Thursday, October 6, 2011

தொடர் - 9


பூமியைத் தேடிவரும் சில சிறகுகள்

யாதொன்றும் வேண்டுவதில்லை

வானை உராய்ந்தது போதும்


பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டைப் பற்றி எப்போது நினைத்தாலும் கூடவே குட்டி ரேவதியின் இக்கவிதைதான் நினைவிற்கு வரும்.

நிற்க மனமின்றி மழை இன்னும் தூறிக் கொண்டிருக்கும் ஒரு அதிகாலையில் எர்ணாகுளத்தின் முகப்பிலுள்ள எடப்பள்ளி ஆட்டோ ஸ்டாண்டில் நின்று தடுமாறுகிறேன், “பாலச்சந்திரன் சுள்ளிக்காடுஎனத் தமிழில்...

அடுத்த நொடி “நம்ம பாலனோ?என இரண்டு, மூன்று குரல்கள்.

கொஞ்சம் நம்பிக்கையோடும், நிறைய நம்பிக்கையின்மையோடும் ஆட்டோவில் ஏறுகிறேன். ஐந்தாவது நிமிடம் “வெல்கம் பவாஎன்ற கணீர் குரலின் வரவேற்பில் பாலச்சந்திரன்!

கலர் லுங்கி கட்டி, வெற்றுடம்போடு வரவேற்கும் இம்மனிதனை எடப்பள்ளி ஆட்டோ டிரைவர்கள் முதல் கேரளாவின் முதல்வர்வரை தெரியும்.

இவர்கள் எல்லோரும் இக்கவிஞனைக் கேரளாவின் சொத்து எனக் கருதுகிறார்கள். இவன் எழுத்து மட்டுமே எழுநூறு மைல்களுக்கப்பால் என்னை இழுத்து வந்திருக்கிறது. கொட்டும் நீரில் வார்த்தைகளற்று நிற்கிறேன்.

“உள்ள வாஎனத் தோள் பற்றி அழைக்கும் தோழமையில் எங்கள் முதல் சந்திப்பை மீட்டெடுக்கிறேன்.

இலக்கியத்தின் பேரில் தனக்கு வழங்கப்பட்ட அத்தனை பரிசுகளையும், பணத்தையும் தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தவன் சுள்ளிக்காடு!

எழுத்தாளரும், காவல் துறை அதிகாரியும், என் சிநேகிதியுமான திலகவதிதான் எங்களுக்கு பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற கவிஞனை அறிமுகப் படுத்தினார்கள். திருவண்ணாமலை “முற்றத்திற்கு உரையாற்ற அழைத்த எங்கள் அழைப்பை அப்போதே ஏற்று, அடுத்த வாரத்தின் ஒரு வெயிலேறிய மத்தியானத்தில், அழுக்கேறின ஜீன்ஸும், கசங்கிய டீ-ஷர்ட்டுமாய் என் வீட்டிற்கு ஒரு ஆட்டோவில் வந்திறங்கிய அம்மனிதனை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவரென நாங்கள் யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

அன்றுமாலை “முற்றமைதானத்தில் சுள்ளிக்காட்டின் உரையை விடவும், அவர் குரல் வசீகரம் எல்லோரையும் கட்டிப் போட்டது. தன் கவிதைகளைத் தாள லயத்தோடு அவர் பாடியது எங்களுக்கு முற்றிலும் புதிய அனுபவம். “எவிடெ ஜான்? எவிடெ ஜான்?என ஒரு விபத்தில் இறந்துபோன ஜான் ஆப்ரஹாமை நோக்கி அலைவுற்ற பாலனின் குரலில் நாங்கள் எல்லோருமே எங்களைப் பறிகொடுத்திருந்தோம். தவித்த குரலை அங்கேயே தனித்தலைய விட்டு, மைதானத்தை விட்டகன்ற அந்தப் பின்னிரவில் வெகுநேரம் வரை என்னை மட்டும் அழைத்துக் கொண்டேயிருந்தது அக்குரலின் வசீகரம்.

அன்றிரவு எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்த பாலன், கையில் தன் “சிதம்பர ஸ்மர்ண என்ற தன் புத்தகத்தோடு அதிகாலையிலேயே எழுந்து, அலைவுறும் தன் மனதை எதிலாவது கொட்ட குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த காலை நினைவிருக்கிறது.

அம்மா, குழந்தைகள் எல்லோரும் எழுந்து வட்டம் போட்டு உட்கார்ந்து ஒரு புது அனுபவத்தை அடைய மெளனத்தோடு காத்திருந்த நிமிடமும் ஞாபகத்தில் உள்ளது.

“இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை வாசிக்கட்டுமா?”. ஏற்கனவே மனத் தயாராகி விட்டிருந்த எங்கள் மெளனம் அவர் சம்மதத்தைத் துரிதப்படுத்தி வார்த்தைகளாக்கியது.

எல்லாவற்றையும் இழந்துவிட்டு, ஒருவருக்கு இன்னொருவர் மட்டுமே ஆறுதல் என்ற வாழ்வின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்த ஒரு முதிய கணவன், மனைவியின் அளவிட முடியாத நேசம் அது. சிதம்பரம் கோவிலின் பருத்த கல்தூண்களுக்கிடையே கால்களை நீட்டிப் போட்டுக் கொண்டு, கடந்து போன வாழ்வின் நெரிசல்களையும், நேசத்தையும் கண்களால் பகிர்ந்து கொள்ளும் அக்காட்சியை பாலேந்திரன் வாசிக்க, வாசிக்க என் அம்மாவிலிருந்து, வம்சி வரை கண்களைத் துடைத்துக் கொண்டோம்.

ஓ............ அந்தக் குரல்...............

அடுத்தப் பகுதி, அடுத்தப் பகுதி என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பிரயோகிக்கப்பட்ட பொழுது அது. கண்ணீரும், மெளனமும் அக்காலை வேளையைப் போட்டி போட்டு மெழுகிவிட்ட்து. நெடுநேரம் கழிந்து, விடுபட நினைத்த எங்களெல்லோரையும் ஒரு மெல்லிய கண்ணி கவ்வியிருந்தது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற கலைஞன் எங்கள் வீட்டிற்குள் ஒரு ஒளியைப் போல ஊடுருவியது இப்படித்தான்.

சிலர் விட்டகன்றிருப்பினும் அரூபமாய் அங்கேயே தங்கியிருப்பது மாதிரி அவன் குரலும், அவன் வாழ்வின் குரூரமான பகுதிகளும் அந்த அறை முழுவதும் நிரம்பியிருந்தது. அதைத் தமிழ்ப் படுத்தவே ஷைலஜா மலையாளம் கற்றதும், அதன் பிறகான ஆறேழு மாதங்கள் சிதம்பர ஸ்மர்ணாவில் அவள் பித்துப் பிடித்தலைந்து சிதம்பர நினைவுகளில் மீண்டதும் நிகழ்ந்தது.

இன்றுவரை அப்புத்தகத்திற்கு ஏதாவது ஒரு வாசகர் கடிதமோ, தொலைபேசி அழைப்போ, வலைப்பதிவோ இல்லாத நாட்களை எண்ணிவிடலாம். அவ்வாசிப்பு தமிழ் வாசகர்களிடையே ஏற்படுத்திய அனுபவங்களை மட்டுமே தனித் தொகுப்பாக கொண்டு வரலாம். தவத்திரு பொன்னம்பல அடிகளார் தான், இதுவரை வாசித்த புத்தகங்களில் எந்த ஒரு புத்தகமும் தன்னை இப்படி அலைக்கழித்ததில்லை என்று நாலைந்து பக்கம் கடிதம் எழுதி, இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட மேடைகளில் இப் புத்தக பக்கங்களை நான் கண்ணீரோடு பகிர்ந்து கொண்டுள்ளேன், எனச் சொன்னதும் அந்த அனுபவங்களில் அடக்கம்.

அது ஒரு கோடைகால ஆரம்பம். அரசு வேலையில் மனம் லயிக்காத மத்தியானத்தில் அரைநாள் விடுமுறை எடுத்துக் கொண்டு, அப்போதுதான் வாங்கியிருந்த சே வின் வாழ்வைப் பற்றிய ஒரு புதுப் புத்தகத்தோடு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வருகிறான் பாலன். மனைவி அலுவலகத்திற்கும் மகன் பள்ளிக்கும் போயிருந்த அறையின் தனிமை அவன் வாசிப்பிற்கு இயைந்து தருகிறது.

நான்கு பக்க வாசிப்பில் அறைக்கதவின் லேசான தட்டலில் எரிச்சலோடு திறக்கிறான். ஒரே நொடியில் அறைக் கதவையும், மனக்கதவையும் அசைத்துப் பார்க்கும் வல்லமையோடு ஒருத்தி. நெற்றியில் இடப்பட்டிருந்த சந்தனக்கீற்றுகூட அவள் அழகிற்குத் தேவையற்றதுதான். இத்தனை வருடங்கள் காத்திரமாக்கி வைத்திருந்த எதையும் இல்லாமலாக்கி விடும் பேரழகு அது. உடல் தடுமாற்றத்தை முடிந்தவரை மறைத்து அவளை உள்ளே அழைக்கிறான். அவ்வறை அவளால் எல்லாமுமாய் நிறைகிறது. தான் ஒரு சேல்ஸ்கேர்ள் என்றும், மார்க்கெட்டில் புதிதாய் வந்திருக்கும் ஒரு ஊறுகாய் விற்பனைக்காகத்தான் வந்திருப்பதாகவும் சொல்லிக்கொண்டே அவள் குனிந்து பையிலிருந்து ஊறுகாய் பாட்டில்களை வெளியே எடுக்கிறாள்.

வெண்ணெய்க்கட்டிகளின் வழுக்கல்களான அடுக்குகளில் தன்னைப் பறிகொடுத்து அவள் இடுப்பின் வனப்பில் வலது கை பதிக்கிறான் பாலச்சந்திரன். அவள் பொறி பறக்க அவனை முடிந்த மட்டும் வலுவுடன் அறைகிறாள்.

கையை எடுடா நாயே, ஒடம்ப வித்து பொழைக்கனன்னு நெனச்சா ஊறுகா வித்து ஏன் பொழைக்கணும். சேல்ஸ் கேர்ள்தானே கூப்ட்டா ஒடனே படுத்துருவான்னு நெனச்சியா

ஒரு நிமிட இடைவெளி. வாழ்வின் வசீகரத்தையும், அவமானத்தையும், ரௌத்திரத்தையும் ஒரே சேரக் குடித்த கணம் அது.

அவன் அப்படியே விக்கித்துப் போய் நிற்கிறான். அவள் நிதானப்படுகிறாள். பொங்கும் ஆத்திரத்தினூடே சம்மந்தமின்றி அவள் கல்லூரி ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நினைவுக்கு வருகிறது.

அன்று வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் பெரும் ஆரவாரத்தினூடேயே பரிசளித்த கேரளாவின் மிகப் பெரும் ஆளுமை, இதோ என் முன் கூனிக்குறுகி ஒரு குற்றவாளியாய் மன்னிப்பைக் கோரும் முகத்தோடு நிற்கிறான். அவள் சட்டெனத் தன் கோபத்திலிருந்து இறங்கி விடுகிறாள். மனிதனின் பலவீனத்தைத் தன் வசீகரத்தால் ஒரு நிமிடத்தில் துடைத்தெறிகிறாள் ஸ்ரீதேவி.

எதை எதையோ எனக்காகத் தாங்கிக் கொண்ட என் மனைவி விஜயலஷ்மி என் பொருட்டு இதையும் பொறுத்துக்கொண்டே, அறையில் உடைந்து கிடந்த வளையல் துண்டுகளைப் பெருக்கித் துடைத்தாள் எனத் தன் வாழ்வை நினைவுகூறுகிறான் இக் கவிஞன்.

அவர் மனைவி அவருக்குச் சமைத்துப் போடும் சராசரி அல்ல, சாகித்ய அகடாமி பரிசு பெற்ற கவிதாயினி. நவீன மலையாளக் கவிதையின் இன்னொரு முகம்.

தான் சேகரித்து வைத்துள்ளவை புத்தகங்கள் மட்டுமல்ல, எழுதப்படாத வாழ்வின் நல் நினைவுகள். அவற்றை நான் அடைந்த அதே ஈரத்தோடு அப்படியே மன அறைகளில் அடைகாக்கிறேன் பவா.நினைவுகளின் அழுத்தத்தில் வருகிறது வார்த்தைகள்.

ஒரு முறை கேரள சாகித்ய அகாடமி நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கைத் துவக்கிவைக்க உங்க ஊர் ஜெயகாந்தன் வந்திருந்தார். அவரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்து, அறையில் சேர்ப்பது வரையிலான பொறுப்பை நான் விரும்பி ஏற்றிருந்தேன். எல்லாமும் திட்டமிட்டபடியே நிகழ்ந்தது. குளித்து முடிந்து உடை மாற்றி கட்டிலில் அமர்ந்தவரிடம் கேட்டேன்,

சாருக்கு என்ன வேணும்?

ப்ரஷ்ஷா கஞ்சா.

அதிர்வில்லையெனினும், அதிலிருந்தெல்லாம் எப்போதோ விடுபட்டிருந்ததால் எழுந்த சிறு அசைவினை அவர் கவனிக்கும் முன்,

கொச்சின்ல அது இப்ப எங்க கெடைக்குன்னு நான் அறியில்ல சார்

அது எங்க கெடைக்குன்னு உங்களைக் கேட்கலயே, என்கூட மட்டும் வாங்க

ஒரு புது சீடனைப் போல், மிக நீண்ட எர்ணாகுளம் மகாத்மா காந்தி சாலையில் அவருடன் பேசாமல் நடந்தேன்.

சின்னப் பழைய பெட்டிக்கடை முன் இந்தியாவின் மிகப்பெரிய அந்த இலக்கிய ஆளுமை, ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கைத் துவங்கி வைக்க வந்துள்ள சிறப்பு அழைப்பாளர் ஜெயகாந்தன் ஒதுங்கினார்.

நடப்பது எல்லாவற்றையும் சிறு குழந்தையின் குதூகலத்தோடு உள்வாங்கிக் கொண்டிருந்தேன்.

அழுக்கு லுங்கி கட்டி, முண்டா பனியன் போட்டிருந்த அந்த தெத்துப்பல் முளைத்த பெட்டிக்கடைக்காரனும், ஜே.கே. வும் காதலர்களைப் போல் ஒரு நிமிடம் கண்களால் பேசிக் கொண்டார்கள். அந்நிமிட முடிவில் காகிதப் பொட்டலம் ஜே.கேவின் கைகளுக்கு மாறியிருந்தது.

இரு பெரும் ஆளுமைகளின் முன் ஒரு உள்ளூர் கவிஞன் தன் இயலாமையின் பொருட்டு மௌனமாக நின்ற வெட்கமான கணமது.

பாலச்சந்திரனின் சிதம்பர நினைவுகள் தமிழ் வாசகப் பரப்பில் ஏற்படுத்திய அதிர்வில் பிரபல வாரப்பத்திரிகை ஒன்றிருந்தது. அதன் நிருபர் ஒரு புகைப்படக்காரரோடு அவரைச் சந்திக்க கொச்சின் போய், அப்போது பாலன் பணிபுரிந்த மாவட்டக் கருவூல அலுவலகத்து கேன்டீனில் அவர் வருகைக்காகக் காத்திருந்திருக்கிறார்.

ஒரு நெருப்பு ஜ்வாலையைச் சந்திக்க நினைத்த அந்நிருபருக்குக் கிடைத்தது எரிந்து முடிந்த ஒரு கரித்துண்டு மட்டுமே. நீங்க பார்க்க நினைத்த பாலன் செத்துப் போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போது பார்ப்பது வெறும் ட்ரெஷரி எம்ப்ளாயி எஸ். பாலச்சந்திரன் மட்டும்தான். இந்த பதிலில் தெரிந்த வெறுமையினூடே நீடித்த தன் ரயில் பயணத்தைப் பற்றி அந்நிருபர் என்னிடம் தனியே சில மணி நேரங்கள் பகிர்ந்திருந்தார்.

தன் நண்பனும், இயக்குநருமான ராஜீவ்நாத்தின் அழைப்பின் பேரில் சென்னையில் ஒரு பிரபலமான மனிதனின் வீட்டு முகப்பில் இவர்களுக்காக மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மது விருந்தில் கலந்துகொள்ள சம்மதிக்கிறான். அவ்வீட்டின் முகப்பில் நின்று கைகூப்பி இவர்களை வரவேற்றது, தென்னிந்தியாவின் நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜிகணேசன். ஒரு நிமிடம் பாலன் உடைந்து போகிறான். சின்ன வயசில் வீட்டைவிட்டு வெளியேறி, சாப்பிடவும், தூங்கவும் இடமின்றி எர்ணாகுள பஜார்வீதிகளில் அனாதையாய் அலைவுற்ற நாட்களின் ஞாபகங்கள் பொங்குகின்றன.

சினிமா தியேட்டர்களில் புதிய படங்களின் வருகையை அறிவிக்கும் வண்டிகளில் நின்று கொண்டு இன்று மாலை 6.30 மணிக்கு ரீகல் தியேட்டரில் தென்னிந்திய நடிப்புச் சக்ரவர்த்தி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் தங்கப்பதக்கம் என்று கத்தி குரல் விற்றுப் பிழைத்த அந்த சிறுவயதுப் பையன் பாலச்சந்திரன் அவன் முன் வருகிறான். காலம் என்கிற பிரமாண்டத்தின் முன் எல்லாமே மாறுதலுக்குட்பட்டவை என்பதை சிவாஜிகணேசனே அவன் கைப்பிடித்துத் தன் மாடிக்கு அழைத்துப் போனதையும், அவர் கையாலாயே அளவான மது ஊற்றி, சோடா கலந்து கொடுத்ததையும் உணர்வு பொங்க விவரித்திருக்கிறார் பாலன்.

கடந்த ஆண்டு சுள்ளிக்காடின் அழைப்பின் பேரில் அவர் மகன் திருமணத்திற்கு நான் குடும்பத்தோடு கொச்சின் போனேன். அத்திருமண நிகழ்வின் எளிமை பற்றியே தனியே எழுத வேண்டும்.

கொச்சின் நகரின் புராதனமான விக்டோரியா சிற்றரங்கில் மாலை ஏழு மணிக்குத் துவங்கியது அத்திருமண வரவேற்பு. சாதாரண உடையில் மணமக்கள் மேடையில் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள். மொத்தமே இருநூறுக்கும் குறைவானவர்களே அழைக்கப்பட்டிருந்தோம். விருந்தினர்களோடு போடப்பட்டிருந்த இருக்கைகள் மணமக்களை நோக்கி அல்ல விருந்தினர்களை மையப்படுத்தியே போடப்பட்டிருந்தது.

அறையின் ஒரு மூலையில் இடப்பட்டிருந்த மேசையில் மிக மிக எளிமையான உணவுகள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விருந்தினர்கள் தங்களுக்கானதை எடுத்துக்கொண்டு ஏதாவதொரு இருக்கையில் தங்களுக்குப் பிடித்த நண்பர்களோடு உட்கார்ந்து, பரபரப்பில் இழந்த சந்தோஷத்தை மீட்டெடுக்க முயன்ற தருணங்களைத் தரிசித்தேன்.

என் பின் தோளில் விழுந்த அடியில் திரும்பிப் பார்த்தால் மம்முட்டி.

ஒரு புது கோடிக்கரை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தன் பத்திரிகை நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்த இருநூறு பேரில் 16 பேர் கேரளாவின் தற்போதைய அமைச்சர்கள் என்ற செய்தியில் ஆர்வமுற்று அவர்களை அடையாளப்படுத்த முயன்று தோற்றேன். ஒருவரும் தங்கள் உதவியாளர்களைக்கூட உள்ளே அழைத்து வரவில்லை.

கேரள அறிவுலகம், திரையுலகம், அரசியல் மூன்றும் இந்த இருநூறு பேரில் அடக்கம் என்பது போன்ற எளிமை அத்திருமணம்.. ஒரு தமிழ் மனத்தின் ஏமாற்றத்தையும், ஆர்வத்தையும் அடக்கமுடியாமல் அங்கேயே பாலச்சந்திரனிடம் கேட்டேன்.

இத்திருமண வரவேற்பிற்கு எவ்வளவு செலவாகியிருக்கும் பாலன்?

Below twenty five thousand

இவ்வளவு பிரபலமானவர்களை அழைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் நல்ல உணவு ஏற்பாடு செய்திருக்கலாமே?

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து தயாரிக்கப்பட்ட மிக நல்ல அசைவ உணவு இத்திருமணத்தின் பொருட்டு இன்று மதியம், இங்கிருந்து 20 கி.மீ. அப்பால் உள்ள ஒரு அனாதைக் குழந்தைகள் விடுதிக்கு மணமக்களே சென்று 500 குழந்தைகளுக்கும் பரிமாறி, பசியாறச் செய்துவிட்டே வந்தார்கள்.

என் மௌனத்தைத் தொடரவிட்டு பாலனே தொடர்ந்தார்.

நமக்குத்தான் தினம் தினம் நல்ல சாப்பாடு தொடர்ந்து கிடைக்குதே, இன்னைக்கு ஒரு நாள் இப்படி சாதாரண சாப்பாட்டை சாப்பிடலாம் பவா.


-நன்றி மீடியா வாய்ஸ்

5 comments:

  1. நல்லதோர் பகிர்வு...

    ReplyDelete
  2. அற்புதமான அனுபவங்களால் கட்டி போடுகிறிர்கள் bava.நான் திருகோவிலூர் தான் உங்களை சந்திக்கும் அந்த தித்திப்பான சந்தர்ப்பத்துக்காக பல ஆண்டுகளாய் ஏன்கிகொண்டிருக்கிறேன் என்று வாய்க்குமோ!!

    ReplyDelete
  3. உன்னதம், கவிஞரின் வாழ்வும் அது அப்படி என்று நம்பத் தரும் உங்களது எழுத்தும்!

    வாழ்க!

    ReplyDelete
  4. அவசியம் இந்த மனுஷனை ஒருமுறை சந்திக்கனும்.......
    பவா உங்களையும் :-)

    ReplyDelete
  5. இவரை மலையாளதிரைப்படங்களில் பல முறை பார்த்திருக்கிறேன், இவருக்கு பின்னே இத்தனை விஸ்வரூபம் இருக்கும் என்று தெரியாது, அற்புதம் //ஒரு மெல்லிய கண்ணி கவ்வியிருந்தது. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற கலைஞன் எங்கள் வீட்டிற்குள் ஒரு ஒளியைப் போல ஊடுருவியது இப்படித்தான்.// என்ன ஒரு வர்ணனை. அழகாக எழுதப்பட்ட ஒரு சுகமான நட்பின் பயணம்.

    ReplyDelete