Wednesday, April 15, 2009

நான் கடவுள் - சில மனப்பதிவுகள்நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்த "ஏழாம் உலகம்" நாவல் என் வாசிப்பனுபவத்தில் முற்றிலும் வேறுபட்டது. எனக்கு காய்ச்சல் உச்சத்தை அடைந்திருந்த போது நான் அந்நாவலை முடித்திருந்தேன். என் தூக்கத்தையும், சாப்பாட்டையும், அன்றாட வாழ்தலையும் அந்த உருப்படிகள் வன்மத்துடன் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். என் நினைவைத் திசைதிருப்ப எடுத்த முயற்சிகளில் நான் தோற்றுக் கொண்டிருந்தேன். என் சௌகர்ய வாழ்வு எனக்கே குமட்டத் தொடங்கின நாட்களவை.

ஏழாம் உலகத்தின் திரை வடிவம்தான்"நான் கடவுள்" என நண்பர்களால் சொல்லப்பட்டபோது ஒரு பயம் தொற்றிக் கொண்டது. புத்தகத்திலிருந்து திரைக்கு கொண்டு செல்பவர்களின், அக்கறையற்றதனமும், சினிமா ரசிகர்களை சாக்கு சொல்கிற அவர்கள் செய்யும் அதிகபட்ச சிதைத்தலின் மீதான பயம் அது.

அதிகம் பேசாத, அதிகம் வாசிக்காத, அதிகம் வியக்காத, எந்த செதுக்கல்களும், அழகூட்டல்களுமற்ற தன் முந்தைய இரு படங்கள் மூலம் ஒரு "ரா"வான கலைஞனாக என்னுள் பதிவாகியிருந்த பாலாவின் கைகளில் இப்படைப்பு ஒப்படைப்பில் என் நம்பிக்கை உட்கார்ந்திருந்தது.

ஏழாம் உலகத்தின் உருப்படிகள் அப்படியே திரையில் வாழ்கிறார்கள். எழுத்தில் இருந்த அதன் உச்சபட்ச குரூரம் தமிழ்த்திரை தாங்காதென்பதால் காட்சிப்படுத்தலில் தவிர்க்கப்பட்டிருப்பது ஒரு நல்ல திரைப்பட இயக்குநருக்கே சாத்தியம்.

நம் தெருக்களில், கோயில் வாசல்களில், திருவிழாக்களின் நெரிசல்களில், கடைவீதிகளில், பேருந்து நிலையங்களில் நம்மிடம் கையேந்தும் குரூபிகள், ஊனமுற்றவர்கள், குருடிகள், உடல் மற்றும் மனம் சிதைந்த மனிதர்கள், சாமியார்கள் இவர்கள் மீதான இந்த சௌகர்ய மனிதர்களின் அவதானிப்பென்ன? இவர்கள் சுண்டியெறியும் எட்டணாவும், நாலணாவும் எங்கே போகிறது? அவர்களின் வசிப்பிடம் எது? அவர்களின் காலைக்கடன், குளியல், உடலுறவு இவைகளின் நிகழ்விடம் எது? வெறும் துக்கத்திற்கும், கொடுமைக்கும், சாவுக்கும் மட்டும் தங்களை ஒப்புக் கொடுத்தவர்களா அவர்கள்? அவர்களின் உலகத்துக் கிண்டல்கள், பகடிகள், பாடல்கள், பொறாமைகள், கொண்டாட்டங்கள், பொங்கிப்பெருகும் மனிதப் பேரன்பு இவைகளை நினைத்துப் பார்க்கவும் முடியாமல் ஓடிக்கொண்டிருக்கும் "சௌகர்ய மனிதனே"ஒரு நிமிடம் உன் புறக்கடைக் கதவைத் திற. முகத்திலடிக்கும் முடைநாற்றத்தைப் பழகிக்கொண்டு, உன் பார்வையால் ஊடுறுவிப் பார். உனக்கு இந்த உருப்படிகளும் மனிதர்கள்தான் என்ற உண்மை எரியும் நெருப்பின் சரீரத் தொடுதல்போலச் சுடும்.

இக்கூட்டத்திலிருந்து ஏதோவொரு காரணத்திற்காக பிடுங்கப்படும் ஒரு குழந்தையை, ஒரு கிழவியை, ஒரு குருடியை, தடுக்கமுடியாமல் போன கையாலாகததனத்திற்கான அந்த மொத்தக் கூட்டத்தின் துடிப்பும், பிற மனிதர்கள் மீதான அக்கறையற்றுப்போன நம் நவீன வாழ்வின் மீதான காறித்துப்பல்கள்.

பாலாவின் முதல் இரண்டு படங்களுமே என்னை வசீகரித்ததில்லை. எந்த தீர்க்கமான பார்வையும், தீர்மானமுமின்றி எடுக்கப்படும் அவர் படங்களில் நாம் பார்த்தறியாத குரூரமும், வன்மமும் மிக்க மனிதர்கள் வந்து போகிறார்கள் என்பது மட்டுமே புதிதாய் இருந்தது. மானுடவாழ்வின் அழகான பதிவுகள் இம்மனிதனின் பார்வைக்கு படவே இல்லையோ என்ற என் சந்தேகத்தை பிதாமகனில், விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா, கருணாஸ் எல்லோரும் சோர்ந்து பங்கெடுக்கும் ஒரு பாடலில் விக்ரமையும், சங்கீதாவையும் ஒப்பிட்டு சூர்யாவின் கண்சிமிட்டலுக்கு சங்கீதா படும் ஒரு வினாடி வெட்கத்தில் தீர்த்து வைத்தவர் பாலா.

திரைப்படமாக்கலுக்காக அவர் மெனக்கெட்டிருக்கும் நாலு வருட உழைப்பேறிய வடிவமே நமக்கு பார்க்கக் கிடைக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவும், கிருஷ்ணமூர்த்தியின் கற்பனையும், இளையராஜாவின் அடக்கி வாசித்தலும், இடத்தேர்வும் - ஜெயமோகன், பாலா என்ற இரு பெரும் கலைஞர்களின் கூட்டுழைப்பும் நம்மை நாம் அறிந்திராத வேறொரு உலகத்திற்கு இட்டு செல்கின்றன என்ற உண்மையோடு, தமிழ்சினிமா போட்டு வைத்திருக்கிற கண்ணுக்குத் தெரியாத இலட்சுமணனின் கோட்டை இப்படமும் தாண்டவிடவில்லை என்ற உண்மையையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

ஆர்யாவின் பாத்திரப்படைப்பே இத்திரைப்படத்தோடு சம்பந்தமில்லாத ஒன்று. காசியிலிருந்து அவனுடைய தமிழ்நாட்டின் வருகையின் நோக்கமே ரொம்ப பலவீனமானது. அவனுடன் அவன் தாய் நடத்தும் உரையாடல்கள் பெரும் சலிப்பை உண்டாக்குபவை. அவன் அம்மாவின் அழைப்பினை ஏற்று அவனை வீட்டுக்குப் போகச் சொல்லி பூஜா நடத்தும் இறைந்த மன்றாடல் அதிகமும் செயற்கைத் தன்மை வாய்ந்தது. அந்த மலைக்கோவில் மீது ஏறி, இறங்கும் கால்களுக்கு மேல் இதைவிட உருக்கமான உரையாடல்கள் நிறைந்திருக்கும் அதிலெல்லாம் நுழையாத இக்குருட்டுப்பிச்சைக்காரி இவளிடம் ஒரு பக்க வசனம் பேசி அடிவாங்குவது அபத்தம்.

தம்பித்துப்போகும் பூஜா தனியாளாக ஒரு மாதாக்கோவிலுக்கு எதிரில் ஒரு கன்னியாஸ்திரி முன்னால் உட்கார்ந்திருப்பதும் அவள் போதிப்பதுமான காட்சி முடிந்து, பிறிதொரு காட்சியில் அவள் தன் பழைய வசிப்பிடத்திலேயே, கிருஸ்துவ வசனங்களை பேசுவது என்பதெல்லாம் படக்கோர்ப்பின் அக்கரையின்மையைத் தெளிவுபடுத்துகிறது.

பாலாவுக்கு பழைய எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை ரெக்கார்டரில் போட்டு ஆடவைப்பதில் ஒரு அலாதி சுகமிருப்பது அவருடைய பிதாமகனிலும், இப்படத்திலும் அது தொடர்ந்தாலும் அக்காட்சிகளில் நாமும் லயிக்க முடிகிறது. காவல் நிலைய கொண்டாட்டம் அறுந்து, சற்றுமுன் வரை தன் நெகிழ்வூட்டும் குரலால் நம்மை ஆட்கொண்ட நம் பார்வையற்ற ஸ்நேகிதி, ஒரே விநாடியில் ஒரு டெம்போவில் உருப்படியாக்கி ஏற்றப்படும்போது பதைக்கும் மனதுடன் கொஞ்ச தூரம் டெம்போ பின்னால் கண்ணில் இருந்து தூசியை தட்டிக் கொண்டு நாமும் ஓடி, எதுவும் செய்யமுடியாதவர்களாகத் திரும்புகிறோம்.

இப்படத்தின் நாயகன் ஆர்யா இல்லை. தாண்டவன்தான். அவன் முகத்தில் உறைந்திருக்கும் குரூரம், புன்னகையே மரணம் போல் நிகழ்வதும், தூக்கிக்கட்டிய பச்சை லுங்கியும், தன் உருப்படிகளினூடே அமைக்கப்பட்ட சாமிப்படங்களுக்கு தீபம் ஏற்றி கும்பிடுவதும் குற்ற உணர்வை குறைந்து கொள்ள பயந்து

கடந்த நான்காண்டுகளாக ஆர்யா என்ற நடிகனின் இப்படப்பங்கு குறித்து ஊடகங்கள் நம் மீது ஏற்றியிருக்கும் பிம்பம், அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் காஸ்ட்யூம், மூக்குத்தி போடப்பட்டிருக்கும் வெள்ளி வளையம், ஜடாமுடி, அரேபியக் குதிரையின் கண்கள், கஞ்சா புகைக்க அவன் செய்யும் முன்னேற்பாடுகள், இவைகள் எல்லாமும் சேர்ந்து நம்முள் ஏற்படுத்தும் அதிர்வுகளைவிட, தாண்டவனின் அம்மண்டபத்தை நோக்கிய வேக நடை ஒன்றே பல மடங்குகளை கடக்கிறது.

நீதி மன்றக் காட்சியில், இன்ஸ்பெக்டரின் பல்டியும், ஆர்யாவின் விடுவிப்பும் யதார்த்ததிற்கு வெகு தொலைவில் நிற்பவை.

கேரள நாயர் முதலாளியாவது, அக்குருடியின் கடத்தலுக்கான நேரடி முயற்சியில் ஆர்யாவால் குற்றுயிராக்கப்பட்டுத் தொலைந்து போகிறான்.

தாண்டவனின் உலகம் அவன் அறியாதது. அவனின் குரூரமும், ஈவிரக்கமின்றி காசுக்குச் சோரம்போய், எதையும், எவரையும் பலியிடத்துணியும் அவனின் செய்கைகள் மற்ற பிச்சைக்காரர்களின் வழியாகக்கூட ஆர்யா அறியாதது. அப்படிப்பட்ட ஒருவனோடு அத்தனை குரூரமான மோதலுக்குப்பிறகு அவன் பிணம் ஒரு சுடுபாறையின் மீது ரத்தத் தொய்தலுக்கிடையே கிடப்பது நமக்கு சம்மதமே. "நானே பிரம்மா நானே கடவுள்" என சமஸ்கிருதத்தில் சதா உச்சரிக்கும் அச்சாமி?

கெட்டவர்களைப் பார்த்தவுடன் அறியும் ஆற்றல் அவனுக்கு உண்டென்றால், ஐந்து நாட்கள் அவனுடனே சுற்றித்திரியும் அந்த இன்ஸ்பெக்டர் மீது அதில் ஒரு துளி வன்மமும் வெளிப்படாதது ஏன்?

ஏஜண்ட் முருகன், ஒரு பின்னிரவு போதையில் தன் உருப்படிகளிடம் நிகழ்த்தும் உரையாடலும், அதனூடே மனப்பிறழ்வுற்ற ஒரு குழந்தைக்குத் தன்னிடமிருந்து ஒரு குருவி பிஸ்கெட்டை எடுத்துத் தந்து அக்குழந்தையை தன் இடுப்பில் எடுத்து வைத்து உருகுவதும் படைப்பின் உச்சம்.

வேறுமாதிரியான கதை இருந்தும், தமிழ்த்திரை இதுவரை பார்த்தறியாத மனிதர்கள் நிறம்பிய காட்சியமைப்பிருந்தும், ஜெயமோகன், கிருஷ்ணமூர்த்தி , ஆர்தர் வில்சன் ஆகிய ஆளுமைகளின் கண்ணுக்குத் தெரியாத லட்சுமணன் போட்ட மாயக்கோட்டைத் தாண்டுவதற்காக வந்து அதன் விளிம்பிலேயே பாலா நின்றுவிட்டலும், ஆர்யா என்ற கதைக்கு சம்மந்தமில்லாத நாயகனும், பரிட்சார்ந்த முயற்சியில் பணத்தைத் தொலைத்த தயாரிப்பாளரின் நீண்ட பட்டியலும் அவர் கையைப் பிடித்திழுப்பதையும் பார்க்கமுடிகிறது.

அம்ருதா மாத இதழ் மார்ச் - 2009"
There was an error in this gadget