Saturday, September 21, 2013

கால்

சிறுகதை 

தான் யாருமற்று தனித்திருப்பதை திடீரென உணரமுடிந்தது. நிதானமாக எழுந்து மேல்மாடி அறையிலிருந்து வெளியேறி வராண்டாவிற்கு வந்து நின்று எதிரில் வியாபித்திருந்த மாமரத்தைப் பார்த்தான். கொத்து கொத்தாய் காய்கள் நிறைந்திருந்தன. ஆறேழு அணில்கள் இவை தங்களுக்கானவை என்ற உரிமையுடன் அக்கிளைகளில் இங்குமங்கும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தன. வெகு நாட்களாக கவனிக்காமலிருந்த அம்மரப் பருண்மை அவனை ஆச்சரியப்படுத்தியது.
மேல்மாடி அறைகளிலும், கீழ் அலுவலகத்திலும் குறைந்தது முப்பது பேர் பணியாற்றிக் கொண்டிருப்பினும் ஒரு சத்தமும் இன்றி அணில்களின் சத்தத்தை இன்றைக்கு மட்டும் தனியே உள்வாங்க முடிந்தது.
இப்படி ஒரு தனிமை வாய்த்து பல காலமாகியிருக்கும். பிரபலம் பிடுங்கி தின்கிற முதல் விஷயமே இத்தனிமைதான். அது தனக்கு சின்ன வயதிலேயே வாய்த்தது அதிஷ்டமென்றும், துரதிஷ்டமென்றும் சொல்லிக் கொள்ளலாம். இம்மாடியறையிலிருந்து இறங்கிப் போய், எப்போதும் மூடிய கார் கண்ணாடி வழியே மட்டும் பார்க்கிற அந்த மூலை டீக்கடையில் நின்று ஒரு டீ குடித்துவிட முடியுமா தன்னால்?

கூட்டம் கூடி, போக்குவரத்து நின்று, போலீஸ்காரர்கள் வராமல் அங்கிருந்து மீண்டு இரு நிமிட நடையில் மிஞ்சுகிற தன் அலுவலகத்தை அடைய முடியாத பிரபலமிது. கடந்த பத்திருபது ஆண்டுகளில் வேறெந்தத் தமிழ் நடிகனும் எத்தனை போட்டி போட்டாலும் தன் உயரத்தின் பாதியைக் கூட எட்ட முடியவில்லை
இப்போது ஒரு புன்னகை தன்னையும் மீறி எழுந்ததை உள் மனம் ரசித்தது.
தன் வழக்கமான அன்றாடங்களிலிருந்து இன்றாவது விடுவித்துக் கொள்ள வேண்டிய மனதின் விருப்பத்தை மௌனமாக ஏற்றுக் கொண்டான்.
தன் சொந்த நகரத்தின் நாலுகட்டு நாட்டு ஓடு வேய்ந்த வீடும், அதன் முற்றமும், அதன் நடுவிலிருந்த துளசி மாடமும், தங்கள் வீட்டு இரவுச் சாப்பாடும் நினைவிற்கு வந்தன.
இப்போதுதான் கவனித்தான், ஆறேழல்ல பத்திருபதுக்கு மேல் அணில்கள் அம்மாமரக் கிளைகளில் வியாபித்திருந்ததை. அப்படியேதான் தன் வீடுமிருந்தது ஒரு காலத்தில். அது தங்கள் எல்லோரையும் வெளியேற்றிவிட்டு தானே பூட்டிக் கொண்டது. பின் ஒரு காட்சிப் பொருளாகி விட்டது. இம்மாமரப் பச்சை மறைந்து மரம் பட்டுப் போனால், இந்த அணில்களும் இங்கிருந்து வெளியேறிவிடும். பிரிந்து எங்கெங்கோ போய் ஒட்டிக் கொள்ளும். உறவுகளும் நட்பும் அதன் பிரிவுகளும், மறைவுகளும் கூட இப்பிரபல்யத்தின் முன் ஒன்றுமில்லாததாகிவிடுகிறது.
சற்றுமுன் துளிர்த்த புன்னகை வற்றி வேறெதுவோ மனதை நிறைக்கிறது. தங்கள் வீட்டு பர்மா தேக்கிலான சாப்பாட்டு மேசை நினைவுக்கு வருகிறது. ஒரு நாளை நிறைவு செய்ததற்காக ஒவ்வொரு நாளும் நடக்கிற கொண்டாட்டத்தின் மைய மண்டபமது.
எப்போதுமே அக்காதான் உரையாடலைத் துவக்கி வைப்பாள். சொற்களின் அடுக்குகள் தீக்குச்சிகளாக எப்போதும் அவளிடமிருந்தன. ஆழ்ந்து யோசித்தால் அவை உரையாடல்களில்லை. கதைகள். கதைகள்கூட இல்லை. ஒரே ஒருவர் வாழ்விலிருந்து உறிஞ்சியெடுத்த கசப்புகள். கசப்பை ஏன் இவள் இப்படி ருசிக்கிறாள்!
அந்த வீட்டுச் சாப்பாட்டு மேசையில் இடப்படாத ஒரு நாற்காலியில் அக்காவின் மானசீகமான ஆர்.கே.வுக்கும் ஒரு இடமிருந்தது. சொல்லப்போனால் அக்கா தன் ஆதர்ச எழுத்தாளனுக்குப் போட்டிருந்த சிம்மாசனத்தைச் சுற்றி அவர்கள் எல்லோருமிருந்தனர்.
அங்கு நடப்பது எல்லாம் விநோதமாயிருக்கும். உணவு சாப்பாட்டு மேஜைக்கு வருவதற்கு முன்பே அன்றைய அக்காவின் கதை சொல்லல் சில சமயம் முடிந்திருக்கும். பரிமாறிய சாப்பாடு வாய்க்கு எட்டுவதை மறித்து சொற்கள் உதிரும். உணவு நிறைகையிலும் விவாதம் துவங்கும். சிறுசிறு சண்டைகளின்றி இரவுத் தூக்கம் ஏது?
பகலில் ஆர்.கே.யின் கதைபடிப்பதும், மாலைவரை அதைக் கூர்த்தீட்டுவதுமெனத் திரியும் அக்காவிற்கு இரவு உணவு யுத்தகளம். தன் மேதைமை இவ்விவாதங்களில் மெருகேறுவதை அவள் உணர்ந்து ஒவ்வொரு இரவுக்காகவும் தவமிருந்தாள்.
அப்பாவும், அண்ணனும் எப்போதுமே அவள் வார்த்தைகளை இடைமறிக்கிறவர்களாகவும், அண்ணியும் அவனும் அதை மௌனமாக பத்திரப்படுத்துகிறவர்களாவும் இருந்தார்கள். தான் மட்டுமெனக் கூடச் சொல்லலாம். அண்ணியின் மௌனம் எவராலும் அளவிட முடியாதது. அதுவரையிலான மொத்தத் தர்க்கத்தையும் சிதைக்க அவளுக்கு ஒரு வரியல்ல, ஒரு சொல் போதும். அவள் காக்கும் அமைதி எல்லோரையும் எப்போதும் ஒருவித எச்சரிக்கையிலேயே வைத்திருக்கும்.
அவனுக்கு வாசிப்பின் மீது கவனம் குவியாத காலமது. கேட்பது, பார்ப்பது, காட்சியாக்குவது. இது வரிசைமாறி வரிசைமாறி வரும், போகும்.

ஆனால் ஒரு முடிவுக்கு வந்துவிட்டிருந்தான். இந்த முகம் தெரியாத ஆர்.கே எப்போதும் ந்த வீட்டின் உணவறையில் உட்கார்ந்து கொண்டு விவாதங்களைக் கட்டவிழ்த்து விடுகிறார். அது தறிகெட்டு ஓடுகிறது. அவை நிலைக்கு வருவதற்கு முன் இரவு தனக்குள் எல்லோரையும் அமிழ்த்திக் கொள்கிறது. இது தீராத நோய்மாதிரி வியாபித்துக் கொண்டது. சென்னைக்கு வந்து, முதல் ஆறேழு படங்களிலேயே உச்சத்திற்குப் போய் ஒரு நிமிடத் தனிமைக்கும் தவித்த ஒரு மழைக்கால இரவில் படப்பிடிப்பு ரத்தாகி இதைப்போல வாய்த்த ஒரு தனிமையில் தான் ஆர்.கே.வின் முதல் கதையை அவன் வாசித்தான். அத்தொகுப்பைப் படித்து முடிக்க அவனுக்கு ஒரு முழு வருடம் போதவில்லை. இப்போது விவாதங்களைத் துவக்க அக்கா வேண்டாம் அவனுக்கு. அவன் மட்டுமே போதும். அப்பாவும் அண்ணனும் தன்னிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிற்கிறார்களென அளவிட முடிந்ததும் அப்போதுதான்.
அக்கா தினம் தினம் அன்றைக்கான தீக்குச்சிகளை இச்சேமிப்பிலிருந்து தான் எறிந்திருக்கிறாள். அண்ணி தன் மௌனத்தால் அவற்றை மனதில் மட்டும் ஒத்திக் கொண்டிருந்திருக்கிறாள்.
இந்த நிதானத்தில், அணில்களின் குதூகலத்தில், ஒரு முற்றிய மாங்காய் உதிரல் சத்தத்தில் எல்லாமும் புரிகிறது.
வாழ்க்கை ஏன் தன்னை மட்டும் எடுத்தவுடனே உச்சிக்குக் கொண்டுபோய் இருத்தி வைத்து மற்ற எல்லாரையும் குனிந்து பார்க்க வைத்தது? வெறிபிடித்து வாசித்த அக்காவை எது அதை உதறவைத்தது? கேட்டு வளர்ந்த என்னை எது படிக்கத் தூண்டியது? எல்லாமும் எப்போதும் மாறுதலுக்குரியவை.
இப்போது சத்தம் போட்டு சிரிக்க முடிந்தது.
நாற்பது வருடங்களாய்ப் பார்க்கத் தோன்றாத ஆர்.கே.வை இன்று பார்க்கவேண்டுமென்று இதோ இந்த யாருமற்ற இத்தருணம் தள்ளிவிடுகிறது. அவரோடு பேச, விவாதிக்க, சண்டையிட, உச்சிமுகர இதுவரை அடைகாத்த கால ஓடுகள் உடைந்து சிதறுகிறது. அந்நினைவின் முடிவில் தி. நகரில் ஜெகதீஸ்வரன் தெருவில் சற்று உள்ளடங்கிய அவ்வீட்டின் முன் அவனின் ரேஞ்ச் ரோவர் கார் நின்றது.
வழிநெடுகிலும் அவனுடைய பல முகபாவங்களைக் கொண்ட பெரிய பெரிய பேனர்கள் அவனை இன்னும் கூடப் பரவசப்படுத்தியது.
காரிலிருந்து இறங்கி அத்தெருவைப் பார்த்தான். மக்கள் தங்கள் அன்றாடங்களில் கலந்திருந்தார்கள். ஒருவரும் தன்னைக் கவனிக்கவில்லை எனத் திரும்பினபோது எங்கிருந்தோ நாலைந்துபேர் ஓடி வந்து கைகுலுக்கினார்கள். எதிர் வீட்டிலிருந்து ஒரு பெண் கசங்கிய சுடிதாரோடு ஒரு ஆட்டோகிராப் வேண்டி நின்றாள். எல்லாம் ஒரு கணம்தான். இடைவெளியின்றி அவ்வீட்டின் பக்கவாட்டு மாடிப்படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருந்தான். தன் ஷூவின் சத்தம் தனித்து கேட்பதை உணர்ந்தான். இது தான் என்கிற பெருமிதத்தின் அடையாளம். என்னை கவனி, என் மீது குவி என்கிற பிரபல்யத்தின் அழைப்பு. நின்று தன் ஷூவைக் கழட்டினான். ஒரு கணம் அதை அங்கிருந்து அப்படியே வீசிவிடத் தோன்றியது. ஆனால் முடியவில்லை.
படி ஓரம் அவற்றைத் தனித்துவிட்டான். பொருட்படுத்தத் தக்கதாக அல்லாமல் இருபதுக்கும் மேல் செருப்புகள் அங்கு இறைந்து கிடந்தன. அவற்றை வைத்து உள்ளிருப்பவர்களை மதிப்பிட முயலும் தன் அறிவீனம் தனக்கே குமட்டியது.
சத்தமின்றி உள் நுழைந்தான். அது மொட்டை மாடியில் தென்னங்கீற்றுகள் வேய்ந்த ஒரு கொட்டகை. ஒரு வசதியான மரநாற்காலியில் ஆர்.கே. ஒழுங்கற்று கலைந்திருந்த எதிரில் அவனால் அந்தப் பொருட்படுத்தப்பட வேண்டியிராதவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
மிகுந்த பவ்யத்தோடு அவரை வணங்கினான். இந்த பவ்யம் தன் வாழ்வில் முதல்முறை.
அவரிடமிருந்த அலட்சியத்தை கவனித்தான். அல்லது தனக்கு முன்னால் இதுவரை நிகழ்ந்த குனிதல்களுக்கு முன் இது முதல் நிமிர்தல்.
உட்காருங்க என எதிரிலிருந்த ஒரு பழைய மர நாற்காலியைக் காண்பித்தார்.
அவர் முன் வியாபித்திருந்த மௌனத்தில் எல்லா வார்த்தைகளும் கொட்டியிருந்தன. அதில் ஒரு வார்த்தையையும் அவனால் தைரியமாகத் தொட முடியவில்லை. வெகுநேரத் தவிப்படங்கி,
நீங்க ஏன் இப்போதெல்லாம் எதுவும் எழுதுவதில்லை? வரிசையாக ஒட்டிக் கொண்ட வார்த்தைகள் வேர்த்திருந்தன.
எழுதினதே அதிகம்னு இப்ப தோணுது
லேசானதொரு வறட்டுச் சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டான்.
நான் உங்கள் கதைகளைக் கேட்டு வளர்ந்தவன்
அவர் இப்போதுதான் அவனை நேருக்கு நேர் பார்த்தார். பார்வை மிக சமீபத்திருந்தது.
வளர்ந்த பிறகுதான் வாசிக்க ஆரம்பித்தேன்.
யார் வளர்ந்த பிறகு?
மௌனத்தை இருவருமே அடைகாத்தனர்.
நீங்கள் உங்கள் காயத்ரியை ஒரு ரோல் மாடலாக்கி சமூகத்தின் முன் நிறுத்துகிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. வெறும் அதிர்வுகளுக்காக வேண்டுமென்றே புனைகிறீர்கள். காயத்ரி இல்லை என் முன்மாதிரி
அவன் பேசிக்கொண்டே போனான். அவர் அவனைத் தாண்டி தன் பார்வையால் தூரத்திலிருந்த ஒருவரிடம் நிலைத்திருந்தார். அவனும் விடாமல் அவர் முன் கொட்டிக் கொண்டேயிருந்தான். போதும் என நினைத்தபோது அவர் பேச ஆரம்பித்தார்.
எழுதியவற்றைப் பற்றிப் பேசுவதென்பது, பிணத்தின் தலைமுடியைக் கோதுவது மாதிரி. அதில் எனக்கு எப்போதும் விருப்பமிருந்ததில்லை
நீங்கள் எழுதினதிற்கு நீங்கள் பொறுப்பில்லையா?
அது அச்சுக்கு போனவுடனே நான் அதிலிருந்து என்னைத் துண்டித்துக் கொள்கிறேன். அப்புறம் அது உன்னை மாதிரி வாசகனோட பொறுப்பு
அப்போ சமூகத்திற்கு இலக்கியத்தின் பங்குதான் என்ன?
இதற்கெல்லாம் பதில் என்னிடம் இல்லை
இந்த வார்த்தைகளில் பல வருடச் சலிப்பிருந்தது.
சரி உங்கள் கதைகள் ஒரு சாமன்ய மனிதனை என்னதான் செய்துவிடும் என நினைக்கிறீர்கள்?
ஒரு மயிரும் செய்துடாதுன்னு நெனைக்கிறேன் என தன் இடது கையால் வளர்ந்து தொங்கின அவர் முடியைத் தள்ளிவிட்டுக் கொண்டார்.
அப்புறம் ஏன் சார் எழுதுறீங்க?
எதுக்கோ எழுதறேன். உன்னை யார் படிக்கச் சொன்னது. அதோட மட்டும் நிக்காம எழுதனவனைத் தேடிவந்து இப்படி சீண்டறது மனிதகுல அநாகரிகம்
அவன் விக்கித்துப்போனான். எதிரில் மீதமிருந்த வார்த்தைகளும் உள்ளுக்குள்ளேயே அமிழ்ந்துவிட்டன.
கண்ணாடி டம்ளர்களில் எல்லோருக்கும் டீ வந்தது. அவர் ஒன்றை எடுத்துக் கொண்டு அவனுக்குக் கை காட்டினார்.
டீ கொண்டு வந்த பையனைத் தொடர்ந்து மிகுந்த அழகோடும், கம்பீரத்தோடும் இன்னொருவர் உள் நுழைந்தார்.
வாங்க பி.எஸ்.? என மிகுந்த வாஞ்சையோடு அவரை அழைத்து தன் பக்கத்தில் இருத்திக்கொண்டார். இவனைப் பார்த்து அவர் ஒரு துளியும் பரவசப்பட்டது மாதிரி தெரியவில்லை. ஆனால் அவன் எழுந்து நின்று கொண்டான்.
இவர் என் நாற்பதாண்டுகால நண்பர். பெயர் பி.எஸ்

அந்த நண்பர் மிக மென்மையாகக் கைகுலுக்கினார்.
நீங்க பேசிக்கிட்டிருங்கஎன தூரத்தில் கிடந்த இன்னொரு நாற்காலிக்குப் போனார். நடப்பவை எல்லாமும் இதற்கு முன் அவன் பார்த்திராதது.
எனக்கு தமிழ்நாடு முழுக்க இரண்டாயிரத்திற்கும் மேல் நற்பணி இயக்கங்கள் உண்டு
ரசிகர் மன்றங்களா? அலட்சியத்தின் வெளிபாடாக வார்த்தைகள் தெறித்தன
வேறு வழியில்லை. நானும் அவற்றை அப்படித்தான் அழைக்க வேண்டியுள்ளது. ஆனால் அதை நான் மேம்படுத்த, இன்னும் அடுத்த தளத்திற்குக் கொண்டுபோக முயற்சி செய்கிறேன்
செய்ங்க உதாசீனத்தின் தொடர்ச்சி
அவங்கள வாசிப்பாளர்களா, சமூகத்துக்கு ஏதாவது செய்யக் கூடியவங்களா...
நல்லது
அதுக்கு உங்க உதவி வேணும்.
நான் என்ன செய்ய முடியும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க?
ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல. நாங்க நடத்துற மாநில மாநாட்டுல நீங்க வந்து பேசணும்
சாரி, இப்படி ரசிகர் மன்றத்துலெல்லாம் வந்து பேசி என் நேரத்தை வீணாக்க விரும்பல
இல்ல நீங்க அப்படி ஒதுக்கக் கூடாது. ரசிகர் மன்றம்றதுல வெறும் கேவலமில்லை, அதிலேயும் படிப்பாளிகள், படைப்பாளிகள், டாக்டர்கள், விஞ்ஞானிகள் எல்லாமும் இருக்காங்க
அவனுங்ககிட்ட போய் நான் என்ன பேசிடப் போறேன், நான் எட்டாவது கூடத் தாண்டல
உரையாடலின் உக்கிரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலேறினான்.
நீங்க இப்படி மறுத்தா நான் எப்படி சார் அவங்களை வேற தளத்துக்கு எடுத்துக்கிட்டுப் போறது. அப்படியே அங்கேயே விட்டுடட்டா எனக் கொஞ்சம் குரலை உயர்த்தினான்.
அவனே எதிர்பாராததொரு தருணத்தில், வர்றேன், என்னைக்கு? எனக் கேட்டார்.
நீங்க என்னைக்குச் சொன்னாலும் அன்னைக்கு எனப் பரவசப்பட்டான்.
டிசம்பர் 11 பாரதியார் பிறந்த நாளில், எந்த இடத்துல?
நான் கன்பர்ம் பண்ணி சொல்றேன் சார். ரொம்ப நன்றி எனக் கைக்கூப்பி எழுந்தவனை மீண்டும் கையமர்த்தி உட்காரச் சொன்னார்.


இப்போது சுற்றிலிருந்த அந்த பைப் மூன்றாவது முறையாக அவரிடம் வந்தது. ஆழ்ந்து ஒருமுறை இழுத்துவிட்டுத் தந்ததை பவ்யமாகப் பெற்றுக் கொள்ள இரு கரங்கள் நீண்டு காத்திருந்தன.
இவன் விடைபெறும் போது அந்த அறையில் இருந்த ஒருவர் பாட ஆரம்பித்தார். அதன் பின்னணி மாதிரி அங்கெழுந்த சிறு புகைமூட்டம் பரவியிருந்தது.
உதிப்பதுமில்லை மரிப்பதுமில்லை ஒளிரும் சூரியன்
வளர்வதுமில்லை தேய்வதுமில்லை சிரிக்கும் சந்திரன்.
வாழ்க்கை ஒரு தோற்றம், நொடிதோறும் பல மாற்றம்
படித்ததுமில்லை, பரீட்சையுமில்லை எனது ஜாதகம்
சுயபலம் உண்டு, பிறபலமில்லை கவிதை ஜீவிதம்
படியிறங்கும்போது அவன் உதடுகள் கவிதை ஜீவிதம்... என முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
அது ஒரு தனியார் பள்ளியின் விசாலமான மைதானம். மேடை அலங்கரிப்பின் ஒவ்வொரு இடத்திலும் திட்டமிடலும் கவனமும் குவிந்திருந்தது. அவனின் பத்துநாள் படப்பிடிப்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டிருந்தது. சில கோடிகள் பற்றுப் பக்கத்திற்கு நகர்ந்தன. எல்லாவற்றிலும் இறுதிமுடிவு அவனுடையதாயிருந்தது. மேடையில் மூன்று நாற்காலிகள் மட்டும்தான் என்பதுவரை.
ஒன்று அவருக்கு,
இன்னொன்று தனக்கு
மூன்றாவது நற்பணி இயக்க மாநிலத் தலைவருக்கு.
வண்டி அனுப்பட்டுமா சார்?
வேணாம், சரியா ஆறறைக்கு நண்பரோட காருல வந்துடுவேன்
அப்படியே ஆறு முப்பத்தைந்துக்கு அந்த கார் மைதானத்திற்குள் நிதானமாய் நுழைந்தது.
      மேடையின் முன்பக்கத்திலிருந்து ஓடிப்போய் முன்கதவைத் திறந்து அவருடன் கைகுலுக்கி, அங்கேயே ஒரு சால்வை போர்த்தி, பெரும் ஆரவாரச் சத்தத்திற்கிடையே அவரை கம்பீரமாய் அழைத்து வந்தான். நூற்றுக்கணக்கான கேமராக்கள் போட்டிபோட்டு மின்னின.
மேடையில் நின்று வணங்கினார். அருகில் நின்று அவன் எல்லோரையும் உட்காரச் சொல்லிக் கையமர்த்தினான். கொஞ்சமும் இடைவெளியின்றி இயக்கத் தலைவர் தன் உரையை ஆரம்பித்தார்.
நம் தலைவர் எத்தனை மகத்தானவர் பாருங்கள். அவரே புகழின் உச்சியில் உள்ள ஒரு நடிகர். ஆனால் தன் ஆதர்சன எழுத்தாளனை நமக்காக அழைத்துவந்து அவர் ஒரு பணியாள் மாதிரி இதற்காக உழைத்து... வார்த்தைகள் தடுமாறி தடுமாறி வந்தன. ஏற்கனவே கேட்டிருந்த அறிவுரைகளின் பலம் கூடி, மொத்தக் கூட்டமும் அமைதி காத்தது. ஒரு விசில் சத்தமும், அது எழும் இடத்தைக் காட்டி கொடுத்துவிடும் அமைதியது.
      ஆர்.கே. தன் கால் மேல் கால் போட்டு அந்த நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அருகில் முகத்தில் சந்தோஷமும், பரவசமும் , பெருமிதமுமாக அவனிருந்தான்.
காலை எடுடா என ஒரு ஆவேசக் கத்தல் கூட்டத்திலிருந்து எழுந்துவந்தது.
பேச்சறுந்து விழுந்தது. துடித்தெழுந்து அவன் மைக் முன்னால் நின்றான். அந்தக் குரல் வந்த திசைநோக்கி, தன் கையமர்த்தி கால்களை அகற்றிக் கொண்டார் அவர். எல்லாமும் நிகழ்ந்து முடிய ஓரிரு நிமிடங்கள் கூடத் தேவைப்படவில்லை. மிகப் பதட்டத்துடன் அவன் பேச ஆரம்பித்தான்.
எது நடக்கக்கூடாதுன்னு நான் நெனெச்சேனோ அது நடந்துடுச்சி. ரசிகர் மன்றம்னா அது தேட் ரேட்டேட் ஆட்களோட கூட்டம்னு அவர் பிடிவாதமா வர மறுத்தாரு. நான்தான் அவரைக் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். நாங்க அப்படித்தான்டான்னு நீங்க காட்டிட்டீங்க
அய்யோ நான் கேட்டு, படிச்சி, வளந்த ஒரு ஜெயிண்ட்டை இப்படி அவமானப்படுத்திட்டீங்களேடா, இன்னும் அஞ்சு நிமிஷத்துல அப்படி கத்தின ஆள் இந்த மேடைக்கு வரணும். உங்க எல்லார் முன்னாலும் சார் காலுல விழுந்து மன்னிப்பு  கேக்கணும். அப்பதான் இந்தக் கூட்டம் நடக்கும் என பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் எழுந்த சிறு சலசலப்பு கேட்டுத் திரும்பினான்.
கசங்கிய வெள்ளைச் சட்டையுடன் ஒரு ஆள் தரையில் உட்கார வைக்கப்பட்டான். உதட்டோரம் லேசான ரத்தக் கசிவு தெரிந்தது. அடித்திருப்பார்கள் போலும். அவனைச் சுற்றிலும் ஆறேழு பேர் நின்றிருந்தார்கள்.
மொதல்ல நீங்க எல்லாரும் கீழ எறங்குங்க
அவரை அவமானப்படுத்திய அந்த ஆள் இப்போ இந்த மேடையில் இருக்கான். இப்போ நம் எல்லோர் முன்னிலையிலும்...
அவன் பேசிக் கொண்டிருக்கையில், கீழே உட்கார்ந்திருந்தவன் தாவி அவர் முன்னால் டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த ஹேண்ட்மைக்கை எடுத்தான். அது தவறி விழுந்தது. அநியாயத்திற்கு அவன் கைகளும் வார்த்தைகளும் நடுங்கின.
‘‘அதுஎங்காலு, அதுஎங்காலு’’
போதைக்கும் பித்துக்குமான இடைவெளியில் அவன் குரலுயர்த்திக் கத்தினான். மொத்தக் கூட்டத்தையும் ஒரு மீட்பரின் குரலைப் போல அவன் குரல் ஈர்த்தது. அவன் டீப்பாயில் தலை சாய்த்து, மேடையின் தரையில் கிட்டத் தட்ட ஒரு வளையம்  போல வளைந்து விசித்திரமாய் உட்கார்ந்திருந்தான். தன் இரு சூம்பிய கால்களையும் பக்கவாட்டில் வைத்திருந்தான்.

அவன் இன்னும் எதையோ பேச முயல்கையில் மேடையில் நின்றிருந்தவன் அதைத் தடுக்க முயன்று அவரைத் திரும்பிப் பார்த்தான். அவர் மிக இயல்பாய் கால்மேல் கால் போட்டு முன்னிலும் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.


- ஓவியங்கள்:  கோபி
நன்றி: உயிரெழுத்து செப்டம்பர் இதழ் 

Friday, September 6, 2013

அம்மா



அம்மா
பறவைகள், விலங்குகள், மனிதர்களுடனான ஒரு மனுஷி
பவாசெல்லதுரை

அது யார்னு பாரு தாசுஅம்மா கைகாட்டின புளிய மரத்தடியை தாசும் நானும் ஒரே நேரத்தில் பார்த்தோம்.
திடகாத்திரமான ஒரு ஆள் உட்கார்ந்திருந்தான். முகத்தில் அநியாயத்திற்கு முடி முளைத்து, கையிலும் காலிலும் கூட அது வியாபித்திருந்ததுஅழுக்கேறிய வேட்டியும், பேருக்குப் போட்டிருந்த ஒரு சட்டையும், வேட்டியைவிட அழுக்கேறிய ஒரு துண்டுமாய் மரத்தின் உச்சியையே வெறித்துக் கொண்டிருந்தான்.நானும் தாசும் அவனை நெருங்கினோம். சிறுவயசு பையன் என்பதால் எனக்குக் கொஞ்சம் பயமிருந்தது. தள்ளியே நின்றேன்.
யாருய்யா நீ? எந்த ஊரு?’
அவன் எதுவும் பேசவில்லை.
கேக்கறேன்ல, இன்னா ஊரு, யேன் இங்க ஒக்காந்திருக்க?’
அவன் நிமிர்ந்து தாசைப் பார்த்தான். தாசும் இப்போது சற்று பின்வாங்கி நின்று கொண்டான்.
அடுத்த வார்த்தையை எங்கிருந்து ஆரம்பப்பதெனத் தெரியாமல்பசிக்குதா?’ என தாஸ் கேட்ட அந்த விநாடி, அவன் வேகமாக தலையசைத்து பசியை ஆமோதித்தான். அரவம் கேட்டுத் திரும்பினால் கையில் ஒரு உபயோகிக்கப்பட்ட லைப்பாய் சோப்பும், ஒரு ஈரிழைத் துண்டும், துணிச் சோப்புமாய் அம்மா.
பசிக்கிறவன் கிட்ட போயி என்னடா பேச்சு? அவனை நம்ம பம்புசெட்டுக்குக் கூட்டிட்டுப் போயி குளிக்க வச்சி கூட்டியாஎன்று தாஸ் கையில் அந்தப் பொருள்களைக் கொடுத்தாள்.
அவன் எழுந்தான்முற்றிலும் பிரமாண்டமாயிருந்தது அவன் உருவம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் அப்பா எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்த உண்டு உறைவிடப் பள்ளிக்கு மதியச் சாப்பாடு போடப் போயிருந்தார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனும் தாசும் வீட்டிற்கு வந்தார்கள். அவன் அழுக்கில் பாதியை பம்புசெட் தண்ணீர் குடித்திருந்தது.
உன் பேரு என்னாய்யா?’ அம்மா கேட்க, அவன் உருமினான்.
அது எங்கள் மீனாம்மா உருமல் மாதிரியேயிருந்தது.
தெளிவாச்  சொல்லு
கண்ணன்
எந்த ஊரு?’
தெக்க, திருக்கோவிலூருக்குப் பக்கத்துலகூடவே, அம்மா எதுவும் கேக்காமலேயேகோனாருஎன்றான். அதில் மட்டும் மிகுந்த தெளிவிருந்தது.
ஏன் காலைல இருந்து இங்க குந்தியிருக்க?’
அப்பா அம்மா இல்ல. ஊருல சண்ட, எனக்குன்னு யாருமில்ல
நாங்க இருக்கறோம்பா, ஒக்காரு சாப்புடுஎன்று அவனை அம்மா அந்தச் சிறிய வீட்டின் ஹாலில் உட்கார வைக்கவும், அப்பா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
யாருடி இவன்என்பது மாதிரி அப்பா அம்மாவைப் பார்க்க, ‘திருக்கோவிலூர் பக்கமாம், யாருமேயில்லையாம் நம்ம மீனாம்மாவுக்குத் துணையா இங்கயே இருந்துட்டுப் போகட்டும் வாத்யாரேஎன்று அம்மா சொல்ல, அப்பா எதுவும் சொல்லாமல் சாப்பாட்டுத் தட்டின் முன் அமர்ந்தார். அன்று எங்கள் எல்லோரையும்விட கறித்துண்டுகள் கண்ணன் தட்டை நிறைத்தன. அவன் ஒரு விலங்கைப்போல உருமலோடு சாப்பிட்டது, இன்னும் நினைவிருக்கிறது.
எப்போதும் அண்டா மூடும் தாம்பாலத் தட்டில்தான் பொன்னி அரிசி சாதம் ஆறவைத்துப் பரிமாறப்படும். தாஸ் சாப்பாடும் அம்மா கொழம்பும் ஊற்றுவார்கள். ஒரு வித எரிச்சலுடனும், பொறாமையுடனும் தாஸ் ஐந்தாவது தடவையாகத் தாம்பலத் தட்டிலிருந்து அவன் தட்டுக்கு சாதத்தைத் தள்ளினான்.
நீ ஏண்டா அவனை அப்படி மொறைக்கிற? அவனும் உன்னாட்டம் இந்த வீட்டுக்கு ஒரு தொணையா இருந்துட்டுப் போறான்என அம்மா சொன்னவுடன்,
இந்த வீட்டுக்கு எத்தனை தொணை?’ என்பது போல எல்லோரையும் திரும்பிப் பார்த்தான் தாஸ். தரையில் வசந்தா அக்காவும், சேரில் செல்வராஜ் மாமாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
யாரே ஒரு ஆள் ஒரு சாயங்கால நேரத்தில் அப்பா ஸ்கூலுக்கு ஒரு நாலு வயசுப் பெண் குழந்தையோடு வந்து, ‘‘தியாகி அண்ணாமலைப்பிள்ளை அனுப்புனாரு, எனக்கு ரெண்டு பொண்ணுங்க. பொண்டாட்டி செத்துடிச்சி. ஒரு குழந்தையை அய்யா எடுத்துக்கிட்டாரு. என்னை மாதிரியே என் நண்பர் தனக்கோட்டி வாத்தியார் கொழந்தை இல்லாம இருக்காரு, இன்னொரு பொண்ணை நான் சொன்னன்னு அவருகிட்ட ஒப்படைச்சுடுன்னாரு’’ வசந்தா அக்காவின் கைப்படித்து அப்பாவிடம் அவன் ஒப்படைக்க, அன்று மாலை ஸ்கூல் முடிந்து அந்தக் குழந்தையின் கைப்பிடித்து அப்பா வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவிடம் அவளை ஒப்படைத்தார். அப்படி வந்து சேர்ந்தவர்தான் என் வசந்தாக்கா.
இதில் எதனோடும் தனக்கு சம்மந்தமில்லையென சாப்பிட்டுக் கொண்டிருந்த செல்வராஜ் மாமா என் அப்பாவின் சொந்த அக்கா மகன். தன் அக்காவிடம் மிகுந்த மனவேறுபாடு ஏற்பட்டு பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்தியிருந்த அப்பா, அவரை மரணத்துக்குச் சற்றுமுன்தான் மறுபடியும்  சந்திக்கிறார். அப்போது தம்பியின் கையைப் பிடித்து தன் ஐந்து வயது மகனின் கையில் புதைத்து,
தம்பி, இவனை உன் புள்ளயா வளத்து ஆளாக்கிடுப்பாஎன்ற மௌன மொழிக்கு வாக்குத் தந்ததை நிறைவேற்றும் பொருட்டு, அக்காவின் இறுதிச் சடங்கு முடிந்து சுடுகாட்டிலிருந்து அப்படியே கூட்டி வந்து வீட்டில் வைத்துக் கொண்டாராம். ’ அதன் பிறகான பல வருடங்கள் கழித்து, என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்  காலத்தின் சிறு கருணையால் கருத்தரித்தவன்தான் நான்.
இப்போது எங்கள் வீட்டில் அப்பா - அம்மாவோடு செல்வராஜ் மாமா, வசந்தா அக்கா, தேவதாஸ், கண்ணன், மீனாம்மா என்று எங்கள் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் எங்கள் வீட்டு எருமைமாடு மற்றும் கன்னங்கரேலென எப்போதும் வீட்டு வாசலில் படுத்திருக்கும் எங்கள் நாய் ஜிம்மி.
சாயங்காலமானால் ஏழெட்டு பேர், அளவெடுத்து உருவாக்கினது போல் வீட்டை மொய்ப்பார்கள். ராஜேந்திர மாமா, மூர்த்தி, சேகர், தேவராஜ், சிங்காரம் என்ற அவர்கள் எல்லோரும் அப்பா அம்மாவால் சொந்த ஊரிலிருந்து அழைத்து வரப்பட்டு பேருக்கு அந்த உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி, வீட்டிலேயே தாஸ் அண்ணனின் தாம்பலத்தட்டுச் சோற்றுப் பரிமாறலில் சாப்பிட்டு வந்தார்கள்.
தாஸ் என அழைக்கப்பட்ட தேவதாஸின் சொந்தப் பெயர் கோவிந்தசாமி. அவரும் திருக்கோவிலூர் பக்கமிருந்து வந்து புளியமரத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மதியச் சாப்பாட்டுக்குப் பிறகுஅது என்னடா கோவிந்தசாமின்னு ஒரு பேரு. அது எனக்குப் பிடிக்கல?’ என்றுதேவதாஸ்என அம்மாவால் ஞானஸ்தானம் பெறப்பட்டவன்தான். டவுனுக்குப் போகவர ஆரம்பித்தவுடன் ஒரு இரவு சாப்பாட்டிற்குப் பிறகான ஏகாந்த வெளியில் வீட்டு வாசலில் உட்கார்ந்து,
நான் சாரோன்ல ஒரு பொண்ணப் பாத்தம்மா, பேரு ஜெயா. அதையே கல்யாணம் கட்டி வச்சிருங்கம்மாஎன்ற வார்த்தைகளில் நெகிழ்ந்த காதலைக்  கௌரவிக்கும் பொருட்டு தாஸ் - ஜெயா திருமணத்தை சாரோன் தேவாலயத்தில் அம்மாவே முன்னின்று நடத்தி வைத்து அவரை அந்த தேவாலயக் கோயில் பிள்ளையாக ஒப்படைத்தார். ஆம் சாரோன் ஆலயத்தின் முன்னாள் கோயில்பிள்ளையும், இப்போதைய கோயில் பிள்ளையான  அவர் மகன் பிரகனேஷ் எனத் தொடரும் இந்த உறவு எங்கள் வீட்டின் முன் இருந்த புளிய மரத்தடியில் அம்மா கண்டெடுத்த புதையல்தான்.
அப்பா ஊரில் இல்லாத ஓர் பின்னிரவில் எங்கள் மீனாம்மாவும், ஜிம்மியும், போட்டி போட்டுக் கத்த, அம்மா என்னையும் செல்வராஜ் மாமாவையும் எழுப்ப, கையில் ஒரு நீண்ட எவரெடி டார்ச் லைட்டோடு அவர்களைப் பின் தொடர்ந்த அமாவாசை கருக்கலது. ரோட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் எங்கள் நிலத்தை அடையலாம்அடைந்தோம். நில எல்லையை மிதித்ததும் மீனாவும், ஜிம்மியும் நின்று பம்மினார்கள். அம்மா கவனித்துவிட்டார். இன்னும் இரண்டொரு நாளில் அறுக்கப்போகும் பொன்னி நெல் வெள்ளாமையை நாலைந்து பேர் உட்கார்ந்து கையாலேயே நிமிட்டிக் கொண்டிருக்க, டார்ச் லைட் வெளிச்சம் பட்டவுடன் எல்லோரும் எழுந்து ஓட, எங்கள் ஜிம்மி நாலுகால் பாய்ச்சலில் எட்டி ஒருவன் கெண்டைக்கால் சதையைப் பிய்த்தெடுக்க, தலைக்குப்புற விழுந்த அவன் எழவேயில்லை. அவனை நெருங்கிய அம்மா அவன் தலைமுடியைப் பிடித்தெழுப்பி முகத்தை லைட் வெளிச்சத்தில் பார்க்க, எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஊள்ளூர் ஆள் அவன். அவனை எழுப்பி, கைத்தாங்கலாய் கூட்டிப் போய் அவர்கள் விட்டுவிட்டுப் போன சாக்குப்பை நெல்லை, இரண்டு பயிரைப் பிடுங்கின வைக்கோலால் கட்டச் சொல்லி அவன் தலையிலேயே தூக்கச் சொன்னார். எதுவும் புரியாமல் அவன் மூட்டையைத் தூக்கித் தலையில் வைத்து, அம்மாவைத் திரும்பிப் பார்க்க,
இதுக்குதானேடா இப்படி பாம்புன்னு, பூச்சின்னு பாக்காம நடுசாமத்துல திருட வந்தீங்க. எடுத்துட்டுப் போ, குத்திச் சாப்புடுஎன அவனைத் திரும்பிப் பார்க்காமல் நடக்க ஜிம்மியும், மீனாவும் கூட அமைதியாக என்கூடவே நடக்க, அவன் மட்டும் பீதி குறையாமல் திரும்பி திரும்பிப் பார்த்து நடந்த அந்த இரவு இன்னும் நினைவிருக்கிறது.
அப்பாவுக்கும் அம்மாவுக்குமான ஒரு கடுஞ்சண்டையில், அம்மாவின் ஆன்மாவை அழிக்கும்பொருட்டு அப்பா தண்டரை விவசாயிக்கு எங்கள் மீனாம்மாவை எழுநூறு ரூபாய்க்கு விலை பேசி விற்றபோது அவள் ஆறுமாதம் கருவுற்றிருந்தாள்.
அடுத்த இரு நாட்களும் அம்மா அன்னந்தண்ணி ஆகாரமின்றிக் கிடந்தாள். அடிக்கொருதரம் மாட்டுக் கொட்டடிக்குப் போய் வந்தாள். தவிட்டுத் தொட்டியைக் கைவிட்டுத் துழாவினாள். இரண்டாம் நாள் அதிகாலை மீனாம்மாவின் உறுமல் சத்தமறிந்து கதவைத் திறந்தவளுக்குப் பேரதிர்ச்சி. அவள், மீனாம்மா வாசலில் நின்றிருந்தது. மெல்ல அதன் முதுகில் நீவிக் கொடுத்தாள். அவர்களிருவருக்குமான மொழியில் இருவரும் பேசிக் கொண்டார்கள். அந்த மொழியை அறிந்த இன்னொருவனாக கண்ணன் மாறியிருந்தான். விடிவதற்குள் மாட்டை வாங்கின தண்டரைக்காரன் வீட்டிற்கு வந்துவிட்டான்.
குடுக்கற மாதிரி குடுத்து ஆள வச்சி மாட்டைத் திருப்பிட்டு வந்துட்டயேம்மாஎன அவன் ஆரம்பித்ததே அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. கொஞ்சநேரம் விவாதமும் அழுகையுமாகப் போனது. தன் காதிலிருந்த கம்மலைக் கழட்டி தேவதாசிடம் கொடுத்து, அடகுவச்சு ஆயிரம் ரூபா வாங்கிவரச் சொல்லி, அவனுக்கு எழுநூறுக்குப் பதிலாக எழுநூற்றம்பது கொடுத்தனுப்பினாள். அன்று பகல் முழுக்க அம்மாவும், கண்ணனும் மீனாவைத் தேற்றினார்கள்.
திடமானதல்ல, லேசானதுதான் வாழ்வின் இணைப்பின் கயிறு. அது ஒரு நாள் எங்கள் குடும்பத்திலும் அறுத்துக் கொண்டது. எங்கள் மீனா, ஜிம்மி, நிலம், கிணறு, கண்ணன் எல்லோரையும் பிரிந்து சாரோனுக்குக் குடிபெயர்ந்தோம்.
மத்தியதர வாழ்வெனும் நரகத்துக்குள் வீழ்ந்தது இப்படித்தான். ஆனாலும் அம்மா தன் ஒவ்வொரு நினைவாலும், செயலாலும் ஒரு நிலத்து மனுஷியாகவே இருந்தாள். நிலத்தின் நடவு, களையெடுப்பு, அறுவடையின் போதெல்லாம் அவளால் முடிந்தளவு சோறு ஆக்கி மறுநாளுக்கு தலைச்சுமையாய் எடுத்துப் போவாள். அறுவடை முடிய எத்தனை நாளானாலும் நிலத்திலேயே கிடந்தாள். தூற்றி முடிந்த நெல்மணிகளில் சரிபாதியை முன்னுவா  பின்னுவா  எனச் சொல்லிபயிர் வைத்தவர்களுக்குத் தருவாள்.
அப்போதுதான் நான் எழுத ஆரம்பித்திருந்தேன். வீடு நண்பர்களால் நிறைய ஆரம்பித்த காலம் துளிர்த்தது. ஒவ்வொரு நாளும் கணக்கில்லாத நண்பர்களின் வருகையால் வீடு ததும்பியது. அம்மா அசரவில்லை. கோழிகள், புறாக்கள், வான்கோழிகள், கினிக்கோழிகளென வீடும் வாசலும் பறவைகளின் சத்தங்களால் நிரம்பியது. எத்தனை பேர் வந்தாலும் சமைத்துப் போடத் தயங்கினதேயில்லை. என் இலக்கிய நண்பர்களில் இன்றளவும் அம்மாவின் பிரியத்திற்குரியவன் கோணங்கி. என்னுடனான அவன் உரையாடலை விட அம்மாவுடனும் அப்பாவுடனும் தான் விடிய விடியப் பேசிக் கொண்டிருப்பான். அவன் புறப்படும்போது அம்மா அவன் தலையில் கை வைத்து நீண்ட நேரம் ஜெபிப்பாள். ஒவ்வொரு முறை கோணங்கி அம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கும்போதும் அதைத் தடுத்துத் தூக்கி நிறுத்தி நெற்றியில் ஒரு முத்தமிடுவாள்.
எங்கள் கூரைவீட்டை இடித்து மாடிவீடு கட்ட ஆரம்பித்தபோது பணக்கஷ்டத்தால் துவண்டு போனேன். அப்போது தங்கள் செட்டைகளில் வைத்துப் பாதுகாத்தது நண்பர்கள்தான்.
எழுத்தாளர்  ஜெயமோகன் பத்தாயிரம் ரூபாய் தந்து, நான் வீடுகட்டும்போது திரும்ப வாங்கிக் கொள்கிறேன் என்றார். ஜெயமோகன் வீடு கட்டும்போது அம்மா தன் தாய்வீட்டிற்குத் தயாராவது மாதிரி அதிரசம், முறுக்கு என எல்லாப் பண்டங்களோடும் பத்தாயிரத்தைக் கொண்டுபோய் தர்மபுரியில் கொடுத்துவிட்டு இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிவிட்டு வந்தார்.
செய்யாறில் நடந்த ஒரு கலை இரவில் நானும் வேல ராமமூர்த்தியும் கதை சொன்னோம். இரவே கோயம்புத்தூர் போக வேண்டிய அவர், வீட்டிற்கு வந்து அம்மாவைப் பார்த்துவிட்டு போகிறேன் என வந்தபோது வீட்டில் கோணங்கி இருந்தான். எப்போதும் போல் நள்ளிரவு கோழிக்கறி சுடுசோறு சாப்பிட்டோம். அதன் ருசி வேலாவின் கோவைப் பயணத்தை அடுத்த நாளுக்குத் தள்ளி வைத்தது. அடுத்தநாள் களியும் கருவாட்டுக் குழம்பும். அடைமழை பிடித்துக் கொண்டது. மழையினூடே அம்மா நிலத்து அரிசியில் சோறாக்கி, தெருவிலிருந்த அத்தனை விதவைகளுக்கும் வேலா, கோணங்கி கையால் சோறு பறிமாற வைத்தாள். நெகிழ்ந்து போன வேலா, கோயம்புத்தூர் புறப்படுவதற்கு ஐந்து நாட்களானது. அந்த ஐந்து நாள் இரவும் பகலும் வீட்டறையிலேயே கிடந்து பேசி, விதவிதமாய்ச் சாப்பட்டு, தூங்கி...
அய்யோ... அம்மா...
இனி எங்கு காண்போம் அம்மா?
சாரோன் வாழ்வு அம்மாவுக்கு ஒருவகையில் பிடித்ததுதான் என்றாலும், அவர்கள் மிக விரும்பிய தேவாலயம், ராபோஜனம்,      போதகர் வருகை, அறுப்பின் பண்டிகை, பஜனையின் கீதங்களென அவர்களின் தினங்கள் நிரம்பி வழிந்ததெனினும், மனிதர்களற்ற ஒரு வெறுமை அவளைச் சூழ்ந்து கொண்டது. எல்லோரும் அவரவர் வீட்டிற்குள்ளிருந்து மட்டும் வாழ்ந்தார்கள். சமூக வாழ்வை மறுதலித்தார்கள். மத்தியதர வாழ்வின் கௌவரவம் எல்லோரையும் வீட்டறைகளில் நெட்டித்தள்ளி பூட்டிக் கொண்டது.

பரந்த வெளியில் நிலம், மரம், கிணறு, மீனாம்மா, ஜிம்மி, கண்ணன், தேவதாஸ், தாம்பலத்தட்டுச் சோறென எல்லாம் இழந்த வெறுமையை எங்கள் யாராலும் இன்றளவும் ஈடு செய்ய முடியவில்லை. மீண்டும் அம்மாவின் தொப்புள்கொடி வழியே பயணித்து, இழந்த அந்த வாழ்வைக் கருவறை வாசனையோடு அடைவது மட்டுமே அம்மாவுக்கு நாங்கள் செய்யும் நிறைவஞ்சலியாக இருக்கும்.