Thursday, September 22, 2011

தொடர் - 7


அது என்னமோ எப்போதும் தொலைக்காட்சியின் முன்னால் எதன் பொருட்டும் உட்காரப் பிடித்ததில்லை. நேற்று மாலை என் பல நண்பர்கள் இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகளை வாங்கும் விழா D.D.யில் ஒளிபரப்புவதாகச் சொன்னதால் நண்பர்கள் பொருட்டு, அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஜனாதிபதி பிரதீபா பட்டேல் புன்னகையற்ற முகத்தோடேயே அவ்விருதுகளை ஒவ்வொருக்காய் வழங்கிக் கொண்டிருந்த காட்சி என்னைப் பல ஆண்டுகளுக்கு முன் இதே போலொரு மழைநாளில், ஜனாதிபதி கே. ஆர். நாராயணன் அவ்வருட தேசிய விருது பெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வை ஞாபகப் படுத்தியது. நான் மிகவும் நேசித்து மதிக்கும் எங்கள் லெனின் பொருட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்.

பதக்கம் தந்து, சால்வை போர்த்தி, கைக்குலுக்கல்களோடு எல்லோரையும் அனுப்பிக் கொண்டிருந்தார் ஜனாதிபதி. எடிட்டர் பீ.லெனின் அந்த ஆண்டு அவர் இயக்கிய ஊருக்கு நூறு பேர் திரைப்படத்திற்காகப் பரிசு பெற மேடையேறினார். எப்போதும் எளிமையை மட்டுமே அணிந்திருக்கும் லெனின் சார் அன்று அநியாயத்துக்கு நாலு முழ வேட்டி கட்டி, ஒரு கதர்ச் சட்டை போட்டு, சினிமாக்காரர்களுக்கான மொத்த காஸ்டியூமைப் புறந்தள்ளி இருந்தார். மேடையில் யாரிடமும் பேசாத ஜனாதிபதி, லெனின் சாரோடு ஒரு நிமிடத்திற்கும்மேல் ஏதோ பேசினது தேசம் முழுவதும் ஒளிபரப்பானது. லெனின் சிரித்துக்கொண்டே மேடையில் இருந்து இறங்கினார். என்ன பேசினார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவலில் சாரிடம் கேட்டபோது, தன் அக்மார்க் சிரிப்போடு அவர் சொன்னார், “என் வேட்டியைப் பார்த்துவிட்டு என்னைக் கேரளாக்காரன் என்று நினைத்துவிட்டார் போல.

யூ ஆர் ப்ரம் கேரளா? என்றார்.

நான் கிடைத்த அந்த நொடியின் இடையில்,

மை பாதர் ப்ரம் மகாராஷ்ரா சார்,

மதர் ஆந்த்ரா

நான் தமிழ்நாடு

என ஆரம்பித்து, என் மொத்தக் குடும்பமும் எப்படி வெவ்வேறான ஜாதிகளில், மதங்களில், மாநிலங்களில், நாடுகளில் கலந்திருக்கிறோம் எனச் சொல்லி முடித்தேன்.

ஜனாதிபதி சிரித்துக்கொண்டே,

ஸோ யூ ஆர் கால்டு “லெனின் என்று சத்தம் போட்டுச் சொன்னார்.

பொங்கி வந்த சந்தோஷத்தோடே “இதுதான் லெனின் என மீண்டும் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

தமிழில் நடந்த புதிய கலை, இலக்கிய, சினிமா முயற்சிகளைத் தேடித் தேடித் திருவண்ணாமலைக்குக் கொண்டு வந்த காலம் அது. புகழ்பெற்ற திரைப்பட எடிட்டர் லெனின் நாக் அவுட் என்ற குறும்படம் எடுத்திருப்பதாகவும், அதைத் திரையிட முடியாமல் இருப்பதாகவும், பத்திரிகையிலோ நண்பர்கள் மூலமாகவோ கேள்விப்பட்டு ஏ. வி. எம். ஸ்டுடியோவில் அவரின் எடிட்டிங் அறைக்கு முன்னால் நின்றேன்.

முதல் பார்வையிலேயே பிரியம் ஒட்டிக் கொண்டது. ஏ. வி. எம். வேப்ப மரத்தடி சிமெண்ட் திட்டில் அவரோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம். சினிமா மீது எனக்கிருந்த எல்லா மாயைகளையும் கழுவியெடுத்து ஞானஸ்தானம் கொடுத்தார். நான் அதுவரை பிரமிப்பாகப் பார்த்த பல நடிகர்கள் அவருக்கு வணக்கம் சொல்லி, அவரோடு சில நிமிடங்கள் பேசி, கை குலுக்கிச் சென்றது என்னை பிரமிப்பின் எல்லைக்கே கொண்டு போன நாள் அது.

“நாக் அவுட் குறும்படத்தைத் திருவண்ணாமலையில் நடந்த தமுஎச மாவட்ட மாநாட்டில் திரையிட்டோம். தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று நட்சத்திரங்களாக ஒளிரும் பலரும் மிகுந்த தோழமையோடும், நட்போடும் சங்கமித்த மாநாடு அது. எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கோணங்கியில் ஆரம்பித்து தங்கர்பச்சான், லெனின், ஓவியர் சந்ரு, ட்ராஸ்கி மருது என்று நீண்ட ஆளுமைகளின் சங்கமம் அது.

பெரியார் சிலையில் இறங்கி, மாநாடு நடந்த சாரோன் போர்டிங் ஸ்கூல் வளாகம்வரை இரண்டு கிலோமீட்டரும் நடந்தே வந்தார் லெனின். (இன்றுவரை அப்படியே...) கூடவே 16MM பிலிம்ரோல் அடங்கிய அந்தப் படப்பெட்டியை இவரும், கூட வந்த ஒரு ஆளும் மாற்றி மாற்றித் தூக்கி வந்தனர். பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் எஸ். பி. ஜனநாதன் என்னை என் வீட்டில் சந்தித்தபோது,

“நாம ஏற்கனவே பார்த்திருக்கோம் சார் என்றார். ஞாபகங்களின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள நான் உடனே மறுத்தேன். இயக்குனர் ஜனா சிரித்துக்கொண்டே, பதினைந்து வருசத்துக்கு முன்னே லெனின் சாரோடு “நாக் அவுட் பெட்டி தூக்கினு வந்த பையன் நான்தான் சார் என்றார். ஒரு நிமிடம் உறைந்து போனேன்.

லெனின் இந்த வாழ்வுமுறையையும் , எளிமையையும் சின்ன வயசு முதலே ஒரு தவம் மாதிரி காத்து வருகிறார் என அவரை ஊடுருவிப் பார்த்த எல்லோருக்கும் தெரியும். இளம் வயதிலேயே ஜெயகாந்தனின் மடம் மாணவர்களில் அவரும் ஒருவர். சமூகத்தில் பொருட்படுத்தத் தகுந்த எந்த இடத்திலும் இருக்க லாயக்கற்றவன் நீ என மதிப்பிட்டாலும் ஜெயகாந்தனின் மடத்திற்கு அவன் வருகை முதலில் நிகழ்ந்தால் அவனுக்கு நாற்காலியில் இருக்கை உண்டு. நீ எவ்வளவு பெரிய மனிதன் எனினும், சமூக அந்தஸ்தில் உனக்குக் கீழேதான் பூமி எனினும் நீ தாமதமாக வந்தால் தரையில்தான் உட்கார வேண்டும்.

பல சமயங்களில் நாகேஷ், ஸ்ரீகாந்த் போன்றவர்கள் தரையில் உட்கார்ந்தும், ஆழ்வார்ப்பேட்டை ஏரியா ரிக்ஷாக்காரர் அவர்கள் எதிரில் நாற்காலியில் உட்கார்ந்தும் புகைப்பதைப் பலர் பார்த்திருக்கலாம். இந்தத் தோழமையை இளமையிலேயே கற்றவர் லெனின்.

இன்றுவரை யாராலும் எந்த வகைமைக்குள்ளும் அடக்க முடியாத ஆளுமை அவர். கம்யூனிஸ்டா? சித்தரா? கொஞ்சம் சாமியார் மனநிலையா? கால்போன போக்கில் போகும் தேசாந்திரியா? இதையெல்லாம் வைத்து யாரும் அவரை எடை போட்டுவிட முடியாது. ஆனால் இவர்கள் எல்லாருக்குமானவர் அவர்.

தான் மிக மதிக்கும் ஒரு ஆந்திரச் சாமியாரைப் பல ஆண்டுகளுக்குமுன் சந்திக்கிறார். விலை மதிக்க முடியாத தன் சீடன் என அக்குரு லெனினை நினைக்கிறார். ஒருநாள் பின்னிரவுவரை அவர்கள் உரையாடல் நீள்கிறது.

அச்சாமியார், கேரளாவின் உட்புறம் உன்னைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு சிஷ்யன் தனக்குண்டு எனவும், நாலைந்து பெண்பிள்ளைகளோடு அவன் மிகுந்த சிரமத்திலிருப்பதாகவும், அவர் பெண்களில் ஒருத்தியை நீ திருமணம் செய்து கொள்வாயா எனவும் கேட்கிறார்.

அடுத்தநாள் லெனின் புறப்பட்டு கேரளா போகிறார். மிகுந்த வறுமையில் அக்குடும்பத்தைச் சந்திக்கிறார். எனக்கு உங்கள் பெண்ணை மணப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. உங்களுக்குச் சம்மதமா எனக் கேட்கிறார். கண்ணில் புதையும் கண்ணீரில் நனைகிறது இருவரின் கைப்புதைப்பும்.

திருமணத்தின் பொருட்டு முதல்நாளே திருப்பதிக்குப்போய் மொட்டையடித்து, தன் உயிர் நண்பர்கள் இருவரை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டு ஒரு பின்னிரவில் கேரளாவின் கோட்டயத்திற்கருகே உள்ளடங்கிய அக்கிராமத்திற்குப் போய்ச் சேருகிறார். திருமணத்திற்கென்று வந்திருந்த பத்திருபது பேரும் அசந்து தூங்குகிறார்கள். தன் நண்பர்களுக்கும் தனக்கும் மூன்று பென்ச்சை எடுத்துப் போட்டு வீட்டின்முன் போடப்பட்டுள்ள பந்தலிலேயே படுத்துத் தூங்குகிறார். அப்படிப்போன அவர் உயிர் நண்பர்கள் இளையராஜாவும் கங்கை அமரனும். பின்னிரவுவரை மாப்பிள்ளை வராதது கண்டு திடுக்கிட்ட அப்பெண் வீட்டாருக்கு, மாப்பிள்ளை இப்படி மொட்டையடித்து, ரண்டு பேரோடு மட்டும் திருமணத்திற்கு வந்தது ஒன்றும் பெரிய அதிர்ச்சியைத் தந்துவிடவில்லை.

இந்திய சினிமாவில் இப்படியான ஓர் ஆளுமையாக ஜான் ஆப்ரகாமைச் சொல்லலாம். ஜானும் லெனினும் உற்ற நண்பர்கள். சொகுசு பங்களா, சொகுசு கார் என வாழ்வை உப்ப வைத்துக்கொள்ளும் பிரபலங்களுக்கு முன் இன்னும் எளிமை இன்னும் எளிமை என டவுன் பஸ் பயணத்திற்கு மேம்பட்டு எதையும் யோசிக்காத மனது யாருக்கும் வாய்க்காதது.

லெனினின் பல சினிமா முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதை அடுத்த நொடியே உதறித் தள்ளும் மனம் அவருக்கு வாய்த்திருந்தது. இன்றைய முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆவதற்குமுன் நடித்துக் கொடுத்த கடைசிப் படம் “நதியைத் தேடி வந்த கடல் வாழ்வின் எந்தப் பெருமிதங்களையும், புகழையும் சேகரிக்கத் தெரியாத துறவு மனம் அவருக்கு.

“நாக் அவுட்“ படத்திற்கு வாங்கிய ஜனாதிபதி விருது (சுமார் கால் கிலோ வெள்ளியிலானது) ஒரு விழாவில் என் கழுத்தில் மாட்டி, இது பவாவுக்குத் தான் பொருந்தும். அவர்தான் பெட்டியில் கிடந்த இப்படத்தை வெளியில் எடுத்தவர் எனச் சொல்லிவிட்டுச் சென்றார். முழு புரிதலுக்கு மனிதனை உட்படுத்தாத வழிபோக்கர் அவர்.

அவர் இயக்கிய படங்களில் “குற்றவாளி“ என்றொரு படம் என்றென்றும் பேசத் தக்கது. ஒரு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதி. அவன் அறைக்கு மிக அருகில் இருக்கும் ஜெயிலரின் வீட்டிலிருந்து தினந்தோறும் வார்த்தைப்படுத்த முடியாத இசை வழிகிறது. இசைக்கு வீடென்றும் சிறையென்றும் பேதமுண்டா என்ன? அந்த இசைக்கருவியை மீட்டும் விரல்களைப் பார்த்துவிடத் துள்ளும் மனதோடு அக்கைதி அதற்கான ரகசிய முயற்சிகளில் இறங்குகிறான். தினம் தினம் அதற்காகப் பிரயத்தனப்படுகிறான். சிறையிலிருந்து தப்பிப்பதற்கான அவன் முயற்சி என அச்சிறைக் காவலன், அவன் தப்பிக்கும் நிமிடத்தில் அவனைச் சுட தக்க தருணத்திற்குக் காத்திருக்கிறான். காலம் நீர் போலக் கரைகிறது. இதோ இருவருக்குமான மையப்புள்ளி இதுதான், இதற்குத்தான் இருவருமே காத்திருந்தது. அவன் உடைக்கப்பட்ட சுவரின் வழியே, அடுக்கப்பட்ட பொருட்களின் மீதேறி அவ்வீணையைப் பார்த்துவிடுகிறான். அச்சிறைக் காவலனின் பெண்ணே அதை மீட்டுபவள் என்பதறிந்து பரவசப் படுகிறான். ஒரு நிமிடத்தில் அக்கலை மனதை உள்வாங்கிக் கொள்ளும் அச்சிறைக் காவலன் தன் தொப்பியைக் கழற்றி, தன் துப்பாக்கியைத் தாழ்த்தி அக்குற்றவாளிக்கு சல்யூட் அடிப்பதோடு படம் முடியும். படத்தின் தலைப்பு குற்றவாளி இப்படத்தை இயக்குவதென்பது லெனின் மாதிரியான ஒருவருக்கு மட்டுமே சாத்தியம். தொடர்ந்து பார்த்த தமிழ்ப் படங்கள் அவரைக் கோபப்படுத்தியுள்ளன. அவைதான் அவரைத் திரைப்படத்தை விட்டு விலகியிருக்க நிர்பந்திக்கின்றன. ஆனால் எப்போதாவது வரும் சில நல்ல படங்கள் அவரை மீண்டும் உள்ளிழுத்துக் கொள்கின்றன.

எஸ். ராமகிருஷ்ணனின் “நகர் நீங்கிய காலம் என்றொரு சிறுகதையில், வேலை கிடைக்காத ஒரு நண்பன் உள்ளூரில் டுடோரியல் நடத்தும் இன்னொரு நண்பனைச் சந்திக்க வருவான். இருவரும் ஒரு சித்திரை மாத மாலையில் வரப்பில் உட்கார்ந்து பேசிக் கொள்வார்கள். இவர்களின் உரையாடலினூடே, அந்த வரப்புக்குள்ளிருக்கும் வளையிலிருந்து ஒரு வயல் எலி வெளியே வரும். நண்பர்கள், வாழ்வின் இருண்ட பகுதியைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அந்த எலி புழுக்கமான அவ்வளைக்குள் ஓடி விடும். அவர்களின் காதலிகளைப் பற்றி, அச்சந்திப்புகளைப் பற்றிப் பேசும் இனிமையான தருணங்களில் அதே எலி வரப்பு ஈரத்திற்கு வந்து இளைப்பாறும். எத்தனை அற்புதமான படிமம் இது!

லெனின் சாரும் இந்த எலி மாதிரிதான். தமிழ் சினிமாவின் கொடுமை தாங்காமல் அதை விட்டு விலகி தன் கூடுகளுக்குள் திரும்ப நினைப்பதும், சில நல்ல பட முயற்சிகளின்போது அந்த எளிய இயக்குநர்களின் தோள்பற்றி அதை உரமேற்றுவதுமாக நகர்கிறது இந்த வழி போக்கனின் பாடலோடு கூடிய வாழ்வு.

2 comments: