Tuesday, July 10, 2012

இவர்களும் இந்த நூற்றாண்டும்

-பவா செல்லதுரை பற்றி பிரபஞ்சன்



மிழரோ, இந்தியரோ, வெளிநாட்டினரோ, அவரை வழியில் நிறுத்தி, ‘கோயிலுக்குப் போற வழி எது சார்?’ என்று கேட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கணம் முதல், அந்தக் கேள்விக்கான பதிலாகத் தன்னை மாற்றி அமைத்துக் கொள்வார் அவர். கேட்டவரை, நடுத்தெருவில் நிறுத்தித் தெளிவாக வழியைச் சொல்வார். அப்போது காரைப் ஓட்டிக்கொண்டே போகும் கணேசனை நிறுத்தி, ‘கணேசாவடக்குத் தெரு வழியாத்தானே போறே. சாரைக் கொண்டு போயி கோயில் வாசலில் விட்டுட்டுப் போஎன்று சொல்லி, வழி கேட்டவர் மறுத்தாலும் அவரைக் காரில் தள்ளி அனுப்பிவிட்டு, பயணி பத்திரமாகக் கோயில் போய்ச் சேர்ந்தாரோ இல்லையோ என்று கவலைப் படுகிறவராக அவர் இருப்பார்.

அவர் பவா செல்லதுரை. ஆகவே, அவர் கதைகளும் கட்டுரைகளும் எழுதுகிறார்.



வா செல்லதுரை ஒரு வார இதழில் ( மீடியா வாய்ஸ் ) தொடர்ந்து எழுதிய 24 கட்டுரைகளின் தொகுப்பாக, எல்லா நாளும் கார்த்திகை என்றொரு புத்தகம் அண்மையில் நான் வாசிக்க நேர்ந்தது. உடன் அது பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

பவா, தான் சந்திக்க நேர்ந்த, நட்பு பூண்ட, உறவாடிய ஆளுமைகள் பலரைப்பற்றித் தன் அவதானத்தை உவகை சார்ந்த தொனியில் எழுதியிருக்கிறார். படைப்பிலக்கியம் சார்ந்தோர், சினிமாவில் கலை நோக்கமுடையவர்கள், கவிஞர்கள் என்று பலப்பல ஆளுமைகள். அந்த ஆளுமைகள், மனிதக் கவிச்சி கொண்டவர்கள் என்பதே அவர்களை இவர் எழுதுவதற்குக் காரணமாகிறது. அந்தப் புகழ் கொண்டவர்கள் தங்கள் கிரீடங்கள், புஜக் கிரீடைகள், தங்கத் தோடாக்கள் அனைத்தையும் திண்ணையில் வைத்துவிட்டே, பவாவின் நட்பு வட்டத்துக்குள் பிரவேசிக்கிறார்கள். அந்த ஆளுமைகளின் மனிதக் கவிச்சையின்பால் ஈர்க்கப்பட்டே, பவா அவர்களிடம் தன் நட்புக் கரத்தை நீட்டுகிறார். இவர் கட்டுரைகள், அக்கலைஞர்களைப் பற்றிய விமர்சனம் அன்று. ஒரே வர்ணக் குழம்பில் தங்கள் தூரிகைகளைத் தொட்டு வேறு வேறு சித்திரங்கள் வரையும் நண்பர்களுடன் நட்புணர்வோடு நிகழ்த்திய தோழமை உரையாடல், தோழமை என்பதால், இடித்துரை இருக்காது என்பதல்ல, இருக்கிறது.

ன் இதயத்துக்குள் வந்த மனிதர்களை எழுதுவது என்று பவா இயற்றும் முயற்சி, இந்த எல்லா நாளும் கார்த்திகை நூலில் இருந்து தொடங்கவில்லை. இதற்கும் முந்திய 19. டி. எம். சாரோனிலிருந்து தொகுப்பிலேயே தொடங்கியிருக்கிறது. இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கும் பவா, அவரது அப்பாவைப் பற்றி எழுதிய கட்டுரையே இச்சரடின் தொடக்கக் கண்ணி. அப்பாவைப் பற்றி மகன் எழுதிய அபூர்வமான பதிவு அது.

அப்பா, அவரது இருபத்து ஆறாவது வயதில் தற்கொலை செய்து கொள்வதென முடிவெடுத்திருக்கிறார். வேட்டவலம் மலையில் கோட்டாங்கல் பாறைக்குப் பக்கத்தில் தான்தோன்றியாக வளர்ந்திருந்த எட்டி மரத்தைத் தெரிவு செய்து கயிறையும் கட்டி இருக்கிறார். மாலை ஐந்து மணிக்கு, பாறையில் மல்லாந்து படுத்து வானத்தைப் பார்த்தபடியே, தன் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பாத திடச்சித்தத்தோடு படுத்துக் கிடக்கிறார். முன் பனியும் தூறலுமான மாலை அது. ஏன் என்றே அறியாது அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. தற்கொலைக்கு நிச்சயப்பட்ட மனோபாவக்காரனுக்கு முன் காலமும் வெளியும் திகைத்து நிற்கும். காற்று அவனைக் கடக்காமல் ஓரிடத்திலேயே நின்று சுழலும். அவன் கண்களுக்கு முன் வண்ணத்துப் பூச்சிகள் பறப்பதில்லை. மாலைச் செவ்வானம் அவன் விழி விளிம்புகளுக்குள் படிவதில்லை. எழுந்து வரும் நிலா, எதிர்த் திசையில் நடக்கும்.

அந்த இறுதிக் கணத்தின் அழைப்பை எதிர்பார்த்த அப்பாவை, மாலை ஆறு மணிக்கு எழுந்த வெடிச் சத்தமும் வாண வேடிக்கையும் அவரை அவரின் சட்டைக் காலரைப் பிடித்துக் கரைமேல் போடுகிறது. புகைப்படலத்தின் ஊடாக, திருவண்ணாமலையின் தீபச் சுடரொளி விண்ணுக்குத் தாவி தன் நாவை நீட்டுகிறது.

அப்பாவுக்குச் செய்தி அருளப் பட்டுவிட்டது….

தன்னைத் தேடித்தான் இந்த நகரத்துக்குத் தினம் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் வருகிறார்கள் எனத் துளியும் கர்வமின்றி ஊரின் மத்தியில் ஓர் ஆத்மா மாதிரி வியாபித்திருக்கிறது மலை. திருவண்ணாமலை ஒரு சுற்றுலாத் தலம் இல்லை. ஒரு சுற்றுலாத் தலம் தன் விருந்தினர்களை வரவேற்று மகிழ்வித்துத் திருப்பி அனுப்பிவிடும். திருவண்ணாமலையோ விருந்தினர்களைத் தனக்குள் புதைத்துக் கொள்கிறது

ப்ராட்டஸ்டன்ட் கிறித்துவக் குடும்பப் பின்னணி உடைய சாப்பாடு. அதுவரை, சந்நதம் கண்டவர் போலக் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருப்பார் அப்பா. தீபம் பார்த்த பிறகே மனம் அமைதியடையும் அவருக்கு.

1999 நவம்பர் 29. தீபத் திருநாள். அப்பாவின் இறுதி நாள் அது. பவாவை அப்பா தன் அருகில் அழைத்து இப்படி சொல்கிறார்.

பவாய்யா, ஐம்பது வருஷமா உங்க யாருக்கும் தெரியாம ஒவ்வொரு கார்த்திகைக்கு மட்டும் என் பேர்ல அரைக்கிலோ நெய் வாங்கி தீபத்துக்குக் கொடுப்பேன். இன்னிக்கு என்னால போக முடியலை. நீ எனக்காக செய்வியா?’

வார்த்தைகளில் கொஞ்சம் அவநம்பிக்கை இருந்தது.

என் துக்கமும் கண்ணீராய்த் தான் வழிந்தது.

எனக்கப்புறமும் என்பேர்ல இதைச் செஞ்சிடுப்பா

அன்று மாலை தீபம் கண்ட நேரத்துக்குப் பிறகு, அப்பா, ஓங்கி வளர்ந்த அந்த ஜோதியோடு தன் ஜீவிதத்தை இணைத்துக் கொண்டார்.


னிதர்களை எழுதுவது என்று பவா தொடங்கிய இந்த வரிசையில் அப்பாவும் ஒரு மனிதராகவே இணைகிறார், அப்பாவாக இல்லை என்பது முக்கியம். அக நேர்மையும் ஒழுக்கமும் கொண்ட தார்மீக ஆவேசக்காரராக அப்பா வாழவில்லையென்றால் பவாவின் பட்டியலில் அப்பாவுக்கு இடம் இருந்திருக்க முடியாது என்பதை நிச்சயமாகவே என்னால் சொல்ல முடியும்.

ஒரு மனிதரில் எது பவாவை வசீகரிக்கிறது, அடர்வனத்தில் பசுந்தழைக்குள் மறைந்திருக்கும் பச்சைக்கிளிகளின் சிறகை, பவா அடையாளம் காண்கிறார், கண்டடைகிறார் என்பது எனக்கு மிக முக்கியம்.

கலைஞர்களும் படைப்பாளிகளும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைந்து சென்னை பெரியார்த் திடலில் கருத்துச் சுதந்திரம் வேண்டிக் குழுமியிருக்கிறார்கள். பற்றி எரியும் படைப்பாளிகளுக்கூடாக பாலுமகேந்திரா மேடை ஏறுகிறார். பேசுகிறார்.

என் கேமராவை நான் உயிராக மதிக்கிறேன். அதை ஒரு ஆக்டோபஸ் சுற்றிக் கொண்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. அது என் ஆன்மாவை இயக்கவிடாமல் அடைத்துக் கொண்டிருக்கிறது.’

இதோ இந்தப் புள்ளிதான் அவர் என்னுள் நுழைந்ததென இன்று மீட்டெடுக்க முடிகிறதுஎன்கிறார் பவா. அதன்பின்யாத்ராபடம் பார்க்க வாய்த்திருக்கிறது அவருக்கு. போதுமே. அதன்பின் பாலுமகேந்திரா திருவண்ணாமலை சாரோனுக்கு நிரந்தரமாக எதிர்பார்க்கப்படும் நண்பரும் உறவினரும் ஷைலஜாவிற்குத் தந்தையுமானார். இது இவ்வாறு நேராமல் போனால்தான் நான் ஆச்சரியப்படுவேன். எனக்கும் பாலுவுக்கும் முப்பதாண்டுகளுக்கும் மேலான சினேகம். பாலுவை நினைக்கும் போதெல்லாம் மயிலிறகு ஒன்று என் மனதில் தோன்றும். பாலு ஒரு மயிலிறகு. பச்சைப்பசேலென்றும் அடர்ந்த கருத்த நீலமும், இனம் விளங்கா ஜீவரஸமும் ததும்பும் மயிலிறகு. மயிலைப் பற்றி அல்ல ஒரு கானகத்தைப் பற்றிப் பேசுவதைக் காதுள்ளவர்கள் கேட்டிருப்பார்கள். ஓரிரண்டு முறை எங்களுக்குள் உரசி தீப்பொறிகள் தோன்றி இருக்கின்றன. என்ன பண்ண? இருவருமே தீக்கற்களாக இருந்தோம். இருவருக்குமே தலைகள் இருக்கின்றன என்பதுதான் பிரச்னை. ஆனால் எங்களுக்குள் மனமும் இருக்கின்றனவே, ஆகவே இணைந்து கொண்டோம். இது எங்களின் மாலைக் காலம். வெயிலகன்று, இளம் தென்றல் போதில், வீட்டுக்கு வெளியே அமர்ந்து யோசிக்கையில் எதற்குத்தான் அர்த்தம் இருக்கிறது என்று தோன்றுகிறது. பாலு, முதிர்ந்திருக்கிறார். முதுமை வேறு. முதிர்வு வேறு. பாலுவுக்கு முதுமை இல்லை. இது கலைஞனுக்குள் நேரும் மலர் அவிழும் நேரம். அவர் ஒரு படத்துக்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார். கதையை என்னிடம் ஒருமுறை சொன்னார். பாலுவின் இன்னொரு சந்தியா ராகமாக இது இருக்கும். அதைக் கடக்கவும் செய்யும்.

பவாவின் மனப் பேரேட்டில் இடம் பெற்ற இன்னொருவர், ம்முட்டி. மெகா ஸ்டார் என்று கருதப்படும் மம்முட்டியின் நட்பு, ஒரு சிறிய முரண் கருத்துரையாடலில்தான் முகிழ்ந்திருக்கிறது. அதன்பின், பவாவுக்கு மம்முட்டி நண்பராகி இருக்கிறார்.

இப்படி தமிழ்நாட்டில் பெரும் நிலப்பரப்பு பயிரிடப்படாமல் இருக்கும்போது கிராமத்து மனிதர்கள் டீக்கடைகளிலும் தெருமுனைகளிலும் கொத்துக்கொத்தாய் உட்கார்ந்து வெட்டிக்கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள்என்பதுபோலக் கருத்துரைத்த மம்முட்டியிடம் பவா, எம்மக்கள் சோம்பேறிகள் எனவும், அரசே அவர்களை அப்படி வைத்திருக்கிறது என்றும் தன் நியாயத்தை பவா எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஒரு விவசாய நாட்டை எந்த முன் யோசனையுமின்றி இரும்புகளின் நாடாக்க முயன்ற நேருவின் காலத்திலிருந்து, விவசாயிகளின் தற்கொலைகள் ஒரு பத்திரிக்கைச் செய்தியாகிவிட்ட இன்றைய அவலத்தை பவா எடுத்துரைக்க முயன்றபோது, ‘இல்லை இல்லை, என்னால உங்களோட உடன்பட முடியாதுஎன்றிருக்கிறார் மம்முட்டி. ‘நீங்கள் உடன்பட வேண்டாம். ஆனால் இது என் கருத்து. இதைச் சொல்ல என்னை அனுமதியுங்கள்என நான் அவரைப் பார்த்தபோது அவர் சிரித்துக்கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டார்...

ன் எழுதுமேசைக்கு முன் திருவண்ணாமலையின் மலைக்காட்சிகள் கொண்ட காலண்டரை மாட்டி வைத்திருக்கிறேன். 2010ஆம் ஆண்டு காலண்டர் அது. காலாவதி ஆன பிறகும் அது என் முன் இருக்கிறது. வெறும் பார்வைக்கு மீறிய, வேறு கண்கள் கொண்ட மாபெரும் கலைஞன் ஒருவனால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலண்டரில் இருந்தன. தவம் செய்து, மீண்டும் மீண்டும் கண்டு, பார்த்து, உணர்ந்து, தரிசித்து மலைகளை அப்புகைப்படக்காரன் படம் எடுத்திருக்கிறான். நான் கண்டேயிராத மலையின் பேரழகை, தரையைப் பார்த்து மலை சுற்றும் மக்களும் பார்த்தே இராத மலையின் பெருவனப்பைப் பொதிந்து வைத்திருந்த காலண்டர் படங்கள் அவை. எனக்கு தினசரி, மாதாந்திரக் காலண்டர்கள் மீதெல்லாம் எந்தக் காலத்திலும் கவர்ச்சி இருந்தது இல்லை. ஏனெனில், வருடம் மாதம் தேதி போன்றவை எனக்கு எந்தச் செய்தியையும் பயனையும் தந்ததில்லை. அவற்றைப் பார்த்து இயங்க எனக்குக் கடமையோ கட்டளையோ இல்லை. என்றாலும் அந்தக் காலாவதியான காலண்டரை நான் மாற்றிவிடத் துணியமாட்டேன். பாரியின் பறம்பு மலையை, கபிலரின் வார்த்தைகளைக் கொண்டு அப்படங்கள் எடுக்கப்பட்டன என்றே நான் நினைக்கிறேன்.

பவா ஒரு புகைப்படக் கலைஞனை இந்த எல்லா நாளும் கார்த்திகை புத்தகத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். அவர் பெயர் கிரீஷ் ஃபேலன். கனடாவைச் சேர்ந்தவர். சுமார் எழுபது நெருங்குபவர். தன் வாழ்வைத் தான் விரும்பி ஏற்றுக் கொண்ட கலைக்குத் தின்னக் கொடுத்தவர். உலகம் முழுக்க சுற்றி வந்திருக்கிறார். ஒவ்வொரு தேசத்திலும் ஒன்று அவருக்குப் பிடிக்கிறது. அதை மட்டுமே படம் எடுக்கிறார். ஸ்வீடனில் ஏரி. எகிப்தில் வீடு. இந்தியாவில் சாதுக்கள். அவர் அலைந்த அலைச்சலும், செலவிட்ட பணமும், மொழி தெரியாத பிரதேசங்களும் மிக அதிகம். இதெல்லாம் எதற்காக? அது அப்படித்தான். அதுதான் அவர் ஜீவிதம். அது அவருக்கு அளிக்கப்பட்ட ஒரு கோப்பைத் தேநீர். அதை அவருக்கான நியதியின்படி வாழ்கிறார். அத் தேநீரை அவர் உட்கார்ந்தும் குடிப்பார். நின்றும் படுத்தும் அருந்துவார். அவர் ஆத்மா, அவரை இயக்குகிறது. ஆத்மாவை அவர் இயக்குகிறார். செக்குமாடுகளின் வட்டத்தைப் பந்தயக் குதிரைகள் கடக்கின்றன. பந்தயக் குதிரைகள் பரிசு பெறும்போது, வானத்துப் பறவைகள் ஆகாயத்தை நிரப்புகின்றன. பறவைகளுக்குப் பாதை யார் போடுவது? கிரீஷை, அவருக்கு அறிவித்து விட்டு பவா அவரைப் பார்க்கச் செல்கிறார். மரங்கள், செடிகள், துரவுகள், இருள்கள் சூழ்ந்த வீட்டு வாயிலண்டை நின்று கிரீஷ் என்கிறார். அமைதியைப் பின்தள்ளி மீண்டும் கிரீஷ் என்கிறார். ப்ளீஸ் வெயிட் என்கிறது எதிர்க்குரல். பவா அமைதியை இழந்தபோது, கிரீஷ் தோன்றுகிறார். பவா, தாமதத்துக்கான காரணத்தை ஆராய்கிறார். கிரீஷ் தன் கேமராவைக் கம்ப்யூட்டரில் இணைக்கிறார். பவா சிறுதிரையைப் பார்க்கிறார். சற்றைக்குப் பிறகு பவா திரையில் பார்த்த காட்சி இவரைச் சில்லிட வைக்கிறது. ஒரு நாகப் பாம்பு படம் எடுத்து அசைகிறது. கிரீஷ் சமையலறைக்குத் தேநீர் போட விரைகிறார். கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருக்கிறது. பாம்பின் பற்பல அசைவுகள், கோணங்கள், அதன் கோபங்கள், தப்பித்தல்கள், எதிர்ப்புகள், குழைவுகள்...

அய்யோ, கிரீஷ், இது எப்போ எடுத்தது?’

ஜஸ்ட் நவ், பவா. அதான் லேட்

கிரீஷ் சொல்கிறார்...

பௌர்ணமி நிலவு, உலகம் முழுக்கத் தோன்றுகிறது. எனினும், திருவண்ணாமலையிலிருந்து தான் அது தன் சகல சௌந்தர்யத்தோடும் கர்வப்படுகிறது. எப்படிப் பார்த்தும், எங்கிருந்து நோக்கியும், மடியில் புரண்டும், மார்பில் குடித்தும் எத்தனை முறை இதன் உடலில் நடந்தும் எனக்குச் சலிக்காதது இம்மலை மட்டும்தான். என் அருகிலேயே தங்கி, என் ஸ்பரிசத்திலேயே இருந்துவிடு கிரீஷ், என்ற அதன் அந்தரங்கமான வார்த்தைகளுக்காகவே இங்கிருக்கிறேன், பவா.

மிக சந்தோஷமான வாழ்வு எனக்கு வாய்த்திருக்கிறது. வாழ்வின் முன்பகுதியில் சூழ்ந்த நகரத்தை இம்மலை கழுவி, சுத்தப்படுத்தி ஒரு குழந்தைக்கு வெண்ணிற ஆடை போர்த்திக் கொள்வது மாதிரி என்னை அரவணைத்து நிற்கிறது பவா...’

கிரீஷின் வாழ்க்கை எவ்வளவு மகத்தானது.

கிரீஷ் மற்றும் அன்றைய அனுபவங்கள் பற்றி பவா இப்படிப் பதிவு செய்கிறார்.

‘...அது என் வாழ்வில் முற்றிலும் வேறொரு நாள். எனக்கு வழிவிட்டு வெளியேறின நாகத்தைப் போலவே. அதன் ஜீவிதத்தில் யாராவது ஒருவர் அதன் அத்தனை அசைவுகளையும் அங்குலம் அங்குலமாகப் படமாக்கின அனுபவத்தை மரச் செறிவினூடே வளர்ந்த அதன் வாழ்வுக்கு எவ்வளவு புதுசோ அவ்வளவு புதுசு எனக்கு. பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு வெள்ளைக்காரன் பருவம் கடந்து, காலம் அறிந்து மழை, வெய்யில், நீர், தூறல், காலை, மாலை, இரவு, அதிகாலை...’

இப்படியான பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார் அவர். ஏன்? ஏனென்றால் அவர் அப்படி. அவர் இயல்பு அது. பவா, பவா மாதிரிதானே எழுத முடியும்?

பாட்டுக்கார லட்சுமி பற்றிச் சொல்லாமல், என் மனம் நிறையாது. பவா எழுதிய சுமார் 45 கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைச் சித்திரங்களில் அதுவும் ஒன்று. 19. டி. எம். சாரோனில் இடம் பெற்ற அக்கட்டுரை, வெளிவந்த காலத்தில் எனக்கு மன அவசத்தையும் தவிப்பையும் தந்த படைப்பு அது. தமிழ்ச் சமூகம் பெண்கள் மேல் சுமத்தி இருக்கும் பேரவலத்தின் ஒரு மாதிரி லட்சுமி. அப்பெண்ணை சாராயம் காய்ச்சுகிறவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துத் தம் பாரத்தைக் கழித்துக் கொண்டார்கள் அவளைப் பெற்றவர்கள். சாராயம் காய்ச்சுகிறவனுக்கு அழுகிய வாழைப்பழத்தையும், குப்பைகளில் இருந்து பேட்டரிகளையும் சேகரித்துத் தந்து, இந்தியப் பதிவிரதைத் தன்மையைப் புலப்படுத்தாமல் இல்லை அவள். கணவன், விற்ற சாராயத்துக்கே அடிமை ஆகி, அவள்முன் ஒரு கேள்வியை நிறுத்தினான். இதற்கிடையில் இறைவன் அவளுக்கு இரண்டு குழந்தைகளை அருளி இருந்தான். மனக்கொதிப்பின் உச்சத்தில் ஒருநாள் கல்லைப் போட்டுச் சாராயப் பானையை உடைத்தாள் லட்சுமி. இரண்டு குழந்தைகளுடன் வெளியேறினாள். இறைவன் தப்பாக இணைத்ததைச் சரியாகப் பிரித்தாள் லட்சுமி. பிதா, பரமண்டலத்தில் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார். மாட்டுக்கறியைக் கூவி விற்றாள். காய்கறி விற்றாள். தன்னையும் சில வேளைகளில். குழந்தைகளையும் படிக்க வைத்தாள். ஒரு கட்டத்தில், விட்டு வெளியேறினாள். சொட்டுச் சொட்டாய்த் துளிர்த்து, ஒரு ஏரி குளம் அளவுக்கு அகன்றும் ஆழப்பட்டும், விரிந்த அவளது துக்கம், ஒரு வடிகால் எடுக்க விரும்பி இருக்கிறது. பக்கத்து வீடுகளில் நேர்ந்த மரண நிகழ்வுகளில் கலந்துகொண்டு பாட்டுபாடி அழத் தொடங்கி இருக்கிறாள். ஆங்காரமாய்க் கூவி, அறைந்துகொண்டு, மரண வீட்டில் துக்க அலையை நிரப்பினாள். துக்கத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அவள் மூட்டித் தந்த துக்க நெருப்பை இரவலாகப் பெற்றார்கள். இப்படியாகத் தன் துக்கத்தைப் பொது துக்கமாக, துக்கத்தையே, துக்கம் வெடித்துக் கிளம்பிப் பாட்டுருவம் கொள்ளும் ஒரு கலையாக லட்சுமியால் வசப்படுத்த முடிந்திருக்கிறது. லட்சுமி தன் துக்கத்தையும் பங்கேற்போர் அவரவர் துக்கத்தையும் கலந்து இழவு வீட்டை சமூகவயப் படுத்தினார்கள். துக்கமே உள்ளும் புறமுமான பெண்களின் வெடித்தெழுந்த பிரதிநிதியானாள் லட்சுமி.

என்னை மிகவும் கலங்கடித்தவர்களில் ஒருவர் லட்சுமி. வாழ்க்கை, பெரும்பாலான பெண்களுக்குத் தன் கருணையற்ற கொடூர முகத்தையே காட்டுகிறது. சகல வன்முறைகளாலான பட்டியலைப் பெண்கள் மேலேயே பிரயோகிக்கிறது. கணவன் தொடக்கம், சகல வன்முறைகளால் ஆன பட்டியலைப் பெண்கள் மேலேயே பிரயோகிக்கிறது. கணவன் தொடக்கம், சகல பகைவர்களும் அவர்களைச் சிதைக்கிறார்கள். இந்த யுத்தத்தில் பெண்கள் மட்டுமே எப்போதும் நிராயுதபாணிகளாகித் திக்கழிந்து நிற்கிறார்கள்.

இது என்னைத் துன்புறுத்துகிறது. நசுங்கிய அலுமினியத் தட்டோடு பிச்சைக்கு வரும் குழந்தைகளைப் பார்க்கையில், உண்ண முடியவில்லை. இரவு உணவின்றிப் படுக்கப் போகும் குழந்தைகளைக் கொண்ட கயவர்களின் பூமியாக இந்தியா ஆகிவிட்டது. பெண்கள் புரிந்து கொள்ளப் படுபவர்களாக இல்லை. எப்போதும் தற்காப்புச் சிந்தனைகளிலும், புறத் தாக்குதல்கள் பற்றிய தவிப்பிலுமே, பாதிச் சமூகம் வைக்கப்பட்டிருக்கிறது. இடுப்புக் குழந்தைகளோடு பசிக்குக் கையேந்தும் பெண்கள், தேசத்தை நடுக்குறச் செய்யவில்லை. எந்தத் தலைவனும் தற்கொலை செய்து கொள்ளவில்லை.

லட்சுமி பற்றிய கட்டுரையைப் பவா இப்படி முடிக்கிறார்.

‘... ஊரார் துயரத்தையெல்லாம் தன் பாடங்கள் மூலம் துடைத்த லட்சுமியின் மரணத்துக்கு இவர்கள் யாரும் வரப் போவதில்லை. அவள் மரணம் இவர்கள் யாருக்கும் அறிவிக்கப்படக் கூடப் போவதில்லை.

கடவுளே!

நான் இந்த தேசத்தின் எந்தத் திசையிலிருந்தாலும் வேட்டை நாய்களின் துரத்தல்களிலேயே தன் வாழ்வைக் கழித்த அந்தப் பாட்டுக்காரியின் பாதங்களில் கொஞ்சம் பன்னீர்ப்பூக்களை என் கைகளால் கொட்டும் பாக்கியத்தைத் தா

வா செல்லதுரை அடிப்படையில் புனைவிலக்கியக்காரர். மிகவும் கச்சிதமான, செட்டான, அடர்த்தியான, கலை வெற்றிகளைச் சாதித்த சிறுகதைகளைத் தந்தவர். 2007 இல் வெளியான அவருடைய சிறுகதைத் தொகுதியானநட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைஎன்னும் நூலுக்கு ஆன முன்னுரையில் நான் இவ்வாறு சொல்லியிருந்தேன்.


‘...தமிழ்ச் சிறுகதை வெளியில் காத்திரமான வரவாக வந்திருக்கிறது இத் தொகுப்பு. பெரிதும் வழக்கில் இராத சூழல்கள், கதைக்களன்கள். வியப்பேற்படுத்தும் மனிதர்கள் என விரிந்திருக்கிறது பவாவின் இந்த உலகம். ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவு விடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டு, பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிவிரிப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடித்தபின் தரும் கலை இதம், வசீகர அனுபவங்கள். நிலைபேறுடைய பல கதைகள் இத் தொகுப்பில் உள்ளன.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இன்றைய மீள் வாசிப்பில் பவாவின் கதைகள் ஒளி குறைந்து விடாதது மட்டுமல்ல, புதிய வெளிச்சத்தைத் தத்துவப் பெருவெளியில் தந்து நிற்கின்றன. காலத் தேருக்கு முன்னால்தான் கதைக் குதிரைகள்கலாபூர்வமான கதைகள்ஓடிக்கொண்டிருக்கும். நல்ல கதைகள் காலத்துக்கு முந்தையவை.

இந்தத் தொகுப்பில் உள்ளசத்ருகதைக்கு நிகராக நான்கு வேறு கதைகள் இருந்தாலும் எனக்குச் சத்ருவையே எடுத்துப் பேசத் தோன்றுகிறது. தமிழ்ச் சிறுகதை நெடும்பரப்பில், இக்கதைக்கு நிகராக சுமார் இருபது கதைகள் இருக்கலாம். தமிழ்ச் சிறுகதையின் சுமார் 90 வயசுக் காலத்தில், ஆகச் சிறந்த கதைகள் அவ்வளவுதான் தேறும். கடல் போன்ற விசால கருணை மனம் கொண்ட விமர்சகரே ஆனாலும், முப்பது கதைகளுக்குமேல் போகச் சாத்தியமில்லை. மேலும் இன்னொரு முக்கியமான விஷயம், பவாவின் கதைகள் அசலான தமிழ்க் கதைகள். தொல்காப்பியத்தின் விமர்சன அளவுகோல்படி இது குறிஞ்சி சார்ந்த படைப்பு. கருப்பொருளாலும் முதற்பொருளாலும் உரிப்பொருளாலும் வெம்பாலை மேவிய கதை. தமிழ் வசனத்தில் இவ்வளவு உக்ரமான படைப்பு இணை கூற யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு பஞ்சம் மக்களை எவ்வளவு தூரம் சிதைக்கும் என்பதே இக்கதை. பஞ்சம் என்கிற உக்கிரத்தின் ஊடே, நிலம் சொட்டு நீரற்றுப் போனாலும் மானுடத்தின் இதய ஊற்று என்றுமே வற்றாது என்று சொல்கிற மகத்தான கதை.

முதலில் பஞ்சம் என்பது என்ன? இந்தத் தலைமுறை அறியாத ஒரு பயங்கரப் பாழைப் பற்றி பவா எப்படியெல்லாம் எழுதுகிறார்.

‘... அந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தைச் சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித் தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம்...மனிதர்கள் உலர்ந்து காய்ந்து கருகினார்கள். பிள்ளை பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சைக் குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள் ஈரம் தேடி மலைக்காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வைத்த ஒவ்வொரு அடியும் பூமியின் வெடிப்பில் விழுந்து விடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.

தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வளை தோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும் கள்ளிகள் அடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதையிலும் பாம்புகளின் எலும்புக் கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்து தெரிந்த அதன் முள் எலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.

பிறக்கும் குழந்தைகள் இரத்தப் பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டி இருந்தன.

மலைக்காட்டுப் பாறைப் பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய காட்டுப் பன்னிகளும் குள்ள நரிகளும் பெருங் கூச்சல் போட்டு, பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வளைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின. ஆடுகளும் மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்துக்கு, கம்பந் தட்டைகளுக்கென்று கை மாறின. பூர்ச மரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது.

யாரும் யாரையும் தின்றுவிடக் கூடிய கொலைவெறியைப் பஞ்சம் மனித மலைகளில் ஏற்றியிருந்தது...’

தமிழ் இலக்கியம், கதை வசனம் காணாத விவரணங்கள் இவை. சரி, ஒரு மழை இந்த அனைத்தையும் போக்கி, சந்தோஷங்களை மக்களுக்குத் தந்துவிடுமே. அதற்கென, பவா உருவாக்கிய சந்தர்ப்பம் ஒரு காட்சி அற்புதம்... துளி ஈரம் மாரியம்மனின் கண்ணில் ஒட்டி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கையும் இன்றி மனித குலம் எப்படி மூச்சுவிடக் கூடும். மாரியம்மன் கண்ணில் ஒட்டியிருக்கும் ஈரம் எப்படி மழையாகப் பொழியும்? குதிர்களைத் துடைத்து, பானைகளை அலசி, நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கால் கேழ்வரகும் அஞ்சிபடிக் கம்பும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றத் தயாராகிறது. பாறையைத் தொலைத்து உருவாக்கிய உரலில் மாவு இடிக்கப் படுகிறது. இடிப்பவள் தன்னோடு விழும் நிழலைக் கண்டு திரும்புகிறாள்.

மூன்று பெண் குழந்தைகளோடு ஒரு கிழக்கத்திப் பெண். கணவன் இழந்தவள். பசி. உயிர்ப் பறவையை வெளியேற்றும் பசி. அந்தக் குழந்தைகளின் கண்களில் பசி வழிந்து கொண்டிருக்கிறது.

மாவு வேணும்என்கிறாள் தாய்.

ஒரு குழந்தை நீட்டிய தட்டில் கம்புமாவு போடப்படுகிறது.

அம்மனின் கண்ணில் இருந்த ஒற்றைத் துளி, மழையாக, பெருமழையாக, வெள்ளமாக, பேரருவியாக, குளமாக, ஏரியாகப் பெய்து தீர்க்கிறது...



-நன்றி உயிரெழுத்து (ஜூலை 2012)

3 comments:

  1. பவாவின் சொல் அழகுகளில் சொக்கிப்போன பலரில் நானும் ஒருவன். அதை மிக அழகாக தொகுத்திருக்கிறார் பிரபஞ்சன். பவாவின் கட்டுரைகள் நம்மை உள்ளே இழுத்து தன்னில் முழுமையாக கலக்க வைத்துவிடும் அண்ணாமலையைப்போல்.

    ReplyDelete
  2. மனதிற்குள் விதையிடும் எழுத்துக்களைப் பயிர் செய்யும் ஒரு தேர்ந்த விவசாயியாகத்தான் திரு.பவா அவர்களை நான் உணர்கிறேன். ஒரு அருமையான மனிதரைப் பற்றிய அறிமுகம் அருமையாக இருப்பது இயற்கையே! நல்வார்த்தைகளுக்கு நன்றி!

    ReplyDelete
  3. அன்புள்ள பவாவிற்கு ...மூன்று வருடங்களுக்கு முன்னால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று தக தகத்து எரிகிற திருவண்ணாமலை தீபத்தை தரிசித்தேன் ...வாழ்வில் முதல் முறையாக . அதற்குப்பின் அதே மாடியில் குடும்பத்தோடு அறுசுவை உணவு -பின்னால் தீபம் எரிந்துகொண்டேயிருந்தது. 'எல்லா நாளும் கார்த்திகை ' ,அதே தீபத்தை , அதே கை சுவையோடு , உள்ளங்கைகளில் ஏற்றி வைத்திருக்கிறீர்கள் .ஒவ்வொரு ஆளுமையும் ஒவ்வொரு நெருப்பு கோளம். பரவசமும் பதற்றமுமாய் படித்து முடித்தேன் . -மிஷ்கின் தவிர .... என்னை பொறுத்தவரை திருடன் திருடனே . 'சத்ரு' வை திருடி நான் ஒரு கதை எழுதினால் ஒத்துக்கொள்வீர்களா ?-விட்டுவிடுவோம் ....மிக குறிப்பாக கோணங்கி ....என்றென்றும் மனதில் எரிகிற ஒரு கல் குதிரையை நிறுவி விட்டீர்கள் ..

    ReplyDelete