Thursday, May 11, 2017

நஜீப் குட்டிப்புறம்


இந்த தகிக்கும் வெயிலில் இருந்து முழுவதுமாய் விடுபட்டு, சென்னையும் கடலூரும் நீரில் மூழ்கிவிடு்மோ என பெய்து தீர்த்த மழை நாட்களுக்குள் நாம் ஓடிப்போய் நின்றுகொள்ள வேண்டும். .அப்படியொரு பெருமழையின் நாளில்தான் முதன்முதலில் அந்தக் குரலைக் கேட்டேன்.

"பவாண்ணா நான் நஜீப் குட்டிப்புறம் .நானும் மகன் நிசாமும் செங்கல்பட்டு ரயில்வே ஸ்டேஷனில் படுத்திருக்கிறோம். எங்கள் குடும்ப சேமிப்பில் இருந்த 3 லட்ச ருபாயும் என் கையில்தான் இருக்கிறது .இப்பெரு மழையில் உடமைகள் இழந்த பெயர் தெரியாத ஏதாவது ஒரு கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஆரம்பித்து பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்பணத்தில் இருந்து சிந்தாமல் சிதறாமல் ஏதாவது செய்தாக வேண்டும். அரைகுரையாய் மொழி தெரிந்த எனக்கு உடனிருந்து உதவ யாராவது சில நண்பர்கள் வேண்டும்"

இப்படிதான் நஜீப் குட்டிப்புறத்தின் ஈரமான குரல் என்னை வந்தடைந்தது. மூன்று லட்ச ருபாயின்  கடைசி பைசாவும் மழை கொண்டுபோன செங்கல்பட்டுக்கு அருகில்  உள்ள ஏதோ ஒரு பெயர் தெரியாத கிராமத்தில் கரைந்தது.


அம்மழையினூடே திருவண்ணாமலை நோக்கி வந்த ஒரு பஸ்ஸில் ஏறி பெரியார் சிலைக்கு அருகில் இறங்கி சுடச்சுட வடைகளை  வாங்கி தின்றுகொண்டே வீட்டுக்கு வந்த நஜீப் குட்டிப்புறம் என்ற அந்த எளிய மனிதனின் நீர்மையை, சுட்டெரிக்கும் இவ்வெயிலினூடே  இணைத்துக் கொள்கிறேன்.

சம்பவங்களை மட்டும் அறியத் துடிக்கும்  மனமும், அதை எழுதிவிட முடியுமா என்ற மூன்றாம்தர எண்ணமும் சேர்ந்து  என்னை உந்தித் தள்ள,
"என்னென்ன செய்தீங்க நஜீப் ?

பாதிக்கப்பட்ட மனிதர்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டீர்கள்?".
என்ற என் வார்த்தைகளை இடைமறித்து, 

"
இதையெல்லாம் சொல்ல நேரமில்லை பவாண்ணா. மழை நிற்கும் ஒரு காலத்தில் அது பற்றிப் பேசலாம். நாளைக்குக்  காலையில நாம எல்லாருமா சேர்ந்து கடலூருக்குப் புறப்படலாம். அதிகாலை 5 மணிக்கெல்லாம் என் நண்பனும்,ஹியூமன் கேர் பவுண்டேஷனின் செக்ரட்டரியுமான பரூக் 5 லட்ச ரூபாயோடு உங்கள் வீட்டுக்கு வருவார். அதற்குள் நாம் 500 வீடுகளுக்கான அரிசி, பருப்பு ,பாய், தலையணைகளை ஏற்பாடு செய்ய முடியுமா?"
அந்த நீண்ட இரவு முடிவதற்குள் அதைச் செய்து முடித்தோம் .

திருவனந்தபுரத்தில் இருந்து வந்திருந்த பரூக் பாயை அப்படியே வழிமறித்து நிவாரணப் பொருட்கள் வைக்கப்பட்டடிருந்த லாரியில் ஏற்றினோம். அந்த லாரியின் பின்புறம் எங்கள் மொத்த குடும்பமும் அசதியில் தூங்குக் கொண்டிருந்தது. கடலூர்வரை நீடித்த மழை முடிந்த அந்நாளின் பயணத்தில்தான் நஜீப் குட்டிப்புறம் என்ற அம்மனிதனை நாங்கள் அறிந்தது.



பேரிடர் காலங்களில் மட்டும் ஓடி வந்து உதவும் ஒரு சேவைமனம் கொண்ட மனிதல்ல அவன் என்பதும், நஜீபின் மொத்த வாழ்நாளுமே சாதாரண மனிதர்களுக்கானது மட்டுமே  என்பதுமறிந்து, அவன் சிவந்த கைகளை இன்னும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டேன்.

இந்திய திசையெங்கும் பரவிக் கிடக்கும் இம்மேடு பள்ளங்களை இட்டு நிரப்ப புரட்சி ஒன்றுதான் ஒரே வழி என்ற லட்சியத்தின் மீது பெரும் நம்பிக்கை கொண்டவர் தான் நஜீபும்ஆனால் அது நிகழும் வரை நடக்கும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக அவரால் கரை ஒதுங்கி நின்றுவிட முடியாது. இந்தக் கடும் வெயிலில் பீஹார்ஜார்கண்ட் என உள்ளடங்கிய குக்கிராமங்களில் சுற்றியலையும் நஜீப் தனக்கிருக்கும் சொந்த வீட்டையும் பொதுவானதாக மாற்றி வைத்திருக்கிறார். அல்லது அதுவே அப்படி மாறியிருக்கிறது. தன்மீது பிரியமில்லாத தன் எஜமானனுக்கு அவன் தோழமைகளைத் தனக்குள் சுவீகரித்துக் கொண்டு இது காட்டும் விசுவாசம்.

கோழிக்கோட்டுக்கு அருகே ஓர் ஆற்றங்கரையிலுள்ள பூட்டப்படாத கதவுகள் கொண்ட நஜீபின் அவ்வீட்டுக்குள் யாரும் எந்நேரமும் பிரவேசிக்கலாம். ஒருவேளை உங்கள் வருகை நடுநிசியெனில் அது அறிந்து அடுத்தநாள் காலை உணவு உங்கள் அறைக்கருகே வரும். அதற்கு நஜீப் அங்கிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நஜீபின் குழந்தைகள் அவருடைய தொடர்ச்சியே. வட மாநில வறுமை சூழ்ந்த உள்ளடங்கிய கிராமத்தில் தங்கி அந்த ஊருக்கு ஒரு கிணறு வெட்டியோ, இனியாகிலும் மழைநீரைத் தேக்கிக் கொள்ள ஒரு தூர்ந்த குளத்தை அந்த மனிதர்களோடு சேர்ந்து தூர்வாரியோ, மாதவிடாய் நாட்களில் தீட்டுக்கறை  படிந்த பூவழிந் எந்த சேலையும் கிடைக்காமல், மண்ணை உபயோகிக்கும் நம் சோதரிகளுக்கு நாப்கின் கொடுத்துக் கொண்டோ நஜீப் இப்போது இயங்கிக் கொண்டிருக்கக் கூடும்.

அம்மாநில மக்களின் வாழ்வை அப்பட்டமாக அப்படியே பதிவு செய்திருக்கும் அஜித் கோமாச்சியின் ஒரு புகைப்படக் கண்காட்சியின் திறத்தலுக்குப் பின் நிகழ்ந்த உரையாடல் அது. நஜீப் நிகழ்த்திய உயிர்ப்பு  மிக்க உரையை அதற்குமுன் மலையாள மொழியில் யார் பேசியும் நான் கேட்டதில்லை. மேற்பூச்சற்ற இதயத்திலிருந்து வரும் வார்த்தைகளுக்கு கவிஞனோ, எழுத்தாளனோ தேவையில்லை என்பதை மிக எளிமையாக நான் உணர்ந்து கொண்ட தருணமது.

கோழிக்கோட்டிலிருந்து குட்டிப்புறம் வரை நீடித்த எங்கள் நள்ளிரவுப் பயணமொன்றில் நஜீப் வண்டியை நிறுத்தி, 10 கிலோ பச்சைமீன் வாங்கினார்.

"
எதற்கு நஜீப் இவ்ளோ வாங்குறீங்க?’’

சிரித்துக் கொண்டே,

"
இது நமக்கில்ல பவாண்ணா, நல்ல மீன் உணவு சாப்பிட முடியாத பல வயதானவர்களை, நோயாளிகளை நானறிவேன். நாளை காலை நாம் தூங்கி எழுவதற்குள் எங்கள் குழந்தைகள், அவர்களுக்கெல்லாம் பங்கு பிரித்து பகிர்ந்து தந்துவிடுவார்கள். ஒருவேளை  அது மிச்சமிருந்தால் நாமும் சாப்பிடலாம்.

.நான் நஜீபின் கைகளை இன்னமும் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். என்ன மனுஷன்டா இவன்! என மனதில் உயர்த்திக் கொண்டேன்.

ஒரு படப்பிடிப்பின் இடைவெளியில் நண்பர் மம்முட்டியிடம் நஜீப்பைப் பற்றி விரிவாகப் பேசினேன்.

தன் கண்கள் விரிய, அவர ஒடனே பாக்கணுமே பவா!’ என்றவரை ஏறெடுத்து,
அது அவ்வளவு சுலபமில்ல சார்

அவருடைய 'ஏன்?' பதற்றமாக வெளிப்பட்டதைப் பார்த்து நிதானமாகச் சொன்னேன்.
"இப்படியான எளிய னிதர்களின் உயரம் நம் தொடுதல்களுக்கும் அப்பாற்பட்டது சார்"
நன்றி 
அந்திமழை










No comments:

Post a Comment