Wednesday, June 3, 2009

impossible friend


Impossible friend- யோகிராம் சூரத்குமார்
சந்திப்பு 1
தொண்ணூறுகளின் பிற்பகுதி. üதமிழில் நவீனத்துவம்ý என்கிற பிரமிளின் புத்தகத்தின் முதல்பக்க புரட்டலிலேயே நின்று விடுகிறது மனது.
Dedicated to my impossible friend Yogiram surathkumar at Tiruvannamalai
என்ற சமர்ப்பணப் பக்கத்தைக் கடக்க முடியாமல் போய் நின்ற இடம் சன்னதி தெருவில் இருந்த யோகிராம் சூரத்குமாரின் நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் வாசல்.
பாதசாரியின் ‘காசி’ படித்து மனம் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த தருணமது. இரும்பு கேட்டை தட்டுவதற்குத் தயங்கி (காசி கதையில், காசி அதே கேட்டை வேகமாகத் தட்டியதைச் சகிக்க முடியாமல், அவனை சந்திக்க விரும்பாமல் துரத்திவிடுவார் யோகிராம் சூரத்குமார்) தயங்கி நின்றேன். உள்ளே üü0ýý வாட்ஸ் பல்ப்பின் மிகமங்கலான வெளிச்சத்தில் அடங்கும் உயிர்மாதிரி கிடந்தது தாழ்வாரம். தாறுமாறாக வீசப்பட்ட உலர்ந்த மாலைகள் பத்திருபது கண்ணில்பட்டது. அவ்வீட்டிற்குக் பத்தடிதூரக் கோயில்வளாகமும், தேரடி வீதிநெரிசலும் என்னைவிட்டு பெருந்தொலைவிற்கு அப்பால் போய் ஒரு பெரிய வனாந்தரம், அதன்நடுவில் சூரத்குமாரின் வீடு, அந்த இரும்பு கேட், நான், பிரமிளின்புத்தகம் இவை மட்டுமே நிறைந்த அமானுஷ்ய கணமது.
சப்தம் கலைந்து கதவுதிறந்து கையில் ஒரு விசிறியோடு, ஆஜானுபாகுவான உருவத்தில் முகமெங்கும் பொங்கும் புன்னகையோடு என்னைச் சமீபித்தார். அவர் மீதிருந்து எழுந்த சுகந்த மணமும் அவர் உடல் நிறமும் அத்தனை நெருக்கத்திலான அவர் இருப்பும் என்னைத் தடுமாற்றி நிலைப்படுத்தியது.
இந்தப் பிச்சைகாரனிடமிருந்து என்ன வேணும் உனக்கு?

எளிமையான, ஆனால் தெளிவான ஆங்கிலத்தில் என்னைப் பார்த்துக் கேட்டார். நான் அவரை ஏறிட்டுப்பார்த்தேன்.
அந்த கண்கள்.
நான் கண்டறியாத, வசீகரமான நீலநிறத்தில், பார்க்கும் யாரையும் நிலைத்து நிறுத்திவிடக் கூடிய கண்கள் அவை.
உங்களுக்குக் கவிஞர் பிரமிளைத் தெரியுமா?
உனக்கு?
ஆம், நான் அவர் கவிதைகளை வாசித்திருக்கிறேன். தற்போது இந்தப் புத்தகத்தை வாசிக்கிறேன். இதை உங்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார். அவர் ஏன் இதை உங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்?
இது நீ பிரமிளைக் கேட்கவேண்டிய கேள்வி?
நீங்களும் கவிஞரா?
இல்லை நான் பிச்சைக்காரன்.
உரையாடல் அறுந்துவிட, நான் அமைதியாய் நின்றேன். அவர் என் கைகளைப் பற்றி
உன் பெயரென்ன?
பவா. செல்லதுரை
நான் உன்னை பவா என்றழைக்கலாம் இல்லையா?
தலையசைத்தேன்.
நீ திருவண்ணாமலையா?
ஆம்
எந்த ஏரியா?
சாரோன்.
ஓ…… என் நண்பன் ஜோன்ஸ் அங்கிருந்தான் அவனைத் தெரியுமா?
என் ஞாபகத்தோடு துழாவினேன்.
அவன் ஒரு பெயிண்டர். சுவர்களில் கடவுள் மறுப்பு வாசகங்களாக எழுதித் தள்ளுவான். உன்னால் நினைவுபடுத்த முடிகிறதா?
நான் ஜோன்சை கண்டடைவதை என் முகத்திலிருந்து வாசித்தறிந்து,
சொல் பவா, ஜோன்ஸ்சை தெரியுமா?
தெரியும். அவர் இப்போது இல்லை. அவர் மறைந்து சில வருடங்களாகிறது. அவர் வாழ்ந்த வீடு குட்டிச்சுவராகிவிட்டது. அவர் பிள்ளைகள் இங்கிருந்து இடம் பெயர்ந்து விட்டார்கள்.
ஜோன்ஸ் …. இப்போதில்லையா?
இல்லை.
இருக்கிறான் பவா….. இருக்கிறான்.
நான் இயல்பற்றிருந்தேன். மீண்டும் வீட்டுக்குள் போய் 0 வாட்ஸ் வெளிச்சத்தில் ஒரு Charminar பாக்கெட்டைத் தேடியெடுத்துப் பற்றவைத்துக் கைகளைக் குவித்து (கஞ்சா பிடிப்பவர்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்) சிகரெட்டின் நுனிகங்கைப் பரவலாக்கி
நீயும் எழுதுவியா என்றார்.
எப்போதாவது
நீ பிரமிளைப் பார்த்திருக்கிறாயா?
இல்லை, அவர் அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதுவார். கடிதங்கள் மூலமாக நாங்கள் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு எழுதமாட்டார். ஒரு பிச்சைக்காரனுக்கு எழுத என்ன இருக்கு பவா…
ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை அள்ளித் தந்ததோடு எங்கள் முதல் சந்திப்பு அடுத்த சந்திப்பிற்கான இடைவெளியைவிட்டது .

2 comments:

  1. impossible friend உடனான அரிய சந்திப்பு. ஜெமோவை அழைத்துச் சென்ற சம்பவம் படித்தது நினைவுக்கு வருகிறது.அவர் அருமை தெரியாமல் அதே ஊரில் இருந்துவிட்டேனே என்ற ஏக்கம் எழுகிறது.இனம் பிரியாத ஒரு மகிழ்ச்சி இதைப் படித்ததில்.

    ReplyDelete
  2. பவா அண்ணாவுக்கு என்னை நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. திருவண்ணாமலையில் நடைப்பெற்ற த.மு.எ.ச.வின் எழுத்தாளர் சங்க மாநாட்டில் தோழர் சைதை.ஜெ. என்னை தங்களிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். உங்களை அந்த மாநாட்டில் அதிகமானப் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.காரணம், நீங்கள் அறியாதது. உங்களின அடர் நிறக் கறுப்பு நிறம் என்னைக் கவர்ந்திருந்தது. உண்மையில் என்னை விட அழகான ஒரு கறுப்பு நிறமுடைய மனிதனை உங்களைச் சந்திப்பதற்கு முன் நான் சந்தித்ததேயில்லை.
    அதன் பிறகு சென்னை புத்தகத் திருவிழாக்களில் உங்களைக் கண்டாலும் வெறும் புன்னகையோடு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன். சரி. இதெல்லாம் எதற்கு என்கிறீர்களா.
    யோகிராம் சுரத்குமார் என்கிற மனிதரைப் பற்றி நீங்கள் எழுதாமலிருந்தால் நானும் இதை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டேன். யோகி பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தபோது நான் ஆச்சர்யப்படவில்லை. மாறாக, சந்தோஷப்பட்டேன். யோகிராமை நான் நேரில் சந்தித்தில்லை. ஆனால், சில வருடங்களுக்கு முன்பு வாழ்வின் எதிர்பாராத தாக்குதலில் நான் தூக்கியெறியப்பட்டபோது என்னை தன் வார்த்தைகளால் தாங்கிக் கொண்ட ஒரு மகாப் பெரியவரின் சொற்கள் மட்டுமே என்னிடமிருந்தன. நீங்கள் விரும்பினால் இதை மேற்கொண்டு படியுங்கள்...
    யோகியைப் பற்றி எழுத்தாளர் பாலகுமாரன் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். குரு என்கிற அவருடைய நூல் என்னை யோகிராம் சுரத்குமாரை உணர வைத்தது. பிறகு, கொல்கத்தாவிற்கு படப்பிடி்ப்பு நிமித்தமாக சுமார் எட்டு மாதங்கள் தங்க வேண்டிய சூழலின் காரணமாக அங்கிருந்தேன். டாலிகாஞ்ச் பகுதியில் தங்கியிருந்தபோது பெருத்த தனிமைக்கு நான் உள்ளானேன். மோசமான நண்பர்கள் அப்போது என்னை சூழ்ந்திருந்தனர். வேளியேற வழி தெரியாது விழிப் பிதுங்கிக் கொண்டிருந்த நான் வழிகாட்டும்படி யோகிராம் சுரத்குமாரிடம் உளப்பூர்வமாக வேண்டினேன். சில விஷயங்களை எழுத்தில் கொண்டு வர முடியாததை நீங்களும் அறிவீ்ர்கள்தானே. அப்படித்தான் தோழரே...என்னிடம் மற்றவர்களிடம் விளக்கிக்கொள்ளமுடியாத மாற்றம் என் அகத்திற்குள் வந்தது. என் உள் மனத்தின் வார்த்தைகளின்படியே நான் செயல்பட்டு வந்தேன். பிரச்சினைகள் என்னை விட்டு விலகவில்லை. மாறாக, பிரச்சினைகளை எதிர்த்து நின்றேன். தோல்வியே எனக்குப் பரிசாக கிடைத்தாலும் மனம் என்னவோ சந்தோஷத்திலேயே ஆழ்ந்திருந்தது. இது என்ன மனோநிலை என்று குழம்பிப் போனேன்.தெளிவும் கிடைத்தது. யோகிராம் சுரத்குமாரை நான் கண்டு கொண்டதும் அங்குதான். இப்போதும் வாழ்க்கை ஆனந்தமாக போய்க் கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனாலென்ன. நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.யோகியை நினைவு கூர்ந்ததற்கு நன்றி தோழரே...

    ReplyDelete