Wednesday, December 17, 2014

நிலம்
ஒவ்வொரு வருடச் சித்திரையிலும் அப்பா என்னைக் கூட்டிக் கொண்டு சொந்த கிராமத்திற்குப் போவார். எல்லோரும் எங்களுக்காகவே அந்த பிரம்மாண்ட மாமரத்தடியில் காத்திருப்பார்கள். அப்பாவின் தலை தெரிந்ததும் ஆறேழு பேர் மளமளவென மரமேறுவார்கள். ஒவ்வொரு கிளையிலும் ஒரு கரும் பிசாசாய் தொத்திக்கொண்டு உக்கிரத்தோடு காய் உலுக்குவார்கள். புளியம்பழம் கொட்டுவது போல மாங்காய் உதிரும். ஆசைப்பட்டு ஒரு காயெடுத்து கடித்தால் புளிப்பு தாங்காது. முகம் அஷ்டகோணலாகும். பாதி கடித்த செங்காயை அப்படியே வீசி எறிவேன்.

அம்பாரமாய்க் குவித்து வைத்த குவியலிலிருந்து ஒரு ஈச்சங்கூடையில் காய்களை நிறைத்து எட்டு பாகமாய் சிறு குவியல்களாய் கொட்டப்படும். அப்பா எட்டாவது குவியலின் அருகில் நின்று, அதற்காகவே காத்திருந்தது போல காலால் எட்டி உதைத்து அதைக் கலைப்பார். வழக்கமான சண்டை துவங்கும். ஒரே கூச்சல், குழப்பம், கெட்ட வார்த்தை, போலீசுக்கு பிராது என முடியும். போலீசுக்கு எழுதின புகார் மனு ஒருபோதும் போலீஸ் ஸ்டேசன் வரை போனதில்லை.

ஒருமுறை அப்பாவிடம் கேட்டேன். ‘‘அது ஏம்பா எட்டாவது பங்கு வைக்கும்போது மட்டும் உனக்கு ஆத்திரம் பொங்குது?’’

அப்பா நிதானித்து, என் தலைமுடிக்குள் கை நிறைத்து கோதிச் சொல்லுவார்.
‘‘அது நியாயம் மீறப்படறப்போ வர்ற கோபண்டா’’


‘‘என்னா நாயம்?’’

‘‘எங்க பங்காளிகள்ல ஒருத்தன் சின்ன வயசிலேயே காணாமல் போயிட்டான். இந்த ஊர்ல இருக்கான், அந்த ஊர்ல இருக்கான்னு சொல்லி அவனுக்கு ஒரு பாகம் எடுத்துக்குவாங்க. நாம வெளியூர்லதானே இருக்கோம். நாம போனப்பறம் அதை மத்த பாகத்தோட சமமாப் பிரிச்சிக்குவாங்க. அதுக்கு ‘ஊர்சுத்தி பாகன்னு பேரு. அவன் இப்ப உயிரோடு இருக்கானான்னே தெரியல. ஆனா அவன் பேர்ல ஒரு பாகம் போகுது.

‘‘அப்பா மட்டும் இதில் ஒரு பக்கம். மற்ற ஆறு பேரும் இன்னொரு பக்கம். எப்போதும் நடந்த சண்டையும், அப்பாவின் பார்வையில் நிகழ்ந்த நியாய மீறலும் தொடர்ந்து இரண்டு வருடம் ‘மா அறுவடைக்கு நாங்கள் போகவில்லை. அதனால் காய் உலுக்கப்படாமல் கிடந்து மூன்றாவது வருடம் அம்மாமரங்கள் வேரோடு அறுபட்டன. கேள்விப்பட்டு நானும் அப்பாவும் போய்ப் பார்த்தபோது மாமர வேரைச் சுற்றி பெரும் பள்ளம் பறித்துக் கொண்டிருந்தார்கள். எதற்கெடுத்தாலும் சத்தம் போடும் அப்பா எதனாலோ என் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகத் திரும்பினார். இழந்த துயரம் என் கைகளுக்குப் பரவியதை உணர முடிந்தது.

அதற்கடுத்த வருசம், அப்பா வாத்தியாராய் வேலை பார்த்த அண்ணாமலைபுரத்தில் இரண்டு ஏக்கர் புஞ்சைக் காட்டை அறுநூறு ரூபாய்க்கு வாங்கினார். கல்லாங்குத்தும், கள்ளிமரங்களும் சுடலிச்செடிகளுமாய் மண்டிக்கிடந்த புஞ்சையை அப்பாவும், அம்மாவும் சீர்படுத்தி முதல் வேலையாய் நான்கு மாமரக் கன்றுகளை நட்டார்கள்.
கோல் சுற்றி நீர்வளம் பார்த்து, வேப்பங்குச்சியால் கிணறு படம் வரைந்து சனிமூலையில் முதல் கடப்பாரை விழுந்ததுவரை என் ஞாபகத்திலிருந்து அகலாத நினைவுகள்.

வெள்ளை மொறம்பு மலைபோல் குவிந்திருக்கும் அக்கிணற்று மேட்டிலேயே அப்பாவுக்கு இரண்டு வேளை சாப்பாடு போகும். கிணற்றின் ஆழம் இறங்க இறங்க அப்பாவின் சாப்பிடும் இடம் சூறாவரியானது. வெய்யில் தலைக்கேறிய ஒரு மத்தியானத்தில் அக்கிணற்றில் கருநீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டது. அப்பாவின் ஸ்கூலிலிருந்து கிணற்றுக்கு ஒரு பர்லாங் தூரம்தான். ஒரு நாளைக்கு பத்து தடவையாவது நிலத்துக்கும் ஸ்கூலுக்கும் நடந்து தீர்ப்பார்.

தெற்கேயிருந்து கையளவிற்கு ஒரு ஊற்றும், மேற்கேயிருந்து அதைவிடச் சின்னதாக இரண்டு மூன்று சல்லி ஊற்றும் வந்து அக்கிணற்றை நிரப்பியது. வடிந்த கிணற்றில் இந்த ஊற்று பாய்கிற சத்தத்தைக் கேட்ட எவரும் கடவுளை நேருக்கு நேர் பார்த்த பரவசத்தை அடைவார்கள்.

நீர் கிடைத்த அடுத்த நாள் அதிகாலையிலேயே செங்கமேட்டுப் பெரியப்பா எங்கள் வாசலில் குந்தியிருந்தார். அவர் மறுக்க மறுக்க அப்பா சைக்கிளில் ஏற்றிக்கொண்டு விடிவதற்கு முன் நிலத்திற்குப் போனார்.

வெட்டிய புது கிணற்றில் கவலை அமைக்கப்பட்டது. தொண்டானும், தோண்டியும் மாடுகளோடு இணைக்கப்பட்டு அது நீர் இழுக்கும் வழி மேடு பள்ளமாக அமைக்கப்பட்டது. எல்லாமும் என் பிஞ்சு உடலில் உரமாக ஏறியது.

அதற்கும் அடுத்தநாள் மூன்றாம் ஜாமத்தில் எங்கள் நிலத்திலிருந்து அந்த ஊருக்கே பாட்டு கேட்டது. அதுவரை அவ்வூர் கேட்டிராத கவலைப்பாட்டு அது. செங்கமேட்டுப் பெரியப்பாவிற்கு உடல் உரத்தோடு, குரல்வளமும் உண்டு எனத் தெரிந்து நானும் அப்பாவும் அக்கருக்கலில் இன்னும் வேகமாய் நடந்தோம்.
விடிவதற்கும், அவர் பாடல் முடிவதற்கும் காத்திருந்ததுபோல் நாங்களிருவரும் அந்தப் புங்கமரத்தின் இருட்டில் நின்றிருந்தோம். கிணற்றில் விழுந்து தோண்டியில் நிறைகிற நீர் தொண்டான் வழியே வாய்க்காலில் ஊற்றுவது கவித்துவத்திற்கும் அடுத்த நிலை.

எல்லாவற்றிக்கும் ஒரு சப்த ஒழுங்கிருந்தது. எல்லா நிலைகளிலும் அழகு மிளிர்ந்தது. கிணற்று நீரில் தோண்டி விழுவது, கயிற்றைத் தளர்த்தி நீரை மொள்ளுவது, அது மேலேறி வரும்போது சிந்தும் நீர், கல்பொந்தின் வழியே நீர் கொட்டி வாய்க்காலுக்கு ஓடுவது. எனக்கு அடுத்த தலைமுறை இனி எப்போதும் காணக் கிடைக்காத காட்சியையும், கேட்க முடியாத சப்தத்தையும் நான் என் இரு கைகளிலும் தாகம் தீர அள்ளி அள்ளி பருகினேன்.

அதற்குப் பிறகான அப்பாவின் முகம் எப்போதும் சந்தோஷத்தால் பூத்திருந்தது. ஒருநாள் ஸ்கூல் முடிந்து வரும்போது சைக்கிள் கேரியரில் ஒரு பித்தளை குடம் கட்டிக் கொண்டு வந்தார். அதிசயத்தைக் காணப் பண்ண அழைப்பதை மாதிரி என்னைத் தனியே அழைத்து தன் தோள்வரைத் தூக்கி குடத்தைச் சுற்றியிருந்த துண்டை அவிழ்த்துக் காட்டினார். குடம் நிறைய மீன் குஞ்சுகள். சின்னதும் பெரியதுமாக அவை அவசரமாய் துள்ளி கீழே குதித்தன. என்னைத் தரையில் நிறுத்திவிட்டு அப்பா ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிக் குடத்திலிட இன்னொன்று கீழே குதித்தது. அம்மாதான் எப்போதும் போல் இதற்கும் ஒரு தீர்வு கண்டாள். இப்போது எங்கள் புதுக் கிணற்றில் விராலும், ஜிலேபியும் நிறைந்திருந்தன. எனக்கும் வசந்தா அக்காவுக்கும் மீந்த சாதத்தை, அல்லது அதற்காகவே மீற வைக்கப்பட்ட சாதத்தைக் கிணற்றில் இரைத்து அவற்றை மீன்கள் மொய்க்கும் அழகை யாரையாவது கூட்டிப் போய் காட்டுவதென்பது தினந்தோறும் நடந்தது.

விரால்கள் வளர்ந்து பெருத்தபோது அப்பா கொசுவலையை எடுத்துக் கொண்டு என்னையும் கூட்டிக் கொண்டு மத்தியானத்தில் குளிக்கவும், அன்றைய சாப்பாட்டிற்கு மீன் பிடிக்கவும் போவார். சோற்றை இரைத்து மீன்களைக் கூட்டி கொசுவலை போட்டுப் பிடிக்க முயற்சிக்கும் போது, விரால்கள் தப்பித்து அப்பாவிடம் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டு வாங்கும்.

ஆனாலும் போரில் வென்று திரும்பும் வீரர்களைப் போல நானும் அப்பாவும் ஆறேழு விரால்களோடுதான் வீடு திரும்புவோம். காசிரிக்கா நாரில் அவற்றைக் கோர்த்து நானும் அப்பாவும் தூக்க முடியாமல் தூக்கி வருவோம். வழிநெடுக யாராவது பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாயிருக்கும்.

அப்பாவின் அடுத்த கனவு எப்படியாவது ஒரு ஆயில் இன்ஜின் வாங்கிவிட வேண்டுமென்பதுதான். ஒரு செகண்ட்கிரேடு வாத்தியார் சம்பளத்தில் அதெல்லாம் பெருங்கனவு. தென்மாத்தூர் கண்ணப்ப உடையார் வீட்டிற்கு நடையாய் நடந்து பாண்டு எழுதித்தந்து அவரிடமிருந்து ஒரு ஆயில் இன்ஜினை செகண்ட் ஹேண்டில் வாங்கி வந்தார். ஒரு தரித்திரத்தை அப்பா மாட்டுவண்டி கட்டி கூட்டி வந்திருக்கிறார் என்பது அப்போது எங்கள் யாருக்கும் தெரியாது.

ஒரு தேர்ந்த ஆயில் இன்ஜின் மெக்கானிக்கான என் செல்லங்குப்பத்து சித்தப்பா அதற்குப் பின் அந்த ஒரு இன்ஜினுக்காகவே எங்கள் நிலத்துக் கொட்டாயிலேயே படுத்துக் கிடந்தார். அது ரிப்பேர் ஆகாத நிமிடம் இல்லை. இப்போது தேற்றிவிடலாம், அப்போது தேற்றிவிடலாமென அப்பா அதனோடு நேரம் காலம் பார்க்காமல் மல்லுக்கட்டுவார். கடைசியாக அம்மாவின் வெள்ளைக் கல் கம்மல் வரை அடகுக்குப் போனதுதான் மிச்சம். உதவிக்கு அழைத்து வரப்பட்ட வாசுதேவன் மாமா வந்த ஐந்தாவது நாள் ஆயில் இன்ஜினை இயக்கிக்காட்ட வேண்டிய தீப்பந்தம், ஏற்கனவே இன்ஜின் ஆயில் முழுக்க தெறித்திருந்த உடலில் பட்டு எரிந்து அவர் ஓடிவந்த முன் கருக்கலில், நானும் அந்த கிணற்று மேட்டில்தான் நின்றிருந்தேன்.

மரண ஓலத்துடன் ஓடிவரும் அவரை,

‘கெணத்துல குதிடா, கெணத்துல குதிடா’ என அப்பா அடித்தொண்டையிலிருந்து கத்திக் கொண்டு வந்தார். கிணற்றில் குதிப்பதற்கு முன் உடல் பாதி வெந்திருந்தது.
என்ன செய்தும் எங்கள் ஆயில் இன்ஜினைத் தேற்ற முடியவில்லை. வாசுதேவன் மாமாவை மட்டும் காப்பாற்ற முடிந்தது.

ஒவ்வொரு நாளும் நிலக்கடன் கூடிக் கொண்டேயிருந்தது. இப்படி ஒரு வெளங்காத ஆயில் இன்ஜினைத் தன் தலையில் கட்டிய கண்ணப்ப உடையாருக்குக் காசு தர முடியாது என அப்பா கறாராய் முடிவெடுக்க, எழுதிக் கொடுத்திருந்த பாண்டு கோர்ட்டுக்குப் போனது.

தீர்ப்பு அந்த ஓட்டை ஆயில் இன்ஜினுக்கு சாதகமாக வந்தது. அப்பா ஓய்வு பெற்றதற்கு மறுநாள் நான் செல்வராஜ் மாமாவைக் கூட்டிக் கொண்டுபோய் இன்ஜின் வாங்கிய அசல் தொகை 800, வட்டி கோர்ட் செலவு, டிகிரி செலவு என என்னென்னமோ புரியாத வார்த்தைகளுக்கெல்லாம் சேர்ந்து நாலாயிரத்து ஐநூறு கட்டி கோர்ட் கேஸ் கட்டை மீட்டு வந்தேன்.

என்ன செய்தும் இயக்க முடியாத அந்த இரும்பு இயந்திரத்தை அப்பா பலமுறை தன் பலங்கொண்ட மட்டும் எட்டி உதைப்பதை பல நேரங்களில் இருட்டில் நின்று கவனித்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் அப்பாவுக்குத் தெரியாமல் அதைக் கிணற்றுக்குள் தள்ளிவிட வேண்டுமென எத்தனித்திருக்கிறேன். ஆனால்,

‘‘இதைத் தூக்கி இந்தக் கெணத்துலேயே போட்டுடுங்கப்பா’’ என ஆத்திரத்தோடு அப்பா கத்தும் போது நாலைந்தடி தூரம் போய் நான் நின்று கொள்வேன்.

தனக்கு மட்டுமின்றி ஊரில் ஏழெட்டு பேருக்கும் சேர்த்து அப்பா பதிந்து வைத்திருந்ததன் பலனாக, ஒருநாள் மின்வாரியத்தின் நீண்ட லாரிகளில் சிமெண்ட் கம்பங்கள் வந்திறங்கின நாள் அப்பாவின் முகம், கிணற்றில் நீர் கண்ட அன்று மலர்ந்ததை விடவும் கொஞ்சம் கூடுதலாக மலர்ந்தது. ஆயில் இன்ஜின் தந்திருந்த தொடர் வலியிலிருந்து மீண்ட திருப்தி அது.

கடன் இன்னும் கூடிக் கொண்டேயிருந்தது. காரப்பட்டார் கடையில் கடனுக்கு ஐந்துக் குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார், ஒரு திறனுமில்லாத எங்களை நம்பி வாங்கப்பட்டது.

கைமீறிப் போய்விட்ட கடனுக்கு எங்கள் நிலம் அடமானம், போகியம் என்று என்னன்னமோ பெயரில் யார் யாருக்கோ கைமாறியது.

நிலமற்ற அப்பா நடை பிணமாக உலவினார். பித்து பிடித்துப்போய் யார் யாருக்கோ கடன் கேட்டு போஸ்ட் கார்டு எழுதினார். ஆளுக்கு ஆயிரம்தான். நூறு பேர். ஒரு லட்சம் என்று இரவு பகலாய்ப் புலம்பினார். நீ ஒரு ஆயிரம், நீ ஒரு ஆயிரம் என என்னையும் அம்மாவையும் கை காட்டினார். வேறு வழியின்றி நானும் அம்மாவும் அப்பாவை வேலூர் பாகாயத்திலிருந்த மனநல மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம். வழியில் பாய்ஸ் ஹைஸ்கூல் முன்பாக ஆட்டோவை நிறுத்தச் சொன்னார். மௌனமாகக் கீழே இறங்கினார். நான் பதட்டத்தோடு அவர் இரு தோள்களையும் பின்னாலிருந்து கட்டிக் கொண்டேன். அவர் பின்னால் திரும்பி என்னை தீர்க்கமாகப் பார்த்தார். இப்போது அவர் கண்கள் தெளிவாக இருந்தன. அவர் உயரத்திற்கு வளர்ந்திருந்த என்னைத் தழுவி என் தலையைக் கோதிவிட்டார்.

‘‘பவாய்யா, எனக்கு ஒண்ணுமில்லடா, வீட்டுக்குப் போலாம்’’

மிகத் தெளிவாக, துல்லியமாய்ப் பேசினார்.

அந்த பிரம்மாண்ட பள்ளி மைதானத்தின் முன் நின்று உள்ளுக்குள் சபதமெடுத்தேன். பிச்சை எடுத்தாவது இக்கடனை அடைக்க வேண்டும். ஈரப் பிசுபிசுப்போடு ஒரு குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைப்பது போல, மண் ஈரத்தோடு எங்கள் நிலத்தை மீட்டு சேறும் சகதியுமாய் அப்பாவிடம் மீண்டும் தரவேண்டும், அல்லது ஒருமுறை அவரை அதில் புரண்டு எழ வைக்க வேண்டும்.


எல்லாமே நடந்தேறியது.

Monday, December 15, 2014

மழையின் தாளம்


சென்னை பாரீஸ் கார்னர் பஸ் நிலையத்தில் நாங்கள் ஐந்தாறு பேர் இறங்கியதும் நான் எதிரில் நின்ற ஒருவரிடம் மணி கேட்டேன்.

‘‘ஏழே கால்’’

இன்னமும் வெய்யிலேராத பகல் குளிர்ந்திருந்தது. இயல்பாகவே எல்லாரும் ஒரு டீக்கடையின் முன் நின்று ஆற்றாமல் தரும்படி கேட்டு ‘டீ’ குடித்தோம். கருணா பில்டர் கோல்டும், சுகந்தன் ஒரு பீடியையும் ‘டீ’ ஈரம் காயாத உதட்டில் தோயவிட்டார்கள்.

இந்தக் காலையில் பார்க்கிற எல்லாமுமே அழகாய்த்தான் இருக்கிறது. தன் உயரத்தை விட அகலமாயிருக்கும் இந்த தவுலை ஏழுமலை மாட்டியிருப்பது அழகு. ‘நானும் உங்களுடன்தான் இருக்கிறேன் நண்பர்களே என தன் அமைதியின் பொருட்டு தான் கரைந்து போய்விடக் கூடாது என ஞாபகப்படுத்தலினூடே நடந்து வரும் ‘தபேலா’ ஆறுமுகம். எப்போதும் பரபரப்பைத் தன் மேலேற்றிக் கொண்டு, தனக்குப் பொருந்தாத ஜோல்னாப்பை தொங்கலில் உடன் நடக்கும் ரெண்டேரிப்பட்டு கோவிந்தன். இவர்கள் எல்லோருக்காகவும் தி.நகர் பஸ் நெம்பர் கேட்கும் ஒரு குரல்.

ஒன்பது மணிக்குக் கொஞ்சம் முன் நாங்கள் எல்லோரும் அந்த ரெக்கார்டிங் தியேட்டருக்கு முன் நின்றோம். ஒரு சிறு விளம்பரப் பலகை மட்டும் இருந்தது. நுழைவாயில் மிகச் சாதாரணமாக, பாதியளவு மூடிய ஒரு கண்ணாடிக் கதவிற்குப் பின் அந்த விசாலமான ஒளிப்பதிவுக் கூடம் இருக்க வேண்டும்.

ஆயிரத்திற்கும் குறைவாக சம்பளம் வாங்கும் வயசான சீருடையணிந்த ஒரு வாட்ச்மேன் எங்களை விசாரித்தார். ‘நாங்கள் திருவண்ணாமலையிலிருந்து வருகிறோம். ஒரு இசைக்குழு வைத்திருக்கிறோம். ஒரு கேசட் போட வேண்டும். அதற்கு ரெக்கார்டிங் செய்ய வந்திருக்கிறோம் இவ்வளவையும் ஒரு இரவுக் காவலரிடம் சொல்ல வேண்டுமா எனத் தெரியவில்லை. ஆனால் சொன்னோம்.

‘‘நானும் செஞ்சிதான். தோ அப்பிடி வழியவிட்டு நில்லுங்க. சார் வரும் நேரந்தான்’’ என ஒரு பருத்த தூங்குமூஞ்சி மரத்தடியைக் காண்பித்தார்.

அவர் காட்டிய திசையில் நாங்கள் ஒதுங்கினோம். சாரின் வருகையில் ஆர்வப்பட்டோம். அப்போது கருணா அன்றைய தன் நாலாவது பில்டர் கோல்டை அந்த மரத்தடியில் பற்ற வைத்தான்.

நான், அதுவரை பார்த்திராத ஒரு நீண்ட வழவழப்பான கறுப்பு நிறத்திலான காரில், நல்ல சிகப்பு நிறத்தில், பருத்திருந்த ஒரு மனிதன் வந்தார். ஜீன்ஸ் அணிந்து அதை இன் செய்து மேலுக்கு ஒரு கறுப்புநிற காட்டன் ஷர்ட் போட்டிருந்தார். அதில் வழக்கத்திற்கு அதிகமாக பாக்கெட்களும், பட்டன்களும் வைத்துத் தைக்கப் பட்டிருந்தது. காரிலிருந்து இறங்கி எங்களைப் பார்த்து,

‘ஹாய்’ சொல்லி அக்கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளுக்குப் போனார். நாங்கள் உள்ளேப் போக தயாரானோம். கருணாவின் கையில் புகைத்த சிகரெட் நெருப்பு காலுக்கடியில் மிதிபட்டது.

அடுத்த அய்ந்தாவது நிமிடம் உள்ளே அழைக்கப்பட்டோம்.

அந்த அறை. அதன் விசாலம். அதன் நறுமணம். அங்கிருந்த சோபாக்கள், ஓவியங்கள், புகைப்படங்கள், தரை, ஏ.சி. எல்லாமும் எங்கள் எல்லோருக்கும் புதிது.

அவர்முன் அமர்ந்தோம்.

‘‘சொல்லுங்க’’

அக்குழுவில் சொல்வதற்காக மட்டுமே பணிக்கப்பட்டவன் நான்.

வாட்ச் மேனிடம் சொன்ன மாதிரியே சொல்லக்கூடாது. இவரிடம் அதை இன்னும் நளினமாக்க வேண்டும். சொற்களுக்கு அழகூட்ட வேண்டும். முடிந்தால் தேன் தடவ வேண்டும். அப்போதுதான் என்னுடைய இரண்டொரு கதைகள் எழுதி செம்மலரில் பிரசுரமாகியிருந்தது.

‘‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று ஒரு அமைப்பிலிருந்து வருகிறோம். அது எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்குமான அமைப்பு. நாங்கள் தெருத்தெருவாய் நாடகம் போடுவோம். கதை எழுதுவோம். கவிதை எழுதுவோம். இப்போது ஒரு இசைக்குழுவை உருவாக்கியிருக்கிறோம். அதன் பெயர் ‘வைகறை’ இவர் தவுல் வாசிக்க, ஆறுமுகம் தபேலா வாசிக்க சுகந்தனும், கோவிந்தனும் பாட்டு பாடுவார்கள்’’

அவர் அபூர்வ பிராணிகளைப் பார்ப்பது போல எங்களைப் பார்த்தார். ஆனால் அக்கண்களில் அலட்சியம் இல்லை. அதில் ஏதோ ஒரு பரவசமிருந்தது. சீட்டின் நுனிக்குத் தன்னுடலை இழுத்துக் கொண்டார். என்னைப் பார்த்துப் பேசினார்.

‘‘இந்த ரெண்டே ரண்டு இன்ஸ்ட்ரூமெண்டஸ்சை வச்சா பாடுவீங்க?’’

‘‘ஆமா சார். அது ஆயிரக்கணக்கான மனிதர்களை மயக்கும், அழ வைக்கும், கைத்தட்ட வைக்கும், பாக்கட்டிலிருக்கும் நூறையும், இருநூறையும் எங்களுக்குக் கொடுக்க வைக்கும்… நான் உணர்வு மேலேறியிருந்தேன்.

‘‘நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?’’

‘‘இந்த தியேட்டர் வாடகைக்கு வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்?’’

‘‘முன்னூரு ரூபா. சவுண்ட் இன்ஜினியர் பேட்டா தனி’’

எங்களுக்கு ஆச்சர்யமாகி விட்டது. வெறும் முன்னூறு ரூபாயா?

‘‘உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்?’’

நான் உள்ளுக்குள் மணக்கணக்கு போட்டேன்.

இதென்ன கேள்வி? ஒரு பாட்டு பாட ஐந்து நிமிஷம். மொத்தம் பத்துப் பாடல்கள். ஐம்பது நிமிஷம். நான் ஒரு அறிமுகஉரை பேச வேண்டும் அது ஐந்து நிமிடம். அப்புறம்… அதான்.

‘‘மொத்தம் ஒரு மணி நேரம் போதும் சார்’’

அவர் தன் இருக்கையின் பின் சாய்ந்து எங்கள் எல்லோரின் அறியாமைக்காகவும் சேர்ந்து ஆயாசப்பட்டு சிரித்தார்.

‘‘சார் இது சினி சாங்ஸ் ரெக்கார்ட் பண்ற தியேட்டர். ஒரு பாட்டுக்குக் குறைந்தது மூணு நாளு நாள் ஆகும்’’

நான் முந்தினேன். இது கைகூடாதோ என்ற பயம் என்னை உந்தியது.

‘‘சார், எங்க பாட்டு அப்படி இல்லை சார். நாங்க தினம், தினம் மக்கள் முன்னால் பாடறவங்க. எங்களுக்கு ஒரு மணிநேரம் போதும்’’

நீங்கள் ‘மூன்றாம் பிறை’ படம் பார்த்திருக்கிறீங்களா?

கடைசி காட்சி. மனப்பிறழ்வு சரியாகி ஸ்ரீதேவி தன் பெற்றோருடன் இரயில் பெட்டியில் உட்கார்ந்திருப்பார். சந்தோஷமான பேச்சும், சிரிப்புமாய் அவர்கள் புறப்படத் துவங்கும் தருணத்தில், ஜன்னலுக்கு வெளியே சத்தம் கேட்டு அவள் திரும்பிப் பார்ப்பாள்.

கமலஹாசன் தன்னை அடையாளப்படுத்த என்னன்னவோ செய்து காண்பிப்பார். அதிலும் உச்சமாக, அவளுக்குப் பிடித்தமான குரங்கு சேஷ்டையை நினைவுபடுத்த வேண்டி அந்த ரயில்வே ப்ளாட்பாரத்தில் குத்துக்காலிட்டு, தலையில் ஒரு அலுமினியத் தட்டேந்திய பாவனையில், ‘ராமா ராமா’ என்று சுற்றி, சுற்றி வருவார். இப்படி கமல் செய்யும் போதெல்லாம் ஸ்ரீதேவி, கையில் ஒரு குச்சியுடன் குதூகலிப்பதும், கமலை, குரங்காக பாவித்து துள்ளி குதிப்பதும் நம் மணக்கண்ணில் வந்து மறையும்.

நான் கமலஹாசனின் மனநிலையிலிருந்தேன். எக்காரணத்தாலும் நிராகரிப்பை எங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒரு கேசட்டில் எங்கள் குழுவின் பாடல்களேறி, தமிழ்நாட்டின் கிராமங்கள் தோறும் ஒலிக்கப் போகும் எதிர் வரும் நாட்கள் எதன் பொருட்டும் இல்லாமல் ஆகிவிடக் கூடாது.

அவர் நிதானமாய்ப் பேசினார்.

‘‘என் பெயர் ராஜகோபால். இந்தியன் பேங்க்ல ரீஜினல் மேனேஜராயிருந்தேன். கலை மேலேயும், இசை மேலேயும் உள்ள ஆர்வத்துல வேலையை ரிசைன் பண்ணிட்டு இந்த ரிக்கார்டிங் தியேட்டரை ஆரம்பிச்சேன்’’

You know, சந்தியா ராஜகோபால், டி.வி.யில நியூஸ் வாசிப்பாங்களே, அவங்க என் வொய்ப்தான். நீங்க யாராவது ‘சீவலப்பேரி பாண்டி’ படம் பார்த்திருக்கீங்களா?’’

எல்லோருமே தலையாட்டினோம்.

‘‘அதுல, ‘கிழக்கு வெளுக்கையிலே’ பாட்டு நான் பாடினதுதான்’’ என ஒரு வரியை ஹம் பண்ணினார்.

நாங்கள் இன்னும் அவரைக் கிட்டத்தில் பார்த்தோம்.

ரெக்கார்ட்டிங் தியேட்டரின் ஓனர், சந்தியா மேடம் இவர் மனைவி, இந்தியன் வங்கியின் ரீஜினல் மேனேஜர், வெளியில் நிற்கும் வழவழப்பான வெளிநாட்டு கார், இதெல்லாம் இல்லை இந்த மனுஷன். எங்களைப் போல் காற்றின் ஏகாந்த வெளிகளில், கிழக்கு வெளுக்கையிலே பாடிக்கொண்டு திரியும் பாடகன் மட்டுந்தான். ‘மழையின் தாளம்’ பாடும் சுகந்தனும், ‘பொண்ணு பொறக்குமா? பாடும் ரெண்டேரிப்பட்டு கோவிந்தனும் அவரின் இசைத் தோழர்கள். இது கலைஞர்களுக்கான சந்திப்பும் பகிர்தலும்.

எங்களைத் தியேட்டருக்கு அனுப்பிவிட்டு, சவுண்ட் இன்ஜினியரை அழைத்து, அந்தக் கண்ணாடி அறையில் அவரோடு சந்தோஷமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார் ராஜகோபால். நான் அவரையே வெளியிலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அக்கண்களில் மேலும் பரவசம் கூடி நின்றது.

நான் சுகந்தனை வெளியில் அழைத்து வந்தேன். நீண்ட நேர ஏ.சி. அறை குளிர் பொறுக்காமல் அவசரமாக அவன் ஒரு பீடியைப் பற்ற வைத்தான்.

‘‘சொல்லு’’

‘‘சுகந்தா இன்னும் 1500 ரூபாதான் இருக்கு. இதுலேயே நாம தியேட்டர் வாடகை. இன்ஜினியர் பேட்டா, மதிய சாப்பாடு, ஊருக்குத் திரும்ப டிக்கெட்டுக்குப் பணம்…’’ என்று நீடித்த என் வார்த்தைகளை மறித்து,

‘‘நான் என்ன பண்ணனும்டா கருப்பா?’’

உற்சாகம் பீறிட்டால் இப்படித்தான் கூப்பிடுவான் சுகந்தன்.

‘‘பத்து பாட்டையும், நீயும் கோவிந்தனும் கடகடன்னு பாடிடணும். கேப்பே விடக்கூடாது’’

எதுவும் பேசாமல் என்னை ஏற இறங்க ஊடுருவிப் பார்த்தான் கையிலிருந்த பீடித்துண்டு  அவன் கடைசி இழுப்புக்கும் கைகொடுத்தது.

நான் ஒரு அறிமுகவுரை நிகழ்த்தினேன். எங்கள் மக்கள் கலைஞர்களை அந்தக் குளிரறையில் இயந்திரங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். அவை வெறும் இயந்திரங்கள் அல்லவென்பதையும் கோடானுகோடி மக்களுக்கு இவர்களின் குரலைக் கொண்டுசெல்லப் போகும் இரட்சகர்கள் என்பதையும் தெளிவாக உணர்த்திருந்தேன்.

என் பேச்சு முடிந்த மறுவிநாடி, சுகந்தன் தன் கம்பீரமான குரலில்,

“மழையின் தாளம் கேட்குது… கேட்குது…

மனிதா… மனிதா… வெளியே வா

என உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்து, தன் சகா தவில் ஏழுமலையைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்தது போல அத்தவிலில் ஏழுமலையின் கைகள் பரபரப்பாக இயங்கி திசையெங்கும் நோயுற்றிருந்த மனிதர்களை மழையில் நனைய அழைத்தது.

முன்னெப்போதுமில்லாத குதூகலம் எங்கள் எல்லோரையும் தொற்றிக் கொண்டது. கண்ணாடி அறையை கவனித்தேன். இருக்கையிலிருந்து எழுந்து நின்று காதுகளில் மாட்டிய ஹெட்போன் வழியே அறையில் நடக்கும் இந்த அற்புதத்திற்குத் தலையசைத்துக் கொண்டிருந்தார் எங்கள் சகக்கலைஞர் ராஜகோபால்.

பாட்டின் வரிகள் முடிந்த அடுத்த நிமிடம் இல்லை, நொடியின் இடைவெளியில் கோவிந்தன் அடுத்த பாட்டைத் துவங்கினான். இது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில்லை. கடிகாரமுட்களின் கண்காணிப்பில்லை. பாடி முடிந்ததும் பெறப் போகும் காசோலையில் நிரப்பப்பட்டிருக்கும் தொகை மீதான கவனமில்லை.  இது கலையின் பிரவாகம்.

இதைக் கருணா ஒழுங்குப்படுத்திக் கொண்டேயிருந்தான். இந்த மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் அவன் எப்போதுமே வேறு ஆளாக இயங்குவான். தூங்குமூஞ்சி மரத்தடியில் காலில் நசுங்கியதே இதுவரையிலான அவனின் கடைசி சிகிரெட்.

பத்தாவது பாட்டின் கடைசிவரை நிறைவடைந்தபோது நாங்கள்  எல்லோரும் அங்கிருந்த பெரிய கடிகாரத்தைப் பார்த்தோம். நேரம் பிற்பகல் 1.30. ஆக இரண்டு மணி நேரத்தில் நாங்கள் பத்து பாடல்களுக்கான ஒலிப்பதிவை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டோம். என் வலது கை எலும்புகள் நொறுங்க சுகந்தனின் கைகள் என்னை இறுக்கியது.

இப்போது நானும் கருணாவும் ராஜகோபால் சார் அறையிலிருந்தோம். தன் வாழ்நாளில் இது ஒரு அதிசயம் எனவும். இந்த Lyrics தமிழின் உச்சம் என்றும், இதை எழுதினவர்கள் ஏன் சினிமாவுக்கு முயலவில்லை என்று ஒரு சாதாரணத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.

நான் தயக்கத்துடன் என் சட்டையிலிருந்து பணமெடுப்பதை அவர் கவனித்து அவசரமாகத் தடுத்தார்.

“எதுவும் வேணாம். சார்…. இப்போது அவர் குரல் குழைந்திருந்தது. அவரே தொடர்ந்தார்.

‘‘பணல்லாம் ஒண்ணுமேயில்லை. இன்ஜினியர் பேட்டா கூட வேணாம். முப்பதாம் தேதி ஒரு ஆளை அனுப்புங்க. ஐநூரு கேசட் ரெடியாயிருக்கும்… ரவி பிளே பண்ணுப்பா… என்று யாரையோ அழைத்துச் சொன்னார். அடுத்த விநாடி அந்த அறையே அதிர்கிற மாதிரி,

“மழையின் தாளம் கேட்குது... கேட்குது...

மனிதா… மனிதா… வெளியே வா’’

சுகந்தனின் குரலும், ஏழுமலையின் தவிலும் சேர்ந்து அதிர பின்னணியில் ராஜகோபால்  சார் எழுந்து நின்று கைகூப்பினார்.

கண்ணாடிக் கதவை திறந்து வெளியே பார்த்தோம். மட்ட மதியானத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. உள்ளேயிருந்து “மனிதா… மனிதா… வெளியே வா என்ற மழையின் அழைப்பிற்கு நனைத்தவாறே வெளியில் வந்தோம். பாடலில் அடுத்த வரி எங்கள் மனநிலையை அப்படியே பிரதிபலித்தது.

‘‘மழையின் ஸ்ருதி  சேருது


மனமே… மனமே… வெளியே வா

Thursday, May 22, 2014

கோணங்கிக்கு பெண் பார்த்த கதைகள்கோணங்கியின் ‘‘கைத்தடிக் கேட்ட நூறு கேள்விகள்’’ என்ற குறுநாவல் கவிஞர் மீரா  தொகுத்த  “சுயம்வரம்” தொகுப்பில் படித்து கரைந்து போன பல விவசாயிகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கக்கூடும். அக்கதை எனக்குத் தாளமுடியாத துக்கத்தை ஆழ்மனதில் விதைத்தது. அதில் வரும் சம்சாரி என் அப்பாதான். ஒவ்வொரு வருடமும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க பயிர் கடன் கட்ட முடியாமல், அதிகாரிகள் என் வீட்டிலிருந்து டி.வி.யையும், பாத்திரங்களையும் தூக்க வரும்போது,

தாரளமா எடுத்துட்டு போங்க சார், என்ன ண்றது, வௌயில, கடன் கட்ட முடியல என நியாயத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து ஒதுங்கி நிற்கும் என் அப்பாவை அக்கதையில் மீண்டும் தரிசித்தேன். க்கதையின் சொற்களில் விஷமேறியிருந்தது. வாசிக்கிற உடல் நீலம்பாவித்தது. விட்டு, விட்டு படித்து முடித்து, கோணங்கியைத் தேட ஆரம்பித்தேன்.

கோவில்பட்டிக்கு அருகில் ஒரு தொடக்க வேளாண்மை வங்கியின் செயலாளராக வேலை பார்க்கிறான் என்ற செய்தி நம்பமுடியாததாயிருந்தது. என்னதான் சுய அனுபவமாகவேயிருந்தாலும், ஒரு அரசு ஊழியனால் இப்படி எப்படி எழுத முடிந்தது? என்ற கேள்வி என்னுள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. என் எதிர்பார்ப்பு பொய்யில்லையென்பது மாதிரி, அக்கதை பிரசுரமான சில நாட்களில் அவன் அந்த வேலையை விட்டுவிட்டதாக தகவல் வந்தது. மனம் ஏனோ நிம்மதியடைந்தது.

சைக்கிள் மிதித்து, கூட இரண்டு ஆட்களை கூட்டிக்கொண்டு, ஒவ்வொரு சம்சாரி வீட்டுக்கும்ப்போய், அவர்களை மிரட்டி, கடன் கட்ட சொல்லி, அல்லது அண்டாகுண்டாவைத் தூக்குவோம் என அச்சுறுத்தி, அவ்வீட்டுப் பெண்களை அவமானப்படுத்தி, என்னப் பொழப்பு இது? ஒரு உன்னதமான கலைஞன் இதிலிருந்து மிகத் துரிதமாக வெளியேறிவிடுவான். கோணங்கி எனும் கலைஞன் இன்னும் முந்திக் கொண்டான்.

அப்புறம் ஊர் சுற்றல்தான். எனக்குத் தெரிந்து தமிழ் நிலப்பரப்பில் அவனளவிற்கு ஒரு எழுத்தாளன் வெறிகொண்டலைந்திருக்க வாய்ப்பில்லை. வெயிலினூடே, கொல்லைமேடுகளில், மழையினூடே மூன்றாந்தர விடுதிகளில், பேச்சுத் துணைக்கு கிடைத்த நாலைந்து ஆரம்பகால வாசகர்களோடு ஒரு வேப்பமரத்தடி நிழலிலென அவன் அலைச்சல் ஆரம்பமானது. அதற்கான துவக்கம், அவசியம், முடிவு இதெல்லாம் முக்கியமில்லை. பல ஆயிரம் சமான்ய மனிதர்களின் மூச்சுக் காற்றை வெகு அருகிலிருந்து சுவாசித்தவன் அவனாய்தான் இருக்கமுடியும். அந்த அனுபவங்களை அவனால் எழுத முடியாது. அதை நேரடி சொற்களாக்கும் வித்தையை அவன் பயிலவில்லை. ஆனால் காத்திரமான தன் புனைவு வரிகளுக்கிடையில் நீங்கள் உணரும் உஷ்ணக்காற்று அம்மனிதர்களின் சுவீகாரம்தான். சுற்றிய நாகத்தின் அடைகாத்தலின் முட்டைகள் அவைகள். அது சொற்களுக்கிடையே மட்டும் சூட்டோடு சூடாக உறைந்திருக்கும். அதை முழுமையாக கண்டடைந்த அவன் வாசகர்கள் நானறிந்து நூறுக்கும் குறைவு. அதை அடைய முயன்று தோற்று வீழ்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகம். அதில் நானும் ஒருவன்.

சாத்தூர் நிலையத்தில் ரயில் இளைப்பாற நிற்கும் சில நிமிட இடைவெளிகளில் தொங்கிய முலைகளுடன் ஓடிவந்து வெள்ளரி பிஞ்சுகள் விற்கும் மதினிமார்களின் துயரத்தை எந்த உருவானவனாலும் எழுதிவிட முடியாது. அது பிறப்பின் ஊற்று. சின்ன வயசில் அண்ணன் தம்பிகளிலிருந்து விலகிப்போய் குளத்தங்கரையில் நின்று கல்வீசி, நீரின் விதவிதமான சுழிப்பை தன் ஸ்நேகிதிக்குக் காட்டி சந்தோஷமடையும் ஒரு மனதிற்குதான் இந்நிமிடங்கள் வசப்படும். அது அவனுக்கு வசப்பட்டது.

இதுவரை யாராலும் புரிந்து கொள்ளமுடியாத மானுட வாழ்வின் புதிர் அவனுக்கு வேறுவிதமாதப் பட்டது. தனக்கு அது முழுமையாய் வசப்படவே ஊர் ஊராய் சுற்றியலைந்தான். அதில் கிடைத்த அனுபவங்களை வாக்கிய ஒழுங்கை, வரிகளை, சொற்களை முன்னுக்குப் பின்னாக மாற்றிப் போட்ட ஒரு மனநிலை பிழன்றவனின் உலகமே கோணங்கியின் பிந்தையக் கதைகள்.எல்லோரையும் போல அவனும் சிறுவயதில் காதலுற்றிருந்த நாட்கள் உண்டு. அவன் பேரன்பைத் தாங்கும் வலு வாய்ந்த பெண்கள் நானறிந்து இல்லை. ஒரு சிறு சொல்லுக்கும், ஒரு வலுவான அசைவுக்கும் நெடுமர வீழ்வென வீழ்ந்துவிடும் கோணங்கியின் சரீர பலஹீனத்துக்கு முன் இன்றுவரை ஒரு பெண்ணுக்கான இடம் வெற்றிடமாகவே உள்ளது.

தான் இழந்த காதலை, பாலைவன மணல், தனக்குள் ரகசியமாய் புதைத்துக் கொள்ளும் தெளிவான நீரைப்போல தனக்குள் தேக்கிக் கொண்டவன் அவன். அதன் ஈரக் கசிவில் துளிர்க்கும் பசுமையை, ஈவிரக்கமின்றி அவனே தீய்த்துக் கொண்டான். பூமியின் மேலல்ல, கீழ்வளர வேண்டியவைகள், அவன் அன்பின் வேர்கள் என்பது அவனுக்குத் தீர்க்கமாகத் தெரிந்திருந்தது.

அஸ்தமனங்களை வெவ்வேறு நிலப்பரப்புகளில் நின்று தரிசித்த கணங்கள் அவனுக்கு வாய்த்திருந்தது. ஒரு நடுநிசியில் ராமச்சந்திராபுரத்துக்கும், வத்திராயிருப்புக்குமிடையே நின்றெரிந்து உதிர்ந்த வேப்பமர கசப்பைப் பருக வேண்டி, அதனருகிலேயே படுத்து தூங்கிய பித்தேறிய மனதை நான் வேறெங்கும் கண்டதில்லை.

கலைத்துப் போட்ட சீட்டுகட்டென சிதறிக் கிடக்கும் அவன் எழுத்து எனக்குக் கைகூடவில்லையெனினும் அவன் கலைஞன்.

நான் ஷைலஜாவைக் காதலிக்க ஆரம்பித்த தினங்கள் வெய்யிலேறியவைகள்தான். அது கைக்கூடி கனிய, கனிய மழைக்காலங்கள் முந்திக் கொண்டது. கரியான்செட்டி ஏரிக் கரைக்கு கீழே அறுத்துமுடித்த நெல்வயலின் மிச்சத்தில் நாங்கள் மூவரும் சுற்றி, சுற்றி நடந்து கொண்டிருந்தோம். அது வரையிலான துயரம், அதுவரையிலான வசந்தம், கோடை, மழை, இரவு, மரணம், ஜனனம் என வாழ்வின் எல்லாமும் எங்கள் மூவருக்குமிடையே சுழன்று, சுழன்று வந்தன. கோணங்கி என்ற கலைஞனை நானும் ஷைலஜாவும் முற்றாக கண்டடைந்தது, அன்றைய மாலைத் துவங்கி கருக்கிருட்டில், அந்த அறுத்து முடித்த வயல் சுற்றலின் போதுதான்.

இழப்பின் துயரம் அவனிடம் உள்ளூர சொட்டு சொட்டாய் சொட்டிக் கொண்டிருந்தது. அதை துடைக்கவே அவனின் இடைவிடாத பயணங்கள். வீட்டின் இருப்பு, லௌகீகம் இவைகள் ஒரு விஷக்காற்றைப் போல வியாபித்து அவனை அங்கிருந்து ஓட வைத்தது. திசையெங்கும் ஓடி பின்னிரவுகளில் ஏதோஒரு பூட்டியக் கதவின் முன்நின்று கதவைத் தட்டுவான்.

நானோ, அப்பாவோ, சில நேரம் அம்மாவோ கதவைத் திறப்போம். வாரி அணைத்துக் கொள்ளத் தோன்றும் ஒரு வளர்ந்த குழந்தையென அவன் வாசலில் நிற்பான். சில நேரங்களில் நனைந்து, சில நேரங்களில் உலர்ந்து, சில நேரங்களில் உறைந்து.

எதுவெனினும் எங்களுக்கு ஒன்றுதான். எங்கள் சிறு கூரைவீட்டில், என்னருகே எப்போதும் அம்மா அவனுக்கென்று ஒரு கிழிந்த பாயைப் போட்டு வைத்திருப்பாள். அருகருகேப் படுத்து இரவெல்லாம் கதையோ, இன்னும் நெருங்கி ரகசியமோ பேசிக் கொண்டிருக்கும் எந்நிமிடமும் அதிலிருந்து அவன் விடுபடுவான். கலவியின் உச்சத்தில் திடீரென விடுபட்டு விலகிக் கொள்ளும் ஒரு ஆணைப்போல.

புதிர். யராலும் விடுவிக்க முடியாத புதிர் கோணங்கி.

பார்த்த வேலையை, ஒரு குறுநாவல் எழுதி ஒழித்தாயிற்று, கல்யாணத்தை மறுத்தாயிற்று. ஆனால் தன் உடலில் இன்னொருத் தோல் போல் போர்த்திக் கொண்ட தனிமையை அவனால் இன்றுவரை உதறிவிட முடிந்ததில்லை. அலைதல், அலைதலென தன் இளமை முழுவதுமே சுற்றியலைந்து அதை எங்காவது விட்டொழிக்க அவன் எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோற்றேப் போனான். தன் முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஒரு பெண் ஸ்நேகம் உள்ளூர அவனுக்குத் தேவைப்பட்டது. லௌகீக பயம் அதை வெளியில் மறுக்க வைத்தது. ஆனாலும் கோணங்கி பெண் பார்த்த கதையும், கோணங்கிக்குப் பெண் பார்த்த கதைகளும் இன்றளவும் சுவாரசியமானவைகள் தான். அவன் புனைவுகளைப் போல புதிர் நிரம்பியவைகள் அல்ல அவைகள். மாறாக எப்போது நினைத்தாலும் இதழோரம் ஒரு புன்னகையை, தனித்திருக்கையில் ஒரு வெடி சிரிப்பை வரவழைப்பவை.

எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி கோணங்கிக்கு ஒரு வகையில் உறவினர். அவனுக்கு ஆசிரியர் மாதிரியான ஸ்தானம் அவருக்கு உண்டு, கல்குதிரைக்கு காசில்லாத நாட்களில் கோணங்கி சுலபமாக தேர்ந்தெடுக்கும் அட்சயப் பாத்திரம் தனுஷ்கோடி ராமசாமிதான்.

ஜே.கே.போல மீசையும், கிருதாவும் வைத்து, சாத்தூரில் தன்னை ஒரு ஜே.கே வாகவே பாவித்து வாழ்ந்த தனுஷ்கோடி ராமசாமி ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து ஹெட்மாஸ்டராக பதவி உயர்வு பெற்றவர். பள்ளி முடிந்து வரும் சாயங்காலங்களில் கோணங்கி அவர் வீட்டில் திடுமெனப் பிரவேசிப்பான். பல நேரங்களில் கூட எஸ்.ராமகிருஷ்ணன்.

இலக்கியம் பேச வந்த இந்த இருவரையும் பார்த்து குதூகலிக்கும் தனுஷ்கோடியை இருவரும் அருகிலிருக்கும் ஆற்றங்கரை மணலுக்கு அழைத்துப் போவார்கள். பெரும்பாலும் உரையாடல் இப்படி ஆரம்பிக்கும்.

‘‘உம்ம ‘‘அன்புள்ள’’ படிச்சோம்யா, கரிச மண்ணுலருந்து இப்படி ஒரு ஈரத்தோட இதுவரை ஒரு கதை வரலை’’

தனுஷ்கோடி ராமசாமியின் உள்ளம் பூரிக்கும். இவர்கள் இருவரும் தன் படைப்பை பாராட்டுகிறார்களா? உள்குத்து இருக்கிறதா என்பதை அவர் அசைபோட ஆரம்பிக்கும்முன்பே, கோணங்கி,

லாங்வேஜ், லாங்வேஜ்ல கொண்னுட்டீரு, புதுமைப்பித்தனெல்லாம் தாண்டிட்டீருஎன அடுத்தடுத்த வாக்கியங்களில் அவரை அசைபோட விடாமல் அண்டைக்கட்டுவான். நீர் தேங்கித் தளும்பும் போது,

அடுத்த கல்குதிரை இஷ்யூ கொண்டு வரணும், பத்து ரூவா செலவாகும், ஒண்ணோ, ரெண்டோ தந்து உங்க பங்கை நிறைவேத்தணும்என்ற கோரிக்கையை உலகில் எவனாலும் நிராகரிக்க முடியாது. அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து, சாப்பாடுப் போட்டு, மனைவிக்குத் தெரியாமல் கையில் அவர் தந்த ஆயிரம் ரூபாய் கதைகள் அடுத்த நாள் இன்னொரு ஊரில் அமர்க்களப்படும்.
பஸ் ஏற வரும்போது வழியில் தேவதச்சன் மாதிரி யாராவது பார்த்து, ‘எங்க கோணங்கிஎனக் கேட்டால், தனுஷ்கோடி ராமசாமி சார் வீட்டு வரைக்கும் என்பதோடு பதில் முடியாது. ஆற்றில் அவரிடம் பகிர்ந்து கொண்டதற்கு முற்றிலும் ஒரு எதிர்கருத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு பஸ் ஏறிவிடுவான். கேள்விப் படுகிற படைப்பாளிக்கு பத்து நாள் தூக்கம் போகும். ஆனால் எல்லாமும் இலக்கியத்துக்காக மட்டுமே. ஒரு சிறு பத்திரிகையை கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற லட்சியத்தின் நிறைவேறலுக்குத் தேவையான பணத்துக்கு மட்டுமே இதெல்லாம். அருகில் வைத்து அணைத்துக் கொள்ளவோ, முற்றிலும் உதறிவிடவோ முடியாத ஆளுமை அவன்.

நிற்காமல் தொடர்ந்த அவன் பயணத்தில் உடன் தொடர்ந்து, இடை நின்ற சக பயணிகள் பலர், எஸ். ராமகிருஷ்ணன், கைலாஷ்சிவன், பாரதி, நான் என இவ்வரிசை நீண்டு கொண்டே போகும்.

தனுஷ்கோடி ராமசாமி ஒரு போதும் கோணங்கியின் மீது கோபம் கொண்டவரில்லை. அவனுக்காக ஒரு பெண் பார்த்தார். பெண் எம்.., பி.எட்., படித்து வாத்திச்சி வேலை பார்த்து விழுப்புரத்துக்கு பக்கத்தில் கண்டமங்கலத்தில் குடியிருந்தவள். பெண் பார்க்கப் போவதற்கு முதல் நாள் இரவு அப்போதைய கல்குதிரை இதழோடு வீட்டிற்கு வந்தான். (மார்க்வெஸ் இதழ்) எங்கள் நிலத்து கயிற்றுக் கட்டிலில் படுத்து, ராமசாமி தனக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிற கதை சொன்னான். லௌகீக வாழ்வின் நுழைவாயில் அவனுக்கு பெரும் வேடிக்கையாக இருந்தது. உள்ளூர அது தேவையாயும் இருந்தது. காலையில் பம்ப்செட் குளியல். குளித்து முடித்து ஈர லூங்கியோடு இரண்டுபேரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தோம்.

எப்போதுமே கோணங்கிக்கும் முருக பூபதிக்கும் என் பீரோவை திறந்து விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தேவையென்றுக் கருதும் எத்தனை சட்டைகள், பேண்ட்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஆசையாசையாய் கோணங்கி எடுத்து அடுக்கும் ஐந்தாறு டி.ஷர்ட்டுகளும் அவன் போகும்போது என் வீட்டு கட்டில் மீதே கிடக்கும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் விசித்திர மனநிலை அவனுக்கு.

கண்டமங்கலத்துக்கு என்னையும் கூப்பிட்டான். நான் உறுதியாக மறுத்து, இதெல்லாம் விளையாட்டில்லை கோணங்கி, வாழ்க்கை. பார்த்து, பிடித்திருந்தால் சொல், ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டு அப்புறம் அவளோடு சேர்ந்து ஊர் சுத்தலாம் என்றதற்கு,

‘‘டே அவ பி.எட்றா,  ஸ்கூலுக்கு போவட்டும், நான் தனியா போய்க்கிறேன்’’ என சொல்லும்போது அவன் கிட்டதட்ட பறக்கும் கம்பளத்தில் பறப்பதை போலிருந்தான். உள்ளுக்குள் ஏதோ தீர்மானம் உறுதிப்பட்டிருக்க வேண்டும்.

பையை வீட்டிலேயே வைத்து விட்டு கையில் ஐந்து பிரதிகள் கல்குதிரையோடு நான் தான் கண்டமங்கலத்திற்கு பஸ் ஏற்றிவிட்டேன். கோணங்கி ஒரு குடும்பஸ்தனாக ஆகப் போகிறான் என்ற சந்தோஷத்தில் என் அம்மா ரெண்டு கோழிகளாக அடித்து குழம்பு வைத்தது. அப்பாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஏனோ அன்றைய மதிய சாப்பாடு தாமதமாகிக் கொண்டேப் போனது. பசி தாள மாட்டாமல் அம்மாவிடம் கத்தியபோது அம்மா,  ‘கொஞ்சம் பொறுடா, கோணங்கி மதிய சாப்பாட்டுக்கே வந்துருவேன்மா, கோழி அடிச்சி கொழம்பு வேணுன்னு கேட்டுச்சி, எப்படியும் வந்துரும்என்றாள் பெரும் அம்மாவின் நம்பிக்கையை அவன் எப்போதும் பொய்யாக்கினதில்லை. சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான். போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல். கையில் அவன் கொண்டு போன கல்குதிரை இதழ்கள் இல்லை.

 ‘கையிலிருந்த இஷ்யூஸ் எங்க?’ என நான் கேட்டதற்கு, என் தோள்களில் செல்லமாய் தட்டி, இர்றா சொல்றன், மொதல்ல சாப்பிடலாம் என சற்றுமுன்வரை பெரும் அலைச்சல் காட்டிய கோழிகளின் முன் சாப்பிட உட்கார்ந்தோம்.

‘‘என்னப்பா எல்லாம் நல்லபடியா கூடி வந்துடுச்சா?’’ இது அப்பா,

என் மூத்த புள்ளக்கு என்னா வாத்தியாரே, மகாராசா மாதிரி,” - இது அம்மா,

என்னதான்டா ஆச்சு?” இது நான்.

எல்லா கேள்விகளும் சோற்றுத்தட்டில் விழுந்து கொண்டேயிருக்க, பதிலுக்கு அதிலிருந்த கோழிகறித் துண்டுகள் அவன் வயிற்றுக்குள் போய்க் கொண்டேயிருந்தன.

சாப்பிட்டு முடித்து, கைத்துடைத்து அப்பாவுக்கு முன்னிருந்த கட்டிலில் உட்கார்ந்து,

‘‘அதெல்லாம் நமக்கு கல்யாணல்லாம் சரிபடாதுப்பா, மொதல்ல அது பொண்ணு இல்ல. பொம்பளை’’

நான் ஆர்வமாகி,  ‘என்னதான் நடந்துச்சிஎன கேட்கஅவங்கவீட்ல ரொம்ப நேரமா என்னை எதிர்பார்த்து தடி, தடியா ஆறேழு ஆளுங்க காத்திருந்தாங்க. என்ன பாத்ததுமே பாதிப் பேருக்கு அதிர்ச்சி. தாங்கிக்கிட்டு அமைதியாயிருந்தாங்க.

பொண்ணு பேரு?”

சிவகாம சுந்தரி எம்.., பி.எட்.,”

நான் சிவகாம சுந்தரியோட தனிமையில பேசனுன்னு யார் மூஞ்சியையும் நேரா பாக்காமலே சொன்னனா,”

 “பேசுங்க பேசுங்க, வாழப் போறவங்க என்று சொல்லி ஒரு ரூமைத் தொறந்து விட்டாங்க

 “என்ன பேசன?”

கோணங்கி  முதல் முதலாய் வெட்கப்பட்டு நான் பார்த்தேன்.

 “வாசிப்பீங்களான்னு கேட்டேன்.

 “ம்

 “என்ன வாசிப்பீங்க?”

 “சங்க இலக்கியம், சீவக சிந்தாமணி, கம்பராமயணம், அப்படியே ஆனந்தவிகடன், குமுதம்

சீவக சிந்தாமணியிலிருந்து நேரா ஆனந்த விகடன்தானா? இடையில புதுமைப்பித்தன், கு.பாரா, மௌனி, நாகராஜன்லாம் தெரியாதான்னு கேட்டா அவங்ககெல்லாம் யாரு?ன்னு தரையைப் பாத்துக்கிட்டே கேட்டுச்சு,

 “நீ என்ன பண்ணே?”

 “கல்குதிரை கொண்டுவர படும் கஷ்டத்தை கண்கலங்கச் சொன்னேன், தாங்கமாட்டாம, அது ஹேண்ட் பேக்கைத் தொறந்து ஐநூறு ரூபா கொடுத்து அஞ்சு இஷ்யூவையும் வாங்கிக்கிச்சு’’

இப்போதும் சிரிக்காமல் சொன்னான்.

ஆக அஞ்சு இஷ்யூவைக் காசுக்கு வித்திட்ட என சிரித்தபோது,   “அதெல்லாம் நமக்கு ஒத்துவராதுடா, சின்னதா, உடம்பு போடாத, என் கூடயே ஓடிவர மாதிரி ஒருத்தி கிடைப்பாடாஎன்றான்.

அவனுக்கு அந்த ஒருத்தி வெகு சீக்கிரமே கிடைத்தாள்.

ஒரு ஊர் சுற்றியின் மனதை இழுத்து நிறுத்த நினைத்த அவள் வேலூரில் இருந்தாள். டீச்சர் ட்ரெய்னிங் முடித்து, கோணங்கியின் கதைகள் வரை படித்திருந்த அப்பெண்ணிற்கு இருபது வயதிருக்கலாம். அவள் பெயர் ஸ்ரீ.

ஒரு கவிதைக்கும் மேல் அவனுடனான அவள் வாழப்போகும் தருணங்கள் அந்த உரைநடைக்காரனால் எனக்கும் ஷைலஜாவுக்கும் பரிமாறப்பட்டது. அல்லது அக்கவிதை கணங்கள் ஒரு மேகக் கூட்டமாய் எங்கள் மேல் கவியத் தொடங்கியது. அதிலிருந்து விடுபடாமலேயே அடுத்த நாள் காலை, ஷைலஜா வீட்டில் வேலூருக்கு ஹால்டிக்கட் வாங்கப்போவதாக பொய் சொல்லிவிட்டு கோணங்கிக்கு பெண் பார்க்க பஸ் ஏறின நாள் ஒரு ஆகஸ்ட் 15. அது சுதந்திர நாள் மட்டுமல்ல அப்பாவின் பிறந்தநாளும் கூட.

அவளை அனுப்பிவிட்டு நானும் கோணங்கியும் நிலத்திற்குப் போனோம். அன்று மாலைவரை அவனிடமிருந்து, எப்போதோ வாசித்து மனதில் இருத்தியிருந்த பாரதி, மாயகோவஸ்கியின் காதல் கவிதைகளாக கசிந்து கொண்டிருந்தன. அக்கவிதைகளெங்கும் அவன் ஸ்ரீஒளிந்திருந்தாள்.

ஒவ்வொரு பத்தாவது நிமிடமும் எங்கள் நிலத்துக்கு வரும் ஒத்தையடி பாதையில் ஒரு ஆட்டோவை எதிர்பார்த்து அவன் தவித்திருந்தான்.

மாலை ஆறு மணி போல ஷைலு, அவ்விதமே ஒரு ஆட்டோவில் வந்திறங்கினாள். கிணற்று மேட்டிலிருந்து கிட்டதட்ட ரெண்டு பேருமே ஓடினோம்.

அவள் முக வாட்டத்திலிருந்து விஷயம் காயென எனக்குப் புரிந்தது. அவள் முகத்தை பார்த்து அறிந்து கொள்ளும் நுட்பமான நிமிடங்களில் அவனில்லை.

‘‘தனியா வா, எங்கிட்ட மட்டும் சொல்லு, இவன்கிட்ட சொல்லாத’’ என ஒரு குழந்தையின் குதூகலத்தில் அவனிருந்தான்.

நான் கிணற்று மேட்டில் தனியே உட்கார்ந்திருக்க அவர்களிவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். அந்நடை திப்பகாடுவரை நீண்டது. அவர்களிருவரும் ஒரு சிறு புள்ளிகளாய் எனக்குத் தெரிய ஆரம்பித்தபோது. அப்புள்ளிகள் என்னை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக் கொண்டே திரும்பின.

என்னை சமீபித்ததும், காத்திருந்த ஆட்டோவில் ஏறின ஷைலஜாவின் கைப்பிடித்து அவள் முகம் பார்த்தேன். அவள் ஏற்கனவே எனக்காக மிச்சம் வைத்திருந்த இரு சொட்டு கண்ணீர் என் விரல்களின் மீது விழுந்தது.

நாங்கள் எல்லோருமே உணர்வு பூர்வமாக இருந்தோம். மௌனத்தோடே பிரிந்தோம். அன்றிரவு வீட்டுத் தரையில் கொட்டிப் பரப்பியிருந்த பச்சை மல்லாட்டை குவியலின்மீது பாய் விரித்து நானும் கோணங்கியும் படுத்திருந்தபோது மெல்ல கேட்டேன்.

 “ஸ்ரீ என்ன சொல்லுச்சாம்?”

 “நீ ஷைலுக்கிட்டக் கேட்டுக்கோஎனத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே அவனைத் தனித்திருக்க வைத்துவிட்டு என் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாவாஜி நகரிலிருந்த ஷைலஜா வீட்டிற்குப் போனேன்.

காலையிலேயே அவள் என்னை எதிர் பார்த்து உட்கார்ந்திருந்தது மாதிரியிருந்தது.

 “என்னாச்சு ஷைலு?”

 “சொல்றேன்”, நாங்களிருவரும் அவள் வீட்டு மொட்டை மாடிக்குப் பின்பக்க படிக்கட்டுகளில் ஏறிப் போனோம். தொட்டு விடும் தூரத்தில் தாமரைக் குளத்தின்  நீரலை மெல்ல கரைகளில் மோதிக் கொண்டிருந்தது, அப்போதைய மனநிலைக்கு ரொம்ப உகந்ததாயிருந்தது.

 “பேசினேன் பவா

        “ம்

 “கோணங்கி அண்ணனை ரொம்பப் பிடிக்கும், எங்க அண்ணாவுக்கு ஃப்ரெண்டு. வீட்டுக்கு வரும்போது அவரு சட்டைல்லாம் கூட தொவச்சு போட்டு இருக்கேன்க்கா”,

‘‘ரொம்ப அலாதியான கலைஞன் ஸ்ரீ அவன்”.

நானும் அதான்க்கா சொல்றேன். அவர தூர இருந்து வேடிக்கை பாக்கலாம். ஆழமா வாசிக்கலாம். கூடல்லாம் வாழ முடியாதுக்கா’’ தெளிவான மிடில் கிளாஸ் பெண் ஸ்ரீ.

எனக்கு தாமரைக் குளத்தின் பச்சைநிற அழுக்குத் தண்ணீரின் அலம்பல் சத்தம் இன்னும் துல்லியமாய் கேட்டது. ஷைலு வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.

நான் எதிர்பார்த்தபடியே அவன் போய்விட்டிருந்தான். இப்போதுதான் அவனைப் பிரிந்த தற்காலிகத் துயர் அப்பாவிடமிருந்தது.

‘‘எங்கப்பா கோணங்கி?’’

‘‘இப்பதான் போறாப்பலே, அடுத்த இஷ்யூ கல்குதிரை தயாரிக்கிற வேல இருக்காம்’’

இதோ இப்போது என் முன்னே கல்குதிரை, இளவேனிற்கால இதழும், முதுவேனிற்கால இதழுமாய் சேர்ந்து கிடக்கிறது.

இனிமேல் கோணங்கி எங்காவது பெண் பார்க்க போவானேயெனில் கையில் கல்குதிரை இதழ்களை எடுத்து செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் இலக்கிய, லௌகீக கடமை.Share It