சுட்டெரிக்கும் அனுபவங்களின் தீச்சூளையில் உருவம் கொண்டெழும் எ. அய்யப்பன் ஏதோ ஒரு சிறுபத்திரிகையில் நினைவு படுத்த முடியாத ஒரு பக்கத்தின் மூலையில்தான் எனக்கு முதன் முதலில் அறிமுகமானார். சில உக்ரமான படைப்புகளால் நான் காய்ச்சலால் படுக்கையில் தள்ளப்பட்டிருக்கிறேன். என்னை நெட்டி தள்ளிய படைப்பாளிகளில் அய்யப்பனும் ஒருவன்.
தமிழில் விக்ரமாதித்தன், கைலாஷ்சிவன், லஷ்மிமணிவண்ணன் என்ற கவிஞர்களின் வாழ்வு முறையின் முற்றிய வடிவம்தான் அய்யப்பனின் வாழ்வு. அவரை ஒரு முறை திருவண்ணாமலைக்கு அழைக்க வேண்டுமென விரும்பி என் கேரளா நண்பர்களோடு தொடர்பு கொண்ட போது, நிகழ்ச்சி முடிந்து அவர் கேரளா திரும்ப குறைந்தது ஒரு வருடம் ஆகும். பரவாயில்லையா? என்று சிரித்த போது இந்த உற்சாக சவாலை ஏற்கவே மனம் விரும்பியது. ஆனாலும் உப்புச்சப்பற்ற என் மிடில்கிளாஸ் வாழ்வு அதற்கு இன்னும் அனுமதிக்கவில்லை.
என் சிநேகிதி கே.வி.ஜெயஸ்ரீ, அய்யப்பனின் அதே உக்ரத்தை தமிழில்தந்த கையெழுத்துபிரதியுடன் 'வம்சி' யில் உட்கார்ந்திருந்த இரவு என்னை ஒரு பிசாசின் கருணையற்ற துரத்தலோடு அலைகழித்த இரவு பதினோருமணிக்கு ச. தமிழ்செல்வனை தொலைபேசியில் அழைத்து இரண்டு, மூன்று கவிதைகளை வாசித்துக்காட்டி அவரின் நிம்மதியான பஸ் பயணத்தை குலைத்தது நினைவுக்கு வருகிறது. அல்லது அந்த பிசாசை தமிழ்ச்செல்வன் பயணம் செய்த பஸ்சில் டிக்கட் வாங்கி ஏற்றி விட்டு விட்டு நான் மௌனமானேன். சுகுமாரன் சொல்லும் தற்கொலையில் தோற்றவனின் மௌனமது. வார்த்தைகள் எத்தனை அபயாகரமானவைகள் என்பதை என் தொடர் வாசிப்பில் அய்யப்பனிடம்தான் பயந்து நடுங்கினேன். இரண்டாண்டிற்கு பிறகும் அடங்காத என் மனக் கொந்தலிப்பின் ஒரு துளி இது. இதை உங்களுக்கு மாற்றிவிட நினைக்கும் என் சுயநலமே இப்பகிர்தல்.
முதுகில் உண்டான காயம்
இதோ கிரீடம்,
நாம் கீழடங்கியிருக்கிறோம்.
எவ்விதக் கீர்த்தியுமற்ற ஒருவனால்
இதன்றி வேறொன்றும் இயலாது.
ஒரு திரி ஏற்றி வைத்துப் போகிறேன்.
வெடிமருந்து கிடங்கின் சாவியை
நான் பாதுகாக்கிறேன்.
ஒரு குதிரைகூட இல்லாத
பயணம்.
உன் சூர்யரதம்
நான் வரும்வரை
சிதையாமல் இருக்கட்டும்.
உன் ராணி
கணிகையாவாள்;
கிரீடம் பிச்சைப் பாத்திரமாகும்
என்கிறான் தீர்க்கதரிசி,
விஷம் தடவிய வாளினால்
நீ நடத்திய போராட்டத்தை நானறிவேன்.
நான்
நெருப்பிலிருந்து ஒரு பொறியை
வெடிமருந்து கிடங்கிற்குள் எறிவேன்
நீ
யுத்தபூமியில்
போராளிகளின் சாம்பலில்
செவ்விளநீர் மரங்கள் நடு.
நான் கேடயம் தவறவிட்டு
முதுகில் காயத்தோடு தோல்வியைத் தழுவியவன். - ஆனால்
எனக்கும் உண்டொரு வரலாறு.
ஊமை வம்சம்
அவள் ஊமை.
ஊமைகள்தான் தோழிகள்.
சைகை மொழியில்
ஊமையின் பேச்சுத் திறன் அதிகரிக்கிறது.
ஒரு நிசப்த முகூர்த்தத்தில்
திருமணம் நடந்தது
ஓர் ஊமை இளைஞனுடன்.
மிருகத்திற்கு
மிருக மொழி
மனிதனுக்கு
உடைந்து சிதறிய பின்னங்களின் மொழி.
இவர்களின் ஊமைக்காதலிற்கு
திருவிழா உற்சாகத்தின் மொழி
அரவணைப்புகளினூடே
வேர்வைத் துளிகள்
ஆரவாரித்துச் சிரிப்பதை
அவர்கள் கேட்டனர்.
இவர்களின் காதலின் தமனிகளில்
கலகத்தின் முழக்கம்.
விசாரணையில்
வழக்காடு மன்றம்
என்ன செய்யும்?
திருமணம் முடிந்து
மாதங்கள் ஒன்பதானது
இருவரின் வேண்டுதலும்
எங்களுக்குகொரு
ஊமைக் குழந்தை
வேண்டுமென்பதே.
பிரணய ஸ்பரிசம்
ஒரு தழுவலினூடே
தீயாகுபவள் நீ
இன்னும் கொஞ்சம்
நெருங்கி வா
உன் ஸ்பரிச மாபினியை நான்
உணர்ந்து கொள்ளும் வரை.
உள்ளங்கையைக் காட்டு
பிளவுபட்டும்
தெளிவாகவும் காணப்படும்
ரேகைகளில்
எதிர்காலத்தில்
உன்னோடு இணைந்து
நானிருப்பேனா என்று
அறிந்து கொள்ளும் வரை.
இன்று கண்ணாடி பார்க்கவில்லை
மடியில் தலைசாய்த்துக் கொள்.
உன் கண்களில் நான்
நிறையும் வரை.
இது மானின் கால்கள்
ருசித்து அறிந்து கொள்
காதலின் வேகம்
என்னவென்று அறியும் வரை.
இந்த வேர்வை முழுவதையும்
குடித்துத் தீர்
வறண்ட நாக்கு
தாகத்திற்கான ஏக்கம்
என்னவென்று அறியும்வரை
பார்
காட்டின் பசுந்தலங்களில்
முயல்கள்
மயூர நாட்டியம் காண்கிறது
கண்கள் குளிரும்வரை.
நகம் வெட்டி
அவள் கூர்நகங்கள் வளர்த்து
என்னைத் தழுவும்போது
நகங்கள் என்னைக்
காயப்படுத்தியதில்லை.
பூனைக் குட்டிக்கும்
அந்த நகங்களைப் பிடித்திருந்தது.
நகங்கள் மனதிலும் வளருமோ
என்று மட்டும் சிலசமயம் பயந்தேன்.
ஒரு பிரிவினைக் குறித்து நான் கனவு கண்டேன்
அவள் என்னைக் கைவிடுவாள் என.
சிவந்த தலைமுடி பறந்தபடி
குரோதம் அவளுடைய பார்வையின் கூடுடைத்தபோது
நகக்கூர்மை
என் கழுத்தில் அழுத்தியது.
தொண்டையில் இடறிய ஓர் அலறலுடன்
திடுக்கிட்டெழுந்தேன்
கறுத்த பயம் புலர்தலின் நீளம் கூட்டியது
விடியலில் அவள் வந்தாள்.
நான் பார்த்தது
நகங்களைத் தான்
இல்லை
நகங்களில் இரத்தமில்லை.
கைகள் என் கழுத்தில் அழுத்திய
துர்க் கனவை நினைத்து
அவள் மடியில் வீழ்ந்தேன்
இப்போது விரல்களை
என் கைகளில்
உணரும்போது
நகங்கள் இல்லாமல் போகட்டும்.
ஒரு முத்தத்திற்கு இரையாய்ப் போனது
எல்லா நகங்களும்.
வார்த்தைகள் கிடைக்காத தீவில்
மலையாளம் மூலம்
எ. அய்யப்பன்
தமிழில்
கே.வி. ஜெயஸ்ரீ
வம்சி புக்ஸ் வெளியீடு
தொடர்புக்கு : 9444867023
அன்புள்ள பவா!
ReplyDeleteவணக்கம்.
அருமையான பகிர்வு.
கவிதைகள்.... எங்கெல்லாமோ அழைத்துச் செல்கின்றன...
//திருமணம் முடிந்து
மாதங்கள் ஒன்பதானது
இருவரின் வேண்டுதலும்
எங்களுக்குகொரு
ஊமைக் குழந்தை
வேண்டுமென்பதே.//
அதிர்ந்து போனேன்
நன்றி மாதவராஜ்
ReplyDelete//நகங்கள் மனதிலும் வளருமோ
ReplyDeleteஎன்று மட்டும் சிலசமயம் பயந்தேன்//
வளரத்தான் செய்கிறது அதனால் எத்தனை காயங்கள் மனிதம் தோறும்,
அற்புதமான வரிகள்.
நன்றி திரு. பவா.
//அந்த பிசாசை தமிழ்ச்செல்வன் பயணம் செய்த பஸ்சில் டிக்கட் வாங்கி ஏற்றி விட்டு விட்டு நான் மௌனமானேன்//
ReplyDeleteஇப்போது இந்த பதிவின் வழியாக எங்களக்கு.
நல்லாவே இருங்க பவா.