Thursday, March 3, 2016

ரத்தப் பிசுபிசுப்பைத் துடைக்கும் சமூகத்தின் தாதி




ஒரு சிறுகதையை உங்களால் இப்படி ஆரம்பிக்க முடியுமா?

‘‘அங்கம்மா கிழவியின் உச்சந்தலையில் கொம்பு முளைத்த செய்தி முருங்கை மரத்து மயிர்ப்பூச்சி போல ஊர்ந்து பரவியது’’

வேலராமமூர்த்தி தன் எல்லா கதைகளையுமே இப்படித்தான் ஆரம்பிக்கிறார். நவீன இலக்கியம் கொஞ்சம் தாமதமாகக் கண்டடைந்த கலைஞன் வேலா.

எழுத ஆரம்பித்த நாள் முதலே அவர் எந்தக் குழுவோடும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. முற்போக்கு எழுத்தாளர் சங்க அடையாளம் வேறுக் குழுக்களுக்கு பொருட்படுத்தக் கூடியதல்ல. ஆனால் ஒரு நிஜக் கலைஞனை காலம் சகல அடைப்புகளையும் நீக்கி அவன் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடைய வைக்கும். காலம் ஒரு காட்டாறு மாதிரி.

அது ஒரு குளிர்காலம் என்பதை மட்டும் இப்போதும் உணர முடிகிறது. செய்யாறில் ஒரு கலை இரவு. தமுஎச தான் அதை ஒருங்கிணைத்திருந்தது. பின்னிரவில் எங்கள் முன் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் முன் நாங்கள் இருவரும் கதை சொன்னோம்.

நான் வடமாவட்ட மக்களின் வாழ்வையும், வேலா தென் மாவட்ட, எங்களிலும் வறண்ட இராமநாதபுர மக்களின் வாழ்வையும் உரத்த குரலில் பகிர்ந்து கொண்டோம். பல இடங்களில் துக்கம் தாளாமல் இருவருமே தழுதழுத்தோம். மாவட்டங்கள், ஜில்லாக்கள், ஊராட்சிகள், கிராமங்கள் என கோடுகளால் எங்கள் மக்களை பிரித்தாலும் பசியும், வறுமையும் வடக்கேயும், தெற்கேயும் ஒரே போலத்தான் பிய்த்தெடுக்கிறதுசாதி மட்டும் மனித ரத்தத்தில் கலந்து இறுமாப்புக் கொண்டு விடுகிறது. ரெண்டு பேருமே களவுக் கதைகளைச் சொன்னோம்.

வேலா, ஆடு திருடும் ஒரு களவு சமூகத்தின் தழும்புகளை பிரகாசமான அம்மேடையில் தடவிப் பார்த்துக் கொண்டார்.

நான் கம்பையும், கேழ்வரகையும் திருடி மாட்டிக் கொண்டு கொலைக் குற்றத்திற்கு ஆளான ஒரு பழங்குடி இன திருடனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

பல ஆயிரம் கோடி பணத்தைக் கொள்ளையடிப்பவனும், சகல திசைகளிலும் கைநீட்டி பொறுக்கித் தின்பவனும், ஆற்றைச் சுரண்டி மணல் எடுப்பவனும், எங்கள் கிராமக்குழந்தைகளின் அறிவை விசாலப்படுத்துகிறேன் என விளம்பரப்படுத்தி கல்விக் கொள்ளையடிப்பவனும் இந்த மனித தீங்கற்ற கள்வர்களின் பின்னே நின்று கௌவரமானவர்களாக, அமைச்சர்களாக, கல்வித் தந்தைகளாக, அதிகார தரகர்களாக, இன்னும் என்னென்னவோ பெயர்களில் உலவுகிறார்கள். இதுதான் நம் வளர்சியடைந்த நாகரீக சமூகம் என எங்களால் எழுப்படாத, சொல்லாத (Untold) பகுதியை எங்கள் மக்கள் அவர்களாகவே புரிந்து கொண்டார்கள். அந்த உறைமௌனம் அதன் அடையாளம் தான்.

கதை சொல்லி  முடித்து நாங்களிருவரும் ஒரு தெருவோர கடையில் டீக்குடித்தோம். சிகரெட் பிடித்து முடிக்கும்வரை பேசப் போகும் சொற்களால் இளைப்பாறினோம். இருவரின் வலது கைகளும் பிணைந்திருந்தன. இருவருக்குமிடையே வார்த்தைகள் உலர்ந்து போயிருந்தன. ஏதோ ஒரு நிகழ் கணத்தில் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டோம். ஒரு ஆணை அத்தனை இறுக்கமாக கட்டி அணைத்து உடலால் உணர்ந்தது அப்போதுதான்.

இரவு இரண்டு மணிக்கு மேல் ஒரு அரசுப் போருந்தில் ஏறி, ஒரே சால்வையை இருவரும் போர்த்தி திருவண்ணாமலைக்கு இரண்டு டிக்கட் வாங்கினோம்.

அதிகாலை என் வீடு வந்து சேர்ந்த போது வேலா சொன்னார்,

குளித்து முடித்து கொஞ்சம் தூங்கி மத்தியான சாப்பாட்டுக்கு பிறகு கோயமுத்தூர் போகணும் பவா?

அன்று காலையிலேயே மழை ஆரம்பித்தது இப்போதும் சில்லிடுகிறது.

மேல் சட்டையில்லாமல், வெறும் லுங்கியோடு வெறும் தரையில் தூங்கின வேலாவை மதியம் மூணு மணி வாக்கில் நான்தான் எழுப்பினேன்.

அம்மா சுடுசோறும், கறுவாட்டுக் கொழம்போடும் எங்களுக்காக நெடுநேரம் காத்திருந்தது.

நான் வேலாவுக்கு எதிரே உட்கார்ந்து அவர் ஆயிரம்உச்கொட்டல்களோடு சோறு அள்ளி சாப்பிடும் அழகை உறிஞ்சிக் கொண்டிருந்தேன்.

கை கழுவும் போதே வேலா சொன்னார்நான் கோயம்புத்தூர் போகல உங்க கூடவே முணுநாள் இருக்கேன்

எதற்கோ காத்திருந்தது போல அம்மா வேலாவை,

கொஞ்சம் வெளிய வாங்க அய்யாஎன அழைத்தது. வாசலில் எங்கள் பகுதியிலிருக்கும் ஆறேழுப்பேர் நின்றிருந்தார்கள். ஓரிருவர் கைகளில் சாப்பாட்டு பாத்திரங்கள்.

‘‘இன்னிக்கு எங்க நெலத்துல இருந்து வந்த நெல்லுல ஆக்குண மொத சோறு. புருசனை பறிகொடுத்த ஆறேழுப் பேரு சாப்பிட்டு பசியாறின பிறகுதான் நான் சாப்பிடுவேன்’’ அம்மாவின் வார்த்தைகளை மீறி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த வேலாவின் பார்வையை இடைமறித்து,



‘‘இன்னிக்கு உங்க கையால இவங்களுக்கு சோறு போடுங்க’’

ஒன்றும் பாதியுமாக அறுக்கப்பட்ட வாழை இலைகளில் சோறு பறிமாறப்பட்டது. வேலா ஒரு பணியாள் மாதிரியான பவ்யத்தோடு அவர்களுக்கு பறிமாறினார்.

உண்மையான கலைஞர்கள் எப்போதுமே இப்படித்தான். அவர்கள் ஆதரவற்றவர்கள் முன்பு, வேசிகள் முன்பு, மனித தீங்கற்ற களவாணிகள் முன்பு கூட சட்டென மண்டியிட்டுவிடுவார்கள்.

செல்வந்தர்களின் முன் அதிகாரத்தின் முன் சகல கம்பீரத்தோடும் நெஞ்சுயர்த்துவார்கள். அல்லது அவர்களை புறந்தள்ளுவார்கள். மனதால் விலக்குவார்கள். அவர்களறியாமல் வெகுதூரம் போய்விடுவார்கள்.

வேலா, அன்று அந்த ஏழை விதவைகள் முன் சாப்பாட்டு பாத்திரத்தோடு மண்டியிட்டிருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனுக்குத்தான்,

‘‘குளிருக்கு குண்ணிப் படுத்திருக்கும்

அனாதைக் கிழவி மாதிரி ஊர் உறங்கிக்

கொண்டிருந்தது’’ என எழுத வரும்.

அடுத்த நாள் அதிகாலையே எழுந்து தூறலினூடே நிலத்திற்குப் போனோம். எங்கள் கிணற்று மேட்டில் நின்றிருந்த வேலா, சட்டென கிணற்றில் குதித்தார். ஒரு பேரோசையோடு நீர் தளும்பி அடங்கியது. அவர் கரும் பாறைகளுக்கு நடுவே சிலிர்த்த நீரினுடேயிருந்து அண்ணாந்து கரையிலிருந்த என்னிடம் மிக உரத்த குரலில் கேட்டார்.

‘‘பவா, கதை சொல்லவா?

‘‘சொல்லுங்க’’

இப்படித்தான் நான்கோட்டை கிணறுகதையை எங்கள் கிணற்றுக்குள்ளிலிருந்து கேட்டேன். எத்தனை பேருக்கு வாய்க்கும் இது?

இருவருமே அப்போது வேறு ஒரு மனநிலையில் நீந்தினோம். வானவில்லின் வர்ணஜாலத்தை நான் உங்களுக்கு காட்ட முடியும். வரைந்துகாட்ட முடியாது.

நான்காவது கரையோடு அவர் கிணற்றுக்குள் துள்ளலாட்டம் போடும்போது பேச்சினூடே

‘‘இப்ப கோணங்கி வந்தா எப்படி இருக்கும்?’’

ஏதோ அரவம் கேட்டு மேற்கே பார்த்தால், அழுக்கடைந்த உடையோடும், நீண்டுத் தொங்கும் தோள்ப்பையோடும் கோணங்கி தூரத்தில் வந்துகொண்டிருந்தான்.

இதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

என்னடா இது!?” 

பெரும் சிரிப்பினூடே,  “மெட்ராஸ் போயிட்டேயிருந்தான். மிட்நைட்ல மூடு மாறி மடம்பட்டு  கூட்டுரோட்ல எறங்கி  வேலூர் பஸ் பிடிச்சேன். நீ இந்த காலைல நெலத்துலதான் இருப்பன்னு இப்படியே எறங்கி வாரேன்.”

கெணத்துக்குள்ள எட்டிப்பாரு

உள்ளேயிருந்து வேலா ஏசுக் கிருஸ்து மாதிரி இரு கைகளையும் விரித்து

வா பங்காளிஎன கோணங்கியை நீருக்கு அழைக்க,

உடைகளை கழட்டாமல் அப்படியே அவன் உள்ளே குதிக்க உற்சாகத்தில் நீர் கரை வரை  வந்து போனது. எப்போதும் விசித்திரங்களாலானதுதான் கலைஞர்களின் பகல் பொழுது. இரவுகள்தான் மர்மம் நிறைத்த தன் தனிமையை நோக்கி அவனை அழைத்துப் போய்விடும்.

வாசந்தி ஆசிரியராக இருந்த அப்போதைய  ‘இந்தியா டுடேவில் வாரம் ஒரு சிறு கதை வரும். அதில்தான் நான் வேலாவின்இருளப்ப சாமியும் இருபத்தோரு  கிடாய்களும் படித்தேன்.

இன்றும் எத்தனை பெரிய சபையிலேயும் முன் வைக்க முடியும். இக்கதைக்கு நிகரான ஒரு படைப்பை தமிழில்  விரல்விட்டு எண்ணிவிடக்கூடும். அல்லது இக்கதை முன் வரிசையிலேயே  இடம்பிடிக்ககூடும்.

களவையே வாழ்வாகக் கொண்ட ஒரு சமூகத்தின் முன் நகர்வு அக்கதைஅறுபது வயதைக் கடந்த ஒவ்வொருவரும்  தங்கள் உடல் தழும்புகளை, இன்னும் ஆறாத ரணத்தை, இரத்தம் உலர்ந்த  உள்காயத்தைஒரு சமூகம் அடைந்த அவமானத்தை  மெல்ல தடவிப் பார்த்துக் கொள்வதே இப்படைப்பு.

நள்ளிரவில்  கிடையில் நடக்கும் ஒரு ஆட்டுக் களவு இன்னும் எந்த படைப்பாளியாலும்  இப்படி காட்சிப்படுத்த முடியவில்லை. ஊரெல்லாம் கூடி ராச் சாப்பாட்டுக்கு வீட்டுப் பெண்களை நம்பிக்கையோடு மசாலா  அரைக்கச் சொல்லிவிட்டு, ஆட்டுக் களவுக்கு போன ஒரு இனக்குழுவில் வேல் கம்போடு போன அனுபவம் உள்ள ஒருவனாலோ, அல்லது அதை மூச்சுக்காற்று மேலே படுமளவு அருகிலிருந்து தரிசித்தவனாலோ மட்டுந்தான் இக்கதையை எழுதமுடியும்.

வேலாவின் மனிதர்கள்  இரவு களவுக்கு போகும்போதும் என் ஜப்பான் கிழவன் இரவு வேட்டைக்குப் போகும்போதும் புழுதியைக் குடித்துக் கொண்டு ஒரு பாம்பு படுத்துகிடக்கிறது. நான் விரியனைப் பார்த்தேன். அவர் கருநாகத்தை தன் வேல்கம்பால் தூக்கி புதருக்குள் வீசுகிறார்எங்கள் நிலப்பரப்பை நாங்கள் இப்படித்தான் உள்வாங்க முடியும்.

எப்படி பார்த்தாலும் வேலாவின் கதைகளில்  சாதிகள்தான் ஊடுருவி உள்ளது. இது ஒரு சாதியின் பெருமிதமல்ல. அப்படி சாதி பெருமிதத்தால் வீங்கின கதைகளை  அவர் கைகள் எழுதியிருக்க கூடுமேயானால் நமக்கும் அவருக்கும் என்ன உறவு இருக்க முடியும்?
  
அடிபட்ட சாதியின் அப்பழுக்கற்ற மனிதர்கள், மனித குலத்தில் பிறந்த எல்லோருமே சில கணங்களில் அடையும் பெருமிதங்கள், இழிவுகள், புறக்கணிப்பு, அவமானம் எல்லாவற்றையும் அவரால் சொல்ல முடிகிறது.

தங்கள் இனத்திலிருந்து படித்த ஒரு பையன் சப் இன்ஸ்பெக்டராக வந்துவிட்டதை, ஒவ்வொரு மூத்த ஆட்களும் தாங்கள் போலீஸ் ஸ்டேஷனில் பட்ட சூட்டோடும், தழும்பை தடவிப் பார்த்தும் தாம் நினைவுப்படுத்த முடிகிறது.

இடையே அக்களவில் ஒரு ராஜபாளையம் கோம்பை நாய் குதறிய தங்கள் சகா முத்துத் தேவரை மனம்  பதை பதைப்போடு எண்ணிக் கொள்கிறது

ஒரு படைப்பாளிக்கு கிடைக்கும் இத் தருணம் அபூர்வமானதுதவறவிடக்கூடாததுசற்றேறக்குறைய தன் எல்லா படைப்புகளிலேயும் வேலா இத்தருணத்தைத் தக்க வைத்துக் கொள்கிறார்.

எங்க அய்யாமாருக்காகஎன்கிற கதையில் அடிபட்ட தங்கள் அய்யாமாருக்காக  ரெண்டு பேரையாவது வெட்டி சாய்ப்பேன் என சூளுரைத்து கிளம்பும் மாடசாமி ஒரு சலவைத் தொழிலாளி. அவன் முதல்வார்த்தையே

 “எங்க அய்யா மகன எவண்டா அடிச்சது?”

கதையின் இறுதியில் அடிச்சவனும், அடிப்பட்டவனும் ஒரே சாதி என சமரசப்படும்போது அந்த சலவைத் தொழிலாளியின்  ‘எவண்டாமட்டுமே மிஞ்சுகிறது. அது மாடசாமியின் உடலை கூறுபோடுகிறது.

வேலாவின் கதைகளில்தான் சலவைத் தொழிலாளிகள், முடித்திருத்துபவர்கள், ஹிட்லர் என்ற பெயரோடு ஊர் ஏவலாளாய் எந்த வேலையைச் செய்யவும் எத்தனித்து நிற்பவர்களென சாதாரண மனிதர்களை தரிசிக்கக் கிடைக்கிறார்கள்.

விறகு பொளந்து கொடு, சாணியை அள்ளு, தண்ணீ கொண்டா என தன் வாழ்நாள் முழுக்க வெறும் ஏவல்களையே கேட்ட ஹிட்லருக்கு தன் நிஜப்பெயரே மறந்து போக, சற்று முன் பின் பிடறியில் பட்ட செருப்படியை துடைத்துக்கொண்டே தன்னோடு படித்து, வெளிநாட்டில்போய் சம்பாதித்து திரும்பியிருக்கும் தன் சக தோழன் துரை வீட்டுக்கு வருகிறான்

கண நேரத்தில் அவனை அடையாளம் கண்ட துரை, “ஆப்ரஹாம் எப்படி இருக்கீங்க? என்று கேட்கிறார்.

ஹிட்லர் வேறு யாரையோ என ஒரு கணம் திரும்பிப் பார்த்து  அதிலிருந்து மீண்டு சட்டென தன் நிஜப்பெயர்  நியாபகத்துக்கு வர  துரையையே வெறிக்க,  “உள்ள வாங்க  ஆப்ரஹாம்”  என்ற அழைத்தலோடு தன் மனைவியிடம் திரும்பி  “உமா பாரேன் யாரு வந்திருக்காங்கன்னுஎன்கிறார்.

வாங்கண்ணேஎன்று கைக்கூப்பும் உமாவின் குரலை ஒரு வாசகனாய் என்னாலேயே  தாங்க முடியவில்லை.

அவனுக்கு நீர் முட்டிக் கொண்டு வருகிறது. துரையின் கைகளுக்குள் முகம் புதைந்து  அழுகிறான்.

 “நான் அழுகல துரை, சந்தோஷம் தாங்க முடியல சாமி. என்னை ஆப்ரஹாம்னு கூப்படவும் இந்த உலகத்துல ஆள் இருக்கேஎன ஹிட்லரென அடையாளப்படுத்தபட்ட ஆப்ரஹாம்  கதறுவார்.


நமக்கும் கூட நம் நிஜப் பெயரை நியாபகப்படுத்த, மூடாப்பு போல நம் மீது  மூடியிருக்கும் சாதி, மத சகதிகளை  அகற்றிக் கழுவி சற்று முன் பிறந்த குழந்தையை ஒரு தாதி மாதிரி குளிப்பாட்டிஅதன் மீது ஒட்டியிருக்கும்  ரத்தப் பிசுபிசுப்பை  துடைத்து  அவள் முகத்தருகே  கொண்டு போய் ஆப்ரஹாம் என அழைக்க ஒரு பாவபட்ட சமூகத்தின் தாதியாக ஒரு உண்மையான படைப்பாளித் தேவைப்படுகிறான்வேலா அவ்வகையில் ஒரு சமூகத்தின் தாதி

நன்றி இம்மாத செம்மலர்

No comments:

Post a Comment