Thursday, July 23, 2009

யோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2



முதல் சந்திப்பு

யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2

அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த மாமிகளுக்கு சொல்ல அவரிடம் நிறைய அகங்காரமான சொற்களிருந்தன. நானும் என் நண்பர்கள் சிலரும் வாசிப்பின் போதையில் திரிந்த காலமது. புதிய விஷயங்களை படிக்க, படிக்க பழமையான விஷயங்களில் ஒன்றுமில்லையென ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தோம். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் இல்லையெனவும், சுந்தரராமசாமி, அம்பை, நா. முத்துசாமி, வண்ணதாசன், வண்ணநிலவன், ஜி. நாகராஜன் என எங்கள் வாசிப்பறைகள் இவர்களின் வாழ்வுலகங்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. ஒரு சின்னத்திமிர் எங்கள் மீது எங்களையறியாமல் ஏறியிருந்தது. எந்தக் கூட்டத்தில் பேசும் பேச்சாளரை விடவும் எங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தோம்.

வம்பிழுப்பதற்காகவே பாலகுமாரன் பேசவிருந்த கூட்டத்தில் மௌனமாய் உட்கார்ந்திருந்தோம். உடனிருந்த பார்வையாளர்கள் ஒன்றுமில்லாத ஆட்டுமந்தைகள். வெறும் பத்திரிகை கவர்ச்சிக்காக வந்திருப்பவர்கள். அவர்கள் எங்களை கொஞ்சம் உற்று கவனித்தால் எங்கள் தலையிலிருந்து மேதமை பொங்குவதை கவனிக்கமுடியும்.

சம்பிரதாய சடங்குகளுக்கு பிறகு பாலகுமாரன் ஒரு உபதேச உரையாற்றினார். வெற்றி பெற்றவர்கள் எதிரிலிருக்கும் மந்தைகளுக்கு போதிக்கும் உரை அது. பேசி முடித்து முகமெங்கும் பெருமிதம் பொங்க பார்வையாளர்களிடம் இருந்து விலகினார். விவாதத்தில் பங்கேற்பாளர்கள் யாரும், இருக்கப்போவதில்லை என்ற உறுதியுடன் பத்து நிமிடம் கலந்துரையாடலுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மௌனம் உடன் உடைபட என் ஸ்நேகிதி கோமதி எழுந்து, பாலகுமாரனின் எழுத்து எத்தனை போலியானது என்றும், அது காலத்தின் முன் நசுங்கி மிதிபட்டு மறையும் காலம் வெகு அருகில் உள்ளதென்றும் கோபம் கொப்பளிக்க பேசினார்.

இக்குரல் அவ்வரங்கம் எதிர்பாராதது. அதிர்ச்சியில் உறைந்த பலகண்கள் கோமதியின் பக்கம் திரும்பின. பாலகுமாரனின் இரு மனைவிகளும் அவ்வரங்கில் பார்வையாளர்களாயிருந்தார்கள். எதிர்பாராத இத்தாக்குதலில் கொஞ்சமும் நிலைகுலையாமல் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ஒலிபெருக்கியை தன்பக்கமிழுத்து,

உன் பேரென்னம்மா?

கோமதி.

என்ன படிக்கிற?

எம்.எஸ்.சி. பாட்டனி.

என் கதைகள் நீ நினைக்கிறமாதிரி வாசிப்பின் ருசிக்கானது அல்ல. அது வாழ்வின் அவலத்தை அள்ளிக் கொண்டுவருவது. அதை படிப்பதற்கு நீ இன்னும் உன்னை கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு எழுத்தை சரியாக படிப்பதற்கே பயிற்சி வேண்டும்.

நீ சரியாக எழுது

என் குரல் கோபத்தில் உயர்ந்தடங்கியது.

உங்க பெயர்.

பவா செல்லதுரை.

நான் என்ன சரியா எழுதலன்னு சொல்லு?

நான் இப்போது ஜி. நாகராஜனை, அசோகமித்திரனை, அம்பையை, சுந்தரராமசாமியை தொடந்து வாசிக்கிறேன். இப்படைப்புகள் எனக்குத்தரும் வாசிப்பனுபவத்தை உன்னுடைய ஒரு கதை கூட தரவில்லை. எப்படி வாசிப்பதென நீ எங்களுக்கு சொல்லித்தராதே, எப்படி எழுவதென இவர்களிடமிருந்து நீ கற்றுக்கொள்.

ரத்தம் கண்களுக்கேற,

செல்லதுரை நீ இனிமேல் பாலகுமாரனை படிக்காதே

”இது எஸ்க்கேப்பிசம். ” இது கோமதி

இவ்வுரையாடல் அந்த அரங்கிலிருந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியையும், கூட்டத்தில் கலகம் செய்யவந்திருக்கும் கலகக்காரர்கள் நாங்களென்றும், எங்கள் ஜோல்னா பைகளில் வெடிகுண்டுகள் கூட இருக்கலாமெனவும் முணுமுணுத்தார்கள்.ஒரு வழியாக உலை கொதிப்பதற்கு முன் தீ அடங்கியது.
இரு பக்கமும் இன்னும் பேசி தீர்க்க வேண்டிய மூர்க்கமான வார்த்தைகளின் மிச்சத்தோடேயே கூட்டம் முடிந்தது.

கூட்டம் முடிந்து பாலகுமாரன் என் அருகில் வந்து,

”உன்னோடு தனியே பேசணும்”

என கிட்டதட்ட என் கையைப் பிடித்திழுத்தார். விக்டோரியா பள்ளியின் பின்பக்க மேல்மாடியில் கோபத்தில் புகையும் சிகரெட்டுடன் என்னை மிக அருகில் சமீபத்து,

”சொல் செல்லதுரை, நான் ஒண்ணுமேயில்லையா?”

”நான் அப்படி சொல்லலையே சார்,”

இல்லை அதைத்தான் நீயும் அந்த பொண்ணும் வேற மாதிரி சொன்னீங்க? சொல்லுங்க உங்களுக்கு யார் மேல கோபம்? என்ன வேணும் உங்களுக்கு? ஏன் நிசப்தமான உலகத்தைப் பார்த்து கூச்சலிடுகிறீர்கள்? என உக்ரமான குரலில் பேசிக்கொண்டே போனார்.

பாலகுமாரன் அப்போது புகழின் உச்சத்திலிருந்தார். தமிழ்வணிகப் பத்திரிகைகள் அவரை போட்டிப்போட்டு சுவீகரித்து கொண்டிருந்தன. நான் ரொம்ப சின்ன பையனாக கலக்கத்தோடு அவர்முன் நின்று கொண்டிருந்தேன்.
பேசிக் கொண்டே தன் முகவாயில் கைவைத்து அழுத்தி, தன் பல் செட்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு

”எனக்கு இன்னும் நாப்பது வயசு கூட முடியல. டபே டிராக்டர் கம்பெனி போராட்டத்துல, ”பாப்பார நாயே ன்னு போலீஸ்காரன் அடிச்சதுல ஒடைஞ்ச பல்லு.”

எந்த அனுபவமே இல்லாம ஒருத்தன் ஒரு நாவல் எழுதிறமுடியுமா?
இவ்வுரையாடல் நான்கு முழு சிகெரெட்டுகளை முடித்திருந்தது.
இருவருமே தணிந்திருந்தோம். துவங்குதலுக்கான முதல் சொல் இருவரிடமுமே தயக்கத்திலிருந்தது. சிகரெட்டின் நுனிநெருப்பு ஒரு கேரக்டர் மாதிரி எங்களுடனே அணையாமல் பயணித்தது.

என் கையிலிருந்த புத்தகமே எங்கள் மௌனம் உடைபட காரணமாயிருந்தது. பேச்சு சுழன்று, சுழன்று பிரமிளிடம் வந்து நின்றது.

”பிரமிளின் தியானதாரா படிச்சிருக்கீயா?”
இல்லை. பார்த்தது கூட இல்லை. இது நான்.

அது ஒரு அற்புதமான சிறு புத்தகம் செல்லதுரை, சாது அப்பாதுரை என்கிற ஒரு துறவியைப்பற்றி பிரமிள் எழுதியிருப்பார். அதில் தங்கள் ஊரைச்சேர்ந்த விசிறி சாமியார் ஒருவரைப்பற்றியும் கூட சில பகுதிகள் வரும்.
ஐந்நூறு பிரதிகள் வாங்கி வைத்து நான் போகிற திருமணத்திற்கெல்லாம் கொடுத்திருக்கிறேன்.
என் கண்கள் விரிய
”விசிறி சாமியார்னா யோகிராம் சூரத்குமாரா?”என்றேன்.

தெரியுமா உனக்கு? அவரை தெரியுமா? என ஆர்வத்தின் நுனி நோக்கி பாலகுமாரன் வந்துகொண்டிருந்தார்.

சூரத்குமார் எனக்கு நல்ல நண்பர். நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த ஸ்கூல் மாடியிருந்து பத்திருபது கட்டிடங்கள் தள்ளிதான் அவர் இருக்கிறார்.

நீ உடனே என்னை அவரிடம் அழைத்துப் போகமுடியுமா?

நிச்சயமாக.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் பெரியத் தேருக்கருகில் நாட்டுஓடுகள் வேயப்பட்ட, ஏற்கனவே எனக்குப் பழக்கப்பட்ட அந்த வீட்டின் முன் வாசலில் நாங்கள் நான்குபேரும் நின்றிருந்தோம்.

அவர்கள் மூன்று பேரின் முகங்களிலும் பக்தியும், பரவசமும் படிந்திருந்தது. ஒரு தெய்வ தரிசனத்திற்கான மனநிலை அவர்களிடம் இருந்தது. நான் இரும்பு கம்பிகளிட்ட கேட்டில் கை வைத்து லேசாக தட்டினேன். அதற்காகவே காத்திருந்தவர் போல முதல் தட்டலுக்கே கதவைத் திறந்து வெளியே வந்தார். இருட்டிலும் கூட அவர் முகப் பொலிவின் ஒளி அவ்விடத்தில் ஒளிர்ந்தது. கையில் புகையும் சிகெரெட்டுடன் உற்சாக மனநிலையில் கதவைத்திறந்து,
என் கைகளைப் பற்றி

”வா பவா” வென அழைத்தார். என் தோள் மீது வாஞ்சையாக தட்டிக் கொடுத்து.
”எப்படி இருக்கிற?” என ஆங்கிலத்தில் விசாரித்தார்.

வாசலில் நிற்கும் பாலகுமாரனையும், அவருடைய இரு மனவிகளையும் அருகில் அழைத்து அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

“இவர் பாலகுமாரன் தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர், எல்லா பாப்புலர் பத்திரிகைகளிலும் இவர் கதைகள் தொடர்கதைகளாக வருகின்றன, உங்களை சந்திக்க வேண்டுமென பெரும் ஆவலில் இருக்கிறார்’’ என தொடர்ந்த என் பேச்சை இடைமறித்து.

இந்த பிச்சைக்காரனை ஏன் பார்க்க வேண்டும்? என கேட்டார்.

பாலகுமாரனை முழுவதுமாக தன் பார்வையால் குடித்திருந்தார் யோகி. அந்த பார்வையின் ஊடுறுவலின் அதிர்வில் பாலகுமாரன் நிலைகுலைந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். ஒன்றும் புரியாமல் நான் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப்பார்த்து தான் யோகி பேசினார்.

“பவா, இவ்விடத்தைவிட்டு இவரை உடனே போகச்சொல், இவரை சந்திக்க நான் விரும்பவில்லை. இப்பிச்சைக்காரனை தேடி இனிமேல் இவர் வரவேண்டாம்.’’
சொல்லிவிட்டு அடுத்த சிகெரெட்டை பற்ற வைத்துக்கொண்டு கைகளைக் குவித்து கஞ்சாபுகையை இழுப்பதுமாதிரி இழுக்க ஆரம்பித்துவிட்டார்.

தெருவில் போவோர்களும் வருபவர்களும் அங்கிருந்தே அவரை வணங்கியதும், கண்ணத்தில் போட்டுக் கொண்டதும், சிலர் தரையில் விழுந்து வணங்கியதும் விநோத காட்சிகளாய் இருந்தது. ஏதோ ஒரு புராதனமான நகரத்தின் அகண்ட தெருவில் இக்காட்சிகள் திரையில் நடப்பது மாதிரியிருந்தது.

பாலகுமாரன் அவ்விடத்தை விட்டகன்றிருந்தார். யோகி அமர்ந்திருந்தற்கு வெகு அருகிலிருந்த ஒரு திட்டில் நான் அமர்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அவசரமாக வீட்டிற்குள்ளே போய் இரு ஆப்பிள் பழங்களோடு வந்தார். நான் எழுந்து நின்றிருந்தேன். விடை பெறுதலுக்கான நேரத்தின் உந்துதலை என் சரீரம் உணர்ந்தது.

இரு ஆப்பிள்களையும் என் கைகளில் புதைத்து,
”மை பாதர் ப்ளஸ் யு பவா” என என்னை ஆசீர்வதித்தார். சற்று முன் நடந்த நிகழ்வுகளின் சிறு சலனம் கூட இன்றி, ஒரு குழந்தைமாதிரி சிரித்துக்கொண்டிருந்தார்.