்றிப்பார்த்தலின் நிறைவில், ஒரு ஏரிக்கரை விளிம்பிலிருந்த பில்கேட்ஸ் வீட்டின் முன் நின்று நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். வீட்டிலிருந்து அவர் வெளியில் வந்து, ஒரு ‘டீகுடிக்க எங்களை அழைத்துப் போவார் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போது தள்ளிப்போயிருக்கிறது.




அடுத்தநாள் சியாட்டலில் நண்பர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட  பெரும் இலக்கிய நிகழ்வில் ஷைலஜாவும், நானும் உரையாற்றினோம். அந்த உரை இன்னமும் இணையத்தில் கிடைக்கிறது.

அன்று எனக்குப் பிடித்தமான பால் சக்காரியாவின் ‘சலாம் அமெரிக்காகதையை நான் சிரிக்க, சிரிக்க சொன்னேன்.

அமெரிக்கவாழ்வின் அபத்தசுவையை அக்கூட்டத்திலிருந்த ஒவ்வொருவருக்கும் சக்காரியா என் மூலம் பருகக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர்களும் என்னிடம் இன்னும், இன்னுமென கேட்டு வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

இந்த என் இரண்டாம் பயணத்தில் ஒரு நல்ல மழைநாளில் நியூ ஜெர்சியிலிருந்து, நான் இதுவரை கேள்விப்படாத ஸ்டாம்போர்ட் என்ற நகரத்திற்கு என் மூன்று வாசகர்கள் ஒரு டெக்சலா காரில் என்னை அழைத்துப் போய்க் கொண்டிருந்தார்கள்.

நான் பாதிதூக்கத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு, முன் சீட்டை நன்கு சாய்த்து படுத்துக்கொண்டு நியூயார்க் நகரம் இங்கிருந்து எவ்வளவு தூரம்? என்ற என் கேள்விக்கு,

‘ஒரே ஒரு குறுக்கு சந்துதான்என்ற வில்சனின் பதில் தற்காலிகத் தூக்கத்திலிருந்து என்னை எழுப்பிவிட்டது.

“ராயல் பிரியாணிக்கடைமுன் எங்கள் கார் நின்றபோது திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டலுக்கு பக்கத்துக் கடையில் நிற்கிறோமோ என்ற மன நிலையில் இறங்கினேன்.

அந்த வளாகம் முழுக்க சின்னதும் பெரிதுமாக பல நாட்டு உணவுக் கடைகள்.

இன்னும் நிற்காத மழைத் தூறலில் நனைந்து கொண்டே மனிதர்கள் காரிலும், தரையிலும், இப்படியும், அப்படியும் அலைந்து கொண்டிருந்தவர்களில் நான் யாராவது ஒரு வெள்ளைக்காரனையோ, வெள்ளைக்காரியையோ தேடினேன்.

ஒருவரும் இல்லை. எல்லோருமே இந்தியர்கள்.

இது அமெரிக்கா இல்லை. திருநெல்வேலி. ஜங்ஷன் ‘இருட்டுக்கடை அல்வாபோர்டைத் தேடியபோது பிரியாணிக் கடையின் உள்ளேயிருந்து “பவா நான் சுரேஷ் என ஒரு குரல் வந்தது.

சுரேஷ் திருநெல்வேலிக்காரர். சாப்ட்வேர் இன்ஜினியர், ப்ளஸ் இந்த பிரியாணி கடையின் பாட்னர்.

நான் என் இந்த அமெரிக்கப் பயணத்தை ஒருங்கிணைக்கும் மோகன் தாசைத் தேடினேன்.

என் தேடுதல் புரிந்து,

மோகன் நாளை மாலைதான் இங்கு வருவார் பவா. அவருக்கும் நமக்கும் இரண்டு மணி நேர இடைவெளி.

அடுத்த நிமிடம் விதவிதமான மனிதர்கள், விசாரிப்புகள், கைக்குலுக்கள், சிறுஅணைப்புகள், கொஞ்சம் கதைகள், சுடச்சுடப் பிரியாணி என எல்லாம் நிறைந்திருந்தது அவ்வளாகம்.

நண்பர்கள் இந்துவும், ஞானவேலுவும் காத்திருந்து அவர்கள் காரில் என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு அழகிய அடர்த்தி மிகுந்த மரங்களடர்ந்த பயணத்தின் விளிம்பிளிருந்த அவர்களின் புது பங்களாவிற்கு என்னை அழைத்துப் போனார்கள்.

நான் காரிலிருந்து இறங்கி அம்மழையிலும் நனைந்துகொண்டே அவ்வீட்டின் அழகை தூரத்திலிருந்து ரசித்து கொஞ்சம் கொஞ்சமாய் அதை நோக்கி நடந்தேன். அத்தனை அபூர்வமான அனுபவம் அது.

ஒரு ஏக்கர் நிலப்பரப்பு அவர்களுடையது. அதில் கட்டப்பட்டிருந்த இந்த வீட்டை அவர்கள் ஆறு மாதத்திற்கு முன்புதான் வாங்கியிருந்தார்கள். அது வீடு என்று நாம் வகுத்து வைத்திருக்கிற எல்லா வரைமுறைகளையும் மீறியது. முழுக்க முழுக்க மரங்களிலான அதன் உள் கட்டமைப்பே என்னை வியக்க வைத்தது. தூக்கம் வராமல் அந்த அறையில் படுத்துக் கொண்டு என் நண்பர்கள் பழனிஜோதியும், மகேஸ்வரியும் நியூஜெர்சியிலிருந்து தந்தனுப்பிய  கிண்டிலில் அ.முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்நாவலின் துவக்க அத்தியாயத்தை வாசிக்கத் துவங்கினேன்.

எப்போது தூங்கினேன் என்பதுத்தெரியாது. இந்துவின் கையிலிருந்த பெரியக் கோப்பையில் ததும்பிய காபி மணம் உணர்ந்து எழும்பினேன் மணி காலை எட்டு.

பத்து மணிக்கு ஸ்டாம்போர்டு தமிழ்ச்சங்க கூட்டம். கச்சிதமான நாற்பது, ஐம்பது வாசகர்களோடு ஓர் உரையும், கலந்துரையாடலும். மனதிற்கு அத்தனை நெருக்கமான மனிதர்கள் எப்போதாவதுதான் அமைவார்கள். அன்று அப்படி அமைந்தார்கள்.

நிகழ்வுத் துவங்க பத்து நிமிடங்களுக்கு முன் இந்துவும், வேலுவும் என்னை ஒரு பெரிய ஷாப்பிங்க மாலுக்கு அழைத்து போய் எவ்வளவு உடைகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்ற போது நான் அவர்களை ஏறெடுத்துப் பார்த்தேன்.

இந்து,

அப்பா, நிறைய எடுத்துக்கோங்க என்றபோது இன்னமும் அவர்களை நெருக்கமாய் உணர்ந்தேன்.


அப்படி, இப்படியென்று மாலை நான்குமணிக்கு அதே ………… பிரியாணி கடையில் நான் கைமாற்றி விடப்பட்டேன்.

மோகன்தாஸ் தன் பதிமூன்று வயது மகளோடு வந்திருந்தார். சென்றமுறை பயணத்திலேயே நியூயார்க் வரை என்னுடனேத் தங்கி என்னை விமானம் ஏற்றிவிட்ட என் தீவிர வாசகர். அவர்.

புதிதாக இரு நண்பர்களிடம் நான் கைப்புதைத்தேன்.

நிவேதா என்கிற நிவி.

ஜெய்கணேஷ்

முகம் நிறைய புன்னகையுடன், அவர்கள் இருவரும் தங்கள் இருக் குழந்தைகளை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

நாங்கள் ஏழுபேர் மட்டுமே அடுத்த ஐந்து நாட்களுக்கு சுமார் நாலாயிரம் கிலோமீட்டர்களை கடக்கப் போகிறோம் என அப்போது எனக்குத் தெரியாது.

Thursday, July 24, 2025

பாவா

சிறுகதை

 

ஏதோ சத்தம் கேட்டு, கழிப்பறை வாசலிலிருந்த வாஷ்பேஷனுக்கு கீழே சரிந்திருந்த அலமேலுவை நான்தான் முதலில் திரும்பிப் பார்த்தேன். வலது கையை இடுப்பில் முட்டுக்கொடுத்து எதையே வென்று விட்டத் தோரணையில் ட்டி.ட்டி.ஆர். கிருஷ்ணா நின்று கொண்டிருந்தான்.

மெல்ல நிமிர்ந்து, அவனை ஏறெடுத்த போது, அதற்காகவே அவனெதிரில் காத்திருந்தது போல தன் ஹூக்காலால் அவள் நெஞ்சில் ஓங்கி உதைத்தான். சத்தம் வெளிவராமல் தரையில் ஒட்டிக்கொண்டாள். எவ்வளவு அடிவாங்கினாலும் சத்தம் போடக் கூடாதென்று இத்தனை வருட ரயில் வாழ்க்கை அவளுக்கு சொல்லிக் கொடுத்திருந்தது.

“எவன் மிலிட்டரியிலிருந்து காய்ஞ்சி போய் வருவான்னு காத்திக்கிட்ருக்கியா, தேவ்டியா” என சுந்தர தெலுங்கினில் குரலுயர்த்தி தன் தாய் மொழியை மலினப்படுத்தினான் கிருஷ்ணா.

எனக்கு கிருஷ்ணாவையும், அலமேலுவையும் இரண்டு வருடங்களாகவேத் தெரியும்.

“இந்த ரயில் இன்னா உங்க அப்பன் ஊட்டுதாடா அது எங்களதும்தான். அது உனக்கு சம்பளம் தருது, எங்களை சம்பாதிக்க வுடுது அவ்வளவு தான்” என ட்டி. ட்டி. ஆரிடம் குரலுயரத்திய அப்பெண்ணை அத்தனை நெருக்கத்தில் பார்த்தேன். அடிவாங்கி சரிந்திருந்த போதும் சந்தேகமின்றி அவள் அழகிதான்.

பேரழகிகளுக்கு எப்போதாவது இப்படி அலமேலு என பொருந்தாத பெயரும் வைக்கப்பட்டுவிடுகிறது போலும்!.

பேன்ட்ரிக் காரில் என்னோடு வேலைபார்க்கும் பையன்கள் ஒவ்வொருவரும் அவளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள்.

எனக்கு மட்டுந்தான் அவள் அலமேலு. இல்லை அல்மேல். உச்சரிக்கும் போதே உதட்டோரம் எப்போதும் எனக்குள் ஒரு புன்னகைத் தவழும்.

என்னைப் பொறுத்தவரை அது உள்ளுக்குள் உச்சரித்துக் கொள்ள அழகிய பெயர்தான். அதை விட்டு, விட்டு கம்மம் கம்மர்கெட், ரேனிகுண்டா தக்காளி… என்பதெல்லாம். அவள் அழகுக்குத் தரப்படும் தற்காலிங்க அவமதிப்புகள்.

ஓடிப்போய் அவளைத் தூக்கி விடவோ, ட்டி, ட்டி. ஆரை தடுக்கவோ முடியாத கையாலாகதவனாய் இருக்கை நுனியில் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கவே முடிந்தது.

ஒருமுறை அவள் திரும்பி என்னையும் ஏறெடுத்துப் பார்த்த மாதிரியிருந்தது. அப்பார்வையை இனி வாழ்வில் வேறெப்போதும் நான் சந்திக்கவேக் கூடாது.

மத்தியான வெய்யிலை எதிர்கொண்டு ராமகுண்டத்திலிருந்து வாரங்கல்லுக்கு மிதமான வேகத்தில் போய்க்கொண்டிருந்தது வண்டி.

கிருஷ்ணா தெலுங்கில் அவளுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் அவளைத் திட்டிக் கொண்டிருந்தான். அத்தனையும் கெட்ட வார்த்தைகள்.

அவன் மனைவி ஊருக்குப் போயிருக்கிறாள். இன்று ட்யூட்டி முடிந்து போகும்போது அலமேலுவை குவாட்டர்ஸ்க்குக் கூட்டிப் போய்விட வேண்டும் என்ற அவனின் அதிகாரக் குரல், ஆரம்பத்திலேயே அவளால் நசுக்கப்பட்டு விட்டதென்ற வெறி அவன் உள்ளடங்கிய குரலிலும் தெரித்தது.

“ஒரு முழுராத்திரியும் அப்படி உங்கூடல்லாம் வர முடியாது சார் இங்கேயே டாய்லட்ரூம் இருக்கு. அதுவும் மத்தவங்க என்ன கொடுக்கறாங்களோ அதேதான் உனக்கும். உனக்காகவெல்லாம் எதுவும் குறைச்சுக்க முடியாது” என்ற வார்த்தைகளை அவள் மெதுவாக பிரயோகித்த போதும், அவனால் அந்த அனலைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அதனாலதான் இந்த அடியும், உதையும்.

அவன் மனதில் ஒரு நாளைக்கு பதினெட்டு முறை, இப்படியும், அப்படியும் ஓடும் இந்த ரயில்களுக்கு அவன் தான் எஜமானன் என்ற எண்ணமும்,

நான்தான் எஜமானி என்ற நினைப்பு அவளுக்குமிருந்தது. இரண்டு அகங்காரங்களுக்கு எதிராக சற்றுமுன் மூண்ட இச்சண்டை அவளைத் தரையிலும், அவனை இடுப்பில் கைவைத்து எதிரிலும் நிற்க வைத்து விட்டது.

இப்போது கிருஷ்ணா அவளிடமிருந்து கொஞ்சம் நகர்ந்து மூடிய கதவின் எதிரில் போய் நின்று கொண்டான். இதுவரை எதுவுமே நடக்காதது மாதிரி.

எனக்கேத் தெரியும் இன்னும் பத்தே நிமிடத்தில் வாரங்கல் ஸ்டேஷன் வந்துவிடும். அவன் அங்கு இறங்கி, இயலாமையின் விரக்தியில், நிராகரித்தலின் வலியில், ஸ்டேஷனுக்கு பின்புறம் வியாபித்திருக்கும் வேப்பமரத்தடியில் உட்கார்ந்து, ஒரு ஆப் அடித்துவிட்டு தள்ளாடி, தள்ளாடி வீடடைவான்’. யாருமற்ற அவ்வீடு அவனை உள்ளிழுத்துக் கொள்ளும்.

இன்று ஒரு பாலியல் தொழிலாளியின் நிராகரிப்பு, அந்த மத்திய சர்க்கார் ஊழியனின் கறுப்பு கோட் போட்ட அகங்காரத்தின் மீது காறி துப்பியிருந்தது, அதுக்கூட தெரியாமல் ஏதோ வெற்றியடைந்த பெருமிதத்தோடு மூடியிருந்த கம்ப்பார்ட்மெண்ட் கதவின் முன் ஸ்டேஷனை எதிர்பார்த்து நின்றிருந்தான் கிருஷ்ணா.

அலமேல் பலமுறை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனுக்கு முதுகுப்புறம் கண்கள் இல்லாமல் இருந்தது எத்தனை ஆசுவாசம் அவளுக்கு! தனக்குள் எதையோ தேடி உறுதி செய்தாள்.

மெல்ல, மெல்ல வேகம் குறைந்து வாரங்கல் ஸ்டேஷனின் மூன்றாவது நடைமேடையில் வண்டி நிற்கும் முன் கிருஷ்ணா கதவைத் திறந்து இறங்குவதற்குள் அவள்  முந்திக் கொண்டாள்.

இயலாமையின் மொத்த ஆத்திரத்தையும், இயன்றதின் மொத்த பலத்தையும் தன் கால்களுக்கு இறக்கி, எழுந்து, நிதானித்து பின்புறத்திலிருந்து எட்டி அவனை உதைத்தாள்.

எதிர்பாராத இத்தாக்குதலில் நிலை குலைந்து தலைக்குப்புற பிளாட்பார தரையில் கிடந்தான் கிருஷ்ணா. தவறி விழுந்துவிட்டாடென நினைத்தே பல ரயில்வே ஊழியர்களும் குழுமினார்கள். ஆவேசம் இன்னும் தீர்ந்துப்போகாதவளாக அலமேலு அவன் கையிலிருந்த  ரெசிப்டு புக்கை பிடுங்கி தன் இடுப்பில் சொருகிக்கொண்டாள்.

“அய்யோ என் புக், புக்” என வலியையும் மீறி பிதற்றியதை அவள் உள்ளூர ரசித்தாள். தன் கண்களை ஏறெடுத்து மூன்று திசைகளையும் கவனித்தாள். ரயில்வே  போலீஸ் உட்பட பலரும் அவர்களை நோக்கி வருவது உள்ளூர ஓர் அச்சத்தை அவளுக்குத் தந்தது.

இடுப்பிலிருந்த அந்த ரெசிப்டுப் புக்கை எடுத்து அவன் முகத்தின் மீது வீசியெறிந்து தெலுங்கிலேயே மிகக் கேவலமான ஒரு கெட்டவார்த்தையை அதன்மேல் வீசினாள். அது அவன்மீதும் தெரித்தது

“பொழைச்சிப் போ நாயே”

  என மெல்ல நகரும் ரயிலில் ஏதோ, எதிர்பட்ட ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டாள். முகத்திலும், நெஞ்சிலும் அடிப்பட்ட இடங்களிலெல்லாம் எரிந்தது. இது அவள் பயணப்படும் ஊர் இல்லை. வாரங்கல்லோடு முடியும் அவள் சாம்ராஜ்யம் இன்று எதுவரை நீள்கிறதோ நீளட்டும்.




வலியா? எரிச்சலா என உடலால் அனுமானிக்க முடியவில்லை. அவனை இலக்குத் தவறாமல் உதைத்து பிளாட்பாரத்தில் தள்ளியதும். ரயில்வே டைரிக்கு அவன் தன்னிடம் மன்றாடியதையும் நினைக்கும்போது எதிரிலிருந்து கடந்த குளிர் காற்று அவள் முகத்தில் மோதி. மனநிலையை சற்று இதமாக்கியது.

ஆனால் இதற்குப்பிறகு நடக்கப்போகும் கொடூரங்கள் உள்ளுக்குள் அவளை நிலைகுலைய வைத்தது.  கிட்டதட்ட ரயில்வாழ்க்கை இன்றோடு முடிந்தது போல இருந்தது. பிறந்ததிலிருந்து ரயில் சத்தத்தை கேட்டே, தூங்கியது, விழித்தது, படுத்தது, வாழ்ந்தது எல்லாமும். இனி எந்த ஜெயிலோ, அல்லது கண்கானாத ஊரின் ஒதுக்குப்புறக் குடிசையோ? மனம் சுழன்றடித்தது. கண்களில் முன்னுக்கும், பின்னுக்குமாய் நீர் ஜாலம் காட்டி இறங்க மறுத்தது.  

என் அசைவை அனுமானித்து ஜன்னல் பக்கமிருந்த தன் பார்வையை என் பக்கம் திருப்பினாள் அலமேலு.

‘பாவா’

எனக்கு மட்டுமே கேட்கும் உள்ளடங்கிய குரலை என் உடலால் உள்வாங்கிக் கொண்டேன்.

பலமுறை பெட்டிகளை இணைக்கும் அச்சிறு இடத்தில் இக்குரலை பலவிதமான ஏற்ற இறக்கங்களில் நான் கேட்டிருக்கிறேன்.

சத்தமாக, மென்மையாக, கொஞ்சலாக, காதலாக, காமத்தோடு, முனகலோடு இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம். இப்போது கேட்டது இதற்கு முன் வேறெப்போதும் கேட்டிராதது.

இது ஆதூரம் வேண்டியக்குரல்.

“என்னை உன் தோள்களில் சாய்ந்துகொள் பாவா”

என்பது மாதிரியான ஒரு குரலை அலமேலுவிடம் இப்போதுதான் கேட்கிறேன். என் உடல் சில்லிடுகிறது.

நான் முதல் முதலாக அவள் கைகளைப் பற்றிக்கொண்டேன். என் மொத்த ஆதுரத்தையும், பிரியத்தையும் அவள் இரத்த நாளங்களுக்கு கடத்திவிட முடியுமா என முயற்சித்தேன்.

அவள் என்னைப் பின்தொடர்ந்தாள். இத்தருணம் பேச்சற்றது. இருவருக்குமே சொற்கள் தேவையில்லாதது. எங்கள் மொழிகளில் நாங்கள் இதுவரை கற்றறிந்த எல்லா சொற்களும் இதோ இந்த ரயில் சடசடக்கும் சப்தத்திற்கு மாறும் இந்த கிருஷ்ணா நதியில் விழுந்து விட்டது.

எதுவுமற்றிருந்தோம்.

கைப்புதைப்பிற்கும் இந்த ஆதூரத்திற்கும் எதற்கு மொழி?

பேன்ட்ரிகார் பெட்டியில் நுழைந்தபோது எங்களை எறெடுத்த அந்த சில கண்களுக்குள் இருந்த உற்சாகமும், சந்தேகமும் உதட்டோர புன்னகையும் என்னை கவனிக்க வைத்தது.

நான் அலமேலுவை மேல்தட்டில் படுக்க வைத்தேன். குழந்தை மாதிரி தன்னை சுருட்டிக் கொண்டாள். கீழேக் கிடந்த நாங்கள் மளிகைப் பொருட்கள் வாங்கும் அட்டைப்பெட்டிகளை கிழித்தெடுத்து அவளை மறைத்தேன். கிட்டத்தட்ட அவள் மறைந்துவிட்டாளென எனக்கு நானே திருப்திப் பட்டுக்கொண்டேன். இதற்கெல்லாம் நான் மட்டுமே திருப்திபட்டுக் கொள்ளமுடியும்.

உடனிருந்த பையன்களை சில சொற்களால் எச்சரித்தேன். என் கையால் என் வாயையே மூடி அவர்களை என்னை கவனிக்க வைத்தேன் நிலமை அவர்களுக்குப் புரிந்து எச்சரிக்கையடைந்தார்கள். இனி அவர்கள் அவளை பார்த்துக் கொள்வார்கள்.

எதுவுமே நடக்காதது மாதிரி பயணிகள் பெட்டியை நோக்கி நடந்தேன்.

என் வழக்கமான ரயில் பயணம் இல்லை இன்று. எல்லோரையுமே சந்தேகப்படும்படியாகவும், எல்லோருமே யாரையோ தேடி அலைவது மாதிரியும் எனக்குப்பட்டது. அது சந்தேகமில்லை நிஜம் என்பது மாதிரி ரயில்வே போலீஸ் ஒவ்வொரு டாய்லட்டையும் துழாவியெடுத்தார்கள். ரயில்வே போலீஸ் மட்டுந்தான் தேடுகிறார்கள். மற்றவர்களும் சேர்ந்து தேடுவது மாதிரி தெரிந்தது  என் பிரமைதான் போலும்.

அலமேலுவின் தோழிகளில் சிலரை எதிரில் பார்த்தேன். அவர்கள் முகங்களில் பீதி குடியேறிவிட்டிருந்தது. அவளின் தோழிகளில் பாதிபேர் வாரங்கல் ஸ்டேஷனிலேயே இறங்கி விட்டார்கள். இன்று இதெல்லாம் நடக்காமலிருந்திருந்தால் அலமேலுவும் இறங்கியிருப்பாள்.

அந்த ட்டி. ட்டி. ஆரின் முதல் உதையே இன்றைய நாளின் உற்சாகம் எல்லாவற்றையும் சிதைத்துவிட்டது. அவன் ரயில் அதிகாரத்தின் உச்சத்தை தன் ஷூக்கால்களுக்குள் இறக்கி வைத்திருந்திருந்ததை இதுவரை யாரும் அறியாமலிருந்தோம்.

அவளுக்கும் கூடதான் இந்த ரயிலில் உரிமையிருக்கிறது. அது அவனைவிடவும் இன்னும் நெருக்கமானது.

பரீட்சை எழுதி பாஸ் பண்ணி ரயிலேறிய நாய் அது.

அவளுக்கு அப்படியில்லை. எல்லாமே இந்த ரயில்தான்.

ராணுவத்திலிருந்து ஊருக்கு ரயிலேறும் நண்பர்களை,

“மச்சான் ராமகுண்டம் வரை எப்படியாவது சமாளிச்சிடு” என உற்சாக வார்த்தைகளில் ரயிலேற்றி விடும்போது அவர்கள் ஞாபகத்தில் இந்த ரேனிகுண்டா தக்காளி எப்போதுமிருப்பாள்.

“அலமேலுவைப் பார்த்தா இதை கொடுத்துரு” என அவளுக்குத்தான் எத்தனை எத்தனை ஸ்வட்டர்கள்! கம்பளிகள்! ஆரஞ்சு பழங்கள்! எப்போதாவது விலை உயர்ந்த பாட்டில்கள், அவ்வளவும் அன்பின் ததும்பல்கள். எல்லாவற்றையும் இன்று நாசமாக்கிவிட்டான் இந்த ட்டி. ட்டி. ஆர். கிருஷ்ணா.

என்னமோ இந்த ரயில் இவனுக்கு மட்டும் சொந்தமானதுபோல் ஆடுகிறான்.

ஒருவேளை என் வேர்களை நானே தேடிப் போனால் இதோ கேட்பாரற்று பல காலம் இந்த தண்டவாளத்தில் நிற்கும் இந்த துருபிடித்த ரயிலின் ஏதோ ஒரு பெட்டியில் கூட நான் கர்ப்ப பட்டிருக்கலாம். பாழடைந்த ரயில் பெட்டியிலிருந்து உருவான ஒருத்தியை, பரீட்சை எழுதி வேலைக்கு வந்த இவன் எப்படி எட்டி உதைக்கலாம்? அவனாக அதிகாரம் இப்போதும் இவளுக்கு புரியவில்லை.

கனவுமாதிரியும், கனவில்லாதது மாதிரியும், கனவின் மிச்சம்மாதிரியும் எழுந்து, அடங்கி மீண்டும் உயிர்பெற்று, ரயில் தடதடக்கும் சத்தத்தில் அலமேலு அப்படியே உறங்கிப் போனாள்.

ரேணிகுண்டா ஸ்டேஷன் வரை இவளைக் காபந்து பண்ணிவிட்டால் போதும். அப்புறம் அங்கிருந்து கோவாவுக்கோ, பெங்களூருக்கோ ஏன் மெட்ராஸ்க்கோ கூட ரயிலேற்றிவிட்டு விடலாம்.

மனிதர்கள் இருக்கும்வரை அலமேலுவும் பிழைத்துக்கொள்வாள். காலியாய்க் கிடந்த ஒரு இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து யோசித்தபோது சட்டென ஞாபகம் வந்தது பாலாஜியின் பெயர்.

நாளடைந்த ரயில் நண்பர்களில் இன்னும் உதிராமல் மிஞ்சியவன். நீ மட்டுந்தான் என் உயிர் என இதுவரை வசனம் பேசாதவன்.

என் கைப்பேசியில் பாலாஜியை அழைத்து, கொஞ்சம் சரியாகவும், நிறைய தப்புதப்பாகவும் நிலமையை சொன்னேன். என் குரல் எனக்கே கேட்காதவாறு மௌனப்பட்டிருந்ததை அந்த ஓடும் ரயிலில் உணரமுடிந்தது.

பாலாஜியிடம் என் வேண்டுகோள் இதுதான்.

இன்னும் அரைமணி நேரத்தில் என் பேன்டரி காரிலிருந்து பத்திரமாய் அலமேலுவை இறக்கி, ப்ளாட்பாரத்தில் காத்திருக்கும் ரயில்வே போலீசாரின் கண்களுக்கு மறைத்து உன்னிடம் ஒப்படைக்கிறேன். அடுத்த பத்துநிமிடத்திற்குள் தெற்குநோக்கிப் போகும் ஏதாவது ஒரு வண்டியில் அவளை ஏற்றிவிட்டுவிடு. அது போதும் அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள். அவளுக்கு அதீத அழகும், ட்டி.ட்டி.ஆரையே எட்டி உதைக்கும் தைர்யமுமிருக்கிறது.

அலமேலுவை அவனுக்கும் தெரிந்திருந்தது. அவளை யாருக்குத்தான் தெரியாமலிருக்கும்? எப்போதும் ராமகுண்டத்தில் ஏறி வாரங்கல்லில் இறங்கி விட்டாலும், அவள் வசீகரம் விஜயவாடா, ரேனிகுண்டா வரை நீண்டு பரவியிருந்தது.

வண்டி ஐந்து நிமிடமே ஐந்தாவது நடைமேடையில் நிற்கும் இத்தருணத்தில் இந்த அழகியின் பறிமாற்றம் ஒரு சின்ன சேதாரமின்றி நடந்து விடவேண்டும்.

நடக்கும்.

இத்தனை வருட ரயில் அனுபவம் இந்த தைர்ரியத்தை எனக்குள் விதைத்திருந்தது.

அடுத்த ஐந்தாவது நிமிடம் பிளாட்பாரத்தில் என் கைப்பிடித்து நடந்து வந்த அலமேலுவை யாரும் சந்தேகப்படவில்லை. என் மனைவியுடன் நான் ப்ளாட்பாரத்தில் நடக்கிறேன்.

ஒரு மனமொத்த தம்பதிகளின் ப்ளாட்பார நடை அது. ஒரு தற்காலிகம் எங்கள் இருவருக்கும் அப்படிப்  பொருந்தியது.

நாடக பாணியில் பாலாஜியின் கைகளை பிடித்தெல்லாம் இல்லாமல். என் சில சொற்களில், அலமேலுவை என்னிடமிருந்து பாலாஜியின் திசைக்கு நகர்த்தினேன்.

கண்களில் நீர் கோர்க்க அவள் என்னைத் திரும்பிப் பார்த்து

“பாவா”

நன்றியை நனைந்திருந்த அவள் கண்களிலிருந்துப் பெற்றுக் கொண்டேன்.

அவ்வளவுதான்.

ரயில் நகரும் சப்தத்தில் “பாவா”வை மட்டும் எனக்குள் இறுத்திக்கொண்டு பழக்கப்பட்ட கால்களால் ஓடும் ரயிலில் ஏறினேன். என்னவோ இதுவரை காத்திருந்த மாதிரி தூக்கம் வந்து அழுத்தியது.

விழித்தபோது காட்பாடி ஜங்ஷனிலிருந்தேன். இங்கிருந்து வேறு ரயிலில் ஒரு மணி நேரப் பயணம். என் ஊரும் இப்படி ஒரு ஜங்ஷன்தான். ஜோலார்ப்பேட்டை.

நானும் ஒரு ஆண் அலமேலுதான்.

குழந்தையிலேயே ஜங்ஷன் ரயில் சப்தம் கேட்டுதான் அனுராதா, நர்சிங் ஹோமில் பிறந்தேன். கடைசி ரயில் சப்தம் கேட்டுதான் தூங்கினேன். எழுவேன், சாப்பிடுவேன், புணர்வேன், வாழ்கிறேன்.

நானும் ஒரு ஆண் அலமேலுதான்.

ஆனால் இந்த ரயில் எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் எப்போதும் எனக்கு வந்ததில்லை. இது எங்கள் ஊரில் ஐந்து நிமிடம் நின்று அப்புறம் போய்விடும். அதற்குள் இதிலிருந்து இறங்கிவிட வேண்டும். அப்படித்தான் இன்றும் இறங்கி விடுவேன்.

கிருஷ்ணாவைப் போல ரயில் அதிகாரம் என் ரத்தத்தில் ஏறிவிடவில்லை.

அலமேலுவைப்போல் அவள் உடலெங்கும் எப்போதும் ஒரு ரயில் சடசடத்து ஓடிக்கொண்டிருக்கவில்லை.

பின்னிரவில் ரயில் சப்தத்தினூடே என் வீடடைந்தேன். அலமேலுவை ரேணிகுண்டாவிலேயே விட்டு விட்டேன்.

அப்பின்னிரவிலும் பழைய சோற்றில் கத்திரிக்காய் சாம்பாரை ஊற்றி பிசைந்து கொடுக்கும் மாலதியின் பிரியத்தில் கரைந்தபோது, அந்த ரயில் சத்தம் என்னைவிட்டு வெகுதூரம் போயிருந்தது.

காலம் எப்போதும் தன் கையில் ஒரு ரப்பரை வைத்துக்கொண்டே பயணிக்கிறது. மழை, வெய்யில், புயல், கொரனா எதுப்பொருட்டும் அது தன் கையிலிருக்கும் ரப்பரை தவறவிடுவதேயில்லை.

நினைவுகளை, காதலை, மனிதர்களை, ரயிலை, பேண்டரிகாரை, அலமேலுவை இப்படி எல்லாவற்றையும் அது தவறாமல் அழித்து விடுகிறது.

அதேகாலந்தான் பேண்ட்ரிகாரின் கதவுகளை எனக்கு மூடி, பின் கூரியர் நிறுவனத்தின் கதவைத் திறந்துவிட்டது. இதில் என் திருப்தி என்பது இரண்டுமே எனக்குப்பிடித்த பயணம் சம்மந்தப்பட்டது என்பது மட்டுந்தான்.

நண்பர்களுக்காக என்ற பொய்க் காரணத்தோடு நேற்றிரவு கூடுதலாக இரண்டு பெக் உள்ளே போனபோதே இப்படி ஏதாவது ஏடாகூடமாய் நடக்கும் என நினைத்தேன்.

இல்லையெனில் காலை 3.10க்கு ஜோலார்ப்பேட்டை ஜங்ஷனிலிருந்து சென்னைக்கு வண்டியேற வேண்டியவன் இப்படி மதிய நேரத்து தெலுங்கு குரல்களை கேட்டு கொண்டே ரேணிகுண்டாவில் இறங்குவேனா?

லேசாக எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன். இனி  மறுபடியும் இரவுக்குத்தான் சென்னை போக முடியும் அதனாலென்ன? அதற்குள் எனக்குக் கொடுக்க வேண்டிய கலெக்டர் வேலையை வேறு யாருக்காவது கைமாற்றி விட்டு விடுமா என்ன சென்னை?

ப்ளாட்பாரத்தில் இறங்கி பயணிக்கும் பல தெலுங்கு குரல்களைக் கடந்து, எதிர்ப்பட்ட டீக்கடையில் சக்கரை கம்மியான ஒரு டீ சொல்லிவிட்டு காத்திருத்தலின் இடைவெளியில்,

“பாவா”

பல வருட களிம்பேறிய அக்குரல்.

இத்தனை உள்ளடங்கிய ‘பாவா’ வை அலமேலு மட்டுந்தான் உச்சரிக்கக் கூடியவள்.

அக்குரல் கேட்டு நான் திரும்புவதற்குள்,

என் தோளில் அவள் வலதுகை புதைந்திருந்தது.

“ஹேய் அல்மேல் எப்படியிருக்க?... என்ன இங்க?”

நான் அதே பழைய உற்சாகத்தோடு ஏறக்குறைய கத்தினேன்.

அப்போதுதான் ஏழாண்டுகளுக்கு முன் இதேமாதிரி ஒரு மதிய நேரத்தில், அவளை இதே பிளாட்பாரத்தில் இறக்கிவிட்ட நினைவு மின்னல் மாதிரி வந்துப் போனது.

“இங்கேயே செட்டிலாயிட்டியா அலமேலு”

என்ன காரணத்திற்கோ என் கண்களில் காரணமில்லாமல் நீர்கோர்த்துக் கொண்டது.

மகிழ்ச்சியில் கூட கண்களில் நீர் கோர்க்குமா என்ன?

“நான் எங்க பாவா செட்டிலானேன், அவன்தான் என்னை இங்கேயே செட்டிலாக்கிட்டான்”

என அலமேலு கைக்காட்டிய திசையில் பாலாஜி பால்கேன்களை மினி லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தான்.

எனக்கு எல்லாமே புரிந்தது.

அதே பத்துநிமிடம் எனக்காக மட்டும் காத்திருந்தது மாதிரி ரயில் புறப்பட்டு சென்னையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. பழக்கப்பட்ட என் ரயில் கால்களால் கூட ஓடி அதைப் பிடிக்க முடியவில்லை.