Monday, July 25, 2016

சந்தோஷ் ஏச்சிக்கானம்

இலக்கியம் என்பதன் பொருள் வெளிச்சம். இலக்கியத்தின் தர்மம் துர்நாற்றங்களிலிருந்து மனிதனை சுகந்தத்தை நோக்கி அழைத்துச் செல்வதே. அதன் மிகப்பெரிய எடுத்துக் காட்டு மகாபாரதத்திலேயே இருக்கிறது.

மகாபாரதத்தில் சத்யவதி என்ற கதாபாத்திரத்தை உங்களுக்குத் தெரியும். அவள் ஒரு படகோட்டி. சுழித்தோடும் கங்கை நீரில் மனிதர்களை இக்கரைக்கும் அக்கரைக்கும் அழைத்துச் செல்லும் பேரழகியான படகோட்டி அவள்.

அவள் உடலிலிருந்து எப்போதும் வீசும் மீன் கவிச்சியின் பொருட்டு யாரும் அவளை நெருங்கவுமில்லை, காதலிக்கவுமில்லை.

ஒருநாள் பராசர முனிவர் சத்யவதியை சந்திக்கிறார். அவள்மீது மோகம் கொண்டு அவளும் சம்மதிக்க, வியாசன் என்ற குழந்தை பிறக்கிறது. இவ்வுலகின் மிகப் பெரும் தத்துவ ஞானியும் எழுத்தாளானும் தான் வியாசன் என்பது நமக்குத் தெரியும். வியாசன் பிறந்து பூமியில் விழுந்த அந்நிமிடம் அதுவரை சத்தியவதியின் உடலிலிருந்த மீன் வீச்சம் அவளை விட்டகல்கிறது.



ஒருவன் மீது கலை அல்லது இலக்கியம் படியும்போது அவனுள் அதுவரையிருக்கும் எல்லா துர்நாற்றமும் அகன்று போகிறதென்று இக்கதையிலிருந்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.

அதன்பின் சத்தியவதிக்குப் பிறந்த இரண்டு மகன்கள்தான் சித்தராங்கதனும் விசித்ரவீரியனும். அவர்கள் அம்பிகா, அம்பாலிகா என்ற இரு இளவரசிகளை திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் வெகுவிரைவிலேயே இருவருமே இறந்துவிடுகின்றனர். இளவரசிகள் இருவரும் இளம் விதவைகளாகவே, சத்தியவதி பீஷ்மரிடம் மீண்டும் கேட்கிறாள்.

அரசை வழி நடத்த இனியும் எனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும். புதிய தலைமுறை உருவாக வேண்டியிருக்கிறது. அதற்கு என்ன செய்வது?

பீஷ்மரிடம் எந்த பதிலுமில்லை.



அப்போது சத்தியவதி தன் உள்ளுணர்வில் ஒன்றைக் கண்டடைகிறாள். எனக்கு ஒரு மகன் இருக்கிறான். முன்னெப்போதோ பராசர முனிவரின் மூலம் பிறந்த மகன் அவன். ‘அம்மா நீ எப்போது என்னை நினைக்கிறாயோ, அந்நிமிடம் நான் உன்னை வந்தடைவேன்எனச் சொல்லி பிறந்து விழுந்த அந்நிமிடமே அங்கிருந்து மறைந்துபோன வியாசன். சத்தியவதி அவனை மனதால் நினைக்க, அந்நிமிடமே அவன் வந்து அவளையடைகிறான்.

வியாசன் அந்த இரு விதவைகளையும் மணந்துகொள்ள சம்மதிக்கிறான். அம்பிகையும், அம்பாலிகையும் வியாசன் மிக வலிமையுடைய, திடகாத்திரமான, பேரழகனான ஒருவன் என நினைத்துக் கொண்டிருக்க, வியாசன் அப்படியெல்லாம் இருக்கவில்லை. ஐந்தடிக்கு
ம் குறைவான உயரமும், உருவத்தால் பொருட்படுத்த முடியாத குரூபியான உடல் தோற்றமும், வியர்வை நாற்றம் வீசுபவனுமாக இருந்தான்.

அம்பிகையின் படுக்கையறைக்குள் வியாசன் நுழைய, அவன் உருவத்தைக் கண்டு பயந்து அவள் தன் கண்களை மூடிக்கொள்கிறாள். அவர்களிருவரின் உறவில்தான் குருடனான திருதராஷ்டிரன் பிறக்கிறான்.

கலை, இலக்கியத்துக்கு எதிராக யார் தன் கண்களை மூடிக் கொள்கிறார்களோ அவர்கள் குருடர்களாக மாறுகிறார்கள். அவர்களை இருண்மை வந்தடைகிறது. அவர்களிலிருந்துதான் யுத்தங்கள் உருவாகின்றன. அவர்களால்தான் சமூக அமைதி குலைகிறது என்று மகாபாரதம் சொல்கிறது.

அடுத்து அம்பாலிகை வருகிறாள். வியாசனைப் பார்த்த முதல் பார்வையில் அவள் வெளிறிப்போகிறாள். அவளுக்கு ஆண்மையற்ற பாண்டு பிறக்கிறான். குருடனிடமிருந்தும், ஆண்மையற்றவனிடமிருந்தும் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்டவர்களால்தான் நாம் தொடர்ந்து ஆளப்படுகிறோம். இவர்களின்மூலம் நாம் எதையும் கண்டடைவதில்லை. உற்பத்தியற்ற, அக இருளடைந்துள்ள இவர்களுக்கு எதிரான போர்ப் பிரகடனதம்தான் கலையும் இலக்கியமும்.

எப்போதும் பாவப்பட்டவர்களின், பசித்தவர்களின் பக்கம் நிற்கும் ஒரு மாபெரும் சக்தியாக இலக்கியம் இருக்க வேண்டும். அத்தகைய ஒரு சக்தியுள்ள புத்தகம்தான்நிலம் பூத்து மலர்ந்த நாள்பசித்தவர்களின் பயணம்தான் அந்தப் புத்தகம். வன்முறைக்கும் வேதனைக்கும் ஆளாக்கப்பட்டவர்களின் பயணம். எங்கேயும் ஒரு துணையுமற்ற பெரும்பாணர்களின், பாடகர்களின் ஒரு நீண்ட பயணமது.




-

திருவண்ணாமலையில் மனோஜ் குரூரின் ‘‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’’ (தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ) நாவலை வெளியிட்டு எழுத்தாளர் சந்தோஷ் ஏச்சிக்கானம் பேசியதன் மிகச்சுருங்கிய வடிவம்.

No comments:

Post a Comment