கோணங்கியின் ‘‘கைத்தடிக் கேட்ட நூறு கேள்விகள்’’ என்ற குறுநாவல் கவிஞர் மீரா தொகுத்த “சுயம்வரம்” தொகுப்பில் படித்து கரைந்து போன பல விவசாயிகளில் நானும் ஒருவனாக இருந்திருக்கக்கூடும். அக்கதை எனக்குத் தாளமுடியாத துக்கத்தை ஆழ்மனதில் விதைத்தது. அதில் வரும் சம்சாரி என் அப்பாதான். ஒவ்வொரு வருடமும் கூட்டுறவு தொடக்க வேளாண்மை சங்க பயிர் கடன் கட்ட முடியாமல், அதிகாரிகள் என்
வீட்டிலிருந்து டி.வி.யையும், பாத்திரங்களையும் தூக்க வரும்போது,
‘தாரளமா எடுத்துட்டு போங்க சார், என்ன பண்றது, வௌயில, கடன் கட்ட முடியல என நியாயத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து ஒதுங்கி நிற்கும் என் அப்பாவை அக்கதையில் மீண்டும் தரிசித்தேன். அக்கதையின்
சொற்களில் விஷமேறியிருந்தது. வாசிக்கிற உடல் நீலம்பாவித்தது. விட்டு,
விட்டு படித்து முடித்து, கோணங்கியைத்
தேட ஆரம்பித்தேன்.
கோவில்பட்டிக்கு அருகில் ஒரு
தொடக்க வேளாண்மை வங்கியின் செயலாளராக வேலை பார்க்கிறான் என்ற செய்தி நம்பமுடியாததாயிருந்தது. என்னதான் சுய அனுபவமாகவேயிருந்தாலும், ஒரு அரசு ஊழியனால் இப்படி எப்படி
எழுத முடிந்தது? என்ற கேள்வி என்னுள் தொடர்ந்து கொண்டேயிருந்தது. என் எதிர்பார்ப்பு பொய்யில்லையென்பது மாதிரி, அக்கதை பிரசுரமான சில நாட்களில் அவன் அந்த வேலையை விட்டுவிட்டதாக தகவல் வந்தது. மனம் ஏனோ நிம்மதியடைந்தது.
சைக்கிள் மிதித்து,
கூட இரண்டு ஆட்களை கூட்டிக்கொண்டு, ஒவ்வொரு சம்சாரி வீட்டுக்கும்ப்போய், அவர்களை மிரட்டி, கடன் கட்ட சொல்லி, அல்லது அண்டாகுண்டாவைத் தூக்குவோம் என அச்சுறுத்தி, அவ்வீட்டுப் பெண்களை அவமானப்படுத்தி, என்னப் பொழப்பு இது? ஒரு உன்னதமான கலைஞன் இதிலிருந்து மிகத் துரிதமாக வெளியேறிவிடுவான். கோணங்கி எனும் கலைஞன் இன்னும் முந்திக் கொண்டான்.
அப்புறம் ஊர்
சுற்றல்தான். எனக்குத் தெரிந்து தமிழ் நிலப்பரப்பில் அவனளவிற்கு ஒரு எழுத்தாளன் வெறிகொண்டலைந்திருக்க வாய்ப்பில்லை. வெயிலினூடே, கொல்லைமேடுகளில், மழையினூடே மூன்றாந்தர விடுதிகளில், பேச்சுத் துணைக்கு கிடைத்த நாலைந்து ஆரம்பகால வாசகர்களோடு ஒரு வேப்பமரத்தடி நிழலிலென அவன் அலைச்சல் ஆரம்பமானது. அதற்கான துவக்கம், அவசியம், முடிவு இதெல்லாம் முக்கியமில்லை. பல ஆயிரம் சமான்ய மனிதர்களின் மூச்சுக் காற்றை வெகு அருகிலிருந்து சுவாசித்தவன் அவனாய்தான் இருக்கமுடியும். அந்த அனுபவங்களை அவனால் எழுத முடியாது. அதை நேரடி சொற்களாக்கும் வித்தையை அவன் பயிலவில்லை. ஆனால் காத்திரமான தன் புனைவு வரிகளுக்கிடையில் நீங்கள் உணரும் உஷ்ணக்காற்று அம்மனிதர்களின் சுவீகாரம்தான். சுற்றிய நாகத்தின் அடைகாத்தலின் முட்டைகள் அவைகள். அது சொற்களுக்கிடையே மட்டும் சூட்டோடு சூடாக உறைந்திருக்கும். அதை முழுமையாக கண்டடைந்த அவன் வாசகர்கள் நானறிந்து நூறுக்கும் குறைவு. அதை அடைய முயன்று தோற்று வீழ்ந்தவர்கள் ஆயிரத்துக்கும் அதிகம். அதில் நானும் ஒருவன்.
சாத்தூர் நிலையத்தில்
ரயில் இளைப்பாற நிற்கும் சில நிமிட இடைவெளிகளில் தொங்கிய முலைகளுடன் ஓடிவந்து வெள்ளரி பிஞ்சுகள் விற்கும் மதினிமார்களின் துயரத்தை எந்த உருவானவனாலும் எழுதிவிட முடியாது. அது பிறப்பின் ஊற்று. சின்ன வயசில் அண்ணன் தம்பிகளிலிருந்து விலகிப்போய் குளத்தங்கரையில் நின்று கல்வீசி, நீரின் விதவிதமான சுழிப்பை தன் ஸ்நேகிதிக்குக் காட்டி சந்தோஷமடையும் ஒரு மனதிற்குதான் இந்நிமிடங்கள் வசப்படும். அது அவனுக்கு வசப்பட்டது.
இதுவரை யாராலும்
புரிந்து கொள்ளமுடியாத மானுட வாழ்வின் புதிர் அவனுக்கு வேறுவிதமாதப் பட்டது. தனக்கு அது முழுமையாய் வசப்படவே ஊர் ஊராய் சுற்றியலைந்தான். அதில் கிடைத்த அனுபவங்களை வாக்கிய ஒழுங்கை, வரிகளை, சொற்களை முன்னுக்குப் பின்னாக மாற்றிப் போட்ட ஒரு மனநிலை பிழன்றவனின் உலகமே கோணங்கியின் பிந்தையக் கதைகள்.
எல்லோரையும் போல
அவனும் சிறுவயதில் காதலுற்றிருந்த நாட்கள் உண்டு. அவன் பேரன்பைத் தாங்கும் வலு வாய்ந்த பெண்கள் நானறிந்து இல்லை. ஒரு சிறு சொல்லுக்கும், ஒரு வலுவான அசைவுக்கும் நெடுமர வீழ்வென வீழ்ந்துவிடும் கோணங்கியின் சரீர பலஹீனத்துக்கு முன் இன்றுவரை ஒரு பெண்ணுக்கான இடம் வெற்றிடமாகவே உள்ளது.
தான் இழந்த
காதலை, பாலைவன மணல், தனக்குள் ரகசியமாய் புதைத்துக் கொள்ளும் தெளிவான நீரைப்போல தனக்குள் தேக்கிக் கொண்டவன் அவன். அதன் ஈரக் கசிவில் துளிர்க்கும் பசுமையை, ஈவிரக்கமின்றி அவனே தீய்த்துக் கொண்டான். பூமியின் மேலல்ல, கீழ்வளர வேண்டியவைகள், அவன் அன்பின் வேர்கள் என்பது அவனுக்குத் தீர்க்கமாகத் தெரிந்திருந்தது.
அஸ்தமனங்களை வெவ்வேறு
நிலப்பரப்புகளில் நின்று தரிசித்த கணங்கள் அவனுக்கு வாய்த்திருந்தது. ஒரு நடுநிசியில் ராமச்சந்திராபுரத்துக்கும், வத்திராயிருப்புக்குமிடையே நின்றெரிந்து உதிர்ந்த வேப்பமர கசப்பைப் பருக வேண்டி, அதனருகிலேயே படுத்து தூங்கிய பித்தேறிய மனதை நான் வேறெங்கும் கண்டதில்லை.
கலைத்துப் போட்ட
சீட்டுகட்டென சிதறிக் கிடக்கும் அவன் எழுத்து எனக்குக் கைகூடவில்லையெனினும் அவன் கலைஞன்.
நான் ஷைலஜாவைக்
காதலிக்க ஆரம்பித்த தினங்கள் வெய்யிலேறியவைகள்தான். அது கைக்கூடி கனிய, கனிய மழைக்காலங்கள் முந்திக் கொண்டது. கரியான்செட்டி ஏரிக் கரைக்கு கீழே அறுத்துமுடித்த நெல்வயலின் மிச்சத்தில் நாங்கள் மூவரும் சுற்றி, சுற்றி நடந்து கொண்டிருந்தோம். அது வரையிலான துயரம், அதுவரையிலான வசந்தம், கோடை, மழை, இரவு, மரணம், ஜனனம் என வாழ்வின் எல்லாமும் எங்கள் மூவருக்குமிடையே சுழன்று, சுழன்று வந்தன. கோணங்கி என்ற கலைஞனை நானும் ஷைலஜாவும் முற்றாக கண்டடைந்தது, அன்றைய மாலைத் துவங்கி கருக்கிருட்டில், அந்த அறுத்து முடித்த வயல் சுற்றலின் போதுதான்.
இழப்பின் துயரம்
அவனிடம் உள்ளூர சொட்டு சொட்டாய் சொட்டிக் கொண்டிருந்தது. அதை துடைக்கவே அவனின் இடைவிடாத பயணங்கள். வீட்டின் இருப்பு, லௌகீகம் இவைகள் ஒரு விஷக்காற்றைப் போல வியாபித்து அவனை அங்கிருந்து ஓட வைத்தது. திசையெங்கும் ஓடி பின்னிரவுகளில் ஏதோஒரு பூட்டியக் கதவின் முன்நின்று கதவைத் தட்டுவான்.
நானோ, அப்பாவோ,
சில நேரம் அம்மாவோ கதவைத் திறப்போம். வாரி அணைத்துக் கொள்ளத் தோன்றும் ஒரு வளர்ந்த குழந்தையென அவன் வாசலில் நிற்பான். சில நேரங்களில் நனைந்து, சில நேரங்களில் உலர்ந்து, சில நேரங்களில் உறைந்து.
எதுவெனினும் எங்களுக்கு
ஒன்றுதான். எங்கள் சிறு கூரைவீட்டில், என்னருகே எப்போதும் அம்மா அவனுக்கென்று ஒரு கிழிந்த பாயைப் போட்டு வைத்திருப்பாள். அருகருகேப் படுத்து இரவெல்லாம் கதையோ, இன்னும் நெருங்கி ரகசியமோ பேசிக் கொண்டிருக்கும் எந்நிமிடமும் அதிலிருந்து அவன் விடுபடுவான். கலவியின் உச்சத்தில் திடீரென விடுபட்டு விலகிக் கொள்ளும் ஒரு ஆணைப்போல.
புதிர். யராலும்
விடுவிக்க முடியாத புதிர் கோணங்கி.
பார்த்த வேலையை,
ஒரு குறுநாவல் எழுதி ஒழித்தாயிற்று, கல்யாணத்தை மறுத்தாயிற்று. ஆனால் தன் உடலில் இன்னொருத் தோல் போல் போர்த்திக் கொண்ட தனிமையை அவனால் இன்றுவரை உதறிவிட முடிந்ததில்லை. அலைதல், அலைதலென தன் இளமை முழுவதுமே சுற்றியலைந்து அதை எங்காவது விட்டொழிக்க அவன் எடுத்த எல்லா முயற்சிகளிலும் தோற்றேப் போனான். தன் முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்டக் காலத்தில் ஒரு பெண் ஸ்நேகம் உள்ளூர அவனுக்குத் தேவைப்பட்டது. லௌகீக பயம் அதை வெளியில் மறுக்க வைத்தது. ஆனாலும் கோணங்கி பெண் பார்த்த கதையும், கோணங்கிக்குப் பெண் பார்த்த கதைகளும் இன்றளவும் சுவாரசியமானவைகள் தான். அவன் புனைவுகளைப் போல புதிர் நிரம்பியவைகள் அல்ல அவைகள். மாறாக எப்போது நினைத்தாலும் இதழோரம் ஒரு புன்னகையை, தனித்திருக்கையில் ஒரு வெடி சிரிப்பை வரவழைப்பவை.
எழுத்தாளர் தனுஷ்கோடி
ராமசாமி கோணங்கிக்கு ஒரு வகையில் உறவினர். அவனுக்கு ஆசிரியர் மாதிரியான ஸ்தானம் அவருக்கு உண்டு, கல்குதிரைக்கு காசில்லாத நாட்களில் கோணங்கி சுலபமாக தேர்ந்தெடுக்கும் அட்சயப் பாத்திரம் தனுஷ்கோடி ராமசாமிதான்.
ஜே.கே.போல மீசையும், கிருதாவும் வைத்து, சாத்தூரில் தன்னை ஒரு ஜே.கே வாகவே பாவித்து வாழ்ந்த தனுஷ்கோடி ராமசாமி ஒரு பள்ளியின் ஆசிரியராக இருந்து ஹெட்மாஸ்டராக பதவி உயர்வு பெற்றவர். பள்ளி முடிந்து வரும் சாயங்காலங்களில் கோணங்கி அவர் வீட்டில் திடுமெனப் பிரவேசிப்பான். பல நேரங்களில் கூட எஸ்.ராமகிருஷ்ணன்.
இலக்கியம் பேச
வந்த இந்த இருவரையும் பார்த்து குதூகலிக்கும் தனுஷ்கோடியை இருவரும் அருகிலிருக்கும் ஆற்றங்கரை மணலுக்கு அழைத்துப் போவார்கள். பெரும்பாலும் உரையாடல் இப்படி ஆரம்பிக்கும்.
‘‘உம்ம ‘‘அன்புள்ள’’ படிச்சோம்யா, கரிச மண்ணுலருந்து இப்படி ஒரு ஈரத்தோட இதுவரை ஒரு கதை வரலை’’
தனுஷ்கோடி ராமசாமியின்
உள்ளம் பூரிக்கும். இவர்கள் இருவரும் தன் படைப்பை பாராட்டுகிறார்களா? உள்குத்து இருக்கிறதா என்பதை அவர் அசைபோட ஆரம்பிக்கும்முன்பே, கோணங்கி,
“லாங்வேஜ், லாங்வேஜ்ல கொண்னுட்டீரு, புதுமைப்பித்தனெல்லாம் தாண்டிட்டீரு” என அடுத்தடுத்த வாக்கியங்களில் அவரை அசைபோட விடாமல் அண்டைக்கட்டுவான். நீர் தேங்கித் தளும்பும் போது,
அடுத்த “கல்குதிரை இஷ்யூ கொண்டு வரணும், பத்து ரூவா செலவாகும், ஒண்ணோ, ரெண்டோ தந்து உங்க பங்கை நிறைவேத்தணும்” என்ற கோரிக்கையை உலகில் எவனாலும் நிராகரிக்க முடியாது. அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து, சாப்பாடுப் போட்டு, மனைவிக்குத் தெரியாமல் கையில் அவர் தந்த ஆயிரம் ரூபாய் கதைகள் அடுத்த நாள் இன்னொரு ஊரில் அமர்க்களப்படும்.
பஸ் ஏற
வரும்போது வழியில் தேவதச்சன் மாதிரி யாராவது பார்த்து, ‘எங்க கோணங்கி’ எனக் கேட்டால், தனுஷ்கோடி ராமசாமி சார் வீட்டு வரைக்கும் என்பதோடு பதில் முடியாது. ஆற்றில் அவரிடம் பகிர்ந்து கொண்டதற்கு முற்றிலும் ஒரு எதிர்கருத்தை போகிற போக்கில் சொல்லிவிட்டு பஸ் ஏறிவிடுவான். கேள்விப் படுகிற படைப்பாளிக்கு பத்து நாள் தூக்கம் போகும். ஆனால் எல்லாமும் இலக்கியத்துக்காக மட்டுமே. ஒரு சிறு பத்திரிகையை கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற லட்சியத்தின் நிறைவேறலுக்குத் தேவையான பணத்துக்கு மட்டுமே இதெல்லாம். அருகில் வைத்து அணைத்துக் கொள்ளவோ, முற்றிலும் உதறிவிடவோ முடியாத ஆளுமை அவன்.
நிற்காமல் தொடர்ந்த
அவன் பயணத்தில் உடன் தொடர்ந்து, இடை நின்ற சக பயணிகள் பலர், எஸ். ராமகிருஷ்ணன், கைலாஷ்சிவன், பாரதி, நான் என இவ்வரிசை நீண்டு கொண்டே போகும்.
தனுஷ்கோடி ராமசாமி
ஒரு போதும் கோணங்கியின் மீது கோபம் கொண்டவரில்லை. அவனுக்காக ஒரு பெண் பார்த்தார். பெண் எம்.ஏ., பி.எட்., படித்து வாத்திச்சி வேலை பார்த்து விழுப்புரத்துக்கு பக்கத்தில் கண்டமங்கலத்தில் குடியிருந்தவள். பெண் பார்க்கப் போவதற்கு முதல் நாள் இரவு அப்போதைய கல்குதிரை இதழோடு வீட்டிற்கு வந்தான். (மார்க்வெஸ் இதழ்) எங்கள் நிலத்து கயிற்றுக் கட்டிலில் படுத்து, ராமசாமி தனக்குப் பெண் பார்த்து வைத்திருக்கிற கதை சொன்னான். லௌகீக வாழ்வின் நுழைவாயில் அவனுக்கு பெரும் வேடிக்கையாக இருந்தது. உள்ளூர அது தேவையாயும் இருந்தது. காலையில் பம்ப்செட் குளியல். குளித்து முடித்து ஈர லூங்கியோடு இரண்டுபேரும் பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்தோம்.
எப்போதுமே கோணங்கிக்கும்
முருக பூபதிக்கும் என் பீரோவை திறந்து விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தேவையென்றுக் கருதும் எத்தனை சட்டைகள், பேண்ட்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஆசையாசையாய் கோணங்கி எடுத்து அடுக்கும் ஐந்தாறு டி.ஷர்ட்டுகளும் அவன் போகும்போது என் வீட்டு கட்டில் மீதே கிடக்கும். நிமிடத்துக்கு நிமிடம் மாறும் விசித்திர மனநிலை அவனுக்கு.
கண்டமங்கலத்துக்கு என்னையும் கூப்பிட்டான்.
நான் உறுதியாக மறுத்து, இதெல்லாம் விளையாட்டில்லை கோணங்கி, வாழ்க்கை. பார்த்து, பிடித்திருந்தால் சொல், ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டு அப்புறம் அவளோடு சேர்ந்து ஊர் சுத்தலாம் என்றதற்கு,
‘‘டே அவ பி.எட்றா, ஸ்கூலுக்கு
போவட்டும், நான் தனியா போய்க்கிறேன்’’ என சொல்லும்போது அவன் கிட்டதட்ட பறக்கும் கம்பளத்தில் பறப்பதை போலிருந்தான். உள்ளுக்குள் ஏதோ தீர்மானம் உறுதிப்பட்டிருக்க வேண்டும்.
பையை வீட்டிலேயே
வைத்து விட்டு கையில் ஐந்து பிரதிகள் கல்குதிரையோடு நான் தான் கண்டமங்கலத்திற்கு பஸ் ஏற்றிவிட்டேன். கோணங்கி ஒரு குடும்பஸ்தனாக ஆகப் போகிறான் என்ற சந்தோஷத்தில் என் அம்மா ரெண்டு கோழிகளாக அடித்து குழம்பு வைத்தது. அப்பாவுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. ஏனோ அன்றைய மதிய சாப்பாடு தாமதமாகிக் கொண்டேப் போனது. பசி தாள மாட்டாமல் அம்மாவிடம் கத்தியபோது அம்மா, ‘கொஞ்சம்
பொறுடா, கோணங்கி மதிய சாப்பாட்டுக்கே வந்துருவேன்மா, கோழி அடிச்சி கொழம்பு வேணுன்னு கேட்டுச்சி, எப்படியும் வந்துரும்’ என்றாள் பெரும் அம்மாவின் நம்பிக்கையை அவன் எப்போதும் பொய்யாக்கினதில்லை. சொல்லி முடிப்பதற்குள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினான். போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல். கையில் அவன் கொண்டு போன கல்குதிரை இதழ்கள் இல்லை.
‘கையிலிருந்த இஷ்யூஸ் எங்க?’ என நான் கேட்டதற்கு, என் தோள்களில் செல்லமாய் தட்டி, இர்றா சொல்றன், மொதல்ல சாப்பிடலாம் என சற்றுமுன்வரை பெரும் அலைச்சல் காட்டிய கோழிகளின் முன் சாப்பிட உட்கார்ந்தோம்.
‘‘என்னப்பா எல்லாம் நல்லபடியா கூடி வந்துடுச்சா?’’ இது அப்பா,
“என் மூத்த புள்ளக்கு என்னா வாத்தியாரே, மகாராசா மாதிரி,” - இது அம்மா,
“என்னதான்டா ஆச்சு?” இது நான்.
எல்லா கேள்விகளும்
சோற்றுத்தட்டில் விழுந்து கொண்டேயிருக்க, பதிலுக்கு அதிலிருந்த கோழிகறித் துண்டுகள் அவன் வயிற்றுக்குள் போய்க் கொண்டேயிருந்தன.
சாப்பிட்டு முடித்து,
கைத்துடைத்து அப்பாவுக்கு முன்னிருந்த கட்டிலில் உட்கார்ந்து,
‘‘அதெல்லாம் நமக்கு கல்யாணல்லாம் சரிபடாதுப்பா, மொதல்ல அது பொண்ணு இல்ல. பொம்பளை’’
நான் ஆர்வமாகி,
‘என்னதான் நடந்துச்சி’
என கேட்க ‘அவங்கவீட்ல ரொம்ப நேரமா என்னை எதிர்பார்த்து தடி, தடியா ஆறேழு ஆளுங்க காத்திருந்தாங்க. என்ன பாத்ததுமே பாதிப் பேருக்கு அதிர்ச்சி. தாங்கிக்கிட்டு அமைதியாயிருந்தாங்க.
“பொண்ணு பேரு?”
“சிவகாம சுந்தரி எம்.ஏ., பி.எட்.,”
“ நான் சிவகாம சுந்தரியோட தனிமையில பேசனுன்னு யார் மூஞ்சியையும் நேரா பாக்காமலே சொன்னனா,”
“பேசுங்க
பேசுங்க, வாழப் போறவங்க என்று சொல்லி ஒரு ரூமைத் தொறந்து விட்டாங்க”
“என்ன
பேசன?”
கோணங்கி முதல் முதலாய் வெட்கப்பட்டு நான் பார்த்தேன்.
“வாசிப்பீங்களா”ன்னு கேட்டேன்.
“ம்”
“என்ன
வாசிப்பீங்க?”
“சங்க
இலக்கியம், சீவக சிந்தாமணி, கம்பராமயணம், அப்படியே ஆனந்தவிகடன், குமுதம்”
சீவக சிந்தாமணியிலிருந்து
நேரா ஆனந்த விகடன்தானா? இடையில புதுமைப்பித்தன், கு.பாரா, மௌனி, நாகராஜன்லாம் தெரியாதான்னு கேட்டா அவங்ககெல்லாம் யாரு?ன்னு தரையைப் பாத்துக்கிட்டே கேட்டுச்சு,
“நீ
என்ன பண்ணே?”
“கல்குதிரை
கொண்டுவர படும் கஷ்டத்தை கண்கலங்கச் சொன்னேன், தாங்கமாட்டாம, அது ஹேண்ட் பேக்கைத் தொறந்து ஐநூறு ரூபா கொடுத்து அஞ்சு இஷ்யூவையும் வாங்கிக்கிச்சு’’
இப்போதும் சிரிக்காமல்
சொன்னான்.
ஆக அஞ்சு
இஷ்யூவைக் காசுக்கு வித்திட்ட என சிரித்தபோது, “அதெல்லாம் நமக்கு ஒத்துவராதுடா, சின்னதா, உடம்பு போடாத, என் கூடயே ஓடிவர மாதிரி ஒருத்தி கிடைப்பாடா” என்றான்.
அவனுக்கு அந்த
ஒருத்தி வெகு சீக்கிரமே கிடைத்தாள்.
ஒரு ஊர்
சுற்றியின் மனதை இழுத்து நிறுத்த நினைத்த அவள் வேலூரில் இருந்தாள். டீச்சர் ட்ரெய்னிங் முடித்து, கோணங்கியின் கதைகள் வரை படித்திருந்த அப்பெண்ணிற்கு இருபது வயதிருக்கலாம். அவள் பெயர் ஸ்ரீ.
ஒரு கவிதைக்கும்
மேல் அவனுடனான அவள் வாழப்போகும் தருணங்கள் அந்த உரைநடைக்காரனால் எனக்கும் ஷைலஜாவுக்கும் பரிமாறப்பட்டது. அல்லது அக்கவிதை கணங்கள் ஒரு மேகக் கூட்டமாய் எங்கள் மேல் கவியத் தொடங்கியது. அதிலிருந்து விடுபடாமலேயே அடுத்த நாள் காலை, ஷைலஜா வீட்டில் வேலூருக்கு ஹால்டிக்கட் வாங்கப்போவதாக பொய் சொல்லிவிட்டு கோணங்கிக்கு பெண் பார்க்க பஸ் ஏறின நாள் ஒரு ஆகஸ்ட் 15. அது சுதந்திர நாள் மட்டுமல்ல அப்பாவின் பிறந்தநாளும் கூட.
அவளை அனுப்பிவிட்டு நானும் கோணங்கியும் நிலத்திற்குப் போனோம். அன்று மாலைவரை அவனிடமிருந்து, எப்போதோ வாசித்து மனதில் இருத்தியிருந்த பாரதி, மாயகோவஸ்கியின் காதல் கவிதைகளாக கசிந்து கொண்டிருந்தன. அக்கவிதைகளெங்கும் அவன் ‘ஸ்ரீ’ ஒளிந்திருந்தாள்.
ஒவ்வொரு பத்தாவது
நிமிடமும் எங்கள் நிலத்துக்கு வரும் ஒத்தையடி பாதையில் ஒரு ஆட்டோவை எதிர்பார்த்து அவன் தவித்திருந்தான்.
மாலை ஆறு
மணி போல ஷைலு, அவ்விதமே ஒரு ஆட்டோவில் வந்திறங்கினாள். கிணற்று மேட்டிலிருந்து கிட்டதட்ட ரெண்டு பேருமே ஓடினோம்.
அவள் முக
வாட்டத்திலிருந்து விஷயம் காயென எனக்குப் புரிந்தது. அவள் முகத்தை பார்த்து அறிந்து கொள்ளும் நுட்பமான நிமிடங்களில் அவனில்லை.
‘‘தனியா வா, எங்கிட்ட மட்டும் சொல்லு, இவன்கிட்ட சொல்லாத’’ என ஒரு குழந்தையின் குதூகலத்தில் அவனிருந்தான்.
நான் கிணற்று
மேட்டில் தனியே உட்கார்ந்திருக்க அவர்களிவரும் பேசிக் கொண்டே நடந்தார்கள். அந்நடை திப்பகாடுவரை நீண்டது. அவர்களிருவரும் ஒரு சிறு புள்ளிகளாய் எனக்குத் தெரிய ஆரம்பித்தபோது. அப்புள்ளிகள் என்னை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாகிக் கொண்டே திரும்பின.
என்னை சமீபித்ததும்,
காத்திருந்த ஆட்டோவில் ஏறின ஷைலஜாவின் கைப்பிடித்து அவள் முகம் பார்த்தேன். அவள் ஏற்கனவே எனக்காக மிச்சம் வைத்திருந்த இரு சொட்டு கண்ணீர் என் விரல்களின் மீது விழுந்தது.
நாங்கள் எல்லோருமே
உணர்வு பூர்வமாக இருந்தோம். மௌனத்தோடே பிரிந்தோம். அன்றிரவு வீட்டுத் தரையில் கொட்டிப் பரப்பியிருந்த பச்சை மல்லாட்டை குவியலின்மீது பாய் விரித்து நானும் கோணங்கியும் படுத்திருந்தபோது மெல்ல கேட்டேன்.
“ஸ்ரீ
என்ன சொல்லுச்சாம்?”
“நீ
ஷைலுக்கிட்டக் கேட்டுக்கோ” எனத் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
அடுத்த நாள்
அதிகாலையிலேயே அவனைத் தனித்திருக்க வைத்துவிட்டு என் சைக்கிளை எடுத்துக் கொண்டு பாவாஜி நகரிலிருந்த ஷைலஜா வீட்டிற்குப் போனேன்.
காலையிலேயே அவள்
என்னை எதிர் பார்த்து உட்கார்ந்திருந்தது மாதிரியிருந்தது.
“என்னாச்சு
ஷைலு?”
“சொல்றேன்”,
நாங்களிருவரும் அவள் வீட்டு மொட்டை மாடிக்குப் பின்பக்க படிக்கட்டுகளில் ஏறிப் போனோம். தொட்டு விடும் தூரத்தில் தாமரைக் குளத்தின் நீரலை
மெல்ல கரைகளில் மோதிக் கொண்டிருந்தது, அப்போதைய மனநிலைக்கு ரொம்ப உகந்ததாயிருந்தது.
“பேசினேன்
பவா”
“ம்”
“கோணங்கி
அண்ணனை ரொம்பப் பிடிக்கும், எங்க அண்ணாவுக்கு ஃப்ரெண்டு. வீட்டுக்கு வரும்போது அவரு சட்டைல்லாம் கூட தொவச்சு போட்டு இருக்கேன்க்கா”,
‘‘ரொம்ப அலாதியான கலைஞன் ஸ்ரீ அவன்”.
“நானும் அதான்க்கா சொல்றேன். அவர தூர இருந்து வேடிக்கை பாக்கலாம். ஆழமா வாசிக்கலாம். கூடல்லாம் வாழ முடியாதுக்கா’’ தெளிவான மிடில் கிளாஸ் பெண் ஸ்ரீ.
எனக்கு தாமரைக்
குளத்தின் பச்சைநிற அழுக்குத் தண்ணீரின் அலம்பல் சத்தம் இன்னும் துல்லியமாய் கேட்டது. ஷைலு வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்.
நான் எதிர்பார்த்தபடியே
அவன் போய்விட்டிருந்தான். இப்போதுதான் அவனைப் பிரிந்த தற்காலிகத் துயர் அப்பாவிடமிருந்தது.
‘‘எங்கப்பா கோணங்கி?’’
‘‘இப்பதான் போறாப்பலே, அடுத்த இஷ்யூ கல்குதிரை தயாரிக்கிற வேல இருக்காம்’’
இதோ இப்போது
என் முன்னே கல்குதிரை, இளவேனிற்கால இதழும், முதுவேனிற்கால இதழுமாய் சேர்ந்து கிடக்கிறது.
இனிமேல் கோணங்கி
எங்காவது பெண் பார்க்க போவானேயெனில் கையில் கல்குதிரை இதழ்களை எடுத்து செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் அனைவரின் இலக்கிய, லௌகீக கடமை.