Wednesday, November 21, 2012

கதை சொன்னேன்

சென்ற மாதத்தின் இறுதியில் நான் படித்த டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளியில், ALC-யின் கல்வி வாரியத்தின் சார்பாக நடந்த பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக துணிப்பை வெளியீட்டு விழாவிற்கு நான் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தேன். பெருமழை கொட்டிக் கொண்டிருந்த அன்றைய பகலில் ஒரு உற்சாக மனநிலை வாய்த்திருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகப் பேசினேன். உரையின் இறுதியில் ஜெயமோகனின் யானை டாக்டர் கதை சொன்னேன். கூட்டம் மௌனத்தில் உறைந்திருந்தது. விடைபெற்று வீடு திரும்பிய அந்நிமிடத்திலிருந்து தொடர்ந்து தொலைபேசியிலும், நேரிலுமாக நண்பர்கள் என் உரையை பாராட்டிக் கொண்டிருந்தார்கள். பலர் பரவசப்பட்டார்கள். இது போல் ஒரு உரையை இதுவரை கேட்டதில்லை என்றெல்லாம் அவ்வுரையாடல்கள் சுவாரஸ்யப்பட்டது. நான் முற்றிலும் ஒரு  பெருமிதமான மனநிலைக்குப் போயிருந்தேன்.

குறைந்தது முப்பது பேராவது என்னிடம் இது குறித்துப் பேசி என் உற்சாகத்தை நீட்டித்தார்கள். அது எங்காவது முற்று பெற  வேண்டுமென நினைத்தேன். அதன் பொருட்டு நானும் என் நண்பன் ஜே.பி.யும் பேசினோம். அதன் நிறைவேறிய வடிவம்தான் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கதை சொல்வது எனும் நிகழ்வை நாங்கள் ஒருங்கிணைத்தது. முதல் நிகழ்வாக ரமணாஸ்ரமத்திற்கு எதிரேயுள்ள குவா-வாடீஸ் பல்சமய உரையாடல் மையத்தில், லேசாக கருக்க ஆரம்பித்த அந்த பின் அந்தியில் அவ்விடம்  குறைவான ஒளியில் வருபவர்களை உள்ளிழுந்து தன்னுள் புதைத்து கொண்டது. கொடிகளும், மரங்களும் அப்புறப்படுத்தப்படாமல் வீழ்ந்திருந்த ஒரு பெருமர திண்மையும் சுட்ட செங்கற்களால் ஒரு குடிலும் ஏதோ வேறொரு உலகத்தை எல்லோர் முன்பும் கொண்டு வந்தன.

வழக்கத்திற்கு மாறாக என் கைகள் நடுங்குவதை சாமர்த்தியமாக மறைத்தேன். சு.ரா. சொல்வது மாதிரி போதுமான அளவிற்கு வாசகர்கள் இருந்தார்கள். அதற்கு மேலும் பெருகினால் அது கூட்டம். என் ஆசிரியர் ஆல்பர்ட் என்னைப் பற்றியொரு அறிமுகவுரையாற்றினார். நான் கூச்சத்தால் நெளிந்தேன். அன்பினால் பெருகும் மிகை இது. ஒரு சின்ன அறிமுகவுரையுடன் நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
வண்ணநிலவனின், ‘மனைவிஅக்கதையின் பின்ணனி, அதன் ஆசிரியர், என்றொரு அறிமுகத்துடன் என்.எஸ் மாதவனின் இரைமுடிந்து எதிரில் இருந்த பார்வையாளர்களை கவனித்தேன். உறைநிலையிருந்தார்கள். மௌனம் அங்கிருந்த இண்டு இடுக்கெங்கும் பரவியிருந்தது. தி. ஜானகிராமனின் பாயசத்தைதொடந்து ஜெயமோகனின் ஊமைச் செந்நாய்நெடுநாளாய் ஊமைச்செந்நாய் என்னுள் புகுந்து பிராண்டிக் கொண்டிருந்தது. அதை அன்று உரத்து சொல்லி ரத்தவிளாறுகளோடு வெளியேற்றினேன். மனமடங்க மறுத்தது. இன்னும் இன்னும் என நானுமே என்னிடம் யாசித்தேன்.
தொடர்ந்து என் சத்ருகதையின் இறுதியில் பொட்டு இருளனின் கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்டு மழைச்சொட்ட மலைவெளியில் ஊரைவிட்டு வெளியேறுவான். திடீரெனத் திரும்பிப்பார்ப்பான். ஊர் ஈரத்தில் நனைந்திருந்ததுமுடித்தபோது நான் முற்றிலும் நனைந்திருந்தேன். வெகு நேரமானது என் சகமனிதர்களின் மூச்சுக்காற்று என் மேல் பட. முன் இருக்கையில் அமரந்து என் மகள் மானசி என் கதைகளை அருந்திக் கொண்டிருந்தாள். அவளைப்பார்த்தேன். இன்னும் கொஞ்சம்ப்பா...  என்ற அவள் பார்வையின் கொஞ்சலை நானும் கண்களாலேயே தவிர்த்தேன்.
கைக்குலுக்கல்களின் இளஞ்சூட்டோடு விடைபெற்றேன். அன்றிரவு வெகுநேரம் வரை தூங்காமல் கிடந்தேன். நான் வெளியேற்றிய செந்நாயும், கத்தியும், மனைவியும், பொட்டு இருளனும் மீண்டும் என்னை நோக்கியே திரும்பி வருகிறார்கள். அவர்களின் மீள் குடியேற்றம் என்னை அலைக்கழித்தது. எப்படியாவது அவர்களிடமிருந்து தப்பித்தாக வேண்டும் இன்று தூங்கி முடித்தும். நாளை அடுத்த கதை சொல்ல ஆயத்தமாகியும்.       
There was an error in this gadget