Wednesday, December 23, 2020

எப்போதைக்குமான மேய்ப்பன் கருணா

  



இக்கட்டுரையின் முதல் எழுத்து வேண்டி மூன்று மாதங்கள் காத்திருந்தேன். கருக் கலைந்து பெரும் வலியோடு துவண்டு போகிற ஒரு தாய்மை வேண்டும் பெண்ணைப் போல பல நேரம் துவண்டு போனேன். கொட்டிக் கிடக்கும் பல ஆயிரம் தமிழ் சொற்களில் எனக்கே எனக்கென்று ஒரு சொல்லும் கிடைக்கவில்லை.

பேருக்குதான் கல்லூரிக்குப் போய் வந்தேன், பி,காம்மில் ஒரு பாடமும் என் மூளையை எட்டவே இல்லை. பாலேறின நெல் வயலின் வெறிகொண்ட நீர்த் தேவையைப் போல மூளை வாசிப்பையே அருந்திக்கொண்டிருந்தது.

 நட்புக் கலைதல் வாழ்வின் எத்தனை துயரமான ஒன்றென மனமும் உடலும் ஒரு சேர அனுபவித்த நாட்கள் இவை.

என் பதினைந்து வயதில் வாசிக்கவும்,பதினாறு வயதில் அரைகுறையாய் எழுதவும் ஆரம்பித்தேன். வெதும்பி உதிரும் பிஞ்சுகள் போல விருச்ச வளர்த்தலில், எழுத்து உதிர்வதை உணர்ந்து, எழுதுவதை நிறுத்திக்கொண்டு, வெறிகொண்டு வாசித்த காலம் என் மாணவப்பருவம்.

எழுத்தின் துவக்கத்திலேயே இயக்கம் என்னை தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டது. பல உரையாடல்கள், பல மோதல்கள், பல இரவுகளின் அலைக்கழிப்புகளுக்குப் பிறகு   தமுஎசஎனும் கலாச்சார அமைப்பில் என்னை மிகச் சுலபமாக இணைத்துக் கொண்டேன்.

நல்ல தெளிவிருந்தது எனக்கு. என்னவாகப் போகிறேன்? என்ற எதிர்கால கேள்வி ஒன்று என் முன் பூதாகாரமாய் எழுந்து நின்றதைப் பார்த்து நான்     பயப்படவே இல்லை.

அந்த சின்ன  குடிசையில்

 தெரு விளக்கினில்

 சுட்ட கவிதைகள் எத்தனையோ?

 நான் பட்ட அனுபவம் கற்பனையோ!

என்ற வையம்பட்டி முத்துசாமியின் வரிகளில் வாழ்ந்து கொண்டிருந்த நாட்கள் அவை.

 எனக்குத் தோழமைகள் தேவைப்பட்டார்கள். என் மன நிலையிலேயே, எதிர்கால லௌகீகத் தேவைகளின் பொருத்தல்களுக்காக, அருமையான இம்மானுட வாழ்வின் படைப்பூக்கமான நாட்களை சுருக்கிக்கொள்ளாத நண்பர்கள் வேண்டி அலைந்து கொண்டிருந்தேன்.

நான் சந்தித்த எல்லாருமே ஏதோ ஒரு வகையில் எதிர்கால லௌகீக கனவுகளுக்காய் தங்கள் அருமையான இளமையை பறிகொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

காதலை கூட இரண்டாம் பட்சமாக்கியிருந்தது அவர்களுக்கான, அவர்கள் ஸ்திரப்படுத்தலுக்கான எதிர்கால கனவுகள். நான் தான் என்னைப்போல ஒருவனை வேண்டி அலைந்து கொண்டிருந்தேன்.

திருக்கோவிலூர் ரோட்டில், வேலு சைக்கிள் கடையில், ஸ்டேண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து, எப்போதும் புகைத்துக்கொண்டிருந்த மாணவப்பருவம் முற்றி, அடுத்த நகர்தலுக்காக காத்திருந்த அந்த இளைஞனை ஒருநாளில் பல முறை கடந்து போகும் போதெல்லாம் கவனிப்பேன்.

எம்ப்ராய்டரி போட்ட பாக்கியராஜ் ஜிப்பாவும், தலைமுடியோ வளரும் தாடியோ தனக்கு ஒரு பொருட்டல்ல என்ற அலட்சியமும், எப்போதும் கோபமுற்றிருந்த அவன் முகமும் கிட்ட வந்திர்தே என்ற எச்சரிக்கையை எனக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தது.

ஆனாலும் ஒரு நாள் நான் அவனருகில் போய் நின்றேன். புளியமரத்து சுடு காற்று இருவருக்கும் இடையே நிரம்பியிருந்த மத்தியானம் அது.

நான் பவா

ஸ்நேகத்தின் ஈரப் புன்னகையால் என் சொல்லை நானே நனைத்துக் கொண்டேன்.

 தெரியும், அதுக்கென்ன இப்போஎன்பது போல அவன் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான்.

 நாங்கள் ஒரு நாடகம் போடப்போறோம். நடிப்பதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எங்களோடு சேர்ந்து இயங்க முடியுமா?... என் வார்த்தைகள் நீண்டுகொண்டிருப்பதை நானே உணர்ந்து இவ்வளவு நீண்டிருக்க வேண்டாமோ என என் சொற்களை என்பது மாதிரி நிறுத்திக் கொண்டேன்.

 கடைசி இழுப்பையும் நிதானமாக இழுத்துவிட்டு, மிச்சத்துண்டை தன் காலில் போட்டு தேய்த்துவிட்டு, சைக்கிளில் ஏறி உட்கார்ந்து, “போலாம்என  அவன் புறப்பட்ட போது

 இவன் அதிகம் பேசுபவனல்லஎன்பதை எனக்குள் உள்வாங்கிக் கொண்டேன்.

எங்கள் இருவரின் சைக்கிள்களும் முத்து விநாயகர் கோவில் தெருவரை யாரும் வழிகாட்டாமலேயே பின் தொடர்தலில் ஒன்றன்பின் ஒன்றாகப் போய் சேர்ந்தது.

 எங்களுக்கு பயிற்சி அளிக்க அங்கே தோழர் காளிதாஸ் இருந்தார். பி..முடித்து, கிராமம், கிராமமாகப் போய், சமூக நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த காளிதாஸை, கருணா தன் கண்களால் அளந்துப் பார்த்ததை நான் கவனித்தேன்.

அந்தக்கால ஜெய்சங்கரைப் போன்ற உருவ அமைப்பிலும், உடையிலும் அவரிருந்தார். முன்னால் வந்து விழுந்த முடிக்கற்றையை  வளைத்து விட்டு தன்னை ஒரு ஜெய்சங்கராகவே உருவகித்து வாழ்ந்து வந்த அந்த நாடகக்காரனை, சட்டென ஒரு நொடியில் கருணாவுக்குப் பிடித்துப் போனது.

 அவர்களின் நட்பு மலர்தலுக்கு, ஒரே  ஒரு கோல்டுபிளாக் சிகரெட் புகையும் நேரம் மட்டும் போதுமானதாக இருந்தது.



எனக்கு கருணாவை சந்தித்த முதல்க்கணம் ஒரு சின்ன பயம் இருந்து. அது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணத்திலேயும் தொடர்கிறது.

கருணா, திருவண்ணாமலை அரசுக் கலைக்கல்லூரியில் தமிழ் பி.. படிக்கும் போது, கல்லூரி மாணவர் தலைவனுக்கானத் தேர்தலில் வெற்றி பெற்று, நகர திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய தூண்களில் ஒருவனாக இருந்த காலம் அது.

எனக்கு அவன் அரசியலைத் சீண்டிப்பார்க்கும் தைர்யம் இல்லை.  நான்தமுஎசவில் இயங்கினாலும் அதன் பின்னால் CPI(M) இருக்கிறது என்பதை மங்கலாகத் தெரிந்து கொண்ட நாட்கள் அவை.

அப்போதைக்கு நாடகம் போட்டோம். சமூக மாறுதலுக்கான இந்த சிறு பயணத்தில் கலை, இலக்கியத்தில் என்னென்ன வடிவங்கள் உண்டோ அத்தனை வடிவ சாதனைகளையும் முயன்று கொண்டிருந்தோம்.

அப்போது காளிதாசும் திமுகவின் கொள்ளைகளில் கொஞ்சம் வசப்பட்டிருந்தார். கருணா அளவிற்கான அரசியல் தீவிரம் அவருக்கில்லை. அதை அவர் நடத்திய நாடகங்கள் அழித்துவிட்டிருந்தன.

 நாடக ஒத்திகை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என எங்கள் நாட்கள் என்றிருந்தோம் வசப்பட்டிருந்தன. சாப்பாட்டிற்கு கூட வீடு தேவையற்றது என்று. நான் மட்டும் அங்கிருந்து விடுபட்டு இரகசியமாக சைக்கிள் மிதித்து வீட்டிற்கு போய் அம்மா கையால் சாப்பிட்டு வந்துவிடுவேன்.

தினம் தினம் அதீத ருசியில் கிடைக்கும் கோழிக்குழம்பும், ஏரிமீன் குழம்பும், இந்த நாடகத்தை விட உன்னதமானது என்ற என் உள்ளுணர்வை அவர்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டேன். அவர்கள் இந்த உணவு ருசி தெரியாமல் பட்டை சோறும், ராக்கடை பரோட்டாவையும் தின்று கொண்டிருந்தார்கள்.

 நான் கவிஞர் வெண்மணியிடம் சிக்கி, மார்க்சியம் கற்றுக் கொண்டிருந்தேன்.

இளவேனில், தணிகைச்செல்வன், மணியரசன், அஸ்வகோஷ், மேலாண்மைப் பொன்னுசாமி என்ற பெயர்கள் நாளுக்கு நாலு தடவை அவரிடமிருந்து வந்து கொண்டிருக்கும்.

 வி.பி.சிந்தன், நல்லசிவன், உமாநாத், .பாலசுப்ரமணியன் என்ற அப்போதைய மார்க்சிய தலைவர்களின் பெயர்களை அவர் உச்சரிக்கும் போது, என் முகம் என்னவாக மாறுகிறது என்பதை அவர் கூர்ந்து கவனிப்பார். நான் உள்ளுக்குள் நடுங்குவேன்.

 இந்தப் பொறியில் மாட்டிக்கொண்டால் அரசு வேலை கிடைக்காது, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் காதல் கடிதங்கள் அர்த்தமற்று போய் உன் காதல் கை கூடாது, ஜெயிலில் இருப்பாய், அவர்கள் தண்டவாளங்களில் குண்டு வைக்கச் சொல்வார்கள் என்ற என பொது புத்தியில் விதைக்கப்பட்டிருந்த விதைகள் மூளைக்குள்ளிருந்து வலியோடு முளைக்க ஆரம்பித்தன.

 ஒரு வகையில் என் நண்பன் கருணாவைப் பற்றியெழுதுவது, என்னை நானே எழுதிக்கொள்வதுதான்.





 தோளில் தொங்கும் ஜோல்னாப் பைகளோடு நகரமெல்லாம் சுற்றித் திரிந்த நாங்களிருவரும்தான், பல ஒழுக்கப்பெற்றோர்களுக்கு  தங்கள் பிள்ளைகளிடம்  எப்படி வாழக்கூடாதுஎன்பதைச் சுட்டிக்காட்ட உதாரணர்களானோம்.

அந்த பவா, கருணா மாதிரி உருப்படாதவனா ஆகப்போறீயா? என்றுயரும் குரல்களை சாதாரண மிடில்கிளாஸ் வீடுகளில் மட்டுமல்ல இயக்கத் தோழர்களின் வீடுகளிலிருந்தும் கேட்டோம். அவர்கள் தாங்கள் மார்க்சியர்களாக சமூகத்துக்கு முன் நின்று குரலுயர்த்தி கோஷம் போட்டுவிட்டு, மூடிய அறைகளின் மங்கலான விளக்கொளியில், தங்கள் பிள்ளைகளை மட்டும் யாருக்கும் தெரியாமல் டாக்டர்களாகவும், இன்ஜினியர்களாகவும் ஆக்கிவிட வேண்டுமென்ற பெருங்கனவில் இருந்ததை சுலபமாகக் கண்டுபிடித்தோம்.

நாங்கள் மேற்கொண்ட களப்பணிகளில், போராட்டங்களில், போஸ்டர்  ஒட்டுதலில், போலீசை  எதிர்க்கொள்ளுதலில் என மொத்த இயக்க நாட்களிலும் ஒரு தோழரின் மகன்களையோ, மகள்களையோ பார்த்ததேயில்லை.

அவர்கள் அமெரிக்காவில் செட்டிலாகத்  தயாராகிக்கொண்டிருந்தார்கள் அல்லது தோழர்கள் அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

 மாவட்டக் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த தலைவர்களின் வீடுகள் எங்களிலிருந்து பெருந்தொலைவில் இருந்தது. அரசியல்ப் படுத்தப்படாத அக்குடும்பங்களில் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டிருந்தன. அதற்குள்ளிருந்து பெண்களும் குழந்தைகளும் லௌகீகப் பத்திரங்களுக்காக பாதுகாக்கப்பட்டார்கள். தோழர்கள் மட்டும் சமூகவெளிகளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்

 எங்களை மாதிரி இளைஞர்கள் தறுதலைகளாக, உதவாக்கரைகளாக பொது சமூகத்தாலும், ரகசிய குரலில் தோழர்களின் குடும்பங்களிலும் நாங்கள் உதாரணப் படுத்தப்பட்டோம்.

 நாங்கள் உருவகப்படுத்திக்கொண்ட பல முன் மாதிரிகள் ஒவ்வொரு நாளும் காய்ந்த சருகுகள் உதிர்வது போல எங்களிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் சந்திப்பின்போதும்  கருணா என்னுள் ஒரு படி உயர்ந்து கொண்டேயிருந்தான்.

தன்னலமற்ற அவன் செயல்பாடுகளில் நான் கரைய ஆரம்பித்தேன். ஆனால் இருவர் மனதிலுமே ஈரம் கசியாமல் பார்த்துக் கொள்வோம்.

 கசிதல் பொது செயல் பாட்டை தன்னலமாக்கும் என்ற கற்பிதத்திற்குள் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தோம்.

எங்கள் ஒவ்வொரு இரவுகளும் பகல்களும் அர்த்தமுள்ளதாக கடந்து கொண்டிருந்த காலங்கள் அவை.

பிடிவாதமாக அரசு வேலைக்கு போகமாட்டேன் என கருணாவும், போனால் என்ன? என்று நானும் வெளிப்பட்டுவிடாத சொற்களால் எங்களை மூடிக்கொள்வோம்.

 இயக்க செயல்பாடுகள் மூடுபனி போல எங்களை முழுக்க மூடிக்கொண்டது. எத்தனை வெயிலிலும் இப்பனி விலகப்போவதில்லை என எங்கள் இருவராலும் உள்ளுக்குள் உணர முடிந்தது.

 என்னவாகப்போகிறோம்?

என்னவோ ஆகிவிட்டுப்போகிறோம், கோடான கோடி மானுடர்களுக்கு தினம் தினம் பாலூட்டும் இப்பூமி எங்கள் உதடுகளிலும் ஒரு சொட்டை நனைக்காமல் போய்விடுமா என்ன?

 கடலூரில் ஒரு ஆசிரியர் பயிற்சி பள்ளி அலுவலகத்தில் கிளார்க் வேலை கிடைத்து, நான் இங்கிருந்து அகற்றப் பட்டேன். அதிகாலை நாலு மணி பேருந்துப்பிடித்து அப்பா என்னை ஏற்றிவிட்ட அடுத்த கணம் என் உள் உதறல் பக்கத்து இருக்கைகாரனுக்குக் கேட்கிறமாதிரி கேவ ஆரம்பித்தேன். அப்போது எனக்கொருக்காதலும் காதலியுமிருந்தார்கள்.

என் கதறலை பொருட்படுத்தாத பேருந்து சத்தம் எங்கள் திருவண்ணாமலை நிலப்பரப்பை கடந்து கொண்டேயிருந்தது.

முல்லையிலிருந்து ஒரு பையனை வாழ்வின் நெருக்கடி நெய்தலுக்குக் கடத்துகிறது. கடலூர், தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் உயிர் மீன்களைத் தூக்கி பெட்டிகளில் அடைத்துக் கொண்டிருந்தார்கள்.

 அம்மீன்களில் ஒன்றுதான் நாறும். ஜீவன் அடங்கிப்போன மரித்துப்போன மீன். எல்லாமும் அவ்வளவுதானா? இதன் மீறல் சாத்தியமில்லையா?

 சில இரவுகள் தேவனாம்பட்டினக்கடற்கரையில் உட்கார்ந்து அலைவுறும் கடலைப் பார்த்து, அமைதியுற்றும் அலைவுற்றும் கிடந்திருக்கிறேன்.

 என் விடுபட்ட நிலப்பரப்பை யாருக்காவது கடிதங்கள் எழுதி, மீட்டுவிடத் துடித்த தனிமையான  இரவுகள் அப்போது எனக்கு வாய்த்திருந்தது.

 நான் தொடர்ந்து அந்த கடலலை சத்தத்திலிருந்து என் நண்பன் கருணாவுக்கும், அவளுக்கும் தினம் ஒரு கடிதங்களாக எழுதி அனுப்பிக்கொண்டு என் தனிமையைக் கடிதங்களில் கரைத்த நாட்களவை.

தேவனாம்பட்டினக் கடற்கரை மணல் மீது அமர்ந்து அடுத்த கலை இலக்கிய இரவுக்கான வரைவை தயாரித்து, கருணாவுக்கு அனுப்பினேன்.

தமுஎசவில் இயங்கினாலும் கருணா அப்போதும் திமுக தான். பெரும் ஈர்ப்பில்லை எனினும் பாரம்பரியக் கருதி அதிலிருந்து விடுபட மனமின்றி இருப்பதாக நான் கருணாவைக் கணித்துக் கொண்டேன்.

 நகராட்சி பெண்கள் மேநிலைப்பள்ளியில், பகல் நேர இலக்கிய கருத்தரங்குகளுக்கும், இரவு நிகழ்வுக்கு காந்திசிலை மூலையை தயார் செய்யும்படியும் கருணாவிடம் கேட்டிருந்தேன்.

 மிகச் சுலபமாக இதை நிறைவேற்றிவிடலாம் என நினைத்த கருணாவிற்கு, அப்போதைய நகராட்சித் தலைவர் எஸ்.முருகையனிடம், அனுமதிக்காக காத்திருந்த வெகு நேரம், அப்படியெல்லாம் சுலபமில்லை என்ற உண்மை பெரும் வலி போல ஊடுறுவியது.

பெண்கள் மேநிலைப்பள்ளி வளாகம் எங்கள் கருத்தரங்கிற்கு மறுக்கப்பட்டது.

 எஸ்.முருகையன் வெற்றிபெற, ராப்பகலாய் உழைத்த கருணா என்ற திராவிட இளைஞனின் மன உணர்வுகள் ஏதோ ஒருவகையில் சிதைக்கப்பட்டது.

அந்த சனிக்கிழமை என் திருவண்ணாமலை வருகையின் போது மனம் இறுகி, இந்தத் தகவலை என்னிடம் கருணா பகிர்ந்த போது, ஒரு வேட்டைக்காரனின் சாதுர்யத்தோடு என் துப்பாக்கி விசையை காத்திருந்து அழுத்தினேன்.

பல நூறு பறவைகள் அப்பெரும் சத்தத்திற்கு வானில் சிதற, கருணா என்ற ஒரு ஒற்றை திராவிடப் பறவை  மார்க்சிய மடியில் வந்து விழுந்தது.

 தன் உடல் மீது உமிழப்பட்டிருந்த திராவிட துரோக உமிழ் நீரை துடைத்துக் கொண்டே, நாங்களிருவரும் சேர்ந்து, கலை இலக்கிய இரவுகளுக்கான எங்கள் பணிகளைத்  துவக்கினோம்

 ஊண் உறக்கமின்றி என்ற வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு பிடிபட ஆரம்பித்தது அத்தருணங்களில்தான்.

 நூறு தட்டி போர்டுகள், பத்து பேனர்கள், சென்னைக்கு போய் அச்சடிக்க வேண்டிய அழைப்பிதழ்கள், போஸ்டர்கள், மேடையைக் கலாபூர்வமாக வடிவமைத்தல், என எல்லா வேலைகளையும் தன் இரு கருந்தோள்களிலும் ஏற்றுக்கொண்டு குகனைப் போல கருணா செயல்பட்ட டிசம்பர் மாத குளிர் நாட்கள் அவை.

 பணம் வசூலிப்பது, படைப்பாளர்களை அழைப்பது, புத்தகங்கள் தயாரிப்பு, உணவுக்கு ஏற்பாடு செய்வது, அறைகள் போடுவது என நான் என் பணிகளை கருணாவிடமிருந்து வகுத்துக் கொண்டேன்.

அதன் பிறகான எண்ணிக்கையில் அடங்கிவிடமுடியாத நாட்களில் நாங்களிருவரும் சேர்ந்து இயங்கினோம். களச்செயல்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் சிலபோது மின்னல் மாதிரியும், சிலபோது அலைகள் போலவும் எழுந்தடங்கும். நிகழ்வன்று வந்து குவியும் மக்கள் திரளில் எல்லா வலியும் எங்களிருவருக்குமே கரைந்து போகும்.

 இலக்கிய கோட்பாடுகளில், நவீன இலக்கியங்களை திருவண்ணாமலை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் எதிர்பார்ப்போடும், ஆத்மார்த்தமாகவும் செயல்பட்டோம். இயக்கம் தன் செயல்பாடுகளால் சக மனித மேன்மையை சுரக்கவேண்டும். சுரந்தது. தாய்ப்பால் மாதிரி குழந்தைகள் சப்பிக் குடிக்கும் மார்புகள் எப்போதும் அதனிடமிருந்து சுரந்தவண்ணமிருந்தது.

சற்றேறக்குறைய நவீன கலை இலக்கிய வடிவத்தின் எல்லா சோதனை முயற்சிகளையும் இந்நாட்களில் நாங்கள் மேற்கொண்டோம் எனலாம்.

 நாங்கள் என்பது நாங்கள் இருவர் மட்டுமல்ல. ஓடும் காட்டாற்றில் பல கிளைநதிகள் அங்கங்கே சங்கமாகிவிடும் இல்லையா? அப்படி வழியெங்கும் பல தோழர்கள் வருவார்கள், போவார்கள், கருத்தியல் ரீதியாக முரண்படுவார்கள், எங்களை சர்வாதிகாரிகள் என்பார்கள், சங்கராச்சாரியார்கள் போல என குற்றம் சுமத்துவார்கள்.

நதி தன் இறுதி லட்சியம் கடலில் கலப்பது என்பதை நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கும் இல்லையா? அப்படி நாங்கள் ஓடிக்கொண்டேயிருந்தோம். பல நூறு நாட்கள் கருணா என் வீட்டிலும், பல பத்துநாட்கள் நான் அவன் வீட்டிலுமாக உணவு சாப்பிடுவோம். பக்கத்திலிருக்கும் கருணாவின் உணவுத் தட்டிற்கு தெரியாமல் அம்மா என் சுடுசோற்றுக்கடியில் அவித்தக்கோழி முட்டைகளை மறைத்து வைத்து கருணாவிடம் திட்டு வாங்குவாள்.

ஆனால் ஒரு ஆகசிறந்த இலக்கிய மாநாட்டை திருவண்ணாமலையில் எப்படியும் நடத்திவிட வேண்டும் என்ற பெருங்கனவு ஒன்று எனக்கும் கருணாவுக்கும் இருந்தது.

 திருவண்ணாமலையில் மாநில மாநாடு நடத்துவதென முடிவானபோது நான் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக பயந்தேன். இது ஒரு சிறு நகரம். இதன் இலக்கிய வாசகர்கள் குறைவு. தனவான்கள் நூறு ரூபாய்க்கு மேல் இலக்கியத்திற்கு ஒருபோதும் எழுத்தாளர் மொய் எழுத மாட்டார்கள்.

கர்நாடகாவிலிருந்து கவிஞர் சித்தலிங்கையா, ஆந்திராவிலிருந்து வோல்கா, இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாரதிராஜா, ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் என ஆளுமைகளின் தொடர் வருகை புதிய வாசகர்களை, புதிதாய் எழுதத் துவங்கினவர்களை, படமெடுக்க ஆயத்தமானவர்களை பெருந்துள்ளலுக்குள்ளாக்கியது அம் மாநாடு. ஆனால் அதன் பெரும் பாரம் சுமக்க முடியாமல் மாநாட்டு மேடைக்கு பின்னால் நின்று நான் அழுது  தீர்த்தேன். கருணாவும் எங்காவது ஒரு இருட்டில் நின்று புகைத்து தீர்த்திருக்க வேண்டும்.

அப்பெருங்கனவின் நீள அகலங்கள் அளவிட முடியாதது. பெருமழைக் காரணமாய் நாங்கள் திட்டமிட்ட செலவுகள் கூடிக்கொண்டே போனது.

ஆயிரத்திற்கும் அதிகமான  பார்வையாளர்களும் கலைந்து போனபின் வெற்று மைதானம் மட்டும் மீந்துவிடும்தானே? சோடியம் விளக்குகள் அணைக்கப்பட்ட இருள் சூழ்ந்ததெ மைதானத்தில் ஒரு ஓரமாக நின்று கடந்தவைகளை அசை போட்டுப் பாருங்கள். ஏதேதோ பாரம் வந்து உங்களை அழுத்தும். என்னை அப்படித்தான் அழுத்தியது.

இந்த பிரமாண்டம், இத்தனை மனிதர்களின் சங்கமம், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் இதை எல்லாம் செய்யும் ஏற்பாட்டாளனா நீ?

இந்த பத்து வருஷத்தில் பத்து கதை எழுதியிருக்கிறாயா நீ? கூட்டம் நடத்தி நடத்தி என்ன ஆகப்போகிறது? என என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் சந்திக்க நேர்ந்த இயக்கத்திற்கு வெளியிலிருந்த பெரும் படைப்பாளிகள் வெவ்வேறு சூழல்களில், வெவ்வேறுமாதிரியாக இக்கேள்வியை என் முன் வைத்தார்கள். பெரும் குழப்பத்திலிருந்தேன். தனிமையை நானே வலிந்து வரவழைத்துக் கொண்டேன். மாநாட்டுக்கு கடன் தந்தவர்கள் நெருக்கினார்கள். கூட்டு முயற்சி, கூட்டு சிந்தனை, கூட்டு செயல்பாடு என போதித்த இயக்கம் அமைதி காத்தது. காற்றடித்த பலூன்



மாதிரி நான்  அலைக்கழிக்கப்பட்டேன்.

 மாநாட்டு பரிசீலனையில் கூட்டத்தில் இரண்டாம் நாள் காலை இட்லி வேகவில்லை என்ற குற்றச்சாட்டு சரியாக என் முன் வைக்கப்பட்டபோது உடைந்துப் போனேன். வேகாத இட்லிக்குப் பொறுப்பு மணிசேட் அய்யர்தானே தவிர நானில்லை. நான் எழுத வேண்டியவன், வெறிகொண்டு வாசிக்க வேண்டியவன். இந்த அற்பக் கேள்விகளை எனக்குள் இருத்திக்கொண்டு மன உளைச்சலில் சாகவேண்டியவன் இல்லை என்ற முடிவுக்கு கூட்டம் முடிந்த அன்றிரவு வந்தேன்.


அதுவரை எழுதின என் கதைகளை எடுத்துத் தொகுத்தேன். தோழர்களை மெல்ல தவிர்க்க ஆரம்பித்தேன். எல்லா செயல்பாடுகளிலிருந்தும் என்னைத் துண்டித்துக் கொண்டேன்.வாசிப்பின் நேரத்தைக் கூட்டிக் கொண்டேன். எழுத்து மீண்டும் என்னில் துளிர்விட்டது.

 இயக்க செயல்பாடுகளிலிருந்து விடுவித்துக் கொண்ட ஒருவன், அல்லது விடுவிக்கப்பட்ட ஒருவன் எத்தனை துயர்கொள்வான் என்பதை அத்துயர்மிக்க நாட்கள் எனக்கு உணர்த்தியது.

 என் பத்துக் கதைகள்நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைதொகுக்கப்பட்டு தொகுப்பானது.

 இயக்கம் மட்டுமே எனதுயிர் என கருணா தன்னை அதனோடு இன்னும் இருக்கிக் கொண்டபோது நான் பெவிலியனில் நின்றேன். எங்கள் நட்புச் சுவர் மெல்ல விரிசல் காண  ஆரம்பித்தது.

என் முதல் கதைத் தொகுப்பு சமர்ப்பணம்” என எழுதிவிட்டு,யாருக்கு என்ற இடத்தில் நானே வெகு நேரம் எனக்குள் மௌனித்திருந்தேன். இறுதியில் அப்பாவின் நேர்மைக்கும்,கருணாவின் நட்புக்கும் என எழுதி கையெழுத்திட்டேன்.

நட்பு என்ற ஒன்று இதுநாள் வரையிலான என் வாழ்வில் கருணாவுக்கு மட்டுந்தான். அவனைவிட வெறிகொண்ட நண்பர்கள் பட்டியல் எனக்கு நாள்தோறும் கூடிக்கொண்டே போகிறது. ஆனாலும் கருணாவுக்குதான் என் முதல் நாற்காலி.

 உன் கட்சி ஆட்சிக்கு வரும், நீதான் கலாச்சார அமைச்சராவாய். அவர்களின் முதல் அசைன்மெண்டே என்னைக் கொல்லச் சொன்னால் என்ன செய்வாய்?’

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகளில் ஒரு அத்தியாயத்தில் முல்லைக்கல் மாதவன் நாயரைப் பார்த்து ஜே.ஜே.கேட்பான்,

முல்லைக்கல் மாதவன் நாயர் தன் எதிலிருந்த மரநாற்காலியை எட்டி உதைப்பான். அது தலைகீழாய் கவிழ்ந்து பெரும் சப்தத்தோடு தரையில் சரியும்.

அவன் ஓடி வந்து ஜே.ஜே.யைக் கட்டிக் கொண்டு,  இந்த பதவி எனக்கு வேண்டாம்.  என் நண்பன் போதும் என உன்னைக் கட்டிக்கொள்வேன் ஜே.ஜே.’என்பான்.

 நானும் அதே மனநிலையில்தானிருந்தேன்.

ஆனால் அடைக்க முடியாத அளவுக்கு நட்பின் விரிசல் எங்களுக்குள் அதிகமாகிக் கொண்டே போனது.

 நண்பர்களின் பிரிவு எத்தனை பேரின் காத்திருத்தலை சந்தோஷப்படுத்துகிறது என்றும், எத்தனை பேர் அத்தீயைப் பெருக்க ஊதுகுழல்களோடு மரங்களுக்குப் பின் மறைந்திருந்தார்கள் என்பதை அறிந்து பெரும் மனத்துயரேற்ற நாட்கள் அவை.

மகன் சிபியின் விபத்து மரணத்தின் போது, ஷைலஜா ஒரு குழந்தையென மாறி கருணாவின் மடியில் கிடந்துதான் அழுதாள்.

 என் புள்ள மாமா,மாமான்னு உன்ன சுத்துமே கருணா எப்படி அவன விட்ட?’ என்று பெருங்குரலெடுத்து அவள் அழுத போது சுத்தி நின்ற எல்லோருமே கதறினார்கள்.

அன்றிரவைக் கடக்க முடியாமல்தான் நான் முதன்முறை புகைக்க ஆரம்பித்தேன். வாழ்வு சுழல் மாதிரி சுற்றி சுற்றி எதிலோ மாட்டிக்கொள்கிறது நண்பர்களே! அந்நாட்களில் நான் அப்படித்தான் மாட்டிக் கொண்டு அலைக்கழிந்தேன்.

 மகனின் உடல் மார்ச்சுவரியில் கிடந்தபோது கருணாவே தன் தோழர்களோடு வெளியில் நின்று அவனை ஒரு ராமுழுக்க காவல்க் காத்தான்.

என்மனம் வாசிப்பின் மீதும், கதை சொல்வதிலும் சாய்ந்தது. வாசித்ததை எனக்குப் பிடித்தமான நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என ஆர்வப்பட்டேன். ஏறக்குறைய இருபத்தைந்து கதை சொல்லலிலும் ஏதாவதுதொரு இருட்டில் புகையும் சிகரெட் வெளிச்சம் என் கருணாவுடையதாய் இருந்துவிடாதா? என என்  கண்கள் தேடும். நிராகரிப்புகளும், புறந்தள்ளல்களும் மாதிரி இந்த உலகில் வேறு துயரில்லை.

முறிந்துபோன காதலுக்கப்புறம் நாம் இன்னோருத்தியோடு வாழ்ந்து, புணர்ந்து, குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்து, அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுற்று வாழ்வை கடந்துவிடுவதில்லையா?அப்படித்தான் நட்பும்.





என் ப்ரியமான மஞ்சம்புல் வேய்ந்த  வீட்டை, முல்லைப் பந்தலோடு பிய்த்தெறிந்து, கல்வீடு கட்டச்சொல்லி மத்தியதர வர்க்க கௌரவம் என்னை உந்தித் தள்ளியபோது, பல தயக்கங்களுக்குப் பின் நானும் பலியானேன்.

புது வீடு திறப்பு விழாவிற்கு அப்போதைய அமைச்சர், எம்.பி.என்று எல்லோரும் வந்திருந்தார்கள். ஜெயமோகன் தொடங்கி கோணங்கி வரை எல்லோரும் அன்று என்னோடிருந்தார்கள்.

ரிப்பன் கட்டிய கதவுக்கு முன் நின்று என் கருணாவிடமே கத்திரிக்கோலைத் தந்து வீட்டைத் திறக்கச் சொன்னேன்.

கருணா, செல்வியின் தோழமை’ இல்ல திறப்பு விழா அழைப்பிதழில் பெரும் துயருற்ற இரவு அது. நானில்லையா? நானில்லையா? என என்னை நானே கேட்டுக்கொண்டேயிருந்தேன். நாளை வீடு திறப்பு. இன்றிரவு கருணா நீண்ட நாட்களுக்குப் பின் என் வீட்டிற்கு வந்தான். வீடு, நான், ஷைலஜா, வம்சி, மானசி, கருணா எல்லோரும் ஒருவருக்கொருவர் அந்நியமாகியிருந்தோம். அருகருகே இருந்த போதும் தூர தூரமாய் தண்டவளங்களைப்போல் விலகியிருந்தோம்.

 என்றுமே அந்த இடம்  அவனுக்கானது என உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது.

தன் வீட்டு திறப்பு விழாவிற்கு நாங்கள் வரவேண்டும் என நட்பழைப்பு ஒன்று தயங்கித்தயங்கி அவனிடமிருந்து வந்தது.

அந்த இரவும் நாங்கள் யாரும் உறங்கவில்லை. அந்த இரவில் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்குமானால் இவை ஐந்நூறுப் பக்கங்களைத் தாண்டியிருக்கும். சுந்தர ராமசாமியின் உயிரற்ற உடல் இந்தியாவுக்கு வந்து சேரும் முன் ஜெயமோகன் இருநூறு பக்க புத்தகத்தை முடித்தருந்தார். அது ஒரு வெறிகொண்ட எழுத்து. தன் வாழ்நாளில் முதன்முறையாக கொஞ்சம் குடித்திருந்தார். எனக்கு அந்த இரவில் எல்லாமும் தேவைப்பட்டது.

 வம்சியும் மானசியும் என்னருகே படுத்து விழித்திருந்து தங்கள் உடல் சூட்டு கதகதப்பில் என்னைக் காத்துக்கொண்டார்கள்.

 நாங்கள்தோழமைவீட்டிற்குப் போனோம். என் நண்பனின் பெருங்கனவு ஒன்று கட்டிடமாக எழுந்து நிற்பதை உவகையோடு தரிசித்தோம். அங்கிருந்த என் தோழர்கள் எல்லோருமே என் பழைய தோழர்களாகிவிட்டிருந்தார்கள்.

 வார்த்தைகள் ஒவ்வொருவருக்குள்ளும் தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட மீன் முள் மாதிரி சிக்கிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன்.

அங்கிருந்து வெகு சீக்கிரம் வெளியேறி வந்து நிலத்துக்குப் போய் கிணற்றில் குதித்து என் வெப்பத்தைக் கணித்துக் கொண்டேன்.

இப்போது விரிசல் கண்ட சுவர் உதிரவே ஆரம்பித்து விட்டது.

 நான் ஏன் இப்படித் தனிமைப்படுத்தப்பட்டேன். இயக்கத்தின் தொடர் களப்பணிகளில் இன்னமும் நீடித்தால் எழுதமுடியாது என அறிந்தே எழுத வந்தேன்.

 இதயத்தில் அடைப்பிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்து அறுவை சிகிச்சை அறையில் கிடத்தப்பட்டு மயக்க மருந்து தரப்பட்ட போது யார் யாரையோ நினைவுக்கு கொண்டு வந்தேன். என் பழைய நினைவுகள் எனக்குள் அறுந்து போக, அறுந்து போக ஒட்ட வைக்க முயன்று தோற்றுப்போனேன்.

அப்போது என் ஏழு புத்தகங்கள் வெளிவந்திருந்தன.

இதன் சாத்தியம் என் களப்பணிகளை விடுவித்துக் கொள்ளல் மூலமே எனக்கு நிகழ்ந்தது.

 இது ஏன் என் தோழமைகளுக்குப் புரியவே இல்லை. ஏன் எனில் அதில் பலரும் இலக்கியப் பரிட்சையமற்றவர்கள்.

தனிநபர் அரசியலேறிய மனம் வன்மம் கொள்ளவே செய்யும்.

படைப்பை மார்க்சிய அணுகுமுறையோடு மேற்கொள்ளுதல். அதன் அழகியலை எழுத்தில் அடிநாதமாக கொண்டுவருதல். பேச்சில் அதன் தர்கம் தடுமாறாமல் மேற்கொள்ளல். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

 நானோ என் எழுத்துக்களோ அரசியல் நீக்கம் செய்யப்பட்டவைகள் அல்ல. தீர்மானிக்கப்பட்ட  இடதுசாரி அரசியல் எனக்கு ஸ்திரமான ஒன்று. அது கட்சியின் நேரடி செயல்பாடுகளில், பிரச்சாரக் கூட்டங்களில், கார்டு புதுப்பித்தலில் அல்ல.

வெறும் வன்மத்தால் இறுகிப்போன மனங்களுக்கு இது புரியாது. கற்பாறைகளின் மீது நீங்கள் ரோஜா செடிகளை நட்டுவிடவே முடியாது!

இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் ICU-க்கு கொண்டுவரப்பட்டு கண்விழித்தபோது நான் பார்த்த முதல் மனிதன் ஜெயமோகன். மகன் வம்சியோடும் ஷைலஜாவோடும் நின்றுகொண்டிருந்தார். அவர் முகத்தை ஏறெடுத்தேன். பெரும் கவலை தோய்ந்த முகம். அந்த குளிரூட்டப்பட்ட அறையில் அவருக்கு வாய்த்திருந்தது.

 எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒரு அழுத்தமான கைகுலுக்கலில் எல்லா ஆறுதலையும் எனக்கு செலுத்திவிட்டுப்  போனார்.

ஆனால் நான் என் நண்பன் கருணா என்னைப் பார்க்க வரக்கூடும் என்ற உள்ளுணர்வில் காத்திருந்தேன்.

அவர் போன அடுத்த நாள் ஜி.ராமகிருஷ்ணன் வந்திருந்தார். அவர் கட்சியின் மாநிலச் செயலாளர். தினம் தினம் தோழர் .கே.பத்தநாபன் சிஐடியுவின் அகில இந்தியச் செயலாளர் என்னை தோலைபேசியில் விசாரித்தார்.

 பாலு மகேந்திரா சார் ஒரு தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் சொன்னார்,  நான் ஹார்ட் ஆப்பரேசன் செய்துகொண்டு விஜயாவில் படுத்திருந்தேன். அங்கிருந்து பத்து நிமிஷ நடை பிரசாத் ஸ்டுடியோ. என் அறைக்கதவு அடையும் போதெல்லாம் என் நண்பன் இளையராஜாவின் கைத்தொடுதலோ இது என என்மனம் எழுந்தடங்கும் பவா, அப்படியே கமலஹாசனையும் எதிர் பார்த்தேன். இருவருமே நான் டிஸ்ஜார்ஜ் ஆகும்வரை வரவில்லை, அதனாலென்ன அவர்கள் என் நண்பர்கள்.  நான் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்குக் கூட  போகாமல் நேராக ப்ரசாத் ஸ்டுடியோ போய் என் நண்பன் ராஜாவைக் கட்டிக்கொண்டேன்’.

 என் எழுத்துக்களை வாசித்து என் கதைகளை மட்டுமே கேட்டு, தான்சானியாவிலிருந்து வந்து, மலர் மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த ஷைலஜாவின் கைகளில் ஒரு லட்சரூபாயைத் திணித்துவிட்டு இன்றுவரை திரும்பி கூட பார்க்காத என் கவின்கேர் பாலாவைக் கூட மனம் இரண்டாம் இடத்தில் நிறுத்தியிருகிறது. முதலிடம் பழைய நட்புக்கு மட்டுந்தான் போல.

பாலுமகேந்திரா சாருக்கு கனிந்திருந்த மனம் எனக்கு வாய்த்திருக்கவில்லை. நான் நேராக 19.D.M.சாரோனுக்குத்தான் போனேன். கருணா வீட்டிற்கல்ல.

இக்கட்டுரை எழுத நான் கருணாவிடம் அனுமதிக் கேட்டேன்.



அது நான் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பி வந்தபோது உணர்வு மேலிட ஷைலஜா எனக்கு ஆரத்தி எடுத்த புகைப்படம். அதை நான் என்முகநூலில் பதிவிட்டிருந்தேன். அது ஒரு மதத்தின் வழிபாடோ, மூடநம்பிக்கையின் குறியீடோ இல்லை. அது பண்பாட்டின் மிச்சம்.

 எங்களுக்குள் இப்படி ஒரு உரையாடல் நிகழ்ந்தது. அது ஒரு ஈரமற்ற சொற்களாலான கட்டுமானம். எந்நேரமும் சரியலாம். நான் எழுதுகிறபடியும் பேசுகிறபடியும்தான் என் வாழ்வை வைத்துள்ளேன் என்பதற்கு, கருணா என் முக நூலிலிருந்து அந்தப் புகைப்படத்தை காட்டி நண்பர்களிடம் இதுதான் எழுதுகிறபடி வாழ்கிற லட்சணமா? என கேட்டிருக்கிறான். இருபது வருட வெப்பம் இன்னும் அந்த உடம்பில் கொதிக்கிறது.

 கிருஸ்தவர்களில் கூட பல நூறுபேர்கள் ஆரத்தி எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். தோழர்கள் தேர்தலில் பங்கெடுக்கும் போது ஆரத்தி ஏற்காத தோழர்களின் நெற்றிகளை யாராவது எனக்கு காண்பியுங்கள் தோழர்களே?

அது மட்டுமில்லை கருணா,

இந்த கிருஸ்துமஸ் அன்று அதிகாலையில் குளித்து, புது வேட்டிச் சட்டை போட்டு நான், ஷைலஜா, வம்சி, மானசி, கோணங்கி, பூபதி என்று எல்லோரும் தேவாலயத்துக்குப் போனோம். அது மதத்தை நோக்கிய எங்கள் நகர்வு அல்ல. இந்த டிசம்பர் பனியில் ஒரு அதிகாலை விழிப்பில் சக மனிதர்களின் அன்பில் கரைய, சங்கீதத்தை அதன் மதம் நீக்கி உள்ளருந்த. சர்ச் நடத்தி முடித்து என் நண்பர் ஜே.பி என் நெற்றியிலும் மார்பிலும் சிலுவைக் குறிகளையிட்டான். சிகப்பு கலரில் எப்பவோ படிந்த ஆரத்தி குங்குமமிடலின் மேலேயே ஒரு புகாருமின்றி சிலுவை போய் அமர்ந்து கொண்டது. மதங்களை நிராகரிக்க புதிதாய் இனி எங்களுக்கு வகுப்புகள் தேவைப்படாது ருணா. மனிதர்களை சேகரிக்கத்தான் நாம் இன்னும் பயில வேண்டியதிருக்கிறது.

 எழுதி எழுதி தீராத இந்த எழுத்தை இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன். என் நண்பன் பத்மநாபபுரம் அரவிந்தன் கவிதையோடு.

உனக்கும் எனக்குமான நட்பில்

விழுந்த விரிசல் - உன்

ஒரு சொல்லால் விளைந்தது

பிற்பாடு

நீ கேட்ட மன்னிப்புகள் அத்தனையும்

உன்னையே நிலைநிறுத்தி   

என்மீது கவிழ்ந்ததாய் இருக்க

விரிசல் விரிவடைந்து 

நீயோ நானோ பரஸ்பரம்

பார்ப்பதைத் தவிர்த்தும்

எதேச்சையாய் உன்னை எங்காவது

காணும் போதினில் இதயம் சுற்றி

வலையொன்று இறுக்கும்.

 கண்கள் தானாய் வேறிடம் நோக்கி

கால்கள் அதுவாய்த் திரும்பி நடக்கும்

மனதுள் மட்டும் ஏக்கம் புரண்டு

நீ அழைக்கும் குரல் கேட்க

காதுகள் விடைத்துக் கூர்மையாகும்

உனக்கும் வாய்வரை வார்த்தைகள் வரலாம்

அடக்கிக் கொள்கிறாய் என்னைப் போலவே

எது எப்படியாயினும் உன்னைப் பற்றி

தவறாய் எவரேனும் சொல்லும்போது

என்னையும் அறியாக்  கோபம் வரும் 

இன்னமும் உள்ளே

எங்கோ கிடக்கிறது உனக்கான

என் நட்பின் உதிரித் துளிகள்.

 

ஒரு வருடத்திற்குபின் இதோ இந்த டிசம்பர் 22ல்

உன் மரணத்தின் முன் இதைத் தொடர்கிற பலம் பெறுகிறேன் கருணா.

உன் வீட்டு வாசலில் அம்பேத்கர் படம் லேமினேட் செய்து மாட்டப்பட்டிருந்தது.  அம்பேத்கரின் மார்பில் சின்னதாய் ஒரு ரோஜாப்பூவிருந்தது.

இது உன்னால்மட்டுந்தான் முடியும் கருணா.

கம்யூனிஸ்ட் என்பவன் பதிவு உறுப்பினர் அட்டையிலோ, கார்டு  புதுப்பித்தலிலோ இல்லையென உன் புகைப்படப்பதிவே எனக்கு மீண்டும் ஒருமுறை  உணர்த்தியது. நம் ஆரம்ப நாட்களை, அதன் தோழமையைத் தந்தது.  

வீட்டிற்குள்  நம் அம்மா படத்திற்கருகில் மகன் சிபியின்  படத்தை லேமினேட் பண்ணி வைத்திருந்தாய்.

நீ எத்தனை ஈரம் கசியும் கம்யூனிஸ்டாக உள்ளுக்குள்  உருகியிருக்கிறாய்  என்பதை பல வருட பிரிதலுக்குப் பிறகும் உணர்ந்தேன் கருணா.

நான் உன்னைவிட வயதால் இளையவன்.  நான்தான்  உன்னை இடதுசாரி இயத்திற்கு அழைத்து வந்தவன். மற்ற எவரையும் விட உன்னைப் பற்றி எழுத, சொல்ல, பேச என்னிடமே ஏரளமான சொற்களுண்டு. அதனால் மட்டுமே  நான் உன் மேய்ப்பனாகி விட முடியாது.

உன் ஆகச்சிறந்த செயல்களால் நீயே எப்போதும் என் மேய்ப்பனாகிறாய்.