Wednesday, July 6, 2016

பெருமரங்கள் வீழ்கின்றபோது…


மரத்தை வெட்றதும்
மார அறுக்குறதும் ஒண்ணுதான்யா
-    நம்மாழ்வார்

மலை சுற்றும் பாதையைச் சுற்றிலுமுள்ள பல நூறு மரங்கள் ஜே.சி.பி.யால் வேரோடு பிடுங்கி சாய்க்கப்படுகின்றனநாளை காலை ஆறு மணிக்கு தங்கள் எதிர்ப்புக் குரலைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் மலை சுற்றும் பாதையில் சந்திக்கலாம்” என்ற குறுஞ்செய்தி என்னை அடைந்தபோது இரவு பதினோரு மணியிருக்கும்ஆறு மணிக்குப்  போகும்போது நானும் வருவேன் என அடம்பிடித்த என் மகள் மானசி அடுத்த ஐந்தாவது நிமிடம் உறங்கிவிட்டாள்நான்தான்  தூக்கம் வராத நேற்றைய இரவில் இதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு அரசால் எப்படி எந்த முன் யோசனையோ பின் விளைவுகளோ இன்றி ஒரே உத்தரவில் இயற்கை பூமிக்குக் கொடுத்த இத்தனைப் பெரிய வரத்தை அழித்துவிட முடிகிறதுஅது என்னவெல்லாம் பெயர் கொடுத்துத் தன்னை நாகரீகமாகக் காட்டிக் கொள்ள முடிகிறதுவிரிவாக்கம்செப்பனிடல்நவீனம்அடிப்படை வசதி இப்படி
ஐந்தரைமணிக்கு எழுந்து மகள் மானசியைப் பார்த்தேன்அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்எழுப்பாதேயென ஒரு தந்தையின் மனம் தடுத்தது.




நான் தனியாளாக என் பைக்கில் சமுத்திர ஏரிக்கரை  வழியே மலை சுற்றும் பாதையை அடைந்தபோது நூற்றுக்கும் மேலே மனிதர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்எல்லோர் முகங்களிலும் தூக்கமின்மையும்பதட்டமும்இழந்த சோகமும் பதிந்திருந்தன.

அவர்களில் பலபேரை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்மருத்துவர் சீதாஎழுத்தாளர் சங்கீதா ஸ்ரீராம்குக்கூ சிவராஜ்புகைப்படக் கலைஞர்கள் தேவ் குகைவினோத் பாலுச்சாமிகவிஞர்குமார் அம்பாயிரம் என அவர்கள் திருவண்ணாமலையின் எளிய அடையாளங்கள்.

எங்களுக்குள் கைகுலுக்கல்கூட இல்லைவிரைவான செயல்திட்டங்கள் மட்டுமே எங்கள்முன் இருந்த ஒற்றை அஜெண்டாநவீன் அக்கூட்டத்தைத் துவக்கினார்.

இல்லைஒரு சிறு தீக்குச்சியைக் கொளுத்தி எங்கள் முன் போட்டார்தீ மளமளவெனப் பரவியதுஎங்கள் பின்னணியில் மலை ஒரு பெரு யானையைப் போல் படுத்துக்கொண்டு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்ததுஅதன்முன் நேற்றைய இரவில் முறித்துப் போடப்பட்டபசும் மரங்களின் வேர்கள் செத்த மாடுகளைப் போலக் கிடந்தனவார்த்தைகளற்ற சோகம் எங்களுக்கான இடைவெளியை நிரப்பிக் கொண்டது.

ஏழுமணிக்குள் கூட்டம் நூற்றி ஐம்பதைத் தாண்டியதுவெளிநாடுகளிருந்து இங்கு வந்து வசிக்கும் பலநாட்டு மனிதர்களும்கைக்குழந்தைகளோடு வந்திருந்த பெண்களும் அக்கூடுகையை அடர்த்தியாக்கினார்கள்.

பத்து மணிக்கு கலெக்டர் இது விஷயமாகப் பேச அழைத்திருக்கிறார் என்பதே அப்போதைக்கான சிறு ஆறுதல் செய்தியாக இருந்ததுஅரசு எந்திரத்தின் ஒரு சிறு அசைவும் எளிய மனிதர்களுக்குக் கிடைக்கும் வரம்தானே!

ஒரு தடுத்தலுக்காக வந்தவர்கள் அப்படியே திரும்ப மனமின்றி ஒருவர் கரத்தை இன்னொருவர் பற்றி மனித சங்கிலியாகப் பத்து நிமிடம் நின்றோம்.




அப்போது நீடித்த மௌனத்தில் உணர்வு மேலிட உடைந்த கலைஞர்களின் பலவீனமான கண்களை கவனித்தேன்.

காலை நடைப் பயிற்சிக்காக வந்த பலரும் எங்களுக்குக் கைகொடுத்து நின்றார்கள்கிராமங்களில் சொல்வார்கள் முட்டு கொடுத்து நிற்பதெனஎத்தனை பலஹீனமான பலகைகளையும்  ஒரு சிறு முட்டு தாங்கிக் கொள்ளும்வழியில் வந்த மனிதர்களும்வேடிக்கை பார்த்த துறவிகளும் எங்களுக்கு முட்டு கொடுத்து நின்று எங்களை பலப்படுத்தினார்கள்.

தன் இன்றைய வேட்டையைத் துவங்க ஒரு மஞ்சள்நிற அரக்கனைப் போல அந்த       ஜே. சி. பி. எந்திரம் எங்களைத் தொட்டுக்கொண்டு வந்து உறுமியது. எங்கள் எதிரி இத்தனைப் பக்கத்திலா எனக் கோபமேறிய கைகளோடு எங்கள் தோழர்கள் பலர் அதன் மீதேறி மிதித்தார்கள். அது தன் எந்திர உறுமலை நிறுத்தித் தொலைத்தது.

இன்று பத்து மணிக்கு கலெக்டர் எங்களுடன் பேசும்வரை எந்தத் தாவரத்தையும் தொட வேண்டாமென அதன் ஓட்டுநரிடமும், மேற்பார்வையாளரிடமும் தோழமைக் குரல்கள் கோரிக்கை வைத்தன.

ஒத்துக் கொண்டது மாதிரி அது திரும்பிப் போனதை எங்களில் பலரும் நம்ப மறுத்தார்கள். அதிகாரம் ஒருபோதும் எளிய மக்களின் குரல்களுக்குப் பணியாது. பணிவது மாதிரி பதுங்கும். அது சமயம் கிடைக்கும் தருணத்தில் அதன் ஆயிரம் மடங்கு பலத்தோடு அதே மக்கள்மீது பாயும். அதுவரை அது அடைகாத்த வன்மத்தை ஆத்திரத்தோடு துப்பும்.




இன்று காலையும் அதே நியதிதான் நடந்தேறியது. திரும்பிப் போன அந்த எந்திரம் தன் எஜமானர்களின் உத்தரவின் பேரில் மூன்று பெருமரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டது. எங்கள் கண்முன்னே நடந்த இப்படுகொலையைத் நாங்கள் தடுக்க முற்படும் முன் அவை  சவங்களாய் முட்காட்டில் கிடந்தன.

மருத்துவர் சீத்தா அம்மரத்தின் முறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கிளையின்முன் அமர்ந்து அடக்க முடியாமல் அழுததை எங்கள் மலையும் பார்த்துக் கொண்டிருந்தது.
திரும்ப நினைத்த அத்தனை கலைஞர்களையும், செயற்பாட்டாளர்களையும் அந்த அழுகையே திரும்ப அழைத்தது.



சற்றுமுன் பார்த்த இழந்த  துக்கத்திலிருந்த முகங்கள் அல்ல அவை. ரௌத்திரமேறியிருந்த நடையை தூரத்திலிருந்தே அவதானித்தேன். அவர்கள் அந்த எந்திரத்தையும், அதை இயக்கியவர்களையும் ஒவ்வொரு விதமாக எதிர்கொண்டார்கள்.
மக்கள் எதிர்ப்பில் தாக்குப் பிடிக்க முடியாமல் அது மெல்ல நகர்ந்தது.

நாங்கள் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல் சாலையில் உட்கார்ந்தோம். வெளிநாட்டவர்களின் முகங்கள் முன்னிலும் சிவந்திருந்தன. ஏதோ ஒரு நாட்டிலிருந்து இந்த இயற்கையை தினம்தினம் தரிசிப்பதற்கென வந்த ஒருவர் ஆங்கிலத்தில் உரக்கக் கத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

இயலாமையில் எங்கள் கிராமத்துப் பெண்கள் மண்ணை வாரித் தூற்றுவார்கள். இரண்டிற்குமான இடைவெளி எதுவுமில்லை.

அடுத்த பத்தாவது நிமிடம் போலீஸ் வந்தது. அரசு விசுவாச நாற்றம் அவ்விடத்தை குபீரென நிறைத்தது.

எங்கள் விவாதங்கள் கூடிக்கொண்டே போனது. வார்த்தைகளின் உஷ்ணம் போலீசையும் நிதானிக்க வைத்தது.

‘உங்களுக்கு என்னதான் வேணும்?’





எம். முகுந்தனின் ‘மய்யழிக் கரையோரத்தில்’ நாவலில் தாசனைப் பார்த்து, அந்தப் பிரெஞ்சுக்கார கவர்னர் கேட்டான்.

நூறாண்டுகளுக்குப் பின்னும் அதே கேள்வி மிச்சமிருக்கிறது. அவன் அதை நம்மிடம் தூவிவிட்டுப் போயிருந்தான்.

‘உங்களுக்கு என்னதான் வேணும்?’

‘’சுதந்திரம்’’ தாசன் சொல்லுவான்.

எங்கள் சிறு நகரத்தின் ஒரு செடியையும் உங்கள் அரச அதிகாரம் பிடுங்கக்கூடாது.

அதை நான் எப்படி சொல்வது. அதிகார அடுக்குகளில் ஏதோ ஒரு புள்ளிதான் இவர்கள் என்பதை  அறியாதவர்கள் அல்ல நாங்கள்.

எங்கள் கண்ணெதிரே மூன்று மரங்களைப் பிடுங்கிப்போட்ட அந்த இருவரும் வரலாறு மன்னிக்காத தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்கள்.

அந்த மஞ்சள்நிற இயந்திர அரக்கனை இனியும் நம்பத் தயாராக இல்லாத பத்துபேர் அதன் அசைவின்மைக்கு டாக்டர் சீதா தலைமையில் காவலிருக்கநாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்திக்கச் சென்றோம்.





காத்திருக்க வைக்காமல் எங்கள் எல்லோரையும் அந்தக் குளிரூட்டப்பட்ட அறை அனுமதித்ததுசற்றே நீடித்த மௌனத்தைத் தொடரவிடாமல் தோழர் கருணாஇந்த மரங்கள் எங்கள் நகரத்திற்கு  எத்தனை மகத்தான பொக்கிஷங்கள் என்றும்ஓர் அரசு ஆணையில்அல்லது ஒரு ஒப்பந்தத்திற்கு எப்படி அதை பலி கொடுக்கத் துணிந்தீர்கள் என்றும் அடிமனதிலிருந்து கேள்விகளை எழுப்பினார்.

உரையாடல்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் என்ற மகாத்மா காந்திதான் அக்கணத்தில் என் நினைவுக்கு வந்தார்.

முதல் பத்து நிமிடங்களில் தன் தரப்பு நியாயத்தை கலெக்டர் முன் வைத்தார்.
நாங்கள் எல்லோருமே அதை நிராகரித்தோம்.

விரிவாக்கம் இந்தப் பாதைக்குத் தேவையில்லையென்பதையும்இந்த மரச்செறிவின் குளிர்ச்சிக்கும்பகலிலேயே கவியும் லேசானதொரு இருளுக்கும்தான் மனிதர்கள் தங்கள் மனதைப் பறிகொடுக்கிறார்களென்றும்அதுவே ஆன்மீக அனுபவமென்றும் அச்சபையில் பல்வேறு குரல்கள் தடித்தும் மெலிந்தும் விளக்கினகலெக்டர் எங்கள் குரல்களை உள்வாங்கிக் கொண்டேயிருந்தார்கேட்கப் பழகின காதுகள் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் என்ற சொற்றொடர்மீது ஏனோ எனக்கு அந்நிமிடம் நம்பிக்கை பிறந்தது.

‘’புதர்களைக்கூட நீக்கக் கூடாதா?’’ என்ற நிர்வாகத் தரப்பின் கேள்விக்குக் கவிஞனும் களச் செயல்பாட்டாளனுமான குமார் அம்பாயிரம் தன் அனுபவத்திலிருந்து பதில் சொன்னார்.

‘’நீங்கள் கை வைத்திருப்பது சாலையோரம் நட்டுவைத்து வளர்க்கப்பட்ட புளியமரங்கள் அல்லஅது சோணகிரி காடுமலையின் தொடர்ச்சிஇம்மலையின் வேர்களில்தான் இம்மரங்கள்செடிகள்கருங்குரங்குகள், உழக் குள்ளநரிகள், பதுங்கு முயல்கள், உடும்புகளென நூற்றுக்கணக்கான காட்டுயிர்களும், பல்லாயிரக்கணக்கான நுண்ணுயிர்களும், நீங்கள் புதர்கள் என்று தவறாய் அடையாளப்படுத்தும் இம்மூலிகைச் செடிகளுக்கடியைத்தான் தங்கள் வாழ்விடங்களாக பாவிக்கின்றன. அவற்றையும் அதிலிருந்து வெளியேற்ற எங்கள் மாடுகளைப் போல் பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்ன வைத்து விடாதீர்கள் என்ற வேண்டுகோளுக்கு அப்படி ஒரு அமைதியை அச்சபை அங்கீகரித்தது.

இடையே ஒரு தொலைபேசி அழைப்பில் நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளரைத் தன் அறைக்கு வரச்சொல்லி ஆணை பிறப்பித்தார் கலெக்டர்.

Respected Sir, என்ற பழக்கப்படாத ஒரு குரலுக்கு எல்லோருமே திரும்பிப் பார்த்தோம். அது இந்திய அளவில் முக்கியமான புகைப்படக் கலைஞன் தேவ்குகையுடைய குரல்.

அவரால் பேச முடியவில்லை. விம்மல்கள் மட்டும் தெறித்து விழுந்தது. தன் ஆங்கில அறிவை அத்தனை அற்புதமான வார்த்தைகளில் புதைத்து பத்து நிமிடங்கள் அவர் முன்வைத்த வாதங்கள் யாரையும் புதைகுழியில் அமிழ்த்தும். பத்து வருடங்களாக தேவ் குகையை நானறிவேன். ஓரிரு வார்த்தைகளைக்கூட விரும்பிச் செலவழிக்கத் தெரியாத கலைஞன் அவன். பேசுவதற்குத் தன் கைவிரல்கள் போதுமென நினைப்பவன். இன்று தன்னிடம் இருப்பது இதுவரை ஆத்திரத்தோடு அடைகாத்த இச்சொற்கள் மட்டுமேயென நினைத்து, தன்னிடமிருந்த அத்தனை சொற்களையும் கொட்டித் தீர்த்தான்.

நான்கு நாட்களாக எந்த மரங்களும் வெட்டப்படவில்லையென்ற பொய் எங்கள் முன்னிலையிலேயே அவிழ்க்கப் பட்டது.

சில நிமிடங்களில் பல கேமராப் பதிவுகளும், இன்று எடுக்கப்பட்ட செல்போன் புகைப்படங்களும் பச்சை வாசனையோடு கலெக்டர்முன் காட்சிப்படுத்தப்பட்டது.

ஹைவேஸ் இன்ஜினியர் அவசரத்தில் உள்ளே நுழைந்து தனக்கான இருக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார். எங்கள் எல்லோர் வார்த்தைகளும் அவரை நோக்கி ஒரே நேரத்தில் திரும்ப, சொல்ல எதுவுமற்று அமைதி காத்தார்.

அவசர அவசரமாக சில உத்தரவுகளை கலெக்டர் பிறப்பித்தார்.

‘’ஒரு மரத்தையும் இனி வெட்ட வேண்டாம்’’

அவர் உத்தரவை இடைமறித்து, ‘’நீங்கள் புதர்கள் என்று தப்பாய் விவரிக்கும் மூலிகைச் செடிகளையும்… ம்.. அவற்றையும்…’’

நான்  முதல் வரிசையிலிருந்து திரும்பிப் பார்த்தேன். எல்லோர் முகங்களிலும் படிந்திருந்த அவநம்பிக்கைகள்  மெல்ல பனிக்கட்டி மாதிரி உருக ஆரம்பித்திருந்தது.

பத்து வருடங்களுக்கு முன் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரி தன் பட்டா நிலத்திலிருந்து ஒரு பெரிய வேப்ப மரத்தை இயந்திரத்தால் அகற்ற முயல, அம்மரத்தைக் கட்டிக்கொண்டு நின்ற என் தோழியும், உலக பிரசித்தி பெற்ற ஸ்பெயின் நாட்டு ஓவியருமான காயத்ரி காமூஸ் என் நினைவுக்கு வந்தார். இன்றளவும் அந்த எளிய மனுஷியின் ஞாபகமாய் மீந்திருக்கும் அந்த வேப்பமரம் இன்னும் கணம் கூடி கம்பீரமாய் நின்றிருக்கும் இதே திருவண்ணாமலையில்தான் இத்தனை கலைஞர்களும், படைப்பாளிகளும், கள செயல்பாட்டாளர்களும்,இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து பல ஆயிரக்கணக்கான மர உயிர்களைக் காப்பாற்றிய பெரு நிம்மதியோடு அங்கிருந்து கலைந்தோம்.

கைக்குலுக்கல்களும், உடலசைவுகளும், முத்தங்களும் உணர்வு பெருக்கில் கலெக்டர் அறையிலேயே சக மனிதர்களின் அன்பின் பொருட்டு நிகழ்ந்தது.
வீட்டிற்கு வரும்போது பகல் ஒரு மணி. ஒரு புனைவு மாதிரி நடந்ததை எங்கள் சாப்பாட்டு மேஜையில் பகிர்ந்தேன்.

“மகள் மானசியை எழுப்பி உடன் அழைத்துப் போயிருக்கலாம், அவள் ஒரே நாளில் எத்தனை மகத்தான அனுபவத்தை அடைந்திருப்பாள்” 

என்னிடம் எந்த சொல்லும் மீதமில்லை.




படங்கள்: தேவ் குகை, முருகன் தி.மலை, ஷபி, வினோத் பாலுச்சாமி,சேது.

நன்றி 
ஜுனியர் விகடன் 



No comments:

Post a Comment