Tuesday, August 30, 2011

தொடர் - 3




இப்படி தமிழ்நாட்டின் பெரும் நிலப்பரப்பு பயிரிடப்படாமல் கிடக்கும்போது கிராமத்து மனிதர்கள் டீக்கடைகளிலும் தெரு முனைகளிலும் கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து வெட்டிக் கதைகள் பேசிக் கொண்டிருப்பது தனக்கு சம்மதமில்லை என தன் உரத்தக் குரலால் அவ்விவாதத்தை ஆரம்பித்துவிட்டு என்னை ஏறெடுத்தார்.

சோம்பேறிகளல்ல எம் மக்கள் எனவும்,அப்படி வைத்திருக்க அரசே அவர்களைத் தொடர்ந்து நிர்பந்திக்கிறது எனவும், எங்கள் நிலத்தடி நீர் தோண்டத்தோண்ட கிண்டல்பண்ணி கீழே போய்க்கொண்டிருக்கும் இதற்கான காரணங்களை நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இல்லை, இல்லை என்னால் உங்களோடு உடன்பட முடியாது’’ என வார்த்தையை இடைமறிக்கிறார்.

நீங்கள் உடன்படவேண்டாம். ஆனால் இது என் கருத்து, இதைச் சொல்ல என்னை அனுமதியுங்கள் என நான் அவரைப் பார்த்தபோது அவர் சிரித்துக் கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

நான் இந்திய சினிமாவின் மெகா ஸ்டார் மம்முட்டியிடம் இவ்வுரையாடலை நிகழ்த்திக் கொண்டிருந்தேன் என்பதெல்லாம் மறைந்து, இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள இரண்டு பேரின் ஆத்மார்த்தமான உரையாடல் அதுவென எங்கள் இருவருக்குமே புரிந்திருந்தது. அதற்கான எளிய பரிசளிப்பே இக்கைப்புதைவு. அதன்பிறகு எங்கள் சந்திப்புகளுக்கும், உரையாடல்களுக்கும் வழிவிட்டு எங்கள் மனக்கதவுகள் திறந்தே கிடந்தன.

ஒரு படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலையில் முப்பது நாற்பது நாட்கள் தங்கியிருந்தபோது,பெரும்பாலான கார் பயணங்களில் நான் அவருடனிருந்தேன். கார் ஓட்டிக்கொண்டே, இலக்கியம்,கலை, ஓவியம், உலகசினிமா, விவசாயம், அரசியல், மார்க்சிஸ்ட் அரசு, பஷீர், தகழி, எம்.டி.வி என அவர் நிகழ்த்திய உரையாடல்கள் பெரும்பாலும் எதிர்வினைகளால் எதிர்கொள்ளப் பட்டு உரத்து, தடித்து, மெளனமாகி எங்காவது கார் நிறுத்தப்பட்டு, என் பிடிவாதமான கருத்துக்களுக்காக நடுத்தெருவில் நான் இறக்கி விடப்பட்டுவிடுவேனோ என பயந்தேன்.ஆனால் அப்படி நிகழாதது மட்டுமல்ல, மம்முட்டி என்ற அக்கலைஞன் என்மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதை ஒவ்வொரு வாரமும் அவர் எனக்காக தன் வீட்டிலிருந்து கொண்டுவந்த மீன் குழம்பின் புது ருசி எனக்கு தந்தது.

நான் அப்போது வாசித்துக் கொண்டிருந்தவைகளை அவரிடம் தினம் தினம் பகிர்ந்து கொள்வதென்பது போய், அவரிடம் சொல்வதற்காகவே படிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் கேட்பது மாதிரி, இலக்கியம் கேட்கும் எந்தவொரு வாசகனின் அலாதி மௌனமும், சொல்லிக் கொண்டிருக்கும் ஆத்மாவின் அடியாழத்தில் துழாவி, இன்னும் ஏதாவது மிச்சமிருக்கிறதா எனத் தேடும்.அப்படித்தான் தேடியது அவரின் வேட்கை.



இப்படியான நட்புகள் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் பெரும்பாலும் முடிந்து போகும். காரில் ஏறி அவர்கள் காட்டும் கை அசைவு மறையும் வரை பொய்க் கண்ணீரோடு நின்றுக் கொண்டிருக்கும் ஒரு ரசிகனுக்கும், நடிகனுக்குமானதல்ல எங்கள் நட்பு என்பதை, சென்னைக்குப் போன இரு மாதங்களுக்குள் என்னை தன் வீட்டிற்கு அழைத்ததிலிருந்து புரிந்தது.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் அவ்வீட்டை வீடென்றா சொல்வது? அவ்வீட்டு முற்றத்தில் கால் வைத்த மறு நிமிடமே, இது வீட்டைத்தாண்டிய ஏதோ ஒரு சொல்லால் கட்டப்பட்டிருக்கிறது என உணர்ந்தேன். கேரளாவின் பாரம்பரிய முறையில் சீமை ஓடுகளுக்குள் புதைந்திருந்த அவ்வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் ஒரு கருநாகத்தின் நெளியும் உடலை ஒத்திருந்தது.

கோடை மழையில் நனைந்த ஒரு குழந்தையின் உற்சாகத்தோடு ஒவ்வொரு அறையாய் என்னை அழைத்துப் போய் காண்பித்தார். அழகான நூலக அறையும், ஹோம் தியேட்டரும் அது வரையிலும் நான் வேறெங்கும் பார்க்காதவைகள். கேரளாவிலிருந்து ஏலத்தில் எடுத்து வரப்பட்டு, மரத்தாலேயே இழைக்கப்பட்டு வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அழகுப் படுத்தப்பட்டிருந்ததை நான் கண்களால் குடித்துக் கொண்டிருந்ததை, அவர் ஒரு நொடியில் உணர்ந்து கொண்டு, வீடுன்றது வெறும் சாப்பிட்டு தூங்குற இடம் மட்டும் இல்ல பவா, அதற்கும் மேலே... நான் சினிமாவை ஒரு வேலைக்கு போவது மாதிரியேதான் வைத்திருக்கிறேன். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் ஒரு அரசு ஊழியனைப் போலவே தான் நானும். பார்ட்டி, டிரிங்ஸ், டேன்ஸ் இப்படியெல்லாம் எதுவுமில்லை. வாசிப்புக்கப்புறம் கார் டிரைவிங். எவ்வளவு தூரமானாலும் நானே கார் ஓட்ட வேண்டும். வேகத்தின் மீது அப்படி ஒரு அலாதியான ப்ரியம் உண்டெனக்கு...’’

அந்த வேகத்திற்கு அவர் ஒரு முறை கொடுத்த அல்லது வாங்கிய விலை எனக்கு நினைவுக்கு வந்தது. நள்ளிரவு கோழிக்கோட்டிலிருந்து மஞ்சேரி நோக்கிய தேசிய நெடுஞ் சாலையில் கார் 100 ஐத்தாண்டி பறக்கிறது. அவர்தான் ஓட்டுகிறார். சாலையின் இருபக்கங்களிலும் ஒளிரும் விளக்குகள் சில மின்மினிப்பூச்சிகளைப் போல் கடக்கிறது. வாகனத்தின் வேகம் மட்டுமல்ல வாழ்வின் வேகமும் ஓரிடத்தில் நின்று தான் விடுகிறது அல்லது விபத்துக்குள்ளாகிறது. அவரே எதிர்பாராமல் ஒரு வயதான கிழவன் சாலையின் குறுக்கே வந்து இவர் வண்டியின் முன் விழுந்து விடுகிறார். பதறிப் போய் பிரேக் அடித்து, இறங்கிப் போய் தூக்கினால் அடி எதுவுமின்றி மெல்ல எழுந்து சாலையின் ஓரத்தை பார்க்கிறது பெரியவரின் கண்கள். ஒரு பழந்துணிமூட்டை மாதிரி ஒரு பெண் படுத்து கிடப்பதும், அவள் வலியில் முனகுவதும் அந்த அகாலத்தில் துல்லியமாய் கேட்கிறது.

சூழலை ஒரு நொடியில் கணிக்கிறது அக்கலைஞனின் மனம். அப்பெண்ணை தன் காரின் பின்னிருக்கையில் ஏற்றிக் கொள்கிறார். அவள் தலை சாய்ந்து கொள்ள அப்பெரியவரின் மடி.

மஞ்சேரி அரசு ஆஸ்பத்திரி சில மைல் தூரத்திலேயே சமீபிக்கிறது. நுழைவாயிலை வியாபித்திருக்கிற ஒரு வேப்பமரத்தடியில் வண்டியை நிறுத்தி விட்டு அப்பெரியவரோடு சேர்ந்து அப்பெண்ணை சுமந்து அவசர சிகிச்சை பகுதியை அடைகிறார். அரசு ஆஸ்பத்திரியின் அந்த மங்கிய வெளிச்சம் மம்முட்டியின் பிரபலத்தை மறைத்து விட்டது. யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

ஒரு சின்ன திருப்தி முகத்தில் மின்ன அப்பெரியவர் வெளியே வருகிறார். அப்போதுதான் அவரை மனதால் நெருங்குகிறார். அழுக்கடைந்த வேட்டியைத் துழாவி எதையோ எடுக்கிறார். சட்டென இவர் கைப்பிடித்து கசங்கிய இரண்டு ரூபாய் நோட்டைக் கையில் திணிக்கிறார் பெரியவர்.

உன் பேரு என்னப்பா?”

'மம்முட்டி'.

அப்படியா, சரி இத வச்சுக்கோ.”

பெயரைக் கேட்டபிறகும் தன்னை அடையாளம் தெரியாத அந்த முதியவர் தந்த பணத்தை இன்னும் பத்திரப்படுத்தி வைத்துள்ளாராம். ஆனால் அது தன் வேகத்துக்கு கிடைத்த விலையா? அல்லது அப்பெண்ணைச் சுமந்து வந்ததற்கான கூலியா என்பது மட்டும்தான் புரியவில்லை என்கிறார். எளிய மனிதர்களின் பேரன்பு என்றைக்கு நமக்கெல்லாம் புரிந்திருக்கிறது!

பெரும்பாலும் பொது நிகழ்வுகளில் பங்கெடுப்பதில்லை என்கிற அவர் முடிவை நட்பின் அடர்த்தி தளர்த்தும். அப்படி ஒரு முறை இயக்குனர் தங்கர்பச்சானின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்தார். நானும் அவ்விழாவில் ஏதோ ஒரு மூலையில் இருந்ததை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஹைக்கூ கவிதை மாதிரியான சிறு உறையாற்றினார். நான் நண்பர்களற்றவன். சினிமா, வாசிப்பு, வீடு இது தவிர வேறெதிலும் மனம் குவிய மறுக்கிறது. தமிழ்நாட்டில் என் மனதுக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் எனக்குண்டு. அவர் இங்கில்லை. அவரும் இவரைப்போல திருவண்ணாமலையில் இருக்கும் ஒரு எழுத்தாளர்தான். பெயர் பவா செல்லதுரை....”

நான் கண்கள் பனிக்க அம்மனிதனின் நட்பு கரங்களை பற்றிக் கொள்ள தூரத்திலிருந்தே முயற்சித்தேன்.



1996 என்பது என் ஞாபகக் கரையில் ஒதுங்கும் வருடம்.

எப்போதும் போல் திருவண்ணாமலையில் இரண்டு நாள் இலக்கிய கருத்தரங்கம். முருகபூபதியின் நவீன நாடகமும். ஒரு படப்பிடிப்பிற்காக இங்கு வந்து தங்கியிருந்த மம்முட்டி என்னை அவர் அறைக்கு அழைத்து, தான் இன்று மாலை நிகழ இருக்கும் இலக்கிய கருத்தரங்கிற்கும், தொடர்ந்து நடக்கவிருக்கும் நாடகத்திற்கும் பார்வையாளனாகப் பங்கெடுக்க விரும்புவதாகவும், ஒரே ஒரு நிபந்தனை, என்னை பேச சொல்லக் கூடாது, அப்பதான் நான் வருவேன் என்றும் சொல்கிறார்.

நான் எந்த பதட்டமுமின்றி நீங்களே விரும்பினாலும் பேச முடியாது சார்'' என்றேன்.

அதிர்வின் உச்சத்திற்குப் போன அந்த மெகா ஸ்டார் ஆச்சரியத்துக்குள்ளாகிறார்.

ஏன்.. ஏன்... ஏன்...?”

குறைந்தபட்சம் நான் எங்க செயற்குழுவில் அனுமதி வாங்கணும் சார், அதுக்கு இப்ப நேரமில்லை...”

மிகுந்த சந்தோஷத்தோடு என்னோடு புறப்பட்டு நிகழ்ச்சி நடந்த நகராட்சிப் பெண்கள் பள்ளிக்கு வந்தார். அரங்கில் எஸ்.ராமகிருஷ்ணன் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென மம்முட்டியைப் பார்த்த வாசகர்கள் சலசலப்படைந்தததும் ராமகிருஷ்ணன் தன் உரையை நிறுத்தி விட்டு ''இவரின் இருப்பு என் உரையை சிதைக்கிறது. திருவண்ணாமலை இலக்கிய வாசகர்கள் பார்ப்பவர்கள் அல்ல, கேட்பவர்கள் என்பதால்தான் இத்தனை தூரம் பயணித்து நானும் கோணங்கியும் வந்திருக்கிறோம். நீங்கள் பார்ப்பவர்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பேச முடியாது என்று சொல்லி பார்வையாளர்களில் ஒருவராய்ப் போய் உட்கார்ந்துவிட்டார்.

மௌனம் மரணத்தை மாதிரி அந்த அரங்கை வியாபித்துக் கொண்டது. அதன் பிறகு ஒரு மணி நேரம் ராமகிருஷ்ணன் தன் அறுபட்ட உரையைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து நிகழ்ந்த முருகபூபதியின் சரித்திரத்தின் அதீத மீயுசியம் நாடகம் பார்க்க உட்கார்ந்தோம். இடையில் ஒரு சிகெரெட் அணைய அடர்த்தியான மர இருட்டு மம்முட்டிக்குத் தேவைப்பட்டது.நாடகம் பிரமிப்பைத் தந்தாலும், அதன் இறுகிய மொழி அவரை அந்நியப்படுத்தியது.

இக்குழுவோடு நான் தனியே உரையாட வேண்டும் பவா

அப்பள்ளியின் ஓர் வகுப்பறையின் 60 வாட்ஸ் மஞ்சள் பல்ப் அவ்வுரையாடலுக்கு போதுமானதாய் இருந்தது.

''இந்த நாடகத்தை ரொம்ப வித்தியாசமானதாய் உணர்கிறேன். இந்த கோரியாகிராப்பி நான் எங்கேயும் காணாதது. ஆனால் உங்கள் மொழி ரொம்ப கடினமானதாய் இருக்கிறது. அது எனக்கே புரியலை'' மிதமாக ஆனால் அழுத்தமாக தன் உரையாடலை துவக்குகிறார்.

உங்களுக்கேன்னா? நீங்க என்ன அவ்ளோ பெரியா ஆளா சார்?”

ஒரு இளம் நடிகன் துவக்கக்கால அறிவுஜீவி திமிரோடு வார்த்தைகளால் முந்துகிறான்.

அவருக்கு முகம் சிவக்கிறது.

கண்டிப்பா, கண்டிப்பா உன்னைவிட நான் பெரிய ஆள்தான் தம்பி, இன்னைக்கு தியேட்டர்ல உலகத்தின் எந்த நாட்டுல என்ன நடக்குதுன்னு எனக்குத் தெரியும். எத்தனை வேலைக்கு நடுவுலேயும் தினம் தினம் படிக்கிறேன். தியேட்டர்ல, சினிமாவுல, ஆர்க்கிடெக்டில என்ன நடக்குதுன்னு ஒவ்வொரு நாளும் கவனிக்கிறேன். நடிகன்னா, கேமரா முன்னாடி வெறும் வசனம் பேசிட்டு போற பொம்மை நானில்லை தம்பி

அக்குரலின் உக்கிரம் அக்குழுவை உறையவைக்கிறது. புழுக்கம் நிரம்பிய அந்த அறையில் மிகுந்த தோழமையோடும் வாஞ்சையோடும் தன் கல்லூரி கால நாடக அனுபவங்களை, ஒரு ஆவணிமாத ஈர நிலத்தில் விதைக்கப்படும் விவசாயின் விதைநெல் மாதிரி விதைத்தார்.

தொடர்ந்து மழை பொழிவில் நனைந்த கடந்த வருட டிசம்பரில், 'காழ்ச்சப்பாடு' என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்த புகழ்பெற்றிருந்த மம்முட்டியின் வாழ்வனுபவங்களை என் மனைவி ஷைலஜா தமிழாக்கி, முதல் வாசகனாக கையெழுத்துப் பிரதியில் படித்த பாக்கியம் எனக்கு வாய்ந்தது. நான் அதனோடு வாழ்ந்து திரிந்தேன். அச்சுமுடிந்து கையில் கிடைத்த முதல் பிரதியோடு அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். என் உற்சாகத்திற்கு சற்றும் குறைவின்றி அவரும் குதூகலித்தார். இந்திய சினிமாவே தன் கிரீடத்தில் வைத்துக் கொண்டாடும் மம்முட்டி என்ற அத்திரைக்கலைஞனின் மனம் தன் எழுத்தின் பொருட்டு பட்ட பெருமிதமும் குதூகலமும் அது.

நான் இப்போ பாண்டிச்சேரியில ஒரு ஷீட்டீங்ல இருக்கேன் பவா, நேற்றிரவு உன் ஊர் வழியாத்தான் வந்தேன். காரை நிறுத்தி உன்னைக் கூப்பிட நெனைச்சி டைம்பாத்தா நைட் இரண்டு மணி வேண்டான்னு வந்துட்டேன். இன்னிக்கு சாயந்தரம் பொறப்பட்டு வரமுடியுமா பவா?

கண்டிப்பா வர்றேன் சார்.

அன்று மாலையே கையில் 'மூன்றாம் பிறை' யோடு படிப்பிடிப்பு நடந்த வளாகத்தை அடைந்தேன் சில நண்பர்களுடன்.

அப்புத்தகத்தின் மீது பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் கொண்டிருந்த அவர் கண்களை தரிசித்தோம். கையில் வாங்கி ஒவ்வொரு பக்கமாக புரட்டிவிட்டு,

ஐ ஆம் இல்லட்ரேட் என்று புத்தகத்தை என்னிடமே தந்து, “தமிழ் பேசத்தெரியும், படிக்கத் தெரியாது என்றார்.


படப்பிடிப்பு நின்று மொத்தக் குழுவும் எங்களை சூழ்ந்து கொண்டது. அப்படத்தின் இயக்குனர் என்னை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தார். எந்த பதட்டமும் இன்றி...

பவா இதில சில பாகங்களை நீயே எனக்காக படிக்க முடியுமாஎன்றார்.

நான் வாசிக்க வாசிக்க அக்குழு அப்பிரதியின் உண்மையிலும் உக்கிரத்திலும் கரைகிறது. அவர் தன்னால் எழுதப்பட்ட தன் எழுத்தின் வேறோரு மொழியின் பொருட்டே மிகுந்த கர்வமடைகிறார்.

மூன்று முழு பகுதிகளின் வாசிப்பிற்குப் பிறகு என்னைப் பார்த்து கேட்கிறார்,

இப்புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் நான் தானே பவா வில்லன், அழுக்கானவன், இரக்கமற்றவன், கர்வம்பிடித்தவன், அற்பன் எல்லாமும்...”

ஆமாம் சார்

ஆனால் சினிமாவில் மட்டும் நான் உன்னதமானவன், உயர்ந்தவன், மேன்மையானவன்,... எத்தனை முரண்பாடுகள் கவனித்தீர்களா?”

தன் வாழ்வை உண்மைக்கு மிக அருகில் கொண்டுபோக முயலும் ஒரு கலைஞனுக்கு, வெகு தொலைவில் நான் நிற்பதாக நினைத்த கணமது.

Friday, August 19, 2011

தொடர் - 2


''நீங்களே கூப்பிடுங்க'' என்றார் எடிட்டர் லெனின்.

கொஞ்சம் நடுக்கத்துடன் நான் டெலிபோன் எண்களை அழுத்தி, எதிர்முனையின் 'யார்'? என்ற கம்பீரமான குரலுக்கு 'ஜே.கே. இருக்காரா?' என்றேன் உள்ளடங்கிய குரலாய்.

''அப்படி எவனும் இங்க இல்ல''... என்ற உஷ்ணமேறிய வார்த்தைகளோடு எங்கள் உரையாடல் அறுந்து போனது.

''சார் அப்படி எவனும் இங்க இல்லன்னு கத்தறாறு'' என்றேன் லெனினைப் பார்த்து,

அவர் கொஞ்சமும் பதட்டப்படாமல், ''ஒண்ணுமில்ல பவா, அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அவரை ஜே.கே. ன்னு கூப்பிடுவாங்க. நீங்க புதுசு இல்ல அதான். ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போய், நேரா கூப்பிடுங்க''.

அடுத்த அரை மணி நேரத்தில் நானும், நண்பர் எஸ்.ஆரும், ஜெயகாந்தன் வீட்டு கேட்டை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தோம்.

வெற்றுடம்போடு ஒரு ஊஞ்சலில் உட்கார்ந்து, யாருடடேனா பேசிக் கொண்டிருந்தார்.

''இந்த ஊஞ்சல்ல இருந்து மட்டும்தான் பேசுவேன், லைட்டிங் மாத்தறேன், அதைப் பண்றேன், இதப் பண்றேன்னு என்னை அலைக்கழிக்க கூடாது. அதிகபட்சம் ஒரு மணி நேரம். எழுந்து போயிடுவேன். ''

எதிர்முனையில் நின்று கொண்டிருந்த தொலைக்காட்சி நிருபர் ஒரு மக்கு மாணவனைப் போல இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

சட்டென என்பக்கம் திரும்பி,

'சொல்லுங்க' என்றார்.

''சார் நான் பவாசெல்லதுரை, திருவண்ணாமலை. மாதவராஜோட friend'' என்று தொடர்ந்த என் வார்த்தையை மறித்து,

''உங்களைத்தெரியும் சொல்லுங்க'' என்றவாறு உட்கார இடம் காட்டினார்.

நான் உட்காராமலேயே, ''இவர் என் நண்பர் எஸ்.ஆர். பாண்டிச்சேரி. இந்த ஆகஸ்ட் 15 க்கு உங்களோட 'ஊருக்கு நூறுபேர்' படத்தை பாண்டிச்சேரில போடப்போறோம்..... எடிட்டர் லெனின் வர்றார். நீங்களும் வந்தா....

''எப்போ?''

''ஆகஸ்ட் 15, சாயங்காலம்''

''எங்க?''

''பாண்டிச்சேரி, அல்லயன்ஸ் பிரான்சிஸ்ல.''

''வர்றேன்.''

எங்கள் மௌனம் பார்த்து, ''பாண்டிச்சேரின்னதால வர்றேன்'' என்ற வெடித்த சிரிப்புக்குள்ளிருந்து வந்த வார்த்தைக்கு திக் பிரமை பிடித்து நின்றிருந்த அந்த தொலைக்காட்சி நிருபர் உட்பட எல்லோருமே சிரித்தோம்.

இப்படித்தான் ஜெயகாந்தன் என்ற அந்த கம்பீரமான எழுத்தாளன் எனக்கு அறிமுகமானார்.

பாண்டிச்சேரியில் படம் பார்த்து முடிந்தவுடன், மேடையில் போடப்பட்டிருந்த மூன்று நாற்காலிகளைப் பார்த்துக் கொண்டே மேடை ஏறினார். எடிட்டர் லெனின், ஜெ.கே., இன்னொரு நாற்காலி ஜெ.கே.வின் நெருங்கிய நண்பரும், அப்போதைய பாண்டிச்சேரி சபாநாயகருமான கண்ணனுக்கு. மேடையில் நின்று ஒரு நாற்காலியை எடுக்கச் சொல்கிறார். கண்ணனைப்பார்த்து, பார்வையாளர்கள் மத்தியில் இருந்த ஒரு இருக்கையைக் காட்டுகிறார். கண்ணன் எவ்வித தயக்கமும் இன்றி அதை நோக்கி போகிறார். நான் ஒரு எழுத்தாளனின் கம்பீரத்தால் என் இருக்கையில் தலை நிமிர்ந்து உட்காருகிறேன்.

அன்று பின்னிரவில் நீடித்த என் பயணத்தின்போது மனம் ஜெயகாந்தனையே நினைத்துக் கொண்டிருந்தது. விடுபட்டிருந்த அவரின் பல படைப்புகளை தொடர்ச்சியாக படிக்க ஆரம்பித்தேன்.

அசோகமித்திரன், சுந்தரராமசாமி, ஜி. நாகராஜன் போன்ற படைப்பாளிகளின் படைப்புகள் போல் என்னை அவைகள் ஆகர்ஷிக்கவில்லை. படைப்பு கைக்கூடும் தருணத்தில் எல்லாம் ஜெயகாந்தன் உள்நுழைந்து உபதேசம் பண்ணுவது பிடிக்கவில்லை. ''சார் please கொஞ்சம் தள்ளிக்கோங்க'' என்று சொல்லவேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படைப்புகளில் அவர் ஏற்படுத்திய தர்கங்கள் என் நிம்மதியை குலைத்தன. அதுவரை நான் சரியென நம்பிக் கொண்டிருந்த எல்லாவற்றையும் கலைத்துபோட்டு கேள்வி எழுப்பின. ஒரு மாயப்பிசாசு என் குரல்வளையை நான் மூர்ச்சையாகிற வரை நெறித்தது. நான் அதனிடமிருந்து தப்பிக்க அதை சிருஷ்டித்தவனை தொலைபேசியில் அழைத்தேன்.

அவ்வுரையாடலே என்னையும் ஜெ.கே.வையும் தோழமையில் நனைத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு கொஞ்சி, விளையாடி, சண்டை போட்டு....

ஓ..... அது எத்தனை அற்புதமான காலம்?

''நீங்கள் திருவண்ணாமலைக்கு வரவேண்டும் ஜெ.கே.''

''எப்போன்னாலும்....''

பாரம்பரியம்மிக்க டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட வாசகர்கள் கூடியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக சப்பணம் போட்டு தரையில் உட்காருகிறார். சம்பிரதாயங்களற்ற அம்மேடையின் மௌனத்தை அவரே உடைக்கிறார். மதிப்பீடு, அதிகாரம், பணம், செல்வாக்கு, புகழ், வாழ்வு எல்லாவற்றின் மீதும் நாம் அதுவரைக் கொண்டிருந்த போதை, வெறி, எல்லாம் அக்குரலின் கம்பீரத்தில், அதில் இருந்த நிஜத்தின் தீ ஜூவாலையில் பொசுங்கியதைப் பார்த்தேன். எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என என் நெஞ்சைத் தடவிக் கொண்டேன். கூட்டத்தின் வெப்பம் அக்கலைஞனை மேலும் ஆவேசமாக்குகிறது. சிறுவயதிலேயே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் அப்பாவின் பயமுறுத்தல்களுக்காக கோவிலுக்குப் போனதாக ஞாபகம். என்றைக்கும் கடவுளிடம் வேண்டிக் கொண்டதில்லை. அப்படி வேண்டிக் கொண்டது நிகழ்ந்திருந்தால் ''என் அப்பன் எப்ப சாவான்?'' என்ற ஒன்றை வேண்டிக் கொண்டிருந்திருப்பேன். திரும்பி அடிக்க முடியாதவனின் மனநிலைப் போல துயரமானது வேறெது? எனக்கும், அம்மாவுக்கும் தொடர்ந்து விழுந்த அடிகளின் பதிலடிகள் எங்கள் இருவரின் மனதுக்குள்ளேயே மரித்துப்போனது. 'அப்பா' என்ற ஸ்தானத்தின் மீது சமூகம் ஏற்றியிருந்த பிம்பம் எங்கள் கோபத்தை உறையச்செய்தது. ஆகவே நாங்கள் கடவுளிடம் வேண்டியிருக்கக்கூடும்...’ எனத் தொடர்ந்த அந்த ஆவேச உரை, ‘பணம் சம்பாதிக்க எதுவும் செய்கிறான், பைனான்ஸ் நடத்துகிறான், வட்டிக்கு விடுகிறான் என்ன கொடுமை? இவன் கவிதையும் எழுதுகிறான்!’ உண்மையின் அனலில் கூட்டம் கொஞ்சம் தள்ளி உட்காருகிறது. ‘என்னை எல்லோரும் திமிர்பிடித்தவன் என்கிறார்கள், அப்படி அல்ல அது. முதுகு வளைத்து, குனிந்து, தவழ்ந்து நடக்கும் சமூகத்தில் நான் நிமிர்ந்து நடக்கிறேன். அப்படி நிமிர்ந்து நடப்பவன் திமிர் பிடித்தவன் என்றால் ஆம் நான் திமிர் பிடித்தவன் தான்’ என்ற அந்தக் குரலின் கம்பீரம் வாழ்நாள் முழுக்க என்னை நிமிர்ந்து நடக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

முற்றம் முடிந்த அந்த வெற்றுமைதானத்தில் அமர்ந்து கையில் புகையும் ஒரு சிகெரெட்டோடு மௌனத்தை மட்டுமே குடிக்கிறார். அதற்கு முன் எந்த எழுத்தாளனிடமிருந்தும் இந்த ஆவேசத்தை நான் அடைந்ததில்லை. அடுத்த நாள் விடியும் வரை நீடித்த அன்றைய சபை உரையாடல் யாராவது ஒருவரால் சரியாக பதிவு செய்யப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அப்படைப்பிற்கு நோபல் கிடைத்திருக்கும்.

மற்றுமொரு முறை திருவண்ணாமலை எஸ்.கே.பி. கல்லூரியும் சாகித்ய அகாடெமியும் இணைந்து நடத்திய 3 நாள் கருத்தரங்கம். தொடக்க உரை ஜெ.கேயுடையது. இலக்கியம், கலை, மக்கள், மனித மதிப்பீடு அரசியல், என சுழன்றடித்த பேச்சு, மதகலவரங்கள் பற்றி பேச பேச நெருப்பென ஜொலித்து, ''ஜாதி, மத இனக் கலவரங்களில் மாறி மாறி மக்கள் கொல்லப்படுவதை விட பூகம்பம், நிலநடுக்கம், கடல் சீற்றத்தால் கூட்டம் கூட்டமாக எம்மக்கள் செத்தொழிவதில் எனக்கு சம்மதமே’’ என்ற வரிகள் இன்றும் என்னை பொசுக்கிக் கொண்டிருக்கின்றன.

அவர் எழுத்தைவிட பேச்சும், கட்டுரைகளைவிட அவரையும் பிடித்திருந்தது. அக்காலங்களில் தொடர்ந்து எங்களுடனிருந்தார். என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவின் கல்லூரி பட்டமளிப்பிற்கு கே.எஸ்.சுப்ரமணியத்தை அழைத்திருந்தோம். அவரோடு ஜெ.கே.வும் சும்மா வந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் அறைகளை சாத்தனூர் அணையில் போட்டிருந்தோம். மூன்று நான்கு நாட்கள் நீடித்த அத்தங்கலில் நாங்கள் அடைந்த பரவசங்கள், வாழ்வில் வேறெப்போதும் கிடைக்காதவைகள்.

நள்ளிரவு 1மணி சாத்தனூர் காடுகளுக்கிடையேயான ஒரு ஒற்றையடி பாதை. கையோடு கொண்டுபோயிருந்த ஒரு ஒற்றை நாற்காலியில் ஜெ.கே. பத்திருபது பேர் நாங்கள் மண் தரையில். சுற்றிலும் மரங்களும், நீரும், ஏதோ சில காட்டுப் பூச்சிகளின் சத்தமும், வெகுத்தொலைவில் கம்பீரமாய் ஒளிர்ந்த நிலவும். கைகளில் தவழ்ந்த மதுக்கோப்பைகள் தாறுமாறாய் காலியாகிக் கொண்டிருந்தன.

என் நண்பர் கருணா, ''ஜெ.கே. இன்று ஏப்ரல் 21. மாவீரன் பகத்சிங் நினைவு நாள். இந்த அகாலத்தில் நீங்கள் பகத்சிங்கை பற்றி பேசவேண்டும்.''

முகத்தில் இருகைகளும் புதைய உட்கார்ந்திருக்கிறார். அவ்வப்போது தனக்கு நேர் எதிரே ஒளிரும் நிலாவை மட்டும் பார்க்கிறார். நாங்கள் மங்கலாகவேணும் அவருக்கு தெரியாமல் ஏதோ ஒரு விஸ்வரூபம் அவரை மறைத்ததாகவே அக்கணத்தை நாங்கள் உணர்ந்தோம்.

தன் நாற்காலியை விட்டு எழுந்து,

''பகத்சிங்... பஞ்சாபில் பிறந்த அம்மாவீரன்….’’ என ஆரம்பித்த ஆரம்பம் மட்டுமே எனக்கு இப்போது நினைவிருக்கிறது. 1.50க்கு மூச்சிறைக்க பத்து பேருக்கு மட்டுமேயான அவ்வுரையை முடித்து உட்காருகிறார். யாரும் யாரோடும் பேசிக் கொள்ளாமல் ஒரு செயற்கை தடுப்பணையால் வியாபித்திருந்த அக்காட்டின் விஸ்தீரணத்தை நடந்து கடந்தோம்.

அடுத்தநாள் மதிய உணவிற்கு என் வீட்டிற்கு வந்திருந்தார். தனக்கு என்னென்ன வேண்டுமென ஷைலஜாவுக்கு தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

கேப்பை களியும் தலைக்கறிக்குழம்பும், கூட கொஞ்சம் பண்ணைக்கீரையும், முருங்கை இலை போட்ட கேழ்வரகு அடை என்று நீண்ட அந்த உணவுப்பட்டியல் என் குழந்தைகளுக்கே புதுசு.

இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த அந்த மதிய உணவின் நேரத்தில் உணவைப் பற்றி நானறியாத பல புதிய தகவல்களை சொல்லிக்கொண்டேயிருந்தார். ''கீழே போகப்போகத்தான் நமக்கு நல்ல ருசியான உணவு சாத்தியம். நட்சத்திர ஹோட்டல்களில் சக்கைகளே உணவாக உண்ணக்கிடைக்கும்.

என் அப்பா தீவிர சைவம். கடலூரில் தினம் ரண்டனாவை மாலை டிபனுக்காக எங்களுக்குத் தருவார். ஆரியபவன் தோசைக்கு மட்டுமேயானது அக்காசு. கூடவே என் அக்காவேறு துணைக்கு. வழியில் அவளை கன்வின்ஸ் செய்துவிடுவேன். இருவரும் ரோட்டோர ஒரு தோசைக்கடைக்காய் ஒதுங்கி நிற்போம். அப்போதுதான் சுடச்சுட வார்த்த தோசைகளோடு, அந்த மண் சட்டியிலிருந்து அகப்பையில் மொண்டு மொண்டு ஊற்றின மீன்குழம்பு வாசமும் ருசியும் இன்றளவும் உலகின் எந்த நாட்டிலும் எனக்கு கிடைக்காதவைகள்.

ஜனசக்தி ஆபீசில் எனக்கு கிடைத்த கம்யூனிஸ்டு சைவ உணவை, எங்கள் அலுவலகம் பெறுக்க வந்தவனிடம் ரகசியமாய் தந்துவிட்டு அவன் வீட்டு களியும் கருவாட்டுக் கொழம்பையும் பின் பக்க வாசல் வழியே வாங்கித்தின்ன தேகம் இது. அடித்தள மக்கள் மட்டுமே ருசியை இன்றளவும் தங்கள் உணவுகளில் காப்பாற்றி வைத்திருக்கிறார்கள்.''

அதன்பின் அவர் எதற்காகவேனும் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, கலைஞரோடு சமரசமாகி,......................... .

ஒரு படைப்பாளியாய் விஸ்வரூபமெடுத்து, கம்பீரமாய் எழுந்து நின்று பகத்சிங்கைப்பற்றி ஒரு அகாலத்தில் வீர உரையாற்றிய அந்த ஜெயகாந்தன் மட்டுமே என்னுள் என்றென்றும் நிறைந்திருக்க மிச்ச நினைவுகளை காலம் கருணையற்று அழித்துவிடட்டும்.

Wednesday, August 3, 2011

தொடர் - 1



எந்த புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்த செடி நினைவில் வைத்திருக்கும்.

கலைஞர்களும், படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் குவிந்து, சென்னை பெரியார் திடலில் கருத்து சுதந்திரம் வேண்டி உணர்வுக் குவியாகத் திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி கம்பீரமாக பாலுமகேந்திரா என்ற அக்கலைஞன் மேடையேறுகிறார். மௌனம் மேலும் நுட்பமாகிறது. வெளிர்நீல ஜீன்சும், வெள்ளை சட்டையும், தன் உடலில் ஒன்றாகிப் போன தொப்பியோடும் யாருடைய அனுமதிக்கும் காத்திரமால் மைக் முன்னால் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

''என் கேமராவை என் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்க்கவிடாமல் அடைத்துகொண்டிருக்கிறது.''

இதோ இந்த புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறது. ஒரு அரசை எதிர்த்து கம்பீரமாய் ஒலித்த ஒரு கலைஞனின் குரல் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளி இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் பிறகான நாட்களில் எங்கள் நட்பு கண்ணி இறுக்கமானது. அவரையும், அவர் படைப்புகளையும் நெருக்கமாக்கி கொண்டது மனது.

நேற்று வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இதுவரை பார்க்ககிடைக்காத 'யாத்ரா' பார்க்க ஆரம்பிக்கிறோம். மம்முட்டியும், சோபனாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆயும் தண்டனை முடிந்து வெளியே வரும் உண்ணிக்கிருஷ்ணனுக்கு (மம்முட்டி) நம்பிக்கையின் ஏதோ ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கிறது. துளசியின் (சோபனா) மலை கிராமத்தை நோக்கி செல்லும் ஒரு டூரிஸ்ட் வேனில் பயணிக்கிறான். பயணங்கள் எப்போதும் பழைய ஞாபகங்களை கோருகின்றன. உன்னியின் கடந்த கால துயரம் அந்த சகப்பயணிகளை துக்கப்படுத்தி கண்ணீரில் நனைய வைக்கிறது. ஒரு குழந்தை தன் தேவனிடம் அவனின் காதலுக்காக இறைஞ்சு மன்றாடுகிறது.

''தான் விடுதலையாகி வரும் போது, நாம் எப்போதும் சந்திக்கும் அந்தக் கோவிலின் முன் நீ ஒரு ஒற்றை தீபத்தை ஏற்றி வைத்திருந்தால் இன்றும் எனக்காகவே நீ... என இறங்கிக் கொள்கிறேன். ஒரு வேளை தீபமற்ற கோவிலை என் வண்டி கடக்கையில் என் பயணம் தொடரும் துளசி'' அவன் எழுதிய கடிதங்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை வரிசைப்படுத்துகிறான்.

இருள் கவிந்துவிட்ட மாலை அது.

இதோ இந்த திருப்பம்தான் துளசியின் ஊர். ஊரின் முகப்பில் கிருஷ்ணன் கோவில். மௌனம், எல்லோர்க் கண்களும் அந்த ஒற்றை தீப ஒளியை தரிசிக்க நீள்கிறது. அவர்களது பார்வை கோவில் முன் மட்டுமல்ல, ஊர், வயல்வெளிகள், காடு மலை எல்லா இடங்களும் ஏற்றப்பட்ட தீப ஒளியில் ஒளிர்ந்து நிறைந்திருக்கிறது.

ஒரு மகத்தான கலை மனதுக்கு மட்டுமே இப்படைப்பின் உச்சம் சாத்தியம். பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கலை ஆளுமைக்கு இப்படத்தின் முடிவே சாட்சியம். yellow ribben என்ற ஹங்கேரியக் கவிதையே இப்படத்திற்கான உந்துதல் என்கிறார்.

ஒரு கவிதையை மூன்று மணி நேர உன்னத சினிமாவாக செதுக்கத் தெரிந்த கைகள் அவருடையது.

என் மனைவி ஷைலஜாவை தன் மகளாக மனதளவில் ஸ்வீகரம் எடுத்துக் கொண்டவர். தன் சந்தோஷம், துயரம், தனிமை , வெறுமை இப்பொழுதுகளை அப்படியே எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர். பல நேரங்களில் அவைகள் தொலைபேசி வழியாகவும், சிலநேரங்களில் நேரடியான வருகையின் மூலமாகவும் அவ்வுணர்வுகளை நாங்கள் ஸ்வீகரித்துள்ளோம்.

ஒரு காதலியின் மடியில் திருட்டுத்தனமாய் மரத்தடியில் படுத்துக் கொள்ளும் அவருடனான என் திருவண்ணாமலை நாட்கள். யாருமற்று நானும் அவரும் மட்டுமே எங்களுக்கு எங்களுக்கென்று அமைத்துக் கொண்ட உரையாடல்கள் சுவரசியமானதும், பெருமிதமானதும் யாருக்கும் வாய்க்காததுமானவைகள்.

ஒரு தொலைபேசி செய்தியினூடே வந்திறங்கிய இரண்டாண்டுகளுக்கு முந்தைய மழைத்தூறல் மிக்க மாலையை இன்றும் ஈரமாகவே வைத்திருக்கிறேன்.


அவர் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த நாள் மாலை வரச்சொன்னார். மலையின் முழு வடிவமும் தெரியும் அந்த 102-ம் அறையின் பால்கனி அவருக்கு பிடித்தமான இடம். எதிரெதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலியில் மௌனம் காத்து ஒரு சொல்லின் ஆரம்பம் வேண்டி தவமிருக்கிறோம். ஆவி பறக்கும் green tea ஆறிக் கொண்டிருக்கிறது. 'சொல்' எத்தனை மதிப்புமிக்கது, கிடைப்பதற்கறியதுமென நான் உணர்ந்த கணம் அது.

நான் அடுத்தபடம் பண்ணப்போறேன் பவா. அந்தக் கதைக்கான பகிர்தல் இந்த மாலை. ஒரு பையனுக்கும் அவன் சித்திக்கும் உடல்ரீதியான பகிர்தலே இப்படம். கதை சொல்கிறார். இலங்கையில் கழிந்த தன் பால்யத்தில் கரைகிறார். பனைமர மறைவுகளில் நின்று தான் பார்த்த காட்சிகளை அடுக்கிறார். தன் ஆஸ்தான ரோல்மாடல் ஒருவரின் கள்ளத்தனமான ஸ்நேகிதியைப் பற்றி சொல்லி சிரிக்கிறார். சினிமாவும், நிஜமும், பால்யமும் கலந்த கலவைகளாளானது அந்த இரண்டு மணி நேரம்.

நான் முற்றிலும் கரைந்து போயிருதேன். பேச வார்த்தைகளற்று தூறலில் நனையும் மலையின் திசையை நோக்கி கண்களைக் குவித்திருத்தேன்.

’’சொல்லுங்க பவா''

''சித்தியுடனான உறவை தமிழ் மனது ஏற்காது சார்''

''நல்ல Treatment-?''

''இல்ல சார், ஒரு வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் கூட அப்படி ஒரு ரகசியம் இருந்தாலும், தன் ஆழ்மனதின் ரகசியம் திரையில் தெரிவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன்.''

''ஏன், ஏன், தன் உண்மைகள் படைப்பாகும் போது அதை அவனே நிராகரிக்கணும், 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்?''

மீட்டெடுக்க முடியாமல் திணறியதை ஒரு நொடியில் உணர்ந்தவர்,

''ஒரு விபச்சார விடுதியிலிருந்து’’ ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது, ஏன்னா படத்தோடு Treatment-ல அது காணமல் போயிடுது''

ஆனாலும் என்னால் அவரோடு உடன்படமுடியலை. அழுத்தமான கைப்புதைவுகளிடையே அவ்விரவில் தனித்தனியானோம்.

அதற்கடுத்த பத்து நாட்களும் ஒரு பித்தேறிய படைப்பு மனநிலையோடு அவருக்குள் ஏறியிருந்த புதுப்புது தர்க்கங்களுக்கு விடை தேடி திருவண்ணாமலையில் எங்கள் வீடு, அருணை ஆனந்தா ஹோட்டல், வம்சி புக்ஸ் கடை என்று அலைந்து கொண்டிருந்தார்.

முடிவுகளின்றி முடிந்தது அப்பயணம்.

கருங்கற்களால் நாங்கள் கட்டி முடித்த எங்கள் வீட்டின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த போது மிகுந்த மௌனம் காத்தார். எல்லா நண்பர்களும் வீட்டின் தரையில் உட்கார்ந்து 'கரிசல் குயில்' கிருஷ்ணசாமியின் பாட்டிற்கு எங்களை ஒப்புக் கொடுத்திருந்தோம். என் வீட்டின் ஒரு மூலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் அசையாமல் உட்கார்ந்து தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்த மிச்சம் இன்றும் என்னுள் நிற்கிறது. பாடல்களின் இடைவெளியில் உட்கார்ந்தவாறே மிக மென்குரலில் நம்மோடு ரகசியமாய் உரையாடுவதைப்போல பேசினார்.

நான் என் மகளாக ஸ்வீகரித்துக் கொண்ட என் மகள் ஷைலுவும், என் மாப்பிள்ளை பவாவும் கட்டியுள்ள இச்சிறு கூடு எனக்கு என் அம்மாவின் நினைவுகளை அலைகழித்துக் கொண்டிருந்தது. என் அம்மா ஒரு அற்புத மனுஷி. என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். கலையும், இசையும், படைப்பும் நிறைந்து அம்மாவின் ஆகிருதி அவள் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் அது ஒவ்வொன்றாய் உதிர ஆரம்பித்தது. நிறைவடையாத அவ்வீடு அம்மாவின் அத்தனை கலாபூர்வங்களையும் சிதைத்திருந்தது. அம்மாவின் நிறைவேறாத அக்கனவே என் 'வீடு' ஆனால் என் மகளின் நிறைவடைந்த இவ்வீடு அவளின் சிருஷ்டியை அப்படியே காப்பாற்றியுள்ளது''

எவ்வளவு கவித்துவம் ததும்பும் சொற்கள் இவைகள். இன்றளவும் தன் ஒவ்வொரு நொடியின் இடைவெளிகளையும் கவித்துவத்தால் நிரப்பத்துடிக்கும் ஒரு கலை ஆளுமை.

இந்திய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை அவர்.

ஒரு நாள் அதிகாலை என்னை தொலைபேசியில் அழைக்கிறார். ''பவா நேற்று ஒரு திரைப்பட விழாவில் என் 'வீடு' திரையிடப்பட்டது. பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தேன். நேற்று எடுத்த மாதிரி அத்தனை புதுசாயிருந்தது. காலத்தின் முன் தன் படைப்பு உதிர்ந்துவிடாமல், முன்னிலும் அதிக கம்பீரத்தோடு எழுந்து விஸ்வரூபமெடுப்பதை பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு உரிய பெருமிதம் இது.

''சார் நீங்க.....''

''நான் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். அவரே கோடிட்ட இடத்தை நிரப்புகிறார்.''

''நான் புலி பவா, புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''