Monday, April 4, 2016

நாடோடிகளின் பாடல்கள் காற்றுக்கானவை மட்டுமே


 கரிசல்குயில் கிருஷ்ணசாமி



கடந்த வாரம் நான் மிக மதிக்கும் எழுத்தாளர் சா.கந்தசாமி தன் மனைவியுடன் வீட்டிற்கு வந்திருந்தார். அவருடனான இருப்பு, அப்பாவின் அருகாமையை எங்களுக்கு கொடுக்கும். அலைவுச் செறிவு முதிர்ந்த வாழ்வு அவருடையது. எப்போதும் பேசிக் கொண்டேயிருப்பார். அத்தனை இருப்பு உள்ளே இருக்கிறது. தொடர் வாசிப்பு, வாழ்வு தந்த நெருடல், சந்தோஷம், துரோகம் என அதன் எடை கூடிக்கொண்டேயிருக்கும். ஒரு படைப்பாளியின் வார்த்தைப் பிரயோகம் எப்போதுமே சுவீகரித்துக் கொள்ளக்கூடியது. வயதேறிப் போன ஒரு திண்ணைத் தாத்தாவின் பகிர்தலுக்கும், ஒரு படைப்பாளியின் பகிர்தலுக்குமான தூரம் வெகுதூரம்.

வம்சியின் புத்தக ரேக்குகளைப் பார்த்துக் கொண்டே நகர்ந்தவர், ஒவ்வொரு புத்தகமாகத் தொட்டு இவன் மூளையிலிருந்து எழுதியவன், இவன்தான் நம்மாளு இதயத்துல இருந்து எழுதியவன் என புத்தகங்களை விரல்களாலும் மனதாலும் வேறுபடுத்திக்கொண்டே வந்தார்.

மூளையால் எழுதியவர்கள் என அவர் சுட்டியவர்கள் எல்லோருமே பெரும் படிப்பாளிகளாகவும், கல்லூரிகளில் பேராசிரியர்களாக, துறைத் தலைவர்களாக, துணைவேந்தர்களாக இருந்தவர்கள் அல்லது இருப்பவர்கள்.

இவர்களுக்கு எழுத்து இரண்டாம் பட்சம்தான். எழுத்தின் பொருட்டு கிடைக்கும் ரொட்டியில் வெண்ணெய் தடவிய பகுதிகள் எதுவெனத் தங்கள் அகாடமிக் அறிவினால் தெரிந்து வைத்திருப்பார்கள். அல்லது அதை அடைவதற்காக மட்டுமே எழுத்தையும் மேற்கொள்பவர்கள்.

ஒரு எளிய வாசகன் தன் உள்ளார்ந்த வாசிப்பினால் ஆரம்ப நாட்களிலேயே இவர்களைத் தன் இடது கையினால் புறக்கணித்து விடுவான்.

இவர்கள்தான் அகாடமி, தேசிய கருத்தரங்குகள், நட்சத்திரவிடுதிகள்,
விமானப் பயணங்கள், இரவு விருந்துகள் என சகல சௌகரியங்களையும்  இலக்கியத்தின் பெயரால் அடைபவர்கள்.

தமிழ்நாட்டின் ஏதோ ஒரு உட்கிராமத்திலிருந்து எழுத்தை உயிர் மூச்சாகவே சுவாசிப்பவர்கள், அதன் பொருட்டே வாழ்ந்து எந்தச் சுவடுமின்றி செத்துப் போவார்கள். ஆனால் ஆகச் சிறந்த படைப்புகளைத் தங்கள் சமூகத்திற்கு பங்களித்துவிட்டேப்  போவார்கள்.

மகாகவி பாரதியில் ஆரம்பித்து பிரமிள், அப்பாஸ் என்ற கோவில்பட்டியின் இளம் கவிஞன் வரை இதில் அடக்கம். இந்த வரிசையை விலக்கிப் பார்த்தால் புதுமைப்பித்தன், ஆத்மாநாம், ஜே.கே. என எல்லோருடைய உடம்பையும் நீங்கள் ஸ்பரிசித்து விடக்கூடும்.
ஆனால் இலக்கியத்தின் பெயரால் அண்டிப் பிழைத்த இந்த போலி அறிவுஜீவிகளின் உடலை எரியூட்டிய பிறகு நமக்கு மிஞ்சுவது வெறும் சாம்பல் மட்டுமே.

காடமிகளுக்கோ, நிறுவனங்களுக்கோ தெரியவில்லையென்பதால், கண்டராதித்தனும், காலபைரவனும், இசையும், திருச்செந்தாழையும் கவிஞர்களாக, எழுத்தாளர்களாக இல்லாமல் போய்விடுவார்களா என்ன?   காலம் ஞாபகத்தில் இருத்திக்கொள்ளும் பெயர்கள் இவர்கள் மட்டுமே.

கந்தசாமி சார் அவ்விடத்தை விட்டு ஸ்தூலமாக அகன்றபோதும், வெகுநேரம் அவர் வார்த்தைகள் அங்கேயே சற்றுமுன் சிகரெட்டிலிருந்து விடுபட்ட புகைமாதிரி சுழன்று கொண்டிருந்தது. அந்த மூச்சு முட்டவைக்கும் புகைச் சுழலிலிருந்து நான் என் கரிசல்குயில் கிருஷ்ணசாமி என்ற உடல் கறுத்த ஒரு பாடகனை என் ஞாபகத்தால் அடைந்தேன்.

அவனிடமிருந்து பிரவாகமெடுக்கும் பாடல்களை விலக்கி விட்டுப் பார்த்தால் கிருஷ்ணசாமி ஒரு சாதாரண கிராமத்து மனுசன். தன் அறிவினால் இதுவரை எதையுமே அடையாதவன் மட்டுமல்ல, முயற்சிக்காதவன் கூட.

வீடு, வயல், அலுவலகம், மாநாடு, கூட்டம், பயணம், நெரிசல் எதிலும் ஒரு கவிஞனின் வரிகளுடனே வாழ்பவன் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவன்!

முப்பது வருடங்களாக நான் கிருஷ்ணசாமியை அப்படி மட்டுமே பார்க்கிறேன். தன் பாடலின் பொருட்டு தன் மீது விழும் எதையும் அவன் அடுத்த விநாடியே வியர்வையைத் துடைப்பது மாதிரி துடைத்தெறிந்து விட்டு, சற்றுமுன் அம்மாவால் குளிக்க வைக்கப்பட்ட ஒரு குழந்தையின் பரிசுத்தமான உடலோடு அடுத்த பாடலுக்குத் தயாராகிறான் அவன் மீது விழும் வெளிச்சத்திற்கு முகம் திருப்பிக்கொள்கிறான்.

நாம் நிதானமாக யோசித்து கிருஷ்ணசாமியின் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தைக் கணக்கிடலாம். நீங்கள் கூட்டலையும், கழித்தலையும் எப்படிக் கலைத்துப்போட்டாலும் கிடைப்பது, அவன் தமிழகத்தின் பல திசைகளின், பல நகரங்களின், கிராமங்களின் மேடைகளில் கரைத்த இரவுகளில் நாம் அடைந்த அவன் பாடல்களின் சுழிப்பைத்தான்.

ஒரு கவிஞனின் இரவுநேர நடையின்போது சிந்தும் இரகசியமான வார்த்தைச் சிதறல்கள் எங்கெங்கோ சுற்றியலைந்து கிருஷ்ணசாமியைத் தேடிப் போய்விடுகிறது.

கோடுகள் இல்லா உலகம் இரமணனில் துவங்கி பரிணாமன், நவகவி, வையம்பட்டி, தனிக்கொடி என அவர்களின் தோழமை சங்கீதத்தால் குழைபவை. இது எத்தனை அபூர்வம். தூரங்களின் இடைவெளிகளைப் பாடல்களாலும், இசையாலும் மட்டுமே நிரப்பும் மானூடதெய்வங்கள் இக்கலைஞர்கள். நம் அன்றாட உரையாடல்களிலிருந்து இவர்களின் உரையாடல்களை ஒரு குழந்தைகூட சுலபமாக வேறுபடுத்திவிடும்.

தற்கு தீபாவளி சீட்டு பிடிக்கத்தெரியாது, விளை நிலைத்தை வாங்கி ப்ளாட் போடாதது, இரகசியமாக பைனான்ஸ் நடத்தத்தெரியாது, மனைவியிடம் பணம் கொடுத்து வட்டிக்குவிட முடியாது. லௌகீக வாழ்வில் நாம் அடைந்திருக்கும் வெற்றிகளென கருதும் அருவருப்புகள் இவைதான். இதில் வெற்றி பெற்ற ஒருனைத்தான் வெற்றியடைந்தவனாக இச்சமூகம் கொண்டாடுகிறது.

கிருஷ்ணசாமி இதிலிருந்து வெகு காலத்திற்கு முன்பே தன்னைத் துண்டித்துக் கொண்டவன். அவனின் வெற்றியே அவன் முணுமுணுக்கும் தமிழ் இசைப் பாடல்களும், அதன் மூலம் அவனடைந்த தோழர்களும்தான். அவர்களுக்காக எந்தச் சிக்கலான தருணங்களிலும், இடங்களிலும், அவன் பாடத் தயாரான ஒரு மனநிலையிலேயே எப்போதுமிருக்கிறான்.

தூக்கம் வராத பல நடு ஜாமங்களில் நான் கிருஷ்ணசாமியைத் தொலைபேசியில் எழுப்பி, எனக்குப் பிடித்த பாடல்கள் சிலவற்றைப் பாடச் சொல்லியிருக்கிறேன்.

போர் முனைகளில் துப்பாக்கிக் குண்டுகளினூடே தயார் நிலையில் படுத்துக் கிடக்கும் ஒரு வீரனை நீங்கள் உங்கள் குரலால் தட்டி எழுப்பி எதிரியை நோக்கிச் சுடச்சொல்லுங்கள், உங்கள் சொல்லின் நிறைவுக்கு  முன் அவன் குண்டுகள் வெளியேறியிருக்கும். அது ஒரு தயார்நிலை. எதற்கோ காத்திருப்பது, அல்லது தவமிருப்பது. ஒரு போர்வீரனுக்கும், ஒரு பாடகனுக்குமான இடைவெளியென்று ஏதுமில்லை.

சில புதிய பாடல்களுக்கு மனதால் இசையமைத்து, தனக்குள்ளேயே பாடி முடித்து அதை, தன் சக மனிதனுக்குச் சொல்ல உந்தும் அந்தக் கணம் ஒரு கலைஞனுக்கு வாய்க்கும் அபூர்வ கணம்.

அதற்கு அலுவலகநேரம், லௌகீகநெருக்கடி, குழந்தைகளின் படிப்பு, மனைவியுடனான நெருக்கம் எதுவும் துச்சம். அதைப்புறந்தள்ளி தன் பாடலை ரசிக்கத் தெரிந்த ஒரு மனதை வெறியோடு தேடும். அது ஒரு பெண்ணாய் இருக்கையில் உற்சாகம் இரட்டிப்பாகக் கூடுகிறது.



என்னைப் போலவே தமிழகத்தின் பல திசைகளிலிருந்தும் தன்னை எழுப்பும் அழைப்புகளுக்கு எப்போதும் பாடுகிறான் கிருஷ்ணசாமி. நகரின் ஏதாவதொரு முக்கில் அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி மேடையில் அவன் சுருதி கூட்டிக் கொண்டே ஏறும் அழகையும், கம்பீரத்தையும் நாம் நுட்பமாகக்கவனிக்கத் தவறியிருக்கிறோம்.

கிருஷ்ணசாமியைப் போலவே நான் இன்றளவும் ஆராதிக்கும் இன்னொரு கலைஞன் பரிணாமன். தன் அறுபதாவது வயது நிறைவுக்காக, தன் வாழ்வைப் பற்றிய பதிவாக அவரே எழுதிய ஒரு பாடல் உண்டு.

எப்போதும் என் ஜீவிதத் துயரங்களை, நான் இப்பாடல் நிரப்பப்பட்டிருக்கும் பாத்திரத்தில் மட்டுமே கழுவிக் கொள்கிறேன். அல்லது கரைத்துக் கொள்கிறேன்.

‘‘உதிப்பதுமில்லை, மறைவதுமில்லை
ஒளிரும் சூரியன்’’

என அப்பாடல் துவங்கும்போதே ஒவ்வொருமுறையும் நான் மூர்ச்சையாகிறேன். அறுபது வருட மானுட வாழ்வின் சாறு அது. அதன் ஒரு துளியை நீங்கள் சாதாரணமாக அருந்திவிட முடியாது. குறைந்தபட்சம் நாக்கு நுனியில் தொட்டு வைத்துச் சுவைத்துவிடக் கூடமுடியாது.

அது ஒரு கவிஞனுக்கு இச்சமூகம் அறுபது வருடங்களாக இழைத்த துரோகங்களும், பட்டினிகளும், அவமானங்களும், புறக்கணித்தல்களும் கலந்து இறுகிக் கெட்டிதட்டியிருக்கிறது. கேட்டுச் சிரித்துவிட்டோ, கைத்தட்டிவிட்டோ, கவலைப்பட்டுக்கொண்டோ போவதற்கு அது ஒன்றும் மூன்றாம் தர சினிமா பாட்டல்ல.
தூக்கமற்ற பின்னிரவுகளில், நீங்கள் உங்கள்  தூக்கத்திலிருந்து எழுப்பி, உங்கள் முன் நீங்களே மண்டியிட்டு உங்களை சுய விசாரணை செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் யார்?

சமூகத்தின் பார்வையில் எத்தனை சாதூர்யமாய் உங்களை வடிவமைத்துக் கொண்டீர்கள்!

தினம் தினம் நீங்கள் ஒரு அரசியலை உங்கள் சபைமுன் பேசுகிறீர்களே, உண்மையில் அதுவா நீங்கள்?

உள்ளுக்குள் நீங்கள், உங்கள் சுயஜாதியை மோகிப்பவனாக, உங்கள் பிள்ளைகளுக்கு சொத்துசேர்ப்பவனாக, சிலவற்றை அடைவதற்காக, எதையெல்லாம் இழந்திருக்கிறீர்கள்?
இதெல்லாம் உங்களுக்குள்ளேயே புழுங்கி, ஒரு இரகசியப் புழுவைப் போல உங்களுக்குள்ளேயே அழுகிவிட வேண்டும்.

வெளியில் வசீகரம்மிக்க, வாசனை திரவியம் பூசப்பட்ட ஒரு உடம்போடு நீங்கள் உங்களை, தினம் தினம் காட்சிப்படுத்திக் கொள்கிறீர்களே!

 அப்புழு உள்ளே கருகும் வாசனைப் பெருகும் முன் நீங்கள் கிருஷ்ணசாமியிடமோ பரிணாமனிடமோ ஒரு பாடலை எப்படியாவது யாசித்துப் பெற முயன்று பாருங்கள். அவர்கள் பாடுவார்கள்,


‘‘ஐந்து பூதத்தை நான் ஆண்டு நிற்பவன்,
நான் ஆறாவது பூதம், ஐந்தாவது வேதம்’’

என்று அச்சங்கீதம் முழுமையாக உங்களை நிறைக்கும்போது உங்களால் உங்கள் வழக்கமான முகமூடிகளை அணிய முடியாது. நீங்களே அப்புழுவின் ஒரு பெருத்த உருவமாகி அறைக்குள்ளேயே புழுங்கிச் சாவீர்கள்.

எப்போதுமே உண்மையும், அறமும் அத்தனை வீரியமாவைதான்.

கவிஞர் நவகவி தன் நவகவி ஆயிரத்தை கிருஷ்ணசாமி என்ற அந்த எளிய பாடகனுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார்.

இதுதான், இதுமட்டுந்தான் இப்பெருவாழ்வில் நாங்கள் அடையுமிடம். அது நிறைகிறது. முப்பது வருடங்களாக, மழையிலும், வெய்யிலிலும், பேருந்து நெரிசல்களிலும், இரயில் பயணங்களிலும் அலைந்ததற்குக் கிடைக்கும் ஓர் உன்னதப் பரிசு இந்த சமர்ப்பணங்கள் மட்டுந்தான்.

எங்கோ பெயர் தெரியாத ஒரு வாசகனால், தோழனால் எழுதப்பெறும் அல்லது தொடப்படும் தொடுதல்கள் போதும் இக்கலைஞர்களுக்கு.

பெரும்வாசிப்பிற்கும், விவாதத்திற்கும் பிறகு இடதுசாரி அரசியலை ஏற்று எப்போதும் சந்தேகத்துடனே வாழ்பவர்களல்ல கிருஷ்ணசாமியும், பரிணாமனும். அவர்கள் அதைத் தங்கள் உணர்வுகளால் அடைந்தவர்கள். சா.கந்தசாமியின் வார்த்தைகளில் இதயத்தால் படைப்புகளை, பாடல்களை அணுகுபவர்கள். அதனால் மட்டுமே இத்தனை காலத்திற்குப் பிறகும், இத்தனை தூரத்திற்கு அப்பாலும் அவன் மட்டுமே என் ஞாபகத்தில் மிஞ்சுகிறான்.
எல்லாக் காலத்திலும் அசல் கலைஞர்களைப் போல சிலர் எழுவார்கள். கேசட்டுகள் போடுவார்கள். சில ஆயிரங்களுக்காகத் தன்னார்வக் குழுக்களோடு இணைவார்கள். அதற்கான தர்க்கங்களைப் பாடல்கள் இசைக்காத நாட்களில் நம்முன் அடுக்குவார்கள்.

அதில் ஒருவனில்லை கிருஷ்ணசாமி. அவனுக்கு என்று ஒரு சிறு உலகம்தான். ஒவ்வொரு ஊரிலும் அவனை அடையாளம் கண்டு டீக்கடைக்குக் கூட்டிப்போய், உடைந்த மரபெஞ்சில் உட்கார்த்தி வைத்து அவனுக்கு ஒரு டீயும் தங்களுக்கு டீயும் பீடியும் சொல்லிவிட்டு, அங்கேயே சிலபாடல்களைப் பாடச் சொல்லிக் கேட்டு உழைக்கப் புறப்படும் தோழர்கள் பத்துபேர்வரை இருக்கக்கூடும்.

சில நேரங்களில் அவர்கள் உழைப்பிலிருந்து விளைந்த விளைச்சலில் அவன் பாக்கெட்டில் ஒரு ஐநூறு ரூபாயைச் செருகக்கூடும். சமயங்களில் அவனிடமிருந்து பெறவும்கூடும். இது ஒரு அபூர்வ தோழமையின் கலவை. அந்தத் தெருக்கடை டீயைப் போல அசல் சுவையானது.

அவன் தன் பாடல்களை எதற்காகவும் பத்திரப்படுத்துவதில்லை. வாரிசுகளுக்குக் கொடுத்துவிட்டுப் போக அவனிடம் எதுவுமில்லை. அப்போர் வீரனின் தயார்நிலை போலவே அவன் உதடுகளில் முட்டி நிற்கும் வரிகளை நீங்கள் எப்போதும் கேட்டுப்பெறலாம். டீக்கடை மர பெஞ்சுகளிலிருந்தோ, வசீகரம் மிக்க கலை இலக்கிய திறந்தவெளி மேடையிலிருந்தோ, நெரிசலான ஒரு பேருந்துப் பயணத்திலோ.

நாடோடிகளின் பாடல்கள் எப்போதும் காற்றுக்கானவைதான்.