பவா என்ற மனிதரை இரண்டு விதமாக அறிவேன். ஒன்று வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக. மற்றொன்று ஒரு கதைசொல்லியாக. நேரடியாக அவரைச் சந்தித்திராவிட்டாலும் யூட்யூபில் உள்ள காணொளிகள் வழியாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக்கொண்டுதானிருக்கிறேன்.சில கதைகளை வாசித்தபோது ஏற்பட்ட உணர்வு நிலைகளுக்கு முற்றிலும் மாறான உணர்வெழுச்சியை ஏற்படுத்த வல்லது பவாவின் கதை மொழி.
உதாரணத்திற்கு அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’ சிறுகதையில் ‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க’ என்று காதர் சொல்வதை இயல்பாகக் கடந்த “நான் காசெல்லாம் வேணாம் சார். சம்சாரம் போன்னு சொல்லிடுச்சு சார். சம்பாதிக்காதவன் எதுக்குடா என்கிட்ட குடும்பம் நடத்துறேன்னு சொல்லிடுச்சு சார்.எப்படியாவது எனக்கு ஒரு வேசம் கொடு சார்”என்று பவாசொல்லும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுப்போனேன்.
பவா 2008 ஆம் ஆண்டில் ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ என்ற தனது முதல் சிறுகதைத் தொகுப்பையும் 2016 ஆம் ஆண்டில் ‘டொமினிக்’ என்ற இரண்டாவது தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மொத்தமாகப் பார்த்தால் இருபதே சிறுகதைகள்தான். “பல ஆண்டுகளாக என்னுள் ஊறிக் கிடக்கும் கதைகளோடு வாழ்வது சுகானுபவமான ஒன்று. அவற்றை வெளியே எடுக்க மனம் வரவில்லை” என்று தான் குறைவாக எழுதுவதற்கான காரணத்தைப் பவா முன்வைக்கிறார். ஆனால் இருபது கதைகளையும் படித்து முடித்த பிறகு பவாவிற்குள் வெளிவராமல் புதைந்து கிடக்கும் கதாமாந்தர்களையும் சந்திக்க வேண்டும் என்ற வேட்கை எழுகிறது.அவர் சிறந்த கதை சொல்லி என்பதை அவரது சிறுகதைகளும் நிரூபணம் செய்கின்றன.
பவா தனது புனைவில் காட்டும் நிலப்பரப்பு எனக்கு முற்றிலும் புதிதானது.மலைகளும் காடுகளும் காட்டில் வாழும் உயிரினங்களும் மரங்களும் கதாப்பாத்திரங்களுக்கு இணையாக உலாவும் இக்கதைகள் மருத நிலத்தில் பிறந்த எனக்குவித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தன. கடந்த மாதம் வாசித்த அய்யனார் விஸ்வநாத் எழுதிய ‘ஓரிதழ்ப்பூ’நாவல் வழியாகத்தான் திருவண்ணாமலை என்ற நிலமே எனக்கு அறிமுகமானது.பெயரளவில் மட்டுமே கேட்டுள்ள இதுவரைப் பார்த்திராத இந்த நிலத்தின் ஆன்மாவையும் ஆழத்தையும் பவாவின் கதைகள் வழியாக ஊடுருவி அறிய முடிகிறது.
இந்த ஊடுருவலுக்கு முக்கிய காரணமாய் பவாவின் கதைமாந்தர்களைச் சொல்லலாம். கலைஞன், கள்வன், வேட்டைக்காரன்,கிணறு வெட்டும் ஒட்டன், இருளர், பறையர்என எளிய, விளிம்பு நிலை மனிதர்களை வாசகனுக்கு நெருக்கமாக்குவதில் பவாதனித்தன்மையோடு மிளிர்கிறார். இக்கதைமாந்தர்கள் பவாவின் கற்பனையில் உதித்தவர்கள் அல்லர். அவரைச் சுற்றி வாழ்ந்த உண்மை மனிதர்கள் என்பதை அவரது மொழியின் வழியாக உணர முடிகிறது.
கூட்டம் கூட்டமாய் குகைகளில் வாழ்ந்த காலம் தொடங்கி நாகரீகமடைந்து குடும்பமென்ற அமைப்பிற்குள் வாழும் இக்கணம் வரை மனிதர்களுக்குள் ஏற்படும் உறவுச் சிக்கல்களை இலக்கியம் தொடர்ந்து பேசிக்கொண்டேஇருக்கிறது. மனித மனது எந்த தருணத்தில் அன்பெனும் ஊற்றால் பொங்கி வழியும் என்பதையும் எந்த நொடியில் வன்மமெனும் தீயை உமிழும் என்பதையும் கடவுளால் கூட கணித்துவிட முடியாது.வாழ்வின் அற்புத கணங்களை அற்ப காரணங்களுக்காக அமிலம் ஊற்றி பொசுக்கும் வல்லமை கொண்ட வெறுப்பையும் தொலைவிலிருக்கும் காதலை விட அருகிலிருக்கும் காதல் சில சமயங்களில் முள்ளாய் மாறும் வேடிக்கையையும் பவாவின் சிறுகதைகளான ‘முகம்’,‘பிரிவு’ இரண்டும் பேசுகின்றன.
அதிகாரத்தின் தவற்றாலும் திமிராலும் எந்தக் குற்றமும் செய்யாத எளிய மக்கள் பாதிக்கப்படுவதைப் போலக் கொடுமை வேறோன்றும் இருக்க முடியாது. சமூகத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கசிலர் இருந்தாலும் பெரும்பான்மையோர் இக்கொடுமைகளுக்கு இலக்காகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘பிடி’ சிறுகதையில் பள்ளியில் தனது மகனைப் பழி வாங்கும் நோக்கில் செயல்படும் தலைமை ஆசிரியரைத் தட்டிக் கேட்கும் அப்பாவும் ‘வேறுவேறு மனிதர்கள்’ சிறுகதையில் மன நிலை பாதிக்கப்படும் ஜேக்கப் வாத்தியாரும் இரு துருவங்களாய் நம் மனதில் தங்கிவிடுகின்றனர். குறிப்பாக அக்குளில் குடையோடும் விரைவாதத்தோடும் தன்னைச் சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சிப்படுத்தும் மனிதரான ஜேக்கப் வாத்தியார் இறுதியில் பைத்தியமாவது மனதைக் கனக்கச் செய்கிறது.
கலைஞர்களின் வாழ்க்கை பரிதாபகரமான ஒன்றாகவே இருக்கிறது. அவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கும் கலையை சராசரி மனிதர்களால் ஒருபோதும் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. லௌகீக விஷயங்கள் தரும் அழுத்தங்களைச் சமாளிக்கவும் தனது கலையைத் தொடர்ந்து தக்க வைக்கவும் அவர்கள் வாழ்க்கையோடு ஒரு தொடர் போராட்டத்தை நடத்துகிறார்கள். ‘ஏழுமலை ஜமா’,‘கரடி’ என்ற இரண்டு சிறுகதைகளும் ஒரு கலைஞனின் அகப்போராட்டத்தையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் மனதையும், அவமானத்தையும் பதிவு செய்கின்றன.‘கரடி’ கதையில் தீ சாகசம் செய்யும் தல்லாக்குளம் ரமேஷ் தனது கலைக்கு வெகுமதியாக கிடைத்த ஐம்பது ரூபாய் பணத்தை கிருஷ்ணன் வேஷமிட்டு வரும் சக கலைஞன் மார்பில் குத்துமிடத்திலும் ‘ஏழுமலை ஜமா’ கதையில் ஏழுமலையின் கால்களை வாத்தியார் தொட்டு வணங்குமிடத்திலும் கலைஞனின் மனது எத்தனை உன்னதமானது என்பதை பவா மிக அழகாக காட்டுகிறார்.
தனது களவுத் தொழில் காரணமாய்ப் பிடிபட்டுஜமீனால் தண்டிக்கப்பட்டு கூண்டிலிருந்து தப்பியோடிஇறுதியில் ஜமீன்தாரின் தங்கையால் களவாடப்படும் பச்சை இருளனும்,தனது அத்தனை உடைமைகளையும் மூன்றாம் மனிதனுக்காக விட்டுக்கொடுத்து மனிதர்களிடம் கருணையை மட்டுமே காட்டத் தெரிந்த வெள்ளைக்கார கலைஞனான டொமினிக்கும் வாசகமனதில் நிரந்தஇடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர். குறிப்பாக டொமினிக் ஜெயகாந்தினின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றியை எனக்கு ஞாபகப்படுத்திய ஒரு பாத்திரப் படைப்பு.
‘வேட்டை’ சிறுகதையில் வரும்ஜப்பான் கிழவன் ஹெமிங்வேயின் சாண்டியாகு கிழவனை நினைவூட்டினாலும் கதை வேறு ஒரு கோணத்தில் நகர்கிறது.மனிதனுக்கும் இயற்கைக்கும் நடக்கும் போராட்டத்தில் யார் வெல்வார்? யார் தோற்பார்? என்பது பெரிய புதிர். ஹெமிங்வே சாண்டியாகுவின் வழியாக மனித ஆற்றல் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சி லட்சியவாதத்தை முன்வைக்கையில் பவா யதார்த்தத்தைமுன்னிறுத்திகிறார். வேட்டைக்குச் செல்லும்ஜப்பான் கிழவன் வெறுங்கையோடு திரும்புகையில் காட்டால் வேட்டையாடப்பட்ட அவனது மனதின் காயங்களை உணரும் வாசகன் கலங்கிப் போவான்.
எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று ‘சத்ரு’. திருடனான பொட்டு இருளன் பிடிபடுகிறான். கிராமத்தார் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க முடிவு செய்தவுடன் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன. கடும் பஞ்சத்தோடும் காய்ந்து வெடித்த பூமியோடும் பல நாட்களாய் மல்லுக்கட்டிய அக்கிராமத்திற்கு அன்றிரவு வான்தாய் தனது மேகமுலைகளிலிருந்து மழையைச் சுரக்கிறாள்.துன்பத்தை, கோபத்தை, வன்மத்தை, வெறுப்பை இப்படி எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு பேரன்பையும் பெருங்கருணையையும் மட்டும் விதைத்து மனிதர்களை மழைநீர் நனைக்கிறது. “இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா.போ போய் பொழைச்சிக்க” என்று இறுதியில் பொட்டுஇருளனை அவர்கள் விடுவிக்கும் இடத்தில் மழையால் அவர்கள் மனது கொள்ளும் விரிவும் பெருந்தன்மையும் நமது கண்களையும் ஈரமாக்குகிறது.
‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை’ சிறுகதையில் இரண்டு குழந்தைகளையும் கருவிலேயே பறிகொடுத்த மேரி மூன்றாவதாக வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும் கருவும் தங்காது என்று நிமித்தம் கூறப்பட்டவுடன் கலங்கித் தவித்து,நெருங்கி வரும் கிருஸ்மஸில் ஆர்வமற்று நடைபிணமாய் இருக்கிறாள். தன் குழந்தையைக் காப்பாற்ற ஒரு ரட்சகர் வேண்டுமென்று முட்டியிட்டு இறைந்து மன்றாடுகிறாள். கிறிஸ்மஸிற்கு முந்தைய இரவில் கன்னிமரியாளுக்கு எந்தச் சேதாரமுமின்றி குழந்தை பிறந்துவிட்டது என்று கிருஸ்மஸ் தாத்தா சொல்லும் அச்செய்தி நம்பிக்கையின்மையில் உழன்று கொண்டிருந்த அவளுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிவிடுகிறது.குழந்தை யேசுவின் பிறப்பில் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கும் மேரியின் வழியாக பவா புனைவில் தனது வெற்றியை நிலைநாட்டிக்கொள்கிறார்.
மானுடர்கள் தங்கள் கீழ்மைகளைத் துறந்து ஒரு சொல் அல்லது செயலின் வழியாகதெய்வ நிலைக்கு உயரும் உன்னத தருணங்களைக் காட்சிப்படுத்துவதுதான் பவா கதைகளின் சிறப்பம்சமாக எனக்குத் தோன்றுகிறது. அந்த வகையில் ‘வலி’சிறுகதையில் வரும் ரகோத்தமனும் ‘நீர்’ சிறுகதையில் வரும் அஞ்சலையும் அறத்தின் பக்கம் நின்று மானுட மேன்மையை வாசகனுக்குக் கடத்துகிறார்கள்.
பவா கதைகளின் மற்றொரு சிறப்பு,இவர் மையக் கதாபாத்திரத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மற்றகதைமாந்தர்களுக்கும் தருகிறார் என்பதுதான். இவரது புனைவில் தோன்றும் அனைவருமே தங்களது தனித்துவத்தையும் சிறப்பியல்பையும் கண் இமைக்கும் நொடியில் வெளிப்படுத்தி கதையை ஒரு படி மேலே கொண்டு செல்கிறார்கள்.‘முகம்’ கதையில் அம்முக்குட்டி, ‘சிங்காரக்குளம்’ கதையில் பிணமாய் மிதக்கும் மல்லிகா, ‘சத்ரு’ கதையில் மருத்துவச்சியாய் வரும் ரங்கநாயகி கிழவி, ‘சிதைவு’ கதையில் விலைமாதாக வரும் விஜயா, ‘கரடி’ கதையில் “வேணாண்ணா” என்று கத்தும் கிராமத்துச் சிறுமி, ‘கால்’ கதையில் சூம்பிய கால்களைக் கொண்டவன் இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பவாவின் கதைகள் குறிஞ்சி மயங்கி வந்த முல்லை நிலம் சார்ந்தவை என முன்னுரையில் எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. தாலியறுத்தான் பாறை, கோட்டாங்கல் குன்று, பொறையாத்தம்மன் குன்று ஆகியவற்றாலான குறிஞ்சியையும் மகுட,நாக,வேப்ப, புளிய, பனை, பீவேலி, எட்டி,புங்க,பூர்ச, வெப்பால மரங்களோடு மொசக்குட்டி, காட்டுப்பன்னி, புனுகுப்பூனை,குள்ள நரி, மைனா, காடை, கௌதாரிபோன்ற உயிர்களாலான முல்லையையும் களமாகக் கொண்டு ஜிலேபி, வெரால், உளுவை, கொறவை, வெளிச்சிக் கெண்டை, ஆறா, அசரை, தேளி போன்ற மீன்களின் கவிச்சோடும் சோளம், கம்பந்தட்டை, மல்லாட்டை,கேவுறு,வெள்ளாட்டுக்கறி, கோழிக்குழம்பு இவற்றின் ருசியோடும்தண்ணிமுட்லான் கிழங்குகளின் ஈரத்தோடும் இன்னும் பல படைப்புகள் பவாவிடமிருந்து வெளிவரவேண்டுமென்ற எதிர்பார்ப்போடு ஒரு வாசகியாய் காத்திருக்கத் தொடங்கிவிட்டேன்.
நன்றி - வல்லினம்
கலை இலக்கிய இதழ்
No comments:
Post a Comment