Wednesday, July 27, 2016

தமிழ் நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை






ஆட்டகளத்தை விட்டகன்று வெகுதூரம் விலகிவந்து வெற்று மைதானத்தை வெறித்து பார்க்கும் ஆட்டக்காரனுக்கு மட்டுமே பழைய நினைவுகள் அலை மாதிரி மேலெழுந்து வந்து அவனை அலைக்கழிக்கும்.

நான் என் காலடியில் ஸ்பரிசத்திலிருக்கும் பந்தோடேயே என் மைதானம் புதைத்து வைத்துள்ள நினைவுகளை மீட்டெடுக்கிறேன்.





காலமோ, வருடமோ, தேதியோ ஒருபோதும் ஒரு கலைஞனின் நினைவுகளில் தங்குவதில்லை. எம்.டி.வி தன்இறுதி யாத்திரைநாவலில்  “வியாபாரிக்கு வெறும் எண்கள் போதும், எழுத்து எதற்கு? எனக் கேட்டு என்னை புரட்டிப் போட்டிருக்கிறார்.

எண்பதுகளின் பிற்பகுதிகளில் தமிழிலக்கியம் உச்சத்திற்கு சென்ற காலம் என்பது என் கணிப்பு. தமிழகத்தின் சகல திசைகளிலிருந்தும் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கலைஞர்களும் பெரும் உக்கிரத்தோடு இயங்கிய நாட்கள் அவை. என்னைப் போல கல்லூரியில் படித்தும், முடித்தும், வேலையற்றவர்களாக அலைந்தும் திரிந்தும் நாட்களை நகர்த்திய பலரையும் மனப்பிழற்வாளர்களாக மாற்றாமல் காப்பாற்றியது அப்போது சிறுபத்திரிகைகளில் வெளிவந்த காத்திரமான படைப்புகள் மாத்திரமே.

புது யுகம் பிறக்கிறது என்ற சிறு பத்திரிகையில் வந்த பாதசாரியின்காசிஇன்றளவும் என்னை பிறாண்டுகிறான். கோவை ஞாநியின்நிகழ்எஸ்.வி.ஆரின் ‘இனி இன்றுஎல்லாம் அப்போது தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷங்கள்.

இவைகள் எங்களுக்குள் ஏற்படுத்திய பேரலைகள் அடங்காதவை. அதை எங்கள் சக மனிதர்களுக்கு எப்படியாவது கடத்திவிட வேண்டுமென்ற எங்கள் யத்தனிப்பே திருவண்ணாமலையில் நாங்கள் துவங்கியகலை இலக்கிய இரவுஎன்ற சிறு முயற்சி.
எல்லா பெரும்நிகழ்வுகளும், வரலாறும் இப்படி ஏதோ ஒரு மூலையில் உருவான சிறு பொறி மட்டுமே.  

ஒரு திருமண மண்டபத்தில் ஐநூறுக்கும் குறைவானர்களோடு ஆரம்பித்தது எங்கள் முதல் கலை இரவு. ஐந்தடிக்கும் குறைவான உயரமேயுடைய ஒரு ஆய்வு மாணவனாக கே..குணசேகரன் என்ற பாடகனின் பாடல்கள் பல நூறு மனிதர்களை உள்ளிழுத்து வந்தது. கையில் ஒரு உடுக்கையோடு அவன் எழுப்பிய உணர்வு பெருக்கில் அம்மண்டபம் தளும்பியது.

கொண்டாட்டமும் இசையும் நிரம்பிய அந்த இரவில்தான் எங்கள் அடுத்த நிகழ்வுக்கான நிழ்விடம் நான்கு பக்கமும் சுவர் எழுப்பப்பட்ட ஒரு மண்டபம் அல்ல என்றும், அது ஒரு திறந்த வெளி மைதானமாக பல ஆயிரம் மனிதர்களை சங்கமிக்க வைக்கும் அதன் நீளமும் அகலமும் அளவிட முடியாததாக இருக்க வேண்டும் ன்றும் முடிவெடுத்தோம்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் நாங்கள் ஒன்றிணைந்தோம்.








எங்கள் முன் டிசம்பர் 31 என்ற தேதி கேட்பாரற்று கிடந்தது. வெற்று கொண்டாட்டங்களாலும், பீர்பாட்டில்களின் உரசும் சப்தங்களாலும், சைலன்சர் கழிற்றிவிடப்பட்ட பைக்குகள் வெளியேற்றும் சப்தத்தாலும் நிறைந்திருந்த அந்த ஒரு இரவை அர்த்தமுள்ளாதாக்க வேண்டும் என்ற எங்கள் ஒருமித்த சிந்தனை இரு மாதங்களுக்கு முன்பே வேர்பிடிக்க துவங்கிவிட்டிருந்தது.

ஊரின் எல்லா மையங்களும் தொட்டுக் கொள்ளும் காந்தி சிலை மைதானம் எங்கள் ஆட்டக்களமாக்கப்பட்டது.

இயக்கம் ஒரு மகத்தான செயலை முன்னெடுக்கும் போதும் யாரோ சில தனி மனிதர்களின் அர்பணிப்பும், செயலூக்கமும் தான் அதை முழுமையடைய வைக்கிறது.

அப்படித்தான் என்னோடு தமுஎசவுக்கு கிடைத்த இருவேறு ஆளுமைகளென 
எஸ். கருணாவையும், ஓவியர் பல்லவனையும் சொல்லலாம்.

ஓவியர்கள் சல்வடார் டாலி, பிக்காசோவில் ஆரம்பித்து ஜான் ஐசக் அருமை ராஜன், இசக்கி அண்ணாச்சி என்று விரிந்த அப்பட்டியலிருந்து ஆகச் சிறந்த ஓவியங்களையும் புகைப்படங்களையும் தேர்வு செய்வோம். அப்படங்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு ஓவியர் பல்லவனிடம் ஒப்படைக்கப்படும்.

இவர் இதை அங்கிகரீக்கிறாரா? மறுதலிக்கிறாரா? என யாராலும் அவதானிக்க முடியாததொரு மனநிலையில் அன்றிரவு ஒன்பது மணிக்கு எங்களை அவரின் கலைக் கூடத்திற்கு வரவழைப்பார்.

நானும் கருணாவும் வேலைக்கார சிறுவர்கள் போல அங்கு போய் நின்றிருப்போம்.

பத்து மணிவரை கலை, இலக்கியம், விவாதம் என நீளும். சட்டென்ற ஒரு விநாடியில் பல்லவன் எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு கறுப்பு மையிட்ட தூரிகையால் கண்ணாடியில் நாங்கள் காலையில் தந்திருந்த ஓவியத்தையோ, புகைப்படத்தையோ வரைய ஆரம்பிப்பார்.

சில நிமிடங்கள்தான். ஒரு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்ட அக்காண்ணாடியின் முன் அளவெடுக்கப்பட்ட தூரத்தில் நின்று நானோ கருணாவோ டார்ச் லைட் வெளிச்சத்தை கண்ணாடியின் மீது பாய்ச்சுவோம்.





நாம் நம்பமுடியாததொரு அளவில் அப்படம் எங்கள் முன் நிறுத்தப்பட்ட 40 அடி நீளமும் 20 அடி அகமுள்ள ஒரு துணி பேனரில் விரியும்.

பல்லவன் வெறிக்கொண்டு இயங்கும் தருணமது. ஒரு கறுப்புமை தடவிய துரிகை இப்படியும் அப்படியுமாக அந்த பெரிய பேனரில் குதியாட்டம் போடும்.

அப்போது எங்கள் யாரிடமிருந்தும் ஒரு சொல்லும் எழாது. ஒரு ஓவியன் கோரும் மௌனம் அது.

எதுவும் பேசாமல் பின்னிரவுகளில் பிரிந்து செல்வோம். வசிப்பிடங்கள் கேவலமாக எங்களை எதிர்கொண்ட நாட்களும் அதுவே.

இப்படியான துவக்கத்தில்தான் திருவண்ணாமலையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு பிரமாண்டமான பேனர்களும் உருவானது. அது மக்களை ஈர்த்தது. போக்குவரத்தை நிறுத்தியது. காவல்துறையை தூண்டியிட்டது. அரசை கவனிக்க வைத்தது.

இதில் எங்களுக்கு  எந்த சம்மந்தமுமில்லை என்பது போல நாங்கள் தோழர்களோடு ஒவ்வொரு கடையாக ஏறி  நிதி வசூலிப்போம். பத்து ரூபாய் தருபவன் மனிதன், நூறு ரூபாய் தருபவன் வள்ளல் ஆயிரம் ரூபாய் தருபவன் கடவுள்அதற்கும் மேலே தருபவன் கடவுளுக்கும் மேலே என மனிதர்களை மனம் பிரிக்க கற்றுக் கொடுத்தது.

மாலை ஆறுக்கும் ஆறறைக்குமான இடைவெளியில் கரிசல்குயில் கிருஷ்ணசாமியோ, சுகந்தனோ, தங்கள் காந்தக் குரலால் பாடத்துவங்குவார்கள். அது மனிதர்களை தூண்டில் போட்டு இழுத்துவரும். காந்தி சிலை மூலையில் நிகழ்ந்த எங்கள் இரண்டாவது கலையிரவு பத்தாயிரத்துக்கும் மேல் பார்வையாளர்களால் நிரம்பி தளும்பியது.




மேடையில் நிகழும் நிகழ்வுகளின் அடர்த்தியில் ஒரு துளியும் கேளிக்கைகள் நுழைந்து விடாமல் அடைகாப்போம்.

அசோகமித்ரன், பிரபஞ்சன், ராமகிருஷ்ணன், கோணங்கி என்று தமிழின் இன்றைய முக்கிய ஆளுமைகளில் பலரும் எங்கள் கலை இரவுகளின் பங்கேற்பார்களும், பார்வையாளர்களும்.

பாரதி கிருஷ்ணகுமாருக்கும், கரிசல் கிருஷ்ணசாமிக்கும் இதை பல ஆயிரம் னிதர்களுக்கு கொண்டு போனதில் எப்போதுமான பெருமிதங்கள் உண்டு. மாவட்டத்தின் உள்ளடுக்குகளில் உறைந்து கிடந்த கிராமங்களிலிருந்து நம் மரபான பல கலைகளை மீட்டெடுத்தோம்.

அதுவரை மரணவீடுகளில் மேளமடித்துக் கொண்டிருந்த பாப்பம்பாடி ஜமாவை கம்பீரமானதொரு கௌரவத்தோடு கலை இரவு மேடையேற்றினோம்.

பொரசப்பட்டு தண்டா போன்ற மாவட்டத்தின் ஏதோ ஒரு மூலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பழங்குடி மக்களின் ஆட்டகலைகளான பிரியாட்டம், மணியாட்டம்லம்பாடியாட்டம்  என நகர பார்வையாளர்கள் நம் மண்ணின் பாரம்பரிய கலைகள் குறித்து பிரமிப்படைந்தனர்.

எஸ்.ராமகிருண்ணன் ஒரு கூட்டத்தில் பரவசப்பட்டு திருவண்ணாமலையை தமிழ்நாட்டின் இலக்கிய நகரமென ப்ளிங் நகரைப்போல அறிவிக்க வேண்டுமென  சொன்னார். அத்தனை மௌனத்தோடும், கொண்டாடத்தோடும் எங்கள் பார்வையாளர்கள் எதிரில் நடக்கும் நிகழ்வுகளை உள்வாங்கிக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டின் எல்லா திசைகளிலிருந்தும்  நண்பர்கள் மூன்று இரண்டு நாட்களுக்கு முன்பே புறப்பட்டு வருவார்கள்ஒவ்வொருவரும் ஒரு வேலையை அவர்களாகவே பகிர்ந்து கொள்வார்கள்.

திருபரங்குன்றத்திலிருந்து சு. வெங்கடேசனும், தேனியிலிருந்து பாஸ்கர் சக்தியும், ஒசூரிலிருந்து போப்பும் திருவண்ணாமலையிலிருந்து கலையின் வீரிய விதைகளை தங்கள் ஊருக்கு கொண்டு போனார்கள். கற்பாறைகளின் மேலல்ல, பதப்படுத்தப்பட்ட மனித மனங்களில் அத்தாய் விதைகள் விதைக்கப்பட்டன. மனித மனதின் ஈரம் காற்றில் அவ்விதைகளை தமிழகமெங்கும்  தூவிவிட்டது. அவைகள் செடியாய், பூவாய், காயாய், பழங்களாய், காய்த்து தொங்கின காலமே தமிழகத்தின் கலை இலக்கியக் காலம்.

படைப்பூக்கம் உள்ள மனிதர்களுக்கு திரும்ப நிகழ்தல் எப்போதுமே சலிப்பூட்டக் கூடியவைகள்தான். அச்சலிப்புகள் எங்கள் மேல் பரவுதற்குள் நாங்கள் எங்கள் வடிவங்களை மாற்றிக் கொள்ள தீர்மானித்தோம். கோணங்கியும், போப்புவும் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்ட வடிவ கூட்டத்தில் உட்கார்ந்திருந்த பதினெட்டு பேர்களில் இருவர். அக்கூட்டத்தில் தான் இந்திய அளவிலான இலக்கிய ஆளுமைகளை  டேனிஷ்மிஷன் பள்ளி மைதானத்திற்கு வரவழைத்து நாற்காலிகள் போடாமல், மைக் வைக்காமல் அவர்களை மனம்  திறந்து உரையாட வைப்பதென்றும், அக் கூடுகைகளுக்குமுற்றம்என ஞானஸ்நானம் கொடுப்பதென்றும் முடிவெடுத்தோம்.






ஒரு காவி லுங்கியை மட்டும் கட்டிக் கொண்டு புகைத்து முடித்த பலநூறு சிகரெட் துண்டுகளின் மிச்சங்களோடு கருணா எழுதி முடித்த பல நூறு தட்டிபோர்டுகள் நகரையே வேறு ஒரு கலாபூர்வமான உலகத்திற்கு அழைத்துப்போனதும் அந்நாட்களில்தான். சுகுமாரன், சமயவேல், கலாப்பிரியா, கல்யாண்ஜியின் கவிதைகளும் புதுமைபித்தனில் துவங்கி கந்தர்வன் வரையிலான  ஆக சிறந்த  உரைநடைகளும் அத்தட்டி போர்டுகளில் உயிர்பெறும். இதுவரை தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலேயும் அப்படி நிகழ்ந்ததாக எனக்கு நினைவில்லை. துவக்கமும் முடிவும் அதுமட்டுந்தான்.

கலை இரவுகளையொட்டி, பல்வேறு நவீன ஓவிய புகைப்பட புத்தக கண்காட்சிகள் விரிந்து நகரத்தையேங்களுக்குக்குள் இழுத்துக் கொண்ட காலமும் அது மட்டுமே.
பல ஆயிரம் அடிகள் நீண்டு விரிந்த டேனிஷ் பள்ளியின் மைதானத்துக்கிடையே உருவாக்கப்பட்ட அச்சிறு  மேடையே எங்கள் முற்ற மேடை.

சச்சிதானந்தனில்  ஆரம்பித்து பால் சக்காரியா, ஜெயகாந்தன், பாலசந்திரன் சுள்ளிக்காடு, பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், அம்பை என கூடிக் கொண்டே போன அந்த படைப்பாளிகள் பட்டியல் இப்பொழுது நினைத்தாலும் பிரம்மிப்படைய வைப்பவைகள். எந்த பாசங்களுமற்று மனம் திறந்து உரையாடிய அந்த உரைகள் இப்போதும் நிலைத்து நிற்பவை.




பல ஆண்டுகள் மௌனம் காத்த பின்னொரு மழை ராத்தியில் வெறும் அறுபது பார்வையாளர்களோடு சுந்த ராமசாமி பகிர்ந்து கொண்ட உரை அவராலேயே அதற்கும் பிறகும் முயற்சிக்க முடியாது. அம்மேடையில் என்னென்னவோ நிகழ்ந்தது.
ஜெயகாந்தன் சொன்னார்.

 “என் பத்தாண்டுகளில் இவ்வளவு நிதசர்னமாக நான் பேசியதில்லை. இம்மேடையும் அதன் அலங்காரமற்ற எளிமையுமே என்னுள் இருந்து எல்லாவற்றையும் பிடுங்கி  எடுத்தது.”

அக்காலங்கள் தமிழிலக்கிய உலகில் ஏற்படுத்திய அதிர்வுகள் அதைக் கடந்து சென்ற ஒவ்வொருவரின் மனதிலும் இன்னமும் தேங்கியிருக்கும். முற்ற நிகழ்வுகள் வெறும் கூட்டங்கள் அல்ல. காற்றின் திசைகளில் கவிதைகள் கலந்த ஈரம் மிக்க நாட்கள் அதுவே.

இந்நாட்களில் இதற்கு சற்றும் குறைவின்றி, கலை இலக்கிய பெருமன்றமும், இன்னும் சில இலக்கிய அமைப்புகளும் நகரின் ஏதோ ஒரு இடத்தில் தங்கள் படைபூக்கமிக்க நாட்களை பதித்துக் கொண்டேயிருந்தார்கள்.





பங்கெடுக்கவோ, பார்வையிடவோ தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் வந்த படைப்பாளிகளும், கலைஞர்களும், நிகழ்வு முடிந்து நாலைந்து நாட்களும் எங்களுடனே தங்கியிருந்து, நிலம், திப்பக்காடு, நிறை கிணறு, நடைபாதையென இலக்கியம் பேசி பேசி தீர்த்த காலங்கள் அவைதான்.

ஜெயமோகனும், ராமகிருஷ்ணனும் கோணங்கியும் முக்கோண வடிவில் உட்கார்ந்து ஒரு இரவெல்லாம் சண்டை போட்டதும், அவர்களுக்கு ணிக்கொருதரம் நான்டீஊற்றித் தந்ததும், அதிகாலை பிரியும்போது ஆளுக்கொரு திசையில் பஸ் ஏறி போனதும் அப்படியே நினைவில் தங்கி ஒன்று.

இந்நிகழ்வுகள் முடிந்து அவர்களுக்கு பயணச் செலவுகளுக்கு கொடுக்க காசில்லாமல் லாரிகளில் ஏற்றி அனுப்பியிருக்கிறோம். பஸ் ஸ்டாண்டில் பல மணி நேரம் நிற்க வைத்துவிட்டு கடன் கேட்டு அலைந்திருக்கிறோம். ஜே.கே.வை சென்னை பேருந்தில் ஏற்றி உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே போக நிர்பந்தித்திருக்கிறோம். இவையெல்லாம் இலக்கிய ஆர்வத்தின் பொருட்டே என்ற மேன்மையான புரிதலில் அப்பெரும் படைப்பாளிகள் மனம் அவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

நீண்ட இப்பயணத்தில் காளிதாஸ், கவிஞர் பீனிக்ஸ், சாமிநாதன், ஷைலஜா, ஜெயஸ்ரீ, ரேணுகோபால், பாலாஜி, சந்துரு, குழந்தைவேல், வேடநத்தம் ராஜேந்திரன், அன்பரசன், சோமு என நினைவில் நின்றும், அகன்றும் பல பெயர்களின் உழைப்பு உள்புதைந்து கிடக்கிறது.

இந்நகரம் ஒரு பேரழகியின் வசீகரத்தோடு நின்று எல்லா திசைகளிலிருந்தும் படைப்பாளிகள் கலைஞர்களை கை நீட்டி அழைத்துக் கொண்டேயிருக்கிறாள். இதழ் குடிக்க அனுமதிக்கிறாள். எலும்புகள் நொறுங்க அவள் அணைப்பிலிருந்து இன்றளவும் எங்கள் எவராலும் விடுபட முடியவில்லை என்பதே உண்மை.

அதன் தொடர்ச்சிதான் இப்போதும் எப்போதாவது முற்றத்தில் ஒரு இளம் படைப்பாளிகள் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. என் வீட்டு மாடியில்நிலம்என்ற பெயரில் ஒரு இலக்கிய கூடுகை தொடர்கிறது. ‘டெண்ட் கொட்டாய்என்று பெயரிட்டு உலக திரைப்படங்களை எங்கள் குழந்தைகள் வம்சியும் மானசியும் அவர்களின் நண்பர்களான ஷபி, கிருஷ்ணமூர்த்தி, லோகேஷ் என இணைந்து வீட்டு மொட்டை மாடியின் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.

நானும் என் நண்பர் எஸ்.கே.பி. கருணாவும் இணைந்துடயலாக்என்ற பெயரை மகாத்மா காந்தியிடமிருந்தே பெற்றோம். எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிடலாம் என்று சொற்களின் மீதான ஆழமான நம்பிக்கையில் மிக ஆழமாக ஊனப்பட்ட வீரிய விதை அது.

சேகர் தத்தாத்ரியின் புலிகள் குறித்த ஆவணப்படத்தையும், புலிகள் யாருக்காக? என்ற சமீபத்தில் மறைந்த ஆண்ட்டோவின் படத்தையும் ஒரே இடத்தில் திரையிட்டு சொற்களின் வீரியத்தை நிரூபிக்க முயன்ற நிகழ்ச்சிகளும் எங்களிடம் உண்டு.
ஒரு உறை மௌம் என்னை ஆக்ரமித்தபோது எப்படியாவது அதிலிருந்து மீள வேண்டும் என்ற உந்துதலில் நானும் என் நண்பன் ஜே.பி.யும் சேர்ந்து குவா வாடீஸ் என்ற கட்டிடங்கள் புறந்தள்ளப்பட்ட பல்சமய உரையாடல் மையத்தின் மரங்களும் செடிகளும், பூக்களும் கூடி குதூகலிக்கும் வளாகத்தில்,

என்கதை கேட்க வாங்கஎன்ற நிகழ்வை ஆரம்பித்தோம். ஐம்பது பேரில் ஆரம்பித்து அதுவும் ஐநாறு பார்வையாளர்களை தாண்டிவிட்டது. அது கதைகளை, வாசிப்பை, எழுத்தை உயிர்ப்பிக்கிறது. என் சக மனித ஸ்பரிசத்தை தினம் தினம் வேண்டுகிறது. மனித சந்தோஷத்தையும், துக்கத்தையும், துரோகத்தையும் பேரன்பையும் அது எப்போதும் நதியில் அள்ளப்பட்ட ஒரு கை நீரால் ஈரப்படுத்துகிறது. மானுடத்திற்கு கலை இலக்கியம் இதைவிட வேறெதை தந்துவிட முடியும்?

நன்றி தடம் மாத இதழ்