






















புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.
எஸ். லட்சுமண பெருமாள், உதயசங்கர், பாஸ்கர் சக்தி, க.சீ சிவக்குமார் ஆகிய நான்கு முக்கிய எழுத்தாளர்களின் முழுத்தொகுப்பும்
இந்தியா முழுவதும் அலைந்து திரிந்து, இந்திய பழங்குடி மக்களின் வாழ்வனுபவங்களையும், உணவையும் குடியையும் கொண்டாடங்களையும் அள்ளிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ரெங்கயா முருகனும், ஹரி சரவணணும் சேர்ந்து "அனுபவங்களின் நிழல் பாதை" என்ற தலைப்பில் ஒரு காத்திரமான தொகுப்பையும், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆகிய நான்கு மொழிகளிலுருந்து இப்போது எழுதிக் கொண்டிருக்கிற நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்களின் சோதனை முயற்சிகளிலான சிறுகதைகளை பாவண்ணன், இளம்பாரதி, டாக்டர் ரகுராம், இறையடியான், நஞ்சுண்டன், கே.வி. ஜெயஸ்ரீ இவர்களோடு சேர்ந்து தொகுப்பாசிரியர் என்ற பொறுப்பை சுமந்துகொண்ட ஷைலஜா மிகத்தீவிரமாக இயங்கிக் கொண்டுடிருக்கிறாள். தொகுப்பின் பெயர் "தென்னிந்திய சிறுகதைகள்". இத்தொகுப்பிற்கான முன்னுரைக்காக பிரபஞ்சனுக்கு கதைகள் முடிய முடிய அனுப்பப்படுக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான அவருடைய தொலைபேசி உரையாடல்கள் அவள் இயக்கத்தை இன்னமும் துரிதப்படுத்துகிறது.
மிகத்தீவிரமாக இயங்கி திடீரென அதிலிருந்து அறுபட்டு லௌகீக வாழ்வில் பொறுத்திக்கொள்ள முயன்று, தோல்வியுற்று மீண்டும் உற்சாகமும் நம்பிக்கையும் மிகுந்த தன் பழைய நாட்களை விட்ட இடத்திலிருந்த தொடரும் கலைஞர்கள் முன்னிலும் உக்கிரமாக இயங்குவதை பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு கலைஞன் பி.ஜே.அமலதாஸ். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் கொண்டாட்டம் மிகுந்த வாழ்வில் அமலதாசுக்கும் ஒரு சின்ன இடமுண்டு. கூத்து பற்றிய ஆழமான கட்டுரைகளும் அதன் உள்ளே புகுந்திருக்கும் சாதீயம் குறித்தும் ந.முத்துசாமி போன்றவர்களின் மேலாட்டமான முன்னிருத்தல்கள் என விரியும் ”இன்றும் வாழும் தெருக்கூத்து” தமிழுக்கு மிக மிக புதிய வரவு.
பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.
”கொமாலா” , ”பெட்ரோபரோமா” நாவலில் வரும் ஒரு ஊரின் பெயர். இப்பெயரிலேயே மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானத்தால் எழுதப்பட்ட ஒரு சிறுகதை அங்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இன்னமும் ஓயாமல் தொடர்கிறது. இன்றைய நடுத்தர வாழ்வின் பெரும் சிக்கல் மிகுந்த துயரம் குறித்தும், யார் மீதும் யாருக்கும் அக்கறையற்ற வாழ்வு குறித்தும் கடந்த பத்தாண்டுகளில் இப்படியொரு கதையை நான் வாசித்தது இல்லை. சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் 14 கதைகளின் மொழிபெயர்ப்போடு கே.வி. ஜெயஸ்ரீ தன் பகலையும் இரவையும் கரைத்துக்கொண்டு இருப்பது பெரும் கனவுலகை முன் நிறுத்துகிறது.
கவிதை தொகுப்புகளாக அளவில் சின்ன சின்னதாக அழகான ஆறேழு தொகுப்புகள் வருகின்றன. கே.ஸ்டாலின், விக்ரமாதித்யன், அய்யனார் விஸ்வநாத், தி.பரமேஸ்வரி, வெ. நெடுஞ்செழியன் என்று இக்கவிஞர்கள் தங்கள் புதிய வரிகளோடு புத்தகக் கண்காட்சிக்குள் வந்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து செயலாற்றுவது பிடித்திருக்கிறது.
அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.
-நாளை பேசுகிறேன்.
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் எல்லா புத்தகங்களும் வெற்றி பெற வாழ்த்துகள் பவா.
ReplyDeleteஎஸ்.லட்சுமணப்பெருமாள் அவர்களின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பும் உங்கள் வம்சி பதிப்பகம் மூலம் வெளிவருவது அறிந்து மகிழ்கிறேன். புத்தகசந்தையில் சந்திக்கலாம்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சார்.
சென்னை புத்தக கண்காட்சியில் மாதவராஜ் தொகுத்துள்ள புத்தகங்களை வாங்குவதாக உள்ளேன்
ReplyDeleteமகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
ReplyDeleteஅன்பு பவா, உங்களின் இந்த புத்தகங்களின் பின் இருக்கும் உழைப்பு நினைத்தல் பெருமையாகவும் வியப்பாகவும் உள்ளது. அனைத்திற்கும் வாழ்த்துக்கள். அனைத்து படைப்புகளுமே சிறப்பாக இருக்கும் என்பதற்கு உதாரணம் அதன் அட்டைபடம். இதனை பற்றி உங்களிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதனின் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவம்சி புக்ஸின் சாதனை என்றே சொல்வேன். 40 புத்தகங்கள்..ஒரேயடியாக..பிரமிப்பாக இருக்கிறது. எனது வலைத்தளத்தில் உங்கள் புத்தகங்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது. கனடாவில் இருக்கும் நான் எனக்கு விருப்பமான உங்கள் புத்தகங்களை வாங்குவது எப்படி..முக்கியமாக மீராவின் "சூர்ப்பனகை" - எனக்கு பரிச்சியம் குறைந்த மலையாள படைப்பிலக்கியத்தின் புதிய பரிமாணம் என்று தெரிகிறது. உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவு என்றும் இருக்கும்.
ReplyDeleteவம்சி வெளியீடுகள் நிறைய வாங்க வேண்டும்.ஆன்லைன் வசதி உண்டா.
ReplyDeleteநான் தில்லியில் இருக்கிறேன்.செக் அனுப்பவா.
தயவு செய்து,
மின் அஞ்சலில் உங்கள் தொலைபேசி எண் தந்தால் உடன் தொடர்பு கொண்டு புத்தகம் வாங்க வசதியாக இருக்கும்.
என் அஞ்சல்
susila27@gmail.com