Monday, September 19, 2011

தொடர் - 6


வழிமுழுக்க சரளைக் கற்கள் நிரம்பியிருந்தது. வெகுதூரம் நடந்து கொண்டிருந்தோம்.எல்லோர் முகத்திலும் துக்கமும், களைப்பும், தூக்கமின்மையும் நிரம்பி வழிந்தது. யாரும் யாரையும் தொட்டுவிட்டால் உடைந்து அழத்தயாராக இருந்தார்கள். என் கையைப் பற்றியவாறு பாரதிகிருஷ்ணகுமார் நடந்து கொண்டிருந்தார். வெண் சரளைக்கற்கள் கால்களில் மிதிபட்டு ஒரு விதமான சப்தத்தில் மௌனத்தை உடைக்க முயன்று கொண்டிருந்தன.

எங்களுக்கு முன் பத்தடி தூரத்தில் சென்ற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த சவ ஊர்தியில் கந்தர்வனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. மேடு பள்ளங்களில் அதன் அதீத அசைவு என்னை நிலைகுலைய வைத்துக் கொண்டிருந்தது. வாழ்வின் நிலையாமை எப்போதும் நம்மை இப்படி நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. நாம்தான் அதைக் கவனிக்காத மாதிரியும், புரியாத மாதிரியும் அதை அலட்சியப்படுத்திக் கொண்டு என்னவெல்லாமோ செய்து கொண்டிருக்கிறோம்.


‘பூவுக்குக்கீழே’ என்ற சிறுகதையின் மூலமே நான் கந்தர்வனைச் சென்றடைந்தேன். நான் அவரைப் பற்றிய தேடுதலில் பெற்ற தகவல்களிலால் இக்கதை அவர் எழுதச் சாத்தியமற்றது என நம்பியிருந்தேன். எங்கள் முதல் சந்திப்பின்முதலே அது எத்தனை தவறான அபிப்பிராயம் என என் அவசரத்தைத் தண்டித்தேன்.

“மொதல்ல கவர்மெண்ட் ஆபீஸ், அப்புறம் தொழிற்சங்கம் அதுல வர்ற ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகள், இயக்கம், போராட்டம், கட்சி இதையெல்லாம் கடந்துதான் எனக்கு வாசிப்பும், எழுத்தும்” ஒரு பிரகடனம் போல எப்போதும் இவ்வரிகள் கந்தர்வன் மேல் படிந்து கிடந்தன.

ஆனால் இவ்வனுபவங்கள் கந்தர்வனால் கலாபூர்வமாக்கப்பட்டது. மன ஒருங்கிணைப்பு கூடிவரும் நிமிடத்திற்குக் காத்திருந்த நிதானமான எழுத்து அவருக்கு வாய்த்திருந்தது.

எந்த மனித மனமும் தட்டையானதல்ல. அது முரண்பாடுகளால் ஆனது. எந்த மனிதனையும் முழுக்கப் புரிந்து கொண்ட சகமனிதனோ, உறவுகளோ நிச்சயம் இல்லை.

தன் வாழ்நாளெல்லாம் எதிர்த்த, முரண்பட்ட காங்கிரஸின் அடையாளமான காந்தியின் புகைப்படத்தைத் தன் வீட்டில் மாட்டி வைத்திருந்த இ.எம்.எஸ்சை அவர் சார்ந்திருந்த கட்சியோ, அவர் குடும்பமோ எப்படிப் புரிந்து கொண்டிருக்கும்?

கந்தர்வனின் குரல், அதிகாரத்தை நோக்கி சதா உயர்ந்து கொண்டேயிருந்தது. அது ஆளும் வர்க்கத்தினரிடமிருந்தும், அதிகாரத்துக்கு எதிராகவும் தினம் தினம் ஒளிந்து அவர்களை நிம்மதியிழக்கச் செய்து கொண்டிருந்த போர்க் குரல்.

ஆனால் கந்தர்வனின் ஒரே பையன் பெயர் வெங்கட். அப்பெயர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நினைவு கூறலுக்காகத் தன் பையனுக்கு வைக்கப்பட்டது என பெருமிதப்படுவார். அந்த அதிகாரியின் பெயர் வெங்கட் ரமணன். அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒரு மகத்தான அரசு ஊழியர் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியதற்காக, கந்தர்வனுக்குப் பத்தொன்பது மாதங்கள் சஸ்பென்ஷன். தோழர்கள், நண்பர்களின் வருகை குறைந்து, உறவினர்களின் பாராமுகம் பார்த்து அதிர்ந்து, தன் பகல் நேரங்களை வாசிப்பிலும், எழுத்திலும் கரைத்த நாட்கள் அவை என அந்நாட்களின் வெறுமையை வென்றதைக் கந்தர்வன் சொல்லி நாம் கேட்க வேண்டும்.

எந்த மன உறுதியையும் குலைக்கும் அந்நாட்களில் அந்த அதிகாரி இடம் மாறி இவர் பக்கம் நின்று, இவர் கைப்பற்றி, இவருக்குத் தோள் கொடுத்து, எல்லாமும் மாறுதலுக்குட்பட்டதுதான். ஊழியர்களின் வீரம் செறிந்த போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கும் பூதங்கள் அதே தொழிற்சங்கங்களில் ஒன்றெனக் கலந்திருப்பதும், இப்படி ஒரு ஈர மனதோடு ஒரு அதிகாரி அதிகாரத்தின் நாற்காலியில் உட்கார நேர்வதும் முரண்பாடுகள் எனினும் ஒரு போராட்ட காலத்தின் நெருக்கடிகளில் மூச்சுத் திணறும்போது இவர்கள் வெளிப்பட்டு விடுகிறார்கள்.

கந்தர்வனின் படைப்புகள் தொழிற்சங்க அரசியலுக்கும், கொள்கைக்கும், தத்துவத்திற்கும் அப்பால் போய் மனித மனங்களில் படிந்து கிடந்த மென் உணர்வுகளைத் தேடிக் கொண்டு வந்தவை. ஒரு பின்னரவில் நீளும் பேருந்துப் பயணத்தில், ஓட்டுநர் இருக்கைக்கு இரண்டாவது இருக்கையில் உட்கார்ந்திருக்கும் அந்த நடுவயதுப் பெண் திடீர் திடீரென விழித்து “நான் பத்தினிடா, நான் உத்தமிடா” எனத் திமிறும் காட்சி வேறெந்த படைப்புகளிலும் நான் அடையாத உக்ரம். இன்னும் தூக்கம் வராத ஏதோ பின்னிரவில் அப்பெண்ணின் குரல் உடைந்து என் கழுத்தை நெரிக்கிறது. என் சரீரத்தைப் பிடித்துள்ள அக்கதையிலிருந்து என் மரணம்வரை என்னால் விடுபட முடியுமெனத் தெரியவில்லை.

மனிதனின் மென் உணர்வுகளைத் தன் படைப்புப் பக்கங்களெங்கும் படிய வைத்துக் கொண்டேயிருந்தவர் கந்தர்வன். கவர்மெண்ட் ஆபீஸ்களின் பழுப்பேறிய கோப்புகளுக்கிடையே கிடந்த இந்த மகத்தான மனிதர்களை அள்ளிக் கொண்டுவந்து நம் முன் நிறுத்தினார் கந்தர்வன்.

ராமன் சார் என்ற அலுவலக சூப்பரின்டெண்ட். அந்தக் குட்டி சாம்ராஜ்ஜியத்தின் மகாராஜா அவர். எப்போதும் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு, தனக்கும் கீழே உள்ள பதவிகளில் இருப்பவர்களை நிமிர்ந்து பார்த்தலே தன் கௌவரவத்திற்கு இழுக்கு என நினைக்கும் அதிகாரத்தின் கடைசிப் பிரதிநிதி ராமன் சார்.

அந்த அலுவலகத்திற்கு ஆறடிக்கும் மேலான உயரத்தில் சகல மரபுகளையும் உடைத்தெறியும் ஆவேசத்தோடு ஒரு புது இளைஞன் மாறுதலில் வருகிறான். முதல் பார்வையிலேயே ராமன் சாருக்கு அவனைப் பிடிக்கவில்லை. மெல்ல அலுவலகம் ராமன் சாரின் பிடியிலிருந்து விலகி ராமன் சார் அவ்வலுவலக அதிகாரப் பிரதிநிதியாகவும் ரெங்கராஜன் ஊழியர்களின் அடையாளமாகவும் தினம் தினம் சுவாரஸ்யமான மற்றும் அவமானமான நிகழ்வுகளால் காய்களை நகர்த்துகிறார்கள். ஒருநாள் காய் முற்றி வெடிக்கிறது. ரெங்கராஜனை மேல் தளத்திற்கு மாறுதல் செய்து ராமன் சார் போட வைக்கும் உத்தரவு கொந்தளிப்பாகிறது. ஊழியர்கள் உள்ளிருந்து தெருவுக்கு வருகிறார்கள். ஒரே நிமிடத்தில் காட்சிகள் தலைகீழாய் மாறுகிறது. அம்மாறுதல் உத்தரவு ரத்தாகிறது. ராமன் சாருக்குப் பெருத்த அவமானமாகி விடுகிறது. பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளை மேடைமீதே விட்டெறிந்துவிட்டு அவர் அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறார். ஒரு மாதமாகியும் அலுவலகம் திரும்ப முடியாத மனவலியை அவரே ஏற்படுத்திக் கொள்கிறார். அதன்பிறகு அவர் வீட்டிலேயும் இல்லை என்ற தகவல் பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது.

ஒருநாள் சகஜமாகி மீண்டும் அலுவலகம் திரும்பி அன்று முழுக்க அலுவலகத்தில் இருக்கிறார். அதன்பிறகு அவர் மைத்துனனின் மூலம் வி.ஆர்.எஸ். கடிதம் வருகிறது. பி.எப்., ஜி.பி.எப் என சம்பிரதாயங்கள் பணமாக்கப்பட்டு அறுபதாயிரம் ரூபாய் ஒரு மஞ்சள் பையில் திணிக்கப்பட்டு அவருக்கு அளிக்கப்படுகிறது. யாரையும் நிமிர்ந்து பார்க்கவோ, புன்னகைக்கவோ மனமின்றி வீடு திரும்புகிறார். வரும் வழியில் வண்டியை நிறுத்தி ஒரு இசைக்கருவிகள் விற்பனையகத்தின் முன் இறங்கி, ஒரு புல்புல்தாராவைப் பிரியத்தோடு வாங்குகிறார். அதற்கான பணத்தைத் தன் உழைப்பில் கனத்த மஞ்சள் பையிலிருந்து கணக்குப பார்க்காமல் எடுத்துத் தருகிறார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு சன்னதித் தெருவில் ரெங்கராஜன், ராமன் சாரைத் தற்செயலாய்ப் பார்க்கும்போது அந்த புல்புல்தாராவை ஒரு குழந்தை மாதிரி அணைத்துக்கொண்டே நடக்கிறார். ரெங்கராஜனுக்குப் பொங்கி வரும் அழுகையை அடக்க முடியவில்லை என்று அக்கதை முடிகிறது.

நுண் உணர்வுகளையும், இசை மனதையும் கவர்மெண்ட் குப்பைகளும், கோப்புகளும் அடைத்துக் கொள்கின்றன. திமிறி மீண்டு வருபவன் கையில் கொடுப்பதற்குப் பூங்கொத்துகளோடும், வீணைகளோடும் தேவதைகள் காத்துக் கொண்டிருப்பார்கள். ராமன் அப்படித் தப்பித்த ஒரு அரசு ஊழியன்தான்.

இக்கதை என்னை என்னவெல்லாமோ செய்தது. ஒரு சூறாவளி உட்புகுந்து என்னுள் பேயாட்டம் போட்டது.

இக்கதையில் சொல்லாத செய்திகள் வேண்டி நான் பஸ் பிடித்து புதுக்கோட்டை போய் ஒரு இரவு முழுக்க அவரோடு உரையாடியிருக்கிறேன்.
என் ‘எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்’ என்ற கவிதைத் தொகுப்பிற்கு ஒரு அற்புதமான முன்னுரை தந்தார். ‘பூக்களில் காய்ப்பூவாக’ எனத் தலைப்பிட்ட அம்முன்னுரை போலவே வேண்டுமெனப் பல படைப்பாளிகள் என்னிடம் கேட்டார்கள்.

‘என்னால முடியலடா. நீ என் தம்பி, என் உதிரம்’ என உணர்வு பொங்க, பலமுறை என் தோள் தொட்டிருக்கிறார்.

2004 – மார்ச் 8 – மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகாடமி நடத்திய இந்திய அளவிலான கருத்தரங்கிற்கு, ஜெயகாந்தன், கந்தர்வன், சிவகாமி, நான் எனப் பலர் அழைக்கப் பட்டிருந்தோம். நான் தங்கியிருந்த பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையின் எதிர்அறை ஜே. கே. வுடையது. நெடுநேரம் அவ்வறையைத் தட்டத் தயங்கி நின்றவர்களை விசாரித்தேன்.

‘சார், மிஸ்டர் பொன்னுசாமி, யுனிவர்சிட்டி வி.சி. அய்யாவைச் சந்திக்கணும்’

நான் கதவைத் திறந்து உள்ளே போனேன். ஜே. கே. வெற்றுடம்பில் ஒரு காங்கிரஸ் துண்டு போட்டு இரவுக் கொண்டாட்டத்திற்கு நண்பர்களோடு தயாராகிக் கொண்டிருந்தார்.

நான் சொன்னதைக் கேட்டதும், அவசரமாகத் தயாராகி அவரை வரவேற்று, ஓரிரு நிமிடங்களில் உரையாடல் முடித்து விடைபெற்றார்.

ஜே. கே. எதிரில் கந்தர்வன், கே.எஸ், என அவ்வறை படைப்பாளிகளின் சொற்களால் நிரம்பியிருந்தது.

உரத்த குரல்களால் விவாதம் உற்சாகமாகியிருந்தது. நான் மதுரை நகரில் வாங்கப்பட்ட அயிரைமீன் குழம்பையும், கல்தோசையையும் பிரித்து சாப்பிட ஆரம்பித்தேன். இரு செல்லக் குழந்தைகளைப் போல ஜே.கேயும் கந்தர்வனும் என்னிடம் தோசை, அயிரை மீனுக்கு மாற்றி மாற்றி கை நீட்டிச் சாப்பிட்டது மறக்க முடியாத காட்சிப் பதிவுகள். அதுதான் கந்தர்வனை நான் கடைசியாய்ப் பார்த்தது.

அதன்பின் அந்த வெண் சரளைக் கற்களுக்கிடையே நடந்து, தூரத்திலிருந்தே கண்களால் அவரைப் பருகியது மட்டும்தான்.

பல நூறு தோழர்களின் மௌன நடையினிடையே, ‘நான் பத்தினிடா, நான் உத்தமிடா’ என்று அகாலத்தில் ஒலித்த அந்தப் பெண்ணின் குரல் எனக்கு மட்டும் கேட்கிறது. உடலெங்கும் ஒரு குரல் என்மீது மின்சாரத்தைப் பாய்ச்சுவதைப்போல் உணர்ந்த தருணமது. ஒரு படைப்பாளி படைப்பின் உச்சத்தில் ஒளிரும்போதே கீழே விழுந்து கருகிவிட வேண்டும். அதுதான் கந்தர்வனுக்கு நேர்ந்தது. நான் வேண்டுவது.



- நன்றி மீடியா வாய்ஸ்

2 comments:

  1. கனமான உணர்வுகளை அற்புதமாக எழுதியுள்ளீர்கள் பவா. உங்களின் எழுத்து நடை மீண்டும் கட்டிப்போடுகிறது.

    ReplyDelete