அன்பு பவா அவர்களுக்கு,
சற்று
முன்புதான் உங்களது வலைத்தளத்தில் "ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்.." சிறுகதையை வாசித்தேன். இது உங்களது
தொகுப்பில் முன்பே வாசிக்கக் கிடைத்த சிறுகதைதான். ஆனால் இன்று வாசிக்கும்போது
உங்களது படைப்பினைக் குறித்து வெகு நாட்கள் பனி மூட்டத்தில் காணக் கிடைக்கும் மலைஅருவி போல சிக்கியும், சிக்காமலும் இருந்த ஒன்று பிடி கிடைத்து
விட்டது. உங்களை உங்கள் சம கால படைப்பாளிகளிடமிருந்து தனித்தன்மையுடன் நிறுத்துவது அதுதான் என நினைக்கிறேன்.
நான் இலக்கியம்
வாசிக்க வந்தது 80
களின் மத்தியில்
,
அதாவது என்
பதின்ம வயதுகளின் துவக்கத்தில். (இப்ப வரைக்கும் நாங்க யூத்துதான் !). அப்போது
வெகுவாக சிலாகிக்கப்பட்ட வண்ணநிலவன், வண்ணதாசன்,
ஜி.நாகராஜன்
ஆகியோர் எனக்கு வாசிக்கக் கிடைக்கவில்லை. நெல்லை மாவட்டத்தின் உள்ளடங்கிய பேரூராட்சி (வாசுதேவநல்லூர் ) ஒன்றில் இவ்வளவு எதிர்பார்ப்பு அதிகம் என்றே வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மிக வியப்பாக என்னை முதலில் வந்தடைந்தது அசோகமித்திரன் . அவரது ஒற்றன் நாவல் தான் நான் முதலில் வாசித்த உருப்படியான இலக்கியப் படைப்பு. அதிலிருந்து தி.ஜா, சுஜாதா .,. அப்புறம் சு.ரா., கு.ப.ரா. கி.ரா., லா.ச.ரா..,என்று ராசிப்பு நீண்டது. ஆனால் பெயர் பெற்ற,
பெயரறிந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேடி அடைந்து வாசிக்க முடிந்தது 1990 களின் மத்தியிலிருந்துதான்.
நான்
வாசிக்கும்போது என்னியறியாமலேயே கடைப்பிடித்திருக்கிற ஒரு விஷயம் ஒரு எழுத்தாளரின் முழுத் தொகுதியை வாசிக்க முயல்வது. ஓரிரு படைப்புகளை மட்டும் வாசித்தால் உருவாகி வரும்
மதிப்பீட்டை நான் அடைகாத்துதான் வைத்திருந்திருக்கிறேன். முழு தொகுப்பாய்
வாசித்ததும்தான் எனது வாசிப்பின் முட்டை குஞ்சைப் பொறிப்பதும்; கூமுட்டை ஆவதும். தி.ஜா. வை நான் அறிமுகம்
செய்துகொண்டது சிறுகதை தொகுப்புகள் வழியேதான். அதிலும் தம்பி மேலுள்ள அசூயையால்
அண்டா பாயசத்தையும் சாக்கடையில் கொட்டும் கிழவரின் கதையை மட்டும் ஒரு வாரம் மறுபடி
,
மறுபடி
வாசித்திருக்கிறேன். இல்லாக் கொடுமையால் ஒரு பணக்கார தொழு நோயாளிக்கு பணியாளாக
அனுப்பி வைக்கப்படும் நல்லவனும், அசடனுமான அம்பியின் அப்பாவை கொலை செய்யும் வெறியில் ஒரு மாதம் திரிந்தேன். ஒரு
சிறுகதை என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற வித்தையை அவரிடம்தான் கற்றேன். அப்படி
ஒரு சிறுகதை வாசகனை என்னவெல்லாம் செய்யும் என்பதன் முதல் அனுபவமும் அவரிடம்தான். அங்கிருந்து அம்மா வந்தாள் , மரப்பசு, மோக முள் என்று போகும்போது ஒரு எண்ணம் வெகு உறுதியாக மனதில் நின்றது.
தி.ஜா. நாவல்கள்
பலவற்றில் மையமாய் கையாள்வது காதலின் விரகத்தை. "பொங்கிப் பெருகும் தேவதைப் பெருங்காதல்" கிட்டாமல் மனதின் வேதனை
செல்லரித்து அதில் மாயும் மனிதரையும், அந்த வெள்ளத்தின் வேகத்திலே சுக்கானின் பிடி கிட்டாமல் அதன் போக்கிலேயே
அடித்துச் செல்லப்படும் மானிடர்களையும் மாறி, மாறி அவரது நாவல்கள் பேசுவதாகப்பட்டது. ஆனால் இதை நான் பகிர்ந்து கொண்ட இரு
நண்பர்கள் என் மொத்த உடலின் எடையும் தலையால் மட்டுமே ஆகியிருப்பதாகவும், இன்னும் கொஞ்சம் தம் கட்டி நான் வாசிப்பின் ஆஆஆழத்தில் மூழ்க வேண்டுமென்றும்
சொன்னதால் அப்படியே வைத்து விட்டேன்.
பிறகு 90களின் மத்தியில் வண்ண அண்ணன்களை , தமிழ் நாட்டிலேயே புகழ் பெற்ற முடுக்கான குறத்தி முடுக்கு படைப்புகளையும்
படித்ததும் எனது எண்ணம் வலுப்பட்டது. வண்ண அண்ணன்கள் படைப்புகள் பெரும்பான்மையும்
மத்தளப் படைப்புகள்தாம். ஒரு புறம் பூக்கள் சிந்திக் கிடக்கும், மாலை வெயில் பரவிய முற்றத்தில், விவித பாரதி யின் பாடல் ஒலிபரப்பு பின்னணியில் நடமாடி சமையலறை இருட்டில் மஞ்சள் வாசனை மின்னும் தேவதைகளின் மீதான "புனிதமான" காதல், பிழைப்புக்கு வழியின்றி பெரு நகரங்களின்
(குறிப்பாக சென்னை ,
வெகு குறிப்பாக
தாம்பரம் ரயிலடி) உச்சி வெயிலில் மண்டை காய்ந்து வியர்வையில் ஊறி , சில்லறை காசுக்கும் கணக்குப் பார்த்து , பற்றாக்குறையால் நொடி தோறும் நொந்து, தையல்பிரிந்த , பட்டன் பிய்ந்த சட்டையை சீருடையாகக் கொண்டு வாழ்ந்து தொலைக்கும் "சமூக
அவலம்" மறுபுறம் -
இந்த இரண்டும்
மாறி மாறி வந்து கதாபாத்திரத்தை அலைக்கழித்து நம்மை பித்தாக்கும். . இந்த இரண்டு
நிலையில் முன்னதை பின்னது அழுத்த அந்த வேதனையும், பின்னதால் பிரிய நேரிட்ட முன்னதன் உணர்வும் கிட்டத்தட்ட 80% கதைகளின் கருப்பொருள்.
அவை பேசக்கூடாத
பொருளல்ல . எனினும் இந்த மையமே வண்ண அண்ணன்களது பெரும்பான்மை படைப்புகளின்
சுழிமையம். குறிப்பாக வண்ணநிலவன்; "பாம்பும்,
பிடாரனும்"
எழுதிய வண்ண நிலவன் திருநெல்வேலி டவுன் சந்துகளிலும், தாம்பரம் ரயிலடி ஒண்டுகுடித்தனங்களிலுமே
தொலைந்து போய் விட்டார். சாமானிய எழுத்தாளன் எழுத்தா அது? புதுமைப்பித்தனின் கயிற்றரவுக்குப் பின்னர்
நெல்லை மண்ணின் வீரியம் மிக்க ராஜ நாக குஞ்சு அந்த "பாம்பும், பிடாரனும்" தான். ஆனால் களை நடுவே முளைத்த நெல். பதின் வயதின் தொடக்கத்தில் "பார்த்த" வளவு வீட்டு அக்காக்களையும், அத்தைகளையும் வாலிபம் வந்த பின் எத்தனை
முறைதான் திரும்பி வந்து சந்திப்பது?
சம வயது இரு பால் உறவு சகஜமாக இல்லாத ஒரு காலத்தில், காவியங்களில் பயின்று வரும் ரொமாண்டிசமும் , பொருள் வயிற் பிரிவும், சற்று ஊறவைத்து புழுக்கினால் அழுகி
வெளிப்படும் ஊமைக் காமமும் ,
ஒரு 20 வருட படைப்பாளிகளின் கருப்பொருளாக ஆதிக்கம்
செலுத்திஇருக்கிறது. அதன் வெவ்வேறு பரிமாணங்களாவது பேசப்பட்டதா? இல்லை. மாறாக, வெவ்வேறு வெளிப்பாட்டு முறைகள் மட்டுமே. வண்ண அண்ணாச்சிகள் தொடக்கிய இது இன்று ஆத்மார்த்தி வரை ஊரில் தொலைத்த ஒரு தாவணி அக்காவை ஆனந்த விகடனில் வாரவாரம் முறை
வைத்து தேடச் செய்திருக்கிறது.
இந்த பச்சரிசி
"காவியக் காதல்" ஒரு முனை என்றால் நேரடியாக பழைய கள் இறக்கும் கலை இன்னொரு முனையில். மதுரைக்கு வரும் வாசகனை எல்லாம் குறத்தி முடுக்கை தேடும்படி செய்த நாகராஜன் வகை படைப்புகள். நேரடியான , பாசாங்கற்ற பாலியல் பிறழ்வுகள் , அந்த சூழலே கதைக் கணங்கள். ( என்ன இருந்தாலும் படைப்பூக்கம் மீதுறும் இடங்களில்லையா?) . மதுரையின் குறத்தி முடுக்கு கிளையை தஞ்சையில்
பிரகாஷ் தொடங்க முயற்சித்தார். ப்ராயிடின் பிறாண்டல்கள் எழுத்தாளர்கள் அனைவர்
மீதும்.
பவா! ஓராண்டு
காலம் இந்த படைப்பாளிகளின் தொகுப்புகள் மொத்தத்தையும் தொடர்ந்து வாசித்தேன். (
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை மாஸ் கம்யுனிகேஷன் துறை நூலகத்தில் அனைத்து
இருப்பும் உண்டு). அலுப்பும், சோர்வும்
மிஞ்சிப் போனது. இந்த கருப்பொருளை மட்டுமேவா இருபது வருடங்கள் தமிழ் சமூகம் மாந்தி
மகிழ்ந்தது என்ற கேள்வி என்னை அரித்தது. சுஜாதா நிறைய ஆறுதல் அளித்தார். ஆனால்
தேற்றவில்லை. பாலகுமாரன் 90
களின் தி.ஜா.
தான் ( நாவலில் உள்ள தி.ஜா.) எனக்கு பெரும் ஆசுவாசம் அளித்தது கி.ரா.வும், கொஞ்சம் சு.ராவும் தான். பிறகுதான் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியும் ஒரே
நேரத்தில் என் கைக்கு கிடைத்து வேறு வகை வாசிப்புக்கான சாத்தியங்கள் அமைந்தன.
எதற்கு இவ்வளவு
பூர்வ பீடிகை என்றால் இந்த 80களின் இறுதியில் எழுத வந்த எழுத்தாளர்களில்
மேற்கண்ட சாயல் படாத புது எழுத்துகள் என வெகு சிலரையே சுட்ட முடியும். நாஞ்சிலார், ஜெயமோகன், நீங்கள்,
யுவன்
சந்திரசேகர். இவ்வகையில் பெரும் விதிவிலக்குகள் "கும்ப முனி " நாஞ்சிலார், ஆ.மாதவன் தான். இருவருமே இந்த "தாவணி
அக்காக்கள்" காலத்துக்கு முந்தியிருந்து எழுத வந்து அந்த சாயல் படாமல்
இருப்பவர்கள். காமம் கருப்பொருளாகி வந்த சில படைப்புகள்
நீங்கள் எல்லோருமே படைத்ததுண்டு. ஆனால் பாயாசம் மட்டுமே விருந்தாகி விடும் கொடுமை
உங்கள் எவரிடமும் இல்லை.
உங்களது படைப்பில் முதலாக நான் வாசித்தது ஒரு மழைப் பொழிவினால் மரணம் மன்னிக்கப்பட்ட திருடனின் கதை. மிகுந்த பிரமிப்புடன் ஒரு வார காலம் அந்தக் கதையையே நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட கதைமாந்தரின் மீது இரக்கம் தோன்றும் விதத்தில் கதை சொல்லப்படுவது வழக்கம். அதுவும் ஒரு கதாபாத்திரம், இன்னொன்றின் மீது வெளிப்படுத்தும் ஒன்றாக
அமைவதே மரபு. ஆனால் இந்தப் படைப்பில் இரக்கம் உருவாவது திருடன் மீதல்ல. கட்டுகளை அவிழ்த்து விடும் ஊர்காரர்கள் எவரும் பரிதாபத்தையோ, இரக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஊர்காரர்கள் தண்டிக்கும்படியான காரியங்கள் பல
செய்த திருடன் ,
அவர்களே
மன்னித்து விடுதலை செய்யுமளவு என்ன மகத்தான நல்ல காரியம் செய்தான்? அவன் ஒரு பொருட்டே அல்ல. மாறாக, மழை வழியே அவர்கள் மனம் அடைந்த விரிவு. அது அந்த மழை கொடுத்த மன விரிவு. நெல்லுக்கும், புல்லுக்கும், விஷ செடிக்கும்,
பழ மரத்துக்கும்
ஒன்றே போல் முலை
சுரக்கும்
மலையருவிகள் . குழந்தைகளின் முகம் பார்த்து அன்னையின் கையில் இடப்பட்ட பிடி
சோற்றின் வலிமை. இனி உழைக்க வழியுண்டு என்ற மனம் தந்த விரிவு அது. இப்படி மானுட
செயல்கள் வழியே மானுடத்தை மீறி நிற்கும் ஒரு மகத்தான உணர்வை சொல்ல முடிந்த இந்த
ஆள் யார் என்றுதான் உங்கள் பெயரை கவனிக்க ஆரம்பித்தேன்.
வேட்டை
கிட்டத்தட்ட "கடலும்,
கிழவனும்"தான்
என்று விவாதம் செய்த நண்பர்கள் உண்டு. ஆனால் வேட்டை அளவுக்கு தமிழில் இயற்கைக்கும், மனிதனுக்குமான உறவினை புரிய வைத்த கதைகள் ஒரு
கை விரல் எண்ணிக்கையில் அடக்கம். இயற்கையின் ஒரு பகுதியாக மனிதன் வாழ்ந்தால்
அவனும் இயற்கைக்கு உட்பட்ட போராட்ட இருப்பையே கொள்ள வேண்டும். வேட்டைக்காரன், வேட்டை உயிர் இரண்டுக்குமான நியதிப் பங்கீடு
இயற்கையால் செய்யப்பட்டு ,
சம நிலையில்
இயற்கையாலேயே பேணவும் படும். இந்நிலையில் மாசுபடாத ஒரு மனித மனம் வேட்டையில்
தன்பங்கு இயற்கையால் சமன் செய்யப்படுகையில் எப்படி உணரும்? ஜப்பான் கிழவன் போன்ற ஒரு கதைமாந்தன் இதுவரை
தமிழில் பேசப்பட்டதில்லை.
(தொடரும்)
அன்புடன்,
ராஜகோபாலன் ஜா ,
சென்னை 9940235558