Friday, January 10, 2014

நான்கு நிகழ்வுகளும் – நாலாயிரம் அனுபவங்களும்

இதற்கான துவக்க வார்த்தையின்றியே இத்தனை நாள் காத்திருந்தேன். கைக்கு இன்னமும் சிக்காமல் அது ஆட்டம் காட்டுகிறது. கடந்த பத்து நாட்களாய் பெரும் அலைச்சலோடு நாட்கள் சடசடத்து கடந்தன. சுகாவின் முக நூலில் உமேஷ் என்ற ஒரு புல்லாங்குழல் கலைஞனின் புகைப்படம் பார்த்தேன். என் உமேஷா இது?
பத்து வருடங்களுக்கு முன் போர்ட் கொச்சினில் வெளிநாட்டுக்காரர்களுக்கு கதைசொல்லப் போயிருந்தேன். நூறு வருடங்கள் கடந்த ஒரு பிரமாண்ட ஆலமரத்தடியில் (அம்மச்சி ஆல்) ஒருவாரம் நிகழ்ந்த கலை, இலக்கிய நிகழ்வு அது. நூறுக்கும் குறைவான பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், மலையாளிகளும் குழுமியிருந்த குளிர் நிறைந்த அந்த கடற்கரை மணலில் நான் கதை சொன்னதற்கு முந்தினநாள் யேசுதாஸ் பாடியிருந்தார். அதற்கும் முந்தின நாள் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு தன் காத்திரமான குரலில் கவிதை பாடியிருந்தார். என் ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் கதையை நான் சொல்லி முடித்த குளிர்ச்சி  காய்வதற்குள் என் நண்பன் ஆனந் ஸ்கரியா அவர்களுக்கு ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்த்தார்.
சில கைக்குலுக்கல்களையும், கட்டி அணைத்தல்களையும் அவசர முத்தங்களையும் பெற்றுக்கொண்டு டாக்டர் ஜீவாவோடு ஓர் இரவு முழுக்க  பயணம் செய்து ஊர்வந்து சேர்ந்தேன்.
என் கதை வாசிப்பிற்குப்பின் வெகுநேரம் தன் புல்லாங்குழல் இசையால் எல்லோரையும் கிறங்க வைத்த அந்த உமேஷா இது. இப்போது அவன் எட்டமுடியாத உயரத்தில் இருந்தது போலிருந்தது. எட்டிப் பார்க்கலாமென என் தொலைபேசி எண்ணை அனுப்பினேன். அடுத்த பத்தாவது நிமிடம் எதிர் முனையில் உமேஷ் இருந்தான். ‘பவா நான் அதே உமேஷ்தான்’ என பாதி தமிழும், பாதி மலையாளமும் கலந்த மொழியில் பேசினான்.

இருவரும் பேசி டிசம்பர் 31 இரவு குவா வாடீசில் உமேஷின் புல்லாங்குழல் கச்சேரியென்றும் உடன் ஒரு மிருதங்கமும் வயலினும் எனவும் முடிவு செய்தோம். எல்லாம் அவ்விதமேயானது.

நூறுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், ஐம்பதுக்கும் குறைவான தமிழர்களும் குழுமியிருந்த இயற்கையாய் அமைந்திருந்த அம்மேடையில் அந்த இசைக்கலைஞர்கள் ஏறுமுன் எல்லோரும் எதிரில் வைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் பேனர் முன் எழுந்து நின்றார்கள். அந்த தாய் விரையின் மண் புதைவிற்கு மௌனமாக அஞ்சலி செய்தோம். நண்பர் J.P. ஆங்கிலத்திலும், நான் தமிழிலும் நம்மாழ்வாரை பற்றியும், அவருடனான எங்கள் அனுபவங்கள் குறித்தும் சுருக்கமாக பேசினோம். நான் அந்த வெள்ளைக்காரர்களின் முக பாவனைகளையே கவனித்துக்  கொண்டிருந்தேன்.

மைக்கின் முன்புறம் தொட்டு உமேஷின் புல்லாங்குழல் இசைக்கத் துவங்கியது. அவர்கள் மூவருக்கும் நிகழ்ந்தது ஒரு மாபெரும் இசைப்போட்டி. இடையிடையே கைத்தட்டங்களால் வாத்ய கருவிகள் அசைந்தன.

ஒரு மாறுதலுக்காக அந்நிகழ்வில் பார்வையாளராய் வந்திருந்த சாந்திப்ரியா என்ற பாடகியை ஒரு பாடல் பாட அழைத்தேன். அவர் நண்பர்கள் ஷௌக்கத் காயத்ரி மூலம் எனக்கு அறிமுகமானவர். அவர் அப்பா வயநாட்டில் ஒரு மாற்றுக் கல்விக்கான பள்ளியை நடத்துபவர். அவர் அம்மா ஷெரெலி மிகச் சிறந்த பாடகி.
சாந்திப் பிரியா தம்பூரா மாதிரியான ஒரு இசைக் கருவியோடும், ஒரு ஒற்றை தபோலாவோடும் மேடைக்கு வந்தார். ஓரிரு நிமிடங்களில் அதை தன் வயப்பகுத்தி பாட ஆரம்பித்தார். ஒரு நிமிடம்தான். ஒரே ஒரு நிமிடம் அங்கிருந்த அத்தனை பேரையும் தன் இசைமொழிக்கு வயப்படுத்தினாள். அப்போதுதான் அரங்கிற்கு வந்த என்  நண்பர் எஸ்.கே.பி.கருணா, உடனே தன் ட்விட்டரில், ‘எங்கிருந்தோ வந்து இந்த தேவதை தன் இசையால் என் ஊரை நிரப்புகிறாள்’ என பதிவிட்டார். நான் எல்லோரையும் போல பரவச மனநிலையிருந்தேன்.

‘‘இவள் பாடுவது என்ன மொழி’’
‘‘பெங்காலி’’
‘‘இது என்ன வகை சங்கீதம்?’’
‘‘பெங்காலி ஃபோக்’’
மரம், செடி, பூக்களால் நிறைந்திருந்த குவா வாடீஸ் அதற்கிடையிடையே தேவையான அளவிற்கு காற்றில் மிதந்த இசையை சேகரித்துக் கொண்டன. ஒரு பாடல் என வந்தவர் நான்கு பாடல்களை கடந்தும், கேட்பவர்கள் இன்னும் கேட்டார்கள்.
நேரம் ஒரு யமனைப் போல எங்களை இடைமறிந்து முடிவைக் கோரியது.
சாந்திபிரியாவின் கைகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலநூறு கைகளில் அடைபட்டிருந்தன.
பனியும், குளிரும் போட்டிப்போட்டு வீசிய அந்த இரவு பத்து மணிக்கு தன்னந்தனியே நிலத்துக்குப் போனேன். உமேஷின் புல்லாங்குழலும், சாந்திப் பிரியாவின் பாடலும் எனக்கு முன்னமே அங்கு நிறைந்திருந்தது.

- தொடரும்

Wednesday, January 8, 2014

2014 வம்சி புதிய புத்தகங்கள்

மிகுந்த நிறைவோடிருக்கிறேன். நான் நினைத்தமாதிரி வேலை பார்த்து எல்லா புத்தகங்களையும் கொண்டு வந்திருக்கிறேன். இதன் மூலம் தங்கள் படைப்புகள் தந்து என்னை நம்பினபடைப்பாளிகளுக்கு நேர்செய்திருக்கிறேன். நான்நிறைந்திருக்கிறேன். அந்த மனநிலையில் வம்சியின் புதியபுத்தகங்களின் அட்டைவடிவமைப்பை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.