சனிக்கிழமை காலையே நாங்கள் இரு குழுக்களாகப்
பிரிந்தோம். ஒரு குழு ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த பால்சக்காரியாவின் ‘யேசு கதைகள்’ திறணாய்வுக்
கூட்டத்திற்காக வேலூருக்கும், இன்னொரு குழு ஓவியர்கள் சீனுவாசன் – பாலசுப்ரமணியன் உரையாடிய
நம்மோடுதான் பேசுகிறார்கள் புத்தகப் பகிர்வுக்காகச் சென்னைக்குமாகப் பிரிந்தோம். முதல்
குழுவில் தோழர்கள் அமலதாஸ், காளிதாஸ், ஆனந்தியும் எங்கள் குழுவில் கார்த்தி, ஜெய்,
சத்யா என்றும் அடங்கியிருந்தார்கள்.
நாங்கள்
சென்னை போய் சேர்வதற்குள் வேலூரில் நடந்த கூட்டம் பற்றிய செய்திகளை அவரவர் செல்போன்கள்
அவசரப்பட்டு அறிவித்துக் கொண்டேயிருந்தன.
கூட்டத்தில்
நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் பாதிரியார்களும், பேராசியர்களும்.
தொகுப்பிலுள்ள பதிமூன்று கதைகளைப் பற்றி பதின்மூன்று பேர் பேசுகிறார்கள் ஒவ்வொருவருக்கும்
ஒரு கதை. யாருமே யேசுவை மீட்பர் என்றும், கடவுளென்றும். உச்சரிக்கவில்லை.
சக்காரியாவுக்கு
மட்டுமல்ல நமக்கும் தோழன்தான் இந்த யேசு. தேவாலய பீடங்களிலிருந்து உச்சரிக்கப்படும்
இக்குரல்கள் பெரும் நம்பிக்கையூட்டுகின்றன. ‘அல்லேலுயா’ இதோ உள் ‘தேவனின் வருகை’ இயேசுவின்
இரத்தம் ஜெயம் என்ற அபத்தங்களற்று, யேசு ஒரு தோழனாக, நண்பனாக, சகோதரனாக, காதலனாகப்
பார்க்கப்படுகிறார்.
எங்கள்
கார் பயணம் நம்பிக்கைகளால் நிறைந்து கொண்டேயிருந்தது.
வேலூர்
கூட்டம் முடிந்து நேராக அவர்கள் புக்பாய்ண்ட்டுக்கு ஆறு மணிக்குள்ளாக வந்து சேர்ந்திருந்தார்கள்.
நாங்கள் பதினைந்து நிமிடத் தாமதத்தில் அங்கிருந்தோம். வரவேற்பறையில் புதுசு புதுசான
குஜராத்தி ஸ்வீட்ஸ் என்னை வம்புக்கிழுத்தன. சீனுவாசன் சார் பிடிவாதமாக அவர் புத்தகத்துக்கு
வந்திருந்த விமர்சனங்களைப் பேசும் நாவலாக்கியிருந்தார். அவை விரித்து வைக்கப்பட்டிருந்த
மேடை புதிய வண்ணங்களால் நிறைந்து தன்னைத் தேர்ந்தெடுத்த அந்த ஓவியனுக்கு நன்றி சொல்லிக்
கொண்டிருந்தன.
இரண்டு
பெண்கள் கச்சேரியில் பாடுவது போல சப்பராங்கால் போட்டமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
என் மனம் வரவேண்டிய விருந்தினர்கள் எஸ்.ரா, பிரபஞ்சனுக்காக அலைந்து கொண்டிருந்தது.
முன்வரிசையில்
நான் இன்றளவும் மிக மதிக்கும் ஆளுமை சே. ராமனுஜம் தன் வழக்கமான வெள்ளை பைஜாமா, ஜிப்பாவோடு
கால்மேல் கால் போட்டு கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இது எதுவுமில்லாமலேயே இயல்பான
கம்பீரத்தோடு கூத்துப் பட்டறை நா. முத்துசாமி அருகிலிருந்தார். அவருக்கும் பக்கத்தில்
நரசய்யா. இக்கூட்டத்திற்கு சம்மத்தமே இல்லாத நிறந்தோடும் அழகோடும் இன்னொரு பெண் இருந்தார்.
யாரையும் கேட்காமலேயே அவர்தான் சௌமியா அன்புமணி என அறிந்தேன்.
அடுத்து
முன் வரிசையில் தனியே தமிழச்சி இருந்தார். ஒவ்வொருவரும் அவரருகிலமர்ந்து ஓரிரு வார்த்தைகளில்
பேசிக் கொள்வதும், படமெடுத்துக் கொள்வதும், ஒவ்வொருவருக்கும் தர அவரிடம் தனித்தனியே
பிரியம் இருந்ததையும் கவனிந்தேன். அரங்கில் சீட்டுக்கட்டுகள் போல் கலைந்திருந்த கலைஞர்களில்
அங்கங்கே ஓவியர் மணியன் செல்வம், கோணங்கி, மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி என்றிருந்தார்கள்.
கூட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தமிழ் ஸ்டுடியோ அருண் என்னை முன்னுக்குத் தள்ளிவிட்டார்.
மேடையில்
நான் தனித்து நின்று அரங்கை ஒருமுறை கண்களால் பருகினேன்.
என்
சிறு வயது முதலே பார்த்து வியந்த ஆளுமைகள் அரங்கில் நிறைந்திருந்தார்கள். நடுக்கமில்லை.
ஆனாலும் பரவசப்பட்டேன். நாடகக்கலைஞர் சே. ராமனுஜம், கூத்துப்பட்டறை ந.முத்துசாமி, ஓவியர்.
மணியம் செல்வன், கோணங்கி ஆகியோருடனான என் பழைய ஞாபகங்கள் அடுக்கடுக்காய் நினைவில் கசிந்து
வார்த்தைகளால் ஒழுகியது.
புரிசையில்
தன் ஒவ்வொரு நாடகமும் நிறைவடைகையில் ராமனுஜம் சாருக்கு ஊர்மக்கள் அந்த நள்ளிரவில் மண்
மொந்தையில் அருந்த பனங்கள் கொடுப்பார்கள். அவர் ஒரு பச்சிளம் குழந்தையைக் கையிலேந்துவதைப்
போல அதை வாங்கி ஆயிரம் வாட்ஸ் வெளிச்ச உமிழ்தலுக்கிடையே குடிப்பார். ஒரு கலைஞனுக்கான
தைர்யமும் பெருமிதமுமது. இதை நான் சொன்னபோது ராமனுஜம் சார், ஒரு மணப் பெண்ணைப்போல முறுவலித்ததும்,
அருகிலிருந்த ந.முத்துசாமி அவர் தோளில் தட்டி காதில் ஏதோ கிசுகிசுத்தார். (என்னை விட்டுட்டு
போயிட்டேயாய்யா) அதற்கு அவர் அந்த அரங்கமே அதிர சிரித்தார். புரிசையில் கேட்ட அச்சிரிப்பைப்
பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கேட்டேன். தமிழச்சி, சௌமியா, பாரதி கிருஷ்ணகுமார்
ஆகியோர் தங்கள் தனித்துவத்தோடு பேசினார்கள். வழக்கமான தன் மேடை மொழியை உதறி, தன் அந்தரங்க
நண்பன் ஒருவனுடன் பாரில் பேசிக் கொள்வது போல கிருஷ்ணகுமார் பேசினது எல்லோரையும் கவர்ந்தது.
யாருமே
எதிர்பார்க்காமல் பட்டியலில் எப்போதும் இல்லாத கோணங்கியைப் பேச அழைத்தேன். அவனால் மறுக்க
முடியாது எனத் தெரியும். திருவண்ணாமலையில் இருபது வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஓர்
பேச்சைக் கிளறிவிட்டேன். அக்கருத்தரங்கில் அவன் உரையாடல் பாதியில் அறுந்ததை நினைவு
படுத்தினேன். அதை அப்போது நிறுத்தின பி.கே.வைப் பார்த்தேன். எல்லாரும் உன்மத்த மனநிலையிருந்தோம்.
கோணங்கி
சிரித்துக் கொண்டே மேடையை நோக்கி ஓடிவந்தான். காற்றில் அலைந்து கொண்டிருந்த ஒரு துவக்க
வார்த்தையைக் கையிலெடுத்தான், இல்லை ஏற்றினான்.
வார்த்தை
தீப்பிடித்துக் கொண்டது. முத்துசாமி அவன் நிகழ்த்து கலையை ஆழ்ந்து கவனித்தார். அரைமணி
நேரம் அம்மழை நீடித்தது. நான் முழுக்க நனைந்திருந்தேன். சீனுவாசனும் பாலு சாரும் தலைதுவட்டிக்
கொண்டிருந்தார்கள். எனக்கு அந்த ஈரத்திலேயே அறைக்குத் திரும்ப வேண்டும் போலிருந்தது.
நல்ல தருணங்களை பகிர்ந்ததிற்க்கு நன்றி.
ReplyDelete