Sunday, January 12, 2020

முரண்பாடுகளுடனான தோழன்


சு.வெங்கடேசன்





அது ஒரு அடை மழைக்காலம். இரவு பதினொருமணியிருக் கலாம். கும்மிருட்டில் திறந்திருந்த கதவின் வழியே வந்த உருவத்தை அடையாளம் காணவேண்டிய அவசியமில்லை எனக்கு. அது,சு.வெங்கடேசன், கல்லூரி மாணவனைப் போலொரு உருவம். அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
மஞ்சம்புல் வேய்ந்திருந்த எங்கள் வீட்டில் ஒரு கயிற்றுக்கட்டிலில் நான் படுத்திருந்தேன் விளக்குகளுக்கு வெளிச்சமூட்டப்பட்டது.

தூக்க கலக்கத்தில் எழுந்து வந்த அம்மாசாப்பிட்டியாப்பாஎன வாஞ்சையான குரலில் வெங்கடேசனை நோக்கி கேட்டாள்.

அம்மாவுக்கு, இந்த உலகில் எல்லா மானிடர்களும் எப்போதும் சாப்பிட்டு பசியாறி இருக்க வேண்டும்.பசித்த வயிறுகள் எப்போதும் அவளைப் பதட்டப்படுத்தின.

வெங்கனேஷனின்  பலமான தலையாட்டலில் அவள் விளக்குகளை அணைத்துவிட்டு படுக்கப் போனாள்.

நினைவிருக்கிறது. அதிகாலை மூன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தோம் .இலக்கியம் பற்றி ஒரு வார்த்தையும் பேசினதாக நினைவில்லை.இயக்கம் குறித்தும்,களப்பணி குறித்தும், கலையிரவு பற்றியும்,அதற்ககு கூடுகிற பல ஆயிர மனித சங்கமம் பற்றியும் பேசினோம்.

இருவருமே சொற்களால் போதையூட்டப் பட்டிருந்தோம்
விடிந்தவுடன் நான் வெங்கடேசனை என் எம்..டி.பைக்கில் ஏற்றிக்கொண்டு கலையிரவு வேலைகளுக்கு என்னுடன் கூட்டிப்போனேன்.அப்போது எங்களைத் தேடிவரும் எத்தனைப் பெரிய படைப்பாளிகளையும் நாங்கள் அப்படி இம்சித்திருக்கிறோம்.

பல்லவன் ஆர்ட்ஸ்-சில் பல்லவன் வரைந்து கொண்டிருப்பதை,சிந்து அச்சகத்தில் நோட்டீஸ் அச்சாகிக் கொண்டிருப்பதை ,கீO கட்டிடத்தில் நவீன பல வண்ண காகித தட்டிகள் நூற்றுக்கணக்கில் கவிதைகளையும்,எழுத்தாளர்களின் வரிகளையும் தன்னுள் இருத்திக்கொண்டு சுவரில் சாய்த்தி வைக்கப்பட்டிருந்ததை,ஊரிலுள்ள பல தனவான்களிடம் நாங்கள் கையேந்தியதை,நள்ளிரவில் ஏதோ ஒரு ரோட்டுக் கடையில் நின்றுகொண்டே பரோட்டா தின்றதை என்று அந்நாள் முழுவதையும் எங்களுடனே இருந்து உள்வாங்கினான் வெங்கடேசன்.
புன்னகைத்த முகம்,நட்புக்கு கைநீட்ட அழைக்காத உடல் மொழி,எப்போதும் தீவிமான யோசனை,தீர்மானிக்கப்பட்ட வெற்றியை நோக்கிய நகர்தல் என வெங்கடேசனை நான் எனக்குள் வரைந்து கொண்டேன்.

அப்போதுபாசி வெளிச்சத்தில்என்ற ஆர்ட்தாள்களில் வண்ணமயமான கவிதை புத்தகத்தை வெங்கடேசன் வெளியிட்டிருந்தான்.அக் கவிதைகளில் ஒன்று கூட என் நினைவில் இல்லை.ஏன் எனில் அவை கவிதைகள் இல்லை.வெங்கடேசனுக்கும் நினைவில் இருக்க சாத்தியமில்லை.அடிப்படையில் வெங்கடேசன் கவிஞன் இல்லை.
விட்டேத்தியான மனநிலையும்,இலக்கின்றி ஊர் சுற்றலும்,மனநிலை பிறழ்வுக்கு தன்னை பலிகொடுப்பதும்,தன்னையே உதறி சாலையில் போட்டுவிட்டு ஒரு பரதேசி மாதிரி வேறு இடத்திற்கு நகர்வதும் வெங்கடேசனின் வாழ்வில்லை.

விக்ரமாதித்யன், .அய்யப்பன்,ஓவியர் சந்துரு என்ற கலைஞர்களுக்கான இடம் அது.

ஆனால் பல ஆண்டுகள் ஊறலில்போட்டு காய்ச்சின, போத்துவா சாராயம் மாதிரி ஒரு நாள் தன் தீவிரமான,கவித்துவமான உரை நடையோடு ஆயிரம் பக்கங்களில் அவன்கோட்டம்என்ற நாவல் மூலம் விஸ்வரூபமெடுத்த போது தமிழ் இலக்கிய உலகமே அவனைத் திரும்பிப் பார்த்தது.

சென்னையில் நடந்த தமுஎச மாநாட்டில் அப்புத்தக வெளியீடு பல புத்தகங்களுக்கிடையே ஒன்றாக நடந்தது.நான்தான் அந்நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.காவல் கோட்டம் எங்கள் கைக்கு வர தாமதமாகிக் கொண்டேயிருந்தது. நிகழ்ச்சிமுடியப்போவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் தமிழினி வசந்த குமாரால் மிக நேர்த்தியான தயாரிப்பில் அப்புத்தகம் மேடை வந்தடைந்தது.

புத்தகத்தின் களமே என்னை வியப்பூட்டியது.அதைஎழுதியக் கைகளை பெருமிதத்தோடுப் பார்த்தேன்.அதன் கையெழுத்துப் பிரதியை எங்களுடன் மேடையிலிருந்த தமிழ்ச்செல்வன் மட்டும் அப்போது படித்திருந்தார்.தான் போகிற இடமெல்லாம் அந்நாவலின் அதிகபட்ச சாத்தியங்களை அவர் நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததாக   சொன்னார்கள்.

தம்பிகள் நண்பர்கள் பட்டியலில் எப்போதும் இருக்கமாட்டார்கள் போல.என்னிடம் அவர் அதைப்பற்றி பேசினதில்லை.நான்தான் அவரிடம் நான் வாசித்த பல  கதைகளை அப்போதைக்கப்போது 
ஒப்பித்துக்கொண்டிருப்பேன்.குறிப்பாக மலையாளத்தில் வந்தநவீன  பெண் கதைகளை.என் ஸ்ருதி தமிழ்செல்வனுக்கு சேரவேயில்லை.அவர் ஒவ்வொரு கதைகளையும் வேறு ஒரு கோணத்தில் சொல்லி அவைகளைபெரும்பாலும் நிராகரித்தார்.கே.ஆர்.மீராவின் இரு கதைகளை,சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் கொமாலாவை நான் மிகுந்த உற்சாகச்தோடு அவருக்கு சொல்லத் தொடங்கி வதங்கின முகத்தோடு தொலைபேசியைத் தொங்கப் போட்டிருக்கிறேன்.
அவ்வருடத்தின் சிறந்த நாவலாக அது விகடன் குழுவால் அறிவிக்கப்பட்டபோது நான் அதிர்ந்து போனேன்.அதெப்படி,டிசம்பர் 25-ந் தேதி மாலை வெளியிடப்பட்ட ஆயிரம்பக்க நாவல் அவ் வருடத்தின் சிறந்த நாவல் பட்டியலில் ஜனவரி முதல்வார விகடனில் வரமுடியும்?
நான் பிரபஞ்சன் சாருடனான ஒரு சிகரெட் இரவில் கொதித்தேன்,மூன்று முழு  சிகரெட்களும் தீர்ந்து போகும் வரை. அவர் என் சுடு சொற்களையும்,புகையையும் சேர்த்து உள்ளிளுத்தார்.

எல்லாம் முடிந்து என்னை ஏறெடுத்தார்.அவர் முகம் கொஞ்சம் இருகியிருந்தது.

நான்தான் பவா, அந்நாவலை சிறந்த நாவலென சிபாரிசு செய்தேன்.’
எப்படி சார் சாத்தியம்?

இருபத்தைந்தாம் தேதிதான் புத்தகமே வந்தது,அதற்குள் எப்படி அதை சிறந்த நாவலாக கருத முடியும்?

அவர் புதிதாய் இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு சொன்னார்.
சிறந்த நாவல்களென எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட எதன் மீதும் மனம் ஒப்பவில்லை.என்னைச் சுற்றிலும் மேகங்கள்  மாதிரி பெரும் அதிருப்தி சூழ்ந்த வேளையில்,இந்நாவலின் பிரதி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.முதல் இருநூறு பக்க வாசிப்பிலேயே இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று என்று முடிவெடுத்தேன்.

தாமதமாக வந்திருக்கலாம் பவா,ஆனால் இது அசாத்திய வாசக உழைப்பையும்,களப்பணி அனுபவத்தையும் உள்ளடக்கியது. அதனாலயே இது என் முதன்மைத் தேர்வு.அவர் முடித்தபோது நான் அமைதி காத்தேன்.

எஸ்.ராமகிருஷ்ணன் அந்நாவலை ஆயிம் பக்க அபத்தம் என்ற சொல்லாடலை அதன் மீது  அமிலத்தை மாதிரி ஊற்றிய போதும், அது தமிழ் வாசகர்கள்  மத்தியில் தீவிரமாக வாசிக்கப்பட்டது. அந்நாவலின் பக்கங்கள் ஜெயமோகனால் விரிவாக அலசப்பட்டு அறுபது பக்கங்களில்,  ஒரு காத்திரமான விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

அந்நாவலின் வரும் ஒரு கிழவியின் பாத்திரத்தைப் போல் உயிர்ப்புள்ள ஒரு பாட்டியை தன் வாசிப்பு இதுவரை கண்டதில்லை என ஜெயமோகன் எழுதினார்.

இரு பெரும் எழுத்தாளர்களின் மாறுபட்ட கருத்துக்களை அது தன்மீது சுமந்து கொண்டே ஒரு நதியைப் போல தமிழ் நிலப்பரப்பெங்கும் பயணித்தது.
சு.வங்கடேசன் என்ற உரைநடைக்காரனை தீவிர, இலக்கிய வாசகர்களும் தங்களுக்கு  உள்வாங்கிக் கொண்டார்கள்.

இன்று வரை காவல்கோட்டத்திற்கு பாராட்டுகளும்  நிராகரிப்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த வாரம் வெங்கடேசனுக்குகனடா தோட்ட இயல்விருது அறிவிக்கப்பட்ட போது,நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளி தேவி பாரதி,மிகக்கடுமையான சொற்களில் வெங்கடேசனை நிராகரித்தார்.கனடா தோட்ட அமைப்பாளர்களுக்கு அவர்களின் தவறான தேர்வு இது என சாபம் கொடுத்தார்

பொதுவாக முக நூல் விவாதங்களிலிருந்து முற்றிலும் விலகியிருக்கும் நான்,அதற்கு எதிர்வினையாற்றினேன்.ஒரு விமர்சகனோ,வாசகனோ அதை செய்யட்டும்,ஒரு சக படைப்பாளி நீங்கள், ஏன் பொங்குகுறீர்கள் எனக் கேட்டேன்.

அகிலனுக்குத் தரப்பட்டஞான பீடவிருதில் ஆரம்பித்து கோ.வி.மணிசேகரனுக்கு கிடைத்தசாகித்திய அகாடமிபரிசுவரை தேர்வுகள் சரியானதுதானா தேவி பாரதி?

எப்போதுமே என் முதன்மை நண்பர்களின் பட்டியலில் சு.வெங்கடேசன் இருந்ததில்லை.அவன் தன்னை ஸ்தாபன ஒழுங்குக்கு ஒப்புக்கொடுத்து அதன் வழியே படைப்பாளிகளை அணுகுகிறான் என்ற ஒவ்வாமை எனக்கு உண்டு.
இது எல்லாமே ஒரே வாசில் மாறியது.

சங்க இலக்கிய வாழ்வை மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதி கே.வி.ஜெயஸ்ரீ தமிழுக்கு மொழி பெயர்த்த,’நிலம் பூத்து மலர்ந்த நாள்நாவலை வெளியிட்டு பேச நான் வெங்கடேசனை அழைத்தேன்.ஒரு புன்னகையோடு எனக்குவருகிறேன்என ஒப்புகைக் கிடைத்தது.
அப்பயணத்தின் போதுதான் வெங்கடேசன் மீது எனக்கிருந்த பல ஒவ்வாமைகள் கரைந்தன.ஒவ்வொன்றையும் மழையில் நனையும் மனிதனைக் கழுவி சுத்தப்படுத்தும் மழையைப்போல அந்நாள் என்னை சொஸ்தப்படுத்தியது.

மழை, மனிதனின் வெளிப்புற அழுக்கை மட்டும் சுத்தப்படுத்தும் என நம்பிக்கொண்டிருந்த எனக்கு அது உள்புறத்தையும் சேர்த்தே கழுவி விடும் வல்லமை கொண்டது என்ற இரகசியம் புரிய ஆரம்பித்த நாள் அன்று.
நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலின் ஜீவனை அன்று வெங்கடேசன் தன் முன் குழுமியிருந்த பல நூறு வாசகர்களுக்கு ஒரு கடத்தியைப் போல கடத்தினான்.வாசகர்கள் அந்த உரையின் உண்மையில் மழையில் கரையும் மணசுவர்  மாதிரி கரைந்து கொண்டிருப்பதை மைதானத்தின் தூரத்திலிருந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அன்றிரவு நான், மனோஜ் குரூர்,சந்தோஷ் எச்சிக்கானம்,முருகேச பாண்டியன் என நாங்கள் நான்கு பேரும் பத்தாயத்தில் ஒரு வட்டவடிவமான குடிலுக்கு கீழே உட்கார்ந்திருந்தோம்.

திறக்கப்படாத ஒரு விஸ்கி பாட்டில்என்னை எடுத்துக்கோஎன ஒரு காதலியின் முதல் உடல்தருகையைப் போல எங்கள் முன் காத்திருந்தது.நாங்கள் அதன் தவிப்பை உள்ளுக்குள் ரசித்து உரையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தோம்.

உரையாடலை மனோஜ் இப்படி மலையாளத்தில் ஆரம்பித்தார்.‘நான் தண்ணியடிச்சு ஆறுமாதம் இருக்கலாம்சட்டென முந்திக்கொண்டு சந்தோஷ் சொன்னார்,நான் குடித்து ஆறு மணிநேரம் கடந்துவிட்டதுபவா அண்ணா.
படைப்பாளிகளின் கொண்டாட்டம் இப்படித்தான் துவங்கும்.

ஒழுக்கக் கோட்பாடுகளின் கோடுதாண்டாமையால் வெங்கடேசன் தவறவிட்ட அலாதியான இரவு அது.

மலையாள இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்தை விட பின் தங்கிவிட்டன என்ற என் வாதத்தை எந்த தர்கமுமின்றி  அம்மூவரும் அப்படியே ஏற்றுக்கொண்டது பெரும் வியப்பைத் தந்தது.

ஷைலஜா, எம்.டி.யோட எந்த புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தாங்க?
விலாபயாத்திரை,தமிழில் இறுதி யாத்திரை.அவர்கள்  இருவர் முகமும் ஒருசேர  இறுகுவதை அந்த இருட்டிலும் நான்  கவனித்தேன்
நான் சொன்னேன்,தமிழில் நான் வாசித்தவரை,எம்.டி.முக்கிமான படைப்பாளி இல்லை.

சட்டென அவர்கள் என்னை ஆமோதித்தார்கள்.சந்தோஷ் என் கைகளைப் பிடித்துக் கொண்டு,
சரியான மதிப்பீடு பவாண்ணா,என்றார்.

அவர் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் ரைட்டர், அவ்வளவுதான். கேசவ்தேவ்,.வி.விஜயன்,முகுந்தன்,பஷீர்,சக்காரியா,மாதவன் இந்த வரிசையில் எம்.டி.க்கு மலையாள இலக்கியம் எப்போதும் இடம் தந்ததில்லை.
என் வாசிப்பு மதிப்பீடுகள் சரியானவைதான் என்பதில் நான் அடுத்த மிடறுவைக் குடித்தேன்.

அந்த நீண்ட இரவின் உரையாடலில்தான் சு.வெங்கடேசன் இதே சஙக இலக்கிய வாழ்வையும், பாரியையும் முன் வைத்து ஒரு பெரும் நாவலை எழுதிக்கொண்டிருப்பதை முருகேச பாண்டியன் சொன்னார்.

கபிலர் வாழ்ந்த அரகண்டநல்லூர் வரை பயணித்து ஒரு மலையாளியாகிய என்னாலயே பாரியையும்,கபிலரையும் எழுத்தில் கொண்டு வந்துவிட முடியுமெனில் அதைவிட சிறப்பாக தமிழ் எழுத்துக்காரனால் முடியும்தானே என மனோஜ் அகமகிழ்ந்த காட்சி இன்னும் அகலாதது.

அவர்களின் தீர்க்க தரிசனப்படியேவேள்பாரிவிகடனில் தொடராக வந்து பெரும் வாசகப் பரப்பை அடைந்தது.அதன் வாசகர்கள் உலகெங்கும் வியாபித்திருக்கிறார்கள்.

என் சமீபத்திய வளைகுடா நாடுகளின் பயணத்தின் போது ஒவ்வொரு நாட்டிலும் வெங்கடேசனுக்கும் வேள்பாரிக்குமென வாசகர்கள் இருந்தார்ள்.ஒரு நண்பனை, உறவினனை, மகனை, சகோதரனை நலம் விசாரிப்பது போல என்னிடம் அவர்கள் வெங்கடேசனை நலம் விசாரித்தார்கள்.வேள்பாரி அதன் உயரத்தை அதை எழுதியவனாலயே நம்ப முடியாத உயரத்தை அடைந்தது.

எழுத்திலிருந்து, தான் பல ஆண்டுகளாக அடை காத்து வைத்திருந்த அரசியலில், ஒரு சரியானத்  தருணத்தில் வெங்கடேசன் நாடாளு மன்ற உறுப்பினர் தேர்தலுக்கு தன் சிபிஐ (எம்)கட்சியினரால் முன் மொழியப்பட்டபோது மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன்.
ஒரு தொலைபேசியின் வழியே கூட அதை நான் வெங்கடேசனுக்கு கடத்தவில்லை. எனக்குத் தெரியும் எந்த பரபரப்பிலும், நேரமின்மையிலும், வாசிப்புக்கும், எழுத்துக்குமென, தன் இரவுகளை இரகசியமாக ஒதுக்கி வைத்துக்கொள்ளும் படைப்பு மனம் எப்போதும் அவனிடம் உண்டு.ஒரு பாசிச அரசின் அடாவடிகளும் ,அலைக்கழிப்புகளும்  கூட அம்மனசை  ஒன்றும் செய்துவிட முடியாது.

வெங்கடேசனின் வெற்றி மிக சுலபமாக, ஒரு கனிந்த கனி உதிர்வதைப்போல நிகழ்ந்தது.மக்கள் மாற்றங்களை எப்போதும் விரும்புபவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்தார்கள்.
 வெற்றியின் பெருமிதங்கள் அடங்கிய ஒரு நிதானமான தருணத்தில்,மகளுடனான ஒரு கார் பயணத்தில்  நான் வெங்கடேசனை அழைத்தேன்.

வாழ்த்துகள்டா எம்.பிஎன்றேன் அதே மஞ்சம்புல் வீட்டு வாஞ்சதைகளோடு.
உரத்த சிரிப்பு அங்கிருந்து கேட்டது.கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்போனை மானசியிடம் கொடுஎன்ற சொல்லுக்கிணங்க அவளிடம் தந்தேன்.
சித்தப்பா வாழ்த்துக்கள்என ஆரம்பித்த அந்த நொடி அவள்,எங்கள் ஓட்டுநர் ரமேஷ் திரும்பி பார்க்கிற அளவுக்கு சத்தம் போட்டு சிரித்தாள்.அவர்கள் உரையாடல் முடியும் வரை காத்திருக்க முடியாதத் தவிப்பிலிருந்தேன்..
அவள் தொலை பேசியை ஒரு கையால் மூடிக்கொண்டு ,
ஒண்ணுமில்லப்பா,‘பாரு மானசி உங்க அப்பன், ஒரு எம்.பி.யை வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசுறான்ன்றார் சித்தப்பா.
ஒரு நாடாளு மன்ற உறுப்பினர் பதவி முப்பது வருட முரண்பாடுகளுடான நட்பை ஒருநாளில் துடைத்துவிடக் கூடியதா என்ன வெங்கடேஷா.


No comments:

Post a Comment