Wednesday, December 16, 2015

வடிந்த நீரினூடே....

மலையாள எழுத்தாளர் ஷௌக்கத் எங்கள் நிலத்தில் ஒரு வருடம் தங்கியிருந்து எழுதிக் கொண்டிருந்தபோது தினம் தினம் அவரை சந்திப்பதற்காக புதிய, புதிய மனிதர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடனான முதல் சந்திப்பும், கறுப்பு காபியும் தவறாமல் கிடைத்த அதிகாலைகள் அவை.

அப்படி ஒரு நாளில்தான் நான் நஜீப் குட்டிப்புரம் என்ற சராசரிக்கும் சற்று அதிகமான உயரத்தோடும், பொறாமைப்படுத்தும் மஞ்சள் நிறத்தோடும், அளவோடு வெட்டப்பட்ட தாடியோடும் அவரை சந்தித்தேன்.



அவர் கம்ப்யூட்டரில் அனிமேஷன் செய்பவர் என்ற முதல் அறிமுகமே அவர் எனக்கானவர் அல்ல என விலக வைத்தது.

அதற்கு அடுத்த வாரம் அதே குடிலில் நான் சந்தித்த ஒரு ஆண் தேவதை ஜோசஃப் சேட்டன். அவரைப் பற்றிய நினைவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன் எழுதிவிடக்கூடும்.

ஆனால் மகன் வம்சி நஜீப் குட்டிபுரம் என்ற அந்த மனிதனை அவனுக்கு மிக அருகில் வைத்துக் கொண்டிருக்கிறான்.

மூடுபனி போல காலம் சில நண்பர்களையும் நினைவுகளையும் தனக்குள் போர்த்தி வைத்துக் கொள்ளுமே அப்படி இவர்களையும் தனக்குள் பொதிந்து வைத்துக் கொண்டது.




சென்னையிலும், கடலூரிலும் கொட்டித் தீர்த்த பெருமழையின் அலைக்கழிப்பில், செங்கல்ப்பட்டுக்கருகிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பில் நஜீப் என்னை பெயரின்றி எண்ணில் அழைத்த மதியவேளை நான் என் அலுவலகத்தில் இயங்கிக் கொண்டிருந்தேன்.

நான் ஷௌக்கத்தின் நண்பன் பவா, இரண்டுமுறை நாம் சந்தித்திருக்கிறோம். இப்போது செங்கல்பட்டுக்கு அருகில் வெள்ளத்தால் நிலைகுலைந்து அடுத்து என்ன செய்ய? என செயலிழந்த பழங்குடி மனிதர்களிடையே நின்று பேசுகிறேன்.

எதிர்முனையில் நானும் செயலிழந்து மௌனம் காக்கிறேன்.
அவரே தொடர்கிறார்.  “எந்த விசாரணையும், நண்பர்களும்
அமைப்பும், கட்சியுமின்றி தன்னந்தனியாக நானும் என் மகனும் மட்டும் கேரளாவின் மலப்புரத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாவோடு புறப்பட்டு வந்திருக்கிறோம்

நான் மௌனத்தையே நீட்டிக்கிறேன்.

 “அதில் இந்த மனிதர்களுக்கு, நல்ல அரியும் (அரிசியும்) பருப்பு, புளி, மிளகா, எண்ணெய் எல்லாமும் வாங்கித் தந்து இவர்களை சமைக்க வைக்க வேண்டும். நமுத்துப் போன இவர்களின் விறகடுப்புகளை மீண்டும் எரியூட்ட வேண்டும். எனக்கு ஒரு நேர்மையான மளிகைக் கடைக்காரனும், என்னோடு உதவ ஒரு நண்பனும் வேண்டும்

அப்படியான இருவர் உடன் உள்ளுரிலிருந்து நஜீப்புக்கு கிடைத்தார்கள். எங்குமே இப்படியான மனிதர்கள் நிறைந்துதான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை சென்றடைய வேண்டியிருக்கிறது.

பல ஆண்டுகளா அம்மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைந்து பணிபுரிந்து கொண்டிருக்கும் அஞ்சலிதான் நஜீபை அக்கிராமத்தின் தத்தளிப்பை நோக்கி வரவேண்டி தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.

அன்று இரவெல்லாம் அப்பொருள்களை பேக் செய்து, அடுத்த நாள் காலையிலிருந்து அதை அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து, சமைக்கச் சொல்லி ஒரு வாய் சோறு அள்ளி சாப்பிடும் போது எல்லா துக்கமும் ஒன்றாய் சேர்ந்து கண்ணின் வழி முட்டிக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு மேலும் தாங்க முடியாமல் திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்த ஒரு பேருத்தில் தன் மகனோடு ஏறியிருக்கிறார்.

ஒரு ஜன்னலோர இருக்கை இரு இரவுகள் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார இரவு தூக்கத்தையும் சேர்ந்து தூங்க வைத்திருக்கிறது
.
நஜீப் ஒரு பெரிய தோள்பையுடனும், கையில் பத்து பருப்பு வடையோடும் இரவு ஏழு மணிக்கு எங்கள் வீட்டிற்குள் நுழைந்து, முதல் வார்த்தையில் இப்பருப்புவடை ஆறிவிடுவதற்குள் நீங்கள் சாப்பிட்டுவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். எப்போதுமே விசித்திரங்களை நோக்கி திறந்திருப்பதுதான் எங்கள் வீட்டின் கிழக்கு பார்த்த வாசல்.

அன்றிரவு துயரம் கவிந்த முகத்துடன் நஜீப் கடலூர் மக்களுக்கான நிவாரண பணிகளை ஒருங்கிணைந்தார். கேரளாவின் சகல பகுதிகளிலும் பரவியிருக்கும் தன் நண்பர்களை தொலைபேசியில் அழைத்தவாறேயிருந்தார்.




தான் ஒரு ட்ராவல்ஸ் பேருந்தில் ஏறிவிட்டதாக அவர் நண்பரும் திருவனந்தபுரம் Human Care அமைப்பின் தலைவருமான ஃபரூக் தெரிவித்தபோது நஜீப் திருப்தியுற்றதைக் கவனித்தேன்.

நான் செங்கல்பட்டு நிவாரண உதவிகளை கேட்பதில் ஆர்வமாயிருந்தேன். நஜீப் அது முடிந்தது. இனி நடக்கப் போவதுதான் முக்கியம் என்பதில் தன் முழு கவனத்தையும், சக்தியையும் குவித்துக் கொண்டார்.

இரவு பதினோரு மணிக்கு, அரிசி 10 கிலோ, பருப்பு 1 கிலோ என நீண்ட எங்கள் பட்டியல் ஒரு குடும்பத்திற்கு 570/- ரூபாய் பெருமானமுள்ள மிக அத்தியாவசியப் பொருட்கள் என நிறைவடைந்தது.

தூக்கத்திற்கு கெஞ்சிய கண்களோடு நஜீப் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று,

‘‘பவாண்ணா, நாலுமணி நேரம் நிம்மதியாய் தூங்கணுமே’’ என கேட்டார்.

பச்சை மூங்கில்களால் தடுக்கப்பட்ட எங்கள் மொட்டைமாடி படுக்கையறையில் அவரும், மகன் நாசிமும் படுத்துறங்கினார்கள்.

படுக்கும் முன் நஜீப் சொன்னார்,

‘‘எந்த சூழலிலும் படுக்கவும், எந்த உணவையும் சாப்பிடவும், பட்டினிக் கிடக்கவும் என் மகனை பழக்கியிருக்கிறேன் பவாண்ணா’’ பாதி தூக்கத்தில் அவன் சிரித்துக் கொண்டான்.

அடுத்த நாள் ஏழுமணிக்கு ஃபரூக் கதர்வேட்டி, சட்டையுடன் எங்களூர் மளிகைக் கடைக்காரர் மாதிரியான அமைப்பில் வீட்டிற்குள் வந்தார். அவரை நான் கைப்பிடித்து எங்கள் சமையலறையும், சாப்பாட்டறையும் சங்கமிக்கும் இடத்திற்கு அழைத்து போய் உட்கார வைத்தேன்.

காத்திருந்தது போல ஷைலஜா அவருக்கு ஒரு கப் சூடான டீ தந்தாள். பெரும் சிரிப்பினூடே அதை ஏற்றுக் கொண்டு,

‘‘இந்த மாதிரி ஒரு பெரிய லோட்டாவில் ஒண்ணரை மடங்கு வேண்டும் மோளே என எங்கள் மேசையிலிருந்த ஒரு எவர் சில்வர் சொம்பைக் காண்பித்தார்.

எல்லாமும் சில மணித்துளிகள்தான். அவர்கள் கடலூரை நோக்கி தயாராகி நின்றார்கள். அவர்களுடன் ஜெர்மனியிலிருந்து வந்து பல ஆண்டுகளாக இங்கே தங்கியிருக்கும் எண்பது வயதான ஸ்நேகஜோதி அம்மாவும், அவர்களின் சமீபத்திய தத்துபிள்ளை ஹனிஃபாவும் இணைந்து கொள்ள, எங்கள் சார்பில் நண்பர் பலராமனை உடன் அனுப்பினோம்.





முதலில் நூறு பேக்கேஜ் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்யுங்கள் என ஃபரூக் தன் பையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாயை எடுத்து ஷைலுவிடம் கொடுத்தார்.

எங்கள் வீட்டிற்கு மளிகை வாங்கும் கடையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் நானும் ஷைலஜாவும் இருந்தோம்.

பத்து நிமிடத்தில் எங்கள் எதிரிலேயே முதல் பேக்கேஜ் தயாரானது. இதன் நிறைவேறலை உறுதிசெய்தது.

கொஞ்சமும் தாமதிக்காமல் எங்கள் ஊரில் புகழ்பெற்ற பூம்புகார் துணியகத்திற்குப் போய் அதன் பங்குதாரர் இக்பாலிடம் இதைச் சொல்லி, நூறு கட்டைபைகளைக் கோரினோம். சில நிமிடங்களில் அதன் பணியாளர் ஒருவர் என் வண்டியில் நூறு பைகளைக் கொண்டுவந்து கட்டினார்.

இப்போது பகல் ஒரு மணி, பலராமனும், நஜீபும் மாறி மாறி பேசினார்கள்.

கடலூரிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் பிரிந்து பதினைந்து கிலோ மீட்டரை குண்டும் குழியுமான சாலையைக் கடந்தால் தீர்த்தனகிரி, கருவேப்பம்பாடி இந்த இரு கிராமங்களில்தான் நம் பணி.

அடுத்த அடுத்த மணி நேரங்களில் நூறு பேக்கேஜ் என்ற எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருந்து முந்நூறு, நாநூற்று ஐம்பது என அது வளர்ந்து ஐநூற்றி ஐம்பது என நிறைந்த போது இரவு பத்து மணி.

மளிகைக் கடைக்காரர் தயங்கினார். விடிவதற்குள் முடியுமா? எனத் தெரியவில்லை.

ஒரு பேரிடர் காலத்தில் எப்படி பணியாற்றுவது என வெறும் சொற்களால் மட்டுமே வாழும் என்னைப் போல் ஒருவன் உற்சாகப் படுத்தினேன்.





காலை ஏழு மணிக்கு ஒரு 407 வண்டியோடு அவர் கடைக்குப் போனபோது பண்டில்கள் மீதே லுங்கியைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தார்.

மகன் வம்சியும் மகள் மானசியும், இதைவிட எங்களுக்கு எங்கள் பள்ளியும், கல்வியும் எதைக் கற்றுக் கொடுத்துவிடப் போகிறதென வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.

ஜெயஸ்ரீயின் மகன் ஹரி, எங்கள் வீட்டில் வளரும் ஜெயஆர்த்தீஸ்வரன், சமீபத்தில் தன் அப்பாவை பறிகொடுத்த மகள் மோனி எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் அனைவரையும் தன் ஒரு கையால் தாங்கிப் பிடிக்கும் நிலத்து ராஜாக்கண்ணு அண்ணன்.

வண்டி புறப்படும் போது காலை பத்தரை. மனம் ஏனோ நெகிழ்வடைந்து நாங்கள் யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. பழைய வேட்டிகளை தலையில் சுற்றி வம்சி, ஹரி, ஜெய் எல்லாம் வண்டியின் பின்னால் தொற்றிக் கொண்டு வந்தது மட்டும் சோர்ந்த என் மனதை தட்டி கொடுத்தது.

ண்ருட்டிக்கு முன்பே எங்கள் வாகனம் காவல்துறையால் வரவேற்கப்பட்டு நாங்கள் அங்கிருந்த அரசு ஊழிய தன்னார்வலர்கள் முன் மிக மரியாதையாக உட்கார வைக்கப்பட்டோம்.

அவர்கள் சிறுபூங்கொத்தையும், சாக்லேட்டுகளையும் எங்களுக்கு அள்ளி தந்து விபரங்களை சேகரித்தார்கள்.

உதவிகளை வழங்க தேர்ந்தெடுத்த கிராமம் எங்கள் தேர்வா? அல்லது அவர்கள் சொல்லட்டுமா என கேட்டார்கள்.

நாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

மிக்க நன்றி. எங்கள் காவலர் ஒருவரை உடன் துணைக்கு அனுப்புகிறோம் என எதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்த போலீஸ்காரர்களை பார்க்க,

ஐ எம் ராகும்என எங்களுடன் வரப்போகும் அந்த போலீஸ் எங்களிடம் கைக் குலுக்கினார்.

கடலூரிலிருந்து சிதம்பரம் போகும் வழியில் OT-க்கருகில் எங்கள் வண்டி பஞ்சரானது.

நான் பதறிப் போய் நஜீபையும், ஃபரூக்கையும் பார்த்தேன். அவர்கள் எந்த பதட்டமும் இன்றி,




‘‘நம்மை அக்கிராமங்கள் இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வரச் சொல்கின்றன’’ என சிரித்தார்கள். பலராமன் மட்டும்தான் பெரும் பதட்டத்துடன் அங்கு இங்கும் சுற்றியலைந்தார். ஒரு களப்பணியாளனின் நடை அது.

இரவு ஏழு மணிக்கு மக்கள் குழுமியிருந்த ஊருக்கு மத்தியில் எங்கள் வண்டி நின்றது. ஒருவரும் எங்கள் வண்டியை முந்தவில்லை. எட்டிப் பார்க்கவில்லை. முகங்களில் ஆர்வமில்லை.

‘‘எல்லாமே போய்டுச்சி, நீ மட்டும் என்ன தந்து எத்தனை நாள் என்னை காப்பாத்துவே?’’ என்ற கேள்வி அவர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் இருந்ததாக நானே நினைத்தேன்.

ஆனால் அதெல்லாம் இல்லை. அவர்களை கட்டுப்பாடுடனும் ஊரின் கௌவரத்தை பேணிக் காக்கவும் அப்படி இருக்கச் சொல்லி அக்கிராமத்தின் படித்த இளைஞர்கள் வழி நடத்தியிருந்தார்கள்.

டி.டி.பி. செய்யப்பட்ட குடும்பப் பட்டியல் வாசிக்கப்பட்டது. பேட்டரியில் இயங்கும் இரண்டு ட்யூப் லைட்டும், ஒரு மைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நான் ஐந்து நிமிடம் பேசினேன். இது உதவியல்ல. நீங்கள் யாரும் எங்களுக்கு நன்றி சொல்லவோ என்னால் முடிக்க முடியவில்லை வார்த்தையை மறித்து இருபது கிலோ எடையுள்ள முதல் பையை பரூக் ஒரு வயதான பெண்ணின் கைக்கு இடமாற்றினார்.  இருவர் கண்களும்  மிக அருகில் சந்தித்து கவிழ்ந்து கொண்டன.  இதுவே போதுமென  எனக்குப்பட்டது

எண்பது வயதான ஸ்நேகஜோதி அம்மாள் தூக்க முடியாமல் தூக்கி  அதை அம்மக்களுக்கு  கொடுத்து அவர்களை  அனைத்துத் தழுவி  நெற்றில் முத்தமிட்டார்

என் வார்த்தையை துடைத்தெறிந்து பலர் அவர் கால்களில் விழுந்ததை என் வார்த்தையை  காப்பாற்ற வேண்டி நான்  முடிந்த மட்டும்  தடுத்துப்பார்த்தேன் 

நஜீபும், ஃபரூக்கும், தங்கள் திட்டம் கண்ணெக்கெதிரே  செயல்வடிவம் பெறும் திருப்தியில்  வெளிச்சம்  விழாத இருட்டில் நின்று நடப்பதை   கவனித்தார்கள்

அந்த ஊரில்  தன் குடிசையை  முற்றிலும்  இழந்து தன் நான்கு குழந்தைகளையும், தனித்தனியே உறவினர் வீடுகளில்  தூங்க வைக்கும்  கயல்விழி என்ற கணவனை  இழந்த ஒரு  நடுத்தர வயது பெண்ணை நஜீப் எனக்கு எங்கள் வண்டியின் முன்புறம் நின்று  அறிமுகப்படுத்தினார்

அவருக்கு இரண்டு லட்சத்தில் ஒரு கான்க்ரீட் வீடு கட்ட முடியும் பவாண்ணே அதற்காக  அந்த இரவிலேயே பல நண்பர்களை அவர் தன் தொலைபேசி  வழியே  தொட்டுக் கொண்டிருந்தார்

அப்பெண்  என்னை ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை. தலைக்கவிழ்ந்து  நின்று கொண்டிருந்த  அவர் முழங்கால் அளவிற்கான  ஒரு ஆண் பிள்ளை அவள் கால்களை கட்டிக்கொண்டு  நின்றது

இதற்கு மேல் துல்லியமாய் யாராலும் திட்டமிடமுடியாது என்கிற அளவிற்கு வண்டியிலிருந்த  பைகள் மக்களின் வழியே அவர்களின்  சிதிலமடைந்த வீடுகளுக்குப் போய்க் கொண்டிருந்தன

திடீரென ஏதோ ஒரு நினைவால்  உந்தப்பட்டு வம்சியைத் தேடினேன்.  அவன் அக்கூட்டத்தில் இல்லை.  நொடியில் பெரும் பீதியடைந்த ஷைலுவின்  முகத்தைப் பார்த்து நான் கலவரடைந்தேன். வெளிக் காட்டிக் கொள்ளாமல் அந்த மைக்கை கையில்வாங்கிவம்சி, வம்சி’  என பெருங்குரலெடுத்து கத்தினேன்

எல்லா ஜனங்களும் திரும்பி பார்த்து  தங்கள் கண்களால் அவனைத் தேடினார்கள்

எதுவுமே  நடக்காதது மாதிரி காலில் கட்டுப்போட்ட  காயத்தோடு ஒரு வயதான அம்மாவை கையில் பற்றியபடி  அவன் ஒரு குடிசை இருட்டிலிருந்து  வருவதைப் பார்த்தேன்

சட்டென நாங்கள் எல்லோரும்  விட்ட இடத்திலிருந்துத் துவங்கினோம்

ஷைலு அவன் முகத்தை தன் கைகாளல் தடவிக் கொடுத்தாள்

இப்படி ஒரு நிகழ்வில் நாங்கள் தவறவிட்ட  மகன் சிபி எங்கள்  வாழ்நாள் முழுவதும்  எங்களுக்கு  தந்துவிட்டு  போன  பெரும்வலி அது.

வம்சி என்னை இன்னும் அடர் இருட்டுக்கு கூட்டிப்போய்,  “ அப்பா, இந்த அம்மாவுக்கு  அவங்க வீட்டுக்காரர் இல்லை. வீடு இடிஞ்சிடிச்சு, ஆனா ரேஷன்கார்டு இல்ல பாவம்பாஎன முடிப்பதற்குள்  நான் வண்டியிலிருந்து திருட்டுத்தனமாக ஒரு பையை எடுத்து அந்த தாயின்  கையில் கொடுத்தேன்

தந்தை மகனுக்காற்றும் உதவி

வம்சிஅந்த அம்மாவின் கைப்பிடித்து கூட்டிக்கொண்டே பாட்டி இங்க நாய் இருக்குமா?  என கேட்கிறான். என் உசுரக் குடுத்தாச்சும் உன்னைப் காப்பாத்துவேன் சாமி”  என அவனுக்கு  பதில் சொல்லிக் கொண்டே அவர்களிருவரும் இருட்டில் மறைவதைக் கவனித்தேன்

அவனும், நஜீப் மகன் நாசீமுமாக  ஒவ்வொரு வீடாக  நுழைந்து  அதனை அப்படியே காட்சி வடிவமாக அவர்கள் கேமராவுக்குள்  கொண்டு வந்திருக்கிறார்கள்.

அவர்கள்  வயதில் இப்படி  ஒரு துயரம் தோய்ந்த அனுபவத்தை  அவர்கள் அடைந்ததில்லை.  அவர்கள்  இருவருமே நீண்ட நேரம் பேச்சற்றிருந்தார்கள்.

முன்னூற்று ஐம்பது பைகள் தீர்ந்து போனது.  குடும்ப அட்டையுடன் வந்தவர்கள் முதியோர் உதவிக் தொகை  பெறுபவர்கள் என பைகள் சென்றடையாதவர்களுக்கு மீதியைக் கொடுத்துவிடலாம் என நான் சொன்னபோது பலராமன் மிகுந்த ஆக்ரோஷத்தோடு என் வார்த்தையைத் தள்ளிவிட்டார்

பக்கத்து கிராமத்துல பல மணி நேரமா மக்கள் காத்துக்கிட்டு இருக்காங்கண்ணா  மைக் இருக்குன்னு நீ பாட்டுக்கு எதையும் சொல்லாத  என நொடியில்  வண்டியில்  ஏறி  எங்களை  அடுத்த கிராமத்திற்கு  அழைத்துப் போனார்.

கருவேப்பம்பாடி என்ற அந்த சிறு  கிராமத்தில் மொத்தம் 215 வீடுகள். எல்லாமுமே இம்மழையில் பகுதியாகவும் முற்றிலுமாகவும் பாதிப்படைந்தவைகள். தவறவிடாமல் எல்லோருக்கும் பை தந்தோம். குடும்ப அட்டை இல்லாதவர்கள் மொத்தமே பத்து பேர். அவர்களுக்கும் தரச் சொன்னோம்.

அக்கிராமத்து இருட்டிலும், ஒரு வயதான அம்மா என் முதுகைச் சுரண்டி,

‘‘எனக்கு கார்டு இல்ல கண்ணு, ரெண்டு நாள் பட்டினி’’ என்ற வார்த்தையை முடிப்பதற்குள் வண்டியிலிருந்து ஒரு பையை திருட்டுத்தனமாய் எடுத்து அவர்கள் மடியில் வைத்து, ‘‘திரும்பி பாக்காத போய்டு ஆயா’’ என ரகசிய குரலில் சொன்னதை உண்மையென நம்பி, அந்த ஆயா வீடு போய் சேரும்வரை திரும்ப பார்க்கவேயில்லை. கையில் பையை கெட்டியாய் பிடித்திருந்தது.



மகள் மானசியும், மோனியும் லாரி மீது நின்று ஒவ்வொரு பையாய் எடுத்து விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.

திரும்பி வரும்போது எங்கள் வண்டியில் இன்னும் எழுபது பைகள் இருந்தன. விடுபட்டவர்கள் மட்டும் தீர்த்தனகிரி சாலையில் எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவர்களுக்கும் பகிர்ந்தோம்.

திரும்புகையில் ஒரு பெரும் மௌனம் நிலவியது. பிள்ளைகள் மட்டும் புறப்படும் போது இருந்த உற்சாகத்தின் இருமடங்கை கூட்டியிருந்தார்கள். ராகுல் என்ற அந்த மாசுபடாத புது போலீஸ் அவர்களோடு லாரியில் நின்றபடி செல்பி எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

கடலூர் பஸ்நிலையத்திற்கு எதிரே பாதி ஷெட்டர்  மூடப்பட்ட  ஒரு ஹோட்டலில் தோசையையும்,  பரோட்டவையும்  அநியாயத்திற்கு  தின்று தின்று தீர்த்தோம்

நஜீப் சட்டென வம்சியை தன்னோடு  ணைத்து  அந்த நடுஇரவில்  பல முத்தங்களை தந்தார்

பரூக் என் தொலைபேசி எண்ணை தனக்குள் சேர்த்துக் கொண்டார். ஷைலஜா எந்நேரமும்  அழுதுவிடுவாள் போலொரு  முகத்தோடு நின்றாள்

நீண்ட நேரம் அப்படியே  சிலைகளென  நின்றோம்.

எதுவும் பேசாமல் வண்டியை நிறைத்துக்கொண்டோம். உடனே புறப்பட்டுவிட்டால் அழுகையை  தள்ளிப் போடலாம், அதெல்லாம் முடியவில்லை

எங்கள் தெரு முக்கிற்கு வண்டித் திரும்புகையில்  அதிகால நாலரை. 

‘‘அப்பா அப்படியே இந்த வண்டியிலேயே மலையை ஒரு சுத்து சுத்தலாமா?’’

‘‘ம்’’

இப்போதுதான் ஆற்றில்  குளித்து முடித்த ஒரு பெருயானையைப்போல மலை மேற்கு நோக்கி படுத்திருந்தது.

இந்த அதிகாலையில் அதைப் பார்க்கிற நிதானத்தோடு  அதற்கு முன் எப்போதும் பார்த்ததில்லை.