Tuesday, August 2, 2016

பிணங்களுக்கு ஏதுடா வரமொற?


மத்தியானமே, அழகிரிசாமியின் மகன் சாரங்கன் பாஸ்கர், மது என தன் நண்பர்களோடு நிலத்திற்கு வந்துவிட்டார். அவருக்கு பழக்கப்பட்ட இடமது.

வாழ்வின் ஜீவிதமே பம்புசெட் குளியல்தான். வந்து சேர்ந்தவுடன் அது நிறைவேறியது. மெட்ராஸ் அழுக்கு பூரா இந்த தண்ணியில கரைக்கணும்டா என ஒவ்வொரு முறை அத்தொட்டியில் குளிக்கையிலும் கோணங்கி சொல்வது ஞாபகம் வந்தது.




நண்பன் கார்த்தி, சுகானாவின் (உத்ராஜெயஸ்ரீ மகள்) பிறந்தாளுக்காக தயாரிக்கப்பட்ட காம்போடு செர்ரி பழங்கள் செருகப்பட்ட கேக்கோடு வரும்போது மணி இரண்டு.

பழக்கமில்லாத இன்னுமொரு கார் கூடவே வந்தது.

அத்தனை சந்தோஷத்தோடு அதிலிருந்து இறங்கி ஓடி வந்து கட்டிக் கொண்டவர்,

நான் சுவிட்சர்லாந்திலிருந்து வருகிறேன். என் மனைவி ஆனந்தி உங்கள் நண்பர்

ஆனந்தி சுரேஷ்ஷா நீங்க?

ம்

நான் சுரேஷை இன்னும் இறுக்கிக் கொண்டேன்.

சுகானாவை என்ன வயசு உனக்கு என கேட்ட நிமிடம் அவள் இன்னும் வெட்கப்பட்டு,

இருபத்தி மூணு செரியச்சாஎன்றாள்.

ஐந்தாறு வயது பெண்ணாக அவளை நிறை கிணற்றில் தள்ளிவிட்டு நீச்சல் கற்றுத்தர நான் எடுத்த எல்லா முயற்சிகளையும் முறியடித்தவள் அவள்.



அய்யோ என்னை கொல்லாதீங்க செரியச்சா என்று ஈரத் துணியோடு சாலைவரை பெருங்குரலெடுத்து ஓடிய இச்சிறுபெண்ணுக்கா இருபத்தி மூன்று!

காலத்தின் வேகம் பயமுறுத்தியது என்னை நகர்த்திக் கொண்டிருக்கும் முதுமையையும் சேர்த்து.

மதிய உணவுக்குப்பின் நாங்கள் ஆளுக்கொரு திசையாக பிரிந்தோம்.

நான் வீட்டு மாடியில் தனியனாகி கு.அழகிரி சாமியை மீள் வாசிப்புக்குட்படுத்திக் கொண்டிருந்தேன்.

கதவு தயங்கி தட்டும் ஓசை கேட்டு திறந்தால் சுவிட்சர்லாந்து சுரேஷ் தன் நண்பர் ஆறுமுகத்துடன் நின்றிருந்தார்.

 ‘சாரி சார், ஆனந்தி உங்களிடம் இதைத் தரச் சொன்னாள்என 15000/- ரூபாயை என் கையில் திணித்தார்.

 ‘எதுக்கு சுரேஷ் இது?’

 ‘நீங்கள் என்னென்ன செய்கிறீர்களெனத் தெரியும் சார். அவள் சேமிப்பிலிருந்து ஒரு சிறு தொகை

என் கை லேசாக நடுங்குவதை சுரேஷும் கவனித்தார்.

இவர் மனைவிதான் கொஞ்ச நாட்களுக்கு முன் நான் சந்திக்க விரும்பும் மனிதர்களில் முதன்மையானவர் பவா சார் தான் என என்னை குறிப்பிட்டிருந்தார்.

என்னை அழகிரி சாமியோடு விட்டு கதவை சாத்திவிட்டு சுரேஷ் கீழிறங்கினார்.



நான் மறுபடியும் பத்தாண்டுகளுக்குப் பின்வெறும் நாயைவாசிக்கிறேன். நல்லவேளை அந்த மத்தியானத்தில் என் படுக்கையறையில் நான் மட்டும் தனியே சிரித்துக் கொண்ட பல தருணங்களை என்னைத் தவிர யாரும் பார்த்திருக்கவில்லை.

நானும் சாரங்கனும் என்னக் கதை சொல்லப் போகிறோம் என்பதை கடைசிவரை ரகசிய அடைகாத்தோம்.

குவா வாடிசை அடைந்தபோது டைம் பார்த்தேன். ஏழாக இன்னும் பத்து நிமிடங்களிருந்தன.



அந்த சுண்டலுக்கும் காஃபிக்கும் கொஞ்ச நேரம் ஒதுங்கினேன். பதட்டம் இன்னும் தணியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகான நிகழ்ச்சி என்பதால் மனித தொடர்புகளை இணைப்பதில் ஏதும் சிக்கல் ஏற்பட்டிருக்குமோ என பயந்தேன்.

அந்த பயம் உனக்கு ஏன் தோழா என பார்வையாளர்கள் மர இடுக்குகளிலும் நாற்காலிகளிலுமிருந்தார்கள்.

நண்பன் ஜீவாவின் அதீத சிரத்தை ஒவ்வொரு அங்குலத்திலும் தெரிந்தது.

மருத்துவர் ஸ்ரீதர் ஒரு அற்புதமான பாடலைப்பாடி மனதை ஒருங்கிணைந்த நிமிடம் ஷைலஜா சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் சமீபத்திய உரையை தமிழில் வாசித்தாள்.

எவன் ஒருவன் கலை இலக்கியத்திற்கு எதிராக தன் கண்களை மூடிக் கொள்கிறானோ, அவன் குருடனாகிறான் அவனால் சமூக அமைதி கெடுகிறது, அவனால் போர்கள் மூளுகின்றன. அவனால் குருடர்களையும், ஆண்மையற்றவர்களையுமே பிரசவிக்க வைக்க முடியும்என அவள் வாசித்த போது, யாரோ என் கன்னத்தில் மாறி மாறி அறைவது போலிருந்தது. அது  யாருடயதுமில்லை, அம்முரட்டு கைகள் என் சந்தோஷுடையதுதான்.




சுயரூபம்என்ற கு.அழகிரிசாமியின் முதல் கதையை நான் சொல்லத் துவங்கியபோதே காற்றில் சப்தத்தைத் தவிர வேறெந்த ஒலியும் எழாமலிருந்தது.

சுயகௌரவமும், தன்மானமும், மனிதனின் பசியும் சேர்ந்த கலவையை என் சகமனிதர்கள் முகத்தில் ஒரு கொத்தனாரைப் போல நான் பூசினேன். அழகிரி சாமியினுடனான என் பயணத்தில் என்னோடு பாதசாரிகளாக இன்னும் இருநூறு பேரிருந்தார்கள். நாங்கள் நடந்தே போய் இடைசெவலை அடைய வேண்டியிருந்தது.

தான் பிறந்த சந்தோஷத்தில் தன் அப்பா எழுதினஅன்பளிப்புகதையை பாதி சொல்லியும், பாதி வாசித்தும் சாரங்கன் மிக அழகாக சொன்னார். பேசுவதற்கான அவரின் உறுப்பு வாயல்ல. கைகள் என நான் அறிந்தவனெனினும் அவர் அழகாக அப்பாவின் கதை சொன்னார்.

குங்குமம் பொறுப்பாசிரியர் நண்பர் நா.கதிர்வேலன் சமீபத்தில் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

‘‘நீங்கள் கதை சொல்லும் அவ்விடத்தின் சூழலில் யாராலும் பேசிவிடமுடியுமெனத் தோன்றுகிறது. நானே பேசிவிட முடியுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்’’

நான் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டேன்.

சூழல் இன்னும் இலகுவாகி ஈரக்காற்று இன்னொரு கதையைக் கோரி சுழன்றது.

நான்வெறும் நாய்கதையை ஆரம்பித்தேன். அது டாக்டர் வீட்டு நாயின் சண்டையில் துவங்கி, தெருவுக்கு வந்து, தென்னந்தோப்பில் மறைந்து, கபாலி வீட்டில் தங்காது டாக்டரை கடிப்பதில் முடிந்த போது பார்வையாளர்கள் மத்தியிலிருந்து எழுந்த கரவொலியும், பெருஞ்சிரிப்பும், ஆராவரமும் எனக்கானவையல்ல. அது அழகிரிசாமி என்ற மக்கள் எழுத்தாளனுக்கானது.

இடைவெளியின்றி நான் இருசகோதர்கள் என்ற அடுத்த கதையை ஆரம்பித்த போது இக்கதையை சொல்லி முடிக்க முடியாது என்று உள்ளுணர்வு சொன்னது.

காலையில் அலுவலகத்தில் அக்கதையை படித்தபோதே வாசிக்க திராணியற்று என் நண்பர் சந்துருவை என்னோடுடீக் குடிக்க கூப்பிட்டேன்.

அது பெரும் கேவலை என்னிடமிருந்து பிடுங்கியெடுத்த கதை. எப்படியோ அதை தட்டு தடுமாறி சொல்ல ஆரம்பித்தேன்.

தன் சொந்த தம்பி தன் மனைவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கும் காட்சியை ராமகிருஷ்ணன் பார்க்க நேரிடுகிறது.

அவன் எந்த சலனமுமற்று வாசல் திண்ணையில் போய் குந்திக் கொள்கிறான்.

தம்பி ஓடிவந்து அண்ணன் கால்களில் விழுந்து கதறியழ,

‘‘எழுந்திருடா சுப்ரமணி, நாம எல்லாருமே வெறும் பொணங்கடா, பொணங்களுக்கு ஏதுடா வரமொற’’




எனக்கும் பேச்சு வரவில்லை. ஏதா பலமாக தொண்டையின் பக்கவாட்டிலிருந்து எழுந்த அடைத்துக் கொண்டது.

அதே மனநிலையில் வீட்டிற்கு வந்தேன். எதுவும் பிடிபடவில்லை. வண்டியை எடுத்துக் கொண்டு பதினோரு மணிக்கு மாமரத்தடிக்குப் போனேன்.

சாரங்கன் தன் நண்பர்களோடு சேர்ந்து அக்குறைந்த நிலவொளியில் இசையும், பேச்சுமாக உற்சாகத்திலிருந்தார்.

அவ்விடம் என்னை மீட்டு, இயல்பாக்கி பொது வார்டில் கொண்டு போய் போட்டது.

வரும் வழியெங்கும் அந்த இரு சகோதர்களையும், ஜடமாயிருந்த அந்த அண்ணியையும் நினைத்துக் கொண்டே வந்தேன்.

இரவு தூக்கம்வராமல் புரண்டு புரண்டு படுத்தேன். ஒரு துரித விடியலை எதிர்பார்த்த விழிப்பு அது.

காலையில் எழுந்து நண்பர்களோடு தர்மபுரி புறப்பட்டேன். காடும், மலையும் கடந்து போகப் போகும் அப்பயணம் என்னை பொது வார்டிலிருந்து வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யுமென நம்பினேன்.

தன் அப்பாவை பற்றிய ஆவணப்படத்திற்கு சாரங்கன் அந்த அதிகாலையில் என்னை பேட்டியெடுத்தார்.






நேற்றிரவின் மனநிலையே என்னை மறுபடி ஆட்கொண்டது. நான் அதே அலைவரிசையில் பேசினேன்.

சாரங்கன் என்னைக் கட்டிக் கொண்டார். அப்பாவின் கதைகள் பற்றிய அற்புதமான பதிவு இதுவென.

தப்பித்தல் வேண்டுமெனக்கு.

ஓடிப்போய் வண்டியிலேறி ஏதாவதொரு பாட்டை போடச் சொல்லி ரமேஷிடம் சொன்னேன்,

‘‘ஊமையென்றால் ஒரு வகை அமைதி,

ஏழையென்றால் அதிலொரு அமைதி

நீயே கிளிப்பேடு

பண்பாடும் ஆனந்த குயில்பேடு’’


யோசுதாசின் பாடலும் நானுமாக போய்க் கொண்டேயிருக்கிறேன்.

No comments:

Post a Comment