Wednesday, April 3, 2013

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் ஏப்ரல் மாத இதழில்......



 பவாசெல்லதுரை 




தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகளுக்கு மி க முக்கிய இடமுண்டு. அந்த வகையில், மனித வாழ்வின் அவலங்களை, நெகிழ்ச்சியான தருணங்களை இயல்பாகக் கண்முன் உலவச் செய்யும் எழுத்தாளர் பவா செல்லத்துரை. இவர் பிறந்தது திருவண்ணாமலை. தந்தை ஆசிரியர். அதனால் பவாவின் பள்ளிப் பருவம் பல்வேறு ஊர்களில் கழிந்தது. அந்த அனுபவம் பல திறப்புகளைத் தந்தது. ஜெயகாந்தனின் 'ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும்' நாவலை வாசித்த தாக்கத்தில் ஒரு நாவலை எழுதினார். 'உறவுகள் பேசுகிறது' என்ற தலைப்பிலான அந்நாவல் திருவண்ணாமலையிலிருந்து வெளிவந்த 'தீபஜோதி' இதழில் வெளியானது. அப்போது பவா செல்லத்துரைக்கு வயது 16. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

முதல் நாவல் வெளிவந்த பெருமிதம், சக மாணவர்கள் அளித்த ஊக்கம், 'வசந்தம்' என்ற கையெழுத்துப் பிரதி நடத்திய அனுபவம் எல்லாம் சேரவே, தொடர்ந்து எழுதினார். நண்பர் உதயசங்கருடனான நட்பும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பும் பல வாசல்களைத் திறந்து விட்டன. புதுமைப்பித்தன், வண்ணதாசன், வண்ணநிலவன் என தேடித்தேடி வாசித்தார். மேடைகளில் வாசித்த, இதழ்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ஒரு தொகுப்பு வெளியிட்டார். கந்தர்வன் அதற்கு முன்னுரை எழுதினார். கி.ரா., தி.க.சி., வண்ணநிலவன் என பலரது பாராட்டுக்களை அத்தொகுப்பு பெற்றது. அந்த ஊக்கத்தில் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் தொடர்ந்து எழுதினார். கல்கியில் வெளியான 'முகம்' என்ற சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது. பவா என்ற இலக்கியவாதியை அச்சிறுகதை உலகுக்கு அடையாளம் காட்டியதுடன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து வெளியான 'வேறுவேறு மனிதர்கள்' சிறுகதை பரவலாகப் பேசப்பட்டதுடன், காமராஜர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றது. 

இவரது 'ஏழுமலை ஜமா' என்ற சிறுகதை மிக முக்கியமானது. ஒரு கூத்துக் கலைஞனின் அக உணர்வை துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் அச்சிறுகதை, குறும்படமாகவும் வெளியாகிப் பல விருதுகளைப் பெற்றது. பல இதழ்களில் வெளியான சிறுகதைகளைத் தொகுத்து 'நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை' என்ற நூலாக்கி வெளியிட்டார். அது வரவேற்பைப் பெற்றதுடன், பிரபல எழுத்தாளர்களின் பாராட்டுக்களையும் பெற்றது. '19 டி.எம். சாரோனிலிருந்து' என்ற இவரது தொகுப்பும் மிக முக்கியமானது. இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியவை இவரது படைப்புகள். குறிப்பாக 'எல்லா நாளும் கார்த்திகை' தொகுப்பு, ஜெயகாந்தன், பாலுமகேந்திரா, மம்முட்டி, சுந்தர ராமசாமி, பாரதிராஜா, நாசர், வண்ணநிலவன், சா.கந்தசாமி போன்ற நாம் அறிந்த பிரபலங்களின் அறியாத மற்றொரு முகத்தை, அவர்களது அக உலகை, ஆசைகளை, ஏக்கங்களை, எண்ணங்களை மிக விரிவாகக் காட்டுவது. "பரவசம் தோய்ந்த, உணர்ச்சியில் சில்லிட்ட, வியப்பில் பூரித்த, அற்புதத்தில் ஸ்தம்பித்த, வார்த்தைகளால் பவா பேசுகிறார். பவாவின் கண்கள் பத்து வயதுச் சிறுமியின் விழிகள். கிராமத்திலிருந்து பட்டணம் வந்து, பேரடுக்குப் பெருவீடுகளைக் கண்டு திகைத்து நிற்கும் பத்து வயதுக் குழந்தையின் நிர்மலமான ஆச்சரியப் பார்வை அது. உணர்ச்சிகளை ஒளித்துப் போலி பெரிய மனுஷத்தனம் காட்டாத சத்தியத்தின் குரல் அவருடையது. மனித உன்னதங்கள் தன் தொட்டுவிடும் தூரத்தில் நின்றுகொண்டு தன் விகாசத்தை வெளிக்காட்டுகையில் அத் தருணத்தின் பேரொளியைக் கைகளுக்குள் பொத்தி அப்படியே, தொங்கும் உண்மையின் கவிச்சி வாசனையோடு எழுதுகிறார்" என்று பவாவின் எழுத்தை மதிப்பிடுகிறார் பிரபஞ்சன்.

சிறுவயது முதல் தான் கண்டவற்றை, கேட்டவற்றை, அனுபவித்தவற்றை ஒரு பாத்திரமாக நெருங்கியும், சாட்சியாக விலகியும் நின்று வெளிப்படுத்துபவையாக பவா செல்லத்துரையின் படைப்புகள் உள்ளன. அவற்றின் பாசாங்கின்மையும், முகத்தில் அறையும் நிஜமும் வாசகனைத் தாக்குகின்றன. சமூகத்தின் பார்வையில் அரதப் பழசானவர்கள், ஒன்றுக்கும் ஆகாதவர்கள், ஏழை, எளியவர்கள், செல்லாக்காசுகள் என்றெல்லாம் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள் இவரது படைப்புகளில் சிறந்த சொற்சித்திரமாக, மிகச் சிறந்த ஆளுமையாக வெளிப்படுகிறார்கள். வாழ்க்கையின் முன் தங்கள் நிஜ முகத்தைக் காட்டுகிறார்கள். இவரது கட்டுரைகளில் தெரியும் உண்மையும், வாழ்க்கையின் அனுபவமும் நம்மை வேறு ஓர் உலகிற்கு இட்டுச் செல்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல. திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாருடனான பவாவின் அனுபவங்கள், அவர்கள் இருவருக்கிடையேயும் இருக்கும் அன்பையும், நட்பையும், பிணைப்பையும் பறைசாற்றுகின்றன. "பவாவின் எழுத்து வாசிப்பவர்களைத் தடுமாற வைக்கிறது. சதா மூளையின் கட்டுப்பாட்டிலிருக்கும் மனதைச் சற்றே இடம்பெயர வைக்கிறது" என்கிறார் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத். மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் பவாவின் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வரவேற்புப் பெற்றுள்ளன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் இணைந்து பவா ஆற்றிவரும் தீவிரமான களப்பணி, இலக்கியப்பணி குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் விடிய விடிய நடக்கும் பல கலை இரவு நிகழ்ச்சிகளிலும், சமூக, களப் பணிகளிலும் இவரது பங்கும், உழைப்பும் மிக முக்கியமானது. 'முற்றம்' என்ற இலக்கியக் கூட்டத்தை மாதாமாதம் நடத்தி வருகிறார். முக்கிய எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். கவிஞரும், எழுத்தாளருமான கே.வி. ஷைலஜா, பவாவின் மனைவி. நல்ல நூல்களைத் திருவண்ணாமலையிலிருந்து வெளியிட்டு வரும் வம்சி பதிப்பகம் இவர்களுடையது. ஷைலஜா மலையாளத்திலிருந்து தமிழுக்கு குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். இதுவரை ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகி இருக்கின்றன. அவற்றுள் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் வாழ்க்கையை விவரிக்கும் 'சிதம்பர ரகசியம்' குறிப்பிடத் தக்கது. சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு, கவிதை, சிறார் இலக்கியம், திரையுலகம் என 150க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சீரிய புத்தகங்களைப் பதிப்பித்துள்ளது வம்சி. சிறுகதைப் போட்டிகளை நடத்தி, பரிசளித்து, தொகுப்பாகவும் வெளியிடுகிறது. 

எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக விளங்கும் பவாவின் வீடு கலை, இலக்கியவாதிகளால் எப்போதும் நிறைந்திருக்கும் ஒன்று. திரை, இலக்கிய உலகைச் சேர்ந்த பலர் பவாவுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். "எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு. பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதும் உத்வேகம் அளித்து வருகிறது" என்று நெகிழ்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

பவாவின் மகன் வம்சி, ஓவியம், இசை, இலக்கிய ஆர்வம் உள்ளவர். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறார். ஒரே மகள் மானஸா. குடும்பத்துடன் திருவண்ணாமலையில் வசித்து வரும் பவா செல்லத்துரை, தமிழின் வளர்ந்து வரும் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர். இவரது வலைப்பக்கம்: bavachelladurai.blogspot.in

அரவிந்த்

11 comments:

  1. Thanks arvind for your dedicated attempt about bava

    ReplyDelete
  2. சார் நீங்கள் 16 வயதிலேயே கதை எழுத ஆரம்பிச்சீட்டிங்களா

    ReplyDelete
  3. அழகான மொழியில், செறிவான, நிறைவான, சுகமான கட்டுரை பவாவைப் பற்றி. மிக்க மகிழ்ச்சி. பவா, நீங்கள் நிறைய எழுத வேண்டும். ப்ளீஸ்.

    கிருஷ்ணன்

    ReplyDelete
  4. முறையான அங்கீகாரம், மட்டற்ற மகிழ்ச்சி.
    சமீப விகடனில் உங்கள் கதையும் பிரமாதமாக இருந்தது.

    ReplyDelete
  5. தொடர்ந்தும் பவா நல்ல விடயங்களை இலக்கிய உலகில் பகிர வேண்டும் என்பதே என் விருப்பம்!

    ReplyDelete

  6. வணக்கம்!

    வலைச்சரம் கண்டேன்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. உங்களின் இலக்கிய பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. முறையான அங்கீகாரம் ????????விகடனில்....

    ReplyDelete