இந்த வார ஆனந்த விகடனில் என்னுடைய கரடி - சிறுகதை
சிறுகதை: பவா செல்லதுரை, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
சிறுகதை: பவா செல்லதுரை, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு
''கரடி எங்கய்யா?'' என அவன் மூன்றாவது முறையாகக் கத்திய சத்தம், அண்ணாமலையின்
காதுகளில் சரியாகக் குவியவில்லை.
காதுகளில் சரியாகக் குவியவில்லை.
'என்ன?’ என்பது மாதிரி தலையை உயர்த்தி அவனைப் பார்த்ததோடு சரி.
தன்னை ஒரு கரடியாகப் பாவனைசெய்து, ''எங்கே?'' என அதிரும் அந்தப் பெருமேள சத்தத்தினூடே கேட்டபோதுதான், 'அங்க பார்’ என்பதுபோல நகராட்சி நிழற்குடைப் பக்கம் கை காட்டினார் அண்ணாமலை.
அவனோடு சேர்ந்து நான்கைந்து பேர் திரும்பிப் பார்த்தார்கள். ஒரு கரடியும் புலியும் இரண்டு இரண்டு கால்களில் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
கேமராக்களும் செல்போன்களும் அவர்கள் பக்கம் திரும்பின. மின்னிய ஒளியில் அவர்கள் இருவரும் கூட்டத்தில் கலந்தார்கள். உடன், தாங்கள் ஆடுவதற்கான வட்டத்தை உருவாக்கிக்கொள்ள முனைந்தார்கள்.
காலம்தான் எதை எதையெல்லாம் எப்படி மாற்றிவிடுகிறது!
புலி வேஷம் கட்டுபவன், ராத்திரி நிகழ்ச்சி எனில், மத்தியானமே பம்புசெட் தொட்டியில் குளித்து முடித்து, மஞ்சளும் கறுப்புமாக உடல் எங்கும் பெயின்ட் அடித்து, எதனாலோ செய்த வாலை அரைஞாண்கொடியோடு சேர்த்துப் பிணைத்து புலி வாலாக்கி, புலி செருப்பு போட்டு நடக்காது என்பதால் வெறும் காலோடு நடந்து, நிகழ்விடத்துக்்கு அருகில் போகும்போது கைகளையும் கால்களாக்கி, நான்கு கால்களால் நடந்து தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பி, அடித்தொண்டையில் இருந்து கர்ஜித்தால், கூட்டம் பயத்தால் பிளக்கும். குழந்தைகள், அம்மாக்களுக்குள் ஒடுங்கிக்கொண்டு ஒற்றைக் கண்ணால் விழித்துப் பார்ப்பார்கள். எல்லாம் மலையேறிவிட்டது.
இதோ இந்தப் புலி, முழு உடம்பையும் போத்திக்கொள்ள மஞ்சளும் கறுப்பும் கலந்து அழுக்கேறிப்போன ஜிப் வைத்த ஒரு கோட் போட்டிருக்கிறது. அவ்வளவுதான். பூனை மீசைவைத்த ஒரு பிளாஸ்டிக் முகமூடி போட்டு ரப்பர்பேண்ட் வைத்து தலைக்குப் பின்னால் முடிந்திருக்கிறது. இந்தப் புலியைப் பார்த்ததும் குழந்தைகள் சிரிக்கின்றன. தைரியமான சில குழந்தைகள் புலியைத் தொட்டுப் பார்க்கின்றன; வாலைப் பிடித்து இழுக்கின்றன. ஒட்டவைத்த ரப்பர் வால், எப்போது வேண்டுமானாலும் உருவிக்கொள்ளும்.
ஆனால், அன்றில் இருந்து இன்று வரை மாறாததும், நாளுக்குநாள் சத்தம் கூட்டுவதும் இந்தப் பாப்பம்பாடி ஜமாதான். அவர்களையும்கூட காலம் எப்படி எப்படியோ அசைத்துப்பார்த்துத் தோற்றுவிட்டது. அவர்களும் மாட்டுத்தோலுக்குப் பதில் ஃபைபர் கட்டி அடித்துப் பார்த்தார்கள். அவர்களுக்கே அந்தச் சத்தம் சகிக்கவில்லை. நான்கு ஊர் நடந்து அலைந்து மீண்டும் தோல் கொண்டுவந்து சட்டியில் இறுக்கி முறுக்கேற்றிய பின்னர்தான் சத்தம் ஏழூரைத் தாண்டியது. அதன் பின் எப்போதும் தன் சத்தத்தைத் தனக்கு எனத் தக்கவைத்துக்கொண்டது ஜமா.
'கரடி எங்கய்யா?’ என அடித்தொண்டையில் இருந்து எழுந்த குரலை அடக்கியதும் அந்த மேளச் சத்தம்தான். சர்ச்சுக்கு முன்பு, எப்போதும் இல்லாத பெருங்கூட்டம் கூடியது. வீடுகளில் இருந்து விடுபட்ட குழந்தைகள், அநியாயத்துக்குக் குதித்துக் கும்மாளமிட்டனர். விருப்பங்கள் தரும் கட்டற்ற சுதந்திரம் அது.
இப்போது கரடியும் புலியும் தங்கள் வட்டத்தைத் தாங்களே வகுத்துக்கொண்டன. கூட்டத்தில் வேடிக்கை பார்த்த சிறுவன் ஒருவனை, அந்தப் பெரும் சத்தத்தினூடே வட்டத்துக்குள் இழுத்து வந்தது கரடி. பையன் வீறிட்டு அழுவான் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, கரடியின் பிளாஸ்டிக் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான். நிலைகுலைந்து அவன் இரு கைகளையும் அசையவிடாமல் தாங்கிப்பிடித்துக்கொண்ட கரடியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.
யாருடைய உத்தரவின் பேரிலோ ஊர்வலம் மெள்ள நகர ஆரம்பித்தது. அப்போது பாப்பம்பாடிக்கும் செட்டிப்பட்டுக்கும் கண தூரம் இருந்தது.
போக்குவரத்து வாகனங்களின் வேகம் குறைந்து, பின் வேகமெடுத்தது. அதற்குள் ஜனங்களின் செல்போன்கள் மேலெழுந்து சத்தத்தையும் ஆட்டத்தையும் வேண்டிய மட்டும் அள்ளிக்கொண்டன.
பங்களா வளாகத்துக்குள் ஊர்வலம் நுழையும்போதே இருட்டிவிட்டது. மழை வருவதுபோன்ற ஓர் ஈரக்காற்று படர்ந்துகொண்டது. மேளச் சத்தத்தின் சுருதி மாற ஆரம்பித்தது. தெற்கு மூலையில் செத்தைகளைக் குவித்து, முனுசாமி அனல் மூட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு எல்லாம் தெரியும். ஈரக்காற்றில் தோல் நமுத்துவிடும்; அனல் மட்டும்தான் அதை விறைப்பு ஏற்றும். ஓர் அறிவியல் சூத்திரம்போல அவற்றை அனுபவத்தால் உள்வாங்கியிருந்தான்.
ஊர்வலம் நிறைந்து கிடைத்த இடைவெளியில் பதினோரு பேரும் அனலுக்கு முன்பு நின்றார்கள். முனுசாமி மட்டும்தான் மூட்டத்துக்கு முன்பு குந்தியிருந்தான். மேளத்தை மீண்டும் சூடேற்றிக்கொண்டார்கள். அனல் பரவிய வெளிச்சத்துக்கு அப்பால் பாட்டில்கள் இருந்ததை அவர்கள் கவனித்தார்கள். ஆனாலும் ஜமா ஆட்களில் இரண்டு பேர் மட்டுமே அதைத் தொட்டார்கள்.
ஆறேழு வருஷத்துக்கு முந்தி எனில், எல்லோருமே அதற்கு முட்டுவார்கள். முதிய மரணங்கள், கால மாறுதல்கள், சுய கௌரவங்கள் எல்லாம் அந்தக் குழுவை அலைக்கழித்து ஒருவழியாக நிலைப்படுத்தியிருந்தன.
முனுசாமி, அதில் மாறி மாறித் தோற்றும் ஜெயித்துமாகப் பயணித்தார்.
''நிகழ்ச்சி முடியட்டுண்டா... பொறுங்க! ஒரு பாட்டில காமிச்சா நாம விழுந்துடு வோம்னு எவனும் சொல்லக்கூடாது பாரு'' முனுசாமியின் குரல், அவர்கள் மத்தியில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
அதையும் தாண்டித்தான் இரு கைகளின் மீறல். அவன் தடுக்கவில்லை. பெரிய மேளத்தை கழுத்தில் கட்டி, சுற்றிச் சுற்றி ஆட வேண்டும். வலி உயிர்போகும். வலி தெரியாமல் இருக்க குடிக்கட்டும். கட்டுப்பாடுகள் மேலும் இறுகும்போது பெரும்பாலும் அறுத்துக்கொள்கின்றன.
அப்படித்தான் தனபாலை இழந்தது ஜமா. அவனைப்போல பெரிய மேளத்தைக் கையாள, இன்னொருத்தன் பிறந்துதான் வரவேண்டும்.
முனுசாமி, கூட்டத்தில் யாரையோ குடிக்க தண்ணீர் கேட்டான். அரை மணி நேரம் கழித்து ஒரு தண்ணீர் கேன் வந்தது. அப்போதுதான் டம்ளருக்காக யாரோ ஒரு பையன் வார்டன் வீட்டை நோக்கி ஓடினான்.
இப்போது பங்களாவுக்கு முன் பெருங்கூட்டம் கூடிவிட்டது. மழிக்கப்படாத தாடியோடு, உயரமான கருத்த ஓர் ஆளின் கையில் மைக் இருந்தது. பாப்பம் பாடி ஜமா, நமக்காக அரை மணி நேரம் அடித்து ஆடுவார்கள் என அறிவித்தார். அதற்கே கூட்டம் ஆர்ப்பரித்தது. கூட்டத்தில் ஐம்பதுக்கும் மேல் வெளிநாட்டுக் காரர்கள் இருந்தார்கள். எல்லோர் கைகளிலும் கேமரா இருந்தது. பெண்கள் சொல்லிவைத்தது மாதிரி தளர்வான டிஷர்ட் போட்டிருந்தார்கள். ஆட்டச் சத்தத்தில் யாரும் அதற்கு மேல் அவர்களைக் கவனிக்கவில்லை.
முனுசாமி நடுநாயகமாக நின்றுகொண்டார். அவர் இடுப்போடு சேர்த்து, தமுக்கு கட்டப்பட்டிருந்தது. இரு கைகளில் இருந்த ரப்பர் துண்டுகள் தமுக்கைச் சீண்டிச் சீறியது. தொடக்கத்துக் காகக் காத்திருந்தது மாதிரி ஒரே நேரத்தில் மீதி பதினோரு பேரும் ஒன்றுபோல இயங்கினார்கள். அது ஓர் அசுரத்தனமான இயக்கம். மண் அதிர்ந்து, புழுதி கிளம்பியது. வெள்ளைக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் படம் எடுத்தார்கள்.
எதிர்பாராத ஒரு தருணத்தில் அந்த வெள்ளைக்காரப் பெண்கள் கூட்டத்துக்குள் புகுந்து ஆட ஆரம்பித்தார்கள். ஜமாவின் இளைஞர் களுக்கு இன்னும் முறுக்கேறி மேளத்்தின் தோள் கிழிந்துபோகும் அளவுக்கு அடித்து ஆடினார்கள். அவர்களின் சுற்றல் எல்லோர் கவனத்தையும் குவித்தது. சக்கரம் இல்லாத அந்தக் கால்கள், சகல திசைகளிலும் சுழன்றன. உணர்வு வயப்பட்ட ஒரு வெள்ளைக்காரப் பெண், அந்த ஆட்டத்தினூடே பெருமேளம் வாசித்த பையனை இழுத்துவைத்து நெற்றியில் ஒரு முத்தம் தந்தாள். அவன் அதைப் பொருட்படுத்தியது மாதிரி தெரியவில்லை. ஆட்டத்தில் குறியாக இருந்தான்.
இப்போது பெருமேளம் மேலும் குதியாட்டம் போட்டபடி அதன் உச்சத்தை எட்டி அடங்கியது. இரண்டாவதாக செட்டிப்பட்டு அண்ணாமலைக் குழு களம் இறங்கியபோது, பாப்பம்பாடி மேளக்காரர்கள் முன்வரிசையில் போய் குந்திக்கொண்டார்கள். அப்போதும் அந்த வெள்ளைக் காரப் பெண்கள் அவர்களைப் படம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
அண்ணாமலைக் குழுவில் இருந்து கரடியும் புலியும் ஓடிபிடித்து விளையாடிக்கொண்டே மைதானத்துக்குள் புகுந்தன. சுற்றி நின்ற தவிலும் மிருதங்கமும் நாகஸ்வரமும் முக வீணையும் பம்பையும் உடுக்கையும் மிதமான சத்தத்தோடு மேலெழும்பின. பாப்பம்பாடியை மிஞ்சிவிட வேண்டும் என்ற வெறி, ஒவ்வோர் இசைக் கருவிக்குள் இருந்தும் வெளிப்பட்டதுபோல் இருந்தது.
அடித்து ஆடிய எந்தக் களைப்பும் இன்றி அவர்கள் மண் தரையில் உட்கார்ந்து பொம்மைபோல் இருந்த அந்தக் கரடியையும் புலியையும் வெறித்துக்கொண் டிருந்தார்கள். அதற்குள் நம்மை உட்காரவைத்து விட்டார்களே என்ற ஆற்றாமை அவர்கள் முகங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
புலியும் கரடியும் இந்தக் கூட்டத்தில் எடுபடவில்லை என அண்ணாமலை வாத்தியாருக்கு உடனே புரிந்தது. அவர் கையில் இரு தீப்பந்தங்களும் பிளாஸ்டிக் பாட்டிலில் நீல நிற மண்ணெண்ணெயும் இருந்தன. அவரே ஒரு வனப்புலி மாதிரி நடந்துகொண்டிருந்தார். அது ஒரு வேட்டைக்கு முந்தைய நடை அல்லது மனதில் குவிந்த இயலாமையின் வெறி.
ஆடிக்கொண்டிருந்த கரடியை, கையைப் பிடித்து இழுத்து இருட்டுக்குக் கூட்டிப்போனார்.
''இன்னிக்கு இன்னாடா மசுராட்டம் ஆடுற'' அவன் போட்டிருந்த முகமூடியைத் தாண்டி அவன் முகபாவத்தை யாரும் அறிந்துவிட முடியாது.
உடனே அதை நீக்கினான். இருட்டிலும் அவன் கண்கள் கலங்கியிருந்ததை அண்ணாமலை கவனித்தார்.
''போ, போயி இந்தக் கருமாந்தரத்தைக் கழட்டிப்போட்டுட்டு, பந்தத்துக்கு ரெடியாயி வா.''
அந்த வார்த்தைகளுக்குக் கட்டுப் பட்ட கரடி, திரும்பிப் பார்க்காமல் பங்களா படியேறி வராண்டாவுக்குப் போனது.
அடுத்த நிமிடம் வெறும் டிராய ரோடும் கலைந்து இருந்த ஒப்பனை யோடும் அண்ணாமலை, நின்ற கொன்றை மர இருட்டுக்கு வந்து நின்றான்.
நிமிடத்தில் அவன் கைகளுக்கு, பந்தங்களும் பாட்டிலும் இடமாறின.
சற்று முன் இங்கு ஆடின 'கரடி’ என்று அழைக்கப்பட்ட தல்லாகுளம் ரமேஷ், சகல திசைகளிலும் திரும்பி வணங்கினான். புதிதாக உதடுகளில் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தான்.
மண்ணெண்ணெய் பாட்டிலைக் கவிழ்த்து தன் உடல் எங்கும் பூசிக் கொண்டான். துணிப் பந்தத்தை மண்ணெண்ணெயில் நனைத்துக் கொண்டான். தண்ணீர் குடிப்பது போல மண்ணெண்ணெயை வாயில் நிரப்பிக்கொண்டான். அண்ணாமலை நின்று இருந்த இருட்டை நோக்கி அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தான். அங்கு அவர் இல்லை.
'வா, வாத்தி வா, என்னை எரி. என் திரேகத்தைப் பொசுக்கு, எனக்குத் தீயிடு. நான் அதில் இருந்தெல்லாம் மீண்டு எழுவேன். ஆனா, என் ஆட்டத்தை 'மயிராட்டம்’ எனச் சொல்லாதே. இந்தப் பெரும் சத்தத்தில் அது மங்கிப்போயிருக்கலாம். ஆனாலும் அது பெருந்தீ. அது எப்படி இந்தச் சிறு காற்றில் அணையும்? பெருகும், ஊழித் தீயாகிப் பெருகும்.
அண்ணாமலை முகத்தில் எந்தச் சலனமும் இன்றி வேறு ஒரு மூலையில் இருந்து வெளியே வந்தார். அவர் கையில் ஒரு தீப்பெட்டி இருந்தது.
காற்றுக்கு, கைகளைக் குவித்து குச்சியைக் கவனமாக உரசினார். அது பற்றி அணைந்தது. இரண்டாம் உரசலில் பற்றிக் கொண்டது. நொடியில் தீப்பந்தத்துக்்கு இடம் மாறியது.
ரமேஷ் வெறிகொண்டவன் போல தீயோடு ஆடினான். கட்டுப்பாடு அற்ற வெளியில் அவன் தனித்து உயர்ந்து ஆடினான். கூட்டம், ஓர் அடி பின்னகர்ந்துகொண்டது. குழந்தைகள் முகத்தில் பீதி அப்பிக்கொண்டது. அம்மாக்கள், குழந்தைகளை தங்களுக்குள் இறுக்கிக்கொண்டார்கள்.
வாயில் அடக்கியிருந்த மண்ணெண்ணெயை, நிமிடத்துக்கு ஒரு முறை பந்தத்தின் மீது துப்பினான். அதன் ஜ்வாலை, கொன்றை மர நுனி வரை உயர்ந்து அடங்கியது. பார்ப்பவர்களுக்கு, அவன் மண்ணுக்கும் மரத்துக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்பது மாதிரி இருந்தது.
சற்று முன்பு வரை ஆர்ப்பரித்து இருந்த கூட்டம், இப்போது முற்றிலும் அடங்கியிருந்தது. உயிர் அடங்கும்போது வாய்க்கும் அமைதி அது.
அண்ணாமலையின் வார்த்தை, கரடியை முன்னமே
பொசுக்கியிருக்க வேண்டும்.
இப்போது மண்ணெண்ணெய்ப் பூசப்பட்ட தன் கருந்தேகத்தின் மீது பந்தத்தை மெள்ள உருட்டி னான். மயிர் பொசுங்கும் வாசனை பரவியது. அவன் எண்ணெய்பட்ட இடத்துக்கு எல்லாம் தீயைக் கொண்டு போனான்.
''வேணாண்ணா...'' ஒரு பெண் குரல் கூட்டத்தில் இருந்து கேட்டது. அப்பனை இழந்த யாரோ ஒரு கிராமத்துச் சிறுமியின் குரல் அது. எல்லோரும் அந்தக் குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தார்கள். அந்தப் பெண், தன் மடியில் முகம் புதைத்திருந்தாள்.
இரண்டு லிட்டர் எண்ணெயையும் வாய் வழியே பந்தத்தின் மீது துப்பி வெறியோடு இயங்கிக்கொண்டிருந்தான் ரமேஷ்.
அண்ணாமலை வாத்தியார் இப்போது தீ வெளிச்சத்தில் முழுக்கத் தெரிந்தார். சாதித்த திருப்தி இப்போதுதான் அந்த முகத்தில் வெளிப்பட்டது. ஆட்டம் முடியும் வரை உறை மௌனத்திலேயே கூட்டம் இருந்தது.
யாரோ ஒரு பெண், ஓடிப்போய் அவன் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தாள்.
ரமேஷ் இரு கைகளையும் எடுத்து, அந்தப் பெண்ணை வணங்கினான். அவனோடு சேர்ந்து நின்று எதிரில் யாரையோ பார்த்த விநாடி ஒரு செல்போன் மின்னி அடங்கியது.
அந்தக் கறுப்பு ஆள் மீண்டும் இப்போது மைதானத்துக்கு வந்தான். அவன் கையில் மைக் இல்லை. அவன் குரல் முன்னிலும் அடங்கி இருந்தது; அவன் முகமே இறுகியிருந்தது. கூட்டத்தின் மௌனத்தை உடைக்க விரும்பாதவனைப்போல, 'அடுத்தாக நம் பாரம்பர்யத் தெருக்கூத்து 'பாரதத்தின் பதிமூன்றாம் நாள் யுத்தம்’ சட்டென முடித்துக்கொண்டான்.
முப்பத்திரெண்டு தாளங்களும் சேர்ந்து ஜதி கூட்டிய பின் துரியோதனன் மைதானத்துக்குள் குதித்தான். அவன் அறிமுகம் பார்வையாளர்களை இலகுவாக்க முயன்றது.
அந்த மைதானம் மண்ணெண்ணெய் வாசனையால் நிறைந்திருந்தது. மண்ணில் தெறித்துச் சிதறியிருந்த துளிகள் வெளிச்சத்தில் தெரிந்தன.
இதோ கிருஷ்ணனின் பிரவேசம். இதுவரை ஒலித்த இசை, சட்டென மென்மையாக மாறியது. கிருஷ்ணன், ஆண்மையும் பெண்மையும் கலந்த ஒரு நடை நடந்து வந்தார். இதுவரை யாருமே நடந்திராத நடை அது. அவர் அணிந்திருந்த நகைகள், உடை, நீலவண்ணம் பூசப்பட்ட அந்த வட்ட முகம், கையில் ஒரு கோல். கூட்டம், தங்களை நிமிடத்தில் கிருஷ்ணனுக்கு ஒப்புக்கொடுத்தது.
அதற்குள் எங்கேயோ குளித்து முடித்திருந்த ரமேஷ், இன்னும் போகாத மண்ணெண்ணெய் வாசனையோடே ஜீன்ஸ் பேன்ட் போட்டு, சட்டை மாட்டிக்கொண்டு முன்வரிசையில் குந்தியிருந்தான்.
உடன் கிருஷ்ணன் தன் உடலாலும் குரலாலும் கூட்டத்தை சுவீகரித்துக்கொண்டார். பரவியிருந்த மண்ணெண்ணெய் வாசனையைத் தவிர்த்து தன் எல்லையில்லா வசீகரத்தால் இதுவரை நிலைத்த எல்லா நினைவுகளையும் கிருஷ்ணனின் நீல நிறம் உறிஞ்சிவிட்டிருந்தது.
திரை விலகி மைதானத்துக்குள் கிருஷ்ணன் வேடமிட்ட தாங்கல் சேகர், இப்போது குரலெடுத்துப் பாடிக்கொண்டே பிரவேசித்தார். பாடல் கணீரென வந்து விழுந்தது. சங்கீதம் அதன் போக்கில் போய் அதன் உச்சியைத் தொட்டுச் சிணுங்கியது. அவர் பேச்சும் சங்கீதத்தைப்போலவே இருந்தது. கூட்டம் பாதிப் போதையில் லயித்தது.
கிருஷ்ணன் தன் சாந்தமான கண்களால் எதிரில் இருந்த ஒவ்வொருவராக அளந்து கொண்டிருந்தார். ராதைகளும் கோபியர்களும் தன் முன் படர்ந்திருப்பதைக் கண்டு இன்னும் உற்சாகம் கூடியது. அவர்கள்மேல் எழுந்த சுகந்த மனத்தில் கிருஷ்ணர் மேலும் மயங்கினார். தன் உடலை ரசிக்கும் கண்கள், அணிகலன்களை வெறிக்கும் கண்கள், குரலுக்கு ஒப்புக்கொடுக்கும் பெண்கள் என அவர் பெருமிதத்தால் உள்ளுக்குள் நனைந்தார்.
எதனாலோ உந்தப்பட்டு முன்வரிசையில் குந்தியிருந்த கரடி எழுந்தது. கைக்கெட்டும் தூரத்தில் ஜாலவித்தை புரிந்துகொண்டிருந்த கிருஷ்ணனை வாரி அணைக்க முயன்றது. அவர் அணிகலன்கள் தடுத்தன. அதனால் என்ன? எட்டி அந்த நீலநிறக் கன்னத்தைத் தன் உதடுகளால் தொட்டு முத்தம் தந்தது.
சன்மானம் பெற்று தன் கையில் மடக்கி வைத்திருந்த நனைந்த அந்த ஐம்பது ரூபாய் தாளை கிருஷ்ணனின் மார்பில் வைத்து குத்திவிட்டது. கிருஷ்ணன் அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார். இருவரும் சேர்ந்து பார்வையாளர்களைக் கும்பிட்டார்கள்.
கூட்டம் ஆர்ப்பரித்து உடன் அடங்கியது.
கூட்டத்தை, 'கரடி’ என்கிற தல்லாகுளம் ரமேஷ் வெறித்துப் பார்த்தான். சற்றுமுன் அவன் துப்பிய மண்ணெண்ணெய், பார்வையாளர்களின் முகத்தில் பட்டுத் தெறித்தது மாதிரி இருந்தது!
No comments:
Post a Comment