Monday, December 16, 2013

பாமயனுடன் ஒரு மாலை


மூன்று மணிக்குத் துவங்க வேண்டிய உரையாடல் நான்கு மணிக்கு ஆரம்பித்தது. வழக்கமாக இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் ஒரு முகமும் இல்லாதது புதுசாயிருந்தது. விவசாயிகள் அறுபது எழுபது பேர் சேற்று கால்களுடனும், அழுக்கேறிய வேட்டி லுங்கிகளுடனும் குழுமியிருந்தனர். எங்கள் நிலத்தை பராமரிக்கும் சோமுவுக்காக வெகு நேரம் காத்திருந்தோம். நான் முதலில் இயற்கை வேளாண்மைக்கு சோமு, அவர் மனைவி கண்ணம்மாவின் மனதையும்தான் உழ வேண்டியிருந்தது. அதனாலேயே இந்த நீண்ட காத்திருத்தல்.
அநியாயத்திற்கு வெகு எளிமையாகவும், மென்மையாகவும் இருந்தார் பாமயன். நான் கற்பனை செய்திருந்த மனிதர் அவரில்லை. நான் ஒரு சிறு உரையாற்றினேன். அருகில் நாற்பது வருடம் இதில் உரமேறிய ஒரு மனிதனை வைத்துக் கொண்டு பேசுகிறேன் என்ற கவனமிருந்தது எனக்கு. ஆனாலும் எனக்கும் விவசாயத்திற்குமான உறவு அக்கரையை துவக்கத்திலேயே உடைத்தது.
தோழர் சொன்னது போல என வெகு இயல்பாய் தன் உரையை ஆரம்பித்தார் பாமயன். உள்ளடங்கியக் குரல், விவசாயிகளால் எட்டமுடியாத மொழி, ஆனாலும் அவர்கள் எல்லோரும் அம்மூன்று மணி நேரமும் அவருடனேயே இருந்தார்கள்.
அவர் ஒரு முறையும் உச்சரிக்கவில்லையெனினும், சேறும், வரப்பும், களையும், வயலும், உரமும், நீரும், சாமையும், கேழ்வரகும் அவரிடமிருந்து வந்தன. மிக மிக நிதானமாகப் பேசினார்.
நம் பரம்பரிய விவசாயம் எத்தனை மகத்தானது, யார் யாரெல்லாம் இதை எப்படி எப்படியெல்லாம் சீர்குலைத்தார்கள், நாம் எவ்விதம் இவர்களிடம் சிக்குண்டோம்? எதையெல்லாம் இழந்தோம்? இனி இழப்பதற்கு இந்த உப்பு சப்பற்ற வெறும் நிலம் தவிர வேறென்ன இருக்கிறது நம்மிடம்! அவரின் கேள்விகளில் நான் கொஞ்சம் கொஞ்சமாக உடைவதை உணர்ந்தேன்.
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டு மீந்துபோன வெடி உப்பைதான் ரசாயன உரமாக மாற்றினார்கள். இதையும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தி, நம் கைகளாலேயே நம் நிலத்தைப் பாழ்படுத்திய சூழ்ச்சியை விளக்கிக் கொண்டிருக்கையில்,
‘‘பூச்சி மருந்து அடிக்கலைன்னா, பூச்சிங்க நெல்பயிரை ஒரே நாளில் அரித்து வெள்ளையாக்கிருதே அதை எப்படி சார் போக்கறது?’’ என்ற அவசர அபயக்குரல் நாலா பக்கங்களிலிருந்தும் கேட்டது.
நாற்பது ஐம்பது வருடங்களாக சேறும் சகதியுமான குட்டையில் ஊறினவர்கள் நாம். ஒரே நாளில் ஒரு ரட்சகர் வந்து நம்மை தூய்மையாக்கி, சொஸ்த்தப்படுத்தி விடவேண்டுமென்ற அவசரமது.
பாமயன் மாதிரி தன் வாழ்நாளின் எல்லா நாட்களையும் இதற்காகாவே இழந்தவர்கள் ஒரு போதும் நிதானமிழக்கமாட்டார்கள்.
அவர் தன் பேச்சை இன்னும் சுலபப்படுத்த முயன்றார். மேலும் பூச்சிகளை மனிதன் எவ்வளவு முயன்றாலும் முற்றிலும் அழித்துவிட முடியாது. முடியுமெனில் நாம் ஏன் கொசுவை இன்னும் அழிக்கவில்லை. ஆயிரக்கணக்கான வகையுள்ள நம்மால் இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து அல்ல. நம்மிடமே உள்ள நம் பாரம்பரிய முறைகளை, அனுபவங்களை வைத்து மட்டும்.
‘‘களைகள் வயலுக்கான வரப்பிரசாதம்’’ என்று நிறுத்தி விவசாயிகளின் கலவரமடைந்த முகங்களைப் பார்த்தார்.
ஆமாம், எந்தெந்த இடங்களில் எந்தெந்த சத்து மிகுகிறதோ அங்கெல்லாம் அக்களைகள் செழிந்து வளர்கின்றன.
 “அது ஒரு விவசாயிடம் தன் செழுமையைப் பேசுகிறது. அவைகளைப் பிடுங்கியெடுத்து திரவமாக்கி, மீண்டும் வயல்களுக்கே தெளியுங்க. பயிர் சமப்படும். வயலிலிலிருந்து பிடுங்கப்பட்ட அக்களைகளை நீருற்றும் பைப் அருகிலேயே குவித்து வையுங்கள். அவைகள் அழுகி மீண்டும் நிலத்திற்கே போகும். எங்கெங்கே எந்தெந்த சத்து குறைகிறதோ அதை இவை இட்டு நிரப்பும்” இப்புதுத்தகவல் எல்லோரையும் அதிசயிக்க வைத்தது.
வயல்களிலும், செடிகளிலும், மரங்களில் இருந்தும் அகற்றப்படும் களைகளை, தழைகளை ஒருபோதும் எரிக்காதீர்கள். அது தன் எடையில், வீர்யத்தில் நூறில் ஒரு பங்காக குறைகிறது. அப்படியே எங்கிருந்து எடுத்தீர்களோ அங்கேயே, அதற்கே திருப்பித்தாருங்கள். பயிர் தன் தாவர கரங்களை உங்களை நோக்கி நீட்டி அதை வாங்கிக் கொள்கிறது. தயவுசெய்து அதன் மொழியை புரிந்து கொள்ள முயலுங்கள். அது பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள். உங்களையன்றி வேறு யாரிருக்கிறார்கள் அவைகளுக்கு. உங்கள் குழந்தைகளை வேரோடு அழிக்க  உரக்கடைகளுக்கு நீங்களே போவீர்களா?
சில இடங்களில் ஒரு கவிஞனுக்கும் மேலான இடத்தை சுபலமாக அடைந்தார்.
நம் கான்வென்ட் குழந்தைகள் பாவம். காரிலோ, ஆட்டோவிலோ, ஸ்கூல் வேனிலோ தினம் தினம் ஒரே பாதையில் பயணித்து, ஒரே ரைம்ஸ் பாடி, ஒரே பாடம்படித்து, அதே வாகனங்களில் திரும்பி, வீட்டுக்குள் அடைந்து போகிறார்கள். சின்ன வயதிலிருந்தே அவர்களை சமூக வாழ்வை மறுதலிக்க நாமே பழக்குகிறோம். வனங்களில் சுற்றித் திரிந்த யானைகளைக் குழிவெட்டிப் பிடித்து கொண்டு வந்து தெருக்களை சுற்றி பிச்சையெடுக்க சொல்லிக் கொடுத்த குரூர மனம் படைத்தவர்கள்தானே நாம்?
ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மாத சம்பளம் பெறும் ஒரு ஐ.ஐ.டி. பேராசிரியர் நினைத்தால் சென்னையிலோ, மும்பையிலோ தூய்மையான, நல்ல குளிர்சியான, வாகனப் புகையில் நனையாத ரெண்டு இளநீரைக் குடித்துவிடமுடியுமா?
அது நமக்கு மட்டுமே வாய்த்த பாக்யம். ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலைபார்க்கிறவனும், நான் முன்பு சொன்ன கான்வெண்ட் பையனும் ஒன்றுதான். ஒரே வித்தியாசம் அவன் கால்சட்டைப் போட்டிருப்பான். இவன் பேண்ட் போட்டு இன் பண்ணி டை கட்டியிருப்பான். ஸ்கூல் பையனைக் கூட்டிப் போக மஞ்சள் கலர் வேன் வரும்.ஐ.டி. பையனைக் கூட்டிப் போக நீலக்கலரில் கம்பெனி வேன் வரும், அவ்வளவு தான் வித்தியாசம். ஒரே பாதை, ஒரே அலுவலகம், ஒரே கேண்டீன். என்றும், நாள் முழுக்க கசங்காத அதே ‘டை’யோடு மீண்டும் கம்பெனி வேன். மாறாத அதே சாலை, அறை அல்லது வீட்டையடைதல். மீண்டும் இன்னொரு நாள். இவர்களுக்கு செத்துப்போனால் கூட எந்த சுடுகாட்டுக்கு எப்படி கொண்டுபோக வேண்டும் என்றுகூட தெரியாது.
இவர்கள் கான்வெண்டில் படித்து, கம்பெனியில் வேலை பார்த்து எதை தான் அடைந்தார்கள்? ‘பீட்சா’ வையும், கே.எப்ஃ.சி.யையுமா?
 ஒன்றுமேயில்லை. அதற்காக எல்லாவற்றையும் இழந்தார்கள்.
 பறக்காத ஒரு இனத்தை நாம் எப்படி கோழி என்பது? ஒரு நாட்டுக் கோழியின் வாழ்வை கவனித்து பாருங்கள். அதுவே தன் முயற்சியில் முட்டையை உடைத்துக்  கொண்டு வெளிவருகிறது. துருதுருவென தெருவெங்கும், குப்பையெங்கும் அலைந்துத் திரிந்து தனக்கான இரையைத் தானே தேடிக் கொள்கிறது. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எப்படியெல்லாம் ஓடி ஒளிந்து ஆட்டம் காண்பிக்கிறது. தன் சக கோழியோடு காதல் கொள்கிறது. கருத்தரித்து முட்டையிடுகிறது.
இது எதுவுமின்றி ஒரு கூண்டில் அடைபட்டு, லாரிகளில் ஏற்றி அடைக்கப்பட்டு, வரும் வழியிலேயே செத்து உதிரும் ஒரு இனத்தை எப்படி நாம் கோழிகளோடு ஒப்பிட முடியும். வேண்டுமானால் அவைகளை உயிருள்ள பிளாஸ்டிக் குப்பைகள் என அழைக்கலாம்.
‘‘பயிர்ல பூச்சி வந்தா என்னா பண்றது, அத சொல்லு சார்’’ ஒரு விவசாயி அவரை இடைமறிக்கிறார்.
பாமயன் ஒரு நிமிடம் அந்த சிமெண்ட் போடப்பட்ட களத்தையும், அதன் மீதமர்ந்திருந்தம் விவசாயிகளையும் உற்றுப்பார்க்கிறார்.
ஒவ்வொரு முகத்திலும் இழப்பின் வலியும், சீக்கிரம் மீளுவதற்கான முயற்சியும் தெரிகிறது. ஆனாலும் இத்தனை வருடங்களாக கட்டிக் காத்ததை தப்பேயெனினும் சுலபத்தில் விடமுடியவில்லை.
இயற்கை விவசாயம் என்பது உங்களை விடவும், புதிதாய் விவசாயத்திற்கு வரும் இளைஞர்களுக்கே சுலபத்தில் பிடிபடுகிறது.
ஏன்?
ஏனெனில் நீங்கள் ஏற்கனவே நிரம்பித் ததும்புகிறீர்கள். உங்கள் பாத்திரம் விஷநீரால் நிறைந்திருக்கிறது. நன்நீரை  அடைய மொத்தப் பாத்திரத்தையும் சொட்டு மீதியின்றி நீங்களே காலி செய்ய வேண்டும். அதன் பிறகே புதிய நீரை அதில் நிரப்பமுடியும்.
புதிதாய் விவசாயத்திற்கு வருபவர்களின் பாத்திரம் காலியானது. மட்டுமல்ல, தூய்மையானது. நேரடியாக அதில் நன்நீர்தான் நிரம்பும்.
எனக்குப் புரிந்தது.
சொற்கள் அவர் நாவுக்குள்ளேயே சுழன்றது. ஆனால் நீரிலிருந்தே வெளிக்காற்றை சுவாசிக்க தன் செவ்விதழ்களை விரித்து காட்டும் மீன்களைப் போல நாங்கள் அதை சுவாசித்தோம்.
கமலையில் நீரைத்த நம் பண்பாடு மிக உயர்வானது. யாருக்கும் தீங்கு நினைக்காதது. ஆழ்துளை கிணறுகளை பூமியில் அழுத்தி, அழுத்தி இல்லாதவனிடமிருந்த நீரை இருப்பவன் அபகரித்தான். நீரிழந்த உழவனை அதை விற்றுவிட்டு அல்லது விட்டுவிட்டு மூட்டைத் தூக்கவும், டெலிஃபோன் கேபிள் புதைக்கவும் பள்ளம் தோண்டவும், சித்தாள் வேலைக்கும் துரத்தினோம். மந்தை மந்தையாய் நம் நகர பேருந்து நிலைய கட்டாந்தரையில் அகதிகளைப் போல இரவுகளில் உழவனைப்படுக்க வைத்தோம். பெங்களூருக்கும், சீமோகாவுக்கும் பஸ் ஏற்றினோம். மாமரத்தடியில் காத்தாட படுத்துக்கிடந்த மத்தியானங்களை அவன் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டின் மூத்திர நாத்தத்துடன் பெங்களூரில் இருப்பு கொள்ளமுடியாமல் திணறுகிறான்.
தன்மரத்திலிருந்து இறக்கிய தூய பனங்கள்ளை தன் மரத்தடி நிழலிலேயே அமர்ந்து ஒரு மண்டலமருத்தி மகிழ்ந்தவனுக்கு சீமை சாரயத்தை நாம்தான் பழக்கினோம். பரந்துவிரிந்த தன் நிலப்பரப்புகளில் ஏதாவதொரு புதர்மறைவில் உடற்கழிவைப் போக்க உட்கார்ந்தவனிடம் கக்கூஸ் கட்டி அதற்கும் ஐந்து ரூபாய் கட்டணம் வாங்கி பீ நாத்தத்தில் உழல விட்டோம்.
பிடிவாதமாக போக மறுத்தவர்களை, அவர்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரனுக்கு ஈன விலைக்கு விற்க வைத்து, ‘தென்றல்நகர்’ ‘தீபம் நகர்’ என ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்ட இடங்களில் போடப்பட்ட தென்னங்கீற்று கொட்டைகளில் செக்ரியூட்டி ட்ரெஸ் போடவைத்து ஒரு உழவனை, மண்ணோடு சம்மந்தப்பட்டவனை, எத்தனை குரூரமாக பார்க்க ஆசைப்பட்டோமோ அத்தனை குரூரமாக பார்த்துவிட்டோம்.
ஒருமுறை இயற்கை வேளாண்மை அறிஞர் நம்மாழ்வரோடு திருச்சியிலிருந்து ஒரு நீண்ட கார் பயணம் போக வாய்த்தது, ஐந்து நிமிட எங்கள் மௌனத்தை அவர்தான் உடைத்தார்
 “என்ன பண்றீங்க தம்பி?”
       “E.B.யில வேல பார்க்கிறேன் அய்யா, ஆனா அடிப்படையில விவசாயி”
 “அதென்னா அடிப்படையில விவசாயி?”
 “அப்பா வாத்தியாராவும், விவசாயியுமா இருந்தார். நான் E.B.யிலேயும், விவசாயத்துலேயும் இருக்கேன்”
‘‘அப்படி ஆக்கிடுச்சி தம்பி நம்ம விவசாயம். தொரத்துது. எத்தன நாளக்கிதான் அது நம்பள தொடர்ந்து கடங்காரனா ஆக்கறதை சகிச்சிக்க முடியும்? ஆனா ஒருபோதும், என்ன கஷ்டத்திலயும் இருக்கிற நெலத்தை வித்திடாதீங்க தம்பி’’
 “ஒருபோதும் மாட்டேன்ய்யா, இருக்குற நெலத்தை வித்து புள்ளைக்கு மெடிக்கல் சீட்டோ, என்ஜினியரிங் சீட்டோ வாங்குற எண்ணமில்லை. அவங்களுக்கு சீர் பண்ணப்பட்ட நெலமும், தேனா இனிக்கிற ஊத்து நெறைஞ்ச கெணறும், ஒவ்வொரு நாளும் நானும் ஷைலஜாவும் பாத்து பாத்து வளத்த மரமும் மட்டுந்தான் நாங்க வச்சிட்டு போற ஜீவாமிர்தம்”
அவர் கைகள் என் கைகளை இறுகப் பற்றிக் கொண்டன. ‘‘தமிழ்நாடெல்லாம் சுத்தி சுத்தி இதத்தான் சொல்றேன்.  அவன் நெலத்தை அவனே ஈன வெலைக்கு வித்துட்டு அவனே செக்ரியூட்டியா நின்னு காவ காக்கறான்’’ சட்டென அவர் கண்களைக் கவனித்தேன். நீர் ததும்பி நின்றது.
அதற்கெல்லாம் பெயருண்டா என்ன? எழுதிவிட எழுத்துக்குத்தான் பலமுண்டா?

6 comments:

  1. தற்போது, 72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்துப்படுகின்றன.
    மற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்து கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டு பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு சாதகமான செயல்படுகின்றனர்.
    பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறு பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன.
    வேப்பிலை, நொச்சி, சோற்று கற்றாலை, எருக்கு, ஊமத்தை போன்றவை இயற்கையான பூச்சி விரட்டி மருந்துகளாகும். அதை காய்கறி தோட்டத்தில் பயன்படுத்துவதால், பூச்சிகளை விரட்டி அடிக்கப்படும். அவைகள் அழிந்து போகாது. சுற்றுச்சூழலும் பாதிக்காது.
    மனிதர்களையும் கொடிய நோய் தாக்காது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது தொடருமானால், வருங்காலத்தில் கொடிய நோய்களால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

    நம்மாழ்வார்

    ReplyDelete
  2. நீரிலிருந்தே வெளிக்காற்றை சுவாசிக்க தன் செவ்விதழ்களை விரித்து காட்டும் மீன்களைப் போல நாங்கள் அதை சுவாசித்தோம்...

    naangal suvasika irukirom...
    iyarkai vivasayathin pechu dhaan sila naatkalaga engu paarpinum...
    nambikai kolvom...
    maatram nigalum..

    ReplyDelete
  3. ஒரேடியாக நவீன விவசாயம் தீமையானது என நம்மாழ்வாரின் கூற்றை அப்படியே பிரதிபலிக்கும் கட்டுரை. நவீன அறிவியல் விவசாயத்தின் பாதகங்களை மட்டுமே கூறிவிட்டு, பாரம்பரிய வேளாண்மையின் நன்மைகளை மட்டுமே சொல்ல பழக்கப்பட்டு விட்டீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு அளவுகோல், மாறுதலின் தேவையை வைத்துவிட்டு விவசாயம் என்றபோது மட்டும் அனைவரும் ஒரு குடையின் கீழ் பாரம்பரிய வேளாண்மை தான் சிறந்தது என முடிவு எடுக்கிறார்கள். இலக்கியத்துக்கு அளவுகோல் இருக்கிறது. நவீன இலக்கியத்தில் சுஜாதாவின் இடம் உங்களால் கொடுக்கப்படவில்லை. தீவீர விமர்சனத்தின் படி அது சரிதான். அதே அளவுகோலை பாரம்பரிய (இயற்கை) விவசாயத்திற்கும் கொடுக்கலாமே? இயற்கை வேளாண் விஞ்ஞானி நமாழ்வாருக்கு இயற்கை உரங்களின் வேதிப் பண்புகள் தெரியுமா? இல்லை அதை உருவாக்கும் நுண்ணுயிர்களின் மரபணுக்களை பற்றி ஏதாவது தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. விவசாயம் பண்ண இயற்கை உரங்களின் பயன்பாடுகள் தெரியணும்.எதுக்கு வேதிப்பண்புகள் தெரியணும்.கண்முன்னே உணவு மலட்டு உணவாக மாறிட்டிருக்கையில் இந்த 'அதீத-extreme" குரல் தேவையானதே! இது உரக்கம்பெனிகளின் ஆக்டோபஸ் படையெடுப்புக்கு எதிரான குரல். கவிதைபாடும் தொனியில் சொல்ல முடியாது. ஒரே ஒரு விவாதப்புள்ளி பெருகிவரும் மக்கள்தொகைக்கு இயற்கை விவசாயம் ஒத்துவருமா என்பதே.அதை கொஞ்சம் கொஞ்சமாக பரிசோதனை முறையில்தான் நாம் பார்க்கணும்

      Delete
  4. டை கட்டிய மனிதர்கள் விவசாயத்திற்க்கு திரும்பும் நாள் வெகு தொலைவில் இல்லை. . என் வயலுக்கு செல்ல தூண்டும் பதிவு. அற்புதமான மற்றும் தேவையான பதிவு நன்றி.

    ஜெய்சங்கர், சென்னை

    ReplyDelete
  5. சட்டென அவர் கண்களைக் கவனித்தேன். நீர் ததும்பி நின்றது.
    அதற்கெல்லாம் பெயருண்டா என்ன? எழுதிவிட எழுத்துக்குத்தான் பலமுண்டா?
    அருமை....

    ReplyDelete