ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோ ஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் இருந்து இதை எழுத நேர்ந்த துரதிஷ்டம் பிடித்தநாள் இந்த சனிக்கிழமை.
தன் வாழ்நாள் எல்லாம் அதைக் கண்டு ஓடி ஒளிந்த ஒரு குழந்தையிடம் போய் ஈவிரக்கமின்றி தன் சகல அகங்காரத்தையும் காட்டி நின்றிருக்கிறது மரணம்.
நாற்பத்தியோரு வயதிற்குள் முத்துக்குமார் அடைந்த உயரமும்,
அவன்மீது விழுந்த வெளிச்சமும் அவனாலேயே இறுதிவரை நம்ப முடியாதது.
ஒரு அடர்மழை பிடித்துப் பெயர்ந்த ஒரு முன்னிரவில் தன் நண்பன் நந்தலாலாவோடு என் வீட்டிற்கு நனைந்த உடம்போடு வந்து நின்று,
‘‘ஒரு துண்டு கொடுண்ணே,
என் பேரு முத்துக்குமார், என் தூர் கவிதையை நீ
எல்லா மேடைகள்லேயும் சொல்றீயாமே, தோ இப்ப எனக்கும் சொல்லு’’
என்ற கணம், அண்ணன் தம்பிகளற்ற எங்கள் வாழ்வில் அவனுக்கு அவ்விடம் தரப்பட்டது.
நானும், ஷைலஜாவும் எங்கள் கைபேசி பெயர் சேகரிப்பில் அவன் எண்ணை ‘தம்பி’ என்றே பதிந்திருக்கிறோம்.
எதிலிருந்தும் சட்டென விலகி தனித்திருப்பதையே எப்போதும் விரும்புவான். அந்த வெள்ளெலி உணவு சேகரிப்பதற்காகவே வயல் வரப்புகளில் மேயும்.
மற்றபடி அது தன் ஈரம் படர்ந்த பொந்துக்குள்தான் எப்போதும் இருக்க விரும்பும்.
தன் மூன்றரை வயதில் பள்ளியிலிருந்து பாதியில் வீட்டிற்கு தன் மாமாவின் சைக்கிளில் அழைத்துவரப்பட்டு, வீட்டு வாசலில் அம்மாவின் உடல் பூமாலைகளுக்கு இடையே கிடத்தப்பட்டிருப்பதை வெறித்து பார்க்க பார்க்க,
யாரோ ஒரு அத்தையால் கைபிடித்து அழைத்துப் போகப்பட்டு ஒரு கரும்பு துண்டு கைகளில் திணிக்கப்பட்ட நாளில், அவன் இந்த வாழ்வின் எல்லாக் கசப்பையும்,
ஏதோ ஒரு இனிப்புசுவை கொண்டு ஏமாற்றக் கற்று கொடுக்கப்பட்டவன்.
புத்தகங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரே சொத்தாக பாவித்த அப்பாவின் நிழல்தான் இன்றளவும் அவன் தேகத்தின் மேல் படிந்திருப்பது.
முத்துக்குமாரின் பால்யம் அம்மாவின் மடியற்றது.
அப்பாவின் பேரன்பைத் தாங்க முடியாதது.
தன் வயதையொத்த நண்பர்களால் குதூகலமான உலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனாலும் அவன் வசிப்பிடம் அந்த எலி பொந்துதான்.
வளர்ந்து ஆளானபின் அவன் ஷைலஜாவை அக்கா அக்காவென வாய்நிறைத்து அழைத்தாலும் அவளுக்கான இடம் தன் அம்மாவுடையது என்பதை அவர்கள் இருவருமே அறிந்திருந்தார்கள்.
பிறந்து ஐந்து மாதங்கூட தன் மகள் கருவில் உருவாகிவிட்டாள் என்ற செய்தியை ஒரு அதிகாலையில்,
‘‘அக்கா எனக்கு ஒரு ஆனந்த யாழ் பிறக்கப் போறா’’
என அவன் அவளுக்கே முதன்முதலில் சொன்னான்.
நானறிந்து அவன் அப்பா அவனை ஒரு கோழிக்குஞ்சைப் போல தன் சேட்டைகளின் இதமான சூட்டிலேயே கடைசிவரை வைத்திருந்ததும். தன் மகன் ஆதவனை ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுக்குள்ளேயே சுமப்பதை மாதிரி முத்துக்குமார் சுமந்ததும் வேறு யாராலும் அடைய முடியாத உறவின் உச்சம். தான் ஒரு கவிஞன் மட்டுமே என
ஒவ்வொரு விநாடியும் தனக்குள்ளேயும், பொதுவெளியிலும் சொல்லிப் பார்த்துக் கொண்டவன், சமூகம் தன் பாடலுக்காகத் தன்னைக் கொண்டாடிய போதெல்லாம் கூச்சப்பட்டு அதே பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொள்ள முயன்றவன்.
‘‘நீ இ.பி.ல
தானேண்ணா வேலை பாக்குற.
எவனாவது உன்னை இ.பி.க்காரன்னு சொல்றானா?
நான் சினிமாவுக்குப் பாட்டெழுதுறேன். என்னை மட்டும் ஏன்னா பாடலாசிரியன்னு சொல்றாங்க,
அப்படி சொல்ற எவன் முன்னும் என் கவிதைத் தொகுப்புகளை எடுத்து வன்மத்தோடு.
வீசுவேன்’’
‘கவிஞன்’ என்ற ஒரு சொல்லின்மீது அவனுக்கிருந்த அதீத வெறியும்,
அது கலையும்போது அவனுக்கேற்பட்ட ஆற்றாமையும் சொல்லில் அடங்காதது.
முத்துக்குமாரின் உலகம் சமூகம் சார்ந்ததல்ல. தன் உரைநடையில் இரண்டாமிடத்தையே எப்போதும் சமூகத்திற்கென ஒதுக்கி வைத்திருப்பான். முதலிடம் தன் ரத்த உறவுகளுக்கு.
அப்பா நாகராஜில் ஆரம்பித்து ஆதவனில் தொடர்ந்து அவனுக்கு எத்தனை சித்திகள்?
எத்தனை அத்தைகள்? எத்தனை மாமாக்கள்?
எங்கெங்கோ பூமிக்கடியில் அக்குடும்ப வேர்களுக்கு அவன் மட்டுமே கடைசிவரை நீர் வார்த்தான். மழை அரிப்பின் அதன் மண் அரிப்புக்குத் தன் சதையையே மண்ணாக்கி வேர் காத்தான். அதனால்தான் அவன் எழுத்து அதைச் சுற்றியே சுழன்றன.
பிரத்தேயமான சில குணாம்சங்களைக் கொண்டிருந்தவன். எங்கள் வீட்டில் ஒரு காலையில் உணவருந்திவிட்டு அவன் போன பத்தாவது நிமிடத்தில் அதற்காகவே காத்திருந்தது போல் வந்து சூழ்ந்த வெறுமையை, ஒரு தொலைபேசி அழைப்பில் துடைத்தெறிந்தவன்.
‘‘அக்கா, என் ஆனந்த யாழ் பாட்டுக்கு நேஷ்னல் அவார்டு’’
அவ்வளவுதான். கவிஞர்கள் எப்போதும் வார்த்தைக் கருமிகள்தான். அதிலும் என் தம்பி முத்துக்குமார் மகா கருமி.
நானும், நண்பர் எஸ்.கே.பி. கருணாவும்தான் அவன் திருமணத்தின் மாப்பிள்ளைத் தோழர்கள்.
அங்கு குவிந்த திரைப்பட நட்சத்திரங்களின் வருகை அவனை இம்மியளவும் ஈர்க்கவில்லையென்பதை கவனித்தேன்.
அப்போதும் தன் ஆயாவின் கைகளைப் பற்றிக்கொண்டு மண்டபத்துக்கு எதிரே ஒரு ஓரமாக நின்றிருந்த கிராமத்துப் பையனின் ஆழமான உறவை தன் ஆயாவிடம் அவன் காட்டிய நெருக்கத்தில் கண்டிருக்கிறேன்.
அவன் எப்போதுமே யாருமே கணிக்க முடியாத ஒரு கணத்தால் நம்மைக் கடப்பான்.
கணையாழி விழாவில் சுஜாதா அவனுடைய தூர் கவிதையை வாசித்து,
‘இதை எழுதியது யாரெனத் தெரியாது.
இக்கூட்டத்திலிருந்தால் மேடைக்கு வா: என
அழைத்தபோது, ஒரு கவிதை மட்டும் எழுதிய அப்பாவிப் பையனாய் மேடையேறி கூட்டத்தைப் பார்த்து மலங்க மலங்க முழித்தபோது, யாரோ ஒருவர் தன் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயை அக்கவிதைக்காக அவனுக்குப் பரிசளித்தபோது, கவனமாக அம்மேடையில் நின்று தொகை சரியாய் இருக்கிறதாவென எண்ணிப் பார்த்த வினாடி எதிரில் எழுந்த கைத்தட்டல்களையும், சிரிப்பொலியையும்,
‘இத்தொகையை கணையாழியின் வளர்ச்சி நிதிக்குத் தருகிறேன்’
எனச் சொல்லி மௌனமாக்கியவன்.
அவனை யாராலும் அவதானித்துவிட முடியாதபடி வாழ்வாற்றில் தன் போக்கில் போய்க் கொண்டிருந்த குழந்தை அது.
தன் சக படைப்பாளிகளில் வறுமையிலிருப்பவரென அவன் கருதிய எல்லோருக்கும் தன்னிடம் வந்த பாடலுக்கான பணத்தைப் பகிர்ந்து தந்திருக்கிறான்.
தன் உடம்பில் ஒரு புற்றுமாதிரி உருவாகி தினம் தினம் வளர்ந்த தனிமைக்குத் தின்ன, தன்னையே கொடுக்க முடியாத ஒரு தருணத்தில்தான் அவன் குடிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
நானும் ராமசுப்பும் (இயக்குனர் ராமை முத்து எப்போதும் அப்படியே அழைப்பான்) அவன் குடிக்கான காரணத்தை கடைசிவரை மையப்படுத்த முடியாமல் தவித்திருக்கிறோம்.
எங்கோ ஒரு அடி (அது நிச்சயம் தன் உறவிலிருந்து மட்டுமே) எப்போதோ பலங்கொண்ட மட்டும் அவனுக்கு விழுந்திருக்கிறது. அதன் வலியை ஒரு சிறுவனால் வளர்ந்த பின்னும் தாங்க முடியவில்லை. அதன் ரணம் எப்போதுமே,
எதனாலுமே ஆற்ற முடியாதது.
தன் குடியால் அதை ஆற்றிவிட முடியுமென நினைத்த அறியாத குழந்தைதான் அவன்.
தொடர் வாசிப்பை எதன் பொருட்டும் இழந்தவனில்லை. அலைவுறும் தன் திரைப்பட வாழ்வை பணம் தருகிறது என்பதால் மட்டுமே ஏற்றுக் கொண்டவன்.
‘சென்னைக்கு வெளியே ஏதாவதொரு நகரத்து அரசுக் கல்லூரியில் தமிழ் சொல்லிக் கொடுக்கணும்ணே. அதான் என் ஆசை’
முத்துக்குமார் என்ற அக்கவிஞன் பெருங்கனவுகள் எதுவுமற்றவன். கையில் சேரும் பணத்தைக் காக்கைகளுக்கும் பங்கு வைப்பவன்.
உறவுகள் தொப்புள் கொடியைப் போல அவனைச் சுற்றியிருந்ததை ரகசியமாக ரசித்தவன்.
தான் எத்தனை படித்திருக்கிறோம் என்பதை மேடையில் உரத்த வார்த்தைகளில் சொல்ல துணியாதவன்.
ஒரு குழந்தையின் ஒரு நிமிட இடுப்பசைவு மட்டுந்தான் அவன் மேடைப்பேச்சு. அதற்கு மேலில்லை.
குழந்தையின் நடனம் பார்க்க எதிர் பெஞ்சில் வெகுநேரம் உட்கார்ந்திருக்கும் ஒரு அப்பாவுக்கு அது போதும்.
அது மட்டுமே போதும்.
அப்படித்தான் எங்களிடமிருந்து ஒரு நிமிட இடைவெளியில், நின்றெரியும் நாடக மேடை விளக்கொளியைப் போல் எங்கள் நட்சத்திரம் மறைந்தது.
No comments:
Post a Comment