Monday, December 20, 2010

மகா கவிகளும் ஒரு சிறுவனும்





ஆரோவில்லில் டிசம்பர் 15 -ல் மகாகவி தாகூரின் 150 வது ஆண்டு விழா கொண்டாடத்தில் தன் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுவதாகவும் அதன் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள நான் கண்டிப்பாக வரவேண்டும் எனவும் கோரிய கவிஞர். மீனாட்சி அக்காவின் குரலில் மீதுற்ற பிரியத்தைக் காப்பாற்ற வேண்டியும் ஆரோவில் என்ற ஊரின் வசீகரத்துக்காகவும் அந்த அழைப்பை ஏற்க வேண்டியிருந்தது.

நான் சென்றடைந்த போது ஓய்வு பெற்ற ஒரு பேராசிரியர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தார். ஐம்பத்தெட்டாவது வயதில் கட்டாய விடுதலை அடைகிறார்கள் இவர்களின் மாணவர்கள். அதன் பிறகும் பேசியாக வேண்டும் எனும் மன அரிப்பிற்கு ஆளாகிறார்கள். பேராசியர்களிடமிருந்தும் பண்டிதர்களிடமிருந்தும் மேடைகளும், இலக்கியமும் இன்னும் வெகுதூரம் விலகியிருக்க வேண்டியிருக்கிறது. பொறுமையின் எல்லையை நான் கடந்து கொண்டிருந்த போது, குழந்தைக்கே உரிய குதூகலத்தோடு வேலு சரவணன் கதை சொல்ல வந்து என்னைத் தட்டி எழுப்பினான்.

மகாகவி தாகூர் எழுதி, இன்னொரு மகாகவி பாரதி 1914 -ல் மொழிபெயர்த்து வெளிட்ட ரஜாக்காலம் என்ற கதை, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வேலுசரவணனால் சொல்லப்படுகிறது. அது தாகூர் என்ற மகாகலைஞன், வேலு சரவணன் என்ற சிறுவன் சொல்வதற்காகவே எழுதின மாதிரியும் உள்ளது.
கல்கத்தாவிற்கு அருகில் நதி நீர் எப்போதும் யாருக்கும் அடங்காமல் போய்கொண்டிருக்கும். ஒரு ஆற்றங்கரை கிராமம். அப்பாவை இழந்த குடும்பம் அது. அம்மாவின் பெரும் கனவாக இருப்பது மூத்தவன் பாடிக் சக்கரவர்த்தியும், தம்பி மக்கான் லாலும்.

பாடியின் பால்ய விளையாட்டுக்கள் கட்டுக்கடங்காதவைகள். பனங்காத்தாடியைக் கையிலேந்தி ஆற்றங்கரையில் துவங்கி அவனுடைய துள்ளலான ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க அக்கிராமத்தில் வேறுயாருண்டு. தூண்டிலும் கையுமாக அந்த ஆற்றின் கரைகளில் பகல்களைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான்.

அண்ணனின் இக்குதூகலம் தம்பி மக்கன்லாலால் தொடர்ந்து சிதைக்கப்படுகிறது. அண்ணனைப் பற்றி அம்மாவிடம் போட்டுக் கொடுப்பதும் கோள் சொல்வதும் அம்மாவின் கண்டிப்பில் தான் மகிழ்வதுமாக, மக்கான் லால் குழந்தைகளுக்கே உரிய குறும்புகளுடன் வளர்கிறான். பாடியின் சந்தோஷங்கள் கலைத்து அம்மாவின் கண்டிப்பு ஒரு துர் கனவு மாதிரி அவனைச் சூழ்ந்து
கொள்கிறது.

பாடிக் அன்று ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரக்கட்டையைப் பார்க்கிறான். தன் நணபர்களோடு சேர்ந்து அதை அந்நதியில் தள்ளிவிட முயல்கிறான். அவன் வலுவை நிரூபிக்கும் முயற்சியும் அவன் தம்பியால்
தடுக்கப்படுகிறது. எத்திசையிலிருந்தோ ஓடிவந்து தம்பி மக்கான் லால் அம்மரக்கட்டைமீது ஏறி படுத்துக் கொள்கிறான். பாடிக்கு கோபம் தலைக்கேறுகிறது. தம்பியை விலகுமாறு கோபத்துடன் கத்துகிறான். அவன் மரக்கட்டையை இன்னமும் வலிமையாய் பற்றிக் கொள்கிறான்.

வேறு வழியில்லை பாடிக்கு. தொடரும் தம்பியின் சீண்டல்களும், கோள் மூட்டல்களும் அவனை கோபத்தின் உச்சிக்குக் கொண்டு போகின்றன. மரக்கட்டையுடன் தம்பியும் ஆற்றுக்குள் தள்ளிவிட யத்தனிக்கிறான். கண நேரத்தில் இதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து விலகிப் பாடியை கீழே தள்ளி நெஞ்சில் உதைக்கிறான் தம்பி. அவனைத் திருப்பி அடிக்க மனமின்றி தள்ளி விடுகிறான் பாடி. அவன் அழுது கொண்டே வீட்டை நோக்கி நடக்கிறான்.

பூத்திருக்கும் இலையின் பஞ்சு முட்கள்
உன்னை குத்தாதா வண்ணத்துப் பூச்சி.
பகலெல்லாம் அலைகிறாயே!
இரவு வந்தால் எந்த வீட்டிற்குப் போவாய்?
வீட்டிற்குப்போகும் வரை எனக்கு ஆயுள் இல்லை,
இருக்கும் வரை பறப்பேன்.
இலைகளில் இளைப்பாறுவேன்.
பூக்களில் பசியாறுவேன்.

பாடிக் மிகுந்த மனவேதனையடைகிறான். வீடு அவனுக்குக் கசக்கிறது. அம்மா ஒரு ஜெயில் வார்டனின் பிம்பம் மாதிரி அவனைப் பயமுறுத்துகிறாள். தொடர்ந்த புறக்கணிப்புகளும் அடியும், வலியும் அவனை அலைக்கழிக்கின்றன.

நெடுநேரங்கழித்து அம்மாவின் அடியை எதிர் நோக்கியே வீட்டிற்கு நடக்கிறான். வீட்டில் புது விருந்தினரின் வருகை தெரிகிறது. அம்மா இயல்பாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தை இத்தனை மலர்ச்சியோடு அவன் பார்த்ததில்லை. வீட்டில் புது விருந்தினர்களின் வருகை தெரிகிறது. அம்மா பாடியை தன் அண்ணனிடம் அறிமுகப்படுத்துகிறாள். தன் தாய்மாமாவின்
கண நேர ஸ்பரிசத்தில் அவன் தன் துக்கத்தைத் துடைத்தெறிகிறான்.

மாமா கல்கத்தாவுக்குப் புறப்படும்போது குழந்தைகளின் படிப்பைப் பற்றியும் போக்கைப் பற்றியும் அக்காவிடம் விசாரிக்கிறார். அம்மா உடைந்தழுகிறாள்.
என் வாழ்வின் சந்தோஷங்களை இவன் களவாடி விட்டானென்றும், இவனால் துன்பத்திலேயே கிடந்து சாகவேண்டியது தான் என்றும் அழுகிறாள். எதிர்பாராத இத் தருணம் மாமாவைப் போலவே பாடியையும் நொறுக்குகிறது. நீடித்த மௌனத்தை மாமாவே வார்த்
தைகளால் கலைத்துப் போடுகிறார்.
பேசாம நீ இவன எங்கூட அனுப்பிடு நானே கல்கத்தாவுல படிக்க வைக்கிறேன்.
கணநேரத்தில் காட்சிகள் மாறுகின்றன. பாடிக் மாமாவுடன் ஒரு ஸ்டீமர் படகில் கல்கத்தாவிற்குப் பயணிக்கிறான்.
விரிந்த கடல் நீரில் அங்கங்கே கடல் பறவைகள் மாதிரி படகுகள் பயணிப்பது தெரிகிறது. பாடி மனதில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி அலையடிக்கிறது. ஏதோ இனம் புரியாத பயமும் புது மாதிரியான அனுபவமுமாக அப்பயணம் அவனை ஆட்கொள்கிறது. தூரத்தில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாடல் ஒலிக்கிறது.

ஒரு பாகம் ஆழம் ..... ஆழம்.... ஆழம்....
இரு பாகம் ஆழம்...... ஆழம்.... ஆழம்....
முப்பாகம் ஆழம்..... ஆழம்..... ஆழம்....

பாடியின் இதயத்திற்குள் இப்பாடல் மெல்ல இறங்கி, அதன் ஆழத்தைத் துழாவுகிறது. பிரிவின் துயரம் அப்போதே அப்பாடலின் வழியே அவனுள் பதிகிறது. உடலெங்கும் பரவும் இழப்பின் வலியை அவன் பயணம் முழுதும் துடைத்தெறிந்து கொண்டே போகிறான்.

கல்கத்தாவில் அவன் மாமா வீட்டில் நுழைவதை, மாமி ஒரு பிரளயமே நுழைவதைப்போல பார்க்கிறான். புதிய வாழ்விடம், புதிய மனிதர்கள், எல்லாமும் பாடியை அலைக்கழிக்கிறது. அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த அவன் சொந்த கிராமத்து ஆற்றின் சத்தம் சட்டென நின்று, மணல் பரப்பாகி வெயில் தகிக்கிறது. தாகூர் எழுதுகிறார்.

எஜமானனைப் பிரிந்து தெருவில் அலைந்து கலைத்துப்போன நாயின் முகம் பாடிக்கு வாய்த்திருந்தது.
பாடியிடமிருந்து அவன் குழந்தைப்பருவம் ஒரு புன்முறுவலோடு விடை பெற்றுக் கொள்கிறது. பதினொன்றைக் கடந்து பன்னிரண்டிற்குள் நுழைகிறான். குரல் மாற்றமும் தோல் மாற்றமும் அவனுள் ஒரு வேதிவினை போல நிகழ்கிறது. பருவப் பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்களோ என்ற ஆர்வம் மேலெழுகிறது. இப்பருவத்து ஆண் பிள்ளைகளை அம்மாக்களுக்குக்கூடப் பிடிக்காது என தாகூர் எழுதுகிறார். அப்பருவம் குழந்தைமையின் அலங்காரப் பொருளோ வாலிபத்தின் பயனுள்ள பொருளோ இல்லாதது என்று உவமிக்கிறார்.

ஏற்கனவே மூன்று குழந்தைகளுடன் வாழ்வோடு மல்லுக் கட்டும் மாமாவின் குடும்பம் பாடியை அரவணைக்க முடியாமல் திணறுகிறது. அது அன்றாட நிகழ்வுகளில் மாமியிடமிருந்து வெறுப்பாக உமிழ்கிறது.

பாடிக்கு படிப்பும் அத்தனை விருப்பமானதாக இல்லை. விருப்பமற்ற இந்த மாற்றத்தில் அவன் உடைந்து போகிறான். தன் கிராமமும், சக்கரவர்த்தித் தெருவும், ஆற்றங்கரையும், பனைமரக் காத்தாடியும், தூண்டிலில் துள்ளும் மீனும், அவன் ஆத்மாவை அலைக்கழிக்கின்றன. ஊரின் அருகாமையும் அம்மாவின் அரவணைப்பும் வேண்டி அவன் மனம் ஏங்குகிறது. வாத்தியாரின் பிரம்படிக்கு அவன் பொதி சுமக்கும் கழுதையின் உடம்பு போல தன் உடலை மாற்ற வேண்டியிருந்தது.
வெறுப்புற்ற மனநிலையில் பாடப் புத்தகத்தை வேறு தொலைத்துவிடுகிறான். புதுப் புத்தகங்கள் வாங்கித் தர இயலாதென மாமி திட்டுகிறாள். துக்கம் மேலிட, தன்மானம் துளிர்விட பாடி அப் பருவத்து மற்றெல்லாப் பையன்களைப் போலவே வீட்டை விட்டு வெளியேறி ஒரு பாலத்துக்குக் கீழே உட்கார்ந்து தன் ஊரின் ஞாபங்களை மீட்டெடுக்க முயற்சிக்கிறான். போலீஸ் வந்து பாடியை மீட்டு மீண்டும் மாமாவிடம் ஒப்படைக்கிறார்கள்.

பாடியின் மௌனத்தால் மாமாவீடு உறைகிறது. ஏன் எங்களைத் தொடர்ந்து இம்சிக்கிறாய் என உடைந்தழும் மாமியின் முன் முதல் முறையாக பதில் பேசுகிறான் பாடிக்.
நான் என் சொந்த ஊருக்கு என் தம்பியையும் அம்மாவையும் பார்க்கப் போனேன். என்னை ஏன் திருப்பி அழைத்துக் கொண்டு வந்து இம்சிக்கிறீர்கள்.?

நினைவில் காடுள்ள மிருகத்தை
யாரும் பழக்க முடியாது.
என் நினைவில் காடு உள்ளது.

என்ற வரிகளைப்போல பாடிக்குத் தான் ஆற்றில் நீந்திக் கடந்த அக்கரை அப்போது கடந்த நீர்ப் பறவை தனியேதான் பாடிய பாடல்கள் என போன்ற நினைவுகள் கேவலுடன் மேலெழுகிறது. தாயிடத்தை நிரப்ப வேறு யாரால் முடியும்? என்ற கேள்வி அவனுள் ஒவ்வொரு வினாடியும் எழுகிறது.

பாடிக் காய்ச்சலில் விழுகிறான். அவன் துக்கங்களை முழுவதுமாய் உள்வாங்கும் மாமா விஸ்வரம்பரபாபு ரஜாக்காலத்தில் (கார்த்திகை, மார்கழி, தை) மாதங்களில் வரும் நீண்ட விடுமுறையில் அவனை அவன் அம்மாவிடம் சேர்ப்பிப்பதாக சொல்கிறார்.

வைத்தியரின் வருகைக்குப் பிறகும் காய்ச்சல் அதிகமாகிறது. இந்த நரகத்திலிருந்து தப்பித்து தாயின் கதகதப்பிற்குத் திரும்ப மனம் துடிக்கிறது.
அம்மா... அம்மா... அம்மா.... வென கதறும் அவன் ஆன்மாவின் ஓசையை மாமா வீட்டாரால் தாங்க முடியவில்லை.

நீராவிக் கப்பலின் லஷ்கர் பாடல் தூரத்தில் ஒலிக்கிறது.

தண்ணீரின் ஆழம்.... ஆழம்..... ஆழம்.....
கரையே இல்லாத கடலில் என் ஓடம்......
கண்ணீரின் ஆழம்.... ஆழம்..... ஆழம்....

வேலு சரவணின் துயரம் தோய்ந்த இப்பாடலைக் கேட்கத் திராணியற்று நான் அரங்கிலிருந்து வெளியேறினேன். எனக்கும் முன்னே நிறையப்பேர் வெளியே நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்கள். நிர்மலமான அந்த ஆகாய வெளியில் கொத்துக் கொத்தாய் நீர்ப்பறவைகள் எங்களைக் கடந்து கொண்டிருந்தன.

Monday, December 13, 2010

கதைகளால் நிரம்பிய கிணறு


இருபது வருடங்கள் முடிந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடியிருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஜனத்திரளுக்கு கதை சொல்ல நானும், வேல. ராமமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தோம். எங்கள் இருவரின் கதை கேட்டு கூட்டம் மயங்கிக் கிடந்தது. அன்றிரவு பஸ் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டார் வேலா. வீட்டிற்கு வந்து ஒரு வேலை கருவாட்டுக் குழம்பும், கேழ்வரகுக் களியும் சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் புறப்படுவதாக திட்டம். என்னைக்கு இந்த திட்டமெல்லாம் எழுத்தாளர்களிடம் நிறைவேறி இருக்கு?
மழையின் குளிர்ச்சியில் அறையிலேயேக் கிடந்து அம்மா சமைத்துத்தர வித விதமாய் சாப்பிட்டு பகலானால் கிணற்றுக்கு குளிக்கப்போவது என்று போனது அந்த மூன்று நாட்களும்.

வேலா, கிணற்றுக்குள் முழ்கி குதியாட்டம் போட நான் கரையில் உட்கார்ந்து குதிப்பதற்கு தயாராகிறேன். உள்ளிருந்து வேலா சத்தமாக சொல்கிறார்

பவா இந்நேரம் இங்க கோணங்கி வந்தா எப்படி இருக்கும்?

அக்கற்பனையில் மகிழ்ந்து எதேச்சையாய் திரும்புகிறேன். தோலில் தொங்கும் ஜோல்னா பையோடு கோணங்கி. சில நேரங்களில் இந்த மாதிரியான அபூர்வத் தருணங்கள் வாய்ப்பதுண்டு. அன்று ஒவ்வொருவரும் கிணற்றுக்குள்ளிருந்து மேலேப் பார்த்துக் கதைசொல்ல வேண்டும். வெளியிலிருப்பவர்கள் கதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னோடு கதைக் கேட்க பத்து, இருபது பேர் வயக்காட்டு வேலைகளை ஒதுக்கிவிட்டு கிணற்று மேட்டில்லிருந்து கதைகேட்டது நினைவிருக்கிறது.

நான் ‘சிங்கார குளம்’, கோணங்கி ‘கறுப்பு ரயில்’, வேலா ‘கோட்டைகிணறு’.

‘கோட்டைகிணறு’ கதை கிணற்றுக்குள்ளிருந்து வெளிவந்ததே அச்சமூட்டுவதாக இருந்தது. வேட்டைக்கு அலையும் மிருகம் ஒன்று உள்ளிருந்து உருமுவது போலான அனுபவம் அது. கதை கேட்டு முடித்த அச்சத்தில் அதற்குப் பிறகு அந்த கிணற்றுக்குள் குதிக்கவில்லை நான். அதே மாதிரி கதை கேட்ட அச்சத்தில் வெகு நேரம் ததும்பிக் கொண்டிருந்தது அந்த கிணற்று கருநீர்.

கதை சொல்லி, கதை கேட்கும் அனுபவம் சுத்தமாக துடைத்தெறியப்படும்
இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ.காம் நண்பர்கள் என்னிடம் கதை சொல்ல கேட்டு திருவண்ணாமலைக்கு வந்தது ஆச்சரியமானது. ரெண்டு கதை சொன்னேன். ஒன்று என்னுடைய ‘வேட்டை’, இரண்டு சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘கொமலா’