நாலு
பேரும் நிச்சயமாக இருப்போம். அது நிரந்தரம். பல நாட்களில் ஆட்கள் கூடும், குறையும். சாயங்காலம் ஐந்து மணிக்கு பின்பே சைக்கிளில் கிளம்புவோம். போக வேண்டிய ஊரும், சந்திக்க வேண்டிய ஆளும் கண்முன் வருவார்கள். அதிகபட்சமாக திருவண்ணாமலையிலிருந்து பத்து கிலோ மீட்டருக்குள்தான் நாங்கள் சேர வேண்டிய ஊர் இருக்கும்.
சைக்கிள் மிதிக்க, திரும்பிவர என அதற்கு மேல் முடியாது. நான், காளிதாஸ், கருணா, சுகந்தன். எங்களுக்கான பிண்ணனியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம். சுகந்தன் ஒரு காட்டாறு. அது எப்போது உடையும், எப்போது திரும்பும், எப்போது கலக்கும் என்பது எங்களாலேயே உறுதிசெய்ய முடியாதது. ஆனாலும் கூட அந்த காட்டாறு எப்போதும் எங்களுடனே அமைதியாகவே வந்து கொண்டிருந்தது.
சென்றடையும்
ஊரில் பார்க்கவேண்டிய ஆள், மிக மும்முரமாக நாடக மேடை போட்டுக் கொண்டோ, எங்களுக்கான இரவு சாப்பாட்டை செய்து கொண்டோ இருப்பார். தோழர் காளிதாஸ் அவரை வாஞ்சையோடு அழைத்து, ‘ஏழெட்டு பேரு வேணும்பா’ என்பார்.
‘‘எதுக்கு சார்?’’
“எங்க கூட
நடிக்கத்தான்” முறுவலிக்கும்
உதட்டோடு, வெட்கப்படும் முகத்தோடு, உந்தித்தள்ளும் ஆர்வத்தோடு, வேஷம் கிடைத்த பெருமிதத்தோடு எப்போதும் பத்து பதினைந்து பேர் கிடைப்பார்கள்.
பெரும்பாலும்
ஒத்திகை பூட்டியிருக்கும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் வராண்டாக்களில்தான். ஒவ்வொரு கிராம புற பள்ளிக்கூடத்திற்குமென ஒரு தனி வாசமிருக்கும். அது
அன்று பகல் முழுக்க பிள்ளைகள் விட்டு விட்டுப் போன வாசம். நாங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வாசத்தை நுகர்ந்திருக்கிறோம். முன்னூறு முறைகளுக்கு மேல், முன்னூறு கிராமங்களுக்கும் மேல் போடப்பட்ட அந்த நாடகத்தின் பெயர் ‘விபரமில்லாதவர்கள்’ கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் காளிதாஸ்தான்.
கிராமத்திருவிழாவிக்களில்,
கூழ்ஊற்றினதுக்கு மறுநாள் நடக்கவேண்டிய தெருக்கூத்தை மாற்றி சமூக நாடகங்கள் அரங்கேறத் துவங்கியிருந்த ஆரம்ப நாட்களை காளிதாஸ் பி.ஏ. ஆக்ரமித்திருந்தார்.
அப்படி ஒரு சமூக நாடகத்தின் முடிவில் நான் சிறப்புரை ஆற்ற வேண்டும். நாடகத்தில் ஆடலும், பாடலும், கலர் கலரான பெண்களின் (ஒரு இரவில் நடிக்க அதிகமில்லை, ஜென்டில்மேன் ஒன்லி டூ ஹண்ட்ரன்ட்) டப்பாங்குத்துமாய்
வாழ்வை நாடக மேடைகளில் வாழ்ந்த காளிதாஸ் பி.ஏ.வை நான் ஒரு கைக்கொடுத்து கீழிறக்கினேன்.
முற்றாத
பல இரவுகளில் எங்கள் உரையாடல்கள் நீண்டன. சொற்கள் தடித்தும், கனிந்தும், குழைந்தும் சுழன்றன. முடிவில் காளிதாஸ் என்னைப் பார்த்து, “நான்
என்னதான் செய்யணுன்னு சொல்றீங்க?” என்றார்.
“ஒண்ணும் செய்யக் கூடாது”
“அப்ப நான்
போடறதெல்லாம் நாடகமில்லையா?”
“இல்லை”
“அப்புறம்
எதுதான் நாடகம்?”
அதன்பிறகு
நாங்கள் பகலிரவென சுற்றினோம். ப.செயப்பிரகாசத்தின் கதையில் வரும் ஒரு நாடகப் பார்வையாளனின் பீடிக்கங்கின் புகை, தமிழகத்தில் நவீன நாடகங்கள் நடந்த எல்லா ஊர்களிலேயும் அலைவுற்றதுபோல நாங்களும் அலைந்தோம். அப்போது காளிதாஸ் சத்துணவு அமைப்பாளராக வேலைசெய்து கொண்டிருந்தார். எங்களை நாடகம் பார்க்க அனுப்பிவிட்டு அளவோடு அரிசி பருப்பு எடுத்து ஆக்கிப் போட்ட சத்துணவு ஆயாக்களின் உழைப்பும் இதன் பிண்ணனியில் மேகங்கள் மாதிரி கடக்கிறது.
தமிழ்
நவீன நாடகங்கள் பார்க்கவென நாங்கள் அலைந்து திரிந்து கண்டடைந்ததுதான் பிரளயனின்
‘நாங்கள் வருகிறோம்’ பாதல் சர்க்காரின் ‘முனியசாமி’ பிரபஞ்சனின் ‘முட்டை’ மு.ராமசாமியின் ‘ஸ்பார்டகஸ்’ நா.முத்துச்சாமியின் ‘நாற்காலிக்காரன்’ இந்திரா பார்த்தசாரதியின் ‘கொங்கைத்தீ.
திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியின் மாணவ விடுதியின் பரந்த ஹாலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த எங்களை அதிகாலை ஐந்து மணிக்கே எழுப்பி, கதகதப்பாக ஒரு டீ கொடுத்து, அம் மைதானப் புல்வெளியெங்கும் பனி படர்த்திருக்கும் அதிகாலையிலேயே, மு.ராமசாமியின் ‘ஸ்பார்டகஸ்’
பார்த்தோம். எங்கள் மூவரைப்போலவே, அந்நாடகம் பார்த்த மூந்நூறு பேருமே அதிகாலை அதிர்ச்சியில் உறைந்திருந்தார்கள்.நவீன தமிழ் நாடகங்களின் முக்கிய ஆளுமையான முருகபூபதியை முருகன் என்ற பி.ஏ., இரண்டாமாண்டு மாணவனாக அங்குதான் முதலில் பார்த்தேன். மெல்ல எழுந்து நானும் காளிதாசும் காம்பவுண்டுக்கு வெளியே போனோம்.
‘‘ஒரு
நாடகம் எப்படியான புது
அனுபவத்தை, உறைநிலையை ஒரு பார்வையாளனுக்கு வழங்குகிறது பார்த்தீர்களா…? இந்த அனுபவத்தை நீங்கள் போட்ட சமூக நாடகங்கள் ஏன் உருவாக்கவில்லை?’’
நான்
கேட்டு முடிப்பதற்குள் அவர் கபகபவென இரண்டு சிகரெட்டுகளை ஒன்றாய் இழுத்திருந்தார். இரவு ஊருக்குத் திரும்பும் வரை அநேகமாக நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அடுத்தடுத்த விவாத முற்றலில், அவர் ‘‘விவரமில்லாதவர்கள்’’ என்ற சமூக நாடகமுமில்லாத, நவீன நாடகமுமில்லாத இரண்டிற்கும் இடையிலான வடிவத்தில் ஒரு புதுநாடகத்தை உருவாக்கினார். அது ஒவ்வொரு கிராமத்தின் பார்வையாளனுக்கேற்ப, பருவ நிலைக்கேற்ப, மைக் செட்காரனின் மனநிலைக்கேற்ப கூட்டிக்கொள்ளவோ, குறைத்துக்கொள்ளவோ பட்டது. நான் தான் அந்நாடகத்தின் முக்கிய கதாபாத்திரம். காளிதாஸ் என்னிடம் லோன் கேட்டு வரும் விவசாயி.
நான் மேடையில் அமர்ந்து அலுவலக ஃபைல் பார்த்துக்கொண்டிருக்கும்போது, திரண்ட பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்து திடீரென எழுந்து, ஏர் பூட்டிய இரு காளைமாடுகளின் பாவனையில் காளிதாஸ் மேடையேறி வர, அரைமணி நேரமாவது ஆகும். அந்த அரைமணிநேரமும், பார்வையாளர்களிடம் எழும் கைதட்டல்களும், பீறிடும் உற்சாகமும், எழும் விசில் சத்தங்களும் அக்கலைஞனின் நடிப்புக்குக் கிடைத்த கௌரவங்கள்.
அந்நாடகத்தில் எழுதி, வரையறுக்கப்பட்ட எந்த வசனங்களோ காட்சிகளோ இல்லை. பார்வையாளர்களின் அன்றைய மனநிலைக்கேற்ப, எங்களை தகவமைத்துக் கொள்வோம். எப்போதோ படித்த ஒரு கவிதை வரியைப் போல ‘அது
ஒரு காலம், கார்காலம்…’
இரவு பத்துக்கும் பதினொன்றுக்கும் இடையே எங்கள் நாடகம் முடியும். ஊர்க்காரர்கள் தரும் உப்புமாவையோ சுடுசோற்றையோ சாப்பிட்டுவிட்டு, பின்னிரவுகளின் அடர்ந்த கருக்களில் எங்கள் சைக்கிள்கள் ஊர் திரும்பும். வழிநெடுக அந்நாடக நிகழ்வின் ஒவ்வொரு நிமிடங்களும் எங்களால் ஆராதிக்கப்படும். என் ஞாபகம் பொய்சொல்லாது என்பது நிஜமானால், குறைந்தது முந்நூறு பார்வையாளர்களும், அதிகபட்சமாக ஐயாயிரம் பார்வையாளர்களையும் நாங்கள் இந்நாடக நிகழ்வுகளின்போது சந்தித்திருக்கிறோம்.
ஆனாலும் காளிதாசுக்கு அடிமனதில் தன் ஆரம்பகால உரையாடல்கள் மிகுந்த ஜிகினா மின்னும் மேக்கப்போடு, ஒரு பாடலுக்கு ஆடிவிட்டுப் போகும் பெண்கள் நிறைந்த நாடகங்களின் மீது அப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கவே செய்தது. அதற்கான வாய்ப்புகள் வரும்போதெல்லாம் தன் காதலியிடம் இரகசிய முத்தங்கள் வாங்கத் துடிக்கும் ஒரு காதலனின் உற்சாகமேறியிருக்கும் அவர் முகம் இன்றைக்கும் நினைவிருக்கிறது.
அப்போது திருவண்ணாமலையிலிருந்து மாதமொரு இதழாக வெளிவந்த தீபஜோதி பத்திரிகையின் சார்பாக, மீனாட்சி கல்யாண மண்டபத்தில் ஒரு முழுநீள நாடகம் நடத்துவதென்றும், ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிருந்தா, கலைமாமணி விருது பெற்ற தில்லைராணி ஆகியோர் அதில் நடிப்பார்கள் என்றும் அந்நாடகத்தை கதை, வசனமெழுதி காளிதாஸ் தான் இயக்க வேண்டுமென்றும் ஒரு கருத்து, அதன் ஆசிரியர் சுகா அருணால் முன்வைக்கப்பட்டபோது, இத்தனை காலம் எதிர்க்கருத்துக்களின் கனம் தாங்காமல் உறங்குவதுபோல் நடித்துக்கொண்டிருந்த சிங்கத்திற்கு முன் இரண்டு பெண்மான்கள் நிறுத்தப்பட்டபோன்ற உற்சாகத்தில் அது விழித்துக்கொண்டது. நான்தான் அந்நாடகத்திலும் நாயகன். எனக்குத் தெரியாமலேயே, என் பிறந்தநாளின் போது வசீகரமானதொரு உடையில் கலைமாமணி தில்லைராணியின் ரெக்கார்டு டான்ஸ். நான் ஆடிப்போனேன். மக்கள் ஜனநாயகப் புரட்சியை மனதில் ஏற்றி, அதன் கலை இலக்கிய தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற, ஒரு புரட்சியாளனுக்கு முன்னால் இந்த மாதிரிவெற்றுக் கேளிக்கையான ஒரு ஆட்டமா? என நான் மேடையில் கோபப்படுவது மாதிரி நடித்தேன். அப்பெண் என்னைக் கட்டியணைக்க வரும் தருணங்களிலெல்லாம் அவளைத் தட்டிவிட்டு என் அம்மாவும் அப்பாவும் இந்நாடகப் பார்வையாளர்களாக வந்திருக்கிறார்கள் எனச் சொல்லி என் ஒழுக்கத்தை நிரூபிக்க முயன்ற அந்நாடகத் தருணங்
ஙகளை இப்போது நினைத்துக் கொண்டாலும் வெடித்துச் சிரித்துவிடத் தோன்றுகிறது.
மீண்டும்
எங்கள் இரவு விவாதங்கள் மீனாட்சி தியேட்டருக்கு முன்னிருந்த அழுக்கடைந்த டீக்கடைகளில் தொடர்ந்தன. அப்பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பாக மதுரையில் முதுபெரும் திரைப்படக் கலைஞர் எஸ்.வி.சகஸ்ர நாமமும், கோமல் சாமிநாதனும் தமிழகம் எங்குமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு கலைஞர்களுக்கு பயிற்சியளித்தார்கள். எங்கள் மாவட்டத்திலிருந்து நாங்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டோம். அநேகமாக அதுதான் எனக்கும் கருணாவுக்கும் முதல் இரயில் பயணம். நான் அப்போது திருவண்ணாமலை அரசுக் கலைக் கல்லூரியில் பேருக்கு பி.காம் முதலாண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் கருணாவுக்கும் எப்போதும் கையில் காசிருக்காது. ஆனால் அப்பா, அம்மா உழைப்பில் விதவிதமாய் எம்பிராய்டரி பூப்போட்ட ஜிப்பாக்கள் போடுவோம். (உபயம் : ஒரு கை ஓசை பாக்யராஜ்) திருவண்ணாமலையில் தொடங்கிய எங்கள் பயணம் பாட்டு, நடிப்பு, வசனமென இரயில் பயணிகளைக் கவர்ந்து நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. விழுப்புரத்தில் சாப்பிட்ட அளவுக்கதிகமான பரோட்டாக்களால் நானும் கருணாவும் தூங்கிவிட கருமமே கண்ணாக எங்கள் கலைக்காவலன் காளிதாஸ் மட்டும் விழித்துக்கொண்டிருக்க, பெரம்பலூருக்கும் திருச்சிக்குமிடையே ஏதோ ஓரிடத்தில் நாங்களிருவரும் பலமாக தட்டி எழுப்பப்பட்டோம். எங்கள் எதிரே கருப்பு கோட் போட்ட டி.டி.ஆர் நிற்கிறார். தூக்கக் கலக்கத்தில் எழுந்த எங்கள் இருவரிடமும் பயணச்சீட்டு கேட்டு அவர் கைநீட்ட, நாங்களிருவரும் ஒருசேர காளிதாசைப் பார்க்க, இதில் எதிலும் தனக்கு பங்கில்லை என்பதாக இரயில் கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு சிவாஜி கணேசன் மாதிரி நின்றது அவர் நடிப்பிலேயே உச்சம்.
‘‘வித்தெளட்டா… வித்தௌட்டா’’ என நாமம் போட்ட அந்த டி.டி.ஆர். கத்த, தூங்கிக் கொண்டிருந்த சக பயணிகளெல்லாம் எழுந்து, தமிழ்நாட்டின் முக்கிய மூன்று கலைஞர்களை, அற்பப்புழுக்களெனப் பார்த்த
அக்கணம், வரலாற்றின் பக்கங்களில் பதியக் கூடாதவைகள். அந்த டி.டி.ஆரை காளிதாஸ் இரயில் கதவுக்கருகில் அழைத்துப்போகிறார். அவர் முன் தான் கற்ற வித்தைகளையெல்லாம் வார்த்தைகளில் வடித்துக் கொண்டிருப்பதாக எனக்குப்பட்டது. நவரசங்கள் கூடி கலையும் காளிதாசின் முக பாவனைகளையே நான் கவனித்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நானும் கருணாவும் அவரருகில் அழைக்கப்பட்டு, ‘விபரமில்லாதவர்கள்’ நாடகத்திலிருந்து ஒரு காட்சியை அவருக்காக மட்டும் நடித்துக் காட்ட வேண்டியதாயிற்று. திருச்சி இரயில் நிலையத்தில் அந்நள்ளிரவிலும் வித்தை முடித்து மூன்று குரங்குகள் தலையில் அலுமினியத் தட்டோடு பயணிகளை நோக்கி சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தன. எனக்கு அத் துக்கத்திலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் டி.டி.ஆரின் முகம் கனிந்திருந்ததை கவனித்தேன். திருச்சி ரயில் நிலையத்தில் எங்கள் இரயில் நின்றவுடன், அதற்காகவே காத்திருந்தது போல அந்த டி.டி.ஆர் பிளாட்பாரத்தில் இறங்கி ஓட, நாங்கள் மூவருமே திடுக்கிட்டோம். அநேகமாக அவர் இரயில்வே போலீசாருடன் திரும்பிவரக்கூடும் என எதிர்பார்த்த எங்களுக்கு, அவர் மீண்டும் தனியாளாக எங்களை நோக்கி ஓடிவந்தபோது இரயில் புறப்பட்டுவிட்டது. ஓடும் இரயிலினூடே ஓடிவந்து மூன்று டிக்கெட்டுகளை காளிதாசின் கையில் திணித்து, ‘‘இது திருச்சியிலிருந்து மதுரைக்கான பயணச்சீட்டு. பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்’’ என நின்று எங்களுக்குக் கையசைத்தார். மதுரையில் நடந்த அப்பட்டரையில் சகஸ்வரநாமமும், கோமலும், ஜெயந்தனும் எங்களுக்கு நடிப்புப் பயிற்சி
அளித்தார்கள். எங்கள் மூவருக்கும் பித்து தலைக்கேறியது. அதனூடே திரும்பிவந்து, கருணா தலைமையில் “தீட்சண்யா” என்றொரு நாடகக்குழுவையும் அது போதாமல் காளிதாஸ் தலைமையில் “ நிதர்சனா” என்றொரு நாடக்குழுவையும் ஆரம்பித்தோம். திரும்பும் திசையெங்கும் எங்கள் நாடக ஒத்திகை தான். கலைஞர்களுக்கு டீ வாங்கித்தரவும், சாப்பாடு போடவும் பணமின்றி தனியாளாக அலைவேன். பார்க்கிற எவரிடமும் பத்துரூபாய்க்காக கையேந்துவேன். என் அம்மாவை நச்சரித்து சோறு வடிக்கச்சொல்வேன். அது ஒரு வெறி. கலையின் பிரகடனத்துக்கு எங்களையே தர தயாரான வெறி.
இரவு பத்துமணிக்கும், பன்னிரெண்டு மணிக்கும் பாய்ஸ் ஐஸ்கூல் மைதானத்தில் “ஒரு கேள்வி” “ஒரு கேள்வி” என எங்கள் சத்தம் உறங்கிக்கொண்டிருக்கும் ஊரையே எழுப்பும். அது ஒரு பெரும் வலி. ஆனால் அதை உள்ளூர நாங்கள் விரும்பினோம். எத்தனை பெரிய சமூக அந்தஸ்த்தில் இருப்பவரும் எங்களைப்பார்க்க வந்தால் சட்டையைக்கழற்ற வைத்து காவி லுங்கிக் கட்டச்சொல்லி, “வானில் நட்சத்திரங்கள் ஒளிர்வது எதனாலே?” என கத்தசொல்லி பயிற்சிக் கொடுப்போம். இதைத்தாங்க முடியாத மத்தியதரவர்க கௌரவ வாழ்வு, பலரை
எங்கள் இருப்பின் திசைப்பக்கமே திரும்ப விடாமல் விரட்டி அடித்திருக்கிறது.
நாங்கள் அறைகுறையாய் கற்றதையெல்லாம் ஊர் முழுக்க சுற்றியிருந்த கிராமங்கள்தோறும் அரங்கேற்றினோம். விவரமில்லாதவர்களின் பார்வையாளர்களே இந்த வடிவத்தை பிரமிப்பாகப் பார்த்தார்கள். என் எழுத்தின் வேட்கையை நான் இந்த நாடக தினங்களுக்கு ரத்த கவிச்சியோடு பலி கொடுத்திருந்தேன்.
ஊர் முழுக்க நாங்கள் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற வேலை இல்லா பட்டதாரிகள். ஆனால் சொந்த வீடுகளினால் நீர் தெளித்துவிடப்பட்டவர்கள்.. இனி உருப்படுவதற்கான ஒரு வழியுமில்லையென அப்பாக்களும், அம்மாக்களும் திட்டியும், அழுதும் தீர்த்தார்கள். தங்கள் பிள்ளைகள் அரிசி, பருப்பு சம்பாதித்து தரும் சராசரிகள் அல்லவென அவர்களுக்குப் புரியவேயில்லை.
அப்போது தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களை அழைத்து, கட்சியின் சார்பாக எங்கள் கலை மேதமையை நிரூபிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக சொன்னார்கள். அப்போது சி.பி.ஐ.(எம்), தி.மு.க.வோடு தேர்தல் கூட்டணி வைத்திருந்தது. எங்கள் தொகுதியில் கு.பிச்சாண்டி சட்டமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். காங்கிரஸ் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்திருந்தது. பிரளயன், கருணா, தாஸ் போன்ற கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அரைமணிநேர பிரச்சார நாடகமொன்று தயாரிக்கப்பட்டது. பிச்சாண்டி அண்ணனுக்கு சொந்தமான ரைஸ் மில்லிலேயே அந்நாடகத்திற்கான ஒத்திகையைத் தொடங்கினோம். பக்கத்திலிருந்த ஒரு மெஸ்ஸிலிருந்து மூன்று வேளையும் எங்களுக்குத் தவறாமல் சாப்பாட்டுக்கு சொல்லிவிடப்பட்டிருந்தது. யாரிடமும் கையேந்தத் தேவையில்லை. அப்போது திமுக வின்
நகரச் செயலாளராக இருந்த டி.என். பாபு என்கிற ஒரு அருமையான களப்பணியாளன், எங்களை அர்ப்பணிப்போடு கவனித்துக் கொண்டார். எல்லாம் நாங்கள் நினைத்தபடியே நடக்க, ஜெயலலிதாவாய் நடிக்க ஒரு பெண் கிடைக்காமல் அல்லலுற்றோம் சற்றேரக் குறைய ஜெயலலிதாவின் குணாம்சங்களை ஒத்திருந்த என் தோழி கோமதி, அப்போது எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்துக் கொண்டிந்தார். கோமதியே அப்பாத்திரத்திற்குப் பொருத்தமானவர் என தீர்மானித்து அவரிடம் ஒரு அதிகாலையில் பேச ஆரம்பித்தேன். தேர்தல் புறக்கணிப்புக் கொள்கையில்
உரமேறியிருந்த கோமதியின் மனதை, ஒரு மழைநீர் மாதிரி கரைக்க ஆரம்பித்தேன். அன்றிரவு ரைஸ் மில்லில் நடந்த ஒத்திகையில், கோமதி ஜெயலலிதாவாக எங்களோடிருந்தார். ஒரு எம்.எஸ்.சி. படிக்கிற பெண் காசு வாங்காமல் ஏதோ ஓர் அர்ப்பணிப்பில் தெரு
மூலைகளில் நின்று நாடகத்தில் நடிக்க ஒத்துக்கொண்டது, எங்கள் எல்லோரையும் விட, நகரச் செயலாளர் டி.என்.பாபுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அவர் எங்கள் மீதான மரியாதையை இன்னும் மேலேற்றிக் கொண்டார். ஒரு நாளைக்கு பத்து தெருமுனைகளில் பெருத்த வரவேற்போடு எங்கள் நாடகம் நிகழ்ந்தது. ஜெயலலிதவாக கோமதி
தோன்றிய காட்சிகளிலெல்லாம் விசில் சத்தம் பறந்தது. அந்நாடகத்தின் இறுதியில் கதர் குல்லாய் போட்ட ஒரு காங்கிரஸ்காரரை பாடையில் ஏற்றி கொண்டு போவது மாதிரியான காட்சி இருக்கும். பாடையில் பிணமாக கிடந்த அந்த ஆள் ஒரு ஜாடைக்கு ராஜீவ்காந்தி மாதிரியே இருப்பார். சாவுக்கான தப்பொலி முழங்க அந்த காங்கிரஸ்காரரைத் தாங்கிய பாடை சுடுகாட்டை நோக்கி நகர்வதோடு எங்கள் நாடகம் நிறைவேறும்.
அன்றிரவும் அதே தான் நிகழ்ந்தது. எங்கள் வீட்டுக்கு மிக அருகிலிருக்கும் கரியான்செட்டித் தெருவில் இரவு எட்டுமணிக்குத் தொடங்கி
ஒன்பது மணிக்கு நாடகத்தை நிறைவுசெய்துவிட்டு, பரோட்டாவும், கோழிக்குருமாவும் சாப்பிட்ட களைப்பில் என் கூரைவீட்டு முல்லைப்பந்தலுக்கு கீழே ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்துத் தூங்கிவிட்டேன். இரவு பன்னிரெண்டு மணியிருக்கும். என்னை யாரோ வலுவாகத் தொட்டு எழுப்பும் சத்தமறிந்து திக்கிட்டு எழுந்தால், மரண பீதி முகத்திலுறைய என் காலடியில் ஆடையூர் ரவி உட்கார்ந்திருந்தான். நான் பதறி எழுவதற்குள், “தலைவா, ராஜீவ்காந்தியை யாரோ குண்டு போட்டு கொன்னுட்டாங்களாம்” என ரகசியமான குரலில் கத்தினான். எனக்குப் பேச்சே எழவில்லை. வெற்றுடம்போடு அக்கட்டிலிலேயே நீண்ட நேரம் அப்படியேக் கிடந்தேன். அன்றைய இரவு, பன்னிரெண்டு மணிக்கே விடிய ஆரம்பித்திருந்தது. கிட்டத்தட்ட எல்லார் வீட்டு விளக்குகளும் நள்ளிரவிலேயே எரிய ஆரம்பித்தன. மக்கள் சிறு சிறு குழுக்களாகக் குழுமி கிசுகிசுத்துக் கொண்டார்கள். ரவியும் நானும் இதன் பின்விளைவுகளைப் பற்றி மரணவீட்டில் பேசிக் கொள்வது மாதிரி, பேசிக் கொண்டிருந்தோம்.
இரவு இரண்டு மணியளவில், மூச்சிரைக்க ஓர் ஆள் சைக்கிளில் வந்து, எங்கள் வீட்டின் முன்னால் நின்றான்.
“பவா, ஒடனே இங்க இருந்து போயிடு…”
“ஏன்?”
“அய்யோ… நெலம புரியாம கேக்காத. ராஜீவ் காந்தியைக் கொல்லப்போறது உங்களுக்கு முன்னாடியே தெரியும்னும், அதனால தான், அவரை பாடைகட்டி தூக்கினீங்கன்னும் ஜனங்க பேசிக்கறாங்க, ஆத்திரத்தோட ஒரு கும்பல் உங்க வீட்டுக்கு வராங்க, அவங்க வர்துக்குள்ள நீ இங்க இருந்து போயிடு எனப் பதற, நிதானமாக ஒரு ஈசிச்சேரைக் கையில் பிடித்தபடி, என் அப்பா வீட்டிற்கு வெளியே
வந்து,
“நீ எங்கயும் போகதடா… நான் பாத்துக்கறேன் எவன் வரான்னு” என்று ஈசிச்சேரில் படுத்து நிதானமாக வானத்தையேப் பார்த்துக் கொண்டிருந்த காட்சி அலாதியானது. இத்தனைக்கும் அப்பா தீவிர காங்கிரஸ்காரர். நான் எங்கேயும் போகவில்லை. அப்பாவின் அரவணைப்பில் தைரியமாக விடிவதற்குக் காத்திருந்தேன். அடுத்த நாள் ஊர் முழுக்க
எங்கள் நாடகக் காட்சிகளைப்பற்றி விதவிதமாகப் பேசப்பட்டது. ராஜீவ் காந்தியின் மரணம் எங்களுக்கு முன் கூட்டியே தெரியுமென பரவலான பேச்சு இருந்தது. நிச்சயமாக நாங்கள் கைது செய்யப்படுவோமெனவும், வெளியில் வர ஆறேழு வருடங்களோடும் எனவும் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரு தகவல் வந்த வண்ணம் இருந்தது. அப்போது அப்பாவின் காப்பேறிய கைகளைப் பிடித்து என் பயமிறக்க முயன்று கொண்டிருந்தேன். எக்காரணத்தை முன்னிட்டும் ஜெயலிதாவாக நடித்த அந்த பெண்ணை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென்று சொல்லச் சொல்லி எனக்கு எச்சரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. அத்தகவலை நான் கோமதிக்குக் கடத்தினேன். ஊரடங்கு உத்தரவு அமலாகி, ஆள் நடமாற்றமின்றி ஊரே வெறிச்சோடிப் போயிருந்த அக்கணத்தில், தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு, தன்னந்தனியாக கோமதி என் வீட்டிற்கு வந்தது ஜெயலலிதாவின் தைரியத்தையும் மிஞ்சியது.
எப்படி எப்படியெல்லாமோ எங்கள் நாடகக் கனவுகள் முற்றுப்பெற்றும் உருக்குலைந்தும், வாழ்வு எங்களை லௌகீகத்திற்கு உந்தித் தள்ளியது. காளிதாஸ் வி.ஏ.ஓ.வாகவும், நான் மின்துறை ஊழியனாகவும், கருணா ஓர் இயக்கத்தின் முழுநேர ஊழியனாகவும், கோமதி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் விஞ்ஞானியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.
ச.தமிழ்செல்லவனின், ‘கருப்பசாமியின் அய்யா’ என்றொரு கதையில் வரும் இசக்கிமுத்து தான் நாங்கள். அவனால் எங்குமே நிலைக்க முடியாது. காய்புகாய்த்த தன் கைகளின் உழைப்புக்கு ஈடாக பணமீட்ட முடியாது. சுழற்றியடிக்கும் இவ்வாழ்வின் சகலதிசைகளிலும் தூசென அலைவுறுவான். மீண்டும் வீடு திரும்பி தன் மனைவியோடும், ஒரே மகன் கருப்பசாமியோடும் ஒரு இட்லிக்கடை துவங்குவான். இனி பொறுப்பான மனிதனாக, சராசரியாக வாழ்ந்துவிட வேண்டுமென உள்மனது விரும்பும். அப்படித்தான் வியாபாரம் ஆரம்பிக்கும். இரண்டு நாட்கள் கூட தாக்குப்பிடிக்கமுடியாது. மூன்றாவது நாள் ‘ஏன் இந்த இட்லி ஆண்டாண்டு காலமாய் வட்டமாகவே இருக்கிறது? நாம் சதுரமாக, செவ்வகமாகப் போட்டால் என்ன?’ என தோன்றும்.
காலம் கலையாக எங்கள் முன் பரிணமிக்கிற விநாடிகளில் நாங்கள் எங்கள் லௌகீக நடிப்பிலிருந்து விடுபடுகிறோம். இப்போது காளிதாஸ் இரவு ஓட்டல் நடத்துகிறார். அவர் சுடுகிற இட்லிகள் ஒருபோதும் வட்டமாக வருவதில்லை.
No comments:
Post a Comment