Wednesday, August 3, 2011

தொடர் - 1



எந்த புள்ளியில் எங்கள் நட்பு இணைந்தது என்று ஞாபகப்படுத்த முடியவில்லை. பூவின் மலர்தலை எந்த செடி நினைவில் வைத்திருக்கும்.

கலைஞர்களும், படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் குவிந்து, சென்னை பெரியார் திடலில் கருத்து சுதந்திரம் வேண்டி உணர்வுக் குவியாகத் திரண்டிருந்த கூட்டத்தை விலக்கி கம்பீரமாக பாலுமகேந்திரா என்ற அக்கலைஞன் மேடையேறுகிறார். மௌனம் மேலும் நுட்பமாகிறது. வெளிர்நீல ஜீன்சும், வெள்ளை சட்டையும், தன் உடலில் ஒன்றாகிப் போன தொப்பியோடும் யாருடைய அனுமதிக்கும் காத்திரமால் மைக் முன்னால் நின்று பேச ஆரம்பிக்கிறார்.

''என் கேமராவை என் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்க்கவிடாமல் அடைத்துகொண்டிருக்கிறது.''

இதோ இந்த புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறது. ஒரு அரசை எதிர்த்து கம்பீரமாய் ஒலித்த ஒரு கலைஞனின் குரல் பல வருடங்களை பின்னுக்குத் தள்ளி இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அதன் பிறகான நாட்களில் எங்கள் நட்பு கண்ணி இறுக்கமானது. அவரையும், அவர் படைப்புகளையும் நெருக்கமாக்கி கொண்டது மனது.

நேற்று வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து இதுவரை பார்க்ககிடைக்காத 'யாத்ரா' பார்க்க ஆரம்பிக்கிறோம். மம்முட்டியும், சோபனாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறார்கள். ஆயும் தண்டனை முடிந்து வெளியே வரும் உண்ணிக்கிருஷ்ணனுக்கு (மம்முட்டி) நம்பிக்கையின் ஏதோ ஒரு துளி மட்டும் ஒட்டியிருக்கிறது. துளசியின் (சோபனா) மலை கிராமத்தை நோக்கி செல்லும் ஒரு டூரிஸ்ட் வேனில் பயணிக்கிறான். பயணங்கள் எப்போதும் பழைய ஞாபகங்களை கோருகின்றன. உன்னியின் கடந்த கால துயரம் அந்த சகப்பயணிகளை துக்கப்படுத்தி கண்ணீரில் நனைய வைக்கிறது. ஒரு குழந்தை தன் தேவனிடம் அவனின் காதலுக்காக இறைஞ்சு மன்றாடுகிறது.

''தான் விடுதலையாகி வரும் போது, நாம் எப்போதும் சந்திக்கும் அந்தக் கோவிலின் முன் நீ ஒரு ஒற்றை தீபத்தை ஏற்றி வைத்திருந்தால் இன்றும் எனக்காகவே நீ... என இறங்கிக் கொள்கிறேன். ஒரு வேளை தீபமற்ற கோவிலை என் வண்டி கடக்கையில் என் பயணம் தொடரும் துளசி'' அவன் எழுதிய கடிதங்களின் வரிகளை மீண்டும் ஒரு முறை வரிசைப்படுத்துகிறான்.

இருள் கவிந்துவிட்ட மாலை அது.

இதோ இந்த திருப்பம்தான் துளசியின் ஊர். ஊரின் முகப்பில் கிருஷ்ணன் கோவில். மௌனம், எல்லோர்க் கண்களும் அந்த ஒற்றை தீப ஒளியை தரிசிக்க நீள்கிறது. அவர்களது பார்வை கோவில் முன் மட்டுமல்ல, ஊர், வயல்வெளிகள், காடு மலை எல்லா இடங்களும் ஏற்றப்பட்ட தீப ஒளியில் ஒளிர்ந்து நிறைந்திருக்கிறது.

ஒரு மகத்தான கலை மனதுக்கு மட்டுமே இப்படைப்பின் உச்சம் சாத்தியம். பாலுமகேந்திரா என்ற கலைஞனின் கலை ஆளுமைக்கு இப்படத்தின் முடிவே சாட்சியம். yellow ribben என்ற ஹங்கேரியக் கவிதையே இப்படத்திற்கான உந்துதல் என்கிறார்.

ஒரு கவிதையை மூன்று மணி நேர உன்னத சினிமாவாக செதுக்கத் தெரிந்த கைகள் அவருடையது.

என் மனைவி ஷைலஜாவை தன் மகளாக மனதளவில் ஸ்வீகரம் எடுத்துக் கொண்டவர். தன் சந்தோஷம், துயரம், தனிமை , வெறுமை இப்பொழுதுகளை அப்படியே எங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர். பல நேரங்களில் அவைகள் தொலைபேசி வழியாகவும், சிலநேரங்களில் நேரடியான வருகையின் மூலமாகவும் அவ்வுணர்வுகளை நாங்கள் ஸ்வீகரித்துள்ளோம்.

ஒரு காதலியின் மடியில் திருட்டுத்தனமாய் மரத்தடியில் படுத்துக் கொள்ளும் அவருடனான என் திருவண்ணாமலை நாட்கள். யாருமற்று நானும் அவரும் மட்டுமே எங்களுக்கு எங்களுக்கென்று அமைத்துக் கொண்ட உரையாடல்கள் சுவரசியமானதும், பெருமிதமானதும் யாருக்கும் வாய்க்காததுமானவைகள்.

ஒரு தொலைபேசி செய்தியினூடே வந்திறங்கிய இரண்டாண்டுகளுக்கு முந்தைய மழைத்தூறல் மிக்க மாலையை இன்றும் ஈரமாகவே வைத்திருக்கிறேன்.


அவர் தங்கியிருந்த விடுதிக்கு அடுத்த நாள் மாலை வரச்சொன்னார். மலையின் முழு வடிவமும் தெரியும் அந்த 102-ம் அறையின் பால்கனி அவருக்கு பிடித்தமான இடம். எதிரெதிரே போடப்பட்ட பிரம்பு நாற்காலியில் மௌனம் காத்து ஒரு சொல்லின் ஆரம்பம் வேண்டி தவமிருக்கிறோம். ஆவி பறக்கும் green tea ஆறிக் கொண்டிருக்கிறது. 'சொல்' எத்தனை மதிப்புமிக்கது, கிடைப்பதற்கறியதுமென நான் உணர்ந்த கணம் அது.

நான் அடுத்தபடம் பண்ணப்போறேன் பவா. அந்தக் கதைக்கான பகிர்தல் இந்த மாலை. ஒரு பையனுக்கும் அவன் சித்திக்கும் உடல்ரீதியான பகிர்தலே இப்படம். கதை சொல்கிறார். இலங்கையில் கழிந்த தன் பால்யத்தில் கரைகிறார். பனைமர மறைவுகளில் நின்று தான் பார்த்த காட்சிகளை அடுக்கிறார். தன் ஆஸ்தான ரோல்மாடல் ஒருவரின் கள்ளத்தனமான ஸ்நேகிதியைப் பற்றி சொல்லி சிரிக்கிறார். சினிமாவும், நிஜமும், பால்யமும் கலந்த கலவைகளாளானது அந்த இரண்டு மணி நேரம்.

நான் முற்றிலும் கரைந்து போயிருதேன். பேச வார்த்தைகளற்று தூறலில் நனையும் மலையின் திசையை நோக்கி கண்களைக் குவித்திருத்தேன்.

’’சொல்லுங்க பவா''

''சித்தியுடனான உறவை தமிழ் மனது ஏற்காது சார்''

''நல்ல Treatment-?''

''இல்ல சார், ஒரு வேலை ஒவ்வொரு மனிதனுக்கும் கூட அப்படி ஒரு ரகசியம் இருந்தாலும், தன் ஆழ்மனதின் ரகசியம் திரையில் தெரிவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியாதுன்னு நெனைக்கிறேன்.''

''ஏன், ஏன், தன் உண்மைகள் படைப்பாகும் போது அதை அவனே நிராகரிக்கணும், 'மூன்றாம்பிறை' ஸ்ரீதேவியை கமல் எங்கிருந்து அழைச்சிட்டு போவார்னு ஞாபகப்படுத்துங்க பாக்கலாம்?''

மீட்டெடுக்க முடியாமல் திணறியதை ஒரு நொடியில் உணர்ந்தவர்,

''ஒரு விபச்சார விடுதியிலிருந்து’’ ஆனா அது உங்களுக்கு மட்டுமல்ல, படம் பார்த்த யாருக்கும் ஞாபகம் இருக்காது, ஏன்னா படத்தோடு Treatment-ல அது காணமல் போயிடுது''

ஆனாலும் என்னால் அவரோடு உடன்படமுடியலை. அழுத்தமான கைப்புதைவுகளிடையே அவ்விரவில் தனித்தனியானோம்.

அதற்கடுத்த பத்து நாட்களும் ஒரு பித்தேறிய படைப்பு மனநிலையோடு அவருக்குள் ஏறியிருந்த புதுப்புது தர்க்கங்களுக்கு விடை தேடி திருவண்ணாமலையில் எங்கள் வீடு, அருணை ஆனந்தா ஹோட்டல், வம்சி புக்ஸ் கடை என்று அலைந்து கொண்டிருந்தார்.

முடிவுகளின்றி முடிந்தது அப்பயணம்.

கருங்கற்களால் நாங்கள் கட்டி முடித்த எங்கள் வீட்டின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த போது மிகுந்த மௌனம் காத்தார். எல்லா நண்பர்களும் வீட்டின் தரையில் உட்கார்ந்து 'கரிசல் குயில்' கிருஷ்ணசாமியின் பாட்டிற்கு எங்களை ஒப்புக் கொடுத்திருந்தோம். என் வீட்டின் ஒரு மூலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் அசையாமல் உட்கார்ந்து தன் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டிருந்த மிச்சம் இன்றும் என்னுள் நிற்கிறது. பாடல்களின் இடைவெளியில் உட்கார்ந்தவாறே மிக மென்குரலில் நம்மோடு ரகசியமாய் உரையாடுவதைப்போல பேசினார்.

நான் என் மகளாக ஸ்வீகரித்துக் கொண்ட என் மகள் ஷைலுவும், என் மாப்பிள்ளை பவாவும் கட்டியுள்ள இச்சிறு கூடு எனக்கு என் அம்மாவின் நினைவுகளை அலைகழித்துக் கொண்டிருந்தது. என் அம்மா ஒரு அற்புத மனுஷி. என் அம்மா இல்லாத அப்பா வெறும் பூஜ்யம். கலையும், இசையும், படைப்பும் நிறைந்து அம்மாவின் ஆகிருதி அவள் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தவுடன் அது ஒவ்வொன்றாய் உதிர ஆரம்பித்தது. நிறைவடையாத அவ்வீடு அம்மாவின் அத்தனை கலாபூர்வங்களையும் சிதைத்திருந்தது. அம்மாவின் நிறைவேறாத அக்கனவே என் 'வீடு' ஆனால் என் மகளின் நிறைவடைந்த இவ்வீடு அவளின் சிருஷ்டியை அப்படியே காப்பாற்றியுள்ளது''

எவ்வளவு கவித்துவம் ததும்பும் சொற்கள் இவைகள். இன்றளவும் தன் ஒவ்வொரு நொடியின் இடைவெளிகளையும் கவித்துவத்தால் நிரப்பத்துடிக்கும் ஒரு கலை ஆளுமை.

இந்திய சினிமாவின் தனிப்பெரும் ஆளுமை அவர்.

ஒரு நாள் அதிகாலை என்னை தொலைபேசியில் அழைக்கிறார். ''பவா நேற்று ஒரு திரைப்பட விழாவில் என் 'வீடு' திரையிடப்பட்டது. பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து படம் பார்த்தேன். நேற்று எடுத்த மாதிரி அத்தனை புதுசாயிருந்தது. காலத்தின் முன் தன் படைப்பு உதிர்ந்துவிடாமல், முன்னிலும் அதிக கம்பீரத்தோடு எழுந்து விஸ்வரூபமெடுப்பதை பார்க்கும் ஒரு படைப்பாளிக்கு உரிய பெருமிதம் இது.

''சார் நீங்க.....''

''நான் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். அவரே கோடிட்ட இடத்தை நிரப்புகிறார்.''

''நான் புலி பவா, புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''

10 comments:

  1. ஒரு தூய்மையான நட்பு. நெகிழ்வான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  2. பவா அவர்களே! புனே திரைப்படக் கல்லுரியில் பெராசிரியராக இருந்தவர் சதீஷ் பகதூர்.ஒரு இடதுசாரியும் கூட. எனக்கு நண்பரும் கூட என்று சொல்லிக்கொள்வேன்.Balu is an excelent artist.But highly individualist". பாலு மஹேந்திராவின் படைப்புகளைப் பற்றி மிகநெருக்கமான தருணங்களில் அவர் வியந்து பாராட்டியுள்ளார். கச்சா ஃப்லிமில் கவிதை எழுதும் அவர் த .மு.எ.ச வின் மாநிலக்குழுவில் இருந்தார் .வாழ்த்துகளுடன் ---கஸ்யபன்

    ReplyDelete
  3. புலியின் உடல் கோடுகளை அது செத்த பின்னாலும் அழிக்க முடியாது''

    ReplyDelete
  4. ஆஹா! ரசித்துப் படித்தேன் அண்ணா!

    ReplyDelete
  5. மறக்க முடியாத படைப்புகள் கொடுத்த மிக அற்புதமான கலைஞன். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..!!

    ReplyDelete
  6. ஆரம்பித்த புள்ளி விரிந்து கிளைபரப்பி மொக்குவிட்டு மலர்ந்து மணம்பரப்புவதாக....நினைவுகளின் கிழறலில் தாலாட்டும் நல்ல படைப்பு.வாழ்த்துக்கள். ுவதாக....நினைவுகளின் கிழறலில் தாலாட்டும் நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றிகள்!!!!

    சார் நான் பாலு மகேந்திர அவர்களின் தீவிர ரசிகன் . அவருக்கென நான் ஒரு இணைய தளம் உருவாக்கியுள்ளேன் . இதில் தவறாக ஏதேனும் இடப்பட்டிருந்தால் கூறுங்கள் . மேலும் அவருடைய செய்திகள் , புகைப்படங்கள் உங்கள் தளத்தில் இருந்து நான் எடுகொள்ள ஆசைப்படுகிறேன் . நன்றி

    ReplyDelete
  8. நன்றிகள்!!!!

    சார் நான் பாலு மகேந்திர அவர்களின் தீவிர ரசிகன் . அவருக்கென நான் ஒரு இணைய தளம் உருவாக்கியுள்ளேன் . இதில் தவறாக ஏதேனும் இடப்பட்டிருந்தால் கூறுங்கள் . மேலும் அவருடைய செய்திகள் , புகைப்படங்கள் உங்கள் தளத்தில் இருந்து நான் எடுகொள்ள ஆசைப்படுகிறேன் . நன்றி www.balumahendras.blogspot.com

    ReplyDelete