Friday, November 30, 2018

அறத்தின் குரல்கள் - ந. பச்சைப்லன்



பவா.செல்லதுரையின் வேறுவேறு மனிதர்கள்




ஒருவர் பதவியிலும் அதிகாரத்திலும் இருக்கும்பொழுது அவருக்குக் கிடைக்கும் கவனிப்பும் மரியாதையும் யாரும் புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால், அவர் பதவி ஓய்வுபெற்று ஒதுங்கும்பொழுது சுற்றியிருப்பவர்கள் தங்கள் வட்டத்திலிருந்து அவரைக் கழற்றிவிட்டுப் போகும் போக்குதான் எங்கும் காணும் நிலை. அதுவரை மற்றவர்கள் தன்மீது காட்டிய அன்பும் கரிசனமும் ஆதரவும் போலியானவை என உணரும் மனங்களின் வேதனை சொல்லி மாளாதது. மனிதர்களின் மாறிப்போகும் நிலையைத்தான் பவா.செல்லதுரை இச்சிறுகதையில் நமக்குக் காட்டுகிறார்.
         ஜேக்கப் வாத்தியார் வயதானவர். பள்ளியில் ஆசிரியர்களின் மரியாதைக்குரியவராக இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார். சக ஆசிரியர்கள் அவரிடம் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். அவரின் ஏழு பிள்ளைகளில் ஐவர் திருமணமாகி இன்னும் இரு பெண்கள் திருமணத்திற்காகக் காத்திருக்கிறார்கள். பதவி ஓய்வுபெறும்போது கிடைக்கும் பணத்துக்காகக் காத்திருக்கிறார். வாதநோயின் பாதிப்பு உள்ளதால் நடக்கும்போது சிரமப்படுகிறார். எனவே, பணம் வரும்போது தனக்கு மருத்துவம் பார்க்கும் எண்ணத்திலிருக்கிறார்.
         ஓய்வு பெறும் நாளைச் சிறப்பாகக் கொண்டாடி மோதிரம் பரிசளித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்கள் ஆசிரியர்கள். ஆனால், ஊட்டியில் அவர் பணி செய்த கணக்கு விடுபட்ட காரணத்தால் அவரின் கிராஜுட்டி, பென்ஷன், சேமநிதி  பணம் எதுவும் வராமல் தடைப்படுகிறது. பள்ளிக்கும் இன்னும் பல இடங்களுக்கும் அலைகிறார். அன்பாகப் பேசிய மனிதர்கள் அவரை ஒரு தொல்லையாக  நினைக்கிறார்கள். “அவன் அவனுக்கு ஆயிரம் வேலை இருக்கின்ற விஷயமே அந்தாளுக்குத் தெரியில சார்...எப்பப் பார்த்தாலும் கையில எஸ்.ஆரோட வந்து இங்க தப்பா, அங்க தப்பான்னு..” என்று சக ஆசிரியர் சலித்துக்கொள்கிறார்.
         ஜேக்கப் வாத்தியார் மன உளைச்சலுக்கு ஆளாகி, வருவோர் போவோரிடம் புலம்புகிறார். ஒரு நடுராத்திரியில் தன் இரு பெண்களையும் அருகில் அழைத்துத் தலையைக் கோதி, “என்னை மன்னிச்சிருங்கடா.. எனக்கு இப்போதைக்கு அந்தப் பணம் வருமுன்னு நம்பிக்கை இல்லை. நீங்க யாரையாச்சம் லவ்பண்ணி மாலையோட வந்தாக்கூட நான் தடுக்கப் போறதில்லை” என்று அழுகிறார். எங்கோ தப்பு நடந்திடுச்சு.. எப்படி நடந்துச்சு? என்று புலம்பத் தொடங்கி அவரைக் கடைசியில் மனநோய் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
         “அவருக்கு வர்ற பணம் எம் பொண்ணுங்க கல்யாணத்துக்குக்கூட வேணாம் சார். அவரு பழையபடி நல்லா நடமாட ஒதவுனாப் போதும்” என ஜேக்கப் வாத்தியாரின் மனைவியின் கண்ணீரோடு கதை முடிகிறது. அன்போடு பழகும் மனிதர்கள் கால ஓட்டத்தில் மாறிப்போகும் அவலத்தை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறார் பவா.செல்லதுரை. 




ந. பச்சைப்லன் அறத்தின் குரல்கள் 


தமிழ்ச்சூழலில் தவறாமல் கேட்கப்படும் கேள்விகள் இவை  -  நாம் ஏன் இலக்கியம் பயில வேண்டும்? இலக்கியம் வாழ்க்கைக்கு உதவுமா? பலமுறை இக்கேள்விகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எதைச் செய்தாலும் அதில் இலாப நட்டக் கணக்குப் பார்க்கும் மனித மனங்களிலிருந்து இந்தக் கேள்விகள் எழுவதில் வியப்பில்லை.

ஆனால், மனித வாழ்க்கை என்பது வெறும் பொருளியல் இலாபத்தை மட்டும் மையமாகக் கொண்டு இயங்குவதில்லை. வயிற்றுக்கு அப்பால் சிந்திக்க மறுப்போரை இங்கே கணக்கில் கொள்ள வேண்டாம். வெறுமனே வாழ்ந்து மடிந்து போகும் மிருகத்திலிருந்து மனிதன் வேறுபடுகிறான். அவன் வாழ்க்கை முழுவதும் தேடல் நிறைந்ததாய் இருக்கிறது. எப்பொழுதும் ஒன்றைக் கற்றுக்கொண்டு, கற்றதை மற்றவருக்குக் கற்பித்தபடி இயங்கிக் கொண்டிருக்கிறான். இன்று நாம் பெற்றுள்ள அறிவுச் செல்வம் யார் யாரோ அரும்பாடுபட்டுச் சேமித்து வைத்ததுதானே? இன்று, மனிதன் கண்டடைந்த ஞானமும் அறிவியல் சாதனைகளும் பலரின் தேடலில் விளைந்ததுதானே? குகையிலிருந்து நதிக்கரை நோக்கி நகர்ந்து, நாகரிக வளர்ச்சியில் பல படிநிலைகளை அடைந்தாலும் அவன் தேடல் இன்னும் தொடர்கிறது.

இலக்கியம் மூலமும் அவன் தேடலில் ஈடுபடுகிறான். வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும்  அதன் சிக்கல்களை ஆராயவும் இலக்கியம் துணை வருகிறது. அது மட்டுமன்று. ஒற்றை உடலைக் கொண்டு ஒரு வாழ்க்கை மட்டும் வாழும் நிலையிலிருந்து விடுபட்டு, ஓராயிரம் வாழ்க்கையைக் கற்பனை உலகில் சஞ்சரித்து வாழ்ந்து அனுபவிக்கும் பேற்றினை அவன் இலக்கியம் மூலம் அடைகிறான். மற்றவர்கள் தங்கள் வீடு, ஊர், நாடு எனக் குறிப்பிட்ட எல்லைக்குள் அடைபட்டுக் கிடக்க, அவன் இலக்கியம் மூலம் எல்லையற்ற கற்பனை வானில் பறந்து திரிந்து புதிய உலகைக் காண்கிறான். 

பள்ளியில் இலக்கியப் பாடம் பயில மாணவர்களை ஊக்குவிக்கும்போது இலக்கியம் பயின்றால் விளையும் நன்மைகளை அவர்களுக்குப் பட்டியலிட்டுக் காட்டுவேன். இலக்கியம் பயில்வதால் அவர்கள் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறலாம். உயர்கல்வி தொடர அது துணையாய் இருக்கும். அதன் வழி நல்ல வேலை வாய்ப்பினைப் பெறலாம். இலக்கியம் பயில்வது மனமகிழ்வூட்டும் சிறந்தபொழுதுபோக்கு. இலக்கியம் பயில்வதால் இளைய தலைமுறை சமூகச் சீர்கேடுகளில் ஈடுபடமாட்டார்கள்.  தேர்வில் இலக்கியம் பயிலும் உரிமையை இழந்துவிடாமலிருக்க அதிகமானோர் இலக்கியப் பாடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இலக்கியம்வழி இனத்தின் பண்பாட்டினையும் வரலாற்றையும் ஓரளவு அறியலாம். இலக்கியம் பயில்வதால் மாணவர்களும் படைப்பிலக்கியத்தில் ஈடுபடலாம். இப்படிப் பல நன்மைகள்.

இலக்கியத்தின் பயன்கள் இவை மட்டுமா என எண்ணிப் பார்த்தேன். இலக்கியப் படைப்புகளின் அடிநாதமாக, உயிர்நாடியாக இருப்பது எது? இதற்கான விளக்கத்தை ஜெயமோகன் தருகிறார். மானுடனுக்குள் ஓர் ஆதிவல்லமை உறைகிறது. வாழ்வதற்கான இச்சையாக, வெல்வதற்கான முனைப்பாக, தாக்குப்பிடிப்பதற்கான திறனாக அஃது உருவம் கொள்கிறது. அதுவே அறங்களை உருவாக்கியது. மனிதன் கல்லைக் கையிலெடுத்தான், ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். சக்கரம் கண்டுபிடித்தான், கருவிகளை உண்டுபண்ணினான். ஆனால், அவன் உண்டுபண்ணிய மிகத்திறன் வாய்ந்த கருவி அறம்தான். நீதி, கருணை, சகோதரத்துவம், அன்பு, பாசம் என்றெல்லாம் பலநூறு முகம் கொண்டு எழும் ஆதி உணர்வு அது. அதுதான் அவனை கூடிவாழச் செய்தது. சமூகமாக ஆக்கியது. அவனை விலங்குகளின் தலைமகனாக நிறுத்தியது. இலக்கியம் ஓயாது மானுட மனங்களை நோக்கி அறத்துக்காக அறைகூவிக் கொண்டிருக்கிறது. விதையுறங்கும் மண் மீது மழை பெய்தபடியே உள்ளது. இலக்கியம் வாழும் நாட்டில் அறம் அழியாது.

உண்மைதான். ஒவ்வோர் இலக்கியப் படைப்பும் அறம் எனும் ஆதி உணர்வை மனித மனங்களில் ஆழமாக உழுது பயிர்செய்கிறது. மனித மனங்களைப் பண்படுத்தி நன்னெறிமிக்க வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்துகிறது. இலக்கியத்தில் அறத்தின் குரல்கள் ஓயாது ஒலிக்கின்றன. நம் மனத்தைத் திறந்து வைத்தாலே போதும். அந்தக் குரல்களின்வழி கசியும் மானுடம் மீதான கரிசனம் நம் மனத்தை நிச்சயம் நனைக்கும்.  இதோ, என் மனத்தை நனைத்த சில சிறுகதைகள்:



ஜெயமோகனின் அறம்

மனித வாழ்வே நம்பிக்கை எனும் சங்கிலியால் பின்னப்பட்டுள்ளது. அதுவே, நம் மனங்களை இணைக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் சூழலில் நம்பிக்கையைக் குலைத்து மோசம் செய்வதால் ஏற்படும் விளைவு மிகுந்த வேதனை தரக்கூடியது. முழுமையாக ஒருவரை நம்பிவிட்டு பின்னால் ஏமாற்றப்படும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் மனம்படும் தீராத் துன்பத்தை அதை அனுபவித்தவர்களே உணரமுடியும். அதனால்தான், அதை எதிர்கொள்ள அறம்பாடும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்திருக்கிறது. அதைத்தான் ஜெயமோகன் இச்சிறுகதையில் நினைவூட்டுகிறார்.

ஜெயமோகன் பழம்பெரும் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கச் செல்கிறார். அந்த எழுத்தாளர் ஒரு காலத்தில் நிறைய எழுதிக் குவித்தவர். பேரும் புகழோடு வாழ்ந்தவர். ஆயினும், தம் எழுத்துக்கு முறையான ரோயல்டி பணம் கிடைக்காதவர். அந்த மனக்குறையை ஜெயமோகனிடம் பகிர்ந்து கொள்கிறார். ஒருமுறை செட்டியார் ஒருவர் கேட்டுக்கொண்டதால் அவர் பதிப்பகத்துக்கு நூறு நூல்கள் எழுதித்தர அவர் ஒப்புக்கொள்கிறார். ஒரு நூலுக்கு ஐம்பது ரூபாய் வீதம் மொத்தம் ஐயாயிரம் ரூபாய்க்கு எழுதுவதற்கு உறுதியாகிறது. அதன்படியே, இரவும் பகலும் ஓயாது எழுதி முடிக்கிறார். ஒப்புக்கொண்ட பணத்தில் மீதப்பணம் மூவாயிரம் ரூபாய் செட்டியாரிடமே இருக்கிறது. பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு செய்துவிட்டு, செட்டியாரிடம் போய் பணத்தைக் கேட்கிறார்.
         “மூவாயிராமா என்னய்யா உளறுகிறீர்? புக்கு எழுத மூவாயிரமா?” எனக் கையை விரிக்கிறார் செட்டியார். சாமி என் வயித்துல அடிக்காதீங்க. என் பொண்ணு வாழ்க்கையைக் கெடுக்காதீங்க  முதலாளீ” எனக் கெஞ்ச, “காலைப்புடிச்சா காச கொடுத்திருவேனா? நன்றி கெட்ட நாயே” எனக் காலை உதறிவிட்டுக் கத்துகிறார். “என்ன ஏமாத்தி சொத்து சேக்கிற நீ உருப்பட மாட்டே” கடுமையாகப் பேசிவிட அங்கு வரும் செட்டியாரின் தம்பி அவரைக் கைநீட்டி அடிக்கிறான். தெருவிலே நின்று தவிக்கும் எழுத்தாளர், இரவிலும் கடையில் சென்று கெஞ்சுகிறார்.
         அங்கேயே நின்று மறுநாள் காலையில் கடை திறக்கும்போது சென்று கேட்கிறார். செட்டியாரின் மனம் அப்போதும் இளகவில்லை.  “எனக்கு கதியில்லே, நான் போயி சாகத்தான் வேணுமா?” என்று கதற, “போய் சாவுடா நாயே..இந்தா வெஷத்த வாங்கு” என்று ஒரு ரூபாயை அவர் முகத்தில் விட்டெறிகிறார். அங்கிருந்து ஆவேசமாகக் கிளம்பி, நேரே செட்டியார் வீட்டுக்குப் போய், செட்டியாரின் மனைவியிடம் நடந்ததைக்கூறி, நான் சரஸ்வதி கடாட்சம் உள்ளவன். என் வயத்திலே அடிச்ச நீயும் உன் பிள்ளகுட்டிகளும் வாழ்ந்திடுமா?” என்று கூறி, வெண்பாவால் அறம்பாடி, அதை எழுதிக் கதவில் ஒட்டிவிட்டு வீடு வந்து படுக்கையில் சாய்கிறார். 
         அடுத்து நடந்தது எல்லாம் திகில் கதைதான். செட்டியார் மனைவி கடைக்குச் ஓடிச் சென்று சாலையின் நடுவே கடும் வெயிலில் உடல் வெந்துபோக அமர்ந்து அறப்போராட்டமே நடத்த, செட்டியார் துடித்துப்போய் பணத்தை வட்டியோடு எழுத்தாளர் வீட்டுக்குக் கொண்டு போய் எழுத்தாளர் மனைவியிடம் கொடுத்து மன்னிப்புக் கேட்கிறார். கதையின் முடிவில், செட்டியார் மனைவி கேட்டுக்கொண்டதால் அவர்கள் குலம் தழைக்க எழுத்தாளர் ஒரு வெண்பா எழுதித் தருகிறார்.
         செட்டியாரின் மனைவிபோல் அறத்தின் வலிமை அறிந்தவர்கள்தாம் அதை மீறினால் ஏற்படும் கடும் விளைவுகளையும் உணர்ந்திருக்கிறர்கள். அவர்கள்தாம் அறத்தின் நூல் அறுபட்டுப்போகாமல் தொடர்ந்து அதைக் காப்பாற்றி வருகிறார்கள்.  




அசோகமித்திரனின் புலிக்கலைஞன்


வெற்றிபெற்ற மனிதர்களைத்தான் உலகம் கொண்டாடுகிறது. அதிலும் யார்மீது அதிக விளம்பர வெளிச்சம் விழுகிறதோ அவர்கள் நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். அவர்களின் உண்மையான திறமைகள் ஊடகங்களின் பார்வையில் பலமடங்காகக் காட்டப்படுகின்றன. திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காமல் சமூகத்தின் பார்வையில் நிராகரிக்கப்படும் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேதனைகளைத் தமக்குள்ளாக மறைத்துக்கொண்டு ஒதுங்கி வாழ்கிறார்கள். அவர்களின் மனக்குமுறலும் சோகமும் வெளியே தெரிவதில்லை. அவர்களில் ஒருவரை இச்சிறுகதையில் நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் அசோகமித்திரன்.

டைகர் ஃபைட் காதர் என்று அழைக்கப்படும் காதர், புலிவேஷம் போட்டுப் புலிச்சண்டை செய்வதில்   திறமைசாலி.  சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி ஒரு சினிமா கம்பெனிக்குப் போகிறான். வாய்ப்பில்லை என்று சொல்லி மறுக்கிறார்கள். ''நான் ரொம்ப நல்லா டைகர் பயிட் பண்ணுவேங்க. நிஜப்புலி மாதிரியே இருக்கும்'' என்று சொல்லி துணிப்பையிலிருந்து புலித்தலையை எடுத்துத் தலையில் மாட்டிக்கொண்டு நிஜப் புலிபோல் உறுமுகிறான். நான்கு கால் பாய்ச்சலில் அங்கிருந்த நாற்காலி மீது பாய்கிறான். அதிலிருந்து அருகில் மேசை மீது தாவுகிறான். அவன் உடல்மொழி கண்டு சுற்றியுள்ளவர்கள் அதிர்ந்து போகிறார்கள்.

உடனே,  நான்கு கால்களையும் வைத்து ஆளுயரத்திற்கும் மேல் எகிறி, அவர்கள் தலைக்கு மேல் சுவர் விளிம்பில் ஒரு கணம் தன்னைப் பொருத்திக் கொள்கிறான். பிறகு கைகளால் வெண்டிலேட்டர் கம்பியைப் பிடித்துக் கொண்டு மீண்டும் புலிபோல உறுமுகிறான். மின்விசிறி உயரத்துக்குப் பாய்ந்து அங்கிருந்து அப்படியே நாற்காலி மீது தாவித் தரையில் குதிக்கிறான். உடல் தளர்ந்து பழைய காதராகி எழுந்து கொள்கிறான். வீட்டு நிலையைச் சொல்லி மீண்டும் வாய்ப்புக் கேட்டு அழுகிறான்.

அங்குள்ளவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சினிமாவில் வாய்ப்பிருந்தால் சொல்வதாக அவனின் முகவரியை  வாங்கிக்கொண்டு கையில் இரண்டு ரூபாய் தந்து கெண்டீனில் சாப்பிட்டுப் போகும்படி அனுப்பி வைக்கிறார்கள். இரு வாரங்கள் கழித்து மீண்டும் கதை இலாகா கூடியபோது, கதாநாயகன் புலி வேஷமணிந்து எதிரிக் கோட்டைக்குள் நுழைவதாகப் படமெடுக்கலாம் என்று முடிவாகிக் காதருக்குக் கடிதம் போட, அந்தக் கடிதம் திரும்பி வருகிறது. அந்தப் புலிக்கலைஞன் எங்கே போனான்? என்ன ஆனான்? என்ற கேள்விகள் வாசகர் மனங்களில் எழுவதைத் தவிர்க்க முடியாது. புறக்கணிக்கப்படும் மனிதர்களில் ஒருவனாக நம் நினைவில் நிற்கிறான் டைகர் ஃபைட் காதர்’.






ஜி.நாகராஜனின் ஆண்மை

பெண்களின் வாழ்வு பெரும்பாலும் தங்கள் குடும்பத்திற்காக அவர்கள் விரும்பி ஏற்கும் தியாகங்களால் ஆனது. ஆண்கள் நிறைந்த உலகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அவர்கள் இழிவாக நடத்தப்படும் கொடுமையை எதிர்கொண்டு அதிலிருந்து மீளும் வழியறியாமல் தவிக்கின்றனர். அப்படியொரு இழிநிலைக்குத் தள்ளப்பட்ட பெண்ணின் கையறுநிலையை இச்சிறுகதையில் ஜி.நாகராஜன் நமக்குச் சொல்கிறார்.
இது பாலியல் தொழில் புரியும் பெண்ணைப் பற்றிய கதை. அவள் தன் அப்பா, தம்பியோடு பேருந்து நிலையத்தில் வந்து நின்றுகொண்டு யாருமறியாமல் ஆள் பிடிக்கிறாள். அப்பொழுது அவளிடம் பணத்தைக் கொடுத்து இன்பம் பெறுவதற்காக இளைஞன் ஒருவன் வருகிறான். படுக்கை அறையில் தனியாக இருக்கும்பொழுது அவன் மனத்திற்குள் ஒரு சந்தேகம் எழுகிறது. அவள் அந்தத் தொழில் செய்ய ஏன் அவள் அப்பாவும் தம்பியுமே உதவி செய்கிறார்கள்? கேட்கிறான்.
         அவள் தன் நிலையை அவனுக்கு விளக்குகிறாள். அப்பா நடத்திய தொழிலில் பெரும் நட்டம் ஏற்பட்டு சொத்துகளை இழந்துவிட்டார். அந்த இழப்பை அம்மாவால் ஏற்க முடியாமல் அவருக்கு புத்தி பேதலித்து நிலைமை மோசமாகி விட்டது.  அம்மாவைக் குணப்படுத்த அப்பா எதையும் செய்யத் துணிந்து விட்டார். மாமாவின் உதவியோடுதான் குடும்பத்தில் செலவை ஓரளவுக்குச் சமாளிக்க முடிகிறது. ஆனாலும், நிலை மோசமானதால் தான் இந்தத் தொழிலுக்கு வந்ததாக கூறுகிறாள். மாமாவுக்குத் தெரிந்தால் விஷம் கொடுத்துக் கொன்று விடுவார் என்கிறாள்.
         குடும்பச் சுமையின் காரணமாக ஒரு பெண் பாலியல் தொழிலிலுக்கு வருவதும் அதற்கு அவள் அப்பாவே மகளைக் கூட்டிக் கொடுப்பதும் இளைஞனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஏற்க முடியாமல் அவளிடம் பணத்தைக் கொடுத்துவிட்டுப் புறப்படுகிறான். ஏன் தன்னோடு உறவுகொள்ளாமல் போகிறான் என அவள் கேட்க, தான் ஒரு பேடி, ஆண்மை இல்லாதவன் என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேறுகிறான். 
         அவள் கதையைக் கேட்கும் இளைஞனோடு கதையை வாசிக்கும் நாமும் அதிர்ந்துபோக கதை முடிகிறது. துயரம் தோய்ந்த முகத்தோடு நிற்கும் அவள் எங்கெங்கோ மோசமாக நடத்தப்படும் பெண்களின் நகலாக நம் கண்முன்னே தெரிகிறாள்.





சுஜாதாவின்  நகரம்

வாழ்வின் வசதிகளும் வாய்ப்புகளும் ஏழைகளுக்கு அந்நியமாகி விடுவதே எங்கும் பொதுநியதியாகி விடுகிறது. மருத்துவத்துறையில் நோய்களுக்கு எத்தனையோ மருந்துகளும் வசதிகளும் வந்து விட்டாலும் அவை பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்பது கசப்பான

உண்மையாகும். முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு ஏழைகள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் புறக்கணிப்பையும் இச்சிறுகதையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் சுஜாதா.

 “உடனே மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு போ” என மருத்துவர் பயங்காட்டியதால் காய்ச்சலால் அவதிப்படும் தன் மகள் பாப்பாத்தியை அழைத்துக்கொண்டு கிராமத்திலிருந்து மதுரை அரசுப் பொது மருத்துவமனைக்கு வருகிறாள் வள்ளியம்மை. அங்கே, பாப்பாத்தியை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து மருத்துவ மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார் பெரிய டாக்டர். பிறகு, அவளை மருத்துவமனையில் சேர்க்கும்படி சொல்லிவிட்டுப் போகிறார்.
வள்ளியம்மைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் ஓர் ஆளைப் பார் என அங்குமிங்கும் அலைய வைக்கிறார்கள். பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் தனியே இருக்க, கையில் சீட்டை வைத்துக்கொண்டு வள்ளியம்மை தவிக்கிறாள். எல்லாத் திசைகளிலும் பலர் நடந்து கொண்டு இருந்தார்கள். அவர்களை நிறுத்திக் கேட்க அவளுக்குப்  பயமாக இருந்தது. என்ன கேட்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை. வெளி நோயாளிக்கான நேரம் முடிந்து நாளை காலை வாருங்கள் எனக் கதவை மூடிவிடுகிறார்கள். தனியே விட்ட தன் மகளைத் தேடிப்போய் வாரி அணைத்துக்கொண்டு தனியே பெஞ்சில் போய் உட்கார்ந்து  கொண்டு  அழுகிறாள்.
         நோயாளிகளைப் பார்த்துவிட்டு வரும் பெரிய டாக்டர், காலையில் பார்த்த கிராமத்துப் பெண் எங்கே என்று விசாரிக்கிறார். நாளை வரச்சொன்ன தகவல் கிடைக்க,நாளைக்கு காலை ஏழரை மணியா அதுக்குள்ள அந்த பொண்ணு செத்துப் போயிடும்யா என மருத்துவரை விரட்டுகிறார்.
வள்ளியம்மாளுக்கு மறுநாள் காலை ஏழரை மணி வரை என்ன செய்ய போகிறோம் என்பது தெரியவில்லை. அவளுக்கு ஆஸ்பத்திரியின் சூழ்நிலை மிகவும் அச்சம் தந்தது. அவர்கள் தன்னைப் பெண்ணுடன் இருக்க அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை. வள்ளியம்மாள் யோசித்தாள். தன் மகள் பாப்பாத்தியை அள்ளி அணைத்துக் கொண்டு மார்பின் மேல் சாய்த்துக் கொண்டு, தலை தோளில் சாய, கைகால்கள் தொங்க, ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தாள். மஞ்சள் நிற சைக்கிள் ரிக்சாவில் ஏறிக் கொண்டாள். அவனை பஸ் ஸ்டாண்டுக்குப் போகச் சொன்னாள். ஊருக்குப் போய் மந்திரித்து போட்டால் குணமாகி விடுவாள் என்று நினைத்தாள். சைக்கிள் ரிக்சா  பேருந்து  நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது என்ற வாக்கியத்தோடு கதை முடிகிறது.
தன் மகளுக்கு மருத்துவம் கிடைக்காமல் தவிக்கும் வள்ளியம்மையின் மனநிலை இக்கதையை வாசிக்கும் யாரையும் கலங்கச் செய்யும். மருத்துவத்துறையின் அதிநவீன கருவிகளையும் கண்டுபிடிப்புகளையும் நோக்கி ஒரு கேலிக்குரல் எழுப்புகிறார் சுஜாதா.
மேற்குறிப்பிட்ட ஐந்து கதைகளிலும் ஒலிக்கும் அறத்தின் குரல்களை உங்களால் கேட்க முடிகிறதா? இலக்கியம் வாழ்வில் கண்ணாடி மட்டுமல்ல. அதன் விதை விழும் மனமெங்கும் அறப் பயிர்கள் செழித்து வளரத்தொடங்குகின்றன.