Monday, February 21, 2011
இன்னுமொருக் கடிதம்
Sunday, February 20, 2011
ஒரு கடிதம்
நானும் எனது நண்பனும் ஒருமுறை கொச்சியில் நடந்த திரைப்படவிழாவில் அபர்னாசென்னின் 36chowrengi lane எனும் படத்தை பார்க்க நேர்ந்தது.... இரவுக்காட்சி...
உங்கள் விழா என்னை பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பி அழைத்து சென்றது...அன்று வீதிநாடகம் மற்றும் தெருக்கூத்தின் மீது தீராத மோகம் கொண்டிருந்த காலம்...திரு புரிசை கண்ணப்பதம்பிரான் வீட்டில் தங்கியிருந்து அவர்களுடன் பயணப்பட்டு நேர்த்தியான அவர்களது கலை வடிவத்தில் கரைந்து போனதும்..கொட்டிவாக்கத்தில் திரு ந.முத்துசாமியுடன் இருந்த நாட்களும் கண்முன்னால் நிழலாடியது....
விழா முடிந்த அவ்விரவுப்பனியில் உணவருந்தியதும் விடை பெறும்போது நான் கை குலுக்கிய பின் என்னை அன்போடு மெல்ல அணைத்தீர்கள்...
உங்கள் பணியில் இருக்கும் எளிமை, எழுத்திலும் இருக்கிறது என்பதை உங்கள் புத்தகங்களிருந்து அறிந்தேன்... மேற்கொண்டு என்ன எழுதுவது என்றறியாமல்...
Tuesday, February 15, 2011
வம்சி புக்ஸ் இரண்டு நூல்கள் (பவா செல்லத்துரை & ஷைலஜா) வெளியீட்டு விழா (12-02-2011)
Wednesday, February 9, 2011
Monday, February 7, 2011
19.டி.எம்.சாரோனிலிருந்து...
வலதுபக்கக் குமிழைத் திருகினால் சிவப்புக்கம்பியில் ஸ்டேஷன்களைத்தேடி நகரும்.
அப்பா அவருக்கான செய்திகள் மட்டும் கேட்பதற்காகச் சென்னை-1 நிலையத்தின் எழுநூற்றிச் சொச்ச எண் வரிசையில் அந்தச் சிவப்புமுள் இருக்குமாறு வைத்துவிட்டு, உள்ளே அதை திருப்பும் கயிறை அறுத்துவிட்டிருந்தார்.
ரேடியோ கேட்கவேண்டுமானால் சென்னை ஒன்று அலைவரிசை மட்டும்தான். விவிதபாரதி, சிலோன் எல்லாம் கேட்க முடியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.02 க்கு வரும் நேயர் விருப்பம் மட்டும் கேட்க முடியும். ஆனால் அந்த நேரத்தில் அப்பா என்னைக் கடைக்கு வரச்சொல்லிவிடுவார்.
அந்த நாட்களில் எனக்கு ஹிட்லர், முசோலினி, இடி அமீன் எல்லோரையும் விட மிகக் கொடூரமானவர் அப்பாதான்.
அவர் என்மீது கட்டுப்பாடுகளை இறுக்க இறுக்க அதை எதிர்க்கிற , மீறிச் செயல்படுகிற பிடிவாதம் அந்த வயதுக்கான குணமாக இருந்தது. 83 ஜூன் மாதத்தில் “பன்னீர் புஷ்பங்கள்” வெளியாகியிருந்தது. என் உன்னதமான வாழ்க்கைப் பருவத்தை வர்ணமயமாக மாற்றி, என் வாழ்நாளில் நான் அடைந்த அதிகபட்ச சந்தோஷத் தருணங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்த இளையராஜாதான் அந்தப்படத்திற்கு இசை.
வீட்டில் ரேடியோ முடமாகி இருக்கிறது. எதிர்வீட்டு வானொலியில் “அடுத்தப் பாடல் இடம்பெற்ற படம் பன்னீர் புஷ்பங்கள், பாடுவது எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி. பாடல் கங்கை அமரன், இசை இளையராஜா என்கிறது. எந்தப்படத்தின் பாடல்களையும் அதுவரை நான் கேட்டிருக்கவில்லை.
எதிர்வீட்டிலிருந்து கேட்கும் பாடலுக்காகக் காத்துக்கொண்டு வாசற்படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் என் தொடைகளுக்குள் மின்சாரம் போல ஒரு அதிர்வு. வயிற்றுக்குள் திடீரென தசைகள் சுருங்கி என் செவிகள்
தீட்டப்பட மெதுவாக அந்தப்பாடலின் துவக்க இசை கேட்கத் தொடங்குகிறது. அந்தக் கித்தார் பின்னல்கள் என்னை அடைந்த அந்தக் கணத்திலேயே ஒரு மகத்தான சங்கீதத்தைக் கேட்கப்போகிறோம் என்று உள்ளுணர்வு அறிவித்துவிடுகிறது. பதற்றம் அதிகரித்து ஒரு தெய்வ தரிசனத்தின் முந்தைய வினாடிபோல என் அக இயக்கம் ஸ்தம்பிக்கிறது.
இரண்டாவாது பாராவின் முதல் வரியைக் கடக்க முடியவில்லை. கண்கள் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கம் திரும்பிக் கொள்கிறது. கட்டுரையில் அதிர்ச்சிகரமாக எதுவும் ஆரம்பித்திருக்கவில்லை.உண்மையில் எதுவுமே தொடங்கியிருக்கவில்லை.
கிணறு வெட்டப்போகிறார்கள். பவாவின் நிலத்தில் கிணறு வெட்டுவதைப் பார்க்க, அவர் அப்பாவோடு சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து போவதுதான் முதல் பாராவில் நடக்கிறது. ஆனால் வரப்போகிற வரிகளை எதிர்கொள்ள தைரியமின்றி கைகள் புத்தகத்தை மூடுகின்றன. நிலைகொள்ள முடியாமல் மீண்டும் திறக்கிற பக்கத்தில் விசிறி சாமியார் ராம்சுரத்குமார்
அனுபவங்களின் சில வரிகளைக் கண்கள் மேய்கின்றன. மனம் பதியாமல் புத்தகம் மீண்டும் மூடிக்கொள்கிறது.
மீண்டும் திறக்கப்படுகிறது. கண்கள் குவியும் வரிகளில் மீண்டும் ராம்சுரத்குமார், வரிகள் கலைய பாலகுமாரன் பல்செட்டை கழற்றி எடுத்துவிட்டு பவாவிடம் பேசியவை ஏற்கனவே நான் அறிந்தவை.
மன அதிர்வுகள் மட்டுப்பட்டு மீண்டும் 89ம் பக்கத்தை விரல்கள் பிரிக்கின்றன. இம்முறை சுயக்கட்டுப்பாடின்றி வரிகள் பார்வையில் ஓடத்தொடங்கி விடுகின்றன. நான் என்பது என்னிலிருந்து விலகி விட்டிருப்பது வெகுதூரத்தில் உறைக்கிறது. இந்த அனுபவம் வாசிப்பில் கிடைப்பது மிக அபூர்வத் தருணங்களில்தான் என்று புத்தி முணுமுணுப்பது என்னிலிருந்து விலகி வாசிக்கிற மற்றொரு “நானுக்கு” கேட்கிறதா தெரியவில்லை. வரிகளில் எழுத்தாளன் எழுதாத சப்தங்கள் காதுகளுக்குள் கேட்கின்றன.
கிணற்றிலிருந்து வெட்டி வெளியே விழுகிற மொரம்பில் ஈரம் தெரிய அப்பாவும் பவாவும் கிணற்றுக்குள் இறங்கும்போது வயிறு சுருங்கிக்கொள்கிறது. கிணற்றுக்குள் இருந்து மேலே பார்க்கும் வரிகளில் “ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” ஹென்றியைப் புத்தி நினைவுக்கு கொண்டுவருகிறது. “சனி மூலையில வாத்தியார” என்று கிணறு வெட்டுபவர் சொன்னதும் அதை பவா எழுதாவிட்டாலும் அந்த வார்த்தை ‘ஹோ’வென எதிரொலிக்கிறது. ஊற்றுத்தண்ணீர் மேலிருக்கும் பாறை நெம்பித் தள்ளப்பட படிக்கிற முகத்தில் நீர் தெளிக்கிறது.
அப்பா
அப்பா
அப்பா
என் அப்பாவோடு நான் கிணற்றில் இறங்கியதில்லை. கட்சி வேலைகளில் ஈடுபட்டதில்லை. அப்பாவும் பிள்ளையும் எதிரெதிர் கட்சி ஏஜெண்டுகளாக பூத்தில் உட்கார்ந்ததில்லை. ஆனால் சுய அனுபவ ஒப்பீட்டில் நெகிழ்கிற விஷயம் அல்ல இது. ஒரு ‘யுனிவர்சல்’ அப்பா. ஒரு ‘எடர்னல்’ மகன். இதைத் தமிழில் எப்படிச் சொல்ல?. வார்த்தைகள் மனதிலிருந்து மறைத்து விட்டிருந்தன.
தெருவெல்லாம் துரத்தித் துரத்தி அடிக்கிற அப்பாவை பவாவின் கதைகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சண்டையில் அப்பாவின் பெட்டியைத் தெருவில் வீசியெறிகிற அந்த வரிகள் ஏற்படுத்தும் அதிர்வு அச்சமூட்டுவதாக இருக்கிறது. முதல் வாசிப்பில் இந்த வரிகள் அடித்த வலி ஒரு ஊமை வலியாக ஆழத்தில் திண்ணென்று விழுந்திருக்கிறது. வெளியே வலி இன்னமும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
இந்தக் கட்டுரை நிச்சயமாக இன்னும் பல முறை படிக்கப்படலாம். எப்பொழுது படித்தாலும் இந்த வரியை என்னால் நிச்சயம் தாண்ட முடியப் போவதில்லை. இந்த அபாரமான கட்டுரையின் மையப்புள்ளி இந்த சம்பவத்தின் அடுக்குகளுக்குள் ஆழத்தில் பொதிந்திருப்பது தூரத்து நட்சத்திர மினுக்கம் போல தெரிகிறது. கண்களை ரொம்ப சுருக்கிப் பார்க்கும்போது அது நட்சத்திர மினுக்கமா அல்லது கண்ணின் ஈரப் பிசுபிசுப்பில் உண்டான ஜொலிப்பா என்பதை அறுதியிட முடியாமலிருக்கிறது.
இப்போதைக்கு இந்த ஊமைவலி மட்டும் அலைவட்டங்கள் போட்டபடிதான் இருக்கின்றன. சீக்கிரம் அலைகள் கரையை உடைத்து மேலேறிவிடலாம். அதற்குமுன் இந்தப்பக்கத்தைக் கண்கானாமல் ஒளித்துவைத்து விட வேண்டும்.
ஒரு புத்தகம் பயமுறுத்துமா? பயப்படுத்துகிற புத்தகம் என்ன புத்தகம்? பதறவைக்கும் வரிகளை மீண்டும் தேடியெடுத்து வாசிக்க இயலுமா? அப்படி மீண்டும் வாசிப்பது ஒரு வித ‘மசோக்கிய’ சித்ரவதைதானா? வெற்றான நிலப்பரப்பு. அதிகம் உயரமில்லாத, ஆளரவமற்ற கோட்டாங்கல் குன்று பனியும் தூறலுமான மாலை. பாறையில் மல்லாந்து படுத்திருக்கிறார் அப்பா. வானத்தை வெறித்தபடி படுத்திருப்பவரின் கண்ணிலிருந்து நீர் வழிகிறது. பக்கத்தில் எட்டிமரத்தில் அவர் கட்டிவைத்திருக்கும் சுருக்குக் கயிறு காற்றில் லேசாக ஆடிக்கொண்டிருக்க பின்னணியில் திருவண்ணாமலைக் குன்று மங்கலான ஓவியம் போல அமைந்திருக்கிறது. எழுந்து சுருக்குக்கயிற்றில் தலையை நுழைத்துக்கொள்வதற்கான நிமிடத்திற்காக எதிர்பார்த்து அசையாமல் அவர் படுத்திருக்கும் காட்சி வரிகளிலிருந்து எழும்பிவந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது.
இன்றிரவு என்னால் தூங்க முடியப் போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் முளைக்கின்றன.
என் சுவாசத்தில் வெப்பம் மேலேறி மூச்சு கனக்கிறது. இன்னும் சில நொடிகளில் ஒரு பேரண்ட வெடிப்பு நிகழப் போகிறது என வானத்திலிருந்து கேட்கிறது. புலன்கள் தீட்டப்படுகின்றன.
சம்மந்தமேயில்லாமல் ஜன்னலுக்கு வெளியே தெருவில் அல்லது வீட்டுக் காம்பவுண்டுச் சுவரில் இப்போது நின்றிருக்கிற பூனை (அந்த சாம்பல் புள்ளி பூனையாகத்தான் இருக்கவேண்டும், என்னைப்பார்க்கிறபோது போன ஜென்மத்து ஞாபகம் வந்ததுபோல கண்ணைச் சுருக்கி, பின் உக்கிரமாக முறைக்குமே, அதே பூனையாகத்தான் இருக்கும்.) ‘ம்மியா...வ்’ எனக் காதுக்குள் கேட்கிறது. தொண்டை வரள்கிறது.
திடீரென வானவேடிக்கைகள் அந்த சாயங்கால கீழ்வானத்தில் பளிச்சிடத் தொடங்குகின்றன. வெடிச்சத்தங்கள் பல்வேறு சுருதிகளில் கிட்டத்திலும் தூரத்திலும் கேட்க, அந்தத் திருவண்ணாமலை உச்சியில் தீபம்
ஏற்றப்பட்டிருக்கிறது. தீபச்சுடரொளி பற்றிப் பிரகாசிக்க அதன் அலைக்கழிக்கும் பிழம்பில் விதிர்விதிர்த்துப் போகிறது.
எல்லாம் அடங்குகிறது. எல்லாமும். முற்றிலும்.
மூன்று நாட்களுக்கு-
அடுத்த மூன்று நாட்களுக்கு அந்த எட்டிமரக்கிளையில் அந்தக் தூக்குக்கயிறு ஆடிக்கொண்டிருக்கிறது.
அப்பாக்கள் மெதுவாக எழுந்திருக்கின்றனர்.
அப்பாக்களில் ஒருவர் கயிறை அவிழ்க்கிறார்.
ஒரு அப்பா சுருக்கிட்டுக்கொள்கிறார்.
இன்னொரு அப்பா தன்னிடமிருந்து ஒரு அப்பாவைத் தூக்குக்கயிற்றில் மாட்டித் தொங்கவிட்டு விட்டு அவர்மட்டும் தனியாக இறங்கி வருகிறார்.
மற்றொரு அப்பா தூக்குக்கயிற்றை அவிழ்க்காமல் கீழிறங்கி வருகிறார்
வேறொரு அப்பா பின்னாடியே வந்து தன்னை சுருக்கிட்டுக்கொள்கிறார்.
ஆனால் எல்லா அப்பாக்களின் மகன்களும் அப்பாக்களை வேடிக்கையே பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
மகன்களால் மரத்தை நெருங்கும் அப்பாக்களின் கையைபிடித்து நிறுத்த முடிவதில்லை.
கழுத்தை நெரிக்கும் சுருக்கைத் தளர்த்திவிட மகன்களுக்குக் கை கூடுவதில்லை.
அந்த நேரங்களில் மகன்களின் கைகள் காற்றாகத்தான் மாறிவிடுகின்றன.
மகன்களுக்கு சாட்சி சொல்கிற கண்களும், வாழ்க்கை பூராவும் குத்திக் கிளறிக் கொண்டேயிருக்கப் போகிற ஞாபகங்களும், பின்னொரு காலத்தில் எழுதியே தீர்க்க வேண்டிய விரல்களும் மட்டுமே வாய்க்கின்றன.
மகன்களின் துர்க்கனவுகள் எப்போதும் அப்பாக்களை ஒட்டியே இருப்பது ஓர் உதிர்க்க முடியாத பாரம். மகன்களின் சாபங்கள் அப்பாக்களை ஒருபோதும் தீண்டிவிட முடியாத சோகத்துக்கு அடுத்தபடி இதுவாகவே இருக்க முடியும்.
மேலும்.......