தமிழ்நாடெங்கும் அறிவொளி இயக்கம் ஆரம்பித்து, எழுத படிக்கத் தெரியாதவர்களை, குறைந்தபட்சம் கையெழுத்துப் போடவும், வாசிப்பின் முதல் படிக்கட்டைத் தொடவும் எடுக்கப்பட்ட ஒரு முயற்சியில் இடதுசாரி கலைஞர்கள் எல்லோரும் பங்கெடுத்தோம். அது எளிய பாமர மக்கள் மீது எங்களுக்கிருந்த ஒரு விதமான நேசம். இப்போது யோசிக்கையில் அப்படிப் போயிருக்க கூடாதோ என்றும், நாம் பங்கெடுக்காமல் வேறு யார் அதை செய்திருக்கக் கூடும் என்ற இருவேறு மன நிலைகள் தோன்றுகின்றன.
பல முக்கியமான எழுத்தாளர்களின் கதைகளை எழுத படிக்கத் தெரியாத மக்களுக்காக மாற்றி எழுதினோம். நேரடியான கதைசொல்லலுக்கு மக்கள் எங்களை மிக நெருங்கினார்கள். உண்மையில் நாங்கள் கற்பித்ததைவிட அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டோம். பேரா. மாடசாமி சொல்வார், எங்கள் மக்களின் மூச்சுக்காற்றை இத்தனை நெருக்கமாக உணர்ந்ததில்லை என்று சொல்லும்போது, நாம் சாதாரண மனிதர்களிடமிருந்து எத்தனை தூரம் விலகியிருந்தோம் என்பதை உணர முடிந்தது.
அது பரபரப்பும், தூக்கமின்மையும், வெறிகொண்டலைந்த நிலப்பரப்புமாய் இடதுசாரி கலைஞர்களை மாற்றியது. திருவண்ணாமலையில் தோழர் காளிதாஸ் அதன் மாவட்ட கலை ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டு, மேல்சட்டையை கழட்டிவிட்டு, தன் சக கலைஞர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தன் நாட்களை ஒப்புக்கொடுத்தார். ஒருபக்கம் வகுப்புகளும், இன்னொரு பக்கம் கலையுமாக தமிழக கிராமங்களின் இரவுகள் மாற்றப்பட்டன. எதைப்பற்றியும் முன் வரைவுகள் இன்றி, தான் ஏற்றுக்கொண்ட லட்சியவாதத்திற்கு தன்னை முழுமையாக ஒப்படைப்பவனே உண்மையான கலைஞன். காளிதாஸ் அப்படி தன்னை முழுமையாக ஒப்படைத்த கலைஞன். யாரும் யாரோடும் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி பரபரப்பாக நாங்கள் இயங்கினோம்.
ரமேஷ்குமார் கண்ணா என்ற உ.பி.யை சேர்ந்த சிரிக்கவே தெரியாத ஒரு வடநாட்டுக்காரர் எங்கள் மாவட்ட கலெக்டராக இருந்தார். அரசு அலுவலக நடைமுறைகள்படியும், கோப்புகள் மாதிரியும் கலையும் இருக்க வேண்டுமென அவர் ஆணைகள் பிறப்பித்தார். எந்த அரசு அதிகார ஆணைகளையும் மீறுவதே கலை என்பது அவருக்கு இன்றுவரை புரியவேயில்லை. கலைஞர்களுக்கு ஜோல்னா
பை வாங்கிய பில்லில்
திருத்தல் இருந்ததை கண்டுபிடித்து, யாரோ ஒரு கிளார்க் அவருக்கு நோட் எழுதி வைக்க, பதினெட்டு ரூபாய் திருத்தலுக்காக அவர் காளிதாஸ் என்ற கலைஞனின் வாழ்வை சூறையாடினார். உண்மையில் அந்த பில்லுக்கும் காளிதாஸ் என்ற கலைஞனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. யாரோ ஒரு கலைக்குழு தோழன் வாங்கினது அது. நேற்றுவரை மாவட்ட அதிகாரியாக இருந்த காளிதாஸ், நள்ளிரவில் போலீஸ் கைதுக்குப் பயந்து சுவரேறி குதித்து ஓடி மறைய வேண்டியிருந்தது.
பதினெட்டு ரூபாய் திருத்தலுக்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எத்தனை ஆயிரம் கோடிகளை கபளீகரம் செய்தவர்கள் நமக்கு ஆட்சியாளர்களாகவும், அதிகாரத்தில் இருப்பவர்களாகவும், உபதேசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தெரியும் தானே!. முப்பது வருடங்களாக நடந்த வழக்கு முடிந்து, அவர் நிரபராதி என்று நீதிமன்றம் சொன்ன பிறகும், இன்றும் அவர், அவர் துறையிலிருந்து விடுவிக்கப்படவில்லை. உலகம் முழுக்க பல எழுத்தாளர்கள் இப்படி ஒரே நிமிடத்தில் அரசால் குற்றவாளிகளாக்கப்பட்டு மரணம்வரை போராடி செத்துப்போன சாதரண மனிதர்களின் கதை எங்கள் கண்முன்னே நிகழ்ந்தது.
நாங்கள் ஏதுமற்றவர்களாக இருந்தோம். நாளை மற்றுமொரு நாளே என பணிகள் தொடர்ந்தன. காளிதாஸ் என்ற கலைஞனின் உடல்மொழியை, திக்கி, திக்கிப் பேசும் குரலை மெல்ல சக கலைஞர்கள் மறந்து, பயணித்தார்கள் அல்லது பயணித்தோம். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, வழக்கோடு மல்லுக்கட்டும் நாட்களோடு அவர் தன் தாய்த்துறையான வி.ஏ.ஓ.வாக பணியாற்ற திருப்பி அனுப்பப்பட்டார். ஏதோ ஒரு கிராமத்தில் நிலம் அளவிடும் போது, எங்கோ தூரத்தில் அவர் சொல்லிக் கொடுத்த பாடல்களின் ராகத்தை காற்று அவர் காதுகளுக்கும் கொண்டுவந்து சேர்ந்தது. அவர் தன் காதுகளை அடைத்துக்கொண்டார். கண்களை கிராமபதிவேடுகளின் மீது மட்டும் படியும்படி நேராக்கிக் கொண்டார். அவரின்றி கலா ஜாத்தாக்கள் அரைகுறையாக நடத்தி அரசுக்கு கணக்கு காட்டப்பட்டது. ஒரு அரசின் கோரப்பற்களின் கூர்மை காளிதாஸைவிட எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
கலைஞனுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் ஆகப்பெரிது, புறக்கணித்தல். அவன் கலையே அவனை சுலபமாக கடந்து போனது. அக்காலங்களில் எல்லா கலைஞர்களைப் போலவே காளிதாசுக்கும் மௌனம் தேவைப்பட்டது. கொஞ்சம் குடிக்கவும் ஆரம்பித்தார், மனதுக்குள் ஏற்பட்ட இந்த ரணத்தை எதனாலாவது ஆற்றிவிடமுடியாதா என்ற தேடுதல். தன்னுள் துயரம் ஒரு மனிதனை எப்போதுமே இருள் மாதிரி கவிழ்த்துக்கொள்ளும், வேட்டைநாய் போல குதறும். காளிதாஸ் என்ற கலைஞனின் உடல் காலத்திடம் அப்படித்தான் சிக்கிக் கொண்டது.
கிராம நிர்வாக அலுவலர் வாழ்வு என்பது கத்திமேல் நடப்பது மாதிரி. கொஞ்சம் அசந்தாலும் அது உங்களை நேர்வாட்டில் பிளந்துவிடும். சமரசமற்ற அரசு வேலை ரொம்ப ரொம்ப அபூர்வமானது. உங்களுக் கென்று தனி பார்வைகளை, மதிப்பீடுகளை அது முற்றாக அழிக்கும். யாருக்காகவோ நீங்கள் இயங்குவீர்கள், யாரோ உங்களை இயக்குவார்கள். நீங்கள், நீங்களாக இருந்து கொள்ள எப்போதாவது அனுமதிக்கப்படுவீர்கள். ஒரு அடிமைக்கு, எப்போதாவது ஒரு கவளம் சோறும், ஒரு வேளை நீரும் தருவதில்லையா? அப்படித்தான் அது. ஆனால் நமக்குத்தான் நாம் அரசு ஊழியர்கள் என்பதில் எத்தனை பெருமிதம்? அதிகாரம் மொத்தமாக நம் கைகளுக்கு வந்துவிட்டதாக நாமே நினைத்துக்கொள்கிறோம். வீட்டில், காரில், பைக்கில் நம் பெயரெழுதி பக்கத்தில் ஒரு பி.ஏ.வோ, பி.காம்.மோ போட்டு நம் பதவிகளை மற்றவர்கள் பார்க்கவேண்டுமென ஊர்வலம் போகிறோம்!
உண்மையில் நாம் அதிகாரமற்றவர்கள். அதிகாரத்திற்கெதிராக ஒரு சொல் உள்ளிடமிருந்து உதிர்ந்தாலும் நாம் இல்லாமல் ஆக்கப்படுவோம், அரசு அதிகாரம் என்பது நாம் நினைத்திருப்பதற்கும் மேலானது. அதை முற்றிலும் உணர்கிறவர்கள் மொளனமாகிவிடுகிறோம். காளிதாஸ் மாதிரியானவர்கள் கைதிகளாகிறார்கள். தன் கிராம நிர்வாக அலுவலர் பதவியிலும் அவர் ஒரு நாள் பொறிவைத்து பிடிக்கப்பட்டார். அது ஒரு தந்திரமான ஏற்பாடு. அறியாத எலிகள் அதனுள் தானாகவே போய் மாட்டிக்கொள்ளும். அந்த இரவில் நானும் தோழர் சந்துருவும் அவரோடிருந்தோம். போலீஸ் வேன் அவர் வீட்டிற்குப் போனபோது, அவரைக் கைது செய்த அந்த பெண் D.S.P. துடித்துப்போனார். ஒரு தினக்கூலியின் வீடு அது. பொருட்கள் இரைந்து, சீமை ஒரு போட்ட அனல் காந்தும் அவ்வீட்டில் தேடுதலுக்காக வந்த அந்த
DSP.யால் பத்து நிமிடம் இருக்க முடியவில்லை. ‘இந்த வீட்டிலா இந்த குடும்பம் இருக்கிறது?’ என அந்த அம்மா திரும்ப திரும்ப கேட்டாள். ஒரு நவீன வீட்டிற்கான எந்த தடயமும் அவ்வீட்டில் இல்லை. இன்றுவரை அவ்வீட்டில் ஒரு ப்ரிட்ஜ் கூட இல்லை.
A/C இல்லை. ஜெயலலிதா படம் போட்ட டி.வி. ஒன்றும், ஜெயலலிதா படம் போட்ட மிக்சி, கிரைண்டரும் தான் அவர்களின் அதிகபட்ட சுபிட்சம். காளிதாசுக்கு அது போதும். அவர் வாழ்வை எங்குத் துவங்கினாரோ அங்கேயே நின்று கொண்டார். நெடிய இந்த பயணத்தில் அவர் இழந்ததும், தொலைத்ததும் தான் ஏராளம். அது ஒரு வகை போதை. கலை என்பது அதிக போதை. கொஞ்சம் ஏமாந்தால் அது உன்னை குடித்துவிடும். அவரை அது ஆசைதீர பருகிக்கொள்ள அவர் அனுமதித்தார். வேட்டைநாய்களின் குதறல்களுக்கு அவர் சதை கொடுத்தார்.
பள்ளிகொண்டாப்பட்டு என்ற அழகானதொரு கிராமத்தில் சின்னப்பன் என்ற ராணுவவீரனின் மகன் அவர். மற்ற அண்ணன்கள் லௌகீக வெற்றி பெற்று திளைத்திருத்த போதும் காளிதாஸை வாலிப நாட்களின் நாடக வெறி இன்றும் அலைகழிக்கிறது. எதிலும் நிலைக்க முடியாததொரு மனநிலையில் கிடந்தது உழல்கிறார். கொஞ்ச நாள் நாடகம், சொஞ்ச நாள்
V,A,O., கொஞ்ச நாள் தொழிற்சங்கம் கொஞச நாள் தமுஎச, கொஞ்சநாள் கட்சி, கொஞ்சம் பயணம் என்று நிலை கொள்வது என்பது அவருக்கு இல்லாமலே ஆகிவிட்டது. தன் தொடர் ரயில் பயணத்தின் போது அவர்தான் சுகந்தன் என்ற அற்புதமான பாடகனைக் கண்டுபிடித்தார். அப்பயண நண்பர்களையும் உள்ளடக்கி “நிதர்சனா” என்ற கலைக்குழுவை நிர்மாணித்தார். பாதல் சர்க்காரின் ’முனியன்’ என்ற நாடகத்தை அதிகாலை அவர்கள் ஒத்திகையின்போது முனியா என்று குரலெடுத்துக் கத்தி ஊரை எழுப்புவார்கள்.
இன்றுவரை என்னை ஒரு நடிகனாக அவர் மனம் ஏற்றுக்கொண்டதேயில்லை. நான் பத்து படங்களில் நடித்துவிட்டேன். தோழர் எப்போதும் ஒரு அற்ப பார்வையால் என்னைச் சீண்டுவார். டைட் பேண்ட் போட்டு, இன் செய்து, டை கட்டி, அடிக்கும் ஸ்பாட் லைட் வெளிச்சத்தில் ஆட்டம் போட்ட அந்நாட்களில் அவர் தன்னை ஒரு ஜெய்சங்கராகவே உணர்ந்து கொண்டவர். தன்னோடு ஆடிய நடிகையை ஒரு ஜெயலலிதாவாகவே பாவித்தவர். ஈவிரக்கமின்றி எல்லாவற்றையும் ஒரு நாள் காலம் தின்றுவிட்டது. அவருக்கு பென்சன் இல்லை. முப்பது வருட உழைப்பை உறிஞ்சி, ஒரு அற்ப காரணத்திற்காக இன்னமும் வழக்கு, விசாரணை என அலைக்கழிக்கப்படுகிறார். நீதிமன்றம் அவர் நிரபராதி என்று சொன்ன பின்பும் அவர் துறை அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. வருவாய்த்துறை எப்போதுமே நீதிமான்களதும், பரிசுத்தவான்களதும் ஆகும். அது ஒரு குற்றவாளி தானே நெருப்புல் நீந்தி கரைசேரும் வரை ஏற்றுக்கொள்ளாது.
ஆனால் கலைஞனின் வாழ்வு இதிலிருந்தெல்லாம் மாறுபட்டது. லௌகீக வெற்றி அவன் மயிருக்கு சமம், என் காரின் கதவுகளைத் திறந்து LOUD SPEAKER –ல் சத்தமாக “பாலுட்டி வளர்த்த கிளி”
என சிவாஜிகணேசனின் பாடலை அலறவிட்டு நடுத்தெருவில் இறங்கி அதற்கொரு ஆட்டம் போடுவார். அதில் எல்லாமும் கரைந்து போகும். எண்பதுகளில் திருவண்ணாமலை கிராமங்களில் அவர் போட்ட ஆட்டத்தில் சொச்சம் இது. அது அந்த கருத்த உடம்பை விட்டு எங்கும் போகாது. உங்களால் முடியுமா அதிகாரிகளே! இன்னதென்று வரையறுக்க முடியாத வாழ்வுச் சூழலில் இப்போது அலைகழிகிறார்.
தன் மிலிட்டரிக்கார அப்பா தனக்கு தந்த பிரியத்தையும், உடல் சூட்டையும், இறையாண்மையையும் தன் சொந்த பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாதபடி காலம் தன்னை பழிவாங்கி விட்டதே என்ற ஆதாங்கம் தனக்குள்ளிருந்து ஒரு சர்ப்பத்தின் எழுச்சி போல எழும்போதெல்லாம்,
” பாலூட்டி வளர்த்த கிளி,
பழங்கொடுத்து பார்த்தகிளி.”
No comments:
Post a Comment