Monday, December 13, 2010

கதைகளால் நிரம்பிய கிணறு


இருபது வருடங்கள் முடிந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கூடியிருந்த ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஜனத்திரளுக்கு கதை சொல்ல நானும், வேல. ராமமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்தோம். எங்கள் இருவரின் கதை கேட்டு கூட்டம் மயங்கிக் கிடந்தது. அன்றிரவு பஸ் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டார் வேலா. வீட்டிற்கு வந்து ஒரு வேலை கருவாட்டுக் குழம்பும், கேழ்வரகுக் களியும் சாப்பிட்டுவிட்டு ராமநாதபுரம் புறப்படுவதாக திட்டம். என்னைக்கு இந்த திட்டமெல்லாம் எழுத்தாளர்களிடம் நிறைவேறி இருக்கு?
மழையின் குளிர்ச்சியில் அறையிலேயேக் கிடந்து அம்மா சமைத்துத்தர வித விதமாய் சாப்பிட்டு பகலானால் கிணற்றுக்கு குளிக்கப்போவது என்று போனது அந்த மூன்று நாட்களும்.

வேலா, கிணற்றுக்குள் முழ்கி குதியாட்டம் போட நான் கரையில் உட்கார்ந்து குதிப்பதற்கு தயாராகிறேன். உள்ளிருந்து வேலா சத்தமாக சொல்கிறார்

பவா இந்நேரம் இங்க கோணங்கி வந்தா எப்படி இருக்கும்?

அக்கற்பனையில் மகிழ்ந்து எதேச்சையாய் திரும்புகிறேன். தோலில் தொங்கும் ஜோல்னா பையோடு கோணங்கி. சில நேரங்களில் இந்த மாதிரியான அபூர்வத் தருணங்கள் வாய்ப்பதுண்டு. அன்று ஒவ்வொருவரும் கிணற்றுக்குள்ளிருந்து மேலேப் பார்த்துக் கதைசொல்ல வேண்டும். வெளியிலிருப்பவர்கள் கதைக் கேட்டுக்கொள்ள வேண்டும். என்னோடு கதைக் கேட்க பத்து, இருபது பேர் வயக்காட்டு வேலைகளை ஒதுக்கிவிட்டு கிணற்று மேட்டில்லிருந்து கதைகேட்டது நினைவிருக்கிறது.

நான் ‘சிங்கார குளம்’, கோணங்கி ‘கறுப்பு ரயில்’, வேலா ‘கோட்டைகிணறு’.

‘கோட்டைகிணறு’ கதை கிணற்றுக்குள்ளிருந்து வெளிவந்ததே அச்சமூட்டுவதாக இருந்தது. வேட்டைக்கு அலையும் மிருகம் ஒன்று உள்ளிருந்து உருமுவது போலான அனுபவம் அது. கதை கேட்டு முடித்த அச்சத்தில் அதற்குப் பிறகு அந்த கிணற்றுக்குள் குதிக்கவில்லை நான். அதே மாதிரி கதை கேட்ட அச்சத்தில் வெகு நேரம் ததும்பிக் கொண்டிருந்தது அந்த கிணற்று கருநீர்.

கதை சொல்லி, கதை கேட்கும் அனுபவம் சுத்தமாக துடைத்தெறியப்படும்
இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ.காம் நண்பர்கள் என்னிடம் கதை சொல்ல கேட்டு திருவண்ணாமலைக்கு வந்தது ஆச்சரியமானது. ரெண்டு கதை சொன்னேன். ஒன்று என்னுடைய ‘வேட்டை’, இரண்டு சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘கொமலா’



3 comments:

  1. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  2. அற்புதமான அனுபவங்கள்,கேட்க கேட்க சுவையாக இருக்கிறது, இதுபோன்ற அனுபவங்களை முழுமையாக பதிவு செய்யவேண்டும்.

    ReplyDelete
  3. நன்றி பவா... தமிழ் ஸ்டியோ வின் link - இங்கே தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த 'கோட்டைகிணறு ' கதையை எங்களுக்கும் சொன்னால் மகிழ்வாக இருக்குமே பவா

    ReplyDelete