Thursday, November 5, 2020

ஞானத்தகப்பனைத் தீண்டிய மரணம்


இறுதியில் அதன் விஷமேறிய பற்கள் எங்களின் இன்னொரு ஞானத்தகப்பன் கே.எஸ். மீதும் பதிந்துவிட்டது. காலம்தான் ஈவிரக்கமின்றி எத்தனை உன்னத மனிதர்களை இல்லாமலேயே செய்துவிடுகிறது?

முப்பதாண்டுகளாய் தொடர்ந்த பந்தம் அது. ஜெயகாந்தனின் சபையில்தான் முதன்முதலில் அவரைச் சந்தித்தேன். அச்சபைக்கு  கொஞ்சமும் பொருந்தாத மனிதரைப் போலிருந்தார். அவர் உடல்வாகு, நிறம், உடை எல்லாமும் அவரை அச்சபையிலிருந்து அந்நியப்படுத்தியது. ஆனால் அவர் தன் சொற்களால்  அவர்களுடனேயே ஜக்கியப்பட்டிருந்தார். ‘நேர்த்திஎன்ற சொல்லுக்கு சுப்ரமணியன் என அர்த்தப்படுத்தி கொள்ளலாம் .

ஜெயகாந்தன்தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். “இவர் டாக்டர். கே.எஸ். என் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.” அச்சொல்லுக்காக காத்திருந்தது போல என் கைகளைப் பற்றிக் கொண்டார். சில புத்தகங்களை கை மாற்றிக்கொண்டோம்.

‘சிதம்பர நினைவுகளைவாசித்துவிட்டு ஷைலஜாவுக்கு பேசினார். அப்புத்தகம் நாம் போற்றி பாதுகாக்கும் போலியான ஒழுக்கவிதிகளை எப்படியெல்லாம் மீறுகிறது என ஆரம்பித்து, “முதலில் உன்னை என் மகளாக சுவீகரிக்கரித்துக்கொள்கிறேன். முதன்முறை பார்த்த போதே அப்படி ஒரு வாத்சல்யம் மனதில் படிந்தது என அந்த உரையாடலை நிறைத்தார்.



இந்த முப்பதாண்டுகளில் அந்த உறவு இன்னும், இன்னும் இறுகியது. உறவு இன்னும் இறுகியது. தன் ஆத்ம நண்பர் என்ற போதிலும் ஜே.கே.வும் அவரும் சனிக்கிழமை இரவுகளில்தான் சந்தித்துக் கொள்வார்கள். அந்த இரவின் நீளத்திற்கு அவர்களின் உரையாடல் நீளும். இருவருக்குமான நெருக்கம் அதிகம் என்பது புதியவர்களுக்கு  ஒரு போதும் தெரியாது. அன்றைக்குத்தான் சந்தித்துக் கொள்கிறார்கள். என்பது போல அத்தனை மரியாதையும், தோழமையும் அந்தச் சந்திப்புகளில் நிகழும் தன் மரியாதைக்குரியத் தோழர் என்ற ஸ்தானத்தை எப்போதுமே ஜே.கே. அவருக்குத்தருவார். அவரை மட்டும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன்.

திருவண்ணாமலைக்கு பத்து முறையாவது ஜே.கே.வோடு வந்திருப்பார். அது மகள் வீட்டிற்குப் போவது என நண்பர்களிடம் சொல்லி மகிழ்வதைக் கேட்டிருக்கிறேன்.  ஜே.கே. அளவிற்கான அவருடைய இன்னொரு தோழர் டாக்டர் ம. ராஜேந்திரன் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.

கே.எஸ்.சின் தொடர்புகளும், நட்பும் எல்லைகளைற்றது. அதில் வயது, அனுபவம் அப்படியெல்லாம் எந்த வரைமுறைகளையும் அவர் வகுத்துக் கொண்டேதேயில்லை. ஒரு நல்ல கவிதையோ, ஒரு காத்திரமான சிறுகதையோ போதும், அந்த படைப்பாளியை நோக்கி அவர் கைகள் நீளும்.

ஜெயகாந்தனின் படைப்புகளைத்தாண்டி அவர் பல நல்ல தமிழில் படைப்புகளை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். ஒரு பெரும் மரபின் தொடர்ச்சியாக சங்க இலக்கியப் பாடல்களில் ஆரம்பித்து நவீன கவிதைகள்வரை அவர் மொழிபெயர்த்திருக்கிறார்.

இலக்கியக் கூட்டங்களில் வெறும் வார்த்தைகளை அர்த்தமின்றி உதிர்ப்பதை ஆரம்பத்திலிருந்தே தவிர்த்தவர். தீவிர வாசிப்பு,  வாசித்ததை எழுத்தாக்கிக்கொண்டு கூட்டங்களுக்கு போவது என்பதை வழக்கப்படுத்தி வைத்திருந்தார்.

இருபதாண்டுகளுக்கு முன் வெளிவந்த என் ‘நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறைசிறுகதைத்தொகுப்பை திருவண்ணாமலையில் அவர்தான் வெளியிட்டார். அத்தொகுப்பை பற்றி அவர் எழுதிய கட்டுரையின் உரைநடையைத்தான் அக்கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.

அலங்கார வார்த்தைகளை, மிகையான சொற்களை, சுவாரசியமான பேச்சை கூடுமானவரை தவிர்த்தவர். தன் மனதில் பட்டதை எந்த பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் எழுதவும், பேசவும் செய்தவர். ஒரு படைப்பை தன்னளவில் கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ அதற்கீடாக நிராகரிக்கவும் செய்வார்.

எத்தனையோ விடுதி அறைகளில், பத்தாயத்தில், சாத்தனூர் அணைக்காட்டில், அவர் வீட்டில், ஜே.கே.வின் சபையில் என்று அவரோடு பேசித்தீர்த்த இலக்கிய உரையாடல்கள் கணக்கு வைத்துக்கொள்ள முடியாதவைகள்.

நீதிபதி சந்துரு ஒரு வகையில் அவரின் வளர்ப்புப்பிள்ளை, சந்துருவின் மனைவி பாரதி அவரின் இன்னொரு மகள். தன் உறவின் வேர்களை உலகம் முழுவதும் விஸ்தீரணமாக்கிக் கொண்டவர். பல பேர் அதை மடக்கி, மடக்கி தங்கள் குடும்பத்திற்கானது என சுருக்கிக் கொள்வார்கள். கே.எஸ். தன் வாழ்நாள் முழுவதும் அதை விஸ்தீரனமாக்கிக் கொண்டேயிருந்தார்.

கே.எஸ். ராமகிருஷ்ணா மடத்தில் படித்தவர். பெற்றோர்களின் அருகாமையை சிறுவயதிலேயே தவறவிட்டவர். தன்முனைப்பாகப் படித்து அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே IRS. பட்டம் பெற்று, இரயில்வேயில் தன் முதல் அரசுப் பணியைத்துவங்கியவர். கொஞ்ச நாட்களிலேயே அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிக்குச் சேர்ந்து, பிலிப்பைன்ஸ், தலைநகரம் மணிலாவில் அதன் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

பதவியும், பணமும் அதுதரும் தற்காலிக உயரங்களும், அதிகாரமும் தன் ஜிப்பாவில் கூட ஒட்டாமல் இறுதிவரை பார்த்துக்கொண்டவர். ஒரு போதும் வாழ்வின் துயரஅறைகளில் கிடந்து உழலாதவர். வாழ்வென்பதேக் கொண்டாடித் தீர்க்கத்தான் என்பதை ஒரு வாழ்வியலாகவே வைத்திருந்தவர் என அவரை வகைப்படுத்திவிட முடியும்.

பழகி நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் முன்னாள் துணைவேந்தர் டாக்டர். வே. வசந்திதேவி அவர் மனைவி என்பது எங்களுக்குத் தெரியும். அதைப்பற்றி கேட்டபோது மிகுந்த சுவாசிரசியமான அவர்களின் வாழ்வைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.



இருவருமே வெவ்வேறு துறைகளில் தனித்து இயங்கும் ஆளுமைகள். அதன் தொடர் செயல்பாடுகளுக்கு குடும்பம் என்பது ஒரு பெரும் சுமையாக இருந்துவிடக் கூடாது என உணர்ந்தவர்கள். எந்த பெரிய பிளவுகளுமின்றி பிரிந்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் இருவரையுமே  இப்பிரிவு பாதித்ததாகத் தெரியவில்லை.  இந்த பிரிவின்  காலத்தில்தான் இருவருமே ஆகப்பெரிய பங்களிப்பை சமூகத்திற்கும், கல்விக்கும், இலக்கியத்திற்கும் தந்திருக்கிறார்கள் இது ஒரு வகையான மனமொத்த துண்டிப்பு.

பல வெள்ளிக்கிழமை இரவுகளில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஏதாவதொரு ரெஸ்டாராண்டில் உணவமருந்திக் கொண்டிருப்பதை நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து சொல்லும்போது லேசாக புன்னகைத்துக் கொள்வேன்.

நீதியரசர் சந்துரு தாளாளராக பொறுப்பு வகிக்கும் மயிலாப்பூர் ஜானகி அம்மாள் மேல்நிலைப்பள்ளிக்கு நான் ஒரு முறை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். காரில் போய் இறங்கியதருணம் டாக்டர் கே.எஸ், நீதிபதி சந்துரு, அவர் மனைவி பாரதி மூன்று பேரும் என்னை வரவேற்று, அப்பள்ளி கருத்தரங்க கூடத்திற்கு அழைத்துப் போன காட்சி ஒரு நிமிடம் இத்தருணத்தில் வந்துப்போகிறது. எத்தனை மேன்மையான, கம்பீரமான மனிதர்களுக்கு மத்தியில் நான் அக்கணத்தில் இருந்தேன் என்பது இப்போது நினைத்தாலும் என்னையே ஆச்சர்யப்படுத்துகிறது.

கே.எஸ், ஜெயகாந்தனை ஒரு ரசிக மனநிலையிலிருந்து கொண்டாடுகிறார் என்ற விமர்சனம் எழுத்தாளர். பிரபஞ்சனக்கிருந்தது. அதனாலேயே அவரிடமிருந்து கொஞ்சம் எப்பொழுதும் விலகியிருப்பார்.

நாங்கள் பிரபஞ்சன் 55-க்கு ஒரு தயக்கத்தினூடே அவரிடம் நன்கொடைகேட்டோம். மிகுந்த உற்சாகமாய் எங்கள் முன்னெடுப்பை அங்கீகரித்து, 25000/- ரூபாய்க்கான காசோலையை வழங்கி, இன்னும் நாங்கள் யாரையெல்லாம் அணுகவேண்டும் என்ற பட்டியலையும் தந்ததை இப்போது நன்றியோடு நினைவு கூரத் தோன்றுகிறது.

 


நானும் அவரும் ஐந்தாண்டுகள் சாகித்யகாதமியின் தமிழ்மாநில ஆலோசனைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினோம். எங்களோடு எழுத்தாளர் திலகவதி IPSம் இருந்தார். நாங்கள் மூன்று பேரும் ஓரணி என மற்ற உறுப்பினர்கள் கிண்டலடிக்கிற அளவிற்கு நாங்கள் கருத்தொற்றுமையாக செயல்பட்ட காலமது.

அவர் எப்போதும் நண்பர்களுக்கு விதவிதமாக விருந்தளிப்பதை, தன் நாட்களின் உயிர்ப்பு எனக் கொண்டிருந்தவர். அப்படியே அவர்களுக்கு உதவுவதையும்.

சென்னையில் பல நட்சத்திரவிடுதிகளுக்கு அவர்தான் என்னை கைப்பற்றி அழைத்துப் போயிருக்கிறார். நான் அதுவரை பாத்திராத உணவு வகைகளை அவர்தான் எனக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

யாரைப்பற்றியும் புறம்பேசவோ, அவர்களின் கீழ்மையைப் பேசாதவராகவும் இலக்கிய உலகில் கே.எஸ். மாதிரி நீடிப்பது அரிது. தனக்கு பிடிக்காதவர்களிடமிருந்து மெல்ல கைகுலுக்கி விலகிக்கொள்வார்.

மற்றவர்களுக்கு உதவுவதை தன் வாழ்வின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்றாக வைத்திருந்தவர் என கே.எஸ். சை சொல்ல முடியும்.

படிப்பை பணமில்லாமல் பாதியில் நிறுத்திவிட நேர்ந்த பலபேரின் எதிர்கால கனவுகளை கே.எஸ்.யாரும் அறியாமல் நிறைவேற்றியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தின்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் முழுநேர ஊழியர் ஒருவரின் மகளின் பட்டப்படிப்பு செலவுகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டார். இந்த வாய்ப்பை எனக்குத் தந்ததற்கு என் நன்றி என்று மட்டும் ஒரு வரி எழுதி போட்டுவிட்டு அதைக் கடந்துவிடுவார்.

ஜே.கே.வின் ஒவ்வொரு பிறந்த நாளின் முன்னிரவில் கே.எஸ்.வீட்டில் கொண்டாட்டங்கள் துவங்கும். அது ஒரு அன்பும், அறிவும் இழையோடும் சபை. கே.எஸ் தான் அதை ஒருங்கிணைப்பார். அத்தனை நேர்த்தியானதொரு கொண்டாட்டம் அது தரமணியில் அவருக்கு ஒரு அழகான வீடிருந்தது சுமார் ஒரு ஏக்கரில் ஒரு வனத்தின் நடுவே புராதனமான அழகோடு வடிவமைக்கப்பட்ட வீடு அது.

அவ்வீட்டின் அழகைப்பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது. இதை விற்றுவிடப்போகிறேன். யாராவது வாங்குபவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என சொன்னதைக் கேட்டு அதிர்ந்து கேட்டேன்.

“ஏன், கே.எஸ்?”

தன் பிராண்டட் கிராம்பு அடைக்கப்பட்ட இந்தோனிஷியாவிலிருந்து  சிகிரேட்டை புகைத்துக் கொண்டே அவர் சொன்னார்.

நான் முனைப்பாக ராமகிருஷ்ணா மடத்தில் படித்து  இந்த நிலையை எட்டினேன். இது சுய சம்பாத்தியம் அப்படிச் சம்பாதிகிறதை பிள்ளைகளுக்குக் கைமாற்றிக் கொடுக்கக்கூடாது என நினைக்கிறேன். இது என் பாலிசி.

நானே அவைகளை துப்புரத் துடைத்துவிட்டுப் போய்விட வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் தங்கள் சுய சம்பாத்தியத்தில் நிமிர்வார்கள். மகனும், மகளும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இனி அவர்கள் இவ்வீட்டிற்கு வர வாய்ப்பில்லை. அப்படி வாய்ப்பில்லாத இவ்வீடு ஒரு சொத்தாக மட்டும் நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

நான் கிட்டத்தட்ட உறைநிலையிலிருந்து கேட்டேன்.

“விற்று பணத்தை என்ன செய்வீர்கள் கே.எஸ்?”

உங்களை மாதிரியான நண்பர்களுக்கு ட்ரீட் தருவேன். எனக்கு பிடித்தமான சிலருக்கு சிலதை செய்ய வேண்டியிருக்கிறது. பலபேரை படிக்க வைக்க வேண்டும். பணத்தைச்   செலவழிப்பதற்கு வழிகளா இல்லை பவா?

என்ன மாதிரியான மனுஷன் இவர்!

தன்னுடைய ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பக்கத்திலும் அவரின் வளைவு வளைவான ஆங்கிலத்தில் அவரே எழுதுவது போல Joy of Sharing கே.எஸ். சுப்ரமணியன்

தன் வாழ்நாளின் எல்லாத் தருணங்களிலும் சந்தோஷத்தை மட்டுமே தன் சகமனிதர்களுக்கு தந்து கொண்டிருந்த ஒரு மனிதனைத்தான் மரணம் கொஞ்சமும் கருணையின்றி தீண்டிப் பார்த்திருக்கிறது.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன், ஒரு அதிகாலையில் ‘சுப்ரமணியன்’ என்ற தன் ட்ரேட்மார்க் குரலோடு அவர் தொலைபேசி அழைப்பை எதிர்கொண்டேன்.

உன் ‘மேய்ப்பர்கள்’ படிக்கிறேன். Fantastic. ரொம்பப் பிடித்திருக்கிறது. நீ சம்மதித்தால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவா? என கேட்டபோது நான் பேச்சுற்றுப் போனேன்.

மிகு உற்சாகத்துடன் அப்பணியை அவர் மேறக்கொண்டார். பல நெகிழ்வான சம்பவங்களை, வரிகளை, பக்கங்களை படைப்பு முகிழ்ந்து வந்ததருணங்களை என்னோடு எப்பொழுதும் தொலைபேசியில் பகிர்ந்து கொள்வார். அச்சமயங்களிலெல்லாம் நான் வார்த்தைகளின்றி மௌனம் காத்திருக்கிறேன்.

அதையே அவர் மற்றவர்களிடமும் சொல்லியிருக்கிறார் என்பது லதா ராமகிருஷ்ணன் கே.எஸ். மரணத்தின்போது எழுதிய அஞ்சலிக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தபோது நான் அதே போல பேச்சற்றுதான் இருந்தேன்.

உடல்நலமின்றி மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் மேய்ப்பர்களில் இன்னும் மூன்று பாகங்களை அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அது என்னை மாதிரி ஏதோ ஒரு சிறு நகரத்திலிருந்து எழுதிக் கொண்டிருக்கும்  ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம்.

‘மேய்ப்பர்கள்’ மொழிபெயர்ப்பிக்கிடையேதான் அவர் தன் மரணத்தை எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது.

எங்கள் குடும்பத்தின்மீதும், எழுத்தின்மீதும் அளவிடமுடியாத நேசத்தையும், வாத்சல்யத்தையும் வைத்திருந்த எங்கள் ஞானத் தகப்பனை இழந்து இப்போது வெற்றிடத்தில் நிற்கிறோம்.  

 


No comments:

Post a Comment