Thursday, April 23, 2015

துக்கத்தின் தேவதை


திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோமீட்டருக்கும் அப்பால், சு.வாளவெட்டி என்கிற ஒரு கிராமத்தில் இறங்கி, யாரை விசாரித்தாலும் பாட்டுக்கார லட்சுமியை அடையாளம் காட்டுவார்கள்.  அவரை விசாரிக்கும்போதே எவர் முகத்திலும் ஒரு புன்னகை வந்து போகும். ஐம்பதிலிருந்து ஐம்பந்தைந்துக்குள்  இருக்கும் லட்சுமி அம்மாவிற்கு வாளவெட்டி சொந்த ஊரோ, கட்டிக் கொடுத்த ஊரோ இல்லை. ஏதோ ஒரு ஊர். அந்த ஊரிலேயே இப்போதிருக்கும் சீமைஓடு போட்ட வீடு நான்காவதோ, ஐந்தாவதோ.

ஊர் பற்றியோ, வசிப்பிடம் பற்றியோ, தொழில் பற்றியோ, சாப்பாடு பற்றியோ, பட்டினி பற்றியோ கவலையின்றித் தனக்குத் தெரிந்த பாடல்களைத் தன் கரகரத்த குரலில் பாடி அதன் வீரிய விதைகளை இம்மாவட்டம் முழுக்க விதைத்து வைத்திருக்கிறார். ஏதோ ஒரு வீட்டில் நிகழும் மரணம் லட்சுமியை அந்த இழவு வீட்டுக்கு அழைக்கிறது. பெரும் குரலெடுத்து, மாரடித்து கண்ரப்பைகள் வலிக்க அழுது தன் துக்கத்தைத் தன் சக மனுஷிகளுக்கு மாற்றுகிறார். ஜாதி, மதம் அழியும் அந்த நிமிடங்கள் மிக முக்கியமானவை.



லட்சுமியின் சொந்த ஊர், புதுப்பாளையத்திற்குப் பக்கத்தில் மூலக்காடு. வறுமை தின்று தீர்த்த மிச்சங்களாக அவர்கள் வீட்டில் நான்கு பெண்கள். வயல் வேலைகளில், அத்தனை பணிகளும் அவளுக்குப் பதினைந்து வயதுக்குள்ளேயே அத்துப்படி. ரொம்பச் சின்ன வயசிலேயே யாரோ ஒருவனுக்குக் கட்டி வைத்துக் கடமையை முடித்துக் கொண்ட பெற்றோர்கள். அவன் நல்லவனில்லை. அவன் தொழில் சாராயம் காய்ச்சுவது. தூரத்து மலையடிவார மரநெருக்கத்துப் புகை அவன் இருப்பை அவளுக்குச் சொல்லும். வாழ்தலுக்கான நெருக்கடியில், தன் சொந்த விருப்பங்களைப் பொசுக்கிப் போட்டுவிட்டு, சாராயம் காய்ச்ச, அழுகிய வாழைப்பழத்திலிருந்து குப்பையில் கிடக்கும் பேட்டரி வரை பொறுக்கித் தன் கணவனுக்கு அன்பு செய்தாள். அவன் வடித்தெடுக்கும் திரவத்தை மற்றவர்களுக்கு மொண்டு கொடுத்துப் பணிவிடை செய்தாள். குடிவெறியின் தொடுதல் களையும், சீண்டல்களையும் அருவருப்போடு அனுமதித்தாள்.

அவன் காய்ச்சிய சரக்கை முதலில் அவனே ருசி பார்த்தான்.  அதன் அதீத ருசியால் தன்னைப் பறிகொடுத்து, அதற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தான். குடும்பம்,  மனைவி, குழந்தைகள் எல்லாமும் அவன் ஞாபகத்திலிருந்து அகன்றிருந்தன. காலத்தின் குரூரம் அவளை ஒரு விஷக் கொடிபோலச்  சுற்றியிருந்த போதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் எதற்கோ காத்திருந்தாள். எதுவும் நிகழவில்லை. தன் மௌனத்தைத் தானே கலைத்து, வடிசலில் வழித்திருந்த சாராயப் பானையை எட்டி உதைத்துக் கவிழ்த்தாள். ஒரு பெருங்கல்லெடுத்து, அதன்மீது போட்டு அதை சுக்குநூறாக்கித் தன் வெறியைத்  துப்பினாள்.

இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய்த் தன் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, அந்த மலையடிவார கிராமத்தைத் திரும்பிப் பார்க்கவும் திராணியற்று நடந்தாள். அதன்பிறகு சு.வாளவெட்டியே அவள் வசிப்பிடம். தனக்குக் கிடைத்த அதீத சுதந்திரத்தைத் தன் மனம் போனபோக்கில் துயரத்தோடு அனுபவித்தாள்.
அன்னக்கூடையில் மாட்டுக்கறி எடுத்துப் புதுப்பாளையம் சந்தையில் கூவிக்கூவி விற்றாள். தன் குரலின் வலிமை இன்னும் இரண்டு நாட்களுக்குத் தன் குழந்தைகளின் வயிற்றை நனைக்குமென்ற உறுதியிருந்தது.

கறி விற்பதைவிடக் காய்கறி விற்பது இன்னும் கொஞ்சம் கவுரவமெனக் கணக்குப் போட்டாள். சுட்டெரிக்கும் வெயிலில் காய்கறிகள் கொட்டி, தனக்கேயுரிய ராகத்தோடு கூவிக்கூவி விற்று, சந்தையைக் கலகலப்புக்கும் தன் சகவியாபாரிகளைக் கலக்கத்துக்கும் உட்படுத்தினாள். தன் பக்கத்து வீடுகளில் நடந்த மரணங்கள் அவளுக்குள் ஒரு ஊசி மாதிரி இறங்கி வலிக்க ஆரம்பித்தன. தனக்குள் தேங்கிப் போயிருந்த இந்த வாழ்வின் பெரும் துக்கம் பாடல்களாக உடைப்பெடுத்தது. அவள் குரல் பல மைல்களை அநாவசியமாகக் கடந்தது. அவள் பாடல்களில் புதைந்திருந்த சோகம் யாரையோ பறிகொடுத்து நின்ற குடும்பத்துக்குத் தேவையாய் இருந்தது. இரவு, பகல் எந்நேரமும் சாவு வீட்டிலிருந்து அவள் குரல் தேடி ஆள் வரும். பஸ்úஸோ, லாரியோ, சைக்கிளோ எந்த வாகனமும் எந்த அகாலத்திலும் அவளைச் சுமந்து கொண்டு போனது.

மரண வீடுகளில் தங்கள் பெரிய மேளங்களால் முழங்கிய üபாப்பம்பாடி ஜமாý   தோழர்கள்   அவளுக்குச்  சிநேகிதர்களானார்கள். அவர்கள் எல்லோரையும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் ஏதோ ஒரு கண்ணி இறுக்கிக் கட்டியிருந்தது. அவர்களின் பறை முழங்கும் சத்தத்திற்குத் தன் இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆட்டம் போட்டாள். ஒரு மரணத்திற்கான மொத்தக் கண்ணீரையும் ஒரு அணைக்கட்டு மாதிரி தனக்குள் தேக்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கசிய விட்டாள்.
மரணவீடுகளில் அவள்மீது வீசியெறியப்படும் ரூபாய் நோட்டுகளைப் புழுதியிலிருந்து எடுத்துத் தன் இடுப்புக்குள் சொருகினாள். அவமானப்படுதலிலேயே அமிழ்ந்திருந்த இந்தக் குடும்பத்திலிருந்தும் குழந்தைகள் படித்தார்கள். பிணவாடை வீசும் ரூபாய் நோட்டுகளில் அந்தக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தந்தாள்.

தன் கடமை முடிந்ததாகக் கருதிய கணம், தன் பிள்ளைகளிடமிருந்து விடை பெற்றாள். அந்தக் கிராமத்து கட்டிக் முடிக்கப்படாத குடிசையும், உதிர்ந்துபோன ஓட்டு வீடும் அவளைத் தன்னில் வசிக்கப் பாசக்கரம் நீட்டி அழைத்தது. தன்னை நோக்கி நீளும் கரங்களுக்குள் தன்னை ஒப்புவித்து, எச்சில் ஒழுகச் சிரிக்கும் குழந்தை மாதிரி அதற்குள் அடைக்கலமானாள்.
சு.வாளவெட்டி கிராமத்தில், தன் வீட்டுக்குப் பக்கத்திலேயே வியாபித்திருக்கும் அந்தப் பெரிய ஆலமரமும், அதன் பிரமாண்ட நிழலில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குரங்குகளும்தான் அவளுக்குத் தற்போது நெருக்கமான ஸ்நேகிதர்கள்.

மூட்டை மூட்டையாகக் காய்கறிகளையும், வெங்காயத்தையும் தலையில் சுமந்து தனி மனுஷியாகப் பேருந்தின் மேலேற்றிய பலமான உடல்வாகும் மனமும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.

அகால இரவுகளில் பெருங்குரலெடுத்துப் பாடி தன் தனிமையைக் கரைக்கும் லஷ்மியின் குணத்தையும் மனதையும் நாம் படிப்பதற்கு, அவள் தினம் தினம் தான் சம்பாதிப்பதில் பாதி ரூபாய்க்கு, அதிகாலையிலேயே இட்லிகளை வாங்கி ஒரு தாம்பாளத்தட்டில் வைத்து அக்குரங்குகளைச் சாப்பிட வைத்து அழகு பார்க்கும் விதமே போதும்.

தன் கணவன் தன்னை மலையடிவாரத்தில் சாராயப் பானைகளோடு விட்டுவிட்டுப் போனபிறகு அவளுக்குப் பல ஆண்களோடு ஸ்நேகிதம் உண்டு. ஆனால் அது மனரீதியான உறவல்ல. தன் மன வலியை, இன்னொரு வலி மூலம் பழி தீர்த்துக் கொள்ளும் பகைமை.

ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடல்கள் மூலம் துடைத்த லஷ்மியின் மரணத்திற்கு இவர்கள் யாரும் வரப்போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக்கூடப் போவதில்லை.

கடவுளே,

நான் இந்த தேசத்தின் எந்தத் திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா.