Friday, October 21, 2011

தொடர் - 11

அத்தனை மினுமினுப்போடு ஒரு நாகப்பாம்பை இதற்குமுன் எப்போதும் பார்த்ததில்லை. அச்சமின்றி அவசரமுமின்றி நான் கருங்கல் கட்டிடத்திலான கிணற்றுமேட்டில் நின்றுகொண்டும்,பாம்பு பாதி கிணற்று சூறாவரியில் அலைவுற்றுக்கொண்டிருந்த காட்சிப்படிமம் அலாதியானது.

தவறியோ, விரும்பியோ விழுந்திருக்கவோ இறங்கியிருக்கவோ வேண்டும். அது இருந்த இடத்திலிருந்து இரண்டடி ஆழத்தில் நீர். இதற்கப்புறம் மேலேறி வருவது சிரமம். அது நீரை நோக்கி ஊர்வதும், சடாரெனத் திரும்புவதும், மேலேற முயல்வதும், முடியாமல் இறங்குவதும் கொஞ்சநேரம் படமெடுத்து நிற்பதுமான அதன் தவிப்பை எவ்வளவு முயன்றும் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. மனம் அதன் அலைவுறலைப்போலவே அடங்கமறுத்தது. யாருமற்ற அக்கிணற்றுமேட்டில் நின்றுகொண்டு கொஞ்சநேரம் அழத்தோன்றியது.அதுவும் முடியவில்லை.

என் நடுவிரல் பெருசேயிருந்த அந்நாகப்பாம்பை இன்னும் கூர்ந்துபார்க்கிறேன். சம்மந்தமேயின்றி அக்கணத்தில் எனக்கு என் நண்பனும் ஒரு காலத்தில் நவீன தமிழ் கவிதையில் கலக்குரல் எழுப்பின கவிஞனுமான கைலாஷ்சிவனின் ஞாபகம் வந்தது.

அந்நாகப்பாம்பை அப்படியே தனித்தலைய விட்டுவிட்டு கைலாஷ் சிவனோடு அங்கிருந்து அகன்றேன்.

கைலாஷ், தமிழ் நவீன கவிதையின் இன்னொரு முகமோ, ஆளுமையோ அல்ல. சிறுபத்திரிகை வாசிக்கும், எழுதும் குழுவில் இப்பெயர் ஒரு கட்டத்தில் உச்சரிக்கப்பட்டது.

இவர்களின் ஞானத்தந்தையும், தமிழின் முக்கிய கவிஞருமான விக்கிரமாதித்யன் அண்ணாச்சி எப்போதும் தன் தோள்களிலும், இடுப்பிலும், காடு மேடெல்லாம் இரண்டு மூன்று செல்லக் குழந்தைகளை சுமந்தவர். அப்படி அவரிடமிருந்து இறங்க மறுத்து அல்லது அவர் கீழே இறக்க மறுக்கும், விக்ரமாதித்யனே சொல்வது போல வாழ்வில் இருந்தே வாழ்வை மறுதலிக்கிறவன் கைலாஷ்.

அவன் கவிதைகளின் ஒரு வரியோ, உரைநடையின் ஒரு வார்த்தையோ இது வரை என்னைக் கவர்ந்ததில்லை. ஆனால் அவன்? அவன்தான் என்னை இப்போதும் அலைக்கழிக்கிறான். பாதிகிணற்றில் மாட்டிக் கொண்ட, அல்லது ஏற்றுக் கொண்ட அந்த நாகப் பாம்பைப் போலவே.

வருடம், மாதம், கிழமை எதுவும் ஞாபகத்திலில்லாத ஒரு மாலையில், நான்கடிக்கும் குறைவான உயரத்தில் தோளில் நீண்டுத் தொங்கின ஜோல்னாப் பையோடு, காதில் போட்டிருந்த சிகப்புக் கல் கடுக்கன் தெரிய, மனதில் பதிக்கத்தக்க உருவத்தில் துளியும் தயக்கமின்றி வீட்டிற்குள் நுழைந்து, என்னிடம் வந்தவன் கைலாஷ்.

திருநெல்வேலியிருந்து வாரேன், உங்களைத் தெரியும். என் பேரு கைலாஷ்சிவன். சூன்யப் பிளவுன்னு ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கு....அவன் பேசிக் கொண்டேப் போக என் பார்வை அந்த சிவப்புக் கல் கடுக்கன் மீதேக் கிடந்தது.

அன்றிரவு அவனே விரும்பிக் கேட்ட மோர் சோறும் ஊறுகாயும் சாப்பிட்டு தான் தூங்குவதற்கான இடம் எதுவென தயக்கமின்றி கேட்டான். நான் காட்டிய சிறு அறையை நிராகரித்து, மொட்டை மாடிக்கும், படிக்கூண்டுக்குமிடையேயான,நாலுக்கு நாலிலான ஒரு சிமெண்ட் திட்டு தனக்குப் போதுமென என்னைக் கீழே அனுப்பினான். பழக்கம்தான் எனினும் எல்லாமுமே விசித்திரமாய் இருந்தது எங்களுக்கு. அப்போதுதான் எங்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சேர்ந்திருந்த சாந்தி என்ற பெண்ணுக்கு விசித்திரத்தை மீறிய அச்சமிருப்பதாய் அன்றிரவே எங்களிடம் சொன்னாள்.கலைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என பாரதியிலிருந்து உதாரணம் சொல்ல வேண்டிருந்தது அவளுக்கு.

திருட்டுப் பூனையின் காலடித்தடங்கள் போலவே அவன் இருப்பும் எங்கள் வீட்டில்.

எப்போது வருகை, எங்கே செல்கிறான், எதுவும் யாருக்கும் தெரியாது. இருட்டுப் பிரியும் முன்பே எழுந்து நிலத்திற்குப் போய், அருகிலிருக்கும் காடுவரை அலைந்து, பம்ப்புசெட்டில் குளித்து, வெற்றுடம்போடு வந்து..... எப்படியெல்லாமோ அவன் வாழ்வு.

அப்போது அவனுக்கு முப்பதுக்கும் கீழே வயதிருக்கும்.

ஜீன்ஸ், டீ-ஷர்ட் போட்டு, பெர்ப்யூம் அடித்து, பைக்கில் சுற்றி, காதல் கடிதங்கள் பரிமாறி, நகரில் சந்திப்புகளுக்கான ரகசிய இடம் தேடி, மனம் முழுக்க சந்தோஷம் நிறையும் கணங்களோடு அவன் வயதையொத்த இளைஞர்கள் பறந்து கொண்டிருக்கையில்,

இவன் காவி கட்டி, தேசாந்திரியாகி,

என்ன வேணும் கைலாஷ் உனக்கு?

ஒண்ணுமேயில்லை.

அப்போதைய அவன் கை விரிப்பு என் பல இரவுகளின் மீது விழுந்து பிறாண்டியிருக்கிறது.

அவன் வீட்டை விட்டகன்ற அடுத்தநாள் அவன் தங்கியிருந்த இடத்தை சுத்தம் செய்யப் போன சாந்தி, துணியால் கட்டப்பட்ட சிறு மூட்டை ஒன்றை எடுத்துவந்து எங்கள் முன் கோபத்தோடு போட்டாள்.

ஆர்வத்தோடு அதைப் பிரித்தால்,

அத்தனையும் அதன் அடிநாதம்வரை இழுக்கப்பட்ட பீடித்துண்டுகள்.

சுகமான வாழ்வை நிராகரித்து அதன் நேர் எதிர் கோணத்திற்கு போய் பார்ப்பது. எல்லோரும் வரவேற்பறையில் உட்கார்ந்து வாசல்வழியே வரும் வசந்தத்தை அருந்திக் கொண்டிருக்கையில் ஜி. நாகராஜனைப் போல் புழக்கடைப்பக்கம் போய், வெளியேறும் கழிவுகளை கவனிப்பது. இதற்கான ஆத்ம பலம்யாராலும் அளவிட முடியாதது. அது கைலாஷ் மாதிரியானவாழ்வை, தேர்ந்தெடுத்தவர்களிடம் நிறைய உண்டு.

எல்லோரும் படித்துமுடித்து, வேலைக்குப் போய், கை நிறைய சம்பாதித்து, லஞ்சம்வாங்கி, கார் பங்களாவோடு பெண் கட்டி, தினம் தினம் ஒரு ஒழுங்கோடு அவளோடு உறவுவைத்து பிள்ளைபெற்று அப்புறம் அதை படிக்க வைத்து.... ச்சேய்... என்ன மாதிரியான வட்டத்துக்குள் வாழ்கிறோம் நாம்?

கைலாஷ் மாதிரியான மனிதர்கள் முதல் கட்டத்திலேயே தங்கள் கயிறுகளை அறுத்துக் கொண்டவர்கள். நாடு முழுக்க அலைவுற்ற அந்த கால்கள், அவன் அருந்தின பல நதிகளின் நீர், சந்தித்த பல மாநில மனிதர்களின் விதவிதமான துரோகங்கள், எதிர்பாராமல் கிடைத்த புணர்வுகள்,எதற்கோ நிகழ்ந்துவிட்ட தவறுக்காய் கிடைத்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்வு, விரும்பியும், விரும்பாமலும் நிராகரித்த தற்காலிகக் காதல்கள், பச்சை மிளகாய் கடித்து பட்டினியை வெல்ல நினைத்த மடத்தனங்கள். தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகத்தான அனுபவங்கள் ஒரே மனிதனுக்கு கிடைப்பது எப்போதும் என்னை பொறாமைபடுத்துவது. உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்.

இப்படியான பலி வாழ்வை அடைந்தே, பெரும் படைப்புகளை மானுடத்திற்கு வழங்கியுள்ள படைப்பாளிகள், தாஸ்தாவேஸ்கியில் ஆரம்பித்து பஷீர் வரை நீளும் இப்பட்டியல் உலகம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாய் இன்னமும் போய்க் கொண்டிருக்கிறது.

அதன் பிறகான நாட்களில், கிரிவலப் பாதையில் காவி கட்டி அன்னதான வரிசையில் நிற்கும் கைலாஷை பல முறை பார்த்தும் அவன் துறவு வாழ்வு என் பார்வை பட்டு தீட்டாகிவிடுமோ என்ற அதிகபட்ச ஜாக்கிரதையோடு பார்க்காததுமாதிரிவிட்டகன்றிருக்கிறேன் ஆனால் அன்றிரவே அவன் மீண்டும் மக்கா பசிக்குது சோறு இருக்குமா?” என்றபடியே வீட்டிற்குள் நுழைவதை புன்னகையோடு எதிர் கொண்டுமிருக்கிறேன்.

அம்மலைச்சுற்றும் பாதையில் அலைந்து திரியும் கைலாஷைவிட வயதில் குறைந்த சரவணனையும் எனக்குத் தெரியும். சரவணனின் சொந்த ஊர் நாகர்கோயில். ஹைவேயில் கிளார்க் உத்யோகம். வசதியான வீட்டில் சம்மந்தம். அமைதியான நதியின் சீரான வேகம் அவன் லெளகீக வாழ்வை செழிக்க வைத்தது.

ஒரு நிமிடம் தானே! எல்லாரும் ஒரே ஒரு ஒற்றை நிமிடத்திற்கிடையே என இடைவெளிகளில் என்னென்னவோ நிகழ்ந்து விடுகிறது.

எல்லோரும் தூங்கி விட்டார்களா? என ஊர்ஜிதப் படுத்திக் கொண்ட ஓர் இரவில், தன் உடல்மேல் இரண்டு கால்களையும் போட்டுத்தூங்கும் மகனின் கால்களை மெல்ல விலக்கி, அயர்ந்து தூங்கும் துரோகத்தின் நிழல் படிந்த மனைவியின் முகத்தைப் பார்க்க சகிக்காமல் வெளியேறியவனின் இரவு விடிந்தது திருவண்ணாமலையில்.

என்ன சரவணா இது?

மனம் ஒப்பலை சார்,

மலை சுற்றும் பாதையெங்கும் வியாபித்திருக்கும் இம்மனிதர்களின் வாழ்வை அளவிட முடிந்த விஞ்ஞானி யார்?இவர்களின் ஒட்டுமொத்த துயரை உறிஞ்சியெடுக்கும் படைப்பாளி யார்?, அவர்களுக்குள் பொங்கும் துக்கத்தை வடிக்கத் தெரிந்த ஓவியன் யார்? என்ற எந்த பிரக்ஞையுமற்ற லட்சோபலட்சம் கால்கள் அப்பாதையை சுற்றுகின்றன. சுழுலும் அப்பாதங்களில் சில அங்கேயே தங்கிவிடுவதுமுண்டு. கைலாஷ் அதுவுமல்ல. அவன் அதிலிருந்தும் தப்பித்துக் கொண்டேயிருந்தான்.

அப்போதைய தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளரும், சிறந்த வாசிப்பாளரும் நல்ல இலக்கியம், நல்ல சினிமா இவைகள் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையுமுள்ள என் நண்பர் நாகராஜன் தன் பத்திருபது நண்பர்களோடு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்.

என்னதான் கலகக்குரல், கட்டுடைத்தல் எனினும் அதிகாரமும், வழமைகளும் நமக்குள் ஏற்றிவைத்திருக்கும் மரபுகளிலிருந்து விடுபடாமைகள் அவ்வப்போது நிகழும்தானே!

அவர்கள் வருகையின் பொருட்டு கொஞ்சம் அதீத பரபரப்போடு வீடு இயங்கியது அப்போது அங்கிருந்த கைலாஷ்க்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் இவர்களோடு விளையாடலாம் என்ற அவனின் ரகசிய முடிவு அந்நண்பர்களின் வருகைவரை பதுங்கியிருந்திருக்கிறது.

அவர்கள் வந்தவுடன், பரஸ்பரம் அறிமுகங்கள், சிரிப்பொலிகள், குதூகலங்கள், நினைவுகூறல்களின் கூச்சங்கள் இதில் யாரும் கைலாஷின் இருப்பை கவனிக்கவில்லை. ஆனால் நாகராஜன் அவனில் மட்டுமே பார்வை பதித்திருந்ததை நான் கவனித்தேன்.

தன் சட்டையைக் கழட்டி அதையே பெரிய முண்டாசாகக் கட்டிக் கொண்டு வெற்றுடம்போடு மரச்சேரில் மௌன சாமியாரின் கற்சிலைப் போல அமர்ந்து எங்களை அற்ப மானிடப் பதர்களைப் போல பாவித்து பார்த்துக் கொண்டிருந்த காட்சி அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.

ஓரிரு நிமிடங்களில் அந்த இடத்தை மௌனத்தால் தன்வசமாக்கியிருந்தான். சூழலை லகுவாக்க, நான், சார் இவர் பெயர் கைலாஷ்சிவன், ஒரு கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறதுஎன என் வார்த்தைத் தொடரை இடைமறித்து,

பாரதிக்குப் பிறகு நான்தான்என சத்தமாய் சொல்லி, மீண்டும் கண்மூடி மௌனம் காத்தான்.

சாரோடு ஊரு,?”

தெக்க,

அவன் இருப்பு, அவருக்கு ஒரு கொண்டாட்ட மனநிலையை கொண்டுவந்திருந்தது. அமைச்சரின் நேர்முக உதவியாளராய் அவர் எப்போதும் சந்திக்கிற பாதி வளைந்த உடல்களும், கூழை கும்பிடுகளும், எதையோ வேண்டி மட்டுமே வரும் போலி முகங்களுக்கிடையே இதோ ஒரு வேற்று முகம். வேற்று ஆள்.

ஒரு கவிஞனின் கன கம்பீரத்தோடு, வாசிப்பின் திமிரோடு, எழுத்தின் வலிமையோடு கால்மேல் கால்போட்டு அதிகாரத்தை சகல விதங்களிலும் அலட்சியப்படுத்தும் அவர் அதற்கு முன் சந்தித்திராத ஒரு இளைஞன்

என் நண்பருக்கு அவனை ரொம்பப் பிடித்துவிட்டது. என் வீட்டில் அக்கணத்தில் அவனைவிடப் பொருட்படுத்தக் கூடியது வேறென்றுமில்லை அவருக்கு.

என்னிடம் கொஞ்சம் பயத்தோடு இரகசியமாய், “பவா இவருக்கு கொஞ்சம் பணம் கொடுத்தா கோவிச்சுக்குவாரா?”

எனக் கேட்டது அவனுக்கு கேட்டுவிட்டது.

திடீரென தன் மௌனம் கலைந்து,

அதெல்லாம் கோவிச்சுக்கமாட்டேன், தாராளமா தரலாம்என்று சாமி தன் திருவாய் மலர்ந்ததும்அங்கிருந்த எல்லாருமே அதுவரையிலானதங்கள்முகஇறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்த கணமது. அக்குழுவில் சிரிப்பின்றி இருந்த ஒரே ஒருவன் நான் மட்டுமே.

சற்று நேரத்திற்கு முந்தைய தன் கம்பீரத்தை கைலாஷ் வெறும் ஐநூறு ரூபாய்க்காக ஏன் இழந்தான்?

பாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்டுதானே!

எனக்கு ஏதோ நெருட அவசரமாய் அவ்விடத்தை விட்டகன்று இரண்டு முழு சிகெரட்டுகளை முழுவதுமாய் உள்ளிழுத்தேன்.

அவர்கள் வந்துவிட்டுப்போன வெறுமை வீட்டை வியாபிக்க அனுமதிக்காமல், வாசலில் உட்கார்ந்து இலக்கியம் பேச ஆரம்பித்தோம். உரையாடலின் துவக்கத்தில் மௌனமாய் பங்கேற்ற கைலாஷ், இடையில் உக்கிரமாக பேச ஆரம்பித்தான். ஒரு காட்டு விலங்கின் அதிகாரமிக்க நடமாட்டம் அது.

என் வேட்டைகதை கதையேயில்லையெனவும் வேட்டையின் ரத்தம் வாசிப்பவனின் முகத்தில் தெறிக்க வேண்டுமெனவும் என் கதையின் ஒரு வரியையும் வாசிக்காமலேயே பேச ஆரம்பித்தான்.

சூடான தோசைகளோடும், மல்லாட்டை சட்னியோடும் அவ்வுரையாடல் நீண்டது.

அடுப்பங்கரையிலிருந்து ஒவ்வொரு தோசையாக எடுத்து வந்து, சாந்தி எங்கள் தட்டுகளில் இட்டு நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கு எங்கள் யாருக்கும் அவள் இருப்பு நினைவிலேயே இல்லை.

கொஞ்ச நேரம் சூடான தோசைத் திருப்பியோடு எங்கள் உரையாடலைக் கவனித்த சாந்தி எதன் பொருட்டோ மிக உக்கிரமடைந்து,

நீ எங்கண்ணன் கதையை படிச்சிருக்கியாண்ணா?நாங்கள் நிதானிப்பதற்குள், அவளே கைலாஷை நோக்கி,மீண்டும்

சொல்லுண்ணா, நீ வேட்டை கதை படிச்சிருக்கியா?யாரிடமோ பேசும் வார்த்தையென நினைத்த அவன், அவள் பக்கம் திரும்பி.

இது எங்களுக்குள்ள நடக்குற தர்க்கம்மா, நீ போய் தோசை போடு

தான் வெறும் தோசை சுட்டுப் போடும் பெண்ணல்ல என்பதை நிரூபிக்க வேண்டி,

அதிருக்கட்டும் நீ சொல்லு, நீ அந்தக் கதையை படிச்சிருக்கியா? இல்லையா?”

இல்லை

படிக்காமலேயே எப்படி அத குப்பைன்னு சொல்ற?”

எனக்குத் தெரியும்மா

படிக்காமலேயே தெரிய நீ என்ன பெரியக் கடவுளா?”

அதற்குள் ஏதோ சண்டயென நினைத்து தெருப்பெண்கள் வாசலில் கூடியிருந்தார்கள்.

கைலாஷின் தடுமாற்றத்தை உள்ளூர ரசித்து,

நான் படிச்சிருக்கேண்ணா, திப்பக் காடும், ஜப்பான் கெழவனும், தாலியறுத்தான் பாறையும், செவடங்கொளமும், பன்னி வேட்டையும் படிச்சாதாண்ணா தெரியும்.

கோபத்தில் சூடான தோசைத்திருப்பிஎங்கே அவன் மேல் பட்டுவிடுமோ என நாங்கள் பதறினோம்.

கைலாஷிடம் அதுவரை இருந்த அலட்சிம் விலகி ஆச்சர்யம் கூடி,

கண்டிப்பா இன்னிக்கு நைட் வாசிச்சிற்றேன்என்றஅவன் குரல் வழக்கத்திற்கு மாறாய் மிக இளகியிருந்தது.

2 comments:

  1. பாரதி முதல் புதுமைப்பித்தன் வரையிலான பெரும் படைபாளிகள், வெறும் பணமுள்ளவர்களிடம் பசியின் நிமித்தமோ அல்லது வேறெதன் பொருட்டோ தங்கள் ஆளுமைகளை தற்காலிகமாக இழந்த தருணங்கள் வரலாறு நெடுக உண்டுதானே!

    ReplyDelete
  2. பவா
    கைலாஷ் சிவன் பற்றிய கட்டுரைப்பற்றி நீங்கள் அன்று கூறும்போது கோணங்கி கட்டுரையைவிட நன்றாக வந்திருப்பதாக பலர் சொன்னதை சொன்னீர்கள், ஆகையால் எனக்கு கைலாஷ் கட்டுரையை படிக்க ஆர்வமில்லாமல் இருந்தேன், கோணங்கி கட்டுரையை இன்னொரு கட்டுரை மீறி விடவே கூடாது அது அதே படைப்பாளியிடம் இருந்து வந்தால் கூட என்று எனக்கு தோன்றியது. காரணம் கோணங்கி கட்டுரை நான் வாழ நினைத்து அல்லது பலர் வாழநினைத்து வாழமுடியாமல் போன வாழ்க்கை என்பது அவரவர் உள்ளுணர்வு சொல்லும். பணம் என்கிற விஷயம் மனிதனின் இயல்பான ஆன்மாவை எப்படி ஒரு குப்பை மேடாக ஆக்கிவிட்டது என்று நினைத்து பல தருணங்களில் கவலைகொள்பவன் நான்.
    ஆனால் இன்று பாரதிராஜாவின் கட்டுரையைப்படித்துவிட்டு அதன் மீதான சிந்தைனையில் அப்படியே கைலாஷ் சிவனைப்பற்றிய கட்டுரையை படிக்கத்தொடங்கினேன், மெல்ல அந்த கட்டுரை என்னை உள்நோக்கி இழுக்க தொடங்கியது எல்லா வார்த்தையிலும் அதை நான் கோணங்கியுடனான கட்டுரையோடு ஓப்புமைப்படுத்திக்கொண்டேதான் படிக்கிறேன் என்பது உண்மை, திருவண்ணாமலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல யோகிகளை தரிசிக்கும் வாய்ப்பு எனது மாமாவால் எனக்கு ஏற்பட்டதால் கைலாஷின் தன்மையை கூர்ந்து கவனித்துக்கொண்டே வரமுடிந்தது. கோணங்கியின் வாழ்க்கைமுறை ஒரு சோதனை இந்த வாழ்வின் எல்லா நிலையிலும் தன்னை இயல்பாக இணைத்துக்கொள்ள நினைக்கிற முயற்சி, அந்தந்த நிலைகளில் அப்படியே ஒன்றிப்போய் அதில் இருக்கும் சுகத்தை அனுபவிக்கிற முயற்சி ஆனால் கோணங்கியிடம் இன்னும் அற்புதமான ஒரு காரணம் இருக்கலாம், ஆனால் கைலாஷ் தன்மைவேறு.
    பாரதியார் படத்தில் தன் மகளின் திருமணத்திற்கு பாரதியை அழைத்து வரும்போது ஒரு வசனம். “நான் மிக உயரத்தில் இருப்பவன் எப்போது வேண்டுமானாலும் உங்கள் நிலைக்கு என்னால் கீழே இறங்கி வர முடியும், ஆனால் உங்களால் என் நிலையை அடைய எளிதில் இயலாது” என்பதை உணர்த்துவதாய் இருக்கும், அந்த கர்வம் இருந்ததாய் தோன்றிய கைலாஷ் 500 ரூபாய்க்காக சம்மதம் தெரிவித்தபோது எனக்கு ஏனோ நினைவுக்கு வந்தது.
    //தன்மானத்தை அடகு வைத்து சாப்பிட்ட இரவுச் சாப்பாடுகள்// எத்தனை ஆழமான வரிகள் பவா? இந்த வரி ஒன்றுபோதுமே 500 ரூபாய்க்கு கம்பீரத்தை இழந்த்தற்கான பதில். எல்லா சித்தர்களும், ஞானிகளும், மற்றும் கைலாஷ் பாரதி போன்ற கலைஞர்களும் குடும்பம் பந்தம் என்று எதைஎல்லாம் ஜெயித்தாலும் கடைசியில் வயிற்றிடம் தோற்றுத்தான் போனார்கள், 5 நட்சத்திர உணவை உருவாக்கும் சக்தி கொண்டவர்கள் கூட ஏதோ காட்டில் யாரோ வாங்கிக்கொடுக்கும் சொற்ப உணவை இயல்பாக சாப்பிடுவதன் காரணம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத புதிர்தான். ஏதொ ஒரு உபநிஷத்தில் படித்த ஞாபகம் அன்னம்(உணவு) தான் பிர்மம் என்று.
    //உப்பு சப்பற்ற இந்த தட்டை வாழ்விலிருந்து, தைரியமாய் வெளியேறும் இவர்களில் ஒருவனாய் என் மகனை நினைத்துப் பார்த்து, நத்தையின் உடல்போல ஓடுகளுக்குள் என் நினைவுகளை ரகசியமாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்// ஒரு தந்தையின் உணர்வை இதைவிட அழகாக எழுதமுடியுமா என்று தெரியவில்லை, உங்கள் தந்தைக்கும் இது தோன்றாமல் இருந்திருக்காது அல்லவா?, இது பல அப்பாக்களால் வெளியே சொல்லமுடியாத ஒரு வாசகம் ஒருவேளை அப்பா இதை ஆசைப்படுகிறாரோ என்று மகன் முடிவெடுத்துவிட்டால்? என்ற பயத்தில். பாரதி கிருஷ்ணகுமார் உங்கள் அப்பாவைப்பற்றிய கட்டுரைக்கு பேசியது நினைவுக்கு வருகிறது. மனதுக்குள் ஒரு அழுத்தம். இந்த கட்டுரையின் கடைசி வரிகளுக்கு வந்த போது மனதுக்குள் ஒரு ஆறுதல். ஏன் தெரியுமா இந்த கட்டுரை இன்னும் முடியவில்லை என்றே தோன்றியது. காரணம் சாந்தி தொடங்கிய ஒரு போரில் இன்றுபோய் நாளைவா கதையைப்படித்துவிட்டு என்று ராமன் ராவணனுக்கு சொன்னதுபோல் அல்லவா முடிந்திருக்கிறது. நாளை வரவேண்டுமே? ஆகையால் முடிவு பெறாத ஒரு கட்டுரை இன்னும் வரும் என்று தோன்றியதால், கோணங்கி கட்டுரையோடு இப்போதைக்கு போட்டியில்லை என்றே ஒரு ஆறுதல்.

    ReplyDelete