Monday, August 16, 2010

‘‘வம்சி’’யின் குழந்தைகள் கொண்டாட்டம்



குழந்தைகளின் குதூகல சங்கமம்


திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியை ஒட்டிய அந்த நீண்ட பாதையில் போய் கொண்டே இருந்தால், சமுத்திர ஏரிக் கரையின் பிரம்மாண்டமும், அதில் தன்னிச்சையாக வளர்ந்து நிற்கும் பனைமரங்களும் காலத்தின் பழமையில் இறுகிய புளிய மரங்களும் வழி நெடுக நமக்கு துணை வரும். அதன் முடிவில் பரந்து விரிந்த மரங்கள்... மரங்கள்... மரங்கள்...

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தின் பகல் ஒரு மணிக்கு கொத்து கொத்தாய் குழந்தைகளில் வருகையில் உயிர் கொள்கிறது அம் மைதானம்.

முன்னூறு குழந்தைகள். அநேகமாக எல்லா குழந்தைகளும் அப்பா, அம்மாவை இழந்தவர்கள். பல்வேறு விடுதிகளிலிருந்து வந்திருந்தார்கள். குழந்தைகளின் சங்கமத்தை இன்னும் குதுகலமாக்குகிறது 'பாப்பம்பாடி ஜமா'. நம் ஆதி இசையின் முழகத்திற்க்கு குழந்தைகளின் ஆட்டம் வர்ணிக்க முடியாதது.

குழந்தைகளின் குவியலிலிருந்து அவர்களின் விருப்பத்தின்படி, ஓவியம் கற்றுக் கொள்ள, களிமண் சிற்பம் செய்ய, கதைகேட்க பாட்டு கற்க, அனுபவம் பகிர , புகைப்படம் பயில என தனித்தனி குழுக்களாக பிரிகின்றனர். மரக்கூட்டங்களால் லேசான இருள் சூழ்ந்த அம் மைதான வெளி எல்லோரையும் அனுமதித்துக் கொண்டேயிருக்கிறது. புகைப்படக் கலையில் 'Birds View' என்பது மாதிரி ஒரு பறவையின் பார்வையில் கொத்து கொத்தான சிறு மலர்கள் மைதானமெங்கும் பரந்து கிடந்தார்கள். ஓவியம் கற்றுக் கொள்ள வந்த குழந்தைகளை ஓவியர்கள் கோபி, ஸ்டெல்லா, எழில், துரைஎழிலன், கருப்புசாமி ஆகியோர்கள் தங்களின் அனுபவத்தை குழைத்து அக்குழந்தைகளின் சிரிப்பில் குழிவிழும் கன்னத்திற்கு திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பனசாமி, சாமிநாதன், கதிர், தாமரி டீச்சர், எல்லோரும் ஒரு குழுவாகி மாறி, மாறி குழந்தைகளிடம் கதைசொல்வதும், கதைகேட்பதுமாய் லேசான மழைத்தூரலினூடான அப்பகலை ரம்மியமாக்கிக் கொண்டிருந்தனர்.

காட்டின் சகல பக்கங்களை விளக்கும் சூழலியலாளர் மோகன்ராம்
இன்னொரு பக்கத்து பாறையில் அமர்ந்து, தன் காட்டுப்பயண அனுபவங்களை பச்சையம் மாறாமல் அக்குழந்தைகளின் மனங்களில் விதைத்து கொண்டிருந்தார் சூழலியலாளர் மோகன்ராம்.

மைதானத்து கிழக்கு மூலையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும், இருபதுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களும் வகுப்பறை அமைதியோடு அவ்விடத்தின் மௌனத்தை அடைகாத்து அமர்ந்திருக்கிறார்கள். ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்து அவர்களுக்கு புகைப்படத்தின் நுட்பங்களை சொல்லிக் கொண்டிருந்தவர் இந்தியாவின் மிகப்பெரிய புகைப்பட ஆளுமை பி.சி.ஸ்ரீராம் தன் மனைவியுடனும், தன் ஆர்மார்த்த சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரனோடும் இதில் பங்கேற்ற பி.சி.யின் பங்கு அளவிடமுடியாதது. இவர்களோடு மிக முக்கிய புகைப்படக்காரர்கள் சேலம் விஜய், வேலு,எம்.ஆர்.விவேக் ஆகியோர்கள் சேர்ந்து ஒவ்வொரு குழந்தையின் கையிலும் கேமராவைத் தந்து படமெடுக்கவைத்து, அதை லேப்டாப்பில் ஏற்றி, colour correction செய்து, அக்குழந்தைகளுக்குக் காட்டி, ''தன் வாழ்நாளில் எப்போதும் அடையாத சந்தோஷத்தை இன்று அடைந்தேன்'' என பரவசப்பட்டார் பி.சி. எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் எடுத்தப்படங்கள் 30"X40" அளவில் Print செய்து கொடுக்கப்போகிறோம்.
பி.சி.ஸ்ரீராம் அவர்கள் ஒரு குழந்தைக்கு புகைப்படம் கற்றுத்தரும் காட்சி

ற்றலின் முழு சந்தோஷத்தை குழந்தைகள் உணர்ந்த நாள் அது. இப்பிரமிப்பு இன்னும் விரிய ஏரிக் கரைச்சரிவிலிருந்து கிராமத்து மனுஷாள்கள் மாதிரி இறங்கி வந்து கொண்டிருந்தவர்கள் திருவண்ணாமலை கலெக்டரும், எஸ்.பி.யும். குழந்தைகளுக்கு அவர்களை அடையாளம் தெரியவில்லை.

அடுத்த நிகழ்வு ஆரம்பிக்கிறது.
குழந்தைகளுடன் மாவட்ட எஸ். பி. அவர்கள்
ஆளுமைகள் தங்கள் பால்ய காலங்களை குழந்தைளோடு பகிர்ந்து கொள்ளள். மைதானத்து நான்கு மூலைகளிலும் நான்கு பெருமரங்களை தேர்வுசெய்து, அதன் கீழ் அடுக்கிவைக்கப்பட்ட கருங்கல்மேடுகளில் உட்கார்ந்தார்கள் மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன், மாவட்ட எஸ்.பி. பாண்டியன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரித் தலைவர் கு.கருணாநிதி, சந்தோஷமும், கிண்டலும், கேலியும் சிறுபொய்களும், கள்ளத்தனங்களும் நிறைந்த தங்கள் பள்ளிநாட்களை அவர்கள் பகிர்ந்து கொண்ட வினாடிகள் அவர்களே மீட்டெடுக்க முடியாதது. குழந்தைகள் அவர்களின் உரையாடல்களின் தொடர்ச்சியாக அவர்களுக்கே உரிய குறும்பு கேள்விகளால் ஆளுமைகளைக் குழந்தைகளாக்கினார்கள்.

எஸ்.பி.யிடம் ஒரு பையன், துப்பாக்கி இல்லாம நீங்க என்ன எஸ்.பி.சார்? என்றான்

அவர் வெடித்து சிரித்து, தன் காருக்கு ஒரு போலீசை அனுப்பி ரிவால்வரை எடுத்து குழந்தைகளுக்கு காண்பித்தார்.
சிலம்பம் சுற்றும் எஸ்.பி. பாண்டியன் அவர்கள்
உங்களுக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் சார்? என்ற கேள்வியை கேட்டது ஒரு சாதரண ஆள் இல்லை. குழந்தை. அது கடவுளைவிடவும் ஒரு படி மேலானது இல்லையா! எஸ்.பி. தன் வீட்டிற்கு ஆளனுப்பி சிலம்பம் எடுத்துவரச்சொல்லி அதை அவர்களுக்கு சுற்றிக் காட்டினார். குழந்தைகளின் கைத்தட்டல் அவருக்கு ஒரு தேசிய விருதின் ஒத்திகையை நினைவுபடுத்தி இருக்கும்.

கலெக்டர் ராஜேந்திரனிடம் குழந்தைகளின் அன்பும், ஆர்வமும், கிண்டலும், நிறைந்த கேள்விகள் ஏராளம். அவர் தன் அனுபவ பகிர்தலை இப்படி ஆரம்பிக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மு.ராஜேந்திரன் தன் பால்யகால நினைவகள்

''தங்கள் வாழ்வைப்பற்றி சொல்ல ஏதோ ஒரு வகையில் ஜெயித்தவர்களைத்தான் இப்படி அழைப்பார்கள். ஒரு கண்டக்டரை கூப்பிட்டு உன் வாழ்வை பகிர்ந்து கொள் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்தை அழைத்து அப்படி சொல்வார்கள். ஏன் எனில் அவர் கண்டக்டராய் இருந்து ஒரு துறையின் உச்சத்தை அடைந்தவர்'' என்றுத் தொடங்கி அக்குழந்தைகளின் உலகில் சுலபமாக பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டார் அவரே அவரை மறந்து குழந்தையாகி இருந்தார். இங்கும் தன் அய்யாவின் பின்னால் நிற்க மனமில்லாத அவர் டவாலியும் ஒரு மூலையாகப்பார்த்து உட்கார்ந்து தன் அய்யாவின் பால்யத்தை பருகிக் கொண்டிருந்தார்.
.

பி.சி.ஸ்ரீராம் தன் சிஷ்யன் வைட்ஆங்கிள் ரவிசங்கரோடு, ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து தஞ்சாவூரில் தான் பிறந்து வளர்ந்ததை, தாத்தா வாங்கித் தந்த முதல் கேமராவில் முழு படமும் எடுத்து முடித்து, கழுவிப்பார்த்தால் ஒரு படமும் வராதது என தன் ஆரம்பநாட்களை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தார். அம்மாணவர்களை அவர் தோள் மேல் நின்று அவர் பால்யத்தைக் காண அனுமதித்திருந்தார்.
எஸ்.கே.பி. சேர்மன் கு.கருணாநிதி ஆழ்ந்த யோசனைகளோடு

இன்னொரு பக்கம், தன் முப்பது வயதிற்குள் ஒரு பொறியியல் கல்லூரியைத் துவங்கி, வெறும் வியாபார நோக்கம் என்று அதன் எல்லைகளை சுருக்கி விடாமல், இன்றளவும் வாசிப்பின் மீதும், இலக்கியத்தின் மீதும், தீராத பற்றுடைய எஸ்.கே.பி. கு. கருணாநிதி, தன் வெற்றியின் இரகசியத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொறியியல் படிக்க ஆர்வமற்றவர்களை அறிய ஆவலோடு கைத்தூக்க சொன்னதற்கு, எல்லாக் குழந்தைகளும் கைதூக்கி அவரை அதிர்ச்சியூட்டினார்கள். இந்நிகழ்விடத்தின் மரச்செறிவின் மகத்து வத்தையும், இயற்கையையும் தங்கள் உள்ளங்கைகளில் பொத்திப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அவர்கள் மொழியில் அவர்கள் மேல் மழைத்தூறல் மாதிரி பொழிந்தார்.

அதிலிருந்து ஆரம்பித்து, குழந்தைகளின் சட்டை ஜோப்பிகளில் நம்பிக்கை விதைகளை நிரப்பி அனுப்பினார்.

சாயங்காலம் ஆறாகப் போகிறது, இருட்டு மெல்ல கவ்வி இடம்பிடிக்கிறது. குழந்தைகள் தங்கள் முன் உட்கார்ந்திருக்கும் ஆளுமைகளை தங்கள் கேள்விகளால் பிணைத்திருக்கிறார்கள். அந்த அன்பின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு போக ஆளுமைகளால் முடியவில்லை.
வேலுச் சரவணன் தன் பரிவாரங்களோடு

ஆனால் ஒரு புயலென, பெரும் சத்தத்தோடு தன் பரிவாரங்களோடு அம்மைதானத்திற்குள் புழுதியை கிளப்பிக் கொண்டு நுழைகிறான் 'வேலு மாமா' என்று தமிழகக் குழந்தைகளோடு அன்போடு அழைக்கப்படும் வேலுச்சரவணன்.

'தேவலோக யானை' 'சீத்தா' 'கடல்பூதம்' என்ற தன் மூன்று நாடகங்கள் மூலம் அக்குழந்தைகளை மகிழ்வின் எல்லைக்கே கைப்பிடித்து கூட்டிப்போனான். சுற்றி நின்ற பெருசுகளை தன் மாயவித்தைகளால் குழந்தைகளாக மாற்றினான். மோடிவித்தைக் காரனிடம் மாட்டிக் கொண்ட பள்ளிக்கு போகும் மாணவனைப் போல அப்பெருசுகள் அவனிடம் மாட்டிக் கொண்டனர்.

போலீசும், மனித மனங்களும், சூழலும், அனுமதித்தாலும் இருட்டு அதற்கு மேலும் அனுமதி தர மறுத்த தருணமது. எஸ்.கே.பி.கருணா அத்தனைக் குழந்தைகளுக்கும் நெய்யொழுகும் கேசரியும், சுடசுட கிச்சடியும் பறிமாறி, கலெக்டர் அத்தனைக் குழந்தைகளுக்கும் சால்வைகள் பரிசளிக்க, எல்லோரும் கலைந்து போன அந்நிமிடத்திற்காக காத்திருந்து இருட்டு முற்றிலும் கவ்விக்கொண்டது. நிலாவை பாம்பு தின்ற அவ்விநாடி, குழந்தைகளற்ற அம்மரங்களடர்ந்த மைதானத்தை திரும்பி பார்க்கிறேன்.

தாங்க முடியவில்லை.