என் ஆழ்ந்த அஞ்சலி
தோழர்.
அசல்
மனிதர்களை எழுத்தில் அடைந்த
மேலாண்மை
பொன்னுச்சாமி
என் ஞாபகம் இன்னமும் மங்கத் துவங்கவில்லையென்பது நிஜமெனில், மேலாண்மைப் பொன்னுச்சாமியின் சிபிகள் என்ற கதையே நான் முதன் முதலில் கல்கியில் வாசித்தது. இன்னும் நினைவு கூர்மைதானெனில் அக்கதை முதல் பரிசு பெற்று பிரசுரமாகியிருந்தது.
பன்றி மேய்க்கும் ஒருவனின் வரைபாடு அக்கதை. ஊருக்கு ஒரு குடும்பமோ, இரண்டு குடும்பமோ ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து, பன்றி வளர்த்து, பன்றி மேய்த்து, பன்றி விற்று, அல்லது அறுத்து என தினம், தினம் அல்லல்படும் ஒருவனையே மேலாண்மைப் பொன்னுச்சாமி ‘சிபி’ என வாஞ்சையாய் அழைப்பார்.
அந்த அழைப்பு எனக்கும் சேர்த்து என்பது போல நான் அப்படைப்பாளியைத்
தேட ஆரம்பித்தேன்.
அது ஒரு புனைவைவிட புதிர் நிரம்பியதாகவும், சிறுகதையைவிட சுவாரஸ்யம்
மிக்கதாகவும் அந்த வயதில் என்னை ஆச்சர்யப்படுத்தியது.
மேலாண்மறை நாடு என்பதே பொன்னுசாமியின் சொந்த ஊர்.
படிப்பு ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. ஸ்கூல் வாசலில் ரோஸ்
கலரில் பஞ்சுமிட்டாய் சுற்றிய கழியோடு சத்தம் எழுப்பும் மனிதர்களை பார்த்திருக்கிறீர்களா?
அவர்களில் ஒருத்தர்தான் இக்கதைகளை எழுதுவது என்பதெல்லாம் என்னை
ஆச்சர்யப்படுத்திக் கொண்டே போனது.
நான் இன்னும் தேடி அவரின் பல கதைகளைப் படிக்க ஆரம்பித்தேன்.
அச்சிடப்பட்ட அப்பக்கங்கள் முழுக்க சராசரிக்கும் கீழான எங்கள் மக்கள் மிதிபட்டார்கள்.
அவர்களிலிருந்தே ஒருவன் எழுதத் துவங்கியிருக்கிறான் என்பது இன்னும் எங்கள் தூரத்தைக்
குறைத்தது.
மழைக்காகத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன் என்ற வாக்குமூலத்திற்கு
ஒருவர் மட்டும் சொந்தமில்லை என புரிய ஆரம்பித்தது. அம்முன்னத்தி ஏரைப் பின் தொடர எத்தனையோ
பின்னத்தி ஏர்க்காரர்களின் அணிவகுப்பு கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்தது.
எழுபதுகளில் கிராமங்களுக்குள் வந்து போகும் பஸ்கள். அல்லது ராத்தங்கிப்
போகும் பஸ்களின் இன்னும் எழுதப்படாத ஒரு நூறு கதைகள் மிச்சமிருக்கின்றன. பேருந்தை மையப்படுத்தி,
அல்லது பேருந்து மனிதர்களை முன் வைத்து என்னால் ஒரு கதையும் எழுத முடிந்ததில்லை. இனிமேலும்
எழுதிவிட முடியுமெனத் தோன்றவுமில்லை.
பேருந்து வந்து போகும் கிராமத்தில் என் வாழ்வு இல்லை. அது நகரமும்
இன்றி, கிராமமுன்றி இரண்டுங்கெட்டானாய் கிடந்த ஒரு நிலப்பரப்பில் இருந்துதான் நான்
எழுத வந்தேன்.
மேலாண்மைக்கு அப்படியில்லை. அவர் ஆற்றங்கரைக்கு அப்புறமாய் அமைந்த
வறண்ட கரிசல்மண் கொண்ட ஒரு கிராமத்திலிருந்து எழுத வந்தவர்.
கால்நடையாய் பிழைப்பைத் தூக்கிச் சுமந்து சோர்வுற்று, பேருக்கு
ஒரு பெட்டிக்கடை அல்லது பலசரக்குக்கடை என பெயரிட்டு அதில் நின்றுகொண்டு சம்சாரிகளின்
சாமார்த்தியத்தை, சாமான்யர்களின் அன்பை, காதலை, காமத்தை எல்லாம் கண்களால் பருகி, கைக்கு
கொண்டு வந்தவர்.
நசநசக்கும் வியர்வையினூடே வெயிலோடு நகரும் ஒரு டவுன் பஸ் மனிதர்களை
மனிதல் கொண்டு கி.ரா. ‘மின்னல்’ என்ற ஒரு கதை எழுதியுள்ளார்.
மனிதர்களின் வெறுப்புமிக்க, கசப்பான மனநிலையை ஒரு குழந்தையின்
இருப்பு, ஒரு இளம் பெண்ணின் சிரிப்பு எப்படி மாற்றும் வல்லமைக் கொண்டது என்பதே கதை.
ஒரு படைப்பாளிக்கு இப்படியான தருணங்களை எழுத்தில் கொண்டு வருவது
பெரும் சவால் நிறைந்ததுதான்.
மேலாண்மை அதே சூழலை மையப்படுத்தி ‘எட்டரை’ என்றொரு கதை எழுதியிருக்கிறார்.
மனிதர்கள் ஈரம் நிறைந்தவர்கள் தான். ஆனால் எப்போதும் அப்படி
அல்ல.
அப்பேருந்தில் இடம் பிடிப்பதில் கிராமத்து மனிதர்களிடம் ஏற்படும்
போட்டி, பெரும் சண்டையாக வெடிக்கிறது. நாம் கெட்ட வார்த்தைகளென வகைப்படுத்தி வைத்திருக்கிற
சொற்களால் வசைமாரிப் பொழிகிறார்கள்.
பஸ் வேகமெடுக்கிறது. சண்டையும் வலுக்கிறது.
ஓடும் பேருந்தில் ஒரு பெண்ணின் வீறிட்டு அழும் குரல் கேட்டு
பேருந்து நிற்கிறது. சண்டைக்கார முகங்கள் அனைத்தும் அப்பெண்ணின் இருக்கையை நோக்கிக்
குவிகின்றன. அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி. பிரசவ வலி. விருதுநகர் ஆஸ்பத்திரிக்குப் போகிறாள்.
போகிற வழியில் வலி தாங்க முடியாமல் கதறுகிறாள்.
மொத்த ஆண்களும், அவசரமாகப் பேருந்தைவிட்டு இறங்குகிறார்கள்.
ஒருவர் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து ஜன்னல் வழி மறைப்புக்கு நீட்டுகிறார். கொஞ்சம்
பேர் அவள் சுகப்பிரசவத்திற்கு கடவுளை வேண்டுகிறார்கள். வெயிலின் உக்கிரம் எதுவும் அவர்களை
எதுவும் செய்துவிடவில்லை.
எல்லோர் காதுகளும் ஒரு குழந்தையின் அழுகைக்காகத் தவம் கிடந்து
காத்திருக்கிறது.
அது அவ்விதமேயாகிறது.
குழந்தையின் அழுகைச் சத்தம் எல்லா மனிதர்களின் முகங்களிலும்
புன்னகையைத் தருகிறது.
கண்டக்டர் விசில் ஊதுகிறார். அடித்துப் பிடித்து நெக்கித்தள்ளி
அவர்கள் மீண்டும் இடம்பிடிக்க ஏறுகிறார்கள்.
அதே கெட்ட வார்த்தை, அதே சண்டை, சண்டையில் முன்னிலும் உக்கிரம்
கூடியிருக்கிறது.
அசலான மனிதர்களை, பல வருட அனுபவங்களால் படித்தாலொழிய இப்படி
ஒரு கதையை ஒரு படைப்பாளி தொடக்கூட முடியாது.
பேருந்துப் பயணங்களின் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும் நனைந்தும்
பல ஆண்டுகள் பயணித்த ஒரு எழுத்தாளனே தன் சக பயணிகளை இத்தனை நுட்பங்களோடு சித்திரிக்க
முடியும்.
எண்பதுகளின் பிற்பகுதியில் எழுத வந்த என்னைப் போல பலருக்கும்
எழுத்தும், இயக்கமும் சரிசமமாய் மல்லுக்கு நின்றன. சிலர் எழுத்தையும் பலர் இயக்கத்தையும்
கைக் கொண்டோம்.
ஆனால் இரு தரப்பினருக்குமே மேலாண்மை ஆதர்ஷமாக இருந்தார். பெரிய
காலேஜிலெல்லாம் போய் படிக்காத ஒருத்தர், பலசரக்குக் கடையில் நின்று எழுதுகிற கதைகள்
பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் எங்களை மேலும் மேலும் வியப்பூட்டின.
ஒரு தருணத்தில் தமிழ்நாட்டில் வெளியான எந்த நடுநிலைப் பத்திரிகையிலும்
அவர் படைப்புகள் இல்லாமல் இல்லை.
ஆனந்தவிகடனில் ஜெயகாந்தனுக்கு அப்புறம் அதிகம் கதை எழுதியவராக
மேலாண்மையையே சொல்ல முடியும்.
ஒருவேளை தோழர் தனுஷ்கோடி ராமசாமிக்கு திடீர் மரணம் சம்பவிக்காமல்
தள்ளிப் போயிருந்தால் அவரும் அவ்வரிசையில் நின்றிருப்பார்.
சுபமங்களாவில் ஆரம்பித்து, கல்கி, குமுதம், தாமரை, செம்மலர்
என விருதுநகர் மாவட்ட வெயிலேறிய மனிதர்களின் உடல் வெப்பம் பரவின எழுத்தை என்னைப் போல
வட தமிழ்நாட்டிலிருந்தவர்களும் உணரத் தொடங்கினோம்.
தமுஎச-வின் ஒரு மாநில மாநாட்டில்தான் நாலுமுழ வேட்டியைத் தூக்கிக்கட்டிய
குள்ளமான அம்மனிதனை, ‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’ என என் தோழர் வெண்மணி அறிமுகப்படுத்தினார்.
உள்ளங்கைச் சூட்டைப் பரிமாறிக் கொண்டோம். ‘பூக்காத மாலை’ என்ற
அவரின் அப்போதைய கதையைப் பற்றிய எங்கள் இருவரின் விவாதம் நிறைந்தபோது பிரதிநிதிகள்
மாநாடு முடிந்திருந்தது.
தன் படைப்பின் திசை மாறிவிடக் கூடாது என்பதில் அவருக்கு எப்போதும்
ஒரு கவனமிருந்தது. வாசிக்கும் இலக்கியத்தினூடே, மார்க்சியம், தத்துவம் என சமமாகக் கலந்து
படிக்கும் பழக்கத்திற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தார்.
அவரால் இரண்டுமணி நேர மார்க்சிய வகுப்பை தனியாக இளைஞர்களுக்கு
எடுக்க முடியும். அத்தனையையும் வாழ்விலிருந்தும், இயக்கத்திலிருந்தும் அவர் அடைந்தவையே.
கரிசல் மண்ணின் ஒரு பெரும் வாழ்வை ‘கோபல்ல கிராமம்’ மாதிரியோ, ‘அஞ்ஞாடி’ போலவோ எழுத வேண்டிய முனைப்பு அவருக்குக்
கடைசிவரை கைக்கூடிவிடாமல் போனது, ஒரு வகையில் தமிழிலக்கியத்திற்கு அதிர்ஷ்டமின்மைதான்.
புதுமைப்பித்தன் போலவே, வண்ணதாசன் போலவே, மேலாண்மையும் தன் வாழ்வின்
பாட்டையும், மனிதர்களின் இயல்பையும் சிறுகதைகளாகவே முடித்துக் கொண்டார்.
எனக்குத் தனிப்பட்ட முறையில் ஒரு மூத்த அண்ணன் ஸ்தானம் எப்போதும்
அவருக்கு உண்டு.
அவரையும், அவர் படைப்புகளையும் நானும் ஷாஜகானும் எல்லாத் தோழர்கள்
மத்தியிலும் கிண்டலடிப்போம். ஒரு போதும் அவர் முகத்தில் கோபமேறிப் பார்த்ததில்லை.
அவர் தமிழகமெங்கும் புகழ்பெற்றிருந்த சமயம் அது. நான் கல்லூரிப்
படிப்பை பாதியில்விட்டு இலக்கியம், இயக்கம் என இயங்கிக் கொண்டிருந்த எண்பதுகளின் இறுதி
நாட்கள்.
எங்கள் வீட்டு சாலிடர் டி.வி. தெருவில் ஒரு டேபிள் போடப்பட்டு
தினம் தினம் தெருவுக்குக் கொண்டு வரப்பட்டு, தெரு மக்களுக்கு படம் போட்டுக் காண்பிக்கும்
மாபெரும் உபச்சாரத்தை அப்பா தனக்கோட்டி வாத்தியர் தவறாமல் செய்து கொண்டிருந்த நாட்கள்.
தோளில் மாட்டின பையோடு டி.வி. பார்க்கும் ஜனக்கூட்டத்தில் வந்து
நின்ற அந்த நடுவயது மனிதனை உட்காரச் சொல்லி அப்பா கைக்காட்டின இடம் தெருவை அடைத்து
அம்மா கட்டியிருந்த கோழிக் கூண்டு.
எதுவும் பேசாமல் அவர்களோடு உட்கார்ந்து ‘சவாலே சமாளி’ பார்த்து
முடித்து, எல்லா மக்களும் போன பின்பும் கோழிக் கூண்டைவிட்டு எழாமலிருந்த அம்மனிதனைப்
பார்த்து,
‘‘என்ன ஊர்ப்பா?’’ இது அப்பா,
‘‘தெக்க, விருதுநகர் பக்கம்,’’
‘‘பரவாயில்லை வந்து சாப்புடு’’ இது அம்மா.
‘‘நான் பவாவைப் பாக்கணும்’’ இது அவர்.
‘‘அவன்ல்லாம் ஒரு ஆளு. என் சம்பாதியத்துல தின்னுட்டு ஊர் சுத்திட்டு
ஊரடங்குன நடுச்சாமத்துலதான் வருவான், நீ சாப்புடு’’
அவர் தரையில் உட்கார்ந்து கை நனைக்கையில்,
‘‘அவனைப் பாக்கவா இம்புட்டு தூரம் வந்திருக்க, நீயும் அவன மாதிரியே…’’
எதுவோ பொறி தட்ட
‘‘உன் பேரு?’’
‘‘மேலாண்மைப் பொன்னுச்சாமி’’
வாயில் வைத்திருந்த சோற்றுப் பருக்கைகளினூடே அவர் வார்த்தைகள்
தடுமாற…
அப்பாவின் கைகள் அவரை நோக்கிக் குவிகின்றன.
ஒரு எழுத்தாளனுக்கான மரியாதையும், அன்பும் அதற்குள் அடங்கியிருந்தன.
அதுவரை வந்த அவரின் எல்லாக் கதைகளையும் அப்பா வாசித்து தனக்குள்
ஏற்றிக் கொண்ட ஒரு எழுத்தாளனைப் பற்றிய உயர்ந்த மதிப்பீடுகள் அவை.
நான் நள்ளிரவு வந்தபோது இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரும்,
ஈசிச் சேரில் அப்பாவும் தூங்கிக் கொண்டிருந்ததைக் கலைக்க மனமின்றி, திருட்டுப் பூனையின்
கால்களில் நடந்து நடையில் பாய் விரித்துப் படுத்தேன்.
விடிந்த காலைதான், இரவு வந்திருந்த அதிதி ஒரு புகழ்பெற்ற எழுத்தாளன்
என்பதை எனக்குச் சொன்னது.
அடுத்த இருநாட்களும் எங்கள் கொல்லை மேடுகளில் சுற்றிச்சுற்றி
நாங்களிருவரும் இலக்கியம் பேசினோம். கிராமத்து மனுஷாளையெல்லாம் அவர் வார்த்தை அப்பங்களாய்
எனக்கு ஊட்டினார்.
எங்கள் நிலப்பரப்பு ஊற்றுநீரை திராட்சை ரசமாக்கி நான் அவருக்குப்
பருகத் தந்தேன்.
இதோ முப்பது வருடங்கள் சுலபமாகக் கடந்துவிட்டன.
எதனாலோ சொந்த மண்ணை, நேசித்த மனிதர்களை, அவர்களின் அப்பாவித்தனத்தை,
அல்லது அடாவடியை எல்லாம் இழந்து சென்னையில் மகள் வீட்டு அப்பார்ட்மெண்டில் ஏதோ ஒரு
அறையில் அப்படைப்பாளியின் வாழ்வு சுருங்கிவிட்டது. எதிரே அவர் எழுதி முடித்து தொகுப்புகளாய்
வந்த புத்தக அடுக்குகளில் ஒளிந்திருக்கிறார்கள் அவரின் அசல் மனிதர்கள்.
No comments:
Post a Comment