Friday, December 31, 2010
Monday, December 20, 2010
மகா கவிகளும் ஒரு சிறுவனும்
Monday, December 13, 2010
கதைகளால் நிரம்பிய கிணறு
Sunday, November 28, 2010
இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்குத் திரும்புதல்
Wednesday, October 20, 2010
மழை மனிதர்கள்
அபுல் கலாம் ஆசாத்
வம்சி புக்ஸ் ஆரம்பித்து அதன் முதல் புத்தக வெளியீட்டு விழாவை திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பெரும் வாசகர்களின் பங்கேற்புடன் நடத்தினோம். சிறப்பு அழைப்பாளர்களாக எழுத்தாளர்
ச. தமிழ்ச்செல்வன், இயக்குனர் பாலுமகேந்திரா, எழுத்தாளர் திலகவதி, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இவர்களோடு அபுல்கலாம் ஆசாத் என்ற அந்தப் புகைப்பட கலைஞன். அழைப்பாளர்கள் எல்லோரும் லேசான மழைத்தூறலினூடே அந்த பரந்த மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது அபுல் ஒரு ஆட்டோவில் வந்திறங்கினான். எல்லோருமே ஒரு வித ஆச்சர்யத்தோடு அவனைப் பார்க்கிறார்கள். நீண்டு வளர்ந்த சுருள் முடியை இறுக்கி ரப்பர் பேண்ட் போடப்பட்டுள்ள குடுமி, சிகப்பு கல்பதித்த கடுக்கன், கழுத்தில் தொங்கும்
ஒற்றை ருத்ராட்ச கொட்டை மாலை, நல்ல அரக்குக் கலரில் ஒரு நீண்ட ஜிப்பா, இதோடு? கரை போட்ட வேட்டி.
கூடியிருந்த படைப்பாளிகளுக்கும், வாசகர்களுக்கும் ஏதோ ஒரு மர்ம சிரிப்பும், ஆச்சர்யமும் துளிர்த்த கணமது. நான் அபுலின் கைகளைப் பிடித்து வரவேற்று, அந்த வேட்டியைப்பற்றி விசாரித்தேன். ஒரு பெரும் ஆரவாரத்தோடு அது நேற்று திருவண்ணாமலையில்தான் வாங்கியதென்றும், வெள்ளை வேட்டிக்குக் கறுப்பு, சிவப்பு கலர்வைத்த கரை ரொம்ப அழகென்றும் விவரிக்க, நான் அது தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்டஅரசியல் கட்சியினர் கட்டும் வேட்டியென்று விளக்க, அவசர அவசரமாய் வந்த ஆட்டோவிலேயே தன் அறைக்கு திரும்பிப்போய் அடுத்த அரை மணி நேரத்தில் இன்னொரு புது வேட்டியுடன் திரும்பி வந்தான். அதற்குள் நிகழ்ச்சி துவங்கிவிட்டது.
‘’இது பரவாயில்லையா பவா, இதுவும் நல்ல கலர் காம்ப்பினேஷன்’’ என்று குதூகலித்த அந்த நிமிடத்தை அப்படியே தக்க வைக்க நினைத்து மேடையில் அமர வைத்தோம். ஆனால் அது பா.ம.க கட்சி கரை வைத்த வேட்டி.
ஒரு கள்ளம் கபடமற்ற கலைஞனின் பின் விளைவுகள் பற்றிய எந்த கவலையுமற்ற இந்த மனதோடுதான் நான் அபுலைப்பற்றிய என் பழைய ஞாபகங்களை பதிய விரும்புகிறேன்.
சுற்றி நீரால் சூழப்பட்ட ஃபோர்ட் கொச்சின். தெருவின் இருபக்கங்களிலும் வியாபித்துள்ள கட்டிடங்களின் கம்பீரத்தைத்தான் அவர்கள் மட்டாஞ்சேரி என்றழைக்கிறார்கள். பழமை மாறாத அந்த உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றில்தான் அபுலின் மாயலோகம் ஸ்டுடியோ. கற்சிலைகளுக்கு கதம்பமாலையிட்ட அதன் உள்அலங்காரமோ, அச்சுவரெங்கும் மாட்டப்பட்டுள்ள Black&white புகைப்படப் பழமையோ, சாதாரண சேர், டேபிளை நிராகரித்து, முற்றிலும் வேறு மாதிரி வடிவமைக்கப்பட்ட இருக்கையை மீறி, அந்த விசாலமான அறையெங்கும் ஒரு நூற்றாண்டுக்கு முன்னாலான தனிமையும், பழமையும் படிந்திருந்தது. அவன் நிறுவனத்தின் பெயர் மசாலா கம்பெனி. பச்சைக் காம்பில் பழுத்திருந்த மிளகாய் பழம்தான் அதன் சிம்பல். அந்த விசாலமான ஹாலின் ஆளுயர ஜன்னல்களைத் திறந்தால் நம் கண்ணுக்கெட்டின தூரம்வரை கடலின் வெண்மையும், நீலமும் புரளும் ஆர்ப்பரிப்பு.
அங்கு, நான் என் கதையொன்றை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தேன். நாற்பது, ஐம்பது வெளிநாட்டுக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சிகரெட் புகை அந்த அறையில் நிரம்பி மட்டாஞ்சேரி பஜாரில் இறங்கிக் கொண்டிருந்த சாயங்காலமது. ஒரு நிகழ்விற்கான துளி பதட்டமுமின்றி அபுல் என்னைக் கட்டி அணைத்து, அறிமுகப்படுத்தி என் சிறுகதையொன்றை வாசிக்க வேண்டினான். அறையின் ஒரு ஓரம் அவர்களே தயாரித்த Red wine நிரப்பப்பட்ட பாத்திரம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. நான் அதுவரை பார்த்தறியாத அழகிய யுவதிகள் வெவ்வேறு அளவிலான உடைகளோடு wine போதையை ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். கொண்டாட்ட மனநிலையின் உச்சமான மௌனம் அது. நான் என் ‘‘ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்’’ கதையை தமிழில் வாசிக்கிறேன். அம்மனநிலையைக் கொஞ்சமும் சிதையவிடாமல் என் நண்பர் ஆனந் ஸ்கரியா அதை அழகாக ஆங்கிலப்படுத்துகிறார். மாயலோகத்தின் இடைவெளி சுருங்கி இரவின் அடர்த்திக்கு வழிவிடுகிறது. இச்சூழலில் கரைய விரும்பும் ஒரே படைப்பாளி என நான் கருதிய கோணங்கிக்கு அங்கிருந்து பேசினேன். அடுத்த பத்தாவது மணி நேரத்தில் கோணங்கி மழையில் நனைந்து கொண்டே மாயலோகத்திற்குள் பிரவேசித்தான்.
மாயலோகத்தின் சுவர் எங்கும் வியாபித்திருந்த Black Mother என்று தலைப்பிட்டு கொடுங்கல்லூர் கண்ணகி கோவில் திருவிழாவில் அபுலால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் உக்கிரத்தில் நிலைக்குத்தி நின்றான் கோணங்கி. ‘‘இறடிக்கு நாலடி’’ என்ற நம் ஊர் வாசல் கதவு அளவுள்ள சட்டங்களில் பிரேம் செய்யப்பட்ட அடர்பச்சையும், வெள்ளையும், கலந்து எடுக்கப்பட்ட அமானுஷ்யமான புகைப்படங்கள் அவை. அமெரிக்க பத்திரிகை ஒன்றின் அசைன்மெண்டுக்காகக் கொடுங்கல்லூர் கண்ணகி ஆலய வெளியில் மழையில் படுத்துறங்கி, 1000 க்கும் மேற்பட்ட படங்களைத் தன் கேமராவுக்குள் புதைத்து வைத்திருந்தான் அபுல்.
அதிலிருந்து ஒரு படத்தை அச்சந்திப்பின் நினைவாக பெற்று, தன் ‘‘பிதிரா’’ நாவலின் அட்டைப்படத்திற்குக் கோணங்கி பயன்படுத்திக் கொண்டான். கோவில் வளாகமெங்கும் குவித்து வைத்திருந்த கழுத்தறுபட்ட கோழித் தலைகளும், சட்டை அணியாத வெற்று முதுகோடு கண்ணகியை நோக்கி வணங்கும் உரமேறிய உடம்புகளும், கையில் அரிவாளோடும் கடித்த உதடுகளோடும் சினமேறிய பெண்கள் முகங்களும் நாம் எங்கும் காணக்கிடைக்காத பொக்கிஷங்கள்.
அபுலின் படைப்பியக்கம் அலாதியானது. காட்டாற்றின் சத்தத்தையும், அமைதியையும் அடுத்தடுத்து உணர முடிவது. பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இளம் பெண்கள் பலர் அவனைத் தேடி வந்தவண்ணம் இருந்தனர். அவர்களோடு அவன் கழித்த நாட்கள் நீரின் சுழிப்பு மாதிரியானது. அதை நாம் பிடித்து நிறுத்த முயலும் அவசரத்திலேயே அது கலைந்து மறையும். தன் கேமராவை அவன் ஓர் உயிருள்ள ஜீவனைப் பற்றியிருப்பது மாதிரியே தன்னோடு எப்போதும் பற்றியிருப்பான்.
பாபர் மசூதி இடிப்பிற்குப்பின் தேசம் முழுவதும் நிலவிய பேரமைதியை அவன் படமாக்கிய உந்துதலே என்.எஸ்.மாதவனின் Blue pencil என்ற சிறுகதை. மாதவனின் ‘‘லந்தன் பத்தேரியில் லுத்தினியாக்கள்’’ என்ற நாவலில் அபுல் ஒரு தனி கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளான். ஃபோர்ட் கொச்சினில், கடலலை சீறும் தருணங்களும், அடர் மழைப் பொழிவின் இரவுகளும், பெருமரங்கள் உதிர்ந்து துளிர்க்கும் பருவங்களும் அபுலின் கேமராவுக்குள் அடைக்கலம் தேடி ஒளிந்து கொள்கின்றன. அவன், இரத்தக் கவிச்சியோடு பிறந்த குழந்தையின் மீது புரளும் பிரசவ மயக்கம் தெளியாத தாயின் பரிவுமிக்க விரல்களின் ஸ்பரிசம் மாதிரி அவற்றைத் தன்னுள் புதைத்துக் கொள்கிறான்.
எனக்குப் பரிசளிக்க, ஆண்டிற்கு ஒரு முறை மலையடிவாரத்தில் நடக்கும் குதிரை சந்தையின் பின்னணியில் திருவண்ணாமலை மலையை அபுல் பதிவு செய்திருப்பது வேறு எந்த கலைஞனுக்கும் சாத்தியமற்றது.
அபுல், கலர் படங்கள் எடுத்து நான் பார்த்ததில்லை. தன் புகைப்படங்களுக்கென்று தனி வரையறைகளை அவன் வகுத்து வைத்துள்ளான். Digital Camera -வை அவன் தொடுவதில்லை. Film போட்டு எடுத்த படங்களைக் கழுவி முடித்து பிரிண்ட் போடுவதற்குமுன் ஆணியால் Film மை கீறுகிறான். அதன் அழகியலைச் சிதைக்கிறான். புகைப்படங்களின் ஆகச் சிறந்த நேர்த்தி அவனுக்கெதிரானவை. அது அவனுக்கொரு பேராடும் கருவி. யுத்தகளத்தில் துள்ளும் ஆயுதத்திற்கு எதற்கு பூ அலங்காரம்?
எதிர் கொண்டெழும் பேரலைகளைப் பார்த்து, கடற்கரை மணலையும் தாண்டிய ஓட்டமல்ல அபுலின் வாழ்வு. அது ஒரு கலைஞனுக்கான பிரத்தேயகமான, வெளிப்படையானது. பெரும்பாலான தமிழ்க்கலைஞர்களை எப்போதும் பொறாமைப்படுத்தும் அபுலின் கொண்டாட்ட வாழ்வு. நான் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அபுல் ஒரு புது ஸ்நேகிதியை அறிமுகப்படுத்துவான். பெரும்பாலும் வெளிநாட்டுப் பெண்கள் அவன் படைப்பின் மீதும் ஆளுமையின் மீதும் அப்பெண்கள் அடைந்த பரவசத்தையும், உன்மத்தத்தையும் பார்த்து 19. டி.ஏம். சாரோனுக்குக் கேட்காதவாறு பெருமூச்சு விட்டிருக்கிறேன்.
அபுலுக்குத் தமிழ்நாட்டில் மிகப் பிடித்த மனிதர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் சினிமா Poster களை மட்டும் புகைப்படங்களாக்கி ஒரு தனி Showவே நடத்தியிருக்கிறான். மட்டாஞ்சேரியின் பின் இரவு உறக்கத்தில் எம்.ஜி.ஆரின் சினிமாப் பாடல்களை உரக்கப் பாடி கடலலைகளைக் கலவரப்படுத்துவான். தன் Cell phone-- இன் Ring tone ‘‘பொன்மகள் வந்தாள், பொருள் கோடி தந்தாள்’’ தான். தன்னை ஒரு மலையாளி என்றோ, முசல்மான் என்றோ ஓரு விநாடிகூட உணராதவன். வாழ்விற்கும் படைப்புக்குமான இடைவெளியென ஒரு அங்குலத்தையும் அவன் அனுமதித்ததில்லை.
சமீபத்தில், தன் சமீபத்திய காதல் மனைவியோடு என் வீட்டிற்கு மதிய உணவிற்கு வந்திருந்தான். பெரும் குடும்பப் பொறுப்பேறியிருந்தவன் மாதிரி சாப்பிட்டு முடிக்கும் வரை நடித்துக் கொண்டிருந்தான். அந்த பெண்ணை அபுல் காதலித்துக் கொண்டிருந்த போதே நானறிவேன். அவன் புகைப்படங்களின் வசீகரத்துக்குப் பரிசாக கிடைத்த ஒரு ஈரானியப் பேரழகி. Film Editer.. அவ்வப்போது வாங்கப்பட்ட அவனுக்கான விலையுயர்ந்த Wine பாட்டில்களோடு அவள் இந்தியா வந்திறங்குவாள். இப்போது அவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பையன் இருக்கிறான். அன்று வீட்டில் துருதுரு கண்களோடு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த அந்தப் பையனைப் பிடித்து அவனை எனக்கு நேராக நிறுத்தி குனிந்து கேட்டேன்,
‘‘ஊன் பேரென்ன?’’