Sunday, August 26, 2018

பெரியாரின் தொடர்ச்சி



கேரளாவின் தேசாபிமாணியில்   நான் கலைஞரின் மறைவையொட்டி எழுதிய பெரியாரின் தொடர்ச்சி என்ற  கட்டுரை கவர் ஸ்டோரியாக வெளியாகியுள்ளது. அதன் பக்கங்கள் தமிழாக்கத்தில்.... 
பவாசெல்லதுரை

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த சமூக, அரசியல் தலைவனின் இறுதி அஞ்சலிக்கும் இத்தனை லட்சம் மக்கள் திரண்டதில்லை என அரசியல் விமர்சர்கள் கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வை மதிப்பிடுகிறார்கள். கிட்டதட்ட தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களும்நகரங்களும் தங்கள் இயல்பை அப்படியே நிறுத்திவிட்டு சென்னையை நோக்கி திரும்பியது. ஒரு மகத்தான தலைவனால் மட்டுமே எந்த புற உந்துதல்களுமின்றி மக்களை இப்படி உந்தித் தள்ள முடியும்.


கலைஞர் கருணாநிதி நம் ஒவ்வொருவரின் மதிப்பீடுகளையும் மீறி  உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மக்கள் மனதில் உறைந்திருந்தார். நீதிக்கட்சி, திராவிடக்கழகம்,  திராவிடமுன்னேற்றக்கழகம் என ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பெயரில் அடையாளப்படுத்தப் பட்டாலும்,  சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கேட்கும் அந்த இயக்கத்தின் குரல் காலத்துக்கு காலம் உரத்தும், தேய்ந்தும் இப்போதும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. கடந்த நூறாண்டுகளை  சமமாக நாம் பிரித்துக் கொண்டால் முன் பாதிக்கான போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடமிருந்து கொள்கையையும் போராடும் குணத்தையும் அப்படியே சுவீகரித்துக் கொண்ட கருணாநிதி அடுத்த ஐம்பதாண்டுகளை தன் தலைமையின் கீழ் முன்னெடுத்தார்.
அதில் நம் எதிர்பார்ப்புகளை மீறின சில சறுக்கல்கள் உண்டு. உலகம் முழுக்க தொடர்ந்து இயங்கும் அரசியல் இயக்கங்களில் இப்படியான சறுக்கல்கள் இல்லாத அரசியல் இயக்கம் எது? தன் முன்னத்தி  தலைவர்களிடம் தான் பெற்ற தீயை இது நாள்வரை அணையவிடாமல் காத்ததுதான் கருணாநிதி என்ற ஆளுமையின் தனிப்பெரும் கம்பீரம். அதனாலேயே மக்கள் அவரை தன் நம்பிக்கைக்குரிய தலைவனாக தங்களுக்குள் அடைகாத்துக் கொண்டார்கள்.
திமுகவின் செயல் தலைவரும், கருணாநிதியின் மகனுமான மு..ஸ்டாலின் தன் தந்தையின் உயிரற்ற உடலுக்கு முன் நின்று ஒரு ட்விட் போட்டார். தமிழ் மக்களை ஒரு கணம் கலங்க வைத்த நான்கு வார்த்தைகள் அது.

“தலைவரே, இப்போதாவது ஒரு முறை
அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா?”

கலைஞரும், ஸ்டாலினும் திமுக என்ற பேரியக்கத்தின் இரு மூத்த உறுப்பினர்களாகவே நடந்து கொண்டார்கள். எம்.எல்..க்கான நேர்கர்ணலில் தலைவர் கலைஞர், பேராசியர் அன்பழகன் முன் ஒரு கல்லூரி மாணவனைப்போல ஸ்டாலின் நேர்காணலுக்காக அமர்ந்திருந்த ஒரு புகைப்படம் ஏனோ  இன்னேரம் நினைவுக்கு வருகிறது.



நேர்காணல் இல்லாமல்கூட ஸ்டாலினால் அந்த இடத்தை சுலபமாக அடைந்துவிட முடியும். ஒரு ஜனநாயக இயக்கம் பொது வெளிகளில் அப்படி நடந்து கொள்ள முடியாது. அல்லது கூடாது என்பதை இருவரும், அக்கட்சித் தொண்டர்களைப் போலவே நன்கு அறிந்திருந்தனர்.

தன் பதினாங்காவது வயதில் ஒரு மாணவனாக தன் கையில் கொடியை ஏந்திக்கொள்கிறார் கருணாநிதி. தன் தொண்ணூற்றி நான்கில் தன் மரணத்தின் போதும் இடைவிடாத தன் போராட்டத்தை அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஆட்சியில் இல்லாதபோது வேறு மாதிரியும் ஆட்சியில் இருந்த போது ஆதிக்க சாதித் திமிரையும், துரோகங்களையும் எதிர்த்து அவர் போராட வேண்டியிருந்தது.

தன் வாழ்நாளில் தான் அதிகம் நேசித்த தன் அண்ணன் அண்ணா சமாதிக்கு அருகே தானும் விதைக்கப்பட வேண்டுமென அவர் விருப்பம் ஆட்சியாளர்களால் சுலபமாக துடைத்தெறியப்பட எடுத்த எல்லா முயற்சிகளும் சுலபத்தில் முறியடிக்கப்பட்டு, அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணாவுக்கு அருகிலேயே கல்லறை என்ற முடிவு எட்டப்பட்டபோது   துக்கமே பெரும் ஆனந்தமாக மாறி, மு..ஸ்டாலின் தன் கண்ணீரை கைகள் கொண்டு அடைக்க முயன்றும், தன் கைகளை நீட்டி தன் கட்சியின் மூத்த தலைவர் துரை முருகன், தன் தங்கை கவிஞர் கனிமொழி இவர்களை தன் தோள்களில்  அணைத்த காட்சிப்பதிவு அத்தனை சுலபமாக கடந்துவிட முடியாத ஒன்று.  அது காலத்தின் உறைநிலை. சமூக நீதியை எட்டுவதற்கான ஐம்பதாண்டு கால உழைப்பு அக்கண்ணீருக்கு பின்னிருக்கிறது.



உலகின் மகத்தான தலைவர்கள் அனைவருமே, தங்கள் மக்களிடம் பேச ஏதாவதொரு முறையை தேர்தெடுத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர் க்கு உடல்மொழியும் கையசைப்பும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
கலைஞர் முரசொலி என்ற தன் கட்சி பத்திரிக்கையில் உடன்பிறப்பே ! ‘ என தன் தம்பிகளை அழைத்து தன் எல்லா கருத்துக்களையும் பகிர்ந்து  கொண்டார். எழுதி எழுதித் தீராத தன் பேனாவை சில சமயங்களில் ஓய்வெடுக்க வைத்து விட்டு மேடைகளில் பேச ஆரம்பித்தார்.

அன்பார்ந்த என ஆரம்பித்து சற்று இடைவெளி விட்டு கூட்டத்தின் மொத்த மௌனத்தையும் உள்வாங்கி

என் உயிரினும் மேலான உடன்பிறப்பே

என அந்த வாக்கியத்திற்கு அவர் கமா போடுகையில் எழுகிற கரவொலியை தமிழகத்தின் எல்லா நகரங்களும் கிராமங்களும் விழித்திருந்து கேட்டிருக்கின்றன.



காற்று அந்த கரவொலியின் வலிமையை டெல்லிவரை எடுத்துச் சென்று சேர்த்திருக்கிறது. அதனாலேயே பல பிரதமர்களின் உருவாக்கத்தில் இந்த எளிய ஆனால் வலுவான திராவிட மனிதனுக்கு மகத்தான பங்கிருந்தது.

தந்தை பெரியாருக்கும்,  பேரறிஞர் அண்ணாவிற்கும் பல சமூக கனவுகள்  இருந்தன. தீண்டாமை ஒழிப்பு, விதவைமறுமணம் எனத் துவங்கும் அப்பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டேயிருந்தன. தான் முதல்வராக பணியாற்றிய 5 முறையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றியவர் கருணாநிதி. அரசின் உள்ளிருந்து எழுந்த எதிர்ப்புகளை அநாவசியமாக புறந்தள்ளினார்.

தெருக்களின் பெயர்மாற்றம், சாதியின் பெயர்களால் அடையாளப்படுத்தப் பட்ட அத்தனையையும் அப்புறப்படுத்தியது, வரலாற்றில் நிலைக்கும்  நினைவிடங்கள் உருவாக்கம். வள்ளுவர் கோட்டம் துவங்கி வள்ளுவனுக்கு குமரிக்கடலில் சிலை வைத்தது வரை வேறெந்த அரசியல் தலைவனின் மூளைக்குள்ளும் உதிக்காத சிந்தனைகள்.

மக்கள் இவைகளை மறந்துவிடக்கூடாது என நினைக்கும்போதெல்லாம் மாநாடுகள், கவியரங்குகள் என தன் பகுத்தறிவு கொள்கைகளை காலத்தின் முன் விதைத்துக் கொண்டே இருந்த மகத்தான தலைவர் அவர் மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு, நினைவுப்படுத்திக் கொண்டுயிருப்பது கலைஞனின் கடமை என்ற வாக்கியத்திற்கு  ஒரு வாழும் உதாரணமாக நாம் கலைஞரின் பொது வாழ்வை மதிப்பிடலாம். .

தொண்ணூற்றி நான்கு வயது மரணம் ஒரு மூப்பனின் மரணம், ஒரு வயோதிக மரணத்திற்க்கான காத்திருப்பு என எம் தமிழ்மக்கள் யாரும் உதாசீனபடுத்த முடியாத மகத்தான மரணம் அது. வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டமாய்  தன் தலைவனின் முகத்தை கடைசியாய் ஒருமுறை தரிசிக்க வேண்டி தமிழகத்தின் எல்லா  திசைகளிலிருந்தும் வந்து குவிந்தார்கள். திராவிடத்தின் பலம் தாங்காமல் சென்னை ஒரு நிமிடம் திணறிய காட்சியை உலகமே வியர்ந்து பார்த்தது.

கூவம் கரையோரங்களில் எந்த பாதுகாப்பும், சுகாதாரமுமின்றி குடிசை வீடுகளில் வாழ்ந்து தீர்த்த பல ஆயிரம் குடும்பகளை பல மாடி ஹவுசிங் போர்டு வீடுகள் கட்டி குடியமர்த்திய தன் தலைவனுக்கு அவர் ஒவ்வொரு முறையும் ஓட்டு கேட்க வரும் போது தங்கள் குழந்தைகளின் கையில் மலர்களை தந்து அவர் மீது தூவ வைத்து அழகு பார்த்த எளிய மக்களின் பேரன்புதான் இத்தனை  லட்சம் மக்களை தன் தலைவனை வழி அனுப்ப கூட்டி வந்தது.

பலமுறை கட்சி உடைந்திருக்கிறது. தனக்கு நெருங்கிய பலரே துரோகத்தால் அம்மனிதனின் முதுகில் கூரிய கத்திகளை செருகியிருக்கிறார்கள். இனி அவ்வளவுதான்திமுகஎன்ற சொல் தொடர்ந்து  அவரின் எதிரிகளால் ஒரு இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி போல நிகழ்ந்திருக்கிறது. அவைகளை ஒரு முற்றிய மரத்தின் உறுதியோடு தனக்குள்ளேயே ஏற்றுக் கொண்டு,

என் உயிரிலும் மேலான உடன்பிறப்பே

என பல லட்சம் மக்களின் ஆரவார வரவேற்பில் அந்த வலியை கரைந்திருக்கிறார்.

பெரியாரும் அண்ணாவும் கூட கலைஞர் அளவுக்கு களப்பணியையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றவர்கள் அல்ல.

பெரியார், தன் தொடர் பிரச்சாரம் மூலம் மக்கள் மனங்களை மெல்ல மெல்ல வென்றுவிட முடியும் என  நம்பினார்.

சட்டத்தை இயற்றுகிற கைகள் தனதாயின் இச்சமூக அவலங்களை ஏன் நிறுத்திவிட முடியாது? என அண்ணா நினைத்தார் ஆனால் அதற்கு  வாய்ப்பளிக்காமல் காலம் அவரைத் தின்று தீர்த்தது.

இவர்களிலிருந்து  எழுந்து வந்த கலைஞர், எழுத்து, பேச்சு,  செயல், கலை, இலக்கியம், ஆட்சி, அதிகாரம், என சகல துறைகளிலும் நின்றெழுந்து மக்களை தன் தொடர் செயல்பாட்டினால் மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டேயிருந்தார்.  

திராவிட இயக்கங்கள் அதுவரை கட்டிக்காத்த மதச்சார்பின்மையை என்ன காரணத்தாலோ வாஜ்பாயின் அரசில் பங்கெடுத்ததின் மூலம் பலிகொடுத்தார் கலைஞர். ஆனால் நீண்ட வரலாற்றில் எந்த மகத்தான தலைவனுக்கும் அப்படி சில சறுக்கல்கள் இருக்குமென, அதை வரலாற்றின் பக்கங்களிலிருந்து  நீக்கிவிடலாம்.

75 திரைப்படங்களின் உருவாக்கத்தில் பங்கெடுப்பு, பல நூறு நாடகங்கள், குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பிய பூங்கா என இடைவிடாத எழுத்துச் செயல்பாடு. கைகள் அனுமதித்த வரை  எழுத்து, சொல் சிதறாதவரை உரை, என கடைசிவரை இயங்கிய ஒரு சமூக செயற்பாட்டாளனாக தமிழ் சமூகத்தின் முன் உயர்ந்து நின்றவர் கருணாநிதி.

இதுவரை சுமார் 2 லட்சம் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சலிப்பின்றி இயங்கும் ஒரு படைப்பு மனத்திற்கே இதுவெல்லாம் சாத்தியம்.

ஆட்சியிழப்பு, குடும்ப சண்டைகள், முதுமை, நோய்மை, தனிமை, புறக்கணிப்பு இவைகளின் முதல் கோரிக்கை பலியே எழுத்தும், பேச்சும் தான். எச்சூழலிலும் கலைஞர் அதை மட்டும் தன் இன்னொரு கண் போல் காத்துக் கொண்டார்.

பல உச்சங்களை தொட்ட அடுத்த நாளே பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறார். இந்தியாவிற்கு ஒரு பிரதமரை உருவாக்கிக் கொடுத்தக் கணத்தில் அவர் லோக்கல் போலீஸ்காரர்களால் ஒரு கிரிமினலைப் போல நடு இரவில் இழுத்து செல்லப்பட்ட  காட்சி, அவர் எழுப்பிய மரண ஓலம், தமிழகமெங்கும் இருந்த மக்களை அச்சப்பட வைத்தது. உள்ளுக்குள் ஆத்திரப்பட வைத்தது. லுங்கி கட்டிக் கொண்டு   சென்னை சிறை வாசலில் அவர் நடத்தியப் போராட்ட காட்சி எளிய மக்களின் மனங்களில் பனி போல உறைந்திருந்தது.

அடுத்த தேர்தலில் அவரையே தங்கள் முதல்வராக பார்த்த பின்பே அந்த பனி உருகியது  எனலாம்.

வரலாறு நெடுக போராட்டங்களையே தன் வாழ்வு பக்கங்களில் குறித்துக் கொண்டார் கலைஞர்.  அவர் இறந்த பின்பும் அதன் ஒரு நாள் மிச்சமிருந்தது.

அது தான், தான் மரணித்து தன் புதையலுக்காக அவர் நடத்தியப் போராட்டம். அதிலும் அவர்தான்  இறுதியில்  வென்றார்.

உலகமே வாயடைத்த நின்ற அந்த கணம்தான், போராட்டங்களால் நிறைவு பெறுகிற வாழ்வு அத்தனை எளிதானது அல்ல என்றும், கனி அழுகி வீரிய விதையாக முளை எழுப்பி, விருட்சமாகி,  ஆயிரம் ஆயிரம் பறவைகளை தன் தோள் மீது அமர்த்தி வைத்து  ஒரு போரட்ட ஆசிரியனைப் போல தன் நீண்ட நெடிய வாழ்வை பறவைகளுக்கும் கற்றுத் தரும். அப்படித்தான் கலைஞர் நம்முன்னே கம்பீரமாய் முன்செல்கிறார்.