Saturday, September 10, 2011

தொடர் - 5


தன் இரண்டு ஷீக் கால்களிலும் தெறித்தக் குழந்தைகளின் ரத்தக் கறையோடு அப்போர்வீரன் அந்த வேசியின் விடுதிக் கதவைத் தட்டும்போது இரவு கிட்டத்தட்ட பத்து மணியைத் தாண்டியிருந்தது. பழக்கம்தான் எனினும் கொஞ்சம் கலக்கத்தினூடே கதவைத்திறந்து அவள் அப்போர்வீரனைப் பார்த்து இன்னும் கொஞ்சம் பதட்டமடைகிறாள்.

அவன் அவசரத்தோடும், ஆனால் ஏதோ நிறைவடைந்த பணியின்பொருட்டு ஏற்படும் ஆசுவாசத்தோடும் அவ்விடுதியின் அழுக்கடைந்த இருக்கையில் அமர்ந்து, ரத்தக்கறைபடிந்த தன் ஷீக்களைக் கழற்றிக்கொண்டே, ‘’ரொம்ப சோர்வா இருக்கு, கொஞ்சம் வெந்நீர் போடச்சொல்லு’’ என்று கிட்டத்தட்ட கட்டளையிடுகிறான்.

அவன் இருப்பு அவள் நிம்மதியை முற்றிலும் குலைக்கிறது. ஆனாலும் அவள் வெந்நீருக்கு ஏற்பாடு செய்து கொண்டே அவனிடம் பேச்சுக் கொடுக்கிறாள்.

இன்றைக்கு நீ மட்டும் எத்தனைக் குழந்தைகளை கொன்றிருப்பாய்? ”

ஒரு சூடேறிய நீண்ட பெருமூச்சுமட்டுமே பதிலாக அவனிடமிருந்து வருகிறது. நறுமணம் வீசும் பெண்கள் நிறைந்த அவ்விடுதி இக்கவிச்சியின் பொருட்டு ஒரு நிமிடம் குமட்டிக்கொள்கிறது.

எண்ணவில்லை.

ஒரு குழந்தைக்காக வேண்டி இத்தனைக் குழந்தைகள் ஏன் சாகவேண்டும்?”

அதையேதான் நானும் உன்னிடமும் ஏரோதுவிடமும் கேட்கிறேன்.

அப்போர்வீரன் தனக்குத் தானே பேசிக்கொள்வது மாதிரி முணுமுணுக்கிறான்.

ஏரோதுவிடம் கேள். நான் அவனால் ஏவப்பட்ட ஒரு கருவி மட்டுமே. ஜடம். உயிரற்ற ஜடம்.

இம்மெளனத்தைக் கலைத்து விடுதியின் மேலறையில் ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. அப்போர்வீரன் சலனமற்றுக் கிடக்க, அக்கிழட்டு வேசி ஒரு நிமிடம் துடித்துப் போகிறாள்.

சே, என் வீட்டுப்பூனைக் குட்டிகூட குழந்தைமாதிரியே அழுகிறது.

அவன் மந்தகாசமாய் ஒரு புன்னகையை உதிர்க்கிறான்.

அது குழந்தையாகவே இருக்கட்டுமே அல்லது எந்தக்குழந்தைக்காக வேண்டி இத்தனை குழந்தைகளைக் கொன்றோமோ, அக்குழந்தையாகவே இருந்தாலும் நான் அதைக்கொல்லப்போவதில்லை. ஏனெனில் என் வேலை நேரம் முடிந்துவிட்டது, நீ வெந்நீர் போடு.... எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு....

அவன் சற்றேறக்குறையப் பிதற்றினான்.

உண்மையில் அவ்விடுதியின் மாடி அறையில், ஏரோதுவின் கத்திமுனைக்குத் தப்பிப் பிழைத்த இயேசுவும், அவனை கருத்தரித்துப் பெற்ற கன்னி மரியாளும், யோசேப்பும் அந்த இருட்டறையில் பேச்சற்று அவ்விரவைக் கழிக்கிறார்கள்.

போர்வீரனின் பிதற்றல் அதிகமாகிக்கொண்டேபோகிறது. உடல் சோர்வு காமத்தைக் கழித்துக்கட்டுகிறது. விடிகிறவரை வெவ்வேறு பாத்திரங்களின் இச்சோக நாடகம் நீடிக்கிறது. அதிகாலை பனியினூடே யோசேப்பும், மரியாவும் தங்கள் கைக்குழந்தையோடு ஒரு கோவேறுக் கழுதை மீதேறி விடைபெறும்போது, அவ்வேசி, பெரும் நம்பிக்கையோடு மரியாவை நோக்கி,தன் கோரிக்கையை சமர்ப்பிக்கிறாள்.

‘’இக்குழந்தையின் ராஜ்ஜியம் வரும்போது இப்பாவியையும் இரட்சிக்கவேண்டும்.

மரியா அக்கோரிக்கையை தன் மகன் பொருட்டு பெருமிதத்தோடு ஏற்கிறாள். ஆனாலும் அவ்வேசிக்கு சொல்வதற்கு இன்னும் ஏதோ மிச்சமிருப்பது முகத்தில் தெரிகிறது.

மரியா அப்பனிப்பொழிவின் இருள் பிரியாத அதிகாலையில் இன்னும் என்ன தேவையென்று தன் கண்களால் அவளிடம் பேசுகிறாள். மொழி அவர்களின் பாதங்களுக்கருகே படுத்துக்கிடந்த கணமது.

''மறக்காமல் அப்போர்வீரனையும்''

தன் முகமெங்கும் பரவும் புதூ சந்தோஷத்தோடே மரியா தையும் அங்கீகரிக்கிறாள்.

தமிழில் முன்னூறுக்கும் குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு வெளிவந்த 'சதுரம்' சிற்றிதழில் இக்கதையைப் படித்துவிட்டு பேச்சற்று பல மணி நேரம் மெளனமாக கிடந்தேன். இப்புனைவு என்னை அலைகழித்தது. அப்போர்வீரனின் ஷீவிலிருந்த ரத்தக்கறை என் ஆன்மாவில் படிந்திருந்த்து. ஒரு குழந்தையின் ஜீவிதம் வேண்டி,அது தேவக்குழந்தையாகவே இருந்த போதிலும் ஏன் அத்தனை ஆயிரம் குழந்தைகள் மரிக்கவேண்டும்? குழந்தைகளின் இளம் சூட்டு ரத்தம் படிந்த வீட்டு தாழ்வாரங்களை எப்படி பெற்றவர்கள் கூட்டிப்பெருக்குவார்கள்? பூமியெங்கும் காற்றில் கலந்த இக்குருதியின் கவிச்சியை எம்மழை சுத்திகரிக்கும்?

என்னில் அடுக்கடுக்காய் எழும்பிக்கொண்டேயிருந்த கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தவன் உலகம் முழுவதும் அறியப்பட்ட, மலையாள எழுத்தாளார் பால் சக்காரியா என அறிந்து அவரைத்தேட ஆரம்பித்தது எனக்கான விடைகளை பெரும் பொருட்டே.

ஆனாலும் நான் அவரை கண்டடைவதற்குள் தன் பல புனைவுகளின் மூலம் என்னை முற்றிலும் ஆக்ரமித்திருந்தார்.

முதன்முதலில் கேரளாவின் போர்ட் கொச்சினில் தன் நண்பர்களுடனான பெரும் கொண்டாட்டத்துடன் அவரை சந்தித்தேன். தன் பெரும்பாலான நாட்களை அப்படி வைத்திருக்கவே விரும்பும் எழுத்தாளனாக சக்காரியாவை அன்று உணர முடிந்தது. ஆனால் கேரளாவில் நடக்கும் அரசியல்,சமூக, பொருளாதார சற்றேறக்குறைய எல்லா நிகழ்வுகளிலும் ஒரு செயற்பாட்டாளராக அவர் தொடர்ந்து எதிர் வினையாற்றுகிறார். இந்தப்புள்ளியைத்தான் தமிழ்நாட்டின் பல எழுத்தாளர்கள் தவறவிட்டவைகள் அல்லது சொந்த நலன் வேண்டி தம்மை சுருக்கிக்கொண்டவர்கள். இந்த செயற்பாடு தன் படைப்பை எவ்விதத்திலும் சிதைக்க அவர் அனுமதித்ததேயில்லை என்பதை அவரின் புனைவுகளை வாசிக்கும் ஒரு ஆரம்பகால வாசகனால் கூட அறிந்து கொள்ளமுடியும்.

சக்காரியாவின் பெரும்பாலான படைப்புகளை கே.வி.ஜெயஸ்ரீ, எம்.எஸ்,சுரா போன்றவர்களே தமிழுக்குத் தந்துள்ளார்கள். தமிழ் எழுத்தாளர்கள் அடையமுடியாத எல்லைகளை தன் பல கதைகளில் அநாவசியமாக சக்காரியா எட்டியிருக்கிறார். இர்ண்டாம் குடியேற்றம் என்ற தன் புகழ்பெற்ற கதையை சக்காரியா, ஒரு சிரியன் கிருத்துவ குடும்ப செழுமையான பின்னனியில் வளர்ந்து எம்.ஏ., ஆங்கிலஇலக்கியம் படித்த ஆனி மேத்யு என்ற அழகான இளம் பெண் ஒருத்தி, திருவனந்தபுரத்திலுள்ள பிரபல மனோதத்துவ மருத்துவர் ஒருவருக்கு எழுதும் கடிதமாகத் துவங்குகிறார்.

அந்தப் பெண்ணிற்கான பிரச்சனை பிரத்யேகமானது. பண்பாடு, மரபு,நாகரிகம் என்கிற பெயரிலெல்லாம் ஒளிந்து கொள்ளத் தெரியாத அல்லது அவைகளை மீற நினைக்கிற ஆனி மேத்யு, டாக்டருக்கு எழுதும் கடிதத்தில், என் திருமணத்திற்காக என் வீட்டில் தீவிரமாக மாப்பிள்ளைப் பார்க்கிறார்கள், மாப்பிள்ளை என்ற ஒற்றைத் தகுதியோடு எவனெவனோ என் வீட்டிற்கு வந்து, டிபன் சாப்பிட்டு காபி குடித்துவிட்டு, அவர்கள் முன் சர்வ அலங்காரத்துடன் நான் நின்று... எனக்கு குமட்டுகிறது டாக்டர். என் வாழ்வின் பெரும்பகுதியை நான் பகிர்ந்து கொள்ளப்போகிறவனோடு எனக்கான இந்த சில நிமிட அறிமுகத்தின் போதாமையை நான் உணர்கிறேன். போனவாரம் என்னைப் பெண்பார்க்க வந்தவன், அப்போதுதான் குடித்து முடித்திருந்த ஒரு சிகரெட் புகையோடு நாங்கள் பரம்பரை பரம்பரையாய் பாதுகாத்து வரும் அந்த தேக்கு மர நாற்காலியில் அவன் கால்களைநீட்டி உட்கார்ந்த விதமே எனக்குப் பிடிக்கவில்லை. பெண்பார்த்தல், மாப்பிள்ளையை உணர்தல் என்பதை இப்போதைய நடைமுறைகளுக்கும் மேலேபோய் செயல்படுத்த விரும்பினேன். என் குடும்பத்தின் முன் வைத்த என் எளிய கோரிக்கை இதுதான்.

என்னைப் பெண்பார்த்து முடித்து குடும்பத்திற்கு பிடித்திருக்கும் மாப்பிள்ளை வீட்டிற்கு நான் குறைந்தது பத்து நாட்கள் விருந்தினராக சென்று தங்கவேண்டும். அவ்வீட்டை, அவர்களின் பழக்கவழக்கங்களை நான் பருகிப் பார்க்க வேண்டும். அவர்கள் உள்ளாடைகளை சுத்தமாக வைத்திருப்பவர்களா என்பது உட்பட எனக்குத் தெரிய வேண்டும். என் பிறந்த வீட்டில் என் படுக்கையறை ஜன்னலை மூடிக்கொண்டு மிளகுக் கொடிகள் படர்ந்திருக்கும், அவர்கள் வீட்டு படுக்கையறையை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்பதுவரை எனக்குத்தெரியவேண்டும். இப்படி சில எதிர்பார்ப்புகளை என் குடும்பத்தின் முன் தாயக்கட்டைகளை உருட்டுவதுமாதிரி உருட்டிப்பார்தேன் டாக்டர்.

என் முழுக் குடும்பமும் நிம்மதி இழந்து, சூன்யமயமாகி எப்போதும் எனக்குத் தெரியாதென நினைத்து ரகசியமாகப் பேசி... என் எழுபது வயது முத்தச்சன் முதல் என்னைவிட இளையவனான தம்பிவரை இதில் அடக்கம். எல்லோருமே சமூகம் போட்டுள்ள இந்த கட்டத்துக்குள் ஓடி நின்று கொண்டார்கள் டாக்டர். இப்போது அவர்கள் எல்லோருக்கும் என் மீதான ஒட்டுமொத்த அபிப்ராயமும் ''எனக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது' என்பதுதான். நான் அப்படியா டாக்டர்? எனக்கு மனப்பிழற்வு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? நான் வாழப்போகும் வீட்டை, அதன் மனிதர்களை, அதன் சுற்றுப்புறத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முயன்றது மட்டும்தானே டாக்டர் நான் செய்த தவறு அவர்கள் பார்வையில்?

இக்கடிதம் அல்லது கதை என் தூக்கத்தை கலைத்து என்னை அலைகழித்தத்து. அனி மேத்யு என்ற அந்த அழகிய இளம் பெண்ணை நான் ஸ்நேகிதேன். வளர்ந்துவரும் நவீன பெண்கள் தவறவிட்ட அவளுக்கான இடத்தை இப்பெண் இட்டு நிரப்புகிறாள் அல்லது அவருக்கான இடத்தை ஆக்ரமிக்கிறாள் என்கிற பெருமிதம் எனக்கேற்பட்ட கணம் அது.

நான் சக்காரியவை தொடர்ந்து எழுத்துக்களால் ஸ்வீகரித்துக் கொண்டேயிருந்த நாட்கள் அவை. தொலைபேசியில் அழைத்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு திருவண்ணாமைக்கு நாங்கள் நடத்துகிற முற்றத்திற்கு வரமுடியுமா எனக் கேட்டேன். இக்கேள்வியை காப்ரியா கார்சியல் மார்க்யூஸ் முதல் ஓரான் ஃபாமூக் வரை கேட்பதற்கான தைரியத்தை எனக்கு இயக்கமும் இலக்கியமும் தந்திருந்தது.

அவர் உடன் சம்மதித்திருந்தார்.முற்ற மைதானத்தில் அன்று அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவுகூறத்தக்கது. சொந்த பெருமை பேசித்திரிபவர்களுக்கான சவுக்கடிகள் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தன.

கேரளத்திலுள்ள நாற்பது நதிகளில் ஓடும் நீரில் எட்டு சதவீதம் மட்டுமே கேரள வாழ்விற்கும் விவசாயத்திற்கும் பயன்படுகிறது. மீதி 92 சதவீத நீர் வீணடிக்கப்பட்டு வெறுமனே கடலில் கலக்கிறது. இதில் தமிழ் நாட்டில் கசியும் கொஞ்சம் நீரைப் பற்றி இப்படி கூப்பாடு போடும் மலையாளிகள், வீணாகும் 92 சதவீத நீரை எப்படி கேரள மேம்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என யோசிக்கலாம். கேரளத்தில் இப்போது நாம் பார்க்கிற கண்ணைப்பறிக்கிற நவீன வீடுகள் உண்மையில் அம்மாநிலத்தின் நாற்பது நதிகளைக் கொன்று மணலெடுத்து கட்டப்பட்டவைகள்.

ஒவ்வொரு மலையாளியும் உண்ணும் சோறும், குழம்பும் தமிழ்நாட்டிலிருந்து வருபவை மட்டுமே. கறிவேப்பிலைகூட கேரளத்தில் விளையவில்லை. எந்த மலையாளியும் நிலத்தில் வியர்வை சிந்தி பாடுபட தயாராய் இல்லை. தமிழ்நாட்டு விவசாயி தன் சொந்த உழைப்பில் தரும் பிச்சையில் வாழ்ந்துகொண்டு, இவன் அவனுக்குத் தண்ணீர்த் தர மறுக்கிறான் எனப் பேசிக் கொண்டே போகிறார்.

நான் ஒரு படைப்பாளியின் நேர்மைத் திறனில் என்னை முற்றிலும் ஒப்புவிக்கிறேன். பின் விளைவுகள் பற்றிய பிரக்ஞையற்றவனே கலைஞன் என்பதை சக்காரியா மீண்டும் மீண்டும் தன் உரையாடலால் நிரூபித்தார்.

அன்றிரவு எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அவருக்கான இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம். தன் மகள் மற்றும் பேரனோடு வந்திருந்தார். சுற்றிலும் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களுமாக சூழ்ந்திருந்தோம். விதவிதமான அசைவ உணவுகளை ஷைலஜா அடுக்கிக்கொண்டே போனாள். ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு அவைகளைக் கவனித்துக் கொண்டேயிருந்தார்.ருசி அவர் கண்களிலும் தெரிந்தது.

நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத ஒரு கணத்தில் தன் பையிலிருந்து ஒரு குவார்ட்டர் பாட்டில் விஸ்கியை எடுத்து சாப்பாட்டு மேசை மீது வைத்துவிட்டு,

'ஷைலஜா என்னை மன்னிக்கனும். உங்கள் வீட்டில் குடிக்க ஜெயகாந்தனுக்கே அனுமதி இல்லை என்பது எனக்குத்தெரியும். ஆனால் இன்று மட்டும் அதிலிருந்து எனக்கு விதிவிலக்கு வேண்டும். நினைவு தெரிந்த நாளிலிருந்து இரவு உணவு இதுவன்றி சாத்தியமானதில்லை' என்று சொல்லிக்கொண்டே அருகிலிருந்த ஒரு எவர்சில்வர் டம்ளரில் தன் தேர்ந்த கைகளால் விஸ்கியையும், தண்ணீரையும் கலந்துகொண்டார். அவர் மகள் வெட்கத்தால் முகம் சிவந்து எங்களையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.

எனக்கு ஜெயமோகன் எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது.

ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் சக்காரியாவை ஒரு இளம்பெண் நிருபர் பேட்டி எடுக்கிறாள்.

'சார் எத்தனை வயசிலிருந்து குடிக்கறீங்க?'

''அநேகமாக ஒன்றரை வயதிலிருந்து... ஒவ்வொரு கிறிஸ்மஸ் காலங்களிலும் வீட்டிலேயே சொந்தமாக ஒயின் தயாரிப்போம். எங்கள் வீட்டில் அது இன்னும் கூடுதல் விஷேஷத்தோடு நடக்கும். அப்பாவும் அம்மாவும் புளித்த ஒயினின் சொட்டுகளை என் நாக்கில் விட்டு ருசி கற்றுக்கொடுத்தார்கள்.... அப்படித் தொடர்ந்த இந்த ரத்த பந்தம் இல்லை இல்லை ஒயின் பந்தம் இன்றும் வஞ்சனையின்றி தொடர்கிறது மோளே...''

5 comments:

  1. யோசிக்க வைக்கும் அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குறைந்த அளவிலேயே வாசித்திருக்கிறேன், சக்காரியாவை. அப்படி ஒரு எழுத்தாளன் தமிழுக்குக் கிட்டவே மாட்டான் இல்லையா? தமிழ்நிலம், நிறைய வெள்ளாமைகள் (புல்லும் பதரும் கூட) கண்டு, சாரம் இழந்துவிட்டதோ? அதனால்தானோ இங்குள்ள சொல்லேர் உழவர்கள் இவ்வளவு உரத்துக் கூவித் தங்கள் விளைச்சலைத் தாமே சந்தைப் படுத்தும் நிலைமை வந்திருக்கிறது!

    நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  3. Excellent writing (yours too). Nice sharing.

    ReplyDelete
  4. ஓர் உன்னத எழுத்தாளன் பற்றிய அற்புதமான அறிமுகக் குறிப்பாக இருந்தது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பவா.

    ReplyDelete
  5. சக்காரியா ஒரு அற்புதமான எழுத்தாளர், புரட்சிகரமான அவரின் சிந்தனைகள் மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. சமரங்களின் பூமியான கேரளத்தின் எல்லா நிலை சமூக கேடுகளையும் தட்டிக்கேட்டதாலோ என்னவோ சிவப்புசட்டை காரர்கள் இவரையும் துன்புறுத்த பார்த்தார்கள். அப்போது தமிழகத்தில் அவரை ஆதரித்து சரியான குரல் எழவே இல்லை. அவரின் எல்லா எழுத்துக்களையும் தமிழில் கொண்டுவரவேண்டும். அற்புதமான பதிவு பவா.

    ReplyDelete